Wednesday, October 3, 2012

நாயார் பெருமை


ஷங்கர் என்ற அல்சேஷன் நாயொன்று என்னுடைய அரைடிராயர் வயதில் என்னை விடக் கொழுகொழுவென்று எனக்கு மேல் வளர்ந்து எங்களது வீட்டில் ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தது. வாசலில் கட்டிப்போட்டிருப்பது தெரியாமல் பதவிசாகப் படுத்திருக்கும். “ஐயா” என்று யாராவது கதவில் கைவைத்தால் விரலை ஃபிங்கர் சிப்ஸாக சாப்பிடும் ஆர்வத்தில் முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு எகிறும். வாசலில் நிற்பது பிச்சைக்காரரா அல்லது காய்கறிக்காரரா என்பது அதன் விதவிதமானக் மாடுலேட்டட் குரலில் கொல்லையில் நமக்குப் புரியும்.

கூர்மையான கொத்தும் பார்வை. பொசு பொசுவென்று வால். கருப்பும் செம்பைட்டையுமான நிறம். பூச்சி போல தேசலாக யாரவது மானிடர்கள் அகப்பட்டால் அப்படியே அபேஸ் பண்ணிவிடும் பசிப் பாய்ச்சல். தகப்பனார் காலையில் வாக்கிங் அழைத்துப்போகும் போது கொலைக் குற்றவாளிகளைக் தேடிக்கண்டு பிடிக்கும் தொனியில் அவரை இழுத்துக்கொண்டு வேலி காம்பௌண்ட் சுவரோரம் மோப்பம் பிடித்துக்கொண்டே அவரை இழுத்துக்கொண்டு ஒதுங்கும். வருவதைப் பார்த்தாலே பத்தடி தூரத்திற்கு அதன் வழியில் எதிரில் எவரும் நிற்க அஞ்சுவர்.

நாய் நன்றியுள்ள விலங்கு என்பதைத் தவிர அதனிடம் சில நப்பித்தனங்கள் அதிகம்.

1. சொந்தக்காரக் கூட்டமாக இருந்தாலும் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளாக இருந்தாலும் ஒரு நாய் மற்ற நாய்களை விரட்டிவிட்டுதான் எச்சிலையிலோ ரோட்டோர பழையதிலோ வாயை வைக்குமாம். எல்லைத்தகராறு மட்டுமல்ல சொந்தத்தகராறும் உண்டு.

2. தெருவோர சாக்கடைக்கு அருகில் நின்று தான் தின்றதை வாயிலிருந்து உமிழ்ந்து மறுபடியும் தின்னும் எச்சி புத்தி நிறைய உண்டு.

3. சுத்தமாக காய்ந்து போன எலும்புத்துண்டாக இருந்தாலும் வாயில் கவ்வி கடிக்குமாம். அப்போது தனது பற்களிலிருந்து வழியும் ரத்தத்தை அந்த எலும்புத்துண்டிலிருந்து வழியும் ரத்தமாக எண்ணி ருசித்துச் சாப்பிடுமாம்.

இந்நாயின் செய்கைகளை நமது வாழ்க்கைக்கு உதாரணம் காட்டி இராமலிங்க அடிகளார் தனது திருவருட்பாவில்...

 அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும்
          ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே
     கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல்
          கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே
     மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே
          முன்னு றாவகை என்னுறும் உன்னால்
     இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்
          என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.

அறநெறி தவறி அழிந்தவர்கள் வாழ்வில் கண்ட துன்பங்களைச் சந்தேகமின்றி அறிந்த நெஞ்சே; உமிழ்ந்த எச்சிலை மறுபடியும் உண்ண விழைபவர்கள் போலே அவலங்கள் நிறைந்த இந்த வாழ்வில் நிதம்நிதம் போராடுகிறாய் கலங்குகிறாய்; முன்னோர்கள் சிவகதியடைந்த வாழ்வைப் பின்பற்றாமல் நெஞ்சே, என்னை உன் இஷ்டத்திற்கு இழுத்து இழிந்த நாயை விடக் கேவலமாக இருக்க வைத்த உன்னை நான் அடைந்து என்ன பயன்? என்று கேட்கிறார்.

இதையே பட்டினத்தார் ”நெஞ்சோடு புலம்ப’லில்

மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.

என்று கடைத்தெருவில் கடை கடையாக ஏறியிறங்கும் அங்காடி நாய்க்குச் சமமாக நெஞ்சை குற்றம் சாட்டுகிறார்.

#நாயைக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும் வாலைக் குழைத்துக்கொண்டு............. திங்கத்தானே போகும் என்பது என் பாட்டி திட்டும்போது (என்னை மட்டுமல்ல) சரளமாக உபயோகிக்கும் சொலவடை.

##செல்ல நாய் வைத்திருப்போர் திட்டாதிருக்க அருள்புரிவாய் கச்சி ஏகம்பனே!

*வலை மேய்தலில் கிடைத்த அரும்படம்.

20 comments:

அப்பாதுரை said...

வள்ளலாரையும் பட்டினத்தாரையும் எத்தனை நாய்கள் துரத்தினவோ!

ஸ்ரீராம். said...

இந்த நல்ல சொல் எல்லாம் என் காதில் ஏறாதுங்க... நாய் பற்றிய போர்ஷனை மட்டும் ரசித்துப் படித்து விட்டுச் செல்கிறேன்!
நப்பித்தனங்கள்= புது வார்த்தை எனக்கு!

ADHI VENKAT said...

நாயை பார்த்தாலே காத தூரம் ஓடும் ஆள் நான்...

நேற்று தான் ஜெயகாந்தனின் கதையில் ஒரு நாயின் வாழ்க்கையை பற்றி படித்தேன். அதற்குத் தான் வாழ்க்கையில் எத்தனை சவால்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

திருவருட்பா விளக்கமும், பட்டினத்தார் நெஞ்சோடு புலம்பலும் தெரிந்து விட்டது...

RVS said...

@அப்பாதுரை
என்னையும் பல நாய்கள் துரத்தியிருக்கு சார்! :-)

RVS said...

@ஸ்ரீராம்.
நப்பித்தனம் நாங்கள் ஊரில் பயன்படுத்தும் வார்த்தை. யாராவது பிக்காரித்தனமாக பிஹேவ் பண்ணினால் சொல்வது. :-)

RVS said...

@கோவை2தில்லி
சகோ! என்ன கதை அது?

RVS said...

@திண்டுக்கல் தனபாலன்

:-)

சாந்தி மாரியப்பன் said...

மலையுச்சியில் ஹாய்யா உலகை ரசிக்கும் நாயார் ஜூப்பர்.

கஞ்சத்தனத்தை எங்கூர்ல நப்பித்தனம்ன்னு சொல்வோம். இங்கே கொடுத்திருக்கும் லிஸ்டும் பிரமாதம்.

ADHI VENKAT said...

குருபீடம் என்ற சிறுகதை தொகுப்பு. இதில் நிக்கி என்ற சிறுகதை...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

1.நாய்கள் தங்கள் நண்பனை சில பல காரணங்களால் தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவிடும்.

2.நாய்களுக்கு பய உணர்ச்சி அதிகம். அத் நமக்கு அவை மேல் இருப்பதை விடக் கூடுதலானது.சில நாய்கள் முந்திக்கொள்கின்றன.சில நாய்கள் தைரியமாக இருப்பது போல நடிக்கின்றன.

3.குரைக்கும் நாய் கடிக்காது போகலாம் . ஆனால் கடிக்கும் நாய் கண்டிப்பாகக் கடிக்கும்.

ஆஹா! ஜோரான ஒரு பதிவு எழுதப் புள்ளையார் சுழி போட்டுட்டீரே ஆர்.வி.எஸ்.

மிச்சது அங்கே!

RVS said...

@அமைதிச்சாரல்

பல ஊர்ல பல பேருங்க.. :-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றி! :-)

RVS said...

@சுந்தர்ஜி
ஜி! நீங்க நாய்ப் புராணமே எழுதிடுவீங்க போலருக்கே!
வாலாட்டிகிட்டே அங்கேயும் வரோம் பாஸ். :-)

அப்பாதுரை said...

உங்களை நாய் துரத்திச்சு.. ஆனா நீங்க அவங்க மாதிரி கவியெடுத்தீங்களா இல்லை கல்லெடுத்தீங்களா? (நான் எப்பவுமே கல் கட்சி)

அப்பாதுரை said...

'ஊமை' நாயை எப்பவாவது சந்திச்சிருக்கீங்களா சுந்தர்ஜி? (சில கணவர் மனைவிகளைச் சொல்லவில்லை :-)

கொஞ்ச நாள் இந்திய அரசாங்க வேலையில் இருந்தேன். என் ஆபீசர் வீட்டில் இருந்த நாய்க்கு பிறவியிலிருந்தே குரைக்க முடியாது. கனிவோடு வளர்த்தார்கள். அவர்கள் வீட்டுக்குப் போனால், 'குரைக்காது, பயப்படாம உள்ளே வாங்க' என்பார்கள் - sense of humor புரிந்தபிறகு நெஞ்சையடைக்கும்.

RVS said...

@அப்பாதுரை
கவியெடுக்கிற அளவிற்கு ஞானமில்லீங்க..

சதிலீலாவதின்னு ஒரு படம். கமல்ஹாசன் நடிச்சது. அதில ஒரு சீன் வரும். ஊர்வசி அக்கா அவங்க வீட்டிற்கு வரும் மாமியைப் பார்த்துச் சொல்வாங்க..”குலைக்கிற நாய் கடிக்காது மாமி.. தைரியமா வாங்க”
அதுக்கு மாமி..

“நோக்கும் நேக்கும் தெரியறதுடீம்மா.. நாய்க்கு தெரியணுமோல்யோ?”.

Rathnavel Natarajan said...

அருமை சார்.

இராஜராஜேஸ்வரி said...

நாயார் பெருமை கொஞ்சம் அதிகம் தான் போல் !

மாதேவி said...

புலம்பல் அதிகம்தான் :))

அவற்றை விட்டு பிரிவதுதான்:((
இப்போது வளர்காமலே விட்டுவிட்டோம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails