Tuesday, June 7, 2011

இராக்கூத்து

என்னைப் போன்ற அன்றாடங்காய்ச்சிகள் ஆபிசில் உழைத்துக் கொட்டிவிட்டு அக்கடான்னு கிளம்பி வீட்டிற்கு சென்று ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு கட்டையை நீட்டலாம் என்ற எண்ணத்தில் மின்னல், இடி மற்றும் மழை மூன்றும் நேற்றிரவு இறங்கியது. மாலை ஆறு மணியில் இருந்தே குழாயடி சண்டை போல கடமுடாவென்று வானத்தின் ஒரு மூலையில் இருந்து கருவிக்கொண்டிருந்தன.

ஆங்காங்கே கலைந்து கிடந்த தொண்டர் மேகங்களை தலைவர் மேகம் கை பிடித்து ஒரு கூட்டமாக அழைத்து வந்தது. திரண்டு வந்த மழை மேகங்கள் கொஞ்சநஞ்சம் தெரிந்த சூரியனை மிரட்டி உள்ளே போகச் சொல்லிவிட்டு பூமியோடு ஒரு காட்டு யுத்தம் நடத்தியது. வானம் பார்க்க நின்ற அவ்வளவு இடங்களும் அழுக்கு தீர ஆசையாய்க் குளித்தன. ஆனாலும் ஒரு மணிநேரக் குளியல் கொஞ்சம் அதிகம் தான்.

சேப்பாயி குளித்துவிட்டு மங்களகரமாக நின்றது. மழைக்கு நனையாமல் ஓடிவந்து ஏறிக்கொண்டேன். முதல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் மழை அலம்பி துடைத்த ரோடில் வண்டி வழுக்கிக் கொண்டு ஓடியது. ஆங்காங்கே யானைக்கு பள்ளம் பறித்தது போல பொறி இருந்த ரோடில் கழுகுக் கண்ணாக பார்த்து குறி தவறாமல் ஓட்டினேன். 

CMBT என்ற தரைவழி பன்னாட்டு முனையம் ஒன்று கோயம்பேடு என்ற திவ்ய க்ஷேத்ரத்தில் இருக்கிறது. அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த தலத்தைக் கடந்து தான் நான் என் உறைவிடம் செல்ல வேண்டும். ஆங்கே நட்டு வைத்திருக்கும் சிக்னல் கம்பங்களை ஏதோ துணி காயப் போடும் கொடிகம்புக்கு சமமாக மதித்து பேருந்து ஓட்டுனர்கள் கட் அடித்து ஓட்டுவார்கள். சிக்னலின் சிவப்பும், மஞ்சளும், பச்சையும் திருவிழாவுக்கு கோயிலுக்கு கட்டிய சீரியல் பல்புகள். சிக்னல் கம்பத்தில் சாய்ந்து நிற்கும் போலீசு "இவர்கள் இவ்ளோ சாமர்த்தியசாலிகளா?" என்ற வியப்புடன் மூக்கின் மேல் விரலை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். நேற்றைய ராட்சஷ மழை நேரத்தில் அந்தக் கோயம்பேடு பேருந்து நிலையம் குருஷேத்ரம் போல காட்சியளித்தது.

கோயம்பேடு முனையத்தில் இருந்து வெளியூர் செல்லவும், உள்ளூர் பஸ்கள் முனையத்திற்கு உள்ளே செல்லவும் ஏகநேரத்தில் எத்தனித்தன. எப்போதுமே கோயம்பேடு யார் அரசாட்சியில் வருகிறது என்று உள்ளூர் வெளியூர் டிரைவர்கள் மத்தியில் ஒரு மறைமுக யுத்தம் நடந்துகொண்டிருக்கும். நேற்று மழையை சாக்காக வைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் தனது ரதங்களை முகத்திற்கு முகம் நிறுத்தி மழை சாட்சியாக அடித்துக் கொண்டார்கள்.

ஒரு நானூறு மீட்டர் தூரத்தை கேவலம் இரண்டே மணி நேரத்தில் கடந்தேன். இதுபோல சுற்றமும் சூழமும் கட்டியணைத்துக் கொண்டு நடுவீதியில் நிற்கும் நேரத்தில் அவர்களின் அன்புக்கு எல்லையே இருக்காது. ஆட்டோ அன்பர்கள் தன் மூக்கை நுழைத்து பத்து பேரை ஏற்றி தொப்பை பெருத்த தனது வாகனத்தை கிடைத்த கேப்பில் அவசரமாக திணிப்பார்கள். இரண்டு காலையும் பப்பரக்கா என்று பரப்பிக்கொண்டு, பத்து வருஷமாக சென்னையில் வண்டி ஓட்டினாலும் பத்து நாளைக்கு முன்னால் தான் டூ வீலர் பழகியது போல, கார் போகவேண்டிய இடைவெளியில் இருசக்கர வாகனம் ஓட்டும் முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் கோஷ்டி அடிக்கும் லூட்டி அலாதியானது. காலை மடக்கி வண்டிக்குள் வைக்கும் பொது மறுபடி ப்ரேக் அடித்து ஒரு ஆட்டம் ஆடி காலைப் பரப்பிக்கொள்வார்கள். லைசென்ஸ் கொடுத்த ஆர்.டி.வோவை பசித்த புலி தின்னட்டும். வாத்தியாருக்கு நன்றி.

இன்னும் சிலர் கிடைத்த சந்தில் சிந்து பாடும் இளஞ்சிட்டுக்கள். ரோடு ரோமியோக்கள்  ஒரு கழைக் கூத்தாடியின் லாவகத்தோடு வண்டியோடு ப்ரேக் டான்ஸ் ஆடி கோதாவில் நுழைவார்கள். நம்முடைய கார்க் கண்ணாடியை உரசி பக்கத்தில் வந்து நின்று ஒரு தீவிரவாதியைப் பார்ப்பது போல ஜன்னல் ஊடுருவி உற்று நோக்குவார்கள். நேற்றைக்கு ஒரு இருசக்கரானாதி வயிற்றை பிடுங்கிய பசியில் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சாலையை கடந்து எதிர்திசை கையேந்தி பவன் பரோட்டா கடைக்கு சென்றுவிட்டார். தன் பங்கிற்கு அந்த நூறடி ரோடில் இரண்டடி அவர் எடுத்துக்கொண்டார்.

பேருந்து நிலையத்திற்குள் நுழைய முடியாமல் எல்லா பேருந்துகளும் திணறிக்கொண்டிருக்க, அவற்றின் உள்ளே நிற்க திராணியில்லாமல் கையில் பெட்டியோடும், இடுப்பில் புட்டிப்பால் குடிக்கும் குழைந்தையோடும் அட்சதை போல பெய்துகொண்டிருந்த மழையில் இறங்கி நடந்தார்கள். சமூக நலனை கருத்தில் கொண்டு ரோடோரத்தில் பள்ளம் நோண்டிய ஏதோ ஒரு பாடாவதி கம்பெனியின் செயற்கரிய செயலில் ஒருவர் பையோடு கீழே விழுந்து அந்த சாக்கடை சமுத்திரத்தில் முழுகி முத்தெடுத்தார். 

பஸ் ஸ்டாண்டில் பாலிதீன் கவர் மூடி பானி பூரி விற்கும் வடக்கத்திய இளைஞர்கள் சிலர் அந்த மழை நீரை சுவை நீராகக் கருதி பானியுடன் பானியை கலந்து கரையேறி சென்றார்கள். நாளைக்கு வெய்யில் அடித்தால் நனைந்த பூரி இன்னும் சுவையாக இருக்கலாம். ஒரு மாதிரி வாசனை அடித்தால் பேர் பாதி விலையை குறைத்து விற்பனையை கூட்டலாம். மதியூக விற்பனையாளர்கள் ஜெயிப்பார்கள். 

பதினொன்று முப்பதிற்கு என்னுடைய நன்நடத்தை காரணமாக ரிலீஸ் செய்தார்கள். முக்கி முனகிய சேப்பாயி எடுத்தாள் ஒரு ஓட்டம். இரண்டு நாட்கள் முன்னால் ஏதோ வெளிநாட்டு சதியில் சாலையோர பெருமரத்தின் கிளை ஒன்று முறிந்து என்னுடைய சேப்பாயியின் முகத்தில் விழுந்து அழகுச் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த துர்ப்பாக்கிய நிலை இன்றும் நேரக்கூடாது என்று பயந்து சாலையை பார்த்த நேரத்தை விட அண்ணாந்து பார்த்து வண்டி ஒட்டிய நேரம் தான் ஜாஸ்தி. நல்லவேளை எங்கள் பேட்டையில் நான் நுழையும் வேளையில் ஊர் அடங்கியிருந்தது. 
வகைவகையான இலவசங்கள் அள்ளித் தரும் பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் வெள்ளை வேஷ்டி சட்டை மகோத்தமர்கள் இதுபோல பொது அவலங்களை களைவதற்கு முயற்சி எடுத்தால் அவர்கள் வீட்டில் இரவோடு இரவாக பொன் விளையும். இது அகஸ்தியர் அவரது ரஸவாத புத்தகத்தில் எழுதியிருக்கும் ரகசியக் குறிப்பு. 

பின் குறிப்பு: இதுபோல மராத்தான் இன்ச்சிங் காம்பெடிஷன் போட்டிகளின் போது  கொரிப்பதர்க்கோ குடிப்பதற்கோ கையில் ஏதோ சரக்கு வைத்துக் கொள்ளவேண்டும் என்பது நேற்றைய இராக்கூத்தில் நான் கற்ற நீதி!

பட உதவி: vinodvv.posterous.com (இது நேற்றைய மழையில் எடுத்தது அல்ல. இருந்தாலும் எல்லா மழைக்கும் பொருத்தமான சாலைப் படம். என்னை மிகவும் கவர்ந்தது.

-

Monday, June 6, 2011

பெருமாள் ராசி


பெண்கள் கூந்தலில் இருக்கும் மல்லிப்பூ அகஸ்மாத்தா பக்கத்து ஆம்பிளை காதுக்கு ஏறும் அளவிற்கு கோவிலில் ஒரே பக்தர் கூட்டம். நெரிசலில் "கோவிந்தா... கோபாலா.." என்று பெருமாளை அவரவர்கள் வசதிக்கு ஏற்றார்ப் போல அழைத்து குசலம் விசாரித்து கும்பிடு போட்டார்கள். ரொம்ப நாளாக ஏகாதேசி கோவில் அது. வெளிப் பிரகாரத்தில் ஒரு குழல் விளக்கும் பெருமாள் சன்னதி முன்னால் ஒரு குண்டு பல்பும் எரியும். தாயார் சன்னதி வாசலில் ஒரு டியூப் லைட் மின்னல் எஃபெக்டில் மினுமினுக்கும். எல்லா விளக்கும் விளக்கல்ல.

திடீரென்று யாரும் எதிர்பார்க்காத ஒரு நன்னாளில் கோபுர வாசலில் பூக்கடையும், பழக்கடையும் அர்ச்சனைத் தட்டுமாய் இந்தக் கோயில் பிக்கப் ஆகிவிட்டது. ஊரில் ரெண்டு பேருக்கு சந்தான பாக்யமும், காசுக்கடை செட்டியாருக்கு கூரையை பிச்சுகிட்டு கொடுத்தார் என்றும் செவிவழி விளம்பரம் ஊருக்குள் ஊடுருவிய நாளில் இருந்து பக்திமான்கள் அந்தக் கோயிலுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இப்போது அவருக்கு ஏக கிராக்கி. பல பேருக்கு ராசியான சாமி. வாசுவுக்கு பெருமாள் பிடிக்கும். ஆனால் ஏகாந்தமாக தரிசிக்க பிடிக்கும். ஒரே கசகசப்பில், மூச்சு முட்ட நெருக்கியடித்துக்கொண்டு அக்குள் வேர்வையை பிறத்தியார் மூஞ்சிக்கு அப்பி தலைக்கு மேலே கும்பிடு போடும் கூட்டத்தை பார்த்தால் அவனுக்கு பயங்கர அலர்ஜி. 

"பொறந்த நாளா இருக்கு.. போய் பெருமாள சேவிச்சுட்டு வாடா..." என்று கட்டளையிட்ட நார்மடி பாட்டியின் சொல்லைத் தட்டாமல் ஊருக்கு ராசியான பெருமாளை பார்க்க கோவிலுக்கு வந்திருந்தான். இன்றும் மற்றவர் கால் மேல் ஏறி காலோடு கால் பின்னி சாமி பார்க்க முண்டியடிக்கும் பக்திக் கூட்டம் கொஞ்சம் இருந்தது. ரேடியோக்களில் மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களின் கடைசியில் ரிஸ்க் விதிமுறைகள் சொல்லும் வேகத்தில் சாரி அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். தாயாரின் துளசி மாலை வாசனையை தூக்கி அடிக்கும் விதமாக கூட்டத்தின் துர்கந்தம் வீசிற்று. வாசு கண் மூடி லோகஷேமத்திர்க்காக வேண்டிக்கொண்டான். வியர்வை இல்லாத மனிதர்களை படைக்க மனமார பிரார்த்தித்துக் கொண்டான்.

கண நேரத்தில் ஒரு சந்தன வாசனை அவன் மூக்கில் நுழைந்து இரண்டு கண்ணையும் திறந்தது. எதிர் வரிசையில் பிரகாசமாக உடலெங்கும் குழைத்துப் பூசிய சந்தனக் கலரில் ஜொலித்தாள் அவள். மழமழவென்று வெண்ணை தடவிய தேகம். நாயுடு ஹால் மீடியம் என்று தயாரிக்கும் எந்த உள்ளாடையும் அவளுக்கு அளவு எடுத்து தைத்தார்ப் போல சிக்கென்று இருக்கும். தழையத் தழைய பச்சைப் பாவாடை. அந்தக் காலத்து சாவித்திரி போல புஃப் கை வைத்த சட்டை. இருபது இருப்பாள். நிச்சயம் இருபத்திரண்டுக்கு மேல் இருக்க மாட்டாள். ஆங்கிலம் பேச ஸ்ருதி மீட்டிய வாய். கண்ணிரெண்டும் கத்திரி. குழி விழும் பட்டுக் கன்னம். கூர் நாசி. எவ்வளவு ஒதுக்கி விட்டாலும் அடங்காப்பிடாரியாக மீண்டும் மீண்டும் சுருட்டிக்கொண்டு நெற்றியில் விழும் தலைமுடி. திருஷ்டிக்கு கன்னத்தில் ஒரு குட்டிச் செல்லப் பரு.

"எல்லோரும் சேவிச்சுக்கோங்கோ... தாயார் ஆனந்தவல்லியா சேவை சாதிக்கறா.... பெருமாளோட எந்நேரமும் ஆனந்தமா இருக்கரதுனால ஆனந்தவல்லி.... சேவிக்கரவாளுக்கு சந்தோஷத்தை அளவில்லாம கொடுக்கரதுனாலையும் ஆனந்தவல்லி.." என்று ஆரம்பித்து தாயாரை வர்ணித்து பக்தி மணம் கமழ நெய் தீபம் காண்பித்தார். தாயார் சந்நிதியில் ஒழுக்கமில்லாமல் அந்தப் பச்சைப் பாவாடை சட்டையை பார்த்தது மகா தப்பு என்று வாசு கன்னத்தில் பட்பட்டென்று போட்டுக்கொண்டான். கண் விடாமல் அத்துமீறி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது. பொட்டிட்டு, பூச்சூடி மங்களகரமாக எதிரே நின்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்த அவளது முகத்தில் ஒரு குழந்தையின் குறும்பு கொப்பளித்தது. கண்ணிரெண்டும் துறுதுறுக்க நிமிர்ந்து பார்த்து இடது கையால் முகத்தில் விழுந்த முடியை ஓரங்கட்டிவிட்டு தீபாராதனை எடுத்து ஒற்றிக்கொண்டாள். நெய்தீப ஒளியில் முகம் டாலடித்தது. காண்போரை வதைக்கும் ராட்சஷ இருபது.


குங்குமம் வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டு மீதியை தூணுக்கு தடவி விட்டு திரும்பும்போது ஒரு ஜோடிக் கொலுசுகள் "வாசு..வாசு..." என்று செல்லமாக கூப்பிடுவது போல கேட்டது. காற்றில் மிதந்து வந்த நறுமணத்தை மோப்பம் பிடித்து கழுத்து சுளுக்க திரும்பிப் பார்த்தான். பிரகாரத்தின் அரையிருட்டில் குரல் எதிரொலிக்க ஒல்லிக்குச்சி ராதா அவளோடு ஒட்டிக்கொண்டு லொடலொடவென்று பேசிக்கொண்டே நடந்து வந்தாள். பிரகார மேற்கூரையின் ஓட்டைகளின் வழியே குழல் குழலாக தரை வந்து இறங்கிய வெளிச்சத்தில் மணிரத்னம் பட நாயகி போல இருந்தாள் அவள்.

"யாருடி ராதே! உங்க மாமா பொண்ணா!" என்ற அல்டாப்பு விஜயா மாமியின் விசாரணைக் கேள்விக்கு "ஆமாம் மாமீ!" என்று இரைந்தாள் ஒ.கு.ராதா.

"எப்பிடிடி கொழந்தே இருக்கே. சின்ன வயசில பார்த்தது..." என்று தோளைத் தொட்டு தடவி ஆரம்பித்து அளக்க ஆரம்பித்த மாமியிடம் அவள் தனது பேரைச் சொல்லும் போது உச்சி காலத்திர்க்காக பெரிய மணி அடித்து காதில் விழாமல் சதி செய்துவிட்டது. கவனிப்பாரற்று ஒரு ஓரத்தில் தூணில் பறந்து கொண்டிருந்த சஞ்சீவிப் பர்வதம் தூக்கிய ஆஞ்சநேயரை அவர்கள் அவனை கடக்கும் வரை ஏழு முறை அடி பிரதக்ஷிணம் செய்தான். பாவாடை சரசரப்பும், கொலுசு சலசலப்பும் பக்க வாத்தியமாகக் கொண்டு சங்கீதமாக பேசி சிரித்துக்கொண்டு சென்றாள்.

சாமி சன்னதிக்குள்ளும் சைத்தான் மனசு விடாமல் அவளை துரத்திற்று. கண் விரட்டிப் பிடித்து மனசுக்கு காதல் சேவகம் செய்தது. உற்சவமூர்த்தி கண்ணை திறந்து அவளையே உற்றுப் பார்ப்பது போல ஒரு பிரமை அவனுக்கு.

இமையிரண்டும் மூடி சேவிக்கும் போது மன்மதச் சிலையாக இருந்தாள். சந்நிதிக்குள் சைட் அடித்தால் பெருமாள் கண்ணை குத்திவிடுவார். அவன் ஒரு god fearing பையன். ஆனால் ஒரு fairy loving இளைஞன். பிரசாத துளசி வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டு வெளியே வந்தான். சடாரி வைக்கும் போது தலை குனிந்த அவள் பிம்பம் ஃப்ளாஷடித்தது. ஷாம்ப்பூ விளம்பரங்களில் வருவது போல கேசம் பந்தாக சுருண்டு நிமிர்ந்தது. இதுவரைக்கும் தெருவில் இந்த வடிவழகியை பார்த்ததில்லையே என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது
"டீ... காதம்பரி... நில்லுடி.. கொஞ்சம் மெதுவாப் போ..." என்று ஒல்லிக்குச்சி ராதா அவளை துரத்திக்கொண்டே குங்குமம் மூடிய இடதுக் கையை தூக்கி பிடித்துக் கொண்டே ஓடிவந்தாள். வாசு காதுகளில் காதம்பரி மோகனமாய் வழிந்தது.

இரண்டடி இடைவெளியில் அவர்களோடு சுவாமி சன்னதி வலம் வந்தான். கொடிமரம் அருகில் நமஸ்கரித்து எழுந்தவனை திரும்பிப் பார்த்த ராதா "என்ன வாசு? புதுச் சொக்கால்லாம் போட்ருக்கே. பர்த் டே வா?" என்றாள். என்புதோல் போர்த்திய ராதையை இதுநாள் வரை லட்சியமே செய்யாதவன் "ஆமா... இந்தா சாக்லேட்..." என்று பான்ட் பாக்கெட்டில் கையை விட்டு காட்பரீஸை எடுத்து நீட்டினான். "ஒண்ணுதானா?" என்று கேட்டவுடன் கை நிறைய எடுத்து ரெண்டு கையாலும் ஏந்தி நின்றான். "நீங்களும்..." என்று அவளிடத்தில் கையை காண்பித்தான். "தேங்க்ஸ்." என்று அவள் ஒற்றை வரி உதிர்த்ததில் வாசுவின் ரத்தம் அதிவிரைவு ஓட்டம் எடுத்து அவன் நரம்புகளை ஜிவ்வாக்கியது.

கோவிலை விட்டு வெளியே வரும்போது கோபுரவாசல் அருகில் பச்சைப் பாவாடை சந்தனக் கலர் சிரிக்க எல்லாம் பெருமாள் ராசி என்று புல்லரித்துப் போனான்.

நாளைக்கும் வாசு கோவிலுக்கு வருவான்.

படம்: அடியேன் கிளிக்கியது.

-

Thursday, June 2, 2011

இளையராஜா: ஒரு யுகக் கலைஞன்

இப்போது நீங்கள் படிக்கப் போவது ஒரு நான்-லினியர் பதிவு. அதாவது ஒரு அரை மணி நேரம் இளையராஜாவை பற்றி நினைத்தால் என்னென்ன பாடல்கள் நினைவில் வந்து அலை மோதிவிட்டு போனதோ அந்த பாடல்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். காலக்கிரமமாகவோ, அகர வரிசைக்கிரமமாகவோ, நடிகர்களின் வரிசையாகவோ, இயக்குனர்களின் வரிசையாகவோ, காதல்,சோகம், பாசம் போன்ற பகுப்புகளின் வரிசையாகவோ இது இருக்காது. ஒரு ரசிகனின் அரை மணி நேர பிதற்றல்கள் இது.


தாய் மூகாம்பிகையில் வரும் "ஜனனி ஜனனியும்", அலைகள் ஓய்வதில்லையின் "புத்தம் புது காலை"யும், குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று சாதகம் செய்யும் ஆவாரம்பூ விடலைப்பையன் பாடும் "மந்திரம் இது மந்திரம்"மும், ரேக்ளா ரேஸ் முடிந்து நாலைந்து பேர் முரட்டுக்காளை ரஜினியை தூக்கி "அண்ணனுக்கு ஜே!" சொல்லி சூப்பர்ஸ்டார் பாடும் "பொதுவாக என் மனசு தங்கம்"மும், கேப்டனின் பிரபாகரனில் ரம்யா கிருஷ்ணன் துப்பாக்கி தூக்கிக் கொண்டு குத்தாட்டம் போடும் "ஆட்டமா"வும், தண்ணீர் சொட்டும் முற்றத்தில் நின்று சொட்டுக்களை கையால் அலசி கஸ்தூரியின் ஆசைக்கு பிரபு பாடும் "சின்ன சின்ன தூறல் என்ன"வும், மணியின் மௌனராகத்தில் மைக் இல்லாமல் மோகன் பாடும் "நிலாவே வா"வும், நாயகனில் கடற்கரையோரத்தில் அந்த சிறுவன் இருகைகொண்டு கிளாஸ் டீ பிடித்து குடிக்கும் போது "ஆ... ஆ..." என்று ஆரம்பித்து வரும் "தென்பாண்டி சீமையிலே"யும் வேலு நாயக்கர் பேரன் அவரிடம் "நீங்க நல்லவனா கெட்டவனா" கேட்கும்போது வரும் பி.ஜி.எம்மும், சிங்காரவேலன் கமல் குஷ்பூவை ஸ்ட்ரக்ச்சரில் படுத்துக்கொண்டே தள்ளிக்கொண்டு போய் பாடும் "இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்"யும்,

கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க... இன்னும் பாக்கி இருக்கு...

மதுவையும் திராட்சையையும் வாயால் ருசித்து டிம்பிள் கபாடியாவை கண்ணால் ரசித்து விக்ரம் கமல் பாடும் "மீண்டும் மீண்டும் வா"வும், அம்பிகாவை கமல் ராதா கிருஷ்ணன் போஸில் இடுப்பில் ஒரு கையும், மேலே தூக்கிய கையோடு மறு கையும் கொண்டு  நடுக் கூடத்தில் அரவணைத்து பாடும் "வந்தாள் மஹா லக்ஷ்மியே..."யும், அதே அம்பிகாவை காக்சிசட்டையில் கட்டிபிடித்து கமல் கேட்கும் "கண்மணியே பேசு..."வும், இயக்குனர் சிகரத்தின் உன்னால் முடியும் தம்பியில் சீதாவுடன் சைக்கிளில் சென்று தரையில் விழுந்த பூக்கள் தானாக மரத்தின் மேல் செல்லும் போது கமல் பாடும்  "இதழில் கதை எழுதும் நேரமிது .."வும், கார்த்திக்கை அந்த புதுமுக குண்டு நடிகை "எஸ் ஐ லவ் திஸ் இடியட்" என்று காதலுடன் திட்டி, பாடும் நிலா பாடிய "காதல் கவிதைகள் படித்திடும் நேரம்"மும், "காளிதாசன் உன்னை கண்டால் மேகதூதம் பாடுவான்" என்று சரணத்தில் அமைந்த "வா வா வா கண்ணா வா" என்ற வேலைக்காரர் ரஜினி அமலாவை பனி பிரதேசத்தில் பரதநாட்டியம் ஆட விட்டு பாடியதும், கமல்ஹாசன் கம்பு சுழற்றி கெளதமிக்கு வீரம் காண்பித்து பெரியத் தேவர் மகனாக "சாந்து பொட்டு சந்தன பொட்டு" இட்டும் ரேவதியை "இஞ்சி இடுப்பழகி" என்று வர்ணித்து பாடியதும், 

இன்னும் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க... இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு... 

வயதில் அரை செஞ்சுரி போட்ட நடிகர் திலகத்தை நாயகனாக்கி அழகு பார்த்த இயக்குனர் இமயம் சிவாஜிகணேசனுக்கு தந்த முதல்மரியாதையில் வந்த "பூங்காற்று திரும்புமா" வும் மணல் வெளியில் ஓடி வரும்போது வசனத்திற்கு வேலை தராத அந்த புல்லாங்குழல் இசையும், மேட்டுக்குடி ஜனங்கள் கேட்கும் இடத்தில் சேரிக்கும் பாட்டு படி என்று "சிந்து" சுகாசினி "பைரவி" கட்டிய சிவகுமாரை கேட்கும் "பாடறியேன்... படிப்பறியேன்..."னும், பி.எஸ்.ஏ சைக்கிள் கொண்டு நண்பர்களுடன் தாத்தா ஊரில் பச்சை பசுமையில் சுற்றும் கார்த்திக்கை வருஷம் பதினாறில் "ஏய் அய்யாசாமி.. உன் ஆளை காமி" என்று சார்லி மற்றும் நண்பர் மும்பையிலிருந்து வந்திறங்கிய (படத்தில்) ஒல்லி குஷ்புவை காட்டச் சொல்லி பாடியதும், அதே குஷ்பூவை கிழக்கு வாசலில் "தளுக்கி தளுக்கி தான்" என்று சின்னி ஜெயந்துடன் கார்த்திக் வரப்பில் வெறுப்பேற்றியும் ரேவதியை "பச்சமலை பூவு" பாடி தூங்க வைத்ததும், கட்டு கட்டாக வேலங்குச்சி, ஆலங்குச்சி அனுப்பி எஜமான் ரஜினியை காதலித்து மீனா பாடும் "ஆலப்போல் வேலப்போல்"ம்,வெள்ளை வேட்டி சட்டை போட்டு வழித்து தலை சீவி சந்தனப் பொட்டிட்டு சின்னக்கவுண்டர் சுகன்யாவின் முத்து மாலையை பிடித்து அருவி விழும் பாறையில் இழுக்கும் போது பாடும் "முத்து மணி மாலை"யும்,  பி.சி ஸ்ரீராமின் ஒளி அலைகளின் நடுவே ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பிரபுவை நினைத்து அமலா பாடும் "நின்னுக் கோரி வரணு"மும், மழலைப் பட்டாளங்க ளை  வைத்து மணி எடுத்த அஞ்சலியில் வரும் "மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி"யும்

இன்னும் இன்னும் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க... இன்னும் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு... 

கேம்ப் ஃபயர் மூட்டி கிடார் இசைத்து ரேவதி முன் முரளி பாடும் "துள்ளி எழுந்தது பாட்டு"ம், அடவு கட்டி ஆட ஆசைப்படும் நாசர் அரிதாரம் பூசிய அவதாரத்தில் வரும் "ஒரு குண்டு மணி குலுங்குது.."வும், அமலாவை தேடித் தேடி மோகன் பாடும் "தேடும் கண் பார்வை தவிக்க..."வும், புதுப் புது அர்த்தங்களில் காதலுக்கு குருவாயூரப்பனை சாட்சியாக வைத்து எஸ்.பி.பி ரகுமானுக்கும் பொசஸிவ் கீதாவுக்கும் பாடிய "குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு"ம், புது நெல்லு புது நாத்தில் தோளில் தூக்கி கொண்டு போகும் மச்சானை காலில் கிச்சு கிச்சு மூட்டி சுகன்யா பாடும் "கருத்த மச்சான்... கஞ்சத்தனம் எதுக்கு வச்சா"னும், பாபு நடித்த பாரதிராஜாவின் என் உயிர்த் தோழனில் வரும் "ஏ ராசாத்தி ராசாத்தி"யும், காதலியின் நினைவில் ராத்திரி ராத்திரி ஊரில் உள்ளோருக்காக கையில் காதலி கொலுசு தட்டி விஜயகாந்த் பாடிய படத்தில் ரேவதி கோயிலில் பரதநாட்டியம் ஆடும் "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ"வும், சகல கலா வல்லவனான கமல் அம்பிகாவுடன் கயற்றுக் கட்டிலில் படுத்து பாடும் "நிலா காயுது..."வும், நந்திதா தாஸ் பார்த்திபனின் வீட்டு வேலைக்காரியாகவும் முன்னாள்  காதலியாகவும் வரும் அழகி படத்தில் வரும் "பாட்டு சொல்லி பாடச் சொல்லி"யும், டிக் டிக் டிக்கில்  பரத நாட்டியம் ஆடும் மாதவியை கமல் படுத்து படுத்து போட்டோ எடுக்கும் "பூ மலர்ந்திட மலர்ந்திடும்"வும், கண் தெரியாத ராஜபார்வை கமல் காதலி மாதவி மேல்  கை பட்டும் படாமலும் பாடிய "அழகே.. அழகு.. தேவதை.."யும், கொஞ்சம் குண்டான குஷ்பூ சத்யராஜுடன் ப்ரம்மாவில் பாடும் "வருது வருது இளங்காற்றும், பல் காட்டி சிரித்தும், சீறியும் சீயான் விக்ரம் நடித்த பிதாமகனில் வரும் "இளங்காற்று வீசுதே"யும், பைத்தியம் பிடிக்கும் கல்லூரி மாணவனாக விக்ரம் நடித்த சேதுவில் வரும் "மாலை என்  வேதனை கூட்டுதடி"யும், கயிறு கட்டி மரத்தின் மேல் ரேவதியை தூக்கி பாண்டியன் மண் வாசனையில் பாடும் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு"ம்  ................................................................................................



முடியலை... இன்னும் இந்த பட்டியல் முடியலை.. இவ்வளவும் கேட்பதற்கும் இது பூபாளமா, மோகனமா, மத்யமாவதியா, நிலாம்பரியா, கரஹரப்ப்ரியாவா, சங்கராபரணமா, தோடியா, வசந்தாவா, சாரங்காவா என்றெல்லாம் தெரியவேண்டிய அவசியம் இல்லாமல் அப்படியே ரசிக்க வைத்த இசைதேவன், இசைஞானி, இளையராஜாவிற்கு இந்த ரசிகனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

பின் குறிப்பு: இது ஒரு மீள் பதிவு. போன வருஷம் ராஜாவுக்கு எழுதிய வாழ்த்தை எடுத்து தலைப்பை மாற்றி பாட்டையெல்லாம் போல்ட் பண்ணி இங்கே போட்டுட்டேன்.

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails