தேசப்பிதா காந்தியடிகள் மேற்படிப்பிற்கு லண்டனுக்கு சென்றது போல என் பிதா நான் மென்மேலும் படித்துச் சிறக்க தேசிய மேல்நிலைப் பள்ளியில் முதுகில் புத்தக மூட்டையும் நீல டிராயர் வெள்ளை சொக்காய் சீருடை சகிதம் ஆறாம் வகுப்பில் சேர்த்து விட்டார். அது ஒரு நூற்றாண்டு கால பெருமை வாய்ந்த ஸ்கூல். நிறைய வகுப்பறைகளுடன் வாசலில் ரங்கன் நினைவு பேஸ்கட் பால் கோர்ட்டுடன் பெரிய ஸ்கூல். வீணை ஏந்தி வெள்ளைத்தாமரையில் சரஸ்வதி ஸ்கூல் உச்சியில் வெயில் மழை பாராது கருணையோடு வீற்றிருப்பாள். ஐந்தாம் வகுப்பு வரை சின்ன கான்வென்டில் தமிழ் வழிக் கல்வியில் ஆனா ஆவன்னா என்று படித்து தீந்தமிழில் வளர்ந்தவனை ஆறாவதில் தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீசு மீடியம் படிக்கச் சொன்னார்கள். ஐந்தில் வராதது ஆறில் வருமா?
ஹரித்ராநதியில் இருந்து தே.மே.பள்ளி நிச்சயம் இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். காலார தேரடி, பெரிய போஸ்ட் ஆபிஸ், கிக்கான குஷ்பூ ஒயின்ஸ், புள்ளித்தாள்* விற்கும் சோழன் மளிகை, வாசலில் பொம்மைக்கு அலங்கோலமாக சேலைக்கட்டி வைத்திருக்கும் லக்ஷ்மிராம்ஸ் சில்க் ஹௌஸ், பிஸ்கட் மற்றும் கேக் நறுமணம் கமழும் ஜீவா பேக்கரி, அரிசிக்கடை சந்து ஏற்றம், முதலியாரின் நாட்டு மருந்துக் கடை, அந்த 'மருந்து' விற்கும் கலா ஒயின்ஸ், யுவராஜின் டில்லி ஸ்வீட்ஸ் திரும்பியதும் அழகப்பா தாளகம், ஒத்தைத் தெரு ஆனந்த விநாயகரை மொத்த குத்தகை எடுத்திருக்கும் ஆர்.ஆர். ட்ராவல்ஸ், வெண்ணைத்தாழி மண்டபம் என்று கடைத்தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தால் இருபது நிமிஷத்தில் ஸ்கூலை அடையலாம். ஏற்கனவே பள்ளிப் பிராயத்திலே என்ற பதிவில் பள்ளிப் போக்குவரத்து பற்றி நிறைய எழுதிவிட்டேன். இம்முறை நான் கல்விச் செல்வம் பெற்ற ஆசிரியர்கள் பற்றியது.
ஆறாம் வகுப்பில் தாண்டான் சார் தான் வகுப்பாசிரியர். முதன் முறையாக கையில் பிரம்போடு நான் பார்த்த ஆசிரியர். ஆளைப் பார்த்தால் பரமசாதுவாக இருப்பார். குளிருக்கு தோதாக காதை மறைக்கும் ஸ்டெப் கட்டிங். கையில் இருக்கும் பிரம்பு சற்றே வீங்கினார்ப் போன தேகம். மணிக்கட்டிலிருந்து நழுவி எந்நேரமும் கீழே விழும் அபாயத்துடன் தொங்கும் கைக்கடிகாரம். அவருக்கு உடம்பு முழுவதும் கண்டிப்பு ரத்தம் கன்னாபின்னாவென்று ஓடியது. ஒரு கையடக்க பால் கணக்கு நோட்டு போட்டு நாங்கள் தினமும் வீட்டுப்பாடம் படித்ததை அதில் எழுதி வீட்டாட்களிடம் கையொப்பம் பெற்று வரவேண்டும். தினமும் காலையில் முதல் முப்பது நிமிடங்கள் நல்ல ராகு காலம். சங்கர ஹாலில் மரக்கட்டை கால் கொண்ட இரும்பு தடுப்பு போட்டு மூன்று வகுப்புகள் சத்தமாக நடக்கும். இரண்டாம் தடுப்பின் அறிவியல் முதல் தடுப்பின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து அறிவரலாறாக காதில் விழும். சான்ட்விச் கோர்ஸ். முதல் மறைவுத் தடுப்பில் தரையில் ஆறாவது 'ஏ' பிரிவு ஆங்கில மீடியம். அப்புறம் 'பி'. 'ஸி' என்று எங்களோடு இணையான பிரிவுகள்.
நடுஹாலில் தோளில் சார்த்திய தண்டத்துடன் நாங்கள் படிப்பதை கவனித்துக் கொண்டிருந்த ஆதிசங்கரர் ஒரு தடவை கூட தாண்டான் சாரிடம் இருந்த தண்டத்திடம் இருந்து என்னைக் காப்பாற்றவில்லை. கம்பை சுழற்றி அடிக்கும் போது தொழில்முறை சிலம்பாட்டகாரர்கள் எல்லாம் அவரிடம் பிச்சை எடுக்கவேண்டும். காற்றில் "விர்..விர்.." என்ற ஓசையுடன் கணுக்கால், உள்ளங்கை, தோள்பட்டை என்று சகல இடங்களிலும் விளாசி "சாந்து பொட்டும் சந்தன பொட்டும்" தேவர் மகன் ஸ்டைலில் அசால்ட்டாக வைப்பார். அவரால் தான் புஸ்தகத்தை எடுத்து நித்யமும் படிக்கவேண்டும் என்ற அடிப்படை பள்ளி ஒழுங்கை கற்றுக்கொண்டேன். வாழ்க அவரது சிலம்பமும், கண்டிப்பும்!
ஏழாம் வகுப்பில் இங்கே சொல்லிக்கொள்ளும்படி வரலாறு படைக்கும் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சங்கர ஹால் கடந்து போனால் மூன்றாம் கட்டு ஒன்று எங்கள் பள்ளிக்கு உண்டு. ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு கீழே மூளைக்குச் சூடு வைத்து எட்டாம் வகுப்பு பாடத்தை புத்தியில் பதிய வைத்துக்கொண்டிருப்போம். பாஸ் செய்யும் அளவுக்கு படித்தால் போதும் என்ற பொன் செய்யும் மனது படைத்தவனாக இருந்தேன். ஆங்கில மீடியம் என்ற ஃபாரின் கோஸ்ட் படாத பாடு படுத்திய பாட்டில் எனது பால்யம் அழிக்கப்படுவதாக உணர்ந்தேன். எப்படியும் எழுபது சதவிகிதம் குறையாமல் மார்க் எடுத்து எனது புகழை நிலைநாட்ட மிகவும் பிரயர்த்தனப்பட்டேன்.
ஒரு காலாண்டு தேர்வில் விளையாட்டு புத்தியில்(?!) கொஞ்சம் குறைவாக மார்க் எடுத்து வசமாக மாட்டிக்கொண்டேன். சாந்தகுமாரி டீச்சர் மிகவும் அமைதியானவர் தான். Not Satisfied என்று இரண்டு வார்த்தை எழுதி கையெழுத்திட்டு ரேங்க் கார்டில் ராங்கு காட்டினார் எனது தகப்பனார். இதைக் கண்ட சாந்தகுமாரி டீச்சர் கோபாக்கினியில் கோபகுமாரி ஆகிவிட்டார்கள். "நீ படிக்கறது உங்க அப்பாவுக்கு Not Satisfied-ஆ இல்ல நான் சொல்லிக்கொடுக்கறது Not Satisfied-ஆ" என்ற கிடிக்கிப்பிடி கேள்வி ஒன்று என்னைக் கேட்டு இரண்டு நாளைக்கு படுத்தி எடுத்துவிட்டார். மேற்கூரையும், டீச்சரும் ஒரு டீமாக சேர்ந்து என்னை உஷ்ணப்படுத்தினார்கள். காய்ந்து கருகி விட்டேன்.
கையில் கொண்டுபோகும் மோர்சாதத்தை ஸ்கூலுக்கு எதிரில் இருக்கும் சுதர்சன் காப்பி கடையின் பின்னால் இருக்கும் முற்றத்தில் உட்கார்ந்து சாப்பிடுவேன். ஓடு சரிந்து இறக்கும் பின்கட்டில் காப்பிக் கொட்டை சரக்கு அடுக்கி வைத்திருப்பார்கள். ஒரு மண் பானையில் தண்ணீர் நிரப்பி மூடி அதன் மேல் சிகப்பு கலர் பிளாஸ்டிக் டம்பளர் வைத்திருப்பார்கள். ரெண்டு ரூபாய்க்கு வாங்கின காசிற்கு அது இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கலாம். நான் சாப்பிட்டு முடித்ததும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரிட்ஜிலிருந்து வெண்ணை எடுத்து பேப்பரில் மடிக்கவும், சுடச்சுட அரைத்த காப்பிபொடியை மெஷின் வாயில் தட்டி எடுத்து மணம் குறையாமல் காக்கி பொட்டலத்தில் மடித்துக் கொடுத்தும் தொண்டு புரிந்தேன்.
கை வைத்த பனியனோடு கை ஒழியாமல் வேலை பார்த்த பவானந்தம் மற்றும் துரைக்கண்ணு இருவருக்கும் இன்னமும் நான் நினைவில் இருப்பேனா என்று தெரியாது ஆனால் சுதர்சன் காப்பி மணம் என் மனத்தில் இன்னமும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஒரு முறை பிஞ்சு வெள்ளரிக்காய் என் பிஞ்சு மனத்தை அபகரித்ததில் ஒரு எட்டணா சுதர்சன் கடையில் கடன் வாங்கி சாப்பிட்டதற்கு ஒரு வாரம் என்னை வீட்டில் வறுத்து எடுத்துவிட்டார்கள்.
ஆர்ட்டும் கிராஃப்ட்டும் இரண்டு ஜாலி வகுப்புகள். சுருட்டை முடி ஸ்ப்ரிங் போல அசைந்தாட, செல்லமான கெட்ட வார்த்தை திட்டோடு பள்ளியின் பின்னால் கொல்லைப்புறத்தில் டாய்லட் அருகில் நீலக் கலர் இரும்பு சேர் போட்டு ஆர்ட் வாத்தியார் ரெங்கராஜன் சொன்ன திகில் கதைகள் அழியாப் புகழ் பெற்றவை. "சிங்கபெருமாள் கோவில்ங்கற ஊர்ல ராத்திரி பன்னெண்டு மணிக்கு அவன் வந்து இறங்கறான்...அப்போ..." என்று அவர் கதையில் சொன்ன அந்த ஊர்ப் பெயர் முதன் முறையாக சென்னை வந்தபோது அவரை கொண்டு வந்து அந்த ஊர்ப் பெயர்ப்பலகை முன்னால் நிறுத்தியது.
கிராஃப்ட் ஜெயராமன் சார் கொஞ்சம் 'மூடி' பேர்வழி. ஆர்ட் போல குலுங்ககுலுங்க சிரிக்க மாட்டார். எப்பவும் ஒரு இனம்புரியா சோகத்தை முகத்தில் தாங்கி இருப்பார். எப்பவாவது அதிசயமாக புன்னகை பூப்பார். போலீஸ் கட்டிங்கில் அவரது கறார்த்தனம் தெரியும். எல்லோரையும் ஒரு பீரியட் முழுக்க கைகட்டி வாய்பொத்தி பேசாமல் உட்கார்த்தி வைத்து அப்போதே எங்களுக்கு யோகா கிளாஸ் எடுத்த ஆசிரிய யோகி அவர்.
எட்டாம் வகுப்பில் இருந்து கிரிக்கெட் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. படிப்பின் வலுவான இரும்புப் பிடியில் இருந்து தப்பிக்க விருப்பத்துடன் நான் என்னை கிரிக்கெட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டேன். அக்காலத்தில் ஸ்போர்ட்ஸ்க்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. வீதியில் லோக்கலாக மட்டையும் பந்துமாக திரிந்தவன், விசேஷ அங்கீகாரம் கிடைத்தது போல பள்ளி அணிக்கு கிரிக்கெட் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டேன். கை காலை உதறி வேகவேகமாக ஓடிவந்து சாப்பிட்ட பருப்பு சாதத்தின் ஒட்டுமொத்த இரும்புச் சத்தையும் பயன்படுத்தி வேகப்பந்து வீசியதில் "டேய்.. இவனோட பந்து பிட்ச் பண்ணினதும் ஃபாஸ்ட்டா வருதுடா. ஒரு நிப் இருக்கு" என்று ஊக்கப்படுத்தி கிரிக்கெட் ஜோதியில் ஐக்கியப்படுத்தினார் ராமு சார். போன வருஷம் கூட ராமு சாரிடம் தொலைபேசி தொல்லை கொடுத்து அறுத்துக் கொண்டிருந்தேன்.
கோகோ, ரிங் பால், பால் பேட்மிண்டன், கூடைப் பந்து, வாலி பால், சுக்ரீவன் பால் என்று இன்னபிற விளையாட்டுக்களுக்கும் பிரமாதமாக பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் சிறப்பு கவனத்திற்கு உரியவர் பெல்பாட்டம் ராமதாஸ். இவரும் ஸ்டேப் கட்டிங் பார்ட்டி. பெல் பாட்டம் பேன்ட் சிகப்பு ரோஜாக்கள் கமலஹாசனிடம் இருந்து வாங்கிப் போட்டது போன்று இருக்கும். மைதானத்தின் குப்பைகூளங்களை தனது பெல் பாட்டத்தினால் பெருக்கி சுத்தம் செய்துவிடுவார். உங்கவீட்டு பெல் எங்கவீட்டு பெல் இல்லை. உலக மகா பெல் பாட்டம் அது.
ஸ்ரீதரன் சார் ஒன்பதாம் வகுப்பாசிரியர். நிமிட்டாம்பழத்தில் விற்பன்னர். அரைக்கை சட்டைக்குள் கைவிட்டு ஒரு சிட்டிகை புஜத்தின் தோலை கையில் பிடித்து கிள்ள ஆரம்பித்தால் மாட்டிக்கொண்டவர்கள் தானாக ஹைஜம்ப் போல எம்பிக் குதிப்பார்கள். எல்லாம் உள்காயம். அந்த பீரியட் முழுக்க எரியும். சில இ.பி.கோ பிரிவுகளுக்கு அவரை விட்டு இந்தத் தண்டனை கொடுத்தால் சமுதாயம் திருந்தலாம். அவரிடம் எலும்பர்கள் தப்பிப்பதற்கு சாத்தியம் உண்டு. மூன்றாம் தெருவில் கணிதம் டூஷன் எடுத்தார். கிள்ளுக்கு பயந்தே அந்த தெருப்பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டேன். சோதனையாக அந்த வருடம் எங்கள் வகுப்பறையின் மேலே உத்தரத்தில் எங்களோடு சேர்ந்து ஒரு ஆந்தையும் குடிவந்து விட்டது. சில விஷமிகள் "ஆந்தை இருக்கும் வகுப்பில் படிப்பவர்கள் பேர் பாதி பாஸ் பண்ணுவது கடினம்" என்று ஆந்தை ஆருடம் சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். ஆனால் நிறைய பேர் தேறினார்கள்.
மகாலிங்கம் சார் புட்டபர்த்தி சாய்பாபாவின் அதிதீவிர பக்தர். குழந்தைகள் "பாபா" ப்ளாக் ஷீப் என்று பாடினால் கூட கண்ணை மூடி கன்னத்தில் போட்டுக்கொள்வார். அவ்வளவு பயபக்தி. அவருக்கு எல்லாம் சாய் மயம். ஒரு முறை எனது சீனியர்களின் வகுப்பில் இடது கையை மேலே உயர்த்தி ஆட்டி காண்பித்து "புட்டபர்த்தி போயிருந்தப்ப இந்த வாட்ச் சாய் பாபா எனக்கு கிஃப்ட்டா கொடுத்தார்" என்று சொல்லிவிட்டு மெய்சிலிர்த்துக் கொண்டார். வகுப்பில் ஒரு குல்லேரிப் பயல் "சிடிசன் வாட்சா பார்த்துதான் குடுத்தாரா?" என்று எதிர்கேள்வி கேட்டு மடக்கியதாக நினைத்துக்கொண்டவனை அந்த ஆண்டின் இறுதி வகுப்புவரை திரும்பிப் பார்க்கவில்லை என்று மேல்வகுப்பு அண்ணாக்கள் பேசிக்கொண்டார்கள்.
ஸ்கூல் பாடங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எண்ணம் போன போக்கில் ஜன்னல் வழியாக ரோடை பிலாக்குப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அலாதியான விஷயம். மனசுக்கு சுகம் தரும் காரியம். ஜன்னலுக்கு வெளியே தெரியும் பிரசித்தி பெற்ற ஒத்தைத் தெரு பிள்ளையார் கோவிலுக்கு எவ்ளோ பேர் அர்ச்சனை செய்கிறார்கள், சிதறு தேங்காய் எவ்ளோ பேர் உடைக்கிறார்கள், புதுவண்டி பூஜை இன்று எவ்வளவு என்று உபயோகமான தகவல் தேடல்களும் உண்டு. உபாத்தியாயர் சாக்பீஸை கிள்ளி முகத்தில் விட்டெறியாதவரை இன்பம் தெருவிலே.
வேடிக்கையின் போது காக்கி பேன்ட்/ட்ராயர் மற்றும் வெள்ளை சட்டைப் போட்டுக்கொண்டு யாராவது வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார்கள் என்றால் அளவில்லா ஆனந்தம் எங்களுக்கு. காக்கி யூனிபார்ம் ஃபின்லே மேல்நிலைப் பள்ளியுடையது. ராஜகோபாலசுவாமி கலைக் கல்லூரி அண்ணாக்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக ஸ்ட்ரைக் செய்தார்கள் என்றால் வரும் வழியில் முதலில் நுழைவது ஃபின்லே. அப்புறம் தே.மே.பள்ளி. ஒரு நாளைக்கு ஸ்ட்ரைக் நடந்தது என்றால் ஒரு பத்து நாளைக்கு கண் அந்தப் பக்கமே அலைபாயும். யாராவது ஃபின்லே ஸ்கூல் பையன் வயிறு சரியில்லை என்று பாதியில் வீட்டுக்கு போனான் என்றால் கூட ஸ்ட்ரைக் இன்னிக்கும் தொடருமோ என்று மனது அல்பமாக கற்பனை செய்து கொள்ளும்.
முதல் இரண்டு பட்டனை கழற்றி காற்றுவாங்க மைனர் கணக்காக திரிந்த என்னை "சட்டை பித்தானை போடுடா.." என்று விரட்டிய பாட்டனி பாலு சார் ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பப்படும் என்று போற்றியவர். சட்டையை டக்கின் செய்து டீக்காக ஆங்கிலேய துரைமார்கள் வியக்கும் வண்ணம் வலம் வந்தவர் ஆங்கில ஆசிரியர் கௌதமன். ஆங்கிலத்தின் இன்றியமையாத தன்மையை புத்தியில் உரைக்கும்படி எடுத்துரைத்தவர். என்.எஸ்.எஸ் என்ற அமைப்பின் பள்ளித் தலைவர். இயற்பியல் பாடம் சொல்லிகொடுத்த இளங்கோவன் தோழனாய் இருந்த ஆசிரியர். தோளில் கைபோட்டு பேசியவர். கெமிஸ்ட்ரி சந்தானம் சார் ரிடையர் ஆகி அந்த வருடம் வந்து சேர்ந்தவர் ராதாக்ருஷ்ணன். ஃபிசிக்கலா தேசலான சரீரத்துடன் இருப்பார். சோமு சார் எனக்கு வகுப்பு எடுக்கவில்லையானாலும் கிரிக்கெட் மூலமாக பந்தம். கண்ணில் பூ விழுந்த தியாகராஜன் சார் ஏழு எட்டில் எனக்கு சரித்திரம் எடுத்தார்.
இன்னும் ஒரு பத்து பதினைந்து பேர் இருக்கிறார்கள் சொல்வதற்கு. "டின்.டின்.டின்." என்று பள்ளி முடிந்து லாங் பெல் அடிப்பது போல காதில் கேட்கிறது. மற்றவை அடுத்த பதிவில். நன்றி.
*புள்ளித்தாள் என்பது இரு ஓரங்களிலும் perforation இருக்கும் டாட் மாட்ரிக்ஸ் பிரிண்டரில் உபயோகப்படுத்தும் பேப்பர். ஒரு பக்க ரஃப் பேப்பராக கணக்கு போட்டு பார்க்க வாங்குவோம். கால் கிலோ அரைக்கிலோ என்று வெயிட் போட்டு தருவார்கள்.
படம்: நானே... நானே...
-
