Tuesday, February 5, 2013

சென்னின் காந்தி

விஸ்வரூப அமர்க்களுங்கிடையே காந்தியார் சிறப்பு மலராக கடந்தவாரம் வெளியான ”தி வீக்” சஞ்சிகையில் விருந்தினர் பத்தியாக கடைசிப் பக்கத்தில் அமர்த்யா சென் எழுதிய Cherry-picking from Gandhi என்ற கட்டுரை என்னை ஈர்த்தது. காந்தி உயிருடன் இருந்தால் பங்களாதேஷ் மதசார்பற்ற நாடாக உதயமானதையும் அதற்கு முன்னர் பங்களாதேஷில் தோன்றிய மொழிப்புரட்சியையும் பார்த்து மதமும் அரசியலும் எப்படி ஆளுமை செலுத்துகிறது என்று யோசித்துக்கொண்டிருப்பார் என்கிறார். காந்தியிடமிருந்து ஆதாரமே தேடாமல் Cherry-pickingகாக நம்மைக் கவர்ந்திழுப்பவை சமாதானமும் அஹிம்சையும் என்கிறது சென்னின் பார்வை.

ராமச்சந்திர குஹா சென்னின் இந்த செர்ரி பிக்கிங் பழக்கத்தைப் பற்றிக் கடுமையாக விமர்சித்திருந்தாலும் பாசிட்டிவான விஷயங்களுக்கு இது நல்லது என்று தன் கட்சிக்காக வாதாடுகிறார் சென். மேற்கத்தியர்கள் தங்களது கலாச்சாரத்தைப் பற்றி காவியங்கள் பல புனையும் போதும் கோத்ஸ் விஸிகோத்கள் பற்றி பிரஸ்தாபிக்காமல் சுவாரஸ்யமான கிரேக்கர்கள் மற்றும் ஏதெனியர் பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்களாம். பெண்கள் அரசியலுக்கு ஒவ்வாதவர்கள் மற்றும் அடிமைகளுக்கு ஓட்டுரிமையில்லை என்று சொன்ன அரிஸ்ட்டாட்டிலை விட அவரது மக்களாட்சி அரசியல் பற்றிய சொற்பொழிவுகளுக்காகத்தான் அவரைக் கொண்டாடுகிறோம் என்கிறார்.

இந்தியா காந்தியிடமிருந்து அவசியம் கிரஹித்துக்கொள்ளவேண்டிய இரண்டில் ஒன்று சுற்றுப்புறசூழலியல் என்றும் இரண்டாவது மதசார்பின்மை என்றும் சொல்கிறார். சமயம் சார்ந்த மதசார்பின்மையைக் (religion-connected secularism) காட்டிலும் சமூகம் சார்ந்த மதசார்பின்மையே(community-connected secularism) ஒரு மதசார்பற்ற நாட்டின் வெற்றிக்கு வித்து என்று கூறும் காந்தியின் சிந்தனை நெஞ்சில் ஏற்றிப் போற்றத்தக்கது என்று சிலாகிக்கிறார் சென். அமர்-அக்பர்-அந்தோணியாக வாழ்ந்து தோளில் கை போட்டுக்கொள்வதை விட மூவருமே அமராகவும், மூவருமே அக்பராகவும், மூவருமே அந்தோணியாகவும் ஒரே சமூகமாகக் கைக்கோர்க்க வேண்டுமென்பது காந்தியிஸத்தின் ஒரு கோட்பாடாம்.

குன்ஸாக இப்புத்தகத்தை திருப்பும் பக்கத்திலெல்லாம் காந்தியைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைப் பாராட்டிப் பேச ஆரம்பிக்கும் ராகுல் மற்றும் சோனியா காந்தியர்கள் பல் தெரியச் சிரிக்கும் படத்தோடுள்ள sonsational என்கிற கட்டுரையும் இதில் அடங்கும். கோட்ஸே குடும்பத்துப் பெண் ஹிமானி சாவர்க்கர்(பல்லு போன பாட்டி) காந்தியின் கொலை நாதுராமின் பார்வையில் நியாயமே என்று ஆதரவுக் கொடி பிடிக்கிறார். நியாயம் எல்லோர் பக்கத்திலும் உள்ளது.

காந்தியும் தலித்துகளும் என்ற தலைப்பில் வர்ணாசிரம தர்மம் நல்லதென்று ஆரம்பத்தில் கருத்துரைத்த காந்தி சில மாதங்களில் அந்த தீர்மானத்தை மாற்றிக்கொண்டதையும் சேர்த்து ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்கள். காந்தி கணக்கு என்று கிண்டலடிப்பதற்கு சாட்டையடியாக காந்தியின் கிராமப்புற பொருளாதார மேம்பாடு பற்றி ஒரு மணியான கட்டுரை. இக்காலத்தில் பிஸினஸ், அரசியல் மற்றும் பார்க்குமிடமெல்லாம் தலைமையேற்பவர்களிடம் நம்பகத்தன்மையை எதிர்பார்த்து ஏமாந்துபோன சமூகத்திற்கு இன்றும் காந்திஜி ஒரு எடுத்துக்காட்டு என்பதாக காந்தியும் தலைமைப் பண்பும் என்ற கட்டுரையையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஜெய் ஹிந்த் !

activatingthoughts.blogspot.com  என்கிற அற்புதமான தளத்திலிருந்து கிடைத்த படமிது.

Thursday, January 31, 2013

உப்புமா எழுத்தாளன்

நான் ஒரு உப்புமா எழுத்தாளன்.

வெட்டி முறித்து ஆஃபீஸிலிருந்து வீட்டிற்கு திரும்பும்போது சம்பந்தமேயில்லாமல் சாப்பாடு பற்றிப் புகுந்த கார் பேச்சில் நண்பர்களிடம் அரிசி உப்புமாவின் குண விசேஷங்களைப் பற்றி அரை மணி அசராமல் பேசினேன். சிற்றுண்டிக் களத்தில் “அரிசி உப்புமா-கத்திரிக்காய் கொத்ஸு” என்னும் விசேஷ இணை அஜீரண ஆசாமிகளைக் கூட வசியம் செய்யவல்லது.

கூவம் நதிக்கரையில் காலை நனைத்துக் கொண்டு உட்கார்ந்து சாப்பிட்டாலும் “இன்னும் போடு..இன்னும் போடு..” என்று தட்டை நீட்டச் செய்யும் அபார சக்தி வாய்ந்தது. ஒரு வெங்கலப்பானை உப்புமாவை அப்படியே ஸ்வாஹா செய்துவிட்டு அடிப்பிடித்திருப்பதை காந்தலே ருசியென்று மிச்சம் வைக்காமல் தின்னத் தோன்றும்.

Survival of the Tastiest என்கிற சிந்தாந்த அடிப்படையில் இன்னமும் எனது “சொத்தெழுதி வைத்துவிடுவேன்” புகழ் சிற்றுண்டியான பேருண்டி இந்த அரிசி உப்புமா.

அரிசி உப்புமாவை அசை போடும் மனதிற்குள் குமுட்டி அடுப்பு வந்து குபீரென்று பற்றிக்கொண்டது.

ஸ்கூல் விட்டு வந்து புஸ்தக மூட்டையை ஹால் பெஞ்சில் விசிறி எறிந்துவிட்டு “இன்னிக்கி என்ன பாட்டி டிஃபன்?” என்று கேட்டால் “கரித்துண்டம் ஈரமாயிடுத்துடா.. குமுட்டியை மூட்டிக்குடு... அரிசி உப்புமா பண்றேன்” என்பாள் பாட்டி. டிஃபனின்றி அசையமாட்டான் ஆர்விஎஸ்.

கரித்தூள் போட்ட குமுட்டி அடுப்பை மூட்டுவதற்கே விஷய ஞானம் அதிகம் வேண்டும். பக்கத்தில் எரியும் சிம்னி விளக்கில் “மன்னையில் புதிய உதயம்” என்கிற விளம்பர நோட்டீசு பேப்பரைச் சுருட்டிக் கொளுத்தி, கீழ்ப்புறமிருக்கும் சிறிய பொந்தில் கையில் சுட்டுக்காமல் தூக்கிப் போட்டு, அதற்கு நேரே விசிறியால் கை அலுக்க விசிறினால் ஒன்றிரண்டு கரித்துண்டு பற்றிக்கொண்டு மேலே கனல் கண்களுக்குத் தெரியும். சட்சட்டென்று ஒன்றிரண்டு தீப்பொறி குமுட்டியிலிருந்து பறக்கும்.

“ம்... இன்னமும் வேகமா விசுறுடா.. கரித்துண்டம் நன்னா புடிச்சிக்கட்டும்” என்று பாட்டி ஏவிவிட்டதும் ”உப்புமா..உப்புமா..உப்புமா” என்று நொடிக்கொருதரம் அடித்துக்கொள்ளும் வயிறுக்காக மனசு சிறகடித்துக்கொள்ள கை நொடிக்கு நாலு தடவை விசிற வேண்டும்.

குமுட்டி அடுப்பில் வெந்த அரிசி உப்புமா அதுவும் வெங்கலப்பானையில் கிண்டிய அரிசி உப்புமாவுக்கு டேஸ்ட் ஒரு படி அதிகம். ஒரு கவளம் எடுத்து நுணியில் ஒரு சொட்டு கொத்ஸு தொட்டு வாய்க்குள் நுழையும் போதே அதன் பிரத்யேக ருசி நாலு முழம் வளர்ந்த நாக்குக்குத் தெரியும்.

டொமேடோ கெட்ச்சப் தொட்டுக்கொண்டு நூல்நூலாய் இழுத்துச் சாப்பிடும் பீட்ஸா மற்றும் பகாசுர வாய் பிளந்து சாப்பிடும் பர்கர் போன்ற மேற்கத்திய சம்பிரதாய உண்டிகளால் செத்துப்போன இக்கால இளைஞர்கள் நாக்குக்கு அரிசி உப்புமாவும் கத்திரிக்கா கொத்ஸும் டேஸ்ட் எப்படியென்று தெரியுமா? க.கொத்ஸால் துணைக்கு வர முடியாத துரதிர்ஷ்ட காலங்களில் தேங்காய் சட்னியும் வெங்காய சாம்பாரும் உப்புமாவுக்கு தொட்டுக்கொள்ள கம்பெனி கொடுப்பார்கள். (கொத்ஸு) மூத்தாள் இல்லாத துக்கத்தை(?!) இவ்விளையாள்களின் (ச,வெ.சா) கூட்டணி நம்மை குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வளவு காலமாக தங்கம் ரூபத்தில் தமிழக மக்களை ஆட்டிப்படைத்த மங்கு சனி விலகும் நேரத்தில் வேஷ்டியை மடித்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தேன். ”சாயந்திரம் டிஃபனுக்குப் பண்ணினோம். உனக்கு பிடிக்குமேன்னு....” என்று ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அரிசி உப்புமா தட்டில் இட்டார்கள். கொத்ஸுயில்லையென்றாலும் உப்புமாமிர்தமாக உள்ளே இறங்கிற்று.

மீண்டும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.

நான் ஒரு உப்புமா எழுத்தாளன்.

பட உதவி: www.myscrawls.com 

Thursday, January 24, 2013

மலை மேல் மருந்தே


எஸ்.பி.கோயிலில் பச்சைக் கலர் ஹைவேஸ் போர்டு தாம்பரத்திற்கு வழிகாட்டியது. மனசு வேறொரு இடத்துக்கு வழிகாட்டியது. இரயில்நிலையம் இருக்கும் திசையில் வண்டியைத் திருப்பினேன். மனைவிக்கு நான் செல்லும் பாதை புரிந்தது. மின்சார ரயில் தடையின்றி செல்வதற்கும் சைக்கிளிஸ்ட்டுகள் இருசக்கராதிகள் குனிந்து இலகுவாக அக்கரைக்கு வாகனம் தள்ளிச் செல்வதற்கும் தோதாக ஒரு கேட் போட்டிருந்தார்கள். கேட்டுக்கு அந்தப் பக்கம் நிலமகளுக்குப் பச்சைப் பாவாடை கட்டியிருந்தது. அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக தஞ்சாவூர் மாயவரம் என்று மருதநிலங்கள் தெரிந்தது. சற்றே ஊரை அசை போட்ட நினைவை பெரும் அலறலுடன் கடந்த மின்ரயில் தட்டிச் சுக்குநூறாக்கிச் சிங்கை கோயிலுக்குள் மீண்டும் தள்ளி விட்டது.

“எங்க போறோம்ப்பா?” சிறுசு, பெருசு இரண்டும் ஜோடியாகக் கேட்டன.

“மலைமேல இருக்கிற கோயிலுக்கு..”

“திருவண்ணாமலையா?”

“அண்ணாமலை இங்க எங்க வந்தது?”

“வேற எங்கப்பா?”

“போறோம் பாரு...”

ஏதேதோ கொலை மற்றும் “திடுக்கிடும்” செய்திகள் தொங்கிய மாலை மலர் மற்றும் முரசு பத்திரிகைகள் போஸ்டராய் சடசடக்கும் பொட்டிக்கடைகளும், கட்டை வெளக்கமாறு தோசைக்கல்லில் ரெஸ்ட் எடுக்கும் பரோட்டாக்கடையும், இங்கிலீஸ் மருந்துக்கடையும் இன்ன பிற கடைகளும் நிறைந்த குட்டியோண்டு பஜார் ரோடு அது. கேட் எப்போது திறப்பார்கள் என்று ஜன்னல் கண்ணாடியைத் திறந்து தலையை எக்கிப் பார்த்தேன். எதிர் பக்கத்து ஆட்களுக்கு வழிவிடாமல் வேலி தாண்டிய வெள்ளாடு போல உயர்ரக வெள்ளைக் காரொன்று மூக்கை நுழைத்துக்கொண்டு அதிகப்பிரசங்கித்தனமாக முன்னால் நின்றது.

திறந்த கேட் தாண்டியதும் நெற்பயிர்கள் தலையசைக்கும் பச்சை வயல்களின் ஓரத்தில் வண்டி ஆசையாய் ஓடியது. கார் ஜன்னல்களை இறக்கி இயற்கைக் காற்றை ஸ்வாசித்தோம். உள்ளத்தில் புத்துணர்ச்சி பிறந்தது. ஒரு கி.மி தூரத்தில் வலது பக்கம் திரும்பியதும் ஒரு கால் ஒடிந்து தலைசாய்ந்து இருக்கும் பழைய போர்டை பெரியவள் நிதானமாகப் படித்தாள்.

“தி....ரு....க்....க....ச்.....சூ....ர்...”

பாரதியின் பெயர் தாங்கிய குழந்தைகள் பள்ளிக்கூடமென்று ஒரு 40 அடி நீளக் கூடம் புழுதியாய் பூட்டிக்கிடந்தது. இடதுபுறம் நாலைந்து பேர் கதைபேசியபடி நடந்து ஊருக்குள் சென்று கொண்டிருந்தார்கள். இருட்டிவிட்டது. முன்னிரவு நேரம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சன்னமான வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருக்கும் தெருவிளக்குகள், ஓரமாக இருக்கும் இரும்பு பைப்படி, வீடு திரும்பும் ஆடும் குட்டிகளும், குறுக்கே ஓடும் கூடையில் அடைக்கப்படாத ஒரு கோழி, வேப்பமரத்தில் கட்டப்பட்ட ஏர் மாடு, சட்டையில்லாமல் தலைக்கு முண்டாசு கட்டிக்கொண்டு கால்வாய் முகட்டில் உட்கார்ந்திருக்கும் பெரியவர், யாரும் கவனிக்காத ரேடியோ பாடும் மரபெஞ்சு டீக்கடை என்று ஒரு குக்கிராமத்திற்கான அனைத்து லக்ஷணங்களும் அங்கே பொருந்தியிருந்தது.

“இத்துணூண்டு கிராமத்தில ரெண்டு பெரிய கோயில் இருக்கு. தெரியுமா?”

“பக்கத்துல பக்கத்துலையா?”

“ம்..ஊஹும். ஒன்னு கீழே. இன்னொன்னு மலை மேலே. ஒருத்தர் கச்சபேஸ்வரர். மலை மேல் ஔஷதீஸ்வரர் (எ) மருந்தீஸ்வரர்”

ஆலக்கோயில் என்று அழைக்கப்படும் கோயிலில் எப்போதும் கச்சபேஸ்வரர் ஏகாந்தமாக இருப்பார். இங்கிருக்கும் ஈசனுக்குப் பெயர் விருந்திட்ட ஈஸ்வரர். திருக்கழுக்குன்றத்திலிருந்து சிவதரிசனம் செய்து, நடையாய் நடந்து களைத்து வந்த சுந்தரருக்கு அந்தணர் வடிவத்தில் வந்த சர்வேஸ்வரன் இவ்வூரிலுள்ளவர்களிடம் பிக்ஷை வாங்கி அன்னமிட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது. மந்திரமலையை மத்தாக்கி வாசுகியை கயிறாக்கி பாற்கடலைக் கடைவதற்கு விஷ்ணு மலை தாங்கும் ஆமையாக உதவிபுரிய சம்மதித்தார். அதற்கு முன்னர் இத்தலத்து ஈசனை வழிபட்டுச் சென்றதால் இம்மூர்த்திக்கு கச்சபேஸ்வரர் என்று பெயர். சுயம்பு மூர்த்தி. கொட்டைப்பாக்களவுதான் தெரிகிறார். கீர்த்தி பெருசு.
முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.
பெருவாயெடுத்து ஓலமிடும் நரிகள் உலவும் இடுகாட்டில் தீச்சட்டியை ஏந்தித் திருநடனம் புரிபவனே, தேன் வடியும் புத்தம்புது கொன்றைப் பூவினைச் சுடும் மலையவன் மகளான பார்வதியை மணந்தவனே, கச்சூர் ஆலக்கோயிலில் உறையும் எம்பெருமானே நீ ஓட்டையெடுத்துக்கொண்டு போய் பிட்சையேந்தி அமுதிட்டால் உன் அடியார்கள் கவலையடைய மாட்டார்களோ? என்று பாடினார் சுந்தரமூர்த்தி நாயனார்.

ராஜகோபுரமில்லாத கோயில். விண்ணைத் தொடும் பிரம்மாண்ட மரக்கதவுகள். நேரே கொடிக்கம்பம். வெளிப்பிரகார புல்வெளியை மேய்ச்சல் மைதானமாக்கியிருந்தன உள்ளூர் மாடுகள். ஒன்றல்ல இரண்டல்ல அந்த ஊரின் ஆக மொத்தம் மாடுகள் அனைத்தும் அங்கேதான் மேய்ந்துகொண்டிருந்தன. சிவன் கோயில் மேய்ச்சலில் காளைகள் மட்டுமல்ல பசுக்களும் போஷாக்காய் இருந்தன. சுருக்குப்பை ஆத்தா ஒன்று கையில் ஒடியும் குச்சியோடு மாடுகளோடு உலவிக்கொண்டிருந்தது. சின்னவளை மோந்து பார்ப்பது போல் வந்த கொம்பு சீவிய மாட்டால் “யப்பா...”வென்று அலறியடித்துக்கொண்டு ஓடினாள். ஆத்தா மாட்டை விரட்டியது.

ஈசனும் பஞ்சகச்சமணிந்த குருக்களும் ஏகாந்தமாக இருந்தார்கள். சிவன் கோயிலுக்கே உரிய சொத்தாகிய வவ்வால் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தது. கோயிலில் சாயரட்சை நடந்துகொண்டிருந்தது. தீபாராதனை காண்பித்தார். “நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய.. மஹாதேவாய.. த்ரயம்பகாய...திரிபுராந்தகாய..” என்று ருத்ரம் சொல்லிக்கொண்டேன். சட்டென்று பின்னாலிருந்து சங்கூதும் ஒலி கேட்டது. மேலும் இருவர் தரிசனத்தில் கலந்துகொண்டனர். வெளியூர்க்காரர்களாக இருக்கவேண்டும்.

மொத்தமே அந்த ஊரில் நான்கு கடைகள் தான். மூன்று பலசரக்கு பொட்டிக் கடை. ஒரு டீக்கடை. மூன்று கடைகளில் ஐநூறு ரூபாய்க்கு சில்லரை கிடைக்காமல் நான்காவது பாய் கடையில் கோயில் உண்டியலுக்கும் தட்டுக்குமாக நிறைய சில்லரை கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு மலைக்கோயிலுக்கு வண்டியை விட்டேன். இல்லை. நீங்கள் எதிர்பார்ப்பது போல பெரிய மலையில்லை. சிறு குன்று தான். இப்போது சில்லரை வாங்கிக்கொண்டு “சிறு குன்றுதான்” என்று நான் எழுதியிருப்பது வரை படித்தீர்களல்லவா? அந்த நேரத்தில் காரில் மேலே ஏறி விடலாம்.

கீழே கச்சபேஸ்வரர் மாடுகளோடு வாசமிருந்தார். மேலே மருந்தீசர் பைரவரோடு காலந்தள்ளுகிறார். கோயிலுக்குள் இரண்டு நாய்கள் கையை நக்கிக்கொண்டு பின்னாலையே பிரதக்ஷிணம் வருகிறது. மருந்தீஸ்வரர் சற்று பெரிய மூர்த்தம். அடிவாரத்தில் சங்கு ஊதியவர்கள் மேலேயும் வந்து ஊதினார்கள். கையில் தோள்பட்டையில் அடிப்பட்டு சரியாகாதவராம். மருந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ள வந்திருக்கிறார். இந்திரன் ஒரு சாபத்தினால் நோய்பீடிக்கப்பட்டு அவதியுற்ற போது பலா, அதிபலா என்ற மூலிகைகளைக் காட்டி அருள் பாலித்தவர். எனக்கும் அவருக்கும் விபூதியை மடித்துக்கொடுத்து ”இது ஆத்தில இருந்தா ரக்ஷை மாதிரி. உடம்புக்கு எதாவது பண்ணித்துன்னா எடுத்து பூசிக்கோங்கோ”ன்னு கண் மூடி உருவேற்றிக் கொடுத்தார் குருக்கள். முதன்முறை இந்தக் கோயிலுக்கு வந்து போனபின் தேவாரத்தைப் புரட்டியபோது எழுதியிருந்த “மலைமேல் மருந்தே” என்று வரும் பாடல் மங்கலாக ஞாபகம் வந்தது.

மலையடிவாரத்தில் பாய்கடையில் வாங்கிய மூங் தால் பாக்கெட்டைப் பிரித்து கொஞ்சம் நாய்க்கு ஈந்துவிட்டு புறப்பட்டோம். காரோட்டும் போது மலைமேல் மருந்தே மனசெங்கும் ஒலித்துக்கொண்டேயிருந்தது.

வீட்டிற்கு வந்ததும் கூகிளைத் தட்டி ”மலைமேல் மருந்தை” தேடினேன். அந்த அற்புதமான பதிகம் கிடைத்தது.
மேலை விதியே விதியின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவே னடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே
உயரிய அறநெறியாகவும் அதன் பயனாகவும் இருப்பவனே, பகைவர்தம் திரிபுரமெறித்தவனே, காலையில் உன்னைத் தொழுபவர்களின் கவலைகளைக் களைபவனே, நீலகண்டனே, மாலையில் தோன்றும் குளிர்நிலவைப் போன்றவனே, மலை மேல் மருந்துபோல இருப்பவனே, வயல்கள் சூழ்ந்த, கரும்பாலைகள் சூழ்ந்த பண்ணைகள் உடைய இடத்தில் உறையும் திருக்கச்சூர் ஆலக்கோயில் அம்மானே, உன்னை மறவேனோ? என்கிறார்.
 
 ஒரு முறை படித்துத் தெளிந்தேன். திருக்கச்சூர் ஒரு காலத்தில் ஆலைகள் ஓடிய பதியாக இருந்திருக்கிறது.

ஒரு கோணத்தில் மலைக்கோயிலில் வெள்ளைத் தாளில் பொட்டலம் கட்டி வாங்கி வந்த விபூதி டேபிளின் மேல் ஸ்படிக லிங்கம் போலத் தெரிந்தது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails