Sunday, August 2, 2015

வணக்கம் வண்ணாரப்பேட்டை!!


விஜய்ஸ்ரீ க்ருஷ்ணன் மேடத்திடமிருந்து ஒரு திடீர் அழைப்பு. “வர்ற ஞாயித்துக்கிழமை... வண்ணாரப்பேட்டையில... மிஸஸ் அண்ட் மிஸ்டர் அரிஹந்த்.. நீங்கதான் ஜட்ஜ்... உங்க வைஃபோட வரணும்” என்கிற அழைப்புக்கு மிரண்டு போகாமால் சரியென்று தலையாட்டினேன். “வரேன்” என்று செல்லில் சொன்னேன்.
செகண்ட் லைன் பீச் தாண்டும்போது தோராயமாக எவ்வளவு ஜோடிகள் கலந்து கொள்வார்கள் என்கிற ஆர்வம் பற்றிக்கொண்டது. சிமெட்ரி ரோடுக்கு போவதற்கு முன்னர் “சேப்பாயி என் வண்டியை பின் தொடரலாம்...” என்று விஜய்ஸ்ரீ க்ருஷ்ணன் அலைபேச அவரைப் பின் தொடர்ந்தேன்.
அரிஹந்த் வாசலில் கையேந்துபவர்கள் மத்தியில் பானி பூரி பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் “அப்பா.. மன்சூக்ஸ்” என்று கை நீட்டினாள் சின்னவள். ஸ்வீட்டும் காரமும் அலங்காரமாகக் கண்களைக் கட்டி இழுத்து வாய்க்கு வேலை கொடுக்கும் பணிக்கு கூப்பிட்டது. கடமைக் கண்ணாயிரமாக, வந்த வேலையை கவனித்தேன்.
ஜோடி 1:
“உங்களை மொத மொதல்ல பார்த்த இடம், நேரம் தேதி கேட்ருந்தோம்.... அவரு என்ன எழுதியிருக்காரு தெரியுமா?”

“காமாட்சியம்மன் கோயில்ல.. அக்டோபர் தொன்னூத்தியேளு.... பத்தாம் தேதின்னு நினைக்கிறேன்... என்ன எழுதியிருக்காரு..”
“எதையோ தப்புத்தப்பா எழுதி.. அது மேலே.. இங்க பாருங்க.. இப்படி... பேனாவுனால ரவுண்டு ரவுண்டா எழுதினது மேலேயே ஜாங்கிரி ஜாங்கிரியா சுழிச்சிருக்காரு...என்ன பண்ணலாம் இவரை....ம்..ம்.. வீட்டுக்குப் போயி கவனிங்க...”
ஜோடி 2:
“முதன் முதலா பார்த்தப்ப நீங்க எந்த கலர்ல ட்ரெஸ் போட்ருந்தீங்கன்னு உங்க கணவரைக் கேட்டிருந்தோம்.”

“க்ரீன் கலர்.. சாரி..”
“அவரு ரெட்ன்னு எழுதியிருக்காரு... யாரைப் பார்த்து அது மனசுல பதிஞ்சிருக்குன்னு தெரியலங்க மேடம்.. பார்த்துக்கோங்க...”
ஜோடி 3:
“உங்களுக்கு பிடிச்ச உணவு என்ன?”
“சைவம்...எதுனா.. சாம்பார் சாதம்... தயிர் சாதம்...”
“அவரு என்ன எழுதியிருந்தார் தெரியுமா?”
“என்னங்க”
“பிரியாணியாம்...சிக்கன் பிரியாணியாம்... முறைக்காதீங்க... வீட்டுக்குப் போயி வச்சுக்கோங்க கச்சேரியை....”
கிட்டத்தட்ட இரண்டு டஜன் ஜோடிகள் கலந்துகொண்ட மிஸர்ஸ் அண்ட் மிஸ்டர் ஹரிகந்த் நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடந்தது. வண்ணாரப்பேட்டையில் தகதகவென்று ஜொலித்த அரிஹந்த் மால் மேற்கண்ட கேள்விகளால் கலகலத்தது. கணவ கணவான்களைக் கடைக்கு ஓரத்தில் தள்ளிக்கொண்டு போய் மேலே கேட்டது போல பத்து கேள்விகளைக் கொடுத்து எழுதி வாங்கிக்கொண்டு மங்கையர்குல திலகங்களை மேடையில் அழைத்து பதில் கேட்டோம். வழக்கம்போல நம்மாட்கள் சொதப்பியிருந்த சில ரசிக்கத்தக்க பதில்களை படித்தீர்கள்.
”எவ்வளவுக்கு எவ்வளவு தப்புத் தப்பா பதில் எழுதியிருக்காங்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்க மேலே லவ்வு...” என்று புருஷர்கள் சார்பில் சப்பைக்கட்டிப் பேசினேன். உங்களது பௌஸு அம்புட்டுதான் என்று மனைவிகளின் கண்களில் எகத்தாளத்தோடு சிரிப்பும் கலந்து வழிந்தது.
இறுதிச் சுற்றுக்கு சங்கீதா மேடையேறி கேள்வி பதில் கேட்டுத் துளைத்தார்கள். எங்கள் இருவரோடும் நின்று நிகழ்ச்சியை வெகு சிறப்பாகத் தொகுத்த நிவேதிதா கண்ணனை மனமாரப் பாரட்டலாம். ஒளிஒலிமயமான எதிர்காலம் இருக்கிறது. வாய் பேசும் அழகுப் பதுமையாக மேடையில் வலம் வந்தார். ஆங்கிலமும் தமிழும் சரளமாக வருகிறது. வாழ்த்துகள்.
இரண்டரை மணி நேர கொண்டாட்டமான தருணத்திற்குப் பிறகு மன்சூக்ஸ் உரிமையாளர் பரிசுகள் வழங்க எனக்கும் சங்கீதாவிற்கும் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசொன்று கொடுத்து ஸ்வீட் பாக்ஸோடு வழியனுப்பினார்கள். மறக்கமுடியாத ஞாயிறு. மனசு முழுக்க உற்சாகம் பொங்கியது.
அரிஹந்த் மால் கடந்து சிக்னலில் நின்ற போது எஃப்ம்மைத் தட்டினேன். “நீ வெண்ணிலா மூட்டை... நான் வண்ணாரப்பேட்டை....” என்று ராகமாய் பாடியது.
நான் மெர்சலாயிட்டேன்!


பஞ்சபசி

”உருளக்கிழங்கு கறி ருஜியாத்தான் இருக்கும்... அதுக்குன்னு சட்டியோட திம்பேன்னு சொல்லுவியோ.. பிடிச்சிருந்தாலும் அளவோடதான் சாப்பிடணும்டா..”
“கடேசிக் கடலை சொத்தைப் பாட்டீ.... இன்னோண்ணு தாயேன்...”
”இந்தாடா.. திண்டி சாப்பிடாதே.... அப்புறம் எப்பவுமே கடேசி கடலை சொத்தையாதான் கிடைக்கும்...”

“தேங்கா கல்லப் பருப்பு பாயஸம் பிடிக்கும்.. பிடிக்கும்.... கொண்டா..கொண்டா... தட்டுல கொட்டுடி அப்டியேன்னு பறந்தின்னா.... வெங்கலப்பானை பாயஸத்தை நீ ஒருத்தனா வயறு முட்டக் குடிக்க முடியுமா? தெகட்டும்.. அரை பானைலே வாந்தி வரும்.. ”
“க்ளப்புக் கடேலே போடற சாப்பாடும்... நம்ம ஆத்துல பண்றதும் ஒண்ணேதான்டா தம்பி... அதே காய்கறி.. அதே அரிசி... அதே ரசம்... ஆனா என்ன போட்டாலும் ஒரு ஜான் வயத்தை மிஞ்சி சாப்டுடட முடியுமாடா?”
“நித்யமும் கல்யாண சாப்பாடுன்னா
... அன்ன த்ரேஷமா போய்டாதோ.... மொளகு குழம்பும் பாகற்கா பிட்ளையும் சாப்பிடணுமே... அதுவும் வேணுமே இந்த ஒடம்புக்கு.. ”
வடபழனி சிக்னலருகே மெட்ரோ ரயில் ”போஸ்டர்” இரும்பு தடுப்பில் ஒட்டியிருந்த இந்தப் படப் போஸ்டரைப் பார்த்ததும் சாரதா பாட்டிதான் அலையலையாய் ஞாபகம் வந்தாள். வீடு வரும்வரை காதுக்குள் கலகலவென்று பேசிக்கொண்டே வந்தாள். சௌஜன்யமா.. கொஞ்சம் அதட்டி.. மெதுவாய் சிரித்து... என்று கலந்துகட்டி நவரசமாய்ப் பேசினாள்.
அவள் காலடியில் கட்டுப்பாடாக வளர்ந்ததில் இன்றுவரை பாய்ந்து தின்னும் பழக்கம் இல்லை. உப்பு உரைப்பு என்று உணவில் எங்குமே நொட்டை சொல்வதில்லை. கிடைத்ததில் பிடித்ததை ரசித்து உண்ணும் வழக்கம் வளர்ந்தது. “இன்னிக்கு ஆண்டவன் அளந்த படி இவ்வளவுதான்...” என்கிற பக்குவம் தாராளமாக இருக்கிறது. எம்சிஏ படிக்கும் போது நண்பர்களுடன் க்ரூப் ஸ்டடி செய்து விட்டு அர்த்தஜாமத்தில் ரேழி ஓரத்தில் உட்கார்ந்து உள்ளங்கையகல டிஃபன் பாக்ஸ் மோர் சாதமும் தொட்டுக்க ஒரு கோலி சைஸ் சின்ன வெங்காயமும் அவளிடமே சாப்பிட்டுப் பழகினேன்.
**

சுகுமாரின் சப்ஜெக்ட் நன்றாக இருக்கும் போல மனசுக்குப் படுகிறது. ஆர்வமுள்ள தயாரிப்பாளரும் அலட்டலில்லா நடிக்கத் தெரிந்த கதாநாயகனும் அதிசீக்கிரம் அவருக்குக் கிடைக்க ஆண்டவன் அருள்பாலிப்பாராக!

ஆர்.வி.எஸ் UPGRADED

ஐந்தாம் வகுப்பு வரை சின்ன கான்வெண்ட்டில் ஆனா ஆவன்னாவோடு நாவினிக்க தமிழ் மீடியத்தில் படித்தேன்.
“தம்பி.. நேஷனல் ஸ்கூல்ல ஆறாவது இங்லீஷ் மீடியத்துல சேர்ந்துக்கோடா...."
"இல்லயில்லை.. இங்கிலீஷா... ஆளை விடு எனக்கு பயம்மா இருக்கு...”
“ச்சே..ச்சே.. அப்பா..இவனை இங்கிலீஷ் மீடியத்துலேயே சேர்த்துவிடு....”

தமிழ் மீடியத்திலிருந்து இங்கிலீஷ் மீடியத்திற்கு ஆர்.வி.எஸ் upgraded.
இளங்கலை இயற்பியல் பட்டம் வாங்கிய பிறகு வந்த சென்னை விஜயத்தில் மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது.
“கீர்த்தி... எனக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு.."
"போடா.. போடா.. இப்ப என்ன வேலைக்கு அவசரம்.. எம்சிஏ படிடா..”

பிஎஸ்ஸி ஃபிஸிக்ஸிலிருந்து எம்.சி.ஏவுக்கு ஆர்.வி.எஸ் upgraded.
“மில்லீனியமா இருக்கு...இந்த வருஷமே தம்பிக்கு கல்யாணம் பண்ணிடலாம்..”
பிரம்மச்சரிய ஆஸ்ரமத்திலிருந்து கிரஹஸ்தாஸ்ரமத்திற்கு ஆர்.வி.எஸ் upgraded.
இதுவரை நீங்கள் படித்தது இப்பொழுது எழுதப்போகும் ஸ்டேட்டஸிற்கு முன்னுரை.
Status
--------
வாழ்நாளில் பலமுறை என்னை upgrade செய்த என் அக்கா என்னுடைய அக்காஃபோனாகிய ஐஃபோனை ஐந்திலிருந்து ஆறுக்கு இன்று upgrade செய்தாள்.
--------------

அக்கா.. இல்லையில்லை.. upgraded அம்மா..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails