Wednesday, March 31, 2010

நித்திக்கு பத்து நெத்தியடி யோசனைகள்

ஏகத்திற்கு ஏடாகூடமாக மாட்டிக்கொண்டு தத்து பித்து என்று வாய்க்கு வந்தபடி உளரும் நித்திக்கு பத்து புத்திசாலி யோசனைகளை அள்ளி வீசலாம் என்று "உள் ஆர்.வி.எஸ்" நேற்று இரவிலிருந்தே ஓயாமல் தந்தி அடித்துக்கொண்டிருக்கிறான். வீட்டில் உட்கார்ந்து நெட்டை தட்டலாம் என்றால் நான் பெற்ற செல்வம், முதல் பெண் " சும்மா... ப்ளாக் ப்ளாக்ன்னு.... எதையாவது கிறுக்க வேண்டியது... பேசாம வந்து படு..." என்று விரட்டியடிக்க அந்த மரியாதையோடு நித்திரைக்கு போகாமல், "என்னத்த எழுதி கிழிக்கிறீங்க... நீங்க பேசினாலே யாராலையும் பொறுத்துக்க முடியாது... இப்ப எழுத வேற ஆரம்பிச்சாச்சு... நீங்க எழுதறதை நீங்களே படிச்சானும் பார்க்கிறீங்களா?... அப்படி பண்ணா எழுதமாட்டீங்க... சகிக்கலை..." என்று என் அன்புள்ள மனைவி கிழி கிழி என்று கிழித்தபின் நிலைமையின் தீவிரம் அறிந்து உள்ளே சென்று பொட்டி பாம்பாக படுத்துக்கொண்டேன். இருந்தாலும் நாம் ஒரு "சிந்தானா சிற்பி"யாக இருப்பதால், சிறு மூளை தூக்கத்திலும் வேலை செய்ததாலும் இந்த கீழ் கண்ட யோசனைப் பட்டியலை என் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த மிருகம் சொல்லச் சொல்ல முழித்து/விழித்துக்கொண்டு இருக்கும் நான் எழுதுகிறேன்.


அஜால் ஐடியா ஒன்று.
நிறைய நேற்றைய, இன்றைய நடிகைகளுடன் ஒவ்வொரு வீடியோவாக ஏதோ சத்யம் தியேட்டரில் தீபாவளி ரிலீஸ் படம் போல வெளிவருவதால், ஜெயதேவன், சசி போன்ற புகழ்பெற்ற மலையாள பட டைரக்டர்களை அணுகி ஒரு முழு 'நீல' படத்தில்(என்ட சிநேக சாமியார், படத் தலைப்பு காப்புரிமை ஆர்.வி.எஸ்.எம்) நடித்து தன் 'முளு திறமையை' வெளிப்படுத்தி நம்பர் ஒன் 'A' கிளாஸ் நடிகராகி தனக்கென்று ஒரு இடத்தை கலையுலகத்தில் பிடிக்கலாம். ஆஸ்ரமம் நிறைய டப்பு கொட்டிக் கிடப்பதால் அவரே தயாரிப்பாளரும் ஆகிவிடலாம். பக்தகோடிகள் ரசிகர் மன்றங்கள் திறந்து காலுக்கு பாலாபிஷேகம் செய்தது போல கட்அவுட்டுக்கும் செய்யலாம்.

குஜால் ஐடியா இரண்டு.
எம்.ஜி.ஆரின் மாட்டுக்காரவேலன் ஒரு படு பயங்கர ஹிட் படம். நேற்று, இன்று, நாளை என எக்காலத்திலும் எந்த ஊர் திரையரங்கில் திரையிட்டாலும் வெள்ளி விழா காணும் படம். அதுபோல வரலாற்று சரித்திரம் படைத்த படங்களில் வரும் இரட்டையர்களை பார்த்து பழகிய நம் ஜனங்களுக்கு, நாங்கள் இரட்டை பிறவி, நீங்கள் பார்த்த வீடியோவில் என்னைபோலவே இருப்பது என்னுடைய இளைய சகோதரன். ஒரு திருக்கார்த்திகை தீபத்தின் போது தொலைந்துபோனவன் இப்போது என் ஆசிரமத்திற்கு வந்து என் மானத்தை கெடுத்து தொலைத்துவிட்டான் என்று உள்ளம் உருகி எல்லா ஊடகங்களிலும் பேட்டி கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சிக்கலாம்.

அஜால் ஐடியா மூன்று.
எல்லோரும் கூடி இருக்கும் ஒரு சத்சங்கத்தில் திடீரென்று கை கால்களை உதறி, பல வினோத சப்தங்களை எழுப்பி அருள் வந்தது போல "நான் பிரம்மச்சாரியா இந்த உலகுக்கு செய்த பொது சேவையை இத்தோட நிறுத்திட்டு, கிரகஸ்தானாகி மனையாளுடன் உபாசிக்க சொல்லுது சாமி இப்ப..." என்று எலெக்ட்ரிக் ஷாக் கண்டது போல ஒரு குதியாட்டம் போட்டு, பக்கத்தில் நிற்கும் அந்த வீடியோவில் ஒத்துழைத்த பாவையை காட்டி "இவங்களையே கட்டிக்க(மனைவியா) உத்தரவு ஆயிருக்கு.." என்று சொல்லி தாலி கட்டிவிட்டால் இந்த பிரச்சினைகளை சுலபமாக சமாளித்துவிடலாம். எங்கள் அந்தரங்க காட்சிகளை காண்பித்த இந்த தொலைக்காட்சி மேல் நான் 'மான' நஷ்ட வழக்கு போடுவேன் என்றும் கூறலாம். இந்த உயர்ந்தரக யோசனையை அளித்தவர் என் அலுவலகத்தில் பணிபுரியும் துணை 'ஜனாதிபதி' அந்தஸ்து உள்ள ஒரு உயரதிகாரி.

குஜால் ஐடியா நான்கு.
ஏற்கனவே வெளிநாடு எங்கும் ஓட்டல் சரவணபவன் போல ஆஸ்ரமக் கிளைகள் திறந்து அமோகமாக வளர்த்து வைத்திருப்பதால், இந்த நாஸ்டி இந்தியாவிலிருந்து வெளியேறி அமேரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் சென்று அந்நாட்டு மக்களுக்கு யோகா, தியானம் போன்ற வாழ்வியல் நுட்பங்களை/சூட்சுமங்களை சொல்லித்தரலாம். இவருக்கு யோகம் இருந்தால் பமீலா ஆண்டர்சன், மடோனா, ஜெனிபர் லோபஸ், அன்ஜெலினா ஜோலி, பாரிஸ் ஹில்டன் போன்றோர் பாத பூஜையும் இன்னபிற குரு சேவைகள் புரிய இவரை சுற்றி வலம் வரலாம். ஆனால் இங்குபோல் அங்கு பக்தைகளுடன் ஒட்டி உறவாடும் நிவாரண (நிர்வாண?) சிகிச்சைகள் வெளியே தெரிந்தால் நிச்சயம் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரம் போட்டு டி.வியில் ப்ளாஷ் காண்பிக்கமாட்டார்கள். நம்மைப்போல அங்கு யாரும் அதிர்ச்சி அடையவும் மாட்டார்கள்.

அஜால் ஐடியா ஐந்து.
விபூதி வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, வாட்ச், செயின் போன்ற பொதுமக்கள் உபயோக பொருட்களை தருவித்தல் இந்தமாதிரியான சில வித்தைகளை கற்றுக்கொள்ள ஒன்றிரெண்டு வருடங்கள் ஆசிரமத்தை ஒரு பொறுப்பான 'ஆ'சாமியிடம் ஒப்படைத்து விடலாம். காலம் எதையும் மறக்கச்செய்யும் ஆகையால், வித்தை கற்று வந்தவுடன் ஒரு புத்தம் புது சந்நியாச வாழ்கையை ஆரம்பிக்கலாம். ருபாய் பத்தாயிரத்திலிருந்து இது போன்ற மாயாஜாலங்கள் கற்றுக்கொடுக்கபடுவதாக போலிச்சாமியார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குஜால் ஐடியா ஆறு.
கூகிள், யாஹூ போன்ற இணைய தேடும் இயந்திரங்களின் தேடுதல் வேட்டையில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து முன்னணியில் உள்ளதால், சாமியார் அவர் பெயரிலேயே ஒரு இணைய அங்காடி (Online Shopping Portal) திறந்து பல லௌகீக சமாச்சாரங்களை விற்க ஆரம்பித்தால் ஓகோவென்று போகும். அப்படியே அவர் அந்த வீடியோவில் விழுங்கும் அந்த மருந்துக்கும் விளம்பரம் கொடுத்தால், தமிழ்நாட்டில் பல லாட்ஜ் வைத்தியர்களின் பாடு திண்டாட்டம் ஆகிவிடும்.

அஜால் ஐடியா ஏழு.
சாமியார் பிரசங்கம் செய்வதில் நல்ல கைதேர்ந்த ஆசாமி என்பதால், ஏதாவது ஒரு 'கிளர்ச்சியூட்டும்' மருந்து கம்பெனியில் விற்பனை மேலாளராக பணியில் சேரலாம். ஆனால் அந்த கம்பெனியார் இவருக்கு பெண் காரியதரிசி அமர்த்துவதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

குஜால் ஐடியா எட்டு.
ஏற்கனவே திருச்சி சாமியார் ஒருவர் கற்பழிப்பு வழக்கில் வருடக்கணக்கில் உள்ளே இருப்பதால், சாமியார்களுக்கு இந்த தேசத்தில் ஒரு பாதுகாப்பு இல்லை எனக் கருத்தில் கொண்டு, சாமியார் நல சம்மேளனம் ஒன்று அமைத்து அதற்க்கு தலைவர் ஆகிவிடலாம். எல்லா போலிச் சாமியார்களையும் அதில் உறுப்பினர்களாக்கி அவர்கள் உரிமைக்காக போராடலாம். ஓமந்தூரார் தோட்டத்தின் முன் உண்ணாவிரதம் இருந்து 'சாமியார்கள் நல வாரியம்' ஒன்று அமைக்க அரசாங்கத்திடம் மனு கொடுக்கலாம்.

அஜால் ஐடியா ஒன்பது.
காசு தான் பெரிய பிரச்சனை என்று இந்த விவகாரத்தின் அடிப்படை கூறுகள் தெரிவிக்கின்றன. வெளியே இருந்தால் போட்டு தள்ளி விடும் அபாயம் உள்ளதால் பேசாமல் மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டால் கொலை செய்யப்படும் ஆபத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளலாம். இரண்டு மூன்று முறை போஜனத்திற்கு வழி உண்டு. மாமியார் வீடு என்பது அந்த வீடியோ பாவையின் அம்மா வீடு அல்ல என்பதை இதை படிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.

குஜால் ஐடியா பத்து.
ஆஸ்ரமம் அமைத்து மிகக் குறைந்த காலத்தில் பணம் பண்ணுவதில் கில்லாடியாக சாமியார் இருப்பதால், 'கொரில்லா போர் முறை' கற்றுக் கொடுக்கும் போர்ப் பயிற்சியாளர் போல ஏதாவது ஒரு மறைவிடத்தில் ஒரு நவீன ஆஸ்ரம தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து தன் போன்ற சக சாமியார்களுக்கு அல்லது ஒரு சாமியாராக முனைபவர்களுக்கு ஒரு தொழில்நுட்ப வாத்தியார் ஆகிவிடலாம். அப்படி இருக்கும் கால கட்டத்திலேயே தன்னை அணுகும் உலக உத்தமர்களுக்கு ஒரு ப்ரீலேன்சர் ( Freelancer=சுதந்திரமாக 'தொழில்' செய்பவர் ) மாதிரி புது ஆஸ்ரமம் அமைக்கும் பணிகளில் வரவு செலவு திட்ட அறிக்கை தயார் செய்து கொடுக்கலாம்.அதற்கான கன்சல்டிங் பீஸ்சை கறாராக கறந்தும் விடலாம்.

மேலும் ரசனைக்கு...........


(மேற்கண்ட வீடியோ இந்த ப்ளாக் ரசிகர்களை குஷிப்படுத்தவே இணைக்கப்பட்டுள்ளது. இதற்கும்  இப்பதிவிற்கும் துளிக்கூட சம்பந்தம் இல்லை என்பதை அனைவரும் அறியவும்.)

இதைக் கண்ணுற்ற என் நண்பர் ஒருவர், எனக்கு சாமியார்கள் தரப்பிலிருந்து அடி நிச்சயம் என்று மகிழ்ச்சியாக கூறினார். அடி வாங்கும் அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என்றுதான் கடைசி வரை புரியவில்லை. பாவம் ஓரிடம் பழி ஓரிடம், இதுதான் உலகம்.

Monday, March 29, 2010

Fair & Lovely பூசிய ரயில்



"கயிலையே மயிலை மயிலையே கயிலை"க்கு  கபாலியை கண்டு கொள்ள பிரயாணம் மேற்கொள்ள சென்ற ஞாயிற்றுக்கிழமை எண்ணியபோது ஞாபகத்திற்கு வந்தது வேளச்சேரியில் இருந்து புறப்படும் மாடி ரயில். எப்போதும்  குடும்பத்தின் பார்த்தசாரதியாய் இருந்து  அலுத்ததால் ஒரு நாள் டிரைவர் வேலைக்கு விடுப்பு கொடுக்கலாம் என்ற என் முடிவு ஏக மனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் நாட்டிற்கு எரிபொருள் சிக்கனம் செய்யலாம்  என்றும் ஒரு பொதுநல எண்ணம் எழுந்ததாலும்,   என்னுடைய வாகோன் ஆர் ( Wagon R, Wagon full of Romance) ரை நான்கு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என்று நிறுத்தக்கட்டணம் கட்டி விசாலமான வேளச்சேரி கட்டண நிறுத்தத்தில் நிறுத்தி அடையாள சீட்டு பெற்று  குழந்தை குட்டிகளுடன் ஸ்டேஷன் படி ஏறினேன்.

அரை டிக்கெட்டுக்கு ஒரு ருபாய் சலுகை பெற்று போய் வர ஐந்து பேருக்கு ஐம்பத்தி எட்டு ரூபாய்க்கு பயணசீட்டு பெற்றுக் கொண்டு வெளியே  வருகையில் அடுத்து நின்ற ஜீன்ஸிடம், "எல்லாருமே நூறு ரூபா நோட்டு எடுத்துவந்தா எவ்வளவு பேருக்கு நான் மீதி கொடுக்கறது... இங்க என்ன மூட்டையிலா சில்லரை கட்டி வச்சிருக்கேன்..." என்று இந்தியாவின் தேசிய பிரச்சனையான சில்லரை பிரச்சனயை பயணச் சீட்டு வாங்குபவரிடம் விவரித்துக்கொண்டிருந்தார் பயணச் சீட்டு வழங்குபவர்.  நல்லவேளை அவர் வாயில் நான் அகப்படவில்லை.

உடம்பு முழுவதும் fair and lovely பூசி பிங்க் வண்ணத்தில் நின்றது ஒரு மின்சார ரயில்.  அந்த கால TNSC வங்கி விளம்பர மஞ்சள் பெட்டிகள் நினைவுக்கு வர  மகளிர் பெட்டியை விட்டு அடுத்த பெட்டியில் ஏறிக்கொண்டோம். கொஞ்சம் சின்ன பெட்டி. என்னுடைய கடைக்குட்டி பெட்டியின் வாயிலில் நின்று பயணம் செய்ய மிகவும் விருப்பப்பட்டது. நான் ஓரத்தில் நிற்க என் பக்கத்தில் கம்பியை பிடித்து நின்று பல்லை காண்பித்து சிரித்தபடியே வெளியே பார்த்துக் கொண்டு ஜாலியாக வந்தது. கொஞ்சம் நகர்ந்தவுடன் இரு வாலிபர்கள்  ஓடி வந்து ஒரு குதி குதித்து ஏறிக் கொண்டனர். நான் யாரும் வாலிபிகள் இருக்கிறார்களா  என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். எவரும் என் கண்களுக்கு சிக்கவில்லை.  Greenways Road என்ற நிறுத்தத்தை 'பசுமைவழி சாலை' என்று தமிழ்படுத்தி இருந்தது கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. பெயர் சொல்லை இப்படி தமிழ் படுத்தலாமா என்று  தெரியவில்லை. ஒவ்வொரு நிறுத்ததிலும் சுமார் ஐந்து பத்து பேர் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர்.  ஞாயிற்றுக்கிழமையினாலா அல்லது இந்த போக்குவரத்து இன்னும் சரியாக பயன்படுத்தபடவில்லையா என்று தெரியவில்லை. எல்லா நிறுத்தங்களிலும்  மேற்க்கூரையிலிருந்து  ஆறு அடிக்கு இரும்புக் குழாய் இறக்கி மின்விசிறி சுழல விட்டிருந்தார்கள். ஆனால் உட்காருவதர்க்குதான் யாரும் ஆள் இல்லை.

கபாலி கோயிலின் கோபுர தரிசனம் பெற்றுக்கொண்டே திருமயிலை நிறுத்தத்தை மிக மிக சௌகரியமாக வந்தடைந்தோம். நடந்தும் இறங்கலாம், மின்தூக்கி வழியாகவும் இறங்குவதற்கு வசதி இருந்தது. காலாற நடந்து கடை 'கன்னி'களை பார்த்துக் கொண்டே, தேரடி அருகில் இருந்த பஜ்ஜி கடையில் ஆளுக்கு ரெண்டு சாப்பிட்டு விட்டு ஐந்து ருபாய் மோதிரம் இரண்டு வாங்கி என் இரு பெண்களுக்கும் கொடுத்துவிட்டு சாமி பார்க்க உள்ளே சென்றோம். திருவிழா நடந்து கொண்டிருந்ததால் நல்ல கூட்டம் இருந்தது. பிள்ளையாரையும், முருகனையும் வழிபாட்டு, கற்பகம் கபாலி ஜோடியின் அருளையும் பெற்றுக் கொண்டு திரும்புகையில் பண்டு ஆபீஸ் மார்கெட்டில் வெள்ளீஸ்வரர் கோயில் அருகே, "வாங்கினா வாங்கு இல்லன்னா அப்பால போ.. சொம்மா படிய காமி மடிய காமின்னு கிட்டு" என்று விரட்டிய பெண்மணியிடம் வாய் பேசாமல் ஒரு படி மாவடு நாற்பது ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு நடையை கட்டினோம்.

மீண்டும் திருமயிலை ஸ்டேஷனில் வந்து வேளச்சேரி திரும்புகையில் ரயில் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகியது. நடைமேடையை விளையாட்டு மேடையாக்கி கொண்டிருந்தாள் என் சின்னப்பெண். ஓடி விளையாடும் போது சுவர்களில் அவள் எங்காவது பட்டு விடப் போகிறாளே என்று என் மனம் பதைபதைத்தது. ஏனென்றால்  பச்சை கலர் பெயின்ட் அடித்த சுவர்களின் ஓரங்களில் எல்லாம் நன்றாக வெற்றிலைப் பாக்கு குட்கா போன்ற லாகிரி வஸ்துக்களை  நன்றாக குதைத்து துப்பி சிகப்பு வண்ணம் அடித்திருந்தார்கள் இந்நாட்டின் மன்னர்கள்.

அலுங்காமல் குலுங்காமல் வந்த ரயிலில் ஏறி மீண்டும் வேளச்சேரிக்கு பயணப்பட்டோம். தன்னுடைய கொண்டைஊசியை கீழே போட்டுவிட்ட என் பெரிய பெண் எடுக்க முனைகையில் அவள் உட்கார்ந்திருந்த சீட்டுக்கடியில் இருந்த குப்பையை பார்த்து " இந்த ரயிலுக்கெல்லாம் ஆயுத பூஜை கொண்டாட மாட்டாங்களா?" என்று என் அகமுடையாளை பார்த்து கேட்ட  என் கேள்வியை ஆரத்தழுவி உட்கார்ந்திருந்த ஒரு 24:22 ஜோடி ரசித்து சிரித்தது.

இந்த கோடை காலத்திற்கு எனக்கு இயற்கை தரும் பரிசாக முகத்தில் முட்டிற்று அந்த இளவேனில் காற்று. அக்காற்றை கிழித்து சொற்ப பயணிகளே இருந்த அந்த ரயில் "தடக் தடக்" என்று சென்றபோது மேலே வானிலிருந்து சிரித்த அந்த முழு வெள்ளை நிலவு மனதை கொள்ளை கொண்டு போயிற்று. ஆகா! ஏகாந்த நிலவும், முழு உடம்பையும் ஜில்லென குளிப்பாட்டி தலை கோதிய மென்மையான காற்றும், கூட்டமே இல்லாத ரயிலின் வாயிற்படியில் குழந்தைகள், பெண்டாட்டியுடன்  குதூகலமான பயணமும், அவ்வப்போது "கூ...கூ..." என்று ஆனந்த ராகம் பாடிய மின்சார குயிலாகிய ரயிலும் இரவு வெகு நேரம் வரை நினைவிலிருந்து நீங்க மறுத்தது.

"அப்பா... அடுத்த வாரமும் போலாமா?" என்று கேட்டார்கள் என் செல்ல சிங்கார சின்ன சீமாட்டிகள் இருவரும்.

Friday, March 26, 2010

வெள்ளை மாளிகை பேனாக்கள்

இணையத்தில் உலா வந்தபோது கீழே கண்ட வீடியோவை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அமெரிக்க ஜனாதிபதிகள் எந்த ஒரு முக்கியமான ஒப்பந்ததிலோ, திட்டத்திலோ, அறிக்கைகளிலோ கையெழுத்திட குறைந்தது சுமார் இருபது பேனாக்களை மேஜையில் அடுக்கி அதில் ஒவ்வொன்றாக எடுத்து ஒப்பம் இடுகிறார்கள். இதைப் பற்றி வெள்ளை மாளிகை காரியதரிசி லிஸா பிரௌன் நம்மிடம்(?) தெரிவிக்கையில்...



All the President's Pens from White House on Vimeo.

**
இதையொட்டியெழுந்த  சில பேனா சிந்தனைகள்.....

ஐந்தாம் வேதமாக போற்றப்படும் மஹாபாரதத்தை எழுதிக் கொடுக்க கஜமுகனை பணித்தார் வேத வியாஸர். தான் எழுதும் வேகத்திற்கு சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டு ஒரு பக்க தந்தத்தை உடைத்து எழுத்தாணி ஆக்கிக்கொண்டு ஒரு உன்னதமான இதிகாசத்தை உலகிற்கு அளித்தார்கள்.

**

நமது தமிழ்நாடு அரசாங்கத்தில் மேலதிகாரிகள் பச்சை வண்ண மசியில் கையெழுத்திட்டு தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்துவார்கள். கசட்டேட் ஆபீசர்கள் (Gazetted Officers) இந்த பச்சை வண்ண எழுதுகோலால் கையொப்பம் இடுவார்கள். ஐம்பது ரூபாய் முதல் ஐம்பது 'எவ்வளவோ' வரை அந்தப் பேனா தனது வேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறது.

**

ஐந்தாம் வகுப்பில்தான் பேனா உபயோகிக்க நான் அரிச்சுவடி முதல் படித்த பள்ளியில் அனுமதித்தார்கள். மசிப் பேனாவில் எழுதினால் தான் கையெழுத்து அழகாக வரும் என்று அவர்கள் கருதியதால் அனைவரையும் மசிப் பேனாவினால் எழுதச்சொன்னார்கள். தலையெழுத்து நன்றாக இருக்க எந்த பேனா என்று இப்போதும் எவருக்கும் தெரியவில்லை. வெள்ளை சட்டையில் பாக்கெட்டின் கீழிருந்து மேல் வரை நீலநிற மசிக்குட்டைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். மதியம் தயிர் சாதம் சாப்பிடும்போது விரலிடுக்குகளில் இருக்கும் நீலம் சாததிலும் கலந்து நீல தயிர் சாதம் சாப்பிட்டிருக்கிறோம். ஆங்கில பாடம் போதித்த ஆரோக்கியசாமி சாரின் இருதயத்திலிருந்து குருதி வழிந்தது போல அவருடைய சிகப்பு மசிப் பேனாவிலிருந்து ஒழுகிய திட்டுக்கள் சட்டை மேல் இருக்கும். என்னைப்போன்றவர்களுக்கு ஆங்கிலம் கற்ப்பித்த பலன் அவருக்கு நெஞ்சின் மேல் கிடைத்தது என்று எனக்கு இப்போது புரிகிறது. ஆண்டுப் பரீட்சை முடிந்தப்பின் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டு பேனாவில் மீதம் இருக்கும் மசி முழுவதையும் அடுத்தவரின் வெள்ளை சட்டையில் உதறி அடித்து இன்புறுவர். சிலர் பள்ளி முக்கில் இருக்கும் தாத்தா கடையில் காசு கொடுத்து புது பிரில் இங்க் பாட்டில் வாங்கி வந்து பேனாவில் ஊற்றி ஊற்றி அடிப்பார்கள். அன்று அவருக்கு இங்க் விற்பனையால் அவருடைய கடை அந்த வருடத்தின் அதிக பட்ச வருமானத்தை ஈட்டி  அந்த கணக்காண்டின் லாபத்தை  சம்பாதிக்கும். அந்த வருடம் பஞ்சு புத்தம் புதிய மசிப் புட்டியை வாங்கி வந்து அப்படியே சட்டென்று திறந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வது போல எனக்கு செய்தான்.

**

ஷங்கர் தனது முதல்வனில் 'கொஞ்ச நேரம் ஒதுக்கி... கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்...' என்று கெஞ்சி கொஞ்சிய மனிஷா கொய்ராலாவின் முதுகில் அர்ஜுனை எழுதவைத்து அரச காலத்து பேனாவைக் காட்டினார். இறகு கொண்டு எழுதும் பேனா அது.

**

வங்கிகளும் இன்னபிற பொது மக்கள் கூடும் , பேனா தேடும் இடங்களிலும் ஒரு ரூபாய் பந்து முனை ரீபில் பேனாவைக் கிரில் ஜன்னலில்  கயிறு கொண்டு அதைக் கட்டிப் போட்டு  பத்திரப்படுத்தும் இடங்களும் என் நினைவுகளில் வந்து கிறுக்கிச் சென்றது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails