Wednesday, June 2, 2010

இசை + ராஜா = இளையராஜா


இப்போது நீங்கள் படிக்கப் போவது ஒரு நான்-லினியர் பதிவு. அதாவது ஒரு அரை மணி நேரம் இளையராஜாவை பற்றி நினைத்தால் என்னென்ன பாடல்கள் நினைவில் வந்து வந்து போனதோ அந்த பாடல்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். காலக்கிரமமாகவோ, அகர வரிசைக்கிரமமாகவோ, நடிகர்களின் வரிசையாகவோ, இயக்குனர்களின் வரிசையாகவோ, காதல்,சோகம், பாசம் போன்ற பகுப்புகளின் வரிசையாகவோ இது இருக்காது. ஒரு ரசிகனின் அரை மணி நேர பிதற்றல்கள் இது.


தாய் மூகாம்பிகையில் வரும் "ஜனனி ஜனனியும்", அலைகள் ஓய்வதில்லையின் "புத்தம் புது காலை"யும், குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று சாதகம் செய்யும் ஆவாரம்பூ விடலைப்பையன் பாடும் "மந்திரம் இது மந்திரம்"மும், ரேக்ளா ரேஸ் முடிந்து நாலைந்து பேர் முரட்டுக்காளை ரஜினியை தூக்கி "அண்ணனுக்கு ஜே!" சொல்லி "சூப்பர்ஸ்டார் பாடும் பொதுவாக என் மனசு தங்கம்"மும், கேப்டனின் பிரபாகரனில் ரம்யா கிருஷ்ணன் துப்பாக்கி தூக்கிக் கொண்டு குத்தாட்டம் போடும் "ஆட்டமா"வும், தண்ணீர் சொட்டும் முற்றத்தில் நின்று சொட்டுக்களை கையால் அலசி கஸ்தூரியின் ஆசைக்கு பிரபு பாடும் "சின்ன சின்ன தூறல் என்ன"வும், மணியின் மௌனராகத்தில் மைக் இல்லாமல் மோகன் பாடும் "நிலாவே வா"வும், நாயகனில் கடற்கரையோரத்தில் அந்த சிறுவன் இருகைகொண்டு கிளாஸ் டீ பிடித்து குடிக்கும் போது "ஆ... ஆ..." என்று ஆரம்பித்து வரும் "தென்பாண்டி சீமையிலே"யும் வேலு நாயக்கர் பேரன் அவரிடம் "நீங்க நல்லவனா கெட்டவனா" கேட்கும்போது வரும் பி.ஜி.எம்மும், சிங்காரவேலன் கமல் குஷ்பூவை ஸ்ட்ரக்ச்சரில் படுத்துக்கொண்டே தள்ளிக்கொண்டு போய் பாடும் "இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்"யும்,

கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க... இன்னும் பாக்கி இருக்கு...

மதுவையும் திராட்சையையும் வாயால் ருசித்து டிம்பிள் கபாடியாவை கண்ணால் ரசித்து விக்ரம் கமல் பாடும் "மீண்டும் மீண்டும் வா"வும், அம்பிகாவை கமல் ராதா கிருஷ்ணன் போஸில் இடுப்பில் ஒரு கையும், மேலே தூக்கிய கையோடு மறு கையும் கொண்டு  நடுக் கூடத்தில் அரவணைத்து பாடும் "வந்தாள் மஹா லக்ஷ்மியே..."யும், அதே அம்பிகாவை காக்சிசட்டையில் கட்டிபிடித்து கமல் கேட்கும் "கண்மணியே பேசு..."வும், இயக்குனர் சிகரத்தின் உன்னால் முடியும் தம்பியில் சீதாவுடன் சைக்கிளில் சென்று தரையில் விழுந்த பூக்கள் தானாக மரத்தின் மேல் செல்லும் போது கமல் பாடும்  "இதழில் கதை எழுதும் நேரமிது .."வும், கார்த்திக்கை அந்த புதுமுக குண்டு நடிகை "எஸ் ஐ லவ் திஸ் இடியட்" என்று காதலுடன் திட்டி, பாடும் நிலா பாடிய "காதல் கவிதைகள் படித்திடும் நேரம்"மும், "காளிதாசன் உன்னை கண்டால் மேகதூதம் பாடுவான்" என்று சரணத்தில் அமைந்த "வா வா வா கண்ணா வா" என்ற வேலைக்காரர் ரஜினி அமலாவை பனி பிரதேசத்தில் பரதநாட்டியம் ஆட விட்டு பாடியதும், கமல்ஹாசன் கம்பு சுழற்றி கெளதமிக்கு வீரம் காண்பித்து பெரியத் தேவர் மகனாக "சாந்து பொட்டு சந்தன பொட்டு" இட்டும் ரேவதியை "இஞ்சி இடுப்பழகி" என்று வர்ணித்து பாடியதும், 

இன்னும் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க... இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு... 

வயதில் அரை செஞ்சுரி போட்ட நடிகர் திலகத்தை நாயகனாக்கி அழகு பார்த்த இயக்குனர் இமயம் சிவாஜிகணேசனுக்கு தந்த முதல்மரியாதையில் வந்த "பூங்காற்று திரும்புமா" வும் மணல் வெளியில் ஓடி வரும்போது வசனத்திற்கு வேலை தராத அந்த புல்லாங்குழல் இசையும், மேட்டுக்குடி ஜனங்கள் கேட்கும் இடத்தில் சேரிக்கும் பாட்டு படி என்று "சிந்து" சுகாசினி "பைரவி" கட்டிய சிவகுமாரை கேட்கும் "பாடறியேன்... படிப்பறியேன்..."னும், பி.எஸ்.ஏ சைக்கிள் கொண்டு நண்பர்களுடன் தாத்தா ஊரில் பச்சை பசுமையில் சுற்றும் கார்த்திக்கை வருஷம் பதினாறில் "ஏய் அய்யாசாமி.. உன் ஆளை காமி" என்று சார்லி மற்றும் நண்பர் மும்பையிலிருந்து வந்திறங்கிய (படத்தில்) ஒல்லி குஷ்புவை காட்டச் சொல்லி பாடியதும், அதே குஷ்பூவை கிழக்கு வாசலில் "தளுக்கி தளுக்கி தான்" என்று சின்னி ஜெயந்துடன் கார்த்திக் வரப்பில் வெறுப்பேற்றியும் ரேவதியை "பச்சமலை பூவு" பாடி தூங்க வைத்ததும், கட்டு கட்டாக வேலங்குச்சி, ஆலங்குச்சி அனுப்பி எஜமான் ரஜினியை காதலித்து மீனா பாடும் "ஆலப்போல் வேலப்போல்"ம்,வெள்ளை வேட்டி சட்டை போட்டு வழித்து தலை சீவி சந்தனப் பொட்டிட்டு சின்னக்கவுண்டர் சுகன்யாவின் முத்து மாலையை பிடித்து அருவி விழும் பாறையில் இழுக்கும் போது பாடும் "முத்து மணி மாலை"யும்,  பி.சி ஸ்ரீராமின் ஒளி அலைகளின் நடுவே ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பிரபுவை நினைத்து அமலா பாடும் "நின்னுக் கோரி வரணு"மும், மழலைப் பட்டாளங்க ளை  வைத்து மணி எடுத்த அஞ்சலியில் வரும் "மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி"யும்

இன்னும் இன்னும் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க... இன்னும் இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு... 

கேம்ப் ஃபயர் மூட்டி கிடார் இசைத்து ரேவதி முன் முரளி பாடும் "துள்ளி எழுந்தது பாட்டு"ம், அடவு கட்டி ஆட ஆசைப்படும் நாசர் அரிதாரம் பூசிய அவதாரத்தில் வரும் "ஒரு குண்டு மணி குலுங்குது.."வும், அமலாவை தேடித் தேடி மோகன் பாடும் "தேடும் கண் பார்வை தவிக்க..."வும், புதுப் புது அர்த்தங்களில் காதலுக்கு குருவாயூரப்பனை சாட்சியாக வைத்து எஸ்.பி.பி ரகுமானுக்கும் பொசஸிவ் கீதாவுக்கும் பாடிய "குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு"ம், புது நெல்லு புது நாத்தில் தோளில் தூக்கி கொண்டு போகும் மச்சானை காலில் கிச்சு கிச்சு மூட்டி சுகன்யா பாடும் "கருத்த மச்சான்... கஞ்சத்தனம் எதுக்கு வச்சா"னும், பாபு நடித்த பாரதிராஜாவின் என் உயிர்த் தோழனில் வரும் "ஏ ராசாத்தி ராசாத்தி"யும், காதலியின் நினைவில் ராத்திரி ராத்திரி ஊரில் உள்ளோருக்காக கையில் காதலி கொலுசு தட்டி விஜயகாந்த் பாடிய படத்தில் ரேவதி கோயிலில் பரதநாட்டியம் ஆடும் "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ"வும், சகல கலா வல்லவனான கமல் அம்பிகாவுடன் கயற்றுக் கட்டிலில் படுத்து பாடும் "நிலா காயுது..."வும், நந்திதா தாஸ் பார்த்திபனின் வீட்டு வேலைக்காரியாகவும் முன்னாள்  காதலியாகவும் வரும் அழகி படத்தில் வரும் "பாட்டு சொல்லி பாடச் சொல்லி"யும், டிக் டிக் டிக்கில்  பரத நாட்டியம் ஆடும் மாதவியை கமல் படுத்து படுத்து போட்டோ எடுக்கும் "பூ மலர்ந்திட மலர்ந்திடும்"வும், கண் தெரியாத ராஜபார்வை கமல் காதலி மாதவி மேல்  கை பட்டும் படாமலும் பாடிய "அழகே.. அழகு.. தேவதை.."யும், கொஞ்சம் குண்டான குஷ்பூ சத்யராஜுடன் ப்ரம்மாவில் பாடும் "வருது வருது இளங்காற்றும், பல் காட்டி சிரித்தும், சீறியும் சீயான் விக்ரம் நடித்த பிதாமகனில் வரும் "இளங்காற்று வீசுதே"யும், பைத்தியம் பிடிக்கும் கல்லூரி மாணவனாக விக்ரம் நடித்த சேதுவில் வரும் "மாலை என்  வேதனை கூட்டுதடி"யும், கயிறு கட்டி மரத்தின் மேல் ரேவதியை தூக்கி பாண்டியன் மண் வாசனையில் பாடும் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு"ம்  ................................................................................................

முடியலை... இன்னும் இந்த பட்டியல் முடியலை.. இவ்வளவும் கேட்பதற்கும் இது பூபாளமா, மோகனமா, மத்யமாவதியா, நிலாம்பரியா, கரஹரப்ப்ரியாவா, சங்கராபரணமா, தோடியா, வசந்தாவா, சாரங்காவா என்றெல்லாம் தெரியவேண்டிய அவசியம் இல்லாமல் அப்படியே ரசிக்க வைத்த இசைதேவன், இசைஞானி, இளையராஜாவிற்கு இந்த ரசிகனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

மேலே நான் இளையராஜா பித்து பிடித்து பிதற்றிய பாடல்கள் அல்லாமல் பித்தம் கொள்ள வைக்கும் வேறு சில பாடல்களும் கீழே...













Tuesday, June 1, 2010

பாப்பா

வாத்தியார் சுஜாதா எழுதியது இது.  எந்த புத்தகத்தில் என்பது என் ந்யூரான்களில் டார்ச் அடித்து பார்த்தும் சட்டென்று கிடைக்கவில்லை. என்னுடைய லாங்வேஜில் இங்கே தருகிறேன். நல்ல ஜோக்.

aish

ஒரு கல்லூரி உயிரியல் பேராசிரியர் இன்னொரு கல்லூரிக்கு "வைவா"விர்க்காக எக்ஸ்டெர்னல் எக்ஸாமினராக சென்றிருந்தார். மறு நாள் மாலை பார்க்கில் வாக் போகும்போது தனது நண்பரிடம் தன்னுடைய எக்ஸ்டெர்னல் அனுபவத்தை இவ்வாறாக பகிர்ந்துகொண்டார்.

"இந்த காலத்து பொண்ணுங்கெல்லாம் ரொம்ப அட்வான்சுடு சார்." 

"ஏன் அப்படி சொல்றீங்க..."

"இல்ல.. நேத்து ஒரு காலேஜுக்கு எக்ஸ்டெர்னலா போயிருந்தேன். ஒரு பொண்ணு ஆள அடிக்கர/அசத்துற மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு நாவப்பழம் மாதிரி கண்ணை உருட்டிகிட்டே ஒரு மாதிரியா சிரிச்சுகிட்டே நாணி கோணிக்கொண்டு பக்கத்தில வந்து நின்னா. அதைப் பார்த்தாலே மக்கு மாதிரி இருந்துது. இருந்தாலும் சிம்பிலா  அவள்ட்ட ஒரு கேள்வி கேட்டேன் 
ஏம்மா உடம்புல எந்த பாகம் நாம உணர்ச்சிவசப்பட்டாலோ, பரவசப்பட்டாலோ பத்து மடங்கு பெரியதாகும் அப்படின்னு கேட்டேன் அதற்க்கு அந்தப் பெண் வெட்கப்பட்டுகிட்டே சீ...ச்...சீ.... சார் நீங்க ரொம்ப மோசம்! நான் இந்த கேள்வுக்கு பதில் சொல்ல மாட்டேன் அப்படின்னுட்டா"

"அப்புறம் என்ன பண்ணினீங்க.."

"பக்கத்துல இருந்த பெண்ணைக் கேட்டேன். டாண்னு பதில் சொல்லிட்டா..."

"என்ன சார் பதில்..."

" 'பாப்பா' கண்ணுக்குள்ள இருக்கிற "ப்யுப்புல்"..."

"அச்ச்சோ இது தெரியாமா போய்டுச்சே அந்த அசடுக்கு."

"கடைசியா அந்த பொண்ணப் பார்த்து மூனு வாக்கியம் சொல்லிட்டு வந்துட்டேன்"

"என்ன"

"நீ இன்னும் சப்ஜெக்ட் நல்லா படிக்கணும்,
உன் புத்தி ரொம்ப மோசமாயிருக்கு, 
இதுக்கெல்லாம் மேல கல்யாணத்திர்க்கப்புறம் நீ ரொம்ப ஏமாறப் போற அப்படின்னு.,.."

நண்பர் "ஆ" என்று வாய் பிளந்து நின்றார். இந்தக் ஜோக்கின் கடைசி வரியில் இது அசைவமாகியிருக்கலாம். நான் பொறுப்பல்ல.

Monday, May 31, 2010

இங்கு கணவன்மார்கள் கிடைக்கும்

நான் ரசித்த ஜோக்:

சமீபத்தில் ஒரு ஊரில் ரிலையன்ஸ் ஃபிரெஷ் போல "கணவர்கள் ஃபிரெஷ்" என்ற சூப்பர் மார்கெட் ஸ்டோர் ஒன்றை திறந்தார்கள். அந்த ஐந்து மாடி கட்டிடத்தில் ஒவ்வொரு மாடியிலும் நிறைய கணவனாகும் அருகதை உள்ள ஆண்களை அலங்கரித்து வைத்து பெண்களை விட்டு சுயம்வரம் காணச் செய்தார்கள். மாடிகளின் தளம் மேல் செல்ல செல்ல நல்ல குணவான்கள் மற்றும் நிறைய நற்பண்புகள் வாய்க்கப் பெற்றவர்கள் நிரம்பியிருந்தார்கள். ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், மேலே மாடி ஏறி சென்றவர்கள் மீண்டும் கீழ் மாடியில் இருப்பவரை தேர்வு செய்ய முடியாது, இறங்கி வெளியே செல்ல வேண்டியதுதான்.


இரண்டு திருமணமாகாத பெண்குட்டிகள் நல்ல புருஷனை தேடிக் கண்டுகொள்வதற்காக அந்த அடுக்குமாடி விற்பனை கூடத்திற்கு சென்றார்கள். அவர்களின் ஐந்து மாடி அனுபவங்கள் கீழே...


முதல் மாடி:
கதவில் பலகையில் எழுதியிருந்த வாசகம்: "இந்த மாடியில் உள்ளவர்கள் வேலைக்கு செல்லும் மற்றும் குழந்தைகளை நேசிக்கும் ஆண்கள்" 
பெண்குட்டிகள்: "தேவலாம் குழந்தையை நேசித்து வேலைக்கு செல்லும் ஆண்கள் இருக்கிறார்கள், மேலே என்ன இருக்கிறது பார்க்கலாம்" என்று படியேறினார்கள் அப்பெண்கள்.


இரண்டாம் மாடி:
பலகை வாசகம்: "அழகான, குழந்தையை நேசிக்கும், நிறைய சம்பாதிக்கும் ஆண்கள்"
பெண்குட்டிகள்: "ம்...ம்... இன்னும் மேலே என்ன இருக்கிறது பார்க்கலாம்"

மூன்றாம் மாடி:
பலகை வாசகம்: "அழகான, குழந்தையை நேசிக்கும், நிறைய சம்பாதிக்கும், வீட்டு வேலை செய்யும் ஆண்கள்"
பெண்குட்டிகள்: "வாவ்... ரொம்ப ஆசையை தூண்டுதே... மேலே அடுத்த மாடியில் என்ன இருக்கு பார்க்கலாம்"

நான்காம் மாடி:
பலகை வாசகம்: "அழகான, குழந்தையை நேசிக்கும், நிறைய சம்பாதிக்கும், வீட்டு வேலை செய்யும், மன்மதக் கலை நன்றாக தெரிந்த ஆண்கள்"
பெண்குட்டிகள்: "ஐயோ... என்ன செய்யறதுன்னு தெரியலையே... இதற்க்கு மேலே ஐந்தாம் மாடியில் என்ன இருக்கும்ன்னு நினைச்சாலே... ஓஒ...ஆ ஆ....." 
என்று கூச்சலிட்டு சந்தோஷத்தின் உச்சக்கட்டங்களில்  படிகளில் ஏறி மேலே ஐந்தாம் மாடிக்கு ஓடினார்கள்.

ஐந்தாம் மாடி:
பலகை வாசகம்: "உங்களை திருப்திப் படுத்த முடியவே முடியாது என்பதை நிரூபணம் செய்வதற்க்காக இந்த மாடி காலியாக உள்ளது. உங்களது இடது கைப் பக்கம் வெளியே செல்லும் வழி உள்ளது. தயவு செய்து இடத்தை காலி செய்யவும்"

எப்புடி?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails