அ. முத்துலிங்கம் தன்னுடைய லோகாயத வாழ்க்கை அனுபவங்களை தொகுத்த புத்தகத்திற்கு "உண்மை கலந்த நாட்குறிப்புகள்" என்று பெயர் சூட்டியிருப்பார். நம்ம வாத்தியார் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் நடந்ததை அப்படியே எழுதினா உப்புசப்பில்லாமல் இருக்கும் என்று சொல்லி அதனால் அதில் கொஞ்சம் கற்பனையும் தட்டிப் போட்டு எழுதியிருப்பார். அதுபோல, இந்த மன்னார்குடி டேஸ் நினைவிலும் கண் மூடி கனவிலும் நான் பார்த்த நாட்கள். அதனால் இதைப் படித்துவிட்டு "டேய்.. ஆர்.வி.எஸ்... பாவி..இப்படி எழுதிப்புட்டியே டா... நீ நல்லா இருப்பியா.. என் பாவம் உன்னை சும்மா விடாது...ஏழேழு ஜென்மத்துக்கும் நீ மவுன்ட் ரோடு மாநாட்டு ட்ராஃபிக்ல சிக்கி சின்னபின்னாமாகி சீரழிஞ்சி போய்டுவே.. ஆட்டோகாரன் உன் வண்டி பூரா கோடு போட.. சிக்னலுக்கு சிக்னல் நீ போலீசுக்கு கப்பம் கட்ட.. " என்று சம்பந்தப்பட்டவர்கள் வாய்க்குவந்தபடி சபிக்காதீர்கள். பேண்டை ஸ்டான்ட்டாக்கி முதுகில் அருவாள் சொருகி வெட்ட துரத்தாதீர்கள். பிடித்தால் ஓ.கே. பிடிக்கவில்லை என்றால் "யப்பா சாமி... உன் திக்குக்கு ஒரு கும்பிடு" என்று ஒன்று பெரிதாய்ப் போட்டுவிட்டு வேறுபக்கம் ஓடிவிடுங்கள். தொல்லையின் எல்லை வெகு தூரத்தில் இல்லை. ஜாக்கிரதை!!!
அடிக்கடி என்னுடைய நினைவுகளில் வரும் நான் பம்பரமாயும், கோலியாயும், கிரிக்கெட்டாயும் ஓடியாடிய என்னோட நகரமும், பிஞ்சிலிந்து பழுக்கும் வரை நான் சென்ற ஸ்கூல், டைப் இன்ஸ்டிடுயூட், கல்லூரி போன்ற சர்வ கலாசாலைகளும், கிரிக்கெட் மட்டையை பின்னால் சைக்கிள் காரியாரில் செறிகிக்கொண்டு கவாஸ்கர், கபில்தேவ்,ஸ்ரீகாந்த் ஆகும் கனவுடன் சுற்றிய வீதிகளும், மதிலழகு கொண்ட கோவிலில் வீற்றிருக்கும் ராஜகோபாலனின் மோகினி அவதாரப் புன்னகைகளும், மூடு பனி நிறைந்த மார்கழி மாதங்களில் 'எம்பாவாய்' என்று மட்டும் கூட்டத்தோடு கரைந்து சுடச்சுட வெண் பொங்கல் வாங்கி தின்ற வடக்குத்தெரு ராமர் கோவிலும்.................
இரவு பகல் பாராமல் எங்கள் பாரத்தை கூண்டோடு தாங்கிய வடக்குத்தெரு குட்டிச் சுவர் மதிலும், அப்பு, ஸ்ரீதர், ஸ்ரீராம்கள், உப்பிலி, கோபால்கள், சரவணன், அசோக், கோபிலி, மற்றும் பலரும் (பெண்கள் பெயர்களை எழுதக்கூட என் கீபோர்டுக்கு நாணமாகையால் எழுதவில்லை), எம்.சி.ஏ படிக்கும்போதே 'c ஒரு sea' என்று நான் Kernighan and Ritchie போல பலருக்கு போதித்த பிட்ஸ் கம்ப்யூட்டர் சென்டரும், ஸ்ரீ ராம பிரானின் பர்த் டே(ஸ்ரீராமநவமி) கலக்க்ஷனும் கொண்டாட்டமும், ரவி சார் வீடும்('காக்காஸ் பார்'), இளவயதில் எனக்கு கணக்கு பண்ண (Maths tuition) சொல்லிகொடுத்த ராதா கண்ணன் மாஸ்டரும், 'வயதுக்கு' வரவைத்த லக்ஷ்மி தியேட்டர் 'காலை' காட்சிகளும், பெரிய கோவிலின் பங்குனி பெருவிழாவும் அதன் விடையாற்றி கலை நிகழ்ச்சிகளும்....................
எல்லா சம்மரிலும் வாய்க்கால் வரப்பு கிரவுண்டு என்று கிடைத்த இடத்தில் எல்லாம் வஞ்சனை இல்லாமல் நடக்கும் கிரிக்கெட் டோர்ணமென்ட் திருவிழாக்களும், சேரங்குளம் மாமாக்களுடன் விளையாடிய சங்கராந்தி பண்டிகை கால கிரிக்கெட் தொடர் போட்டிகளும், எனக்கு பந்து போடவும், மட்டை பிடிக்கவும் கற்று கொடுத்த ராமு சாரும், பெரிய கோயில் மேலை கோபுரவாசலில் விளையாடிய தெற்கு வீதி ரப்பர் பால் மாட்ச்களும், இன்னும் பல '...களும்' என்னுடைய இன்பக் கனாக்களில் ஓயாமல் கொடுத்த இன்னலினால், ஜெகத்தீரே! தயாராக இருங்கள். இது என்னுடைய 'கன்னி' முயற்சி. இந்த கன்னி முயற்சியை கனியாக்கும் ஆவலுடனும், அடியேனுடைய Nostalgia நாஸ்தியாக இல்லாமல் டேஸ்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தும்பிகையானை துதித்து ஆரம்பிக்கிறேன். பொறுத்தருள்க!!
நாளை முதல் கதைகள்.....
(அப்பாடி! ஒருவழியா முன்னுரையை முடிச்சாம்ப்பா என்று பல பேர் விட்ட பெருமூச்சு "புஸ்... புஸ்..." என்று நல்லபாம்பு கணக்காக என் காதில் சீறுகிறது)
ஃபோட்டோ குறிப்புகள்: மேலே நீங்கள் அண்ணாந்து பார்த்தது எங்களூர் பெரிய கோவில். ஸ்ரீவித்யா ராஜகோபால ஸ்வாமி திருக்கோவில். இரண்டாவது படத்தில் குளத்தோர கோவில்(ராமர் கோவில்) பக்கத்தில் இருக்கும் அந்த பெரிய வேப்பமரத்தின் நிழலில் உள்ளது தான் அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த நாங்கள் ராப்பகல் அகோராத்திரியாக அரட்டை அடித்த மதில் கட்டை.