Thursday, September 29, 2011

எங்க வீட்டுக் கொலு



இந்த கொலுப் படிக்கு நிச்சயம் ஒரு எழுபது வயது இருக்கும். ஒன்பது படி. மேலேர்ந்து முதல் படியில் வலது ஓரத்தில் நின்ற திருக்கோலத்தில் இருக்கும் லக்ஷ்மிக்கு ஒரு அறுபது வயது இருக்கும். என்னுடைய அம்மாவின் சிறுவயதில் வாங்கிய லக்ஷ்மியாம். ஐந்தாவது படியில் இடது கோடியில் ஸ்டைலாக நிற்கும் நளனுக்கும் நிச்சயம் ஐம்பது வயது தாண்டியிருக்கும். அப்புறம் செட்டியார், தசாவதாரம், மரப்பாச்சி போன்றவர்களும் இந்தக் கொலுவில் வயதானவர்கள் தான். ஆனால் பொலிவுடன் இருக்கிறார்கள். சரியா?



மேற்கண்ட படத்திலிருப்பவை புதிது. புதிதென்றால் ஒரு ஐந்து வருடத்திற்குள் வாங்கியது. மன்னார்குடி ராஜகோபாலன் கருட சேர்வை. பக்கத்தில் ரிஷபாரூடராக சிவபெருமான் அருள்பாலிக்கும் ப்ரதோஷ அபிஷேகக் காட்சி. வலதுபுறத்தில் ராதேகிருஷ்ணர் காதல் ஊஞ்சல் ஆடுகிறார். அவருக்கு முன்னால் ஒரு கல்யாணம் நடக்கிறது. வீதியின் முனையில் தள்ளுவண்டியில் காய்கறி வருகிறது. இக்காலத்தில் காண முடியாத காட்சி.

இந்த கொலுவிற்கான முன்னேற்பாடுகளை இங்கே அழுத்திக் காண்க.

முகப்புத்தகத்தில் பகிர்ந்ததை இங்கே எனது ப்ளாக் தோழர்களுக்காக.......

இப்படங்களை உபயோகிப்பவர்கள் இந்த பதிவிற்கு ஒரு சுட்டி கொடுத்தால் துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷம் பெறுவார்கள்!! :-)

எல்லோருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!!

-

Tuesday, September 27, 2011

மாடவீதி பொம்மைகள்

திருமகள் கால் பிடித்துவிட ஜுவல்லரி வாசலில் ஹாயாக சயனகோலத்தில் இருந்தார் விஷ்ணு. ஜுவல்லரி ஷட்டர் தலையை முட்ட ஆதிக்கு கொஞ்சம் டென்ஷன். நாராயணனின் நாபியிலிருந்து ஒரு கம்பி கிளம்பியிருந்தது. ஆனால் அதில் லோட்டஸ் அண்ட் ப்ரம்மா மிஸ்ஸிங். மாட்டுத்தொழுவத்தில் பிறந்த யேசுபிரான் மாதிரி வைக்கோல் சுற்றி கீழே கிடந்தார் வெண்ணை கிருஷ்ணர். காமதேனுக்களும், கோபிகா ஸ்த்ரீகளும், முனி புங்கவர்களும் தங்கள் செட்களை விட்டு தனித்தனியே இரைந்து குவிந்திருந்தார்கள். ஆதி சங்கரர் செட்டில் சிஷ்யர்கள் ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருந்தனர். மடியில் லெக்ஷ்மியை அமர வைத்துக்கொண்ட நரசிம்மர் செட்டியாரைப் பார்த்து கர்ஜித்துக்கொண்டிருந்தார். மீராவின் தம்புராவை எடுத்து கைக்கு சொருகிக்கொண்டிருந்தார் ஒரு நவராத்திரி பக்தர்.

இவையெல்லாம் நேற்று முன் தினம் மாடவீதியில் கண்ட நவராத்திரி கொலு பொம்மைக் கடை காட்சிகள். கபாலீஸ்வரர் கோவில் முன்னால் வண்டி நிறுத்துவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. சென்னைக்கு இருசக்கரம் தான் தலை சிறந்த வாகனம்.அதுவும் கஜமுகனின் வாகனம் போன்று இருத்தல் நலம். பாதி இடங்களில் இரண்டு சைக்கிளை தலையோடு தலை சேர்த்து வைக்கும் அகலம் தான் தெரு. அதிலும் நாலு வீடுகளில் பக்க நிறுத்தானை போட்டு நடு வீதிவரை வாகனம் நிறுத்தி துணி காயப் போட்டுவிடுகிறார்கள். மீதி வீடுகளில் மக்கள் வாசலில் நின்று வம்பளக்கிறார்கள்.

“அப்டியே முன்னாடி வா”

“கொஞ்சம் லெப்ட்ல போ”

“ரைட்டு ஒடி”

”ஏ..ஏ.. பேக்கில பாரு”

“அங்க நிக்காத”

“அப்டியே ஷ்ட்ரெயிட்டா ரிவர்ஸ் வா”

“ம்..ம்.. போதும்...போதும்... நிப்பாட்டு”

என்ற அபரிமிதமான மரியாதை பொங்கி வழியும் ஏக வசனங்களில் உதவி பெற்று வண்டியை ராசி சில்க்ஸ் அருகில் விட்டு வருவதற்குள் கை தனியாக கழண்டு விட்டது. டோக்கன் கொடுக்காமல் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு அடுத்தாளை திட்டுவதற்கு கிளம்பிவிட்டார் அந்த இள வயது டோக்கனர்.

போன வருடம் கொலு வைக்க முடியாதலால் (ஒரு அபர காரியம்) இந்த வருடம் நவராத்திரி பட்ஜெட் டபுள். வீட்டிற்கு நவராத்திரி விஜயம் செய்வோருக்கு மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, சரோஜாதேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பா, முழுத் தேங்காயைப் போட்ட உடன் பொத்துக்கொள்ளும் ப்ளாஸ்டிக் கூடை, பத்து ரூபாய் வெங்கடாஜலபதி தங்கச் சிலை, தட்டு மாதிரியும் இல்லாமல் பேசின் மாதிரியும் இல்லாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் பாத்திரம் (லேடீஸுக்கே அது என்னவென்று விளங்காது), ராகவேந்திரர் லாமினேட்டட் படம் (அசப்பில் ரஜினி மாதிரி இருக்கும் ப்ரிண்ட்), ஆஜானுபாகுவான ஆகிருதியான மாமிகளுக்கு சுண்டி விரல் கூட நுழைக்க முடியாத சில்வர் ப்ளேட்டட் குங்குமச் சிமிழ் என்று சகலமும் கொடுத்தாயிற்று.

“..ண்ணா.. காசு கூடப் போனாலும் பரவாயில்ல, இந்த தடவை டிஃப்ரெண்ட்டா எதாவது வாங்கறோம்” என்று என்னையும் செலக்‌ஷன் கமிட்டியில் சேர்த்துக்கொண்ட என் மனைவியின் மதியூகத்தை என்னவென்று சொல்வது. வார்த்தைகளில் அடங்கா! வார்த்தைகளுக்கும் அடங்கா!!

திரும்பவும் சிமிழ், தட்டு, அடுக்கு விளக்கு, அண்டா விளக்கு, சின்ன குத்துவிளக்கு மொதற்கொண்டு பார்த்தாயிற்று. அம்மணி பார்த்தவைகளை வாங்குவதென்றால் சம்பளக் கவரை திருவாளர் கடைக்காரரிடம் கொடுத்து சேவித்துவிட்டு பொருட்களை வாங்கி வரவேண்டும். இப்போது நிச்சயம் களத்தில் இறங்குவதற்கான தருணம் வந்துவிட்டது. தர்ம நியாயங்கள் தோற்றுப் போகும் போது எம்பெருமானின் அவதாரம் போல உள்ளே இறங்கினேன். கையைக் கடிக்காமல் பட்ஜெட்டிற்குள் எது அடங்கும் என்று மூளையைக் கசக்கி கடையை இரண்டு ரவுண்டு வந்தேன். மருத்துக்குக் கூட ப்ளாஸ்டிக் ஜாமான் இல்லாத பரிசுத்தமான சுற்றுச்சூழலுக்கு ஆத்ம நட்புக் கடை. ஷேமமாக இருக்கவேண்டும்.

ஒரு ஐட்டம் எடுத்து ”இதுல ஐம்பது வேணும்” என்றால் “மொத்தமே இங்க இருக்கிறது தான் சார்!” என்று நெட்டித் திரும்பி அடுத்த கஸ்டமரை பார்க்க சென்று விட்டது அந்த நீலச் சட்டை பொடிசு. கடை முழுக்க காஸ்ட்லி ஐட்டங்களை நிரப்பி பொதுச் சேவை புரிந்துகொண்டிருந்தார் அந்தப் புண்ணியவான். இங்க்லீஷ் பாட்டு பாடி “போயிட்டு வரேன் தம்பி” என்று விளக்குமாறும் கையுமாக வீடு கூட்டும் பெண்மணி நடிக்கும் விளம்பரத்தில் வரும் ஆங்கிலம் போதிக்கும் நிறுவனரும் அங்கே வந்திருந்தார். அவரும் நாலைந்து எடுத்துப் பார்த்து கையைக் கடிக்க போட்டுவிட்டு போய்விட்டார்.

மாட்டிக்கொண்ட நான் நூறு ரூபாய்க்கு கொஞ்சம் கம்மியாக ஒரு வெண்கல விளக்கை எடுத்து பார்த்தேன். கொஞ்சம் தேய்த்ததில் அந்தப் பெண் வந்து ”என்னா சார் தேச்சுப் பார்க்கிறீங்க?” என்றது. “இந்த அற்புதவிளக்கின் உள்ளேயிருந்து பூதம் வந்தால் கொஞ்சம் பணம் கேக்கலாம்னு இருக்கேன்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். ”இந்த விளக்கு பேர் என்ன?” என்ற கேள்விக்கு ”குபேர விளக்கு” என்று வந்த பதிலால் திருப்தியடைந்து “ஒரு ஐம்பது கொடுங்க” என்று வாங்கிக்கொண்டால் “..ண்ணா இது கூட நல்லாயிருக்கில்ல” என்ற குரல் வந்த திக்கில் வேறு டிசையனில் ஒரு விளக்கை கையில் பிடித்து கை விளக்கேந்திய காரிகையாக நின்றுகொண்டிருந்தாள் என் மனைவி.

அந்த விளக்கு அப்புறம் ஒரு சின்னத் தட்டு என்று கொலுவுக்கு “வச்சுக் கொடுக்கும்” சாமான்கள் பையை நிரப்ப அந்த தெய்வீகக் கடையை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தும் “இந்த வருஷமும் புது பொம்மை எதாவது வாங்கனும்” என்று கையில் பிரம்பு இல்லாமல் கண்டீஷனாக சொல்லிவிட்டார்கள்.


மாடவீதி ஜேஜேயென்று இருந்தது. எல்லாக்கடை வாசலிலும் தேவாதி தேவர்கள் முகாமிட்டிருந்தார்கள். வாண்டுகள் பொம்மை பார்க்க பெருமளவில் குவிந்திருந்தார்கள். காதுக்கும் மூக்குக்கும் வைர வைடூரியம் அணிந்திருந்த செல்வச் சீமாட்டிகள் செண்ட் வாசனையுடன் “அத்த எடுப்பா! இத்த எடுப்பா.. அந்த ஓரம் லெஃப்ட்ல.... ஹா..ஹாங்.. ஜஸ்ட் அபோவ் தட்” என்று என்னை போன்ற ரெண்டாம் கிளாஸிடம் இங்க்லீஷில் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஸ்வாமி பெயர் சொல்லிக் கேட்டால் சட்டென்று எடுத்து தந்துவிடப்போகிறார்கள். சிலரது டாட்டா சுமோவும், ஸ்கார்ப்பியோவும் அந்த இரண்டு முழம் ரோட்டில் அவர்களுக்காக அந்தக் கடையெதிரில் காத்திருந்ததுதான் உட்சபட்ச அயோக்கியத்தனம்.

மாடவீதி சரவணபவன் மாஸ்டருக்கு அன்றைக்கு நிச்சயம் தோசை வார்த்துப்போட்டு கைக்கு மாக்கட்டு போடவேண்டியிருக்கும். கடை உள்ளே சாப்பாட்டுப் போர் மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடை வாசலில் குருக்ஷேத்திரத்தில் படைத் தேர்கள் போல வாகனங்கள் கொடிபிடித்து நின்றுகொண்டிருந்தது. வாசலில் நின்றிருந்த அந்த நேபாள ரெஃப்ரி டிராஃபிக் ஜாமை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு பம்பரில் அடிபடாமல் இன்னொறு வண்டியின் டிக்கியில் நசுங்கி மக்கள் கொலு பொம்மை பார்த்தார்கள். வாங்கவில்லை. வாங்கியவர்கள் எண்ணிக்கை ரொம்பக் குறைச்சல். காதெங்கும் துளை போட்ட பெரிய அம்மா ஒருத்தர் “கடசீ நாளைக்கு வந்தா பேர் பாதி விலைக்கு வாங்கலாம்” என்று வாடிக்கையாளர் தந்திரம் சொல்லிக்கொண்டே போனார். பக்கத்தில் அதை செவிமடுத்தது அவருடைய மாட்டுபொண்ணாக இருக்கவேண்டும். பொதுவெளியிலாவது தலையாட்டி வைப்போமே என்று பூம்பூம் ஆட்டிக்கொண்டே பின்னால் சென்றது.

இந்த முறை பரவலாக ஆலிங்கனங்கள் கண்ணில் பட்டது. வருடாவருடம் இந்தியன் வங்கி ஏடிஎம் உள்ளே செல்லமுடியாதபடி கடை விரிக்கும் வாடிக்கை பொம்மைக்காரர் “போன தடவை ஆலிங்கனம் இருக்கா இருக்கான்னு கேட்டாங்க. ஆஞ்சநேயர்-பிள்ளையார் மட்டும்தான் போயிருக்கு. ராமரு-குகன், சுதாமா-கிருஸ்ணரு அல்லாம் அப்டியே இருக்கு” என்று குறைப்பட்டுக்கொண்டார். அன்னபூரணியை விலைக்கு வாங்கிவிடலாம் என்று கேட்டால் யானை விலை குதிரை விலை சொன்னார். கொஞ்சம் மார்டனாக சொல்லவேண்டும் என்றால் ஐ-7 ப்ராஸஸர் விலை சொன்னார். வேண்டாம் என்று நகர்ந்தால் குரலை உயர்த்தி கட்டி இழுத்தார். “நீங்க கேளுங்க” என்றார். பாதிக்கு பாதி கேட்டால் பேரம் படியுமா? என்ற ஆசையில் கேட்டதற்கு “சார்! அநியாயமா கேட்காதீங்க.. நாங்களும் லாபத்துக்காகத் தானே உட்கார்திருக்கோம்” என்றவருக்கு அதே பதிலை ஒரு வார்த்தையை மட்டும் மாற்றிச் சொன்னேன் ”உட்கார்ந்திருக்கோம்”க்கு பதிலாக “நின்னுக்கிட்ருக்கோம்”னு.

பத்து பதினைந்து கடைகளில் ஸ்கான் செய்து பாண்டுரங்கர், ரஹ்மாயி மற்றும் அன்னபூரணி மூவரையும் வீட்டிற்கு அழைத்துவந்தாயிற்று. போன வருடம் ஸ்கிப் ஆனதை இந்த வருடம் ஈடு கட்ட வேண்டும் என்று சூப்பர் ஸ்டார்-ஷங்கர் காம்பினேஷன் பட பட்ஜெட் போல வீட்டு சுப்ரீம் சக்தி கொலு மெகா பட்ஜெட் போட்டுவிட்டார்கள்.

ஆங். ஒரு விஷயம். நிறைய தேடிப்பார்த்துட்டேன். இந்த வருஷம் கொலு ஸ்பெஷல் என்று நிச்சயம் இந்த மகானின் பொம்மை புதிய வரவாக இருக்கும் என்று நினைத்தேன். உஹும். இல்லை. பெருச்சாளிகளுக்கு எதிராக போராடும் அந்த நிகழ்கால மகான் யாரென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்ப்போம்.

இப்பதிவிற்காகப் படமெடுத்தது பாம்பல்ல ஆர்.வி.எஸ் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமோ?

-

Friday, September 23, 2011

இளமுருகு::தமிளு::இராமசாமி



இளமுருகு
----------------
என்னையும் அந்த முனை உடஞ்ச சிமெண்ட் பென்ச் மேல படுத்திருக்கிற விகாரமான சொரி நாயையும் தவிர்த்து இந்த பஸ் ஸ்டாப்ல வேற யாருமே இல்லை. நா மட்டும் தனியா ஊருக்கு போற ரூட் பஸ்ஸுக்கு காத்துக்கிட்ருக்கேன். ஈசான மூலையில வானம் கண் மையாக் கருத்திருக்கு. அதோ அந்தக் கண்ணுக்கெட்ற தூரத்தில அந்த ரெட்டை மொட்டை மாட்டு வண்டி திரும்பற தார்ரோட்டு வளைவுக்கு அப்பால பளிச் பளிச்சுன்னு மேகத்த குத்திக் கிழிச்சுக்கிட்டு மின்னல் வெட்டுது. டமார் டமார்னு காது கிழிய அதிர்வேட்டா பொளக்குது வானம். சாரக் காத்து ஆளத் தூக்குற மாதிரி பலமா வீசுது. கிழக்கால பொத்துக்கிட்டு ஊத்துது. ஒரே சிலுசிலுன்னு இருக்கு. ரொம்ப நேரமாயிட்டுதோன்னு பார்த்தா மணி நாலு தான் ஆவுது.

சாயந்திரம் நாலு மணிக்கே கும்மிருட்டா இருட்டிக்கிட்டு வந்துடிச்சு. தார்ரோட்டைச் சுத்திலும் பச்சைப் பசேல்னு வயக்காடு. மூணு போகம் வெளையுற பூமி. குருவை நட்ருக்காங்க. ஆத்தில புதுத் தண்ணி. வரப்பு ஓர வாய்க்கால்ல தண்ணி சலசலன்னு கோரைப்புல்லை ஆட்டிவுட்டுக்கிட்டே வெள்ளமாப் பாயுது. பக்கத்துல யாருமே இல்லையா அதனால எங்கயோ காக்காங்க கூட்டமா கத்தற சத்தம் நல்லாக் கேக்குது. கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை “ஹோ...”ன்னு அலறி வீசுற ஒவ்வொரு பேய்க் காத்துக்கும் இந்த “இரத்தினத்தம்மாள் நினைவு பேருந்து நிறுத்தம்” மேல உரசிச் சாஞ்சுகிட்டிருக்கிற அந்தப் பெரிய பூவரசு மரம் தலையை சிலுப்பிக்கிட்டு ஆட்டமாய் ஆடுது. எப்படியும் இந்தத்தடவ அவளப் பார்த்திடலாம்னு நினைச்சு தான் இங்க வந்தேன். இன்னிக்கும் முடியல. ஒவ்வொரு தடவயும் லீவுக்கு ஊருக்கு வர்ற போது பாக்கனும்னு ட்ரை பண்றேன். முடியமாட்டேங்குது.

மேல் சட்டை பட்டன் கழண்டு என்னோட பாவப்பட்ட நெஞ்சு போல படபடன்னு காத்துல அடிச்சுக்குது. பக்கத்து கிராமத்துக்கு “பாபி ஐஸ்” பொட்டிக் கட்டி குச்சி ஐஸ் விக்கப் போனவன் சைக்கிளை காத்து அலேக்கா தூக்க மிதிக்க முடியாம தூரத்தில ஆடி அசஞ்சு வரான். ஊர்ல சுந்தரத்தம்மா வூட்ல சண்ட வந்தப்போ அவுங்க தம்பி சம்சாரம் “நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்கடா.. நாசமத்துப் போயிடுவீங்க”னு மண்ண வாரி தூத்துனது போல ரோட்லேர்ந்து புழுதியும் குப்பையையும் காத்து வாரி சுத்தி சுத்தி அடிக்குது. பேலன்ஸ் இல்லாம அவனோட ஹைதர் அலி காலத்து சைக்கிள் அது இஷ்டம் போல ரோட்டை அளக்குது. மட்கார்டு, செயின் கார்டு, பாருக்கெல்லாம் செவப்பு பெயிண்ட் அடிச்சு வச்சுருக்கான். சைக்கிள் மிதிச்சு களைச்சுப் போயி வந்தவன் யாருமே இல்லாத அத்துவான ரோட்டில தனியாளா ஒதுங்கி நிக்கிற என்னப் பார்த்தவுடனே

“யாரு.. மாட்டாஸ்பத்திரி டாக்டர் தங்கராசு மவனா?”

ஒத்தக் கண்ணை இடுக்கிப் பார்த்த ஐஸ்காரனுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சிடிச்சி. ஆள் உயரம் கம்மியா சைக்கிள் பார் உசரத்துக்கு இருந்ததால சர்க்கஸ்காரன் சாமர்ஸட் அடிக்கிற மாதிரி குதிச்சு இறங்கினான். குதிச்ச வேகத்துல ஹவாய் செருப்பு வார் பட்டுனு விட்டிடுச்சு. பஸ் ஸ்டாப் சுவத்தில ஒட்டியிருந்த “முத்து” ரஜினி முகத்து மேல பின்னால ஐஸ் பொட்டி கட்டின வண்டியை சாச்சுப்புட்டு செருப்பைக் கையில எடுத்து வாரை நுழைச்சுகிட்டே என்னைப் பார்த்து ஈன்னு இளிச்சான்.

“தம்பி எங்க இம்புட்டு தூரம்?”

“இல்ல.. இங்க கொஞ்சம் வேலை இருந்திச்சு... அதான்..”

“இந்த வயக்காட்டுல அப்டி என்ன வேல” வாரை நுழைக்க முடியாம இடுப்புல அரணாக்கயிரில தொங்கிகிட்டு இருந்த ஊக்க எடுத்து செருப்போட சேர்த்து போட்டுவிட்டான்.

“அப்பாவுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்க இருக்காங்க. அவங்களைப் பாக்கலாம்னு....” தயங்கித் தயங்கி இழுக்கறேன் நானு. ச்சே.. என்ன மனுஷன் நானு. எவனோ ஒரு குச்சிஐஸ்காரன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்றேன்.

“இங்க யாரு தம்பி ஒங்களுக்கு தெரிஞ்சவங்க இருக்கப் போறாங்க? இங்கேருந்து வடக்கால கண்டியர் பங்கு தாண்டினா கீளயூரு. தெக்கால ஊர்லாம் ரொம்ப தொலவு. நடந்து போவ முடியாது. கீளயூருல யாரையாவது பாக்க வந்தீங்களா?”

அவன் உடற மாதிரி இல்ல. பதிலுக்கு பதில் எதிர் கேள்வி கேக்கறான். எனக்கு செம எரிச்சல். என்னன்னுட்டு இவன்ட்ட சொல்லுவேன். அவள இவனுக்கு தெரியுமா? இல்ல யாருன்னு சொன்னா புரிஞ்சுப்பானா. சுத்தக் கேனப்பய..

“இல்லிங்க... நமக்கு தெரிஞ்ச ஒருத்தங்க...”

“தம்பி.. இருவது வருசமா சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சனங்களுக்கு நாந்தான் பொட்டியில கட்டிக்கிட்டு போயி ஜில்லிப்பு குடுக்கறேன். “பாம்..பாம்”னு சத்தம் கேட்டவுடனே அரையிலேர்ந்து டவுசர் அவுர ஓடிவந்து எங்கிட்ட பால் ஐஸ் வாங்கிச் சாப்டவனெல்லாம் இப்ப சிங்கப்பூர்ல சொகமா இருக்கானுவ. எனக்கு தெரியாம யாரு இங்கின புதுசா குடி வந்துடப்போறாங்க......... சொல்லுங்க தம்பி”ன்னு சொல்லிட்டு வெட்கமே இல்லாம கைலியை அண்ட்ரவர் தெரிய வாரிசுருட்டித் தூக்கி மூஞ்சியை துடச்சிக்கிட்டான்.

யாரு யாருன்னு விடாம அரிக்கிறான். யார் எக்கேடு கெட்டுப் போனா இவனுக்கு என்ன... ஐஸ் வித்தோமா.. வீட்டப் பாக்க போனமான்னு இல்லாம... பாவி! அடச்சே இந்த சமயத்தில பஸ்ஸு வேற வரமாட்டேங்குது....

போச்சு. ஒன்னு ரெண்டு தூத்தலா மழ ஆரம்பிச்சுடுச்சு. இந்த ஐஸ்காரன் இப்போதைக்கு கிளம்பமாட்டான். அப்படியே நனஞ்சுக்கிட்டே பொடிநடையா கிளம்பவேண்டியதுதான்..

“தம்பி... தம்பி... என்ன கிளம்பிட்டீங்க” ஐஸ் விக்கறதுக்கு கூவுகிற மாதிரியே என்னைக் கூப்புடறான்... என்னோட சட்டை நனைந்தாலும் பரவாயில்ல.. நான் அவனை சட்டை செய்வதாயில்லை.....

தமிளு
----------

புல்லுக்கட்டு இல்லனா கூட எம்பின்னாடியேத் தான் முட்டிகிட்டே வரும் இந்த கொழுத்துக் கருத்த ராமு. போற வளியில பூரசு மரத்லேர்ந்து இல பறிச்சிப் போட்டா துள்ளிக்கிட்டு குசியாத் தின்னும். எங்கூட வாரதா இருந்தா அதோட புள்ளக்குட்டிங்களைக் கூட பின்னால வருதான்னு பாக்காது. “ம்.மே..ம்..மே”ன்னு செல்லமா கனைச்சுக்கிட்டே ரெண்டு காலுக்கு நடுவுல வந்துப் பாயும். முந்தாநாளு வந்த கோவத்துல ரெண்டு போட்டேன். பெருமாளு டீக்கடை வரைக்கும் ரோசமா பாஞ்சு ஓடிப்போயிட்டு திரும்பவும் வந்து திண்ணையில பேசாம படுத்துகிச்சு. பொல்லாது. அஞ்சறிவு இருந்தாலும் அம்புட்டு அன்பு எம்மேலே. இவ்ளோ பிரியமா இருக்கறதுகள எப்படி அடிச்சி சாப்பிட மனசு வரும்.ஆயிர்ரூவாயிக்கு தரியான்னு பாக்கும்போதெல்லாம் கேக்கறாரு அப்துல்லா பாய். நா முடியாதுன்னுட்டேன்.

கால் முட்டியில அடிபட்டு போன வாரம் நாயித்துக்கிளம ஒரே அலறலா அலறிச்சு. ஓடிப் போயி டவுனு ஆஸ்பத்திரில கட்டு போட்டுகிட்டு வந்தேன். அதுக்கு முத வாரம் புளுக்கைகு பதிலா தண்ணி தண்ணியா ஒரே களிசல். என்னத்த தின்னு வச்சுதுன்னு தெரியல. பொளுது விடிஞ்சதும் ஆசுபத்திரிக்கு தூக்கிகிட்டு ஓடினேன். இதுவரைக்கும் ரெண்டு மூனு தடவ ஆசுபத்திரிக்கு அளச்சிக்கிட்டு போயிருக்கேன். டாக்டர் ஐயா போனதுக்கப்புறம் ஏதோ இராமசாமி ஐயா அங்க டவுனுல இருக்கிறதுனால நம்ம பொளப்பு ஓடுது.

ஒன்னுத்துக்கும் உதவாத அப்பங்காரன் உசுரோட இருந்தா என்ன செத்தா என்ன. எப்போ பாத்தாலும் பாட்டிலும் கையுமா ஒரே குடி. சாப்பாட்டுக்கு பொறவு தண்ணி குடிக்க கூட வொயினு பாட்டிலுதான் சவத்துக்கு. உடம்பில ரத்ததுக்கு பதிலா சாராயமா ஓடுது. வாயிலேர்ந்து எச்சி ஒளுகிக்கிட்டு, செம்பட்ட தலையோட, எப்பவுமே இடுப்புலேயே நிக்காத வேட்டி. அம்மாவ ரத்தம் குடிக்கிற அட்டப்பூச்சி மாதிரி உறிஞ்சி கால்ல போட்ருந்த தம்மாத்தூண்டு மெட்டி வரைக்கும் எல்லாத்தையும் கொஞ்ச கொஞ்சமா உருவிட்டான். இவந் தொந்தரவு தாங்காம ஒரு நா கர்கள்ல அரளி விதய அரச்சிக் குடிச்சிப்புட்டு உசிர உட்டுப்புட்டா என்னப் பெத்த மவராசி. தாவணி போட்ட சின்னப் புள்ளயா இருக்கேன்னு பாவப்பட்டு தொணைக்கு வந்த சின்னம்மாவை ஒரு நா போதயில கைய புடுச்சி இளுத்துப்புட்டான் எங்கப்பன் படுபாவி!

குய்யோ முறையோன்னு அளுதுகிட்டு “டீ தமிளு... இந்தக் குடிகாரபய கூட ஒரு நிமிசங் கூட இருக்காதடீ. நீயும் கண்காணாம எங்கனா ஓடிப்போயி பொளச்சுக்க”ன்னு மூக்க சிந்திக்கிட்டே ராவோட ராவா அதும்பாட்டுக்கு ஊட்டுக்கு ஓடிப் போயிரிச்சு. அன்னியிலேர்ந்து இன்னிக்கி வர இந்தாளுக்கு சோறாக்கிப் போட்டு கவனச்சிக்கிட்டு வரேன். ”எப்பப் பாத்தாலும் குடிக்கிறியே... உம் பொண்டாட்டியத்தான் இதுக்கு பரிகொடுத்தே உம் பொண்ணையுமா”ன்னு அக்கம்பக்கத்துல நாலு பேர் நாயம் கேட்டதுக்கு திரும்பவும் போய் குடிச்சிப்புட்டு வந்து வேட்டி அவுர ரோட்ல நின்னுக்கிட்டு கெட்ட கெட்ட வார்த்தல திட்டிக்கிட்டு ஒரே கூச்சல். பேசறதுல பாதி வார்த்த குளறுது. “இழ யாழுக்கு பொழ்ந்ழா. அதச் சொழ்ழாம இவழ பெழ்ழவ போழ்ட்டா”னு கன்னாபின்னானு பினாத்தல்.

டவுனுல அரிசி மண்டி ராமசாமி ஐயா எங்க ஊருல கொஞ்சம் மருவாதயான ஆளு. பட்டாளத்துல வேலை பாத்துட்டு இப்ப இங்கின அரிசி கட வச்சுருக்காரு. சிகிரெட்டு பத்த வக்கிற தடிமாடுங்க கூட ராமசாமி ஐயாவப் பாத்து அத கீளப் போட்டு கால்ல நசுக்கிடும். அம்புட்டு மருவாத. ரொம்ப தங்கமான மனுசன். அவரு கூட ரெண்டு மூனு தடவ எங்கப்பனப் பஞ்சாயத்துப் பண்ணிப் பார்த்தாரு. உஹும் மனுசன் திருந்திற வளியா தெரியலை. பத்தாதுக்கு ஊரு பூரா செத்துப்போன எங்கம்மாவையும் என்னையும் பத்தி அசிங்க அசிங்கமா உளறவேண்டியது. இதனால எனக்கு மட்டுமா அவமானம், பாவம் அந்த ஐயாவுக்கும் மானம் போவுது.

எப்படியாவது இதுக்கு ஒரு வளி பொறக்கணும்னு நானும் இந்த பேச்சியம்மாவை வேண்டிகிட்டுதான் இருக்கேன்! ஆத்தா கண்ணு தொறந்தா எதுவும் நடக்கும்....... மள விட்டுதான் ஊட்டுக்கு கிளம்பனும்... மண்டபத்துல ஒரு லைட்டு கூட கெடையாது. பூசாரியோட வெள்ள மீசய அரை வெளக்குல பாத்தாலே பயம்மா இருக்கு...கருத்த ராமு கிடந்து தவிப்பான்...

இராமசாமி
----------------

பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மனோன்மணி விலாஸ் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு ’ஆ’ பிரிவில் நான் மாவட்டத்திலேயே முதல் மாணாக்கனாக ஜொலித்த போது எனது தந்தையார் தவறிவிட்டார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? நான் இப்படித்தான். என்னை ‘தமிழ்’ இராமசாமி என்ற அடைமொழியுடன் தான் ஊரார் அழைப்பார்கள். தூய தமிழில் திகட்ட திகட்ட இலக்கியம் பேசுவது எனக்கு அச்சு வெல்லத்தை பொன்னி அரிசியுடன் கலந்து தின்பது போலப் பிடிக்கும். உடனே சமஸ்க்ருதம் கலக்காமல் பேசுவீர்களா? பௌர்ணமியை முழுநிலவு என்று தான் விளிப்பீர்களா? துட்டு என்பது சுந்தரத் தெலுங்கா? என்று கேள்விக் கணை தொடுக்கக்கூடாது. எனக்குத் தெரிந்த வரை நான் சுத்தத் தமிழ் பேசுகிறேன். இராணுவத்தில் நாட்டுக்காக தொண்டாற்றிய போது மேலதிகாரிகள் இந்திப் பயிலச் சொன்னார்கள். மறுப்பேதும் சொல்லாமல் கற்றுக்கொண்டேன். தமிழ் எனக்கு அம்மா என்றால் இந்தி சிறிய தாயார். இரண்டும் கலந்து மணிப்ரவாளமாகக் கூட பேசத்தெரியும். இருந்தாலும் நான் ஒரு தமிழ் ப்ரியன். அவ்வளவுதான். வெறியனல்ல.

இரசீது, கடைப் பெயர்ப்பலகை, அரிசியின் ரகங்கள் மற்றும் விலைப்பட்டியல் போன்ற அனைத்தையும் எனது கடையில் தூய தமிழில் பார்த்துவிட்டு என் மீது பிரியத்துடன் மருத்துவர் ஐயா எனக்கு ஆத்ம நண்பரானார். நல்ல கெட்டிக்கார மருத்துவர். தமிழ்ப் பித்தர். சைவத் திருமுறைகள் அனைத்தையும் நடுநிசியில் எழுப்பிக் கேட்டாலும் மனப்பாடமாக ஒப்பிப்பார். ”நால்வர் காட்டிய வழி“ என்று ஒரு ஐம்பது பக்க புத்தகத்தை எழுதி சொந்தச் செலவில் அச்சேற்றினார். உத்தமமான கொள்கைகள் கொண்டவர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல வாடிய மிருகங்களைக் கண்டு வருந்துபவர். வாய் பேசமுடியாத விலங்கினங்களின் நோய் தீர்ப்பது அரிதான காரியம். அதை மிகச் செவ்வனே செய்வார்.

பொதுவாகவே உயிர்களிடத்தில் பேரன்பு செலுத்தும் அவருக்கு வாழ்க்கையில் அடிமட்டத்தில் அடிபடும் ஏழை ஜீவன்களைக் கண்டால் மனம் பாகாய் இளகி விடும். காட்டிலும் மேட்டிலும் ஆடுமாடு மேய்த்துக் கஷ்ட ஜீவனம் நடத்தும் மக்களுக்கு இலவசமாக நிறைய உதவிகள் புரிவார். சித்திரைத் திருவிழாவின் கடைசியில் தேரோட்டம் நடைபெறும் சமயத்தில் கீழையூர் இரத்தினம் ஒரு கிடேரி கன்றுக்குட்டி வேண்டும் என்ற ஆசையில் அவளது காறாம் பசுவை கால்நடை மருத்துவமனைக்கு ஓட்டிக்கொண்டு வந்தாள். அடுத்த வேளை சோற்றுக்கே திண்டாடும் நிலையிலும் பசுவை பராமரிக்கும் அவளது ஜீவகாருன்ய குணம் அவருக்குள் இருந்த தயாள குணத்தை கொம்பால் முட்டித் தூண்டியது. மாட்டிற்கு இலவச வைத்தியம் செய்தார்.

அடுத்த வேளைக்கு பொங்குவதற்கு அரிசி வாங்க என்னைக் கைக் காட்டினார் தங்கமான மனசுக்காரர் தங்கராசு. அரிசி மண்டியில் மதியம் போக்கற்று உட்கார்ந்திருந்தபோது பவளவாய் திறந்து முத்துப் பற்கள் தெரிய சிரித்தபடி அழகாக அசைந்து வந்தாள் இரத்தினம். அப்போது
”நாற்குணமும் நாற்படையா, ஐம்புலனும் நல்லமைச்சா,
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா, வதன மதிக்குடைக்கீழ் 
ஆளுமே பெண்மை அரசு ”
என்று புகழேந்தியாரின் நளவெண்பாவில் மூழ்கி சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தேன். அட்சரம் பிசகாமல் அந்த வரிகளை ஒப்புமைப்படுத்துதல் போல எதிரே அழகின் அரசாட்சிக்கு அத்தாட்சியாக நின்றாள்.

நானும் என்னால் இயன்றதைக் கொடுத்துதவினேன். கிராமத்திலிருந்து நகரத்திர்க்கு வரும்போதெல்லாம் என் அங்காடிக்கும் ஒரு எட்டு வந்து எட்டிப் பார்த்துப் போனாள். ஒரு முறை பார்த்ததற்கு மறுமுறை இன்னும் அழகாகத் தெரிந்தாள். நாளுக்கு நாள் மெருகேறினாள். ஊரிலும் கால்நடை மருத்துவமனையிலும் அவள் தலை அடிக்கடி தென்பட்டதால் தங்கராசு வீட்டில் அரசல்புரசலாக இரத்தினத்தைப் பற்றி அவதூறு பேச ஆரம்பித்தார்கள். இரத்தினத்தின் கணவன் ஒரு கண்கண்ட அசுரன். அவன் அவளது துர்பாக்கியம். வேளாவேளைக்கு சாப்பிடுவதற்கு பிரச்சனை ஏதும் இல்லை என்று தெரிந்ததும் கட்டவிழ்த்துவிட்ட காளையாக எங்கும் திரிந்தான். எல்லா நேரத்திலும் குடித்துக் கும்மாளமடித்தான். கும்மாளமடிப்பதோடு திருப்தியடையாமல் அவளையும் போட்டு அடித்துத் துவைத்தான் அழகை ஆராதிக்கத் தெரியாத அந்த மூர்க்கன்.


அவனுடைய இம்சை பொறுக்கமுடியாமல் ஒரு நாள் ஆசிரியை தேவியின் வீட்டு அரளி விதையை அரைத்து அவள் ஓட்டி வந்த அந்த பசுவின் சீம்பாலில் கரைத்து குடித்து தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டாள். இரத்தினம் இறந்த முதல் வருட நினைவு நாளன்று கீழையூரில் நிழற்குடை திறந்த அன்று இரவு தங்கராசும் ஒரு விபத்தில் இறந்தார். இருவருடங்களில் வைரமாக இருந்த இரத்தினம் மற்றும் தங்கம் இரண்டையும் இழந்து தவித்தேன். இரத்தினத்தம்மாள் இறந்து ஐந்து வருடங்கள் ஆகியும் இளமுருகு வீட்டில் கொதிப்பு அடங்கவில்லை. சரி... மணி ஒன்பது அடிக்கிறது. வீட்டில் தருமு காத்திருப்பாள். கிளம்பலாம் என்று கடையை அடைத்தேன். கொத்துசாவியை பையில் போட்டுக்கொண்டு வாசலில் இறங்கி எனது இருசக்கர வாகனத்தை உதைக்கும் போது

“என்ன மாமா வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா?” அட. நம்ம இளா.

“என்னப்பா இப்படி தொப்பலா நனஞ்சுகிட்டு வரே” என்ற கேள்விக்கு “ஹும்” என்று விரக்தியாகச் சிரித்தான். கீழையூரிலிருந்து வருகிறான் என்று புரிந்துகொண்டேன்.

“என்னிக்கு ஊருக்கு?” என்று கேட்டு அவனை பிற குசலங்கள் விசாரித்து திசைதிருப்பி வீட்டுக்கு அனுப்பினேன்.

மரகதம் தியேட்டர் தாண்டும் போது இரவுக் காட்சிக்கு கூட்டம் ரோடு வரை தவமிருந்தது. ஒரே நாளில் கடல் நீரனைத்தையும் நிலத்தில் கொண்டு வந்து சேர்ப்பது போல மழை கனமாகப் பிடித்துக்கொண்டு கொட்டித் தீர்க்கிறது. இது போல ஒரு அடர்மழை நாள் இரவில் அரிசி மண்டியில் இரத்தினத்துடன் ஏற்பட்ட அந்தரங்கப் பழக்கம் படிப்படியாக வளர்ந்து தமிழ்செல்வி என்று அவளுக்கு ஒரு பிள்ளை கொடுக்கும்வரை வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இறக்கும்வரை இரத்தினத்தை உள்ளங்கையில் வைத்து தாங்கினேன், தமிழ்செல்வியைப் பார்க்கும்போதெல்லாம் அவளைப் பெற்றவன் என்ற வகையில் அவள் தனிமையை எண்ணி எண்ணி உள்ளுக்குள் புழுங்குகிறேன். உருகுகிறேன். ஊர் மரியாதையை ஏற்க எண்ணவெல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியிருகிறது.

இரத்தினத்துடனான எனது பழக்கம் தனக்கு வீட்டில் பூசல் உண்டாக்கியது என்றறிந்து என் சட்டையைப் பிடித்து “படுபாவி! நீ நல்லாயிருப்பியா?” என்று சண்டையிட்ட தங்கராசுவை திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டியது நான் தான் என்ற இரகசியத்தைப் இப்போது உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். தயை கூர்ந்து யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். தங்கராசுவை எப்படி எங்கே கொன்றேன் என்று கதை கேட்கவும் உட்கார்ந்துவிடாதீர்கள். இதோ எனது வீடு வந்துவிட்டது. தருமு வாசலில் காத்திருக்கிறாள்! தமிழ் வாழ்க. என்னுடைய பிள்ளை ’தமிழு’ம் வாழ்க!!

பின் குறிப்பு:  மூன்று கதாபாத்திரங்கள் வழியாக இந்தக் கதையை நகர்த்தியுள்ளேன். இதுவும் என்னுடைய புதுமுயற்சி. ஒவ்வொரு பாத்திரமும் கடைசியில் ஒன்றாக கோர்க்கப்பட்டுள்ளது.

பட உதவிக்கு இணையத்திற்கு ஒரு நன்றி. கிரடிக்ட் கொடுப்பதற்கு வலைத்தளம் மறந்துவிட்டேன்!

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails