Sunday, October 28, 2012

ழ்கீ லைத

மேகங்களுடன் ஒட்டி உரசி உறவாடும் மலையுச்சி. காற்றுப் புகா வண்ணம் அடர்ந்த காடாய் மண்டியிருந்த பல ஜாதி மரங்கள். ஒன்றுக்கொன்று போட்டியாய் வானத்தில் ஏற முயன்றுகொண்டிருந்தன. ஏதேதோ இனம் தெரியாத பறவைகளின் க்ரீச்சொலிகள். விண்ணைக் குடைந்தப் பேய்க்காற்று ஒன்று சமாதானமாயிருந்த மரங்களிடையே பெருஞ் சமர் மூட்டியது. ஒரு சமயம் ”ஹோ”வென்ற ஆரவாரமும் மறு சமயம் அமைதியுமாக தேசிய அணி விளையாடும் ஃபுட்பால் ஸ்டேடியம் போல சப்தமாயிருந்தது அக்காடு. மரங்களுக்குப் புடவை கட்டியது மாதிரி அதைச் சுற்றியிருந்த சிறிதும் பெரிதுமாக வளர்ந்த பச்சைக் கொடிகள். ஆங்காங்கே கத்தரிப்பூக் கலரிலும் சிவப்பு வண்ணத்திலும் அச்செடிகளில் பூத்திருந்தது புடவையின் எம்ப்ராய்டரி டிசையன் போலிருந்தது.

சிகரத்திலிருந்த அம்மரக்கூட்டங்களைக் கடந்து வந்து எவ்வளவு நேரமாய் அந்தக் கரும் பாறையின் மேல் விஸ்ராந்தியாய் சாய்ந்திருக்கிறேன் என்று தெரியாது. வானுலகத்திற்கும் எனக்கும் ஒரு முழம் அளவுதான் இருப்பதாகப்பட்டது. துவக்கத்தில் ஒன்றிரண்டாய் ஆரம்பித்த மழைத் துளிகள் பூமிக்காதலியின் எதிர்ப்பேதுமில்லை என்று தெரிந்துகொண்டபின் சரமாரியாய் அவள் அங்கமெங்கும் ராட்சஷத்தனமாய் முத்தமிட ஆரம்பித்தது. பொழியும் மழை என் மேனி முழுவதையும் தொப்பலாக நனைத்தது. திறந்தவெளியில் என்னுடைய இந்தக் குளியல் காட்சியைத் தூரத்தில் மின்னலொன்று புறப்பட்டு ஆசையாய் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டது. காதைக் கிழித்த இடியோசையில் சிந்தனை கலைந்து அதிர்ந்தெழுந்த நான் இப்போது ஒரு யானையின் மத்தகஜத்தில் கையூன்றி அமர்ந்திருப்பது போல உணர்கிறேன். புறந்தூய்மை நீரான் அமையும். வெர்ட்டிகோ வராதவர்களுக்குக்கூட கிர்ரென்று தலைசுற்றும் உயரத்திலிருக்கிறேன். கீழே பூச்சிபூச்சியாய் ஏதேதோ தெரிகிறது. காற்றோடு கைகோர்த்துச் செல்லும் மழை இம்மலைக்கு அருகிலிருக்கும் பெருவெளியில் அந்தரத்தில் அலையடிக்கிறது. எனக்குச் சட்டென்று விசிலடிக்கத் தோன்றியது. விஷ்ஷென்ற சப்தம் அமைதியைக் குலைத்து என்னைக் கண்டித்து அமைதியாய் இருக்கச் சொல்கிறது.

ச்சே! மலைக்கு மேலே ஏறி வந்த வேலையை மறந்துவிட்டேன். இதோ பின்புறம் தட்டிக்கொண்டு எழுந்துவிட்டேன். எனக்கான பயணத்தைத் துவங்க உள்ளேன். யாருக்கும் என்னைப் பற்றிய கவலை வேண்டாம். ஏ மரமே! ஏ மலையே! ஏ மழையே! ஏ காற்றே! உங்களுக்கெப்படி உங்கள் வேலை பெரிதோ சுவாரஸ்யமோ அதுபோல எனக்கும் என் தொழில் பெரிது. சுவாரஸ்யம். கையிரண்டையும் சிலுவை யேசுவாக்கித் தலைகுப்புறக் குதித்தேன். இல்லை பறந்தேன். பாதியில் இடையில் சுற்றியிருந்த ஆடை உருவிக்கொண்டு கழன்று என்னை முழு நிர்வாணமாக்கியது. அப்படியே தரை நோக்கிச் சரிந்து கொண்டிருந்த நான் தலை முட்டிப் படாரென்று சுக்கல் சுக்கலாகி மூளை வெளியே சிதறும் போது வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்துவிட்டேன். படபடவென்று அடித்துக்கொண்டது. மணி 8:05. ”ப்ளக்” ”ப்ளக்”. இரண்டு மடக்கு தண்ணீர் குடித்தேன். மாலை தி.நகர் ”வாக்குச் சித்தர்” திகம்பரநாதன் வீட்டிற்குப் போக வேண்டும். பறப்பது போல கனவு காண்பவர்களின் வாழ்வு உச்சிக்கு போய்விடுமாம். உச்சியிலிருந்து கீழே விழுபவர்கள் என்ன ஆவார்கள் என்று கேட்க வேண்டும். எனக்கென்ன வேற வேலையா வெட்டியா?

#திடீர் சாம்பார், திடீர் ரசம் போல திடீர்க் கற்பனை! :-)
 
பின் குறிப்பு: தலைப்பிற்கான இன்ஸ்பிரேஷன் தலைவர் மூன்றாம் சுழி அப்பாதுரை அவர்கள்.
 
படத்துக்கு நன்றி: uechi.typepad.com

Wednesday, October 24, 2012

இணைய எழுத்துகள்


ப்ளாக் போன்ற இலவச பொது எழுதுமிடம் கிடைத்தது கிறுக்குபவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. வெளியே மழையாய்ப் பொழியத் தவமிருக்கும் எண்ணங்களுக்குக் கிடைத்த அரிய வரமாக நினைத்துக் கையொடிய இராப்பகலாக தட்டச்சி சிறுகதை, கவிதை, ஹைக்கூ, தொடர், நாவல் என்று ஜமாய்ப்பவர்களும் உண்டு. இரவல் புத்தகம் வாங்கி இன்புற்ற உலகிற்கு இப்போது சில ப்ளாக்குகளில் சில நிமிட சந்தோஷம் தாராளமாகக் கிடைக்கிறது. இலவசமாக. ப்ளாக்கில் ரத்தினச் சுருக்கமாகவும் எழுதலாம். அடுத்தவர் சுருக்கு போட்டுக்கொள்ளுமளவுக்கும் எழுதித் தள்ளலாம். நமக்குக் கிடைத்த வாசகரின் பேறு அது.

ப்ளாக்கில் முகமறியா நண்பர்களைப் பெற்று ”அருமை!”, “நல்ல நடை” ”இதைப் புத்தகமாகப் போடலாம்” என்று சிலாக்கியமான கருத்துக்களும் ““க், த், ப் விட்டு எழுதுகிறீர்கள்”, ”ந,ன,ண வித்தியாசம் தெரியாதா?” ”பறக்கற ‘ற’ பறக்காத ர வித்தியாசம் தெரியாதா?” என்றெல்லாம் மொழிப் போர்களைச் சந்தித்து எழுத்தார்வமிக்கவர்கள் அயர்ச்சியடைந்திருக்கையில் ஃபேஸ்புக் என்கிற சாதனம் திருமுகத்தையும் காண்பித்து ஜல்லியடிக்க உதவிக்கு வந்தது. முகத்தில் பாதி நிழலடிக்க அவுட் ஆஃப் ஃபோகஸ் ஃபோட்டோவை அப்லோட் செய்து “ஃபைன் டீ!” “லவ்லி” “மை லவ் பா” என்று நட்பு வட்டங்களால் அதீதமாய் புகழப்பட்டு இன்புறுகிறார்கள்.

சமுதாய விழிப்புணர்வு, புரட்சி, தாய் தடுத்தாலும் விடேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு வண்டி வண்டியாய் ஸ்டேட்டஸ் போடுபவர்களும் உண்டு. அகத்திலிருக்கும் மன மாசுகளைக் கொட்டிப் பிறரைப் பழிக்கும் பலர் பெரும்பாலும் முகமூடியுடன் உலவுகிறார்கள். எழுத்தில் கலவரத்தை உண்டு பண்ணும் இது போன்றவர்களது முகங்களை காண முடியாமல் ஏங்கும் ஏழை நெஞ்சங்கள் பல உண்டு. பட்டும் படாமலும் ஒட்டியும் ஒட்டாமலும் இலை மறை காயாக (முக்கியமான Cliche) எழுதுபவர்கள் பல தூற்றுதல்களிலிருந்து தப்பித்து பரம சௌக்கியமாக இங்கே காலம் தள்ள முடிகிறது.

குருவி வளர்ந்து குயிலான கதையாக முளைத்தது ட்வீட்டர். குயிலின் கச்சேரி அந்த ஒன்றிரண்டு கூக்கூக்கள் தான் என்பதற்கு வடிவம் கொடுத்துக் கச்சிதமாக கதைக்கச் சொல்கிறார்கள். உரைநடையில் குறுநடையாக 140 எழுத்துக்களில் சிக்கனமாக எழுதத் தெரிந்தால் நீங்கள் ஒரு சிறந்த கீச்சுக் குயில். இந்த ட்வீட்டர் சமாச்சாரம் என் போன்ற வாய் மூடா வளவளாவிற்கு (இந்தப் பதிவே இதற்கு நற்சான்று) உகந்ததாக இல்லை. ஆர்வமாகப் பதிந்துகொண்டேனே தவிர கீச்சுக்கள் பதிய முடிவதில்லை. நாலடியார், திருக்குறள் போன்ற பண்டைய ட்வீட்டுகளுக்கு மத்தியில் நம்முடையது சோபிக்குமா என்ற அக உறுத்தலில் அந்தப் பக்கம் எட்டிப்ப்பார்க்க பயமாக இருக்கிறது.

யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுத்துச் சுதந்திரத்திற்கு இலக்கணமாகத் திகழ்வதுதான் இம்மூன்றும். டிஜிட்டல் புரட்சியில் இந்த எழுத்துப் புரட்சி பல ரேழி எழுத்தாளர்களை கிளர்ந்தெழுந்து பொது வெளியில் வந்து போராடவைத்திருக்கிறது. இது போன்ற வார்த்தைப் போராட்டத்தில் ஒரு சௌகரியம் உள்ளது. “வெளியே வாப்பா” என்று யாரும் வந்து கையைப் பிடித்து வீதிக்கு இழுத்துவிடமாட்டார்கள். சேஃப் ஃபைட்.

”ப்ளாகா? ஃபேஸ்புக்கா? ட்வீட்டரா?” என்று ”கல்வியா செல்வமா வீரமா” பாணியில் தடுமாறுபவர்களில் நானும் ஒருவன். ஃபேஸ்புக்கால் அதிகம் ஈர்க்கப்பட்டாலும். எதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஒருவருக்கும் நஷ்டமில்லை.

#இணைய எழுத்துகள் பற்றி பொதுவாக எழுந்த சில ”திடீர்”ச் சிந்தனைகள். இதில் சில இடங்களில் நானும் இருக்கலாம். யாரையும் குறிப்பிடுவன அல்ல!!
 
##ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது.

Monday, October 22, 2012

இசையறியும் பறவை

அதீத திறம் படைத்தக் கவிஞர்களுக்கு கவிச் செருக்கு வழிய வழிய இருக்குமென்பார்கள். தானெழுதிய ஒரு சில வரிகள் பரவலாகப் பாராட்டப்பட்டால் தலை கால் புரியாமல் ஆடி மற்றவர்களை சொல் வம்புக்கிழுத்து லொள்ளு செய்பவர்கள் அநேகம் இருக்கிறார்கள். ”நான் எழுதிய தமிழ்ப்பாட்டில் குற்றமா?” என்று திருவிளையாடல் ரேஞ்சிற்கு எகிறுவார்கள்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் அவையடக்கத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். போன பதிவிலேயே பாற்கடலை ந
க்கிக் குடிக்க ஆசைப்படும் பூனை போல எழுத வந்தேன் என்று சொன்னவன் அடுத்த பாடலில் ”நொய்தின் நொய்ய சொல்ல நூற்கலுற்றேன்” என்று எளிமையான சொற்களைக் கொண்டு இந்நூலை இயற்றத் தொடங்கினேன் என்று பவ்யமாக எழுதுகிறான். வான்மீகியின் எழுத்தில் மிகவும் ஈர்க்கப்பட்ட கம்பன் இவ்வுலகச் சான்றோர்கள் என்னை இகழ்ந்தாலும் அதன் மூலம் எனக்குப் ஏதேனும் பழி வந்தாலும் இக்கதையை நான் எழுதுவேன் என்பதை “வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும்” என்று எழுதி தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்கிறான்.

அசுணம் என்கிற ஒரு பறவையைப் பற்றித் தெரிந்திருந்தால் நீங்கள் சங்க இலக்கியம் படித்த தமிழ் ஆள் என்று அர்த்தம். அது விலங்கா அல்லது பறவையா என்பதில் சிறு சந்தேகம் இருக்கிறது. மாசுணம் என்பது விலங்கு என்று ஒரு சிலர் போராடுகிறார்கள். அசுணத்தின் குண விசேஷம் என்னவென்றால் அது இசையறியும் பறவை. நல்ல இசையைக் கேட்டால் அது அதில் மகிழ்ந்து திளைத்து தன்னை மயங்கி இருக்கும். அப்பறவையைப் பிடிக்க வேண்டுமானால் நல்லிசை வழங்கினால் அது மயங்கியிருக்கும் நேரத்தில் பிடித்துவிடுவார்களாம்.

நல்லிசைக்கு மிகவும் பிரயர்த்தனப்படவேண்டும். எவர்க்கும் அபஸ்வரம் அசால்ட்டாக வரும். பறையொலி போன்ற அதிர்வொலி எழுப்பினால் மூர்ச்சையடைந்து விடுமாம். அவ்வேளையில் லபக்கென்று பிடித்துவிடுவார்களாம். ”ஒத்தை சொல்லால.. என் உசிரை”யும் “எவ அவ” என்று கேட்கும் பேட்டை ராப்பும் ஒலிக்கும் இக் கொட்டு காலத்தில் அசுணம் வாழ்ந்தால் அது உயிர் பிழைக்குமா? வகைவகையான விருத்தத் தொகை கவிதைகளைக் கேட்ட, யாழிசைப் போன்ற தேனிசை கேட்கும் அசுணத்தைப் போன்ற சான்றோர்களின் செவியில் என்னுடைய கவிதைகள் விழுந்தால் அது பறையொலி போன்று இருக்காதோ? அவர்களும் துன்புறுவார்களோ? என்ற கேள்வியின் மூலம் தான் எழுதவிருப்பது விருத்தத் தொகைக் கவிதை என்பதையும் இப்பாட்டினூடே சொல்கிறான் கம்பன். நல்லிசையை இரசிக்கத் தெரியாத மானுடர்கள் கொம்பும் வாலும் இல்லாத விலங்குகள் என்று பர்த்ரு ஹரி நக்கலடிப்பார்.

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பா அரோ

(துறை - வகை, நறை - தேன், உறை - இடம்)

அடுத்த பாடலில் ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்கவும் என்று “பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும், பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?” என்கின்ற வரிகளில் “பைத்தியக்காரர்கள் சொல்வதையும், அறிவிலிகள் சொல்வதையும், பக்தர்கள் சொல்வதையும் யாரும் ஆராய மாட்டார்கள். அது போல இதையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று முத்தமிழறிஞர்களுக்கு குற்றம் பொருத்தருள வேண்டுகிறான். பைத்தியம் மற்றும் அறிவில்லாதவர்கள் லிஸ்டில் பக்தர்களை ஏன் வைத்தான்? பக்தியில் திளைப்பவர்கள் ”எல்லாம் என் தெய்வமே”யென்று ஒரு பித்தனைப் போன்ற உணர்வு நிலையில் இருப்பதாலோ? The lunatic, the lover, and the poet are of imagination all compact என்று ஷேக்ஸ்பியர் பைத்தியத்தையும் காதலர்களையும் கவிகளையும் ஒரே தராசில் வைத்தான்.

அவையடக்கத்தின் கடைசி பாடலாகத் தரையில் கோடு கிழித்து ஆடும் அரங்கம் வரைந்து விளையாடும் சிறுவர்களைப் பார்த்து சிற்பிகள் அவர்கள் வரைந்ததில் குற்றம் கண்டுபிடித்து ஏளனம் செய்யமால் பாராட்டவும் செய்வார்கள் அல்லவா அது போல சான்றோர்கள் நான் இயற்றியக் இக் காதையை இலக்கணப்படி அமையவில்லை என்று கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறான் கம்பன்.

அறையும் ஆடு அரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?

காப்பியத்தை ஆரம்பிக்கும் முன் தான் இயற்றிய நூலைப் பற்றிக் கூறுகையில்

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராம அவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே.

ஒழுக்கநெறியில் நின்று உயர்ந்த நாயகனின் தோற்றத்தைப் பற்றிய இராமாவதாரம் என்று பெயர் கொண்டு எதுகை மோனையுடன்(தொடை) செய்யுள்களைக் கொண்ட குற்றமற்ற இம்மாக் கதை வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் உதவியால் எழுதியது என்று சடையப்பருக்கு ஸ்பான்ஸர் கிரெடிட் கொடுக்கிறான்.

ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை இது போல வள்ளலுக்கு ஒரு பாட்டு அர்ப்பணிக்கிறானாம் கம்பன். இதில் இடை நிகழ்ந்த என்பதற்கு பொருள் கொள்வதற்காக நடையில் நின்று உயர் நாயகனை திருமால் பெயருக்கு ஏற்றி பரசுராம அவதாரத்திற்கும் பலராம அவதாரத்திற்கும் இடையில் நிகழ்ந்த இராமாவதாரத்தைக் குறிக்கும் பொருட்டும் சிலர் உரை சொல்வர். தோம் என்றால் குற்றம். தோம் அறு. குற்றமற்ற. இப்பாடலை கூர்ந்து பார்க்கும் போது தான் எழுதியக் காப்பியத்திற்கு கம்பன் ”இராமாவதாரம்”என்று பெயரிட்டதாக அறியப்படுகிறது.

”அவதார புருஷ”னில் வாலி அவையடக்கமாக எழுதிய ஒரு வரி ஞாபகத்திற்கு வருகிறது.

“நான்கு அங்குலம் நகர்ந்ததையே, நகர் வலமாய் நினைக்கும் நத்தை;”

#நான் நத்தை கூட இல்லை. சொத்தை!!

##அடுத்த கம்பராமாயண அப்டேட்டிலிருந்து பாலகாண்டம்.

### கம்பராமாயணம் (2)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails