Tuesday, January 11, 2011

மிருதங்கிஸ்ட்

sivaji miruthangamநடிகர் திலகம் சிவாஜியின் அவ்வளவு அஷ்டகோணல் முகக் கொனஷ்டைகளிலும் மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படம் என் அப்பாவை அந்த வாத்தியத்தின் பக்கம் சுண்டி இழுத்திருக்குமா என்று நினைத்து ஆச்சர்யப்படுகிறேன். எந்தவிதமான கவலையுமின்றி ஒரு மைனராக மன்னார்குடியை சுற்றி வந்த என்னை... நிற்க.. மைனராக என்றால் வயதில் என்பதை இங்கே தெள்ளத் தெளிவாக தெளிவுபடுத்திக் கொள்கிறேன்... மேடையில் மிருதங்க வித்வானாக மினுக்க பெருமைப் பட வேண்டும் என்று என் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து ஒரு சுபயோக சுபதினத்தில் மிருதங்க க்ளாஸ் சேர்த்துவிட்டார். காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு காலுக்கிடையில் வாத்தியத்தை வைத்துக்கொண்டு வாயை மூடி உயிரெழுத்து "ஊ" அழுத்திச் சொல்லும் போஸில் உதடுகளை ஒருசேரக் குவித்து சுளுக்கு விழும் வரை தலையை ஆட்டி மி.ச. சிவாஜி போல பையன் தனியாவர்த்தனம் செய்வான் என்ற நம்பிக்கையில் தாளம் தட்டுவதற்கு கிளாஸுக்கு அனுப்பினார். நந்தியெம்பெருமான், புள்ளையார் உம்மாச்சிகளிடம் சுவற்றில் ஆடும் காலண்டரில் மட்டும் ஆடிப் பார்த்த அந்த தேவ வாத்தியத்தை அப்போதுதான் முதன் முறையாக நேரில் பார்த்தேன்.


அப்பா "டேய்.. நாளைக்கு சேர்த்துவிடறேன்.. ஒரு நாள் விடாமல் போய் ஸ்ரத்தையா வாசிக்கணும்..." என்று நான் வருங்கால மிருதங்க சக்கரவர்த்தி ஆகப்போகும் ஆசையில் வார்த்தைகளில் உற்சாகம் கொப்பளிக்க மிரு தங்கமாய் பேசினார். வடக்கு தெருவில் விஸ்தாரமான கூடம் இருக்கும் வரது மாமாவின் பங்களா வீட்டில் இருக்கும் இரு அண்ணாக்களும் வாத்தியக் கலைஞர்கள். பெரியவர் கோபால் அண்ணா தாள வாத்தியக் கலைஞர் என்றால் சிறியவர் உப்பிலி தந்தி வாத்தியக் கலைஞர். கலைஞர் என்றால் கற்றுக்கொள்ளும் வளரும் கலைஞர். ஆனால் மாமா தலை தூக்கி பார்க்கும் அளவுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த அண்ணாக்கள். சிறுவயதில் நியாயப்படி பார்த்தால் புஜபலம் இல்லாத என்னுடைய பூஞ்சையான சரீரத்திற்கு தூக்குவதற்கு சுலபமாக உள்ள தந்திக் கருவி ஏதாவது ஒன்றைத்தான் இசை மீட்ட சேர்ந்திருக்கவேண்டும். ஆனால் கைபழுக்க அடிக்கும் ஒரு தாளக் கருவி வாசிக்க சேர்த்துவிட்டது என் துர்பாக்கியமே. பழைய கருப்பு வெள்ளை சம்பூர்ண ராமாயணம் படத்தில் சிவனுக்கு பிடித்த காம்போதி ராகத்தில் வீணையை தொப்பை மேல் வைத்து மீட்டும் கொடுவா மீசை ராவணன் கனவுகளில் வந்து என்னை பார்த்து எகத்தாளமாக சிரித்து விட்டு போனார். அப்பாவின் ஆசையான அந்த பாலக்காடு மணி போல இந்த மன்னார்குடி மணி தாள வாத்திய சிரோன்மணி என்று பெத்த பெயர் எடுக்கவேண்டும் என்ற நப்பாசையால் தட்டுவதற்கு ஒரு விஜயதசமியில் தட்டு நிறைய பூ பழத்துடன் மிருதங்க வித்வான் காலில் நெடுஞ்சாண்கிடையான விழுந்த ஒரு நமஸ்காரத்தோடு அட்மிட் செய்யப்பட்டேன்.

மிருதங் டியூஷனுக்கு வடக்குத் தெரு மூலையில் தஞ்சாவூரிலிருந்து குன்னக்குடி போல புடவை கன்வர்டட் கலர் கலர் ஜிப்பா மற்றும் பளீரென்ற வெள்ளை வேஷ்டியுடன் வாத்தியார் ஜவ்வாது வாசனை தெருவையே தூக்க பொன் மாலைப் பொழுதுகளில் வந்திறங்குவார். சிக்னல் இல்லாத காலத்திலேயே நெற்றியில் ராணி குங்குமமாக அதைத் தாங்கிய பெருமை அவருக்கே உண்டு. தூரத்தில் அந்த சில்க் ஜிப்பாவை பட்டுப் புடவை என்று நினைத்துக் கொண்டு "யாரோ தீர்க்க சுமங்கலி எதிரே வரா போலிருக்கு" என்று நல்ல சுபசகுனமாக பல பாட்டிகள் நினைத்து ஏமாந்ததுண்டு. வரது மாமா வீட்டில் வேங்கை வேட்டைக்கு களத்தில் இறங்கும்போது தவறாமல் நானும் அங்கு ஆஜராகி இருப்பேன். முதலில் ஒரு அரை லிட்டர் பிடிக்கும் லோட்டாவில் ஸ்ட்ராங் ஃபில்டர் காபி. அப்புறம் அக்குளில் வேர்வை-ஜவ்வாது இரண்டின் கலப்பட வயிற்றைப் பிரட்டும் வாசனையோடு இடுக்கியிருந்த எவர்சில்வர் செல்லப் பெட்டியில் இருந்து கொழுந்து வெற்றிலைகளாக நாலைந்து எடுத்து காம்பு கிள்ளி ஹால் மூலையில் விட்டெறிந்து அப்புறம் பதவிசாக இடது கையில் தாங்கி அதற்கு வலிக்காமல் வாசனை சுண்ணாம்பு தடவி வெகு ரசனையாக போட்டு வாயில் அதக்கிக் கொள்வார். செம்பவள வாயோடுதான் பாடம் ஆரம்பம்.

miruthangamவாத்தியார் வெற்றிலை போடும் வரையில் ஆர்கெஸ்ட்ராவில் "செக்..செக்..மைக் டெஸ்டிங்... ஒன் டூ த்ரீ..." செய்யும் செட்டுக்காரர் போல மிருதங்கத்தை தயார் செய்வது கோபால் அண்ணாவின் வாடிக்கை. கைக்கு அடக்கமான மழுமழுவென்ற ஒரு கருங்கல். ஒரு சின்ன கையகல கிண்ணத்தில் உப்புமா மற்றும் கிச்சடி கிண்டும் ஏ கிளாஸ் ரவை. ஒரு டம்ப்ளரில் தண்ணீர். முதலில் ரவையை கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். அப்புறம் அதை உருண்டையாக உருட்டி மிருதங்கத்தின் தோல் மட்டும் உள்ள பெரிய தலைப் பக்கம் நடு சென்டராக வட்டமாக ஒட்ட வேண்டும். பின்பு கையில் அந்தக் கல்லை எடுத்து சிறிய தலை பக்கம் மிருதங்கத்தை லாவகமாக உருட்டி நாலு தட்டு தட்ட வேண்டும். இப்படி தட்டினால் அடிக்கு பயந்து அழகாக அலறும் மிருதங்கம் தயார். என்று படித்தாலே வாயூறும் ரெசிபி மாதிரி இந்த தயாரிப்பு செஷனை சொல்லலாம்.

எல்லாம் ஆயத்த நிலைக்கு வந்தவுடன் "உம்" என்று தலையசைத்து சைகை சொன்னவுடன், கோபால் அண்ணா தான் எடுத்தவுடன் வாசிப்பார். தக்குடு தக்குடு தக்குடு என்று அடித்து நிமிர்த்துவிடுவார். அடிக்க ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு பிறகு டாப் கியரில் சென்று பேயோட்டும் பூசாரி போல தலை கலைய, வியர்த்து விறுவிறுத்து மூச்சு வாங்க ஒரு அரைமணி நேரம் வாத்தியத்தை ஆக மட்டும் நைய புடைத்த பிறகு, அவர்கள் ரெஸ்ட் எடுப்பதற்கு போனால் போகட்டும் என்று என்னை உட்காரச் சொல்லி கொஞ்ச நேரம் தட்டச் சொல்வார்கள். "ஸ்லிப்ல நில்லு.. நா கீப்பர்.. நாந்தான் பர்ஸ்ட் பேட்டிங்.." என்று வாசலில் ஸ்ரீராம், ஸ்ரீதர் போன்றோரின் விளையாட்டு பேரங்கள் கேட்ட பின்னர் எதை தட்டுவது தடவுவது என்று தெரியாமல் ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால் மெல்ல கணைத்து "உம்.. ஆரம்பி..." என்பார் குரு.

"த..தி..தொம்..நம்.. " என்று ரெண்டு பக்கமும் மாறி மாறி தட்ட வேண்டும். பெரிய தலை உள்ள பக்கம் தவும் தொம்மும், சிறிய தலை உள்ள பக்கத்தில் தியும் நம்மும். ஒரு தடவை ரெண்டு தடவை இல்லை குரு வாசலில் சென்று வெற்றிலையை துப்பி விட்டு கொல்லைப் புறம் போய் அற்ப சங்கைக்கு ஒதுங்கிவிட்டு மாமாவிடம் அவர் மேல் வெற்றிலை எச்சில் படாதவாறு பேசிவிட்டு வரும்வரையிலோ இல்லையென்றால் அண்ணா உள்ளே போய் சமையற்கட்டில் எலி மாதிரி குடைந்து ஏதாவது கொறித்துவிட்டு வரும் வரையிலோ விடாமல் கை அசராமல் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். "த.தி.தொம்.நம்.. த.தி.தொம்.நம்.. " என்று இப்படி அனாதரவாக கழைக்கூத்தாடி டோலக்கு வாசிப்பது போல தட்டிக் கொண்டிருக்கும் வேளையில் தெருவின் அழகான யுவதிகள் மற்றும் சொப்பன சுந்தரிகள் யாராவது மாமா வீட்டிற்கு வந்தால் வெட்கம் பிடுங்கித் திங்க தலையை சட்டைக்குள் தொங்கப் போட்டுக்கொண்டு வாத்தியம் வாசித்த காலங்களும் உண்டு.

முதல் பாடமான த.தி.தொம்.நம் வெற்றிகரமாக இரண்டு மாதங்கள் போயிற்று. வீட்டில் தொம் என்று ஏதாவது விழுந்தால் கூட காதில் மிருதங்க சப்தமாக கேட்டது. சரி நமக்கு இப்போதுதான் வாத்தியம் வசப்பட ஆரம்பித்திருக்கிறது என்று சந்தோஷப் பட்டுக்கொண்டு "நாளைக்கு புதுப் பாடம்" என்று சொல்லிவிட்டு போனதால் அரை மணி முன்னதாகவே போய் வரது மாமா வீட்டு வாசல் காம்பவுண்ட் சுவற்றுக்கு முட்டுக் கொடுத்து நின்றுகொண்டேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாத்தியார் வருகை தெரிந்ததும் இதயம் "இன்னிக்கி புதுப் பாடம்.. புதுப் பாடம்" என்று மிருதங்கம் வாசித்தது. வழக்கம் போல் ஆரம்ப சம்ப்ரதாயங்கள் முடிந்தவுடன் மிருதங்கம் என் கைக்கு வந்தது. "இன்னிக்கி என்ன பாடம்ன்னா...." என்று ஆரம்பித்து அவர் வாசித்துக் காட்டிய வுடன் "பகவானேன்னு அந்த பெரிய ஹரித்ராநதி குளத்தில் போய் இறங்கிவிடலாமா" என்ற தாட் வர மிகப் பொறுமையாக அதை வாங்கி மனதில் அவரை நினைத்து மிருதங்கத்தை இடிக்கலானேன். என்ன பாடம் அது என்று கேட்கிறீர்களா...

"தாத்தா... திதி.. தொம்தொம்.. நம்நம் .." என்று முன்னால் ஒரு தடவை வாசித்ததின் இரண்டுமுறை ரிபீட் தான் அது. ஹும்.. விடாமல் இன்னொரு மூன்று மாசத்திற்கு திரும்பவும் இது முடித்தவுடன் அப்புறம் "தாத்தாதா.. திதிதி.. தொம்தொம்தோம்.. நம்நம்நம்..." என்று மூன்று முறை வாசித்தேன். வாழ்நாள் பூராகவும் நாம் தாதா தொம்தொம் மட்டும்தான் வாசிக்க போகிறோம் என்று நினைத்து விரக்தியின் உச்சத்தில் இருந்தபோது அந்த விடுதலை அறிவுப்பு வந்தது. ஆமாம். அண்ணா கிளாஸ் முடித்து விட்டார்.. "உன் ஒருத்தனுக்காக நான் தஞ்ஜாவூர்லேர்ந்து வரணுமா" என்று கேட்டு பூர்த்தி செய்வதாக சொல்லிவிட்டார். மெயில்ல வந்த வைரசை ஹார்ட் டிஸ்க்ல டவுன்லோட் பண்ணிக்கிட்ட மாதிரி "எங்க வீட்ல வந்து சொல்லிக்கொடுங்க"ன்னு என் அப்பா ஒரு பிட்டை போட உடனே ஒத்துக்கிட்டார்.

அப்படியே மூன்று முறை நான்கு முறையாக ஆகி அப்புறம் அவரே ஒரு நாள் அலுத்துப் போய் இன்னிக்கி ஆதி தாளம் ஆரம்பிப்போம் என்று உட்கார்ந்தார். அன்றைக்கு தான் அவர் எங்கள் வீட்டில் குடித்த கடைசி காபி. கடைசி க்ளாஸ். அப்புறம் எப்போது தஞ்சாவூர் பஸ் வந்தாலும் அவர் மட்டும் வந்து இறங்கவே இல்லை. இன்னமும் விஜயதசமி நன்னாளில் அந்த மிருதங்கத்திர்க்கு சந்தனம் குங்குமம் இட்டு பூஜை போட்டுக் கொண்டு இருக்கிறேன். குங்குமம் வைக்கையில் குரு ஞாபகம் தவறாமல் வந்து போகிறது.

பட உதவி: wlts.org.uk
-

51 comments:

பத்மநாபன் said...

லன்ச் முடிஞ்சு வண்டி ஏறும்போது சரியாக உங்க பதிவு இறங்குகிறது....அதிர்ஷ்டம் இருந்தால் வடை மட்டும் சாப்பிட்டு கிளம்புகிறேன்..
வந்து மிருதங்கம் வாசிக்கிறேன் ( டபுள் மீனிங்)

pudugaithendral said...

புதுக்கோட்டையில் என் மாமா மிருதங்கம் கற்றுக்கொள்ள ஆசை ஆசையாய் சென்று அது எப்படி ட்ராப் ஆனதுன்னு உங்க பதிவு ஞாபகப்படுத்தி விட்டிச்சு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

"சொகசுகாமிர்தங்க தாளமோ"

நல்லதொரு விறுவிறுப்பான தனிஆவர்த்தனம் கேட்டதுபோல் இருந்தது. உங்கள் வாசிப்பு(எழுத்து)
அருமை. ரசித்தேன்.
சங்கீதம் ரசிக்கவே கொடுப்பனவு வேண்டுமென்பார்கள்; கற்க மிகப்பெரிய கொடுப்பனவு இருக்க வேண்டும்.

Anonymous said...

நீங்க த..தி..தொம்..நம் அப்படின்னு ஆரம்பிக்கும் போதே அந்த மிருதங்க நாதம் காதுல ஒலிக்க ஆரம்பிச்சுடுச்சு அண்ணே! ;)
நல்ல விறுவிறுப்பான நடை :)

ADHI VENKAT said...

சங்கீதம் கற்பதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும். எனக்கும் இது போல் அனுபவமுண்டு. பாட்டு, நடனம் இவை இரண்டையும் மூன்று மாதங்களுக்கு மேல் கற்க முடியவில்லை. வழக்கம் போல் உங்கள் எழுத்து ஜோராக இருக்கிறது.

எல் கே said...

//மைனராக என்றால் வயதில் என்பதை இங்கே தெள்ளத் தெளிவாக தெளிவுபடுத்திக் கொள்கிறேன்//
நம்பிட்டோம்

//எப்போது தஞ்சாவூர் பஸ் வந்தாலும் அவர் மட்டும் வந்து இறங்கவே இல்லை. //

அடப் பாவமே.

// இன்னமும் விஜயதசமி நன்னாளில் அந்த மிருதங்கத்திர்க்கு சந்தனம் குங்குமம் இட்டு பூஜை போட்டுக் கொண்டு இருக்கிறேன்//
ஹ்ம்ம் அது தப்பிச்சது

எல் கே said...

நானும் ஆசைப்பட்டேன் . எல்லாத்துக்கும் ப்ராப்தம் வேணும்

புவனேஸ்வரி ராமநாதன் said...

எப்பபாத்தாலும் தாளம் போட்டுக்கிட்டே இருக்கானேன்னு என் தம்பியையும் மிருதங்கம் கத்துக்க சேர்த்துவிட்டார் எங்கப்பா. சேம் ப்ளெட், முடியாம, ஆறு மாசத்துல நிறுத்திட்டான்.

மிகப்பெரிய மிருதங்க வித்வான் பிறந்த ஊராச்சே நம்மூர்.

சின்னப் பையன் said...

:-))))

வெங்கட் நாகராஜ் said...

மிருதங்கம் தப்பித்தது என்று யாரோ அங்கே சொல்ற மாதிரி இருக்கே... யார் அது பின்னாடி குரல் குடுக்கறது? ம்.... அம்மா!

RVS said...

@பத்மநாபன்
லஞ்சுக்கு அப்புறம் வடை வேற.. ஜமாயுங்க... அடக்கி வாசிக்காம நல்லா வாசிங்க பத்துஜி!! நன்றி ;-)

RVS said...

@புதுகைத் தென்றல்
சின்ன வயசுல ஆர்வம் வேற பக்கம் இருந்துச்சு.. இப்ப கொஞ்சம் வருத்தமாத் தான் இருக்கு... முதல் வருகை கமென்ட் போன்ற எல்லாத்துக்கும் ஒரு நன்றி ;-)

இளங்கோ said...

ச்சே, ஒரு நல்ல வித்வானை இந்த உலகம் இழந்து விட்டது.. :)

RVS said...

@யோகன் பாரிஸ்(Johan-Paris)
ரொம்ப நாள் கழிச்சு வரீங்க... கருத்துக்கு நன்றி. நீங்க சொல்றா மாதிரி கொடுப்பினை இல்லை தான். நல்ல மாஸ்டர். ;-)

RVS said...

@Balaji saravana
நன்றி பாலாஜி தம்பி. ஆதிதாளம் கூட முடியலை.. ஆனா உங்க காதில தாளம் விழ ஆரம்பிச்சிடுச்சு.. ஓ.கே .. ;-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றிங்க... எங்க அக்கா கூட ஆறு ஏழு பாட்டு டீச்சர் கிட்ட கர்நாடிக் சங்கீதம் பயின்றாள்.. முடிந்தால் தனிப் பதிவாக அவளை வறுத்து விடுகிறேன்.. நன்றி ;-)

RVS said...

@எல் கே
அந்த வெகுளியான முகத்தை பார்த்தால் உங்களுக்கு புரியவில்லையா எல்.கே. நம்பிட்டோம் அப்படின்னா... ;-)
தப்பித்தது மிருதங்கம்... நிஜமாவே.. ;-)

RVS said...

@எல் கே
ரைட்டுதான் ப்ராப்தம் இல்லை.. :-(

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
மன்னார்குடி ஈஸ்வரன் பிரபலமான மிருதங்க வித்வான். கொஞ்ச நஞ்சம் பிற்பாடு வந்த ஆசை நிராசையா ஆயிடுச்சு.. :-( No Regrets!!! நிறைய பேர் தப்பிச்சாங்க.. (இதை நாமலே சொல்லிக்கறது மரியாதை...) :-)

RVS said...

@ச்சின்னப் பையன்
நா வாசிச்சது உங்களுக்கு சிரிப்பா இருக்கு.. ரைட்டு.. ;-)

Madhavan Srinivasagopalan said...

ஹி.. ரொம்ப நல்லா எழுதி இருக்க.. நகையும் சுவையும் கலந்திருக்கு..
வாழ்த்துக்கள்..

RVS said...

@வெங்கட் நாகராஜ்
சொல்லிட்டீங்களா? நினைச்சேன்.. யாராவது சொல்லுவாங்கன்னு.. இன்னும் அந்த மிருதங்கம் தப்பிக்கவில்லை. பரண் மேல் இருக்கிறது. பிரதி விஜயதசமி அதற்கு பூஜை நடக்கிறது. பூஜை முடிந்த மறுநாள் த.தி.தொம்.நம் வாசிக்கிறேன்.. ஹி..ஹி ;-)

RVS said...

@இளங்கோ
என்னோட ஒரு பதிவு பின்னூட்டத்துல வித்யாவும் தக்குடுவும் சொன்னா மாதிரி இல்லையே இது.. ரொம்ப ரவுசு பண்றீங்கப்பா.. ;-) ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவா!! பதிநொன்னுல பத்து மாதிரி பதிய முடியாது போலருக்கு.. பகவான் சித்தம்.. பார்க்கலாம்.. ;-)

Vidhya Chandrasekaran said...

:))))))

RVS said...

@வித்யா
ரெண்டு பதிவா ஸ்மைலி மட்டும் போடறீங்க.. கருத்து சொல்ற அளவுக்கு ஒன்னும் சரக்கு இல்லையோ? ;-)

மாதேவி said...

சுவாரஸ்யம்...மிருதங்கம் பத்திரமா இருக்குத்தானே மீண்டும் படிக்க ஆரம்பிச்சிடுங்க.

RVS said...

@மாதேவி
மிருதங்கம் பத்திரமா இருக்கு ஆனா சொல்லிக் கொடுக்க கூப்பிட்டா ஓடிடுவாங்கன்னு நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி ;-)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//வாத்தியார் வெற்றிலை போடும் வரையில் ஆர்கெஸ்ட்ராவில் "செக்..செக்..மைக் டெஸ்டிங்... ஒன் டூ த்ரீ..." செய்யும் செட்டுக்காரர் போல மிருதங்கத்தை தயார் செய்வது கோபால் அண்ணாவின் வாடிக்கை//
சூப்பர் comparision ... ஹா ஹா
சூப்பர் அனுபவ பதிவு... (ஆனா குருநாதர் பாவம்... ஜஸ்ட் கிட்டிங் ...)

பத்மநாபன் said...

நடிகர் திலகம்னா சும்மாவா...மிருதங்க வித்வான்களின் கொனெஷ்டத்தயும் உள் வாங்கியல்ல நடிப்புல காட்டியிருக்காரு... சரியான படத்தை எடுத்து போட்டிருக்கிங்க..

// புடவை கன்வர்டட் கலர் கலர் ஜிப்பா // ஐடியா சூப்பாரல்ல இருக்கு..அதுக்குத்தான் மஞ்ச புடவை ஒன்னு எக்ஸ்டரா எடுத்து வச்சிருக்கிங்களா ? தெச்சாச்சா... போட்டுட்டு வெளிய வர்றப்ப சைரன் வண்டியை முதல்ல அனுப்பீருங்க...

// தக்குடு தக்குடு தக்குடு என்று அடித்து நிமிர்த்துவிடுவார். /// அப்ப நம்ம தக்குடுக்கு தக்குடு தக்குடு நல்லா வரும்ன்னு சொல்ல வர்றிங்க
//"தாத்தா... திதி.. தொம்தொம்.. நம்நம் .." // மிருதங்கத்தில எங்கெங்கோ போயிருக்கிங்க.. நமக்கு தப்பட்டை தான் முதல் பாடம் டண்..டண்..டண்டணக்கா
அடுத்த பாடம் டண்டண். டண்டணக்கா..அதற்கடுத்து, டண்டணக்கா டணக்குனக்கா....
அடுத்து மைனர் விளக்கம் வரும்....

Chitra said...

நல்ல காமெடி டச்சோட எழுதி இருக்கிறீங்க....

அப்பாதுரை said...

மிருதங்கம் வாசிப்பதை விட ஆடாமல் பிடிப்பதற்கு மிகவும் கஷ்டமான வாத்தியம். கால் வலி பின்னிடும். முறையா focus செஞ்சு கத்துகிட்டா உண்மையிலெயே sexyஆன வாத்தியம். கேக்கறதோட சரி.

பொட்டு வக்கறப்பவே ரெண்டு தட்டும் வக்கறதுதானே? என்ன இப்ப? அப்பாவுக்கும் ஆறுதலா இருக்கும்ல?

சிவாஜி மி.ச படத்தில் யாரை modelஆ வச்சு வாசிச்சாரு?

சாந்தி மாரியப்பன் said...

படிச்சு முடிச்சப்புறமும் மிருதங்க நாதம் காதுல கேட்டுக்கிட்டேயிருப்பது மாதிரி ஒரு பிரம்மை :-)))

raji said...

தா தா தா தா தா தி தி தி தி தி தொம் தொம் தொம் தொம் தொம் நம் நம் நம் நம் நம்.ஒண்ணுமில்லிங்க.பதிவு, நீங்க ஐந்து முறை வாசிச்சாப்ல இருந்தது.நாங்களும் இப்டித்தான் வீணையை கத்துக்கிட்டோம்.ஹ்ம்ம்... விடுங்க ஆர் வி எஸ்.நாம வாசிக்கறத கேக்கற குடுப்பினை மக்களுக்கு இல்லாம போச்சு, அவங்க செஞ்ச புண்ணியம் அவ்ளொதான், என்ன செய்ய

R.Gopi said...

மிருதங்க சக்ரவர்த்தி ஷூட்டிங் முடியறதுள்ள 30 மிருதங்கம் உடைச்சுட்டாராமே நடிகர் திலகம்...

அவர் அங்க சேஷ்டை, முகக் கொனஷ்டை எல்லாம் பார்த்தால் சத்தியமாக மிருதங்கம் வாசித்திருப்பார் என்று தோன்றவில்லை...

ஓவரா நடிச்சா இது ஒரு பிரச்சனையோ?

R.Gopi said...

தகிட ததிமி, தகிட ததிமி தந்தானா, மிருதங்க ஒலியின் ஜதியில் உன் தில்லானா!!!

R.Gopi said...

இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஆர். வெங்கடசுப்ரமணி...

அனைத்துக்கும் ஆசைப்படு - ஜக்கி

தங்கராசு நாகேந்திரன் said...

//நான் வருங்கால மிருதங்க சக்கரவர்த்தி ஆகப்போகும் ஆசையில் வார்த்தைகளில் உற்சாகம் கொப்பளிக்க மிரு தங்கமாய் பேசினார்.//
மிரு தங்கமாய் அதாவது மென்மையான தங்கமாய் நல்ல சிலேடை

தக்குடு said...

RVS anna,நன்னாதான் வாத்யம் கத்துண்டேள் போங்கோ! எப்பிடி வாசிச்சார்?? //தக்குடு தக்குடு தக்குடு என்று //வாசிச்சாரா??..:))

இந்த வித்யா அக்காவெ இப்படித்தான், என்னோட போஸ்ட்லையும் அவாகிட்ட இருந்து ஸ்மைலியை தாண்டி ஒன்னும் வரமாட்டேங்கர்து....:PP

சிவகுமாரன் said...

\\கோபால் அண்ணா தான் எடுத்தவுடன் வாசிப்பார். தக்குடு தக்குடு தக்குடு என்று அடித்து நிமிர்த்துவிடுவார்.////

....தக்குடுபாண்டியை இப்படி போட்டு தாக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை.

சிவகுமாரன் said...

\\\வெட்கம் பிடுங்கித் திங்க தலையை சட்டைக்குள் தொங்கப் போட்டுக்கொண்டு வாத்தியம் வாசித்த காலங்களும் உண்டு.///

அந்தப் பருவத்து வெட்கத்தை இதை விட அழகாய் சொல்ல முடியுமா தெரியவில்லை

RVS said...

@அப்பாவி தங்கமணி
நன்றிங்க... உங்களோட தொடர் கதையையை தொடரா படிக்க முடியலை.. வர லீவுல படிக்கறேன்.. நிறைய பேர் தொடர் எழுதறீங்க.. எல்.கே, போர்க்கொடி (ஏன்னு தெரியலை பொற்கொடின்னு எழுதினா.. போர்க்கொடின்னு தான் வருது.. ) இப்படி எல்லோரும் எழுதினா என்ன பண்றது.. எனக்கு பயமா இருக்கு.. தொடர்ந்து படிப்பாங்களோன்னு.. பார்க்கலாம் எழுத ட்ரை பண்றேன்.. ;-)

RVS said...

@பத்மநாபன்
பத்துஜி டண்டணக்கா.. டமுக்குடக்கான்னு எழுத முடியாது... எனக்கு ரொம்ப பிடிச்ச வாத்தியம்ங்க்றதால தக்குடு தக்குடுன்னு சத்தம் வந்தது. ;-)

RVS said...

@Chitra
Thank YOu!! Chitra...

RVS said...

@அப்பாதுரை
தல... சொன்னீங்களே.. அது உண்மை.. மொதோ ஒரு வாரத்த்துக்கு ஆடுசதைகிட்ட ஒரே வலி.. என்ன கஷ்டபட்டாலும் அரைகுறையா நிறுத்தியாச்சு.. நல்ல விஷயம் எதுக்கும் நாம மெனக்கடறது இல்லை. நம்மளோட ஜாதக விசேஷம். ;-) ;-)

RVS said...

@அமைதிச்சாரல்
அப்படி ஒரு எஃபெக்ட் கொடுத்துட்டேனா.. ரொம்ப நன்றிங்க.. ;-)

RVS said...

@raji
இப்படித்தான் இருக்கணும்... நாம வாசிக்காம இருக்கிறது சமூக அக்கறையில அப்படின்னு யாருக்காவது தெரியுமா? ;-) ;-)

RVS said...

@R.Gopi
என்னதிது.. நினச்சு நினச்சு மூணு கமெண்ட்டு... //தகிட ததிமி, தகிட ததிமி தந்தானா, மிருதங்க ஒலியின் ஜதியில் உன் தில்லானா!!!// முடியலை.. அட்டகாசம்.. ஆசைப்பட்டோம்... ஆனா தோசை,அப்பளம் வடைன்னு போய்டுச்சு.. ஹி... ஹி... ;-)

RVS said...

@தங்கராசு நாகேந்திரன்
சிலேடையை ரசிச்சு கமென்ட் போட்ட உங்களுக்கு ஒரு 'ஓ' போட்டுக்கறேன். முதல் வருகை போலருக்கு.. அடிக்கடி வாங்க.. கடிக்கமாட்டேன்.. ;-) ;-)

RVS said...

@தக்குடு
ஆமாம் தக்குடு. ஏன் அப்படி சத்தம் வந்துதுன்னு பத்துன்னாக்கு போட்ட கமென்ட்டில் பார்க்கவும். அந்த இடத்துல உங்களோட சைட்டுக்கு URL கொடுக்கலாம்ன்னு பார்த்தேன்.. அப்புறம் அடிக்கறதுக்கு கொடுத்துட்டேன் அப்படிங்கற அவப்பெயர் வந்துடும்ன்னு விட்டுட்டேன்.. ;-) ;-) ;-)

RVS said...

@சிவகுமாரன்
தக்குடுவை தாக்கலை சிவா.. புடிச்சுருக்குன்னு சொன்னேன்.. ;-) ;-)
கவிஞரே.. நக்கலா.. நீங்கெல்லாம் அலங்கார வார்த்தைகள்ல கவிதை வடிப்பவர்கள்.. நான் ஏதோ விளையாட்டுத் தனமா எழுதிகிட்டு இருக்கேன். சரி..சரி.. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சிவகவியே.. ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails