சிகப்பு ரோஜாக் கடைகளை சாலையோரத்தில் சேலைக்கு பார்டர் கட்டியது போல
பரப்பியிருந்தார்கள். ரோஜாவின் சுகந்தமும் ஆண் வாடையும் அந்தப் பிராந்தியம்
முழுவதும் கமழ்ந்தது. சுற்றிலும் அழகான ஆடவர்கள் நிறைய பேர் வெறும்
மார்போடு திரிந்தார்கள். எல்லோருமே பல வயசுகளில் “டா”க்கள். இன்ன டிசையன் என்று புரியாத மாதிரி நெஞ்சிலும்
புஜங்களிலும் வர்ணமயமான டாட்டூக்கள் சதும்ப குத்தியிருந்தார்கள். பரவலாக எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி ததும்பியிருந்தது.
"There
are many roses in my garden. But you are my red rose". திரும்பத் திரும்ப
இந்த வார்த்தைகள் என் ந்யூரான்களில் ஸ்க்ராலர் மெஸேஜ் போல எழுத்தெழுத்தாக
சிற்றெறும்பு போல ஓடுகிறது. இந்த வார்த்தைகளை நான் உச்சரிக்கும்போதே என்
உள்நாக்கு வரைத் தித்தித்தது. நான்கு வருடங்களுக்கு முன்னர் இதே நன்நாளில் ஒரு சுபவேளையில் தான் என் பார்ட்னரை நான் ”வெற்றிக் கட்டிடம்” முன்பு நிற்க வைத்துப்
பார்த்தேன். காதல் நினைவுகளோடு பயணிப்பது தேவசுகம் தரும் உன்னத காரியம். ”ஐ லவ்
யூ” என்று பார்த்தவுடன் பொசுக்கென்று சொல்லிவிட்டேன். அதனோடு சேர்த்துச்
சொன்னது தான் இந்தப் பாரா ஆரம்பத்தில் தொடங்கும் அந்த ஆங்கில ரோஸ் வாசகம்.
மணம் முடிந்து ஒரு
வருடம் கழித்து ஒரு நாள் காலை என் பார்ட்னர் ”சரி! பிள்ளை பெற்றுக்கொள்கிறேன்” என்றதும்
ஹீலியம் ஏற்றிய பலூன் போல ஜிவ்வென்று விண்ணில் மிதந்தேன். அந்த மாதம்
ரேஷனில் கொடுத்த சாராயம் முழுவதும் புட்டி புட்டியாகக் குடித்துத்
தீர்த்தேன். கட்டாந்தரையில் கை கால் பரப்பி நீச்சலடித்தேன். “நீ
அதிர்ஷ்டக்காரன்டா!” என்று அலுவலகத்தில் தேநீர் குடிக்கும்போது பாஸ் தோளைத்
தட்டி அக்குள் வியர்வை ஈரத்தோடுக் கட்டிப்பிடித்துப் பாராட்டினார். அவர் தெளித்துக்கொண்டிருந்த அந்த அதீத பாடி ஸ்ப்ரே வாசம் எனக்கு நெடியேறியது முதற்கொண்டு நேற்று நடந்தது போல இருக்கிறது.
இந்த நினைவுச்
சுருள் திரைப்படம் போல மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கும்போது
மேகங்களுக்கிடையில் ஹெலிபஸ்ஸில் ஆபீஸில் வந்து இறங்கிவிட்டேன். இன்றைக்கு
அரை மணி கூவத்தின் மேல் ஏர் ட்ராஃபிக்கால் மூக்கைப் பிடிக்க
நிறுத்திவிட்டார்கள். இந்த கேடு கெட்ட அரசாங்கம் செண்ட்டட் ஸ்ப்ரேயர்கள் இல்லாத ஹெலிபஸ்களை பறக்க விடுகிறார்கள். படுபாபிகள். ஆபீஸில் நுழையும் போது மணி 05:33 PM என்று அலுவலகக் கடிகாரம் காட்டியது. காதுகளில் மாட்டியிருந்த
கடுக்கனில் தொங்கிய மைக்ரோ ரிஸீவர் செவி துடிதுடிக்க கிணுகிணுத்தது.
நீலக்கலரில் மினுக்கியது. எனக்கான பிரத்யேக அலைவரிசையில் யாரோ
அழைக்கிறார்கள். “ஜீவன் ஹியர்” என்று க.காதைக் கொடுத்தேன்.
“ஜீவன்! உங்களுக்குப் பையன் பொறக்கப்போறான்” எதிர்முனையில் டாக்டர் சுபச்செய்தி சொன்னார்.
“தேங்க்யூ டாக்டர்! எப்போ வரணும்?” அடுத்த க்ஷணம் அங்கிருக்கும் அவசரத்தில் கேட்டேன். மேனியெங்கும் ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஊடுருவிப் பரவியது. இப்போதே விண்ணில் பறக்க ஆரம்பித்திருந்தேன்.
“ஒரு டூ ஹவர்ல இங்கே வந்துடுங்க”
“சரி”
“ஹாங்... மறக்காம பர்த் சர்டிஃபிகேட்டுக்கு ஒரு அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்துடுங்க”
“ஓ.கே. தேங்க்யூ டாக்”
பாஸிடம்
ஓடினேன். தலையைக் கவிழ்த்துப்போட்டு கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தார்.
விஷயம் சொன்னேன். “ஜீவன்! ஆல் தி பெஸ்ட்” கைகுலுக்கி
விடைகொடுத்தார். சிரித்ததில் சட்டையை மீறி பிதுங்கிய தொப்பை குலுங்கியது.
எனக்கு என் பிள்ளைத்தாச்சிப் பார்ட்னரின் தொப்பை ஒரு ஃப்ளாஷ் போல கண் முன் தோன்றி மறைந்தது.
இவ்வுலகில் இனிமேல்
நானும் ஒரு தகப்பன். நினைக்க நினைக்கப் பெருமிதமாய் இருந்தது. சமூகத்தில்
அந்தஸ்து உள்ள பெரிய மனுஷன். கரு சுமக்க என் பார்ட்னர் ஒத்துக்கொண்டதே நான்
செய்த பூர்வ ஜென்மப் புண்ணியம் என்றார்கள். ஆஸ்பத்திரியில் அவ்ளோ பேரும்
கண் வைத்து விட்டார்கள். முதலில் பார்ட்னருக்கு திருஷ்டி சுத்திப்போட
வேண்டும்.
நான் சென்றதும் ஆபரேஷன் தியேட்டருக்கு
பார்ட்னரை உருட்டிச் சென்றார்கள். என்னை அருகிலிருக்கச் சொன்னார்கள். ஓட்டை வாயைத் திறக்காமல். கிஞ்சித்தும் தாமதிக்காமல் சர்க். சர்க். சர்க். வயிற்றைக்
கீறி எடுத்துவிட்டார்கள். பிரச்சனை எதுவுமில்லை. அரை மணி கழித்து
பார்ட்னருக்கு கை குலுக்கினேன். இருவரும் சந்தோஷத்தில் மிதந்தோம். இருவர் முகத்திலும் பரிபூரண
திருப்தி.
3 கிலோ எடை. என் முழங்கையளவு பட்டு மேனி. இப்புண்ணிய பூமியில் அவதரித்த இன்னொரு ஆண் மகவு.
”கங்ராட்ஸ். ஹார்மோன்ஸ்
கொடுத்து ப்ளஸண்டா இம்ப்ளாண்ட் செய்ததற்கப்புறம் நீங்க ரெண்டு பேரும்
காட்டின ஆர்வம் இருக்கே. அப்பப்பா அபாரம். ரெகுலர் செக்கப், வெயிஸ்ட்
செக்கிங்னு டெடிகேஷனோட அசத்திட்டீங்க. லைஃப் பார்ட்னர்ஸ்னா இப்படிதான்
இருக்கனும். நீங்க ரெண்டு பேரும் உதாரணமாத் திகழறீங்க. உங்க பையன் தான்
3050-ல் 35வது பில்லியன் பேபி. ரெண்டாவதுக்கு ப்ளான் பண்ணினீங்கன்னா
நிச்சயம் நீங்கதான் பெத்துக்கனும்” டாக்டர் என்னிடம் கை குலுக்கினார்.
பேபியின் கண்ணத்தில் செல்லமாகத் தட்டினார்.
எல்லாமே ஜீன் ப்ரோக்ராம்டு. எல்லோருக்கும் ஆம்பிளைப் பிள்ளை.
பார்ட்னருக்கு காஜு கட்லி வாங்கி ஊட்டி விட்டேன். ருசித்துச் சாப்பிட்டான்.
“கொஞ்சம் இருங்க” என்று சொல்லி அவன் மீசையில் ஒட்டியிருந்த பீஸை தட்டிவிட்டேன்.
மனம் விட்டுச் சிரித்தான் பார்ட்னர்.
இது ஆண்களின் உலகம்.
[இதே
போல் “இது பெண்களின் உலகம்” என்ற வாசகம் எழுதிய டீ ஷர்ட்டோடு தம்ப்ஸ் அப்
செய்து மகளிரிணம் கொக்கரிக்கும் அதிசுவாரஸ்யக் கதையும் இருக்கிறது. நீங்க
கேட்க ரெடியா?]
பட உதவி: http://www.legaljuice.com
14 comments:
ஆணுக்குக் குழந்தையா...என்னதான் எதிர்காலக் கதை என்றாலும்....எப்படி பாஸ்?!
கடைசி ட்விஸ்டை எதிர்ப்பார்க்கவில்லை. கதை நன்றாக இருக்கிறது.
@ஸ்ரீராம்.
ஏற்கனவே இந்தப் பரிசோதனையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கூகிளிடம் கேட்டால் சொல்லும்! :-)
http://www.malepregnancy.com/science/
@ஹாலிவுட்ரசிகன்
நன்றி!! :-)
எதிர்பார்க்கவே இல்லை. கடைசியில் தான் தெரிந்தது ஆணென்று!
இப்படிக்கூட நடக்குமோ......
உங்க கற்பனைக்கு பாராட்டுகள்.
அடுத்த கதையையும் எடுத்து விடுங்கள்....
ம்ம்ம்.. எனக்கு இந்தக் கதை பிடிக்கல.. சாரி..
இயற்கைக்கு விரோதமா எதைச் செஞ்சாலும் கஷ்டம் நமக்குத்தான்...(உதா... மக்களின் வேலைகளை சுலபமாக்க வந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் -- விளைவு பலவித போல்யூஷன்கள்... வியாதி.. இன்னும் என்னென்னவோ....)
நன்றாக இருக்கிறது. கதையை 2050 என்று சொல்லியிருக்கலாமோ?
3050ல் ஹார்மோன் ப்லெசென்டாவுக்கு அவசியம் இருக்காது. கடைக்குப் போய் 'இந்த்ராகாந்தி பாரதியார் ரஜனிகாந்த் மைகல் ஜேக்சன் இளையராஜா டிஎன்ஏ மார்கப் கலந்த ரெண்டு ஆம்பிளை, மூணு பொம்பிளை கரு பொட்லம் போட்டுக் கொடு ராஜா' என்று வாங்கிக் கொண்டு வந்து வீட்டின் ப்ரத்யேக இங்கூவில் வைத்துப் பிள்ளை பெறமுடியும் என்று நினைக்கிறேன்.
வித்தியாசமான வில்லங்கமான கற்பனை
ரசிக்கும்படியாக இருந்தது
இறுதி வரியும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
வருங்காலத்துல இப்படி நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை. அர்னால்டு நடிச்ச 'ஜூனியர்' பார்த்துருக்கீங்களா.. அதுல அவர் கர்ப்பிணனா வருவார் :-)
என்னது?..... கூவம் 3050-லயும் கப்படிக்கத்தான் செய்யுதா!! அவ்வ்வ்வ்வ்வ்..
@கோவை2தில்லி
பாராட்டுக்கு நன்றி சகோ! இப்பொழுதெல்லாம் சாவகாசமாக உட்கார்ந்த்து எழுத நேரம் வாய்ப்பதில்லை. :-)
@Madhavan Srinivasagopalan
மாதவா! இயற்கைக்கு விரோதமான வழக்கங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். :-)
@அப்பாதுரை
நான் ஒரு கதையில எழுதினதை நீங்க ஒரு கமெண்ட்டுல சொல்லிட்டீங்களே தல! நன்றி!! :-)
@Ramani
நன்றி ரமணி சார்! :-)
@அமைதிச்சாரல்
எவ்ளோ வருஷமானாலும் கூவம் கூவம்தான் மேடம்! :-)
Post a Comment