Saturday, July 27, 2013

தலையணை மந்திரோபதேசம்

”என்ன மந்திரம் போட்டாளோ.. பொண்டாட்டி பின்னாடியே இப்படி ஆடறான்..” என்று பாதிக்கப்பட்ட மாமியார்கள் தங்கள் குழும சகமாமியார்களிடம் மாட்டுப்பொண்களை கரித்துக்கொட்டும் போது தலையணை மந்திரமென்பது பள்ளியறையில் மனைவியாகப்பட்டவள் சொக்குப்பொடி வார்த்தைகளால் நைச்சியமாகப் பேசி கணவனை தன் வசியப்படுத்துவது என்று தப்பர்த்தத்தில் ”மந்திரம்” பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படியில்லையாம். ஒரு சாஸ்திரியின் வெர்ஷன் கீழே!

இரண்டு மூன்று நாட்களாக எனக்கும் பில்லோ மந்திரம் நடந்துகொண்டிருக்கிறது. காதல் வயப்பட்டவர்கள் பல்வேறு கோணங்களில் தலையணையின் துணையோடு படுத்தும் ஒருக்களித்துக்கொண்டும் உட்கார்ந்தும் தனக்கு வந்த காதல் லிகிதத்தைப் படித்து இன்புறுவது போல இந்தத் தலையணை மந்திரத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். கவனிக்க. கேட்டுக்கொண்டிருந்தேன் அல்ல. படித்துக்கொண்டிருந்தேன்.

நடேச சாஸ்திரி என்ற பெருமகனாரால் 1901ல் எழுதப்பட்ட ”தலையணை மந்திரோபதேசம்” என்கிற க்ரந்தம் அது. புத்தகம் முழுக்க கௌட பிராமண தம்பதியர் அம்மணி பாய் மற்றும் ராம பிரஸாத் என்கிற இரண்டே கேரக்டர்கள் சம்பாஷித்துக்கொள்கிறது. பக்கம் பக்கமாக அம்மணி பாய் ராமபிரஸாத்தை கிழி கிழியென்று கிழிப்பதை நாம் நேரே நின்று பக்கத்துவீட்டுச் சண்டையை வாய் பிளந்து ஆர்வம் கொப்பளிக்க வேடிக்கைப் பார்ப்பது போல எழுதியிருப்பது இப்புத்தகத்தின் விசேஷம். காலதேசவர்த்தமானங்களையெல்லாம் கடந்தது இவ்வுபதேசம். சங்கரபிரஸாத்தின் அவலட்சணமான பெண் அம்மணி பாயை தனதான்யங்களுடன் ராம பிரஸாத்திற்கு திருமணம் முடித்து வைக்கிறார்கள். ஒவ்வொரு நாளிரவும் ராம பிரஸாத் நித்திரைக்கு போகும் முன் அவனின் அன்றைய நடவடிக்கையை விமர்சனம் செய்து வார்த்தைகளால் துவந்த யுத்தம் புரிவது அம்மணிபாயின் வழக்கம்.

அம்மணி பாயிடம் ராம பிரஸாத் வாங்கிய வசவுகளில் சில மாதிரிகள்...

"உலகத்தில் எவனாவது யோக்கியன் என்று பெயரெடுக்க விரும்புவன் பொடி போடுவானா? அது என்ன சர்க்கரையா, கற்கண்டா? மூக்குக்குத் தித்திக்குமா? துணியெல்லாம் பாழ். வீடெல்லாம் ஆபாசம்!!”

“நாளை மட்டும் பஜனைக்கூடத்து நீர் போம், பார்க்கிறேன்! நேரில் அவ்விடம் வந்து உமது மடியில் கைபோட்டு உம்மை வீட்டுக்கு இழுத்துவராவிடில் நான் ஒரு மனுஷியா?”

“இன்று ஓர் இரவு போனால் போகட்டும். நாளை இப்படி யாரையாவது கூட்டிவந்து “போடு இலை” என்றால் நான் அடுப்பில் ஒரு செம்பு தண்ணி ஊற்றிவிட்டு வாயிலில் நடந்து விடுவேன். அப்புறம் உங்கள் பாடு!!”

கடைசி அட்டைக்கு முதல் பக்கத்தில் அம்மணிபாய் ஜ்வரத்தில் பிராணனை விடும்வரை ராமபிரஸாத் அவளிடம் வசவு வாங்கிய கசையடி வைபவங்கள் ஒவ்வொன்றையும் மந்த்ரோபதேசமாக எடுத்து எழுதியிருக்கிறார் நடேச சாஸ்திரியார். மனைவி இவ்வளவு வசைபாடியும் பதிலுக்கு ஒரு வாக்கியமாகக் கூட இல்லாமல் இரண்டொரு வார்த்தைகளில் முடித்துக்கொண்டு அத்தியாயத்தின் கடைசி வரிகளில் கண்யர்கிறான். ஒன்றும் அறியாத மனைவிமார்கள் என்று இப்பூவுலகில் யாரேனும் இருந்தால் அவர்கள் திட்டுவதற்கு கோனார் நோட்ஸ் போல இப்புத்தகம் பயன்படுவது சர்வநிச்சயம். அதே ரீதியில் பாவப்பட்ட கணவனார்களுக்கும் வாங்கும் திட்டுக்களின் சேதாரத்தைக் குறைப்பதற்கான உபாயங்களைச் சொல்லிக்கொடுப்பதால் உபயோகமாயிருக்கிறது. இதைப் படிக்கும்போது சில சமயங்களில் அடக்கமாட்டாமல் குபீர்ச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தால் நீங்களும் ஒரு ராம பிரஸாத்தே!

கதைக் கணவனாக இருந்தாலும் ராமபிரஸாத் என்கிற வாயில்லாப் பூச்சி தனியொரு ஆணாய் வாங்கிக்கட்டிக்கொண்ட மூட்டை மூட்டையான வசவுகளுக்காகவும் சமுத்திரமளவு பொறுமைக்காகவும் மெரினா பீச்சில் அவனுக்கொரு சிலை வைக்கலாம் என்ற எண்ணம் எழாமல் கால்கட்டு போட்டுக்கொண்ட எந்த ஒரு ஆம்பளையாலும் இப்புத்தகத்தை மூடி வைக்க முடியாது.

மணமாகாத நண்பர்கள் யாராவது கலியாணம் செய்துகொண்டால் அவர்களின் நலம்விரும்பியாக இப்புத்தகத்தை பரிசளிக்க சித்தமாயிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பட்டியலில் கட்டை பிரம்மச்சாரியாக இருப்பவர்களுக்கு அதிசீக்கிரமே விவாஹ ப்ராப்திரஸ்து!!

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கும் கோனார் நோட்ஸ் தேவை தான்... முடிவில் நல்லெண்ணம்... ஹிஹி...

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்பதிவு அழைப்பு :

http://ananyathinks.blogspot.in/2013/07/part-2.html

தொடர வாழ்த்துக்கள்...

அப்பாதுரை said...

புதுசா தொல்பொருள் ஆராய்ச்சி எதுனா தொடங்கியிருக்கீங்களா?

பொன் மாலை பொழுது said...

எப்போது படித்தது,
// பெரியவன் அனுபவப்பட்டவன் சொன்னா கேட்கணும்.போன பிறவியில் நமக்கு யார் பரம வைரியாக இருந்தார்களோ அவர்களேதான் இந்த பிறவியில் பெண்டாட்டியாக வாய்த்து ,பழைய வன்மத்தை தீர்த்துக்கொள்வார்கள். கல்யாணம் மட்டும் பண்ணிக்க அவசரப்படாதே.// என தன்னிடம் ஆலோசனை கேட்க வந்த வாலிபரிடம் ஒரு சாஸ்திரிகள் சொல்லுவார்.

'பரிவை' சே.குமார் said...

என்னுடைய நண்பர்கள் பட்டியலில் கட்டை பிரம்மச்சாரியாக இருப்பவர்களுக்கு அதிசீக்கிரமே விவாஹ ப்ராப்திரஸ்து!!

---------


அது சரி....

இது எண்ண நல்லெண்ணப் பகிர்வா????

மாதேவி said...

படிக்க பின்பு வருகின்றேன்.

மாதேவி said...

கணினி அனுபவம் தொடர்பதிவுக்கு உங்களையும் அழைத்துள்ளேன்.

உங்கள் சுவையான அனுபவத்தை படிக்க ஆவலாக இருக்கின்றோம்.

முடிந்தபோது தாருங்கள் மகிழ்ச்சியடைவோம்.
நன்றி.
http://ramyeam.blogspot.com/2013/07

வெங்கட் நாகராஜ் said...

இந்தப் புஸ்தகம் எங்கே கிடைக்கும்.... :)

நானும் கல்யாணம் ஆகப்போற நண்பருக்கு பரிசளிக்கத் தான் கேட்கிறேன்! :)

R.SOLAIYAPPAN said...

from nagaram

good experience .

மாதேவி said...

செமையான புத்தகம்தான்.:)))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails