Thursday, May 6, 2010

ப்ளாக் உலக மக்களுக்கு ஒரு நற்செய்தி


இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. அரை செஞ்சுரி அடித்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு விளையாட்டாக இந்த தீ.வி.பி ஆரம்பிக்கப்பட்டது. என்னுடைய அறுவை தாங்க முடியாமல் நண்பர் ரவியின் தூண்டுதலால் எழுத ஆரம்பித்த இந்த ப்ளாக் இன்று ஐம்பதை தொட்டிருக்கிறது. பால்ய காலங்களில் கிரிக்கெட் விளையாடும் போது ஐம்பது எடுத்தால் அன்று இரவு முழுவதும் உட்கார்ந்து எல்லோரையும் சொறி சொறி என்று சொறிவது போல இப்போது நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. இவ்வளவு நேரம் செய்தது அதுதான் என்று நீங்கள் சொல்வது புரிகிறது எனக்கு. சரி விஷயத்திற்கு வருகிறேன். இந்த ஐம்பதாவது பதிவை பாராட்டி திரி லோக சக்ரவர்த்தி இம்சை அரசன் 23-ம் புலிகேசி அறிவித்திருக்கும் சில பரிசில்களை வெல்வதற்கு கீழே அவருடைய அரசாணையை பதிப்பித்திருக்கிறேன். வாசியுங்கள்.

இம்சைபுரி
6/5/2010

ப்ளாக் உலக மக்களுக்கு ஒரு நற்செய்தி. இதுவரை நேருக்குநேர் எல்லோரையும் பேசியே இம்சித்து வந்த ஆர்.வி.எஸ் என்னும் இந்த அன்பர் ஒரு நண்பரின் தூண்டுதலால் வலை உலகத்தில் நுழைந்து அவரது  வீடு கடந்து, அலுவலகம் கடந்து, ஏரியா கடந்து, ஊர் கடந்து, மாநிலம் கடந்து, தேசம் கடந்து ஒரு தீவிரவாத செயலாக எல்லோரையும் எழுதியே துன்புறத்த ஆரம்பித்திருக்கிறார். ஆர்வக் கோளாறினால் ஐம்பது முறை இந்த செயலை செய்து மகிழ்ந்திருக்கிறார். நமது தேசத்தின் தலை சிறந்த பத்திரிக்கையாளரான ஒண்டிப் புலிக்கு அவர் அளித்த சிறப்பு பிரத்யேக பேட்டியில், நிற்கும் போதும், நடக்கும் போதும், மற்றவர் வாய் பார்க்கும் போதும், காலை நடையின் போதும், கடன்களை கழிக்கும் போதும், மூச்சு விடும் போதும், ப்ளாக் ப்ளாக் என்ற ஒரே சிந்தனையோடு ஒரு வித 'வெறிச்' செயலாக இதில் ஈடுபட்டதாகவும், பலபேர் இதை படித்து துன்புறுகையில் ஒரு விதமான உளமார்ந்த மகிழ்ச்சி தனக்கு ஏற்ப்பட்டதாகவும் தெரிவித்தார். அவரின் இந்நற்ச்செயலை பாராட்டி இந்த கீழ் கண்ட நிகழ்ச்சிகளையும் /திட்டங்களையும்/ பரிசில்களையும் அறிவித்து ஆணையிடுகிறேன்.

1: ஆர்.வி.எஸ்ஸை பாராட்டும் விதமாக எல்லா ஊரிலும் பால் காவடி மற்றும் பன்னீர் காவடி போன்றவற்றை எடுத்து அவரின் இந்த மனித குல மேம்பாட்டு சேவை தொடர பூரண ஆயுளுக்கு முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

2: எல்லா கள்ளுக் கடைகளிலும் ஐம்பது சத விலைக் கழிவுடன் சாராயத்துடன், 'அக்கா மாலா' மற்றும் 'கப்சி' போன்ற பானங்கள் இலவசமாக வழங்கப்படும்.

3: ஐம்பதில் ஆசை வரும் அனைவர்க்கும் அவரவர்கள் விருப்பத்திற்க்கேற்ப அந்த ஆசைகளை ஊர்ப் பஞ்சாயத்து தலைவர்கள் தீர்த்து வைப்பார்கள். அதிக எண்ணிக்கையில் இதை செயல்படுத்தி முடிக்கும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு "மாமா" பஞ்சாயத்து தலைவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். (மா மா என்றால் பெரிய பெரிய என்று அறியுமாறு அரசவைப் புலவர் பானபத்ர ஓணாண்டி தெரிவித்துள்ளார்)

4: ஆணிலும் பெண்ணிலும் ஐம்பது சதவீதமாக இருக்கும் அனைவருக்கும் மாதம் தலா ஐம்பது பொற்காசுகள் பரிசாக பெறுவார்கள். கஜானா காலியானால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

5: ஊருக்கு வெளியே எச்சரிக்கை கொடியுடன் தீ.வி.பியில் இருக்கும் சிறுகதைகளை நாடகமாக நடித்துக் காட்டி கலைச் சேவை புரிய அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். நடிகர், நடிகைகளின் கலை விழாக்களுக்கு அவருக்கு நேரமில்லாததால் இந்த ஏற்பாடு என்று மங்குனி மந்திரி தெரிவித்தார்.

6: சிறைக்காவலில் இருக்கும் ஆயுள் கைதிகள், தீ.வி.பி ப்ளாக்-ஐ படித்து அதில் உள்ள சில நுணுக்கமான பதிவுகளை ( உதா: நம்பர் ப்ளாக்) படித்து புரிந்து கொண்டால் அவர்களுக்கு விடுதலை வழங்குமாறு உத்தரவிடுகிறேன்.

7: இருபத்து ஐந்து வயதே நிரம்பியிருக்கும் ஆர்.வி.எஸ் என்ற இளைஞன்,  ஐம்பதை அடையும் போது அவருக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள் உதவித் தொகையாக அவரது இந்த கலைச் சேவையை பாராட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன். 

நன்றி.

ஒப்பம் ( 23-ம் புலிகேசி)

இதைப் படிக்கும் வாசகர்களும் இதே போல சிலபல பரிசுகளை அறிவித்து ஆர்.வி.எஸ்ஸை பாராட்டலாம், பின்னூட்டமாக...

கும்பமேளா = 'கும்பல்'மேளா

naga sadhu


என் இடப் பக்கம் லத்தியை சுழற்றியபடி ஒரு ஆக்ரோஷமான போலீஸ்காரர். 'மர்மஸ்தானம்' இங்குமங்கும் ஆடியபடி, ஒரு முழு நிர்வாண சாது, என் வலப்பக்கத்தில். இந்த அண்டசராசரத்தில்  எங்குமே காணக்கிடைக்காத விஷயம் இது. ஆனால் நான் இக்கணத்தில் நின்று கொண்டிருப்பது கும்பமேளாவின் ஷஹி ஸ்னான்  தினத்தில், ஹரித்வாரில். இங்கே ஆடையற்ற நிர்வாணம் ஒன்றும் 'அ'சாதாரணம் அல்ல.

ஹிந்துக்களின் முக்கியமான புனித நாளை எதிர்நோக்கி 1330 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்த நானும் எனது நண்பரும் பார்த்ததெல்லாம் மதம் விற்கும் வியாபாரிகளையும், புனித யாத்ரிகர்களையும், சாதுக்களையும், சன்யாசிகளையும், கூட்டத்தையும், ரகளை செய்யும் போலீசையும், பிச்சைக்காரர்களையும் தான். நண்பர் (நண்பி) தன் ஆன்மீக தாகத்தை தீர்துக் கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து வந்த தங்க நிற பளபளப்பான கேசம் கொண்ட பெண்மணி (Blonde). ஒரு பெரிய நகரத்திலிருந்து ஒரு புதிய விசித்திர தேசம் வந்ததுபோல நான். லட்சோபலட்சம் மக்கள் தங்கள் பாபங்களை ஒரு தலை முழுக்கின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்பி குழுமியிருந்த அந்த பிரதேசத்தில் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்ல் நாங்கள் இருவரும் ஒரு வேற்றுகிரகவாசி போல நின்றிருந்தோம். 

நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிருந்தும் மக்கள் திரளாக வந்திருந்தார்கள். ஆண்கள் குர்த்தாவிலும், வேஷ்டியிலும்; பெண்கள் கண்ணைத் தவிர முகத்தையும் தலையையும் மறைக்கும் புடவையிலும் குவிந்திருந்தார்கள். இந்தப் புனித நிகழ்விற்க்காக பலர் நீண்ட நெடுநாட்களாகவும், சிலர் தங்கள் ஆயுள் முழுவதும் காத்திருந்து இப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். "எங்கள் பாவங்களை கழுவ இதுவே கடைசி வாய்ப்பு. அடுத்த முறை இது நிகழும் பொது நாங்கள் உயிரோடிருப்போமோ இல்லையோ" என்றார் ஒரு வயதான ராஜஸ்தானி பெரியவர்.

டில்லியிலிருந்து வரும் பேருந்துகள் ஹரித்வாருக்கு ஆறு கிலோமீட்டர் வெளியேவே எல்லோரையும் இறக்கி விட்டு திரும்பிச் சென்றது. அதி முக்கியஸ்தர்கள் மட்டுமே அவர்கள் வாகனங்களில் ஊரின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எங்களுடைய தங்கும் விடுதிக்கு நாங்கள் ஆறு கி.மீ. நடந்தே சென்றோம். 

சென்றடைந்த அந்த மாலைப்  பொழுதில் நாங்கள் செல்லும் வழிகளை அடைத்து நின்ற கூடாரங்களையும்,  மத குருமார்களின் பதாகைகளையும், போஸ்டர்களையும் மட்டுமே காண நேர்ந்தது. என்னால் பாபா ராம்தேவையும், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரையும் மட்டுமே அடையாளம் காண முடிந்தது. இந்தியாவின் மிகப்பெரிய மனித சங்கமத்தை அனைவரும் தங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டது புரிந்தது. ஒரு ஜப்பானிய சந்நியாசி மக்களின் அனைத்து பாவங்களையும் களைந்து மறையச் செய்வேன் என்றும், இன்னும் ஏதோ ஒரு xxxபாபா (ஊர்பேர் தெரியாத பாபா) ஊட்டச்சத்து இல்லாது சூம்பிப்போன ஒரு ஆப்ரிக்க குழந்தைக்கு எதையோ ஊட்டிக்கொண்டிருந்ததை ஒரு பகுதியுலும், மற்றொரு பகுதியில் ஆதிவாசிகளிடம் உரை நிகழ்த்துவது போலவும் பதாகைகள் வழி நெடுகிலும் வைக்கப்பட்டு இருந்தன. ஆப்பரிக்க குழந்தைக்கு இவர் ஏன் ஊட்டுகிறார்?. இந்தியாவில் ஏழைகளே இல்லையா என்ன? எல்லா பாபாக்களும் டி.வியில் பிடியில் மாட்டும் போது இவர் சொல்வதை யார் கவனிக்கிறார்கள்? இது போன்ற அடிப்படை கேள்விகள் என் அடிமனதில் எழுந்துகொண்டே இருந்தது.

chilum

கூடாரங்களும் கொட்டகைகளும் ஒரேயடியாக சோர்வடைந்து  சலிப்புடன் தென்பட்டது. மக்கள் தங்கள் கூடாரங்களில் கட்டையை நீட்டி படுத்திருந்தார்கள். சில சாதுக்கள் குழுமியிருந்த மக்களிடம் தங்கள் சொல்வளத்தை காட்டிகொண்டிருந்தார்கள், மற்றும் சில பேர் தங்கள் 'சிலும்' பைப்புகளை துடைத்துக்கொண்டோ அல்லது வாயில் வைத்து ஆழ இழுத்து புகை பிடித்துக்கொண்டோ இருந்தனர். அடுத்த நாளுக்காக இரண்டு மணிநேர ஊர்சுற்றலுக்கு பிறகு எங்கள் விடுதிக்கு திரும்பினோம். திரும்பும் வழியில் நகரத்தின் பின்புற நுழைவாயில் வழியாக நகர மையத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு பஸ் வருவதைக் கண்டோம். வரும் பேருந்துகளில் எங்கு பார்த்தாலும் 'தொங்கும் மனிதர்கள்', கூரைகளில், ஜன்னல்களில், முன்னால், பின்னால், படிக்கட்டுகளில். இவர்கள் எப்படி இவ்வளவு மணிநேரம் பயணித்தார்கள்?

அதிகாலை புனிதக் குளியலுக்கு சீக்கிரமாக எழுவது என்று தீர்மானித்திருந்தோம். ஆனால் பயணக் களைப்பில் ( ஆறு மணி நேர பஸ் பயணம், டிராபிக் ஜாம் மற்றும் மாற்றுப் பாதைகளால் பதினான்கு மணிநேரம் பிடித்தது) தூங்கியதில், கூட்டத்தை நெருங்கும்போது மணி ஒன்பதை தாண்டியிருந்தது. அவசரம் அவசரமாக படித்துறைகளை நெருங்க நாங்கள் முற்ப்பட்டபோது புகழ்பெற்ற நாக சாதுக்களின் தரிசனம் கிடைத்தது. நாக சாதுக்கள் படித்துறைகளை கடக்கும் வரை மனித சாதுக்களாகிய நாம் காத்திருக்க வேண்டியதாயிற்று. உடம்பு முழுக்க சாம்பல் பூசி, சிவ மந்திரங்களை உரக்க சொல்லி கூட்டமாக அவர்கள் சென்றது ஒரு அச்சுறுத்தும் காட்சியாகவே இருந்தது. போலீஸ்காரர்  கூட சற்று ஒதுங்கியே தான் நின்றிருந்தார். முக்கால்வாசி பேருக்கு பெரிய தொந்தி இருந்தது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் இவர்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய 'பானை' தொந்தி?

naga sadhu

ஒரு கிராமவாசி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூட்டத்தை கிழித்து வெளியே சென்று "பீடி" என்று கத்தினார். அவரை சுற்றிய அந்த நாகாஸ் கூட்டம் புதியதாக பிரித்த அந்த பீடி பாக்கெட்டை சில நொடிகளில் காலி செய்தது. இன்னொரு பாக்கெட்டை அவர் பிரிக்க முயலும்போது அங்கே நின்றிருந்த போலீஸ்காரர் பிடித்து கூட்டத்திற்கு பின் தள்ளி பின்னால் போகச் சொன்னார். ஒரு சில நாகார்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.

குளியல் படித்துறைகளை அடைவதற்கு சாமியார் கூட்டங்களை பின்பற்றுவதற்கு முயற்ச்சித்தோம். எங்கு பார்த்தாலும் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் எங்களை வரிசையில் வரும்படி செய்தன.  நாக சாதுக்களை அடுத்து, 'போர்' சாமியார்கள் கூட்டம் ஒன்று வந்தது. கத்தி, வாள், ஈட்டி, அருவாள், சூலம் போன்றவற்றுடன். பதின்ம வயது கூட அரும்பாத ஒரு பையன் தனது மூன்றடி நீள வாளை சண்டையிடுவது போல காற்றில் இங்கும் அங்கும் சுழற்றியும், நீட்டியும், ஆட்டியபடியும் வந்து கொண்டிருந்தான். சில சமயங்களில் தரை தொடும் அவன் வாளிலிருந்து தீப்பொறி பறந்தது.
chimta


நாங்கள் அந்த சாமியார் கூட்டத்தை தொடர்ந்து செல்ல முற்படும் போது காவலர்களால் தடுக்கப்பட்டோம். "நீங்கள் அவர்கள் பின்னால் செல்லக்கூடாது" என்று தடுத்த காவலரை "ஏன்?" என்று கேட்டதற்கு,  "இந்த சாமியார்கள் வெளி ஆட்கள் அவர்களை பின் தொடர்வதை விரும்ப மாட்டார்கள். அப்படி எவரேனும் தொடர்ந்தால் கையில் இருக்கும் சிம்தாவினால்(மேலே இருக்கும் படத்தில் இருப்பது)  குத்தி விடுவார்கள்" என்றார். எனக்கு அந்த மூன்றடி கத்தி சின்னப் பையன் நினைவு வர தலை அசைத்து அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டேன். தாங்கள் முதன் முதலில் குளிப்பதற்கு ஒரு பெரிய போரையே நிகழ்த்திய சந்நியாசி கூட்டங்கள் பின்பு சில விசேஷமான இடங்களில் குளிப்பதற்காக ஆற்றில் முன்னேறி சென்றது.

kumbh mela
இப்போது ஒன்றும் செய்வதறியாது மாட்டிக்கொண்டோம். நிச்சயமாக பின்னால் செல்ல முடியாது. ஒரு மனிதக் கடல் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் தள்ளிக்கொண்டிருந்தது. காவலர்கள் எங்களை பின்னால் தள்ளிக் கொண்டிருந்தனர். லட்சம் பேருக்கு பத்து பேர் வீதமாக நின்றிருந்த அந்த போலீஸ்காரர்கள் தள்ளியும் பின் செல்லாத கூட்டத்தை பயமுறத்த சுழற்றிய லத்தி எங்கள் மேலும் பட்டது.

ஒரு முழுக்கு போடலாம் என்று சென்ற நாங்கள் எங்கள் முடிவை இப்போது மாற்றிக்கொண்டம். அத்தனை பேர் விழுந்து எழுந்த அந்த இடத்தில் தற்சமயம் குளிப்பது உசிதம் அல்ல என்று எண்ணினோம். ஏதேனும் ஆன்மிக அனுபம் கிடைத்ததா என்று வழிநெடுக யோசித்தவண்ணம் திரும்பிவிட்டோம். ஆன்மிகவாதிகளும் சாமியார்களும் ஏதோ கண்டெடுத்திருப்பார்கள், மும்பையில் வாழ்வதால் எங்களது ஆன்மாக்கள் செத்துவிட்டது போலும்.

எனது நண்பி காண்பித்த திக்கில் ஒரு இளம் பெண் தலையில் இருந்து தண்ணீர் சொட்ட சொட்ட, முற்றிலும் நனைந்த உடையில், அப்போதுதான் முங்கி எழுந்திருந்து தியானம் செய்துகொண்டிருந்தார். எனக்கென்னமோ இந்த இளம் பெண் ஒருவர் தான் அங்கே பிரார்த்தனை செய்பவர் போல் இருந்தது. மற்றவரெல்லாம் ஆற்றில் விழுந்து எழுந்தபின் புனித யாத்திரையையே மறந்துவிட்டிருந்தார்கள். துணிகளை தோய்ப்பதும், வம்பு பேசுவதும், ஓடி விளையாடும் பிள்ளைகளை துரத்தி பிடிப்பதும் அந்த இடமே ஒன்றும் புனிதமாக தோன்றவில்லை எனக்கு.

நீங்கள் நினைப்பது போல் நாங்கள் ஒன்றும் அவர்களை விட மேன்மையானவர்கள் இல்லைதான், அவர்களாவது புனித நீராடினார்கள்.

ஷஹி ஸ்னான் முடிந்த பதினான்கு மணிநேரம் கழித்து அடுத்த நாள் காலை எழுந்தவுடன், அதிவேகமாக செல்லும் அந்த நதி அவ்வளவு பேரின் அழுக்குகளையும், மாசுகளையும் இழுத்துச் சென்றிருக்கும் என்று தீர்மானம் செய்து, என் நண்பியிடம் "ஒரு முழுக்கு போட நீ தயாரா?" என்று கேட்டேன். அதை ஆமோதித்து என்னை ஆச்சர்யமடைய செய்தாள்.

இன்று நாங்கள் படித்துறைக்கு மிகச் சுலபமாக வந்தடைந்தோம். அந்த மிகக் குளிந்த நீரில் நான் குதித்து மூழ்கினேன். நீரின் அடிஆழம் செல்ல செல்ல என்னுடைய சிறுவயது பிரார்த்தனைகள் என் தலையை வெள்ளமாக நிரப்பியது. இது போன்று ஒரு புத்துணர்ச்சியை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. என்னை அடியோடு பற்றி அவளுடன் இழுத்தாள் கங்கை மாதா. ஆற்றில் குறுக்கே இருந்த அந்த இரும்பு வளையங்களை இறுகப் பற்றிக்கொண்டேன்.

தங்கியிருந்த விடுதிக்கு திரும்புகையில் எனது பெற்றோருக்கு நான் கங்கா ஸ்நானம் செய்தது பற்றி குறுஞ்செய்தி அனுப்பினேன். "நீ உன்னுடைய பாவங்களையெல்லாம் கழுவி விட்டாய். இன்றுமுதல் உன் வாழ்க்கையில் ஒரு புதுக் கணக்கை துவக்கு" என்று என் தந்தை பதில் செய்தி அனுப்பினார்.

என்னைப் பற்றி நன்றாக தெரிந்தவர் என் தந்தை.

பின்குறிப்பு: மேற்கண்ட இந்த கும்பமேளா யாத்திரைக் குறிப்பு சமீபத்தில் வெளிவந்த "ஃபோர்ப்ஸ் இந்தியா" பத்திரிக்கையில், அபிஷேக் ரகுநாத் என்பவர் எழுதியது. கட்டுரைத் தலைப்பு "Just Watching". மிக அருமையான பயணக் கட்டுரை. நாமே நேரில் கங்கைக்கரை அருகே இருப்பது போல் இருந்தது.என்னுடைய ஆங்கில அறிவிர்க்கேற்பவும், புரிதலுக்கேற்பவும்  இந்த தமிழாக்கத்தை செய்திருக்கிறேன்.

Wednesday, May 5, 2010

தலைகீழ் தலைப்பு

நம்மூர்ல அழைப்பிதழ் பல டிசைன்ல அடிப்பாங்க.  டாக்டர்கள் கல்யாணம்னா முன்னாடி பென்சில் ஸ்கிரிப்ட்ல  பிள்ளையார் போட்டு கழுத்துல ஸ்தெதஸ் மாட்டி விடறது,  சுபமுஹுர்த்த பத்திரிக்கையை திறந்தவுடன் சுப்ரபாதம் பாடறது, காதணி விழாவிற்கு ஒற்றை வளையத்தை பத்திரிக்கை ஓரத்தில் கோர்த்து அனுப்புவது, அப்புறம் நம்ம பார்த்திபன் பட பூஜைக்கு கூப்பிடற மாதிரி வித்தியாசமா தாலி கொடுத்து கூப்பிடறது (படம்: பொண்டாட்டி தேவை) அப்படி இப்படின்னு ஒரு புதுமை பண்ண எல்லோரும் முயற்ச்சிப்பாங்க. கீழே இருக்குற படத்தில Typography பயன்படுத்தி நேர படிச்சாலும் சிரசாசனத்தில நின்னு படிச்சாலும் தலைப்பு தலைகீழா மாறாம வர்ற மாதிரி வடிவமைச்சிருக்காங்க. இது மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் ஒரே அர்த்தம் தரும் முயற்சி. 

thalaikeezh
 (மேலே படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்) 

என்னுடைய பால்ய கால நண்பன் ஒருவன் சினிமாவில் கிராஸ் ஆங்கிளில் ஏதாவது காண்பித்தால் தலையை அதே டிகிரி அளவிற்கு சாய்த்துப் பக்கத்தில் இருப்பவரை பார்க்கவிடாமல் பார்ப்பான். அந்த அசௌகரியம் இந்த மேற்கண்ட படத்தில் இருக்காது.ஆங்கிலத்தில் Palindrome என்று ஒன்று உண்டு. இடமிருந்து வலம், வலமிருந்து இடம் படித்தாலும் ஒரே பொருள் தரும் வார்த்தைகளை பாலின்ரோம் என்பார்கள். உதாரணம் MADAM. தமிழில் அதுபோல் வரும் வார்த்தை "மாமா". மேலும் இதுபோல் தமிழில் உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டமாக தெரிவிக்கலாம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails