Thursday, May 6, 2010

கும்பமேளா = 'கும்பல்'மேளா

naga sadhu


என் இடப் பக்கம் லத்தியை சுழற்றியபடி ஒரு ஆக்ரோஷமான போலீஸ்காரர். 'மர்மஸ்தானம்' இங்குமங்கும் ஆடியபடி, ஒரு முழு நிர்வாண சாது, என் வலப்பக்கத்தில். இந்த அண்டசராசரத்தில்  எங்குமே காணக்கிடைக்காத விஷயம் இது. ஆனால் நான் இக்கணத்தில் நின்று கொண்டிருப்பது கும்பமேளாவின் ஷஹி ஸ்னான்  தினத்தில், ஹரித்வாரில். இங்கே ஆடையற்ற நிர்வாணம் ஒன்றும் 'அ'சாதாரணம் அல்ல.

ஹிந்துக்களின் முக்கியமான புனித நாளை எதிர்நோக்கி 1330 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்த நானும் எனது நண்பரும் பார்த்ததெல்லாம் மதம் விற்கும் வியாபாரிகளையும், புனித யாத்ரிகர்களையும், சாதுக்களையும், சன்யாசிகளையும், கூட்டத்தையும், ரகளை செய்யும் போலீசையும், பிச்சைக்காரர்களையும் தான். நண்பர் (நண்பி) தன் ஆன்மீக தாகத்தை தீர்துக் கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து வந்த தங்க நிற பளபளப்பான கேசம் கொண்ட பெண்மணி (Blonde). ஒரு பெரிய நகரத்திலிருந்து ஒரு புதிய விசித்திர தேசம் வந்ததுபோல நான். லட்சோபலட்சம் மக்கள் தங்கள் பாபங்களை ஒரு தலை முழுக்கின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்பி குழுமியிருந்த அந்த பிரதேசத்தில் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்ல் நாங்கள் இருவரும் ஒரு வேற்றுகிரகவாசி போல நின்றிருந்தோம். 

நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிருந்தும் மக்கள் திரளாக வந்திருந்தார்கள். ஆண்கள் குர்த்தாவிலும், வேஷ்டியிலும்; பெண்கள் கண்ணைத் தவிர முகத்தையும் தலையையும் மறைக்கும் புடவையிலும் குவிந்திருந்தார்கள். இந்தப் புனித நிகழ்விற்க்காக பலர் நீண்ட நெடுநாட்களாகவும், சிலர் தங்கள் ஆயுள் முழுவதும் காத்திருந்து இப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். "எங்கள் பாவங்களை கழுவ இதுவே கடைசி வாய்ப்பு. அடுத்த முறை இது நிகழும் பொது நாங்கள் உயிரோடிருப்போமோ இல்லையோ" என்றார் ஒரு வயதான ராஜஸ்தானி பெரியவர்.

டில்லியிலிருந்து வரும் பேருந்துகள் ஹரித்வாருக்கு ஆறு கிலோமீட்டர் வெளியேவே எல்லோரையும் இறக்கி விட்டு திரும்பிச் சென்றது. அதி முக்கியஸ்தர்கள் மட்டுமே அவர்கள் வாகனங்களில் ஊரின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எங்களுடைய தங்கும் விடுதிக்கு நாங்கள் ஆறு கி.மீ. நடந்தே சென்றோம். 

சென்றடைந்த அந்த மாலைப்  பொழுதில் நாங்கள் செல்லும் வழிகளை அடைத்து நின்ற கூடாரங்களையும்,  மத குருமார்களின் பதாகைகளையும், போஸ்டர்களையும் மட்டுமே காண நேர்ந்தது. என்னால் பாபா ராம்தேவையும், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரையும் மட்டுமே அடையாளம் காண முடிந்தது. இந்தியாவின் மிகப்பெரிய மனித சங்கமத்தை அனைவரும் தங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டது புரிந்தது. ஒரு ஜப்பானிய சந்நியாசி மக்களின் அனைத்து பாவங்களையும் களைந்து மறையச் செய்வேன் என்றும், இன்னும் ஏதோ ஒரு xxxபாபா (ஊர்பேர் தெரியாத பாபா) ஊட்டச்சத்து இல்லாது சூம்பிப்போன ஒரு ஆப்ரிக்க குழந்தைக்கு எதையோ ஊட்டிக்கொண்டிருந்ததை ஒரு பகுதியுலும், மற்றொரு பகுதியில் ஆதிவாசிகளிடம் உரை நிகழ்த்துவது போலவும் பதாகைகள் வழி நெடுகிலும் வைக்கப்பட்டு இருந்தன. ஆப்பரிக்க குழந்தைக்கு இவர் ஏன் ஊட்டுகிறார்?. இந்தியாவில் ஏழைகளே இல்லையா என்ன? எல்லா பாபாக்களும் டி.வியில் பிடியில் மாட்டும் போது இவர் சொல்வதை யார் கவனிக்கிறார்கள்? இது போன்ற அடிப்படை கேள்விகள் என் அடிமனதில் எழுந்துகொண்டே இருந்தது.

chilum

கூடாரங்களும் கொட்டகைகளும் ஒரேயடியாக சோர்வடைந்து  சலிப்புடன் தென்பட்டது. மக்கள் தங்கள் கூடாரங்களில் கட்டையை நீட்டி படுத்திருந்தார்கள். சில சாதுக்கள் குழுமியிருந்த மக்களிடம் தங்கள் சொல்வளத்தை காட்டிகொண்டிருந்தார்கள், மற்றும் சில பேர் தங்கள் 'சிலும்' பைப்புகளை துடைத்துக்கொண்டோ அல்லது வாயில் வைத்து ஆழ இழுத்து புகை பிடித்துக்கொண்டோ இருந்தனர். அடுத்த நாளுக்காக இரண்டு மணிநேர ஊர்சுற்றலுக்கு பிறகு எங்கள் விடுதிக்கு திரும்பினோம். திரும்பும் வழியில் நகரத்தின் பின்புற நுழைவாயில் வழியாக நகர மையத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு பஸ் வருவதைக் கண்டோம். வரும் பேருந்துகளில் எங்கு பார்த்தாலும் 'தொங்கும் மனிதர்கள்', கூரைகளில், ஜன்னல்களில், முன்னால், பின்னால், படிக்கட்டுகளில். இவர்கள் எப்படி இவ்வளவு மணிநேரம் பயணித்தார்கள்?

அதிகாலை புனிதக் குளியலுக்கு சீக்கிரமாக எழுவது என்று தீர்மானித்திருந்தோம். ஆனால் பயணக் களைப்பில் ( ஆறு மணி நேர பஸ் பயணம், டிராபிக் ஜாம் மற்றும் மாற்றுப் பாதைகளால் பதினான்கு மணிநேரம் பிடித்தது) தூங்கியதில், கூட்டத்தை நெருங்கும்போது மணி ஒன்பதை தாண்டியிருந்தது. அவசரம் அவசரமாக படித்துறைகளை நெருங்க நாங்கள் முற்ப்பட்டபோது புகழ்பெற்ற நாக சாதுக்களின் தரிசனம் கிடைத்தது. நாக சாதுக்கள் படித்துறைகளை கடக்கும் வரை மனித சாதுக்களாகிய நாம் காத்திருக்க வேண்டியதாயிற்று. உடம்பு முழுக்க சாம்பல் பூசி, சிவ மந்திரங்களை உரக்க சொல்லி கூட்டமாக அவர்கள் சென்றது ஒரு அச்சுறுத்தும் காட்சியாகவே இருந்தது. போலீஸ்காரர்  கூட சற்று ஒதுங்கியே தான் நின்றிருந்தார். முக்கால்வாசி பேருக்கு பெரிய தொந்தி இருந்தது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் இவர்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய 'பானை' தொந்தி?

naga sadhu

ஒரு கிராமவாசி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூட்டத்தை கிழித்து வெளியே சென்று "பீடி" என்று கத்தினார். அவரை சுற்றிய அந்த நாகாஸ் கூட்டம் புதியதாக பிரித்த அந்த பீடி பாக்கெட்டை சில நொடிகளில் காலி செய்தது. இன்னொரு பாக்கெட்டை அவர் பிரிக்க முயலும்போது அங்கே நின்றிருந்த போலீஸ்காரர் பிடித்து கூட்டத்திற்கு பின் தள்ளி பின்னால் போகச் சொன்னார். ஒரு சில நாகார்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.

குளியல் படித்துறைகளை அடைவதற்கு சாமியார் கூட்டங்களை பின்பற்றுவதற்கு முயற்ச்சித்தோம். எங்கு பார்த்தாலும் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் எங்களை வரிசையில் வரும்படி செய்தன.  நாக சாதுக்களை அடுத்து, 'போர்' சாமியார்கள் கூட்டம் ஒன்று வந்தது. கத்தி, வாள், ஈட்டி, அருவாள், சூலம் போன்றவற்றுடன். பதின்ம வயது கூட அரும்பாத ஒரு பையன் தனது மூன்றடி நீள வாளை சண்டையிடுவது போல காற்றில் இங்கும் அங்கும் சுழற்றியும், நீட்டியும், ஆட்டியபடியும் வந்து கொண்டிருந்தான். சில சமயங்களில் தரை தொடும் அவன் வாளிலிருந்து தீப்பொறி பறந்தது.
chimta


நாங்கள் அந்த சாமியார் கூட்டத்தை தொடர்ந்து செல்ல முற்படும் போது காவலர்களால் தடுக்கப்பட்டோம். "நீங்கள் அவர்கள் பின்னால் செல்லக்கூடாது" என்று தடுத்த காவலரை "ஏன்?" என்று கேட்டதற்கு,  "இந்த சாமியார்கள் வெளி ஆட்கள் அவர்களை பின் தொடர்வதை விரும்ப மாட்டார்கள். அப்படி எவரேனும் தொடர்ந்தால் கையில் இருக்கும் சிம்தாவினால்(மேலே இருக்கும் படத்தில் இருப்பது)  குத்தி விடுவார்கள்" என்றார். எனக்கு அந்த மூன்றடி கத்தி சின்னப் பையன் நினைவு வர தலை அசைத்து அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டேன். தாங்கள் முதன் முதலில் குளிப்பதற்கு ஒரு பெரிய போரையே நிகழ்த்திய சந்நியாசி கூட்டங்கள் பின்பு சில விசேஷமான இடங்களில் குளிப்பதற்காக ஆற்றில் முன்னேறி சென்றது.

kumbh mela
இப்போது ஒன்றும் செய்வதறியாது மாட்டிக்கொண்டோம். நிச்சயமாக பின்னால் செல்ல முடியாது. ஒரு மனிதக் கடல் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் தள்ளிக்கொண்டிருந்தது. காவலர்கள் எங்களை பின்னால் தள்ளிக் கொண்டிருந்தனர். லட்சம் பேருக்கு பத்து பேர் வீதமாக நின்றிருந்த அந்த போலீஸ்காரர்கள் தள்ளியும் பின் செல்லாத கூட்டத்தை பயமுறத்த சுழற்றிய லத்தி எங்கள் மேலும் பட்டது.

ஒரு முழுக்கு போடலாம் என்று சென்ற நாங்கள் எங்கள் முடிவை இப்போது மாற்றிக்கொண்டம். அத்தனை பேர் விழுந்து எழுந்த அந்த இடத்தில் தற்சமயம் குளிப்பது உசிதம் அல்ல என்று எண்ணினோம். ஏதேனும் ஆன்மிக அனுபம் கிடைத்ததா என்று வழிநெடுக யோசித்தவண்ணம் திரும்பிவிட்டோம். ஆன்மிகவாதிகளும் சாமியார்களும் ஏதோ கண்டெடுத்திருப்பார்கள், மும்பையில் வாழ்வதால் எங்களது ஆன்மாக்கள் செத்துவிட்டது போலும்.

எனது நண்பி காண்பித்த திக்கில் ஒரு இளம் பெண் தலையில் இருந்து தண்ணீர் சொட்ட சொட்ட, முற்றிலும் நனைந்த உடையில், அப்போதுதான் முங்கி எழுந்திருந்து தியானம் செய்துகொண்டிருந்தார். எனக்கென்னமோ இந்த இளம் பெண் ஒருவர் தான் அங்கே பிரார்த்தனை செய்பவர் போல் இருந்தது. மற்றவரெல்லாம் ஆற்றில் விழுந்து எழுந்தபின் புனித யாத்திரையையே மறந்துவிட்டிருந்தார்கள். துணிகளை தோய்ப்பதும், வம்பு பேசுவதும், ஓடி விளையாடும் பிள்ளைகளை துரத்தி பிடிப்பதும் அந்த இடமே ஒன்றும் புனிதமாக தோன்றவில்லை எனக்கு.

நீங்கள் நினைப்பது போல் நாங்கள் ஒன்றும் அவர்களை விட மேன்மையானவர்கள் இல்லைதான், அவர்களாவது புனித நீராடினார்கள்.

ஷஹி ஸ்னான் முடிந்த பதினான்கு மணிநேரம் கழித்து அடுத்த நாள் காலை எழுந்தவுடன், அதிவேகமாக செல்லும் அந்த நதி அவ்வளவு பேரின் அழுக்குகளையும், மாசுகளையும் இழுத்துச் சென்றிருக்கும் என்று தீர்மானம் செய்து, என் நண்பியிடம் "ஒரு முழுக்கு போட நீ தயாரா?" என்று கேட்டேன். அதை ஆமோதித்து என்னை ஆச்சர்யமடைய செய்தாள்.

இன்று நாங்கள் படித்துறைக்கு மிகச் சுலபமாக வந்தடைந்தோம். அந்த மிகக் குளிந்த நீரில் நான் குதித்து மூழ்கினேன். நீரின் அடிஆழம் செல்ல செல்ல என்னுடைய சிறுவயது பிரார்த்தனைகள் என் தலையை வெள்ளமாக நிரப்பியது. இது போன்று ஒரு புத்துணர்ச்சியை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. என்னை அடியோடு பற்றி அவளுடன் இழுத்தாள் கங்கை மாதா. ஆற்றில் குறுக்கே இருந்த அந்த இரும்பு வளையங்களை இறுகப் பற்றிக்கொண்டேன்.

தங்கியிருந்த விடுதிக்கு திரும்புகையில் எனது பெற்றோருக்கு நான் கங்கா ஸ்நானம் செய்தது பற்றி குறுஞ்செய்தி அனுப்பினேன். "நீ உன்னுடைய பாவங்களையெல்லாம் கழுவி விட்டாய். இன்றுமுதல் உன் வாழ்க்கையில் ஒரு புதுக் கணக்கை துவக்கு" என்று என் தந்தை பதில் செய்தி அனுப்பினார்.

என்னைப் பற்றி நன்றாக தெரிந்தவர் என் தந்தை.

பின்குறிப்பு: மேற்கண்ட இந்த கும்பமேளா யாத்திரைக் குறிப்பு சமீபத்தில் வெளிவந்த "ஃபோர்ப்ஸ் இந்தியா" பத்திரிக்கையில், அபிஷேக் ரகுநாத் என்பவர் எழுதியது. கட்டுரைத் தலைப்பு "Just Watching". மிக அருமையான பயணக் கட்டுரை. நாமே நேரில் கங்கைக்கரை அருகே இருப்பது போல் இருந்தது.என்னுடைய ஆங்கில அறிவிர்க்கேற்பவும், புரிதலுக்கேற்பவும்  இந்த தமிழாக்கத்தை செய்திருக்கிறேன்.

5 comments:

அ.முத்து பிரகாஷ் said...

தங்கள் தமிழாக்கம் சிறப்பாக இருந்தது RVS...

எனக்கு பிடித்த சில அவதானிப்புகள்...

# இந்தியாவின் மிகப்பெரிய மனித சங்கமத்தை அனைவரும் தங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டது புரிந்தது

# முக்கால்வாசி பேருக்கு பெரிய தொந்தி இருந்தது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் இவர்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய 'பானை' தொந்தி?

உ.த. எழுத்தாளரை போலன்றி சமநிலையுடன் எழுதப்பட்ட நல்ல பதிவு ..

நன்றி RVS

Senthil, IIT Madras. said...

Please try to read Jeyamohan's blog abt kumbamela. Its totally different.

RVS said...

டியர் செந்தில்,
ஜெமோவின் கும்பமேளா படித்தேன். அபிஷேக் ரகுநாத் எழுதிய இந்த Travelogue கொஞ்சம் தத்ரூபமாக இருப்பதாக எனக்குப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் இது ஒரு மொழியாக்கம் மட்டுமே. வருகைக்கு நன்றி.

அன்புடன் ஆர்.வி.எஸ்

Pazhaselvaraaju said...

கும்பமேளா - அபிஷேக் ரகுநாத் எழுத அது ஆர் வீ எஸ் அவர்களுக்கு பிடிக்க ஆன்மிகம் பற்றிய ஒரு விழிப்பு நமக்கும் வருகிறது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொடர்ச்சி சற்று அப்படிதான் இருக்கும் . உயிர்பலிகூட இப்படிதான். நம் முன்னோர்கள் விட்டுசென்ற எச்சங்கள் நம்மை உயர்நிலை மானுடர்களாகவும் இதுபோல் சிலநிலைகலாகவும் வைத்திருக்கிறது.

RVS said...

ஆம் Pazhaselvaraaju ஐயா. சிரத்தை இன்றி செய்யும் எந்த சடங்குகளும் சம்ப்ரதாயங்களும் இதுபோன்று நீர்த்துப் போய்விடுவது வருத்தத்துக்குரியது தான்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails