Tuesday, July 6, 2010

கிரேன் டிரைவர்

இந்த படங்களை பார்த்தவுடன், நாலு தடி ஆட்கள் என் கனாக்களில் வந்து என்னை என்  கற்பனை குதிரையில் ஏற்றி வலுக்கட்டாயமாக உட்காரவைத்து கல்கியின் வந்தியத்தேவன் மாதிரி சவாரி செய்து ஒரு  விறுவிறு கதை எழுத சொன்னார்கள். இந்த படங்களை ஆர்வத்துடன் கிளிக்கிய http://catkid.livejournal.com க்கு இருகை கூப்பி  நெஞ்சார்ந்த ஒரு நன்றி கார்ட் டைட்டிலில் போட்டுவிட்டு ஆரம்பிப்போம். எல்லாத்துக்கும் நாலு பேர் தேவைப்படுகிறது. ஒ.கே ரெடி ஸ்டார்ட்... டேக்.. இந்தக் கதையை காக்க காக்க அன்புச்செல்வன் சொல்வது போல படிக்கவும்..

1ரொம்ப நாள் முன்னாடி நான் வேலைப்பார்த்த கம்பனி இது. முதலாளி சுத்த மோசமான ஆள். தன்னை சுத்தி இருக்குற யாரையும் துளிக்கூட நம்பமாட்டான். கட்டுன பொண்டாட்டி, பையன், பொண்ணு அப்படின்னு யாரையுமே. காலையில ஆறு மணி ஷிப்ட்டுக்கு போனா சாயந்திரம் ஆறு மணி வரைக்கும் வேர்வையோட ரத்தம் சொட்ட சொட்ட உழைக்கணும்.  என்னோட வேலை நீங்க பார்க்கிற இந்த கிரேன் ஓட்டனும், ஒண்ணுல்ல ரெண்டுல்ல பன்னெண்டு மணி நேரம்.


2
இந்த வலதுகைப் பக்கம் நீங்க பார்க்குற தெருவின் கடைசி மூலையில தான் எங்க முதலாளியோட வீடு இருந்தது. ரொம்ப பெரிய பங்களா. அஞ்சாறு காரு, ஆள், அம்பு சேனைன்னு ஒரு பெரிய கூட்டமே உள்ள இருந்தது. கம்பனி சுத்திப்பாக்க ஒரு நாள் அவரோட பொண்ணு வந்தப்ப என்னோட மொத ஷிப்டு ஆளு மேலேர்ந்து ஒரு கான்க்ரீட் ஸ்லாப் எடுத்து வேற இடம் மாற்றும் போது இவ மேல போட்ருப்பான்.  பாவி. உலகத்துல அழகுக்கு எடுத்துக்காட்டே இல்லாம போயிருக்கும். இவ மேல படும்னு நான் பாஞ்சு அவளை அணைத்து அந்தப் பக்கம் உருண்டேன். உருண்டதுல அவளுக்கு தலையில லேசா ரத்தம் வந்து, என் சட்டையை கிழிச்சு கட்டு போட்டு.. இப்ப எதுக்கு அதெல்லாம் விடுங்க. அப்ப அவளை வீட்டுக்கு இந்த வழியாத்தான் கொண்டுவந்து விட்டேன்.


3இப்ப நீங்க இடது கைப்பக்கம் பார்க்கறது என்னோட வீட்டுக்கு போற வழி. சுடுகாடு தாண்டி போகணும். அந்த அசம்பாவித சம்பவம் நடந்த முடிஞ்ச பிறகு ஒரு நாள் சாயந்திரம் ஆறரை மணி வாக்கில் ஹவாய் செருப்பு தேய நான் இந்த வழியா நடந்து போற போது அவ வந்து கார்ல வரியா அப்படின்னு கேட்டா. பர்சுல வைக்குற பணம் லாக்கர்லையும் கால்ல போடற வாக்கர் வெளியிலையும் கிடக்கணும் அப்படிங்கற மனுஷ ஜாதியின் எளிய விதி எனக்கும் தெரிஞ்சிருந்தது. இல்லைங்க பரவாயில்ல.. நீங்க போயிட்டு வாங்க அப்படின்னு சொல்லி அனுப்பினேன். என்னோட மனசு மட்டும் அவளோட கார் ஏரி அப்பவே போய்டிச்சி.


4நீங்க பார்க்கிற இந்த வலது கைப்படம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. யாராவது ஒளிஞ்சிருந்து "பா..." அப்படின்னு பயம் காட்டினாலே நாலு நாள் ஜுரத்துல படுத்துருவேன். ஆனா அன்னிக்கு, அப்படி ஒரு யான பலம் எப்படி வந்ததுன்னு எனக்கே தெரியல. கார் ரிப்பேர் ஆனதால அவ நடந்து இந்த வழியாத்தான் காலேஜ் போய்க்கிட்டு இருந்தா. அவ்ளோ கார் இருந்தும் ஒரு தடியனும் அன்னிக்கி வரல. அன்னிக்கு காலையில எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. லீவ் போட்டுட்டு டாக்டரை பார்க்க போய்கிட்டு இருந்தேன். அந்த கோடி வீட்டு காசுக்கார தடிப்பய முன்னாடி பின்னாடி போய் அந்த தங்கத்தை உரசி உரசி பார்த்தான்.   சொல்லிப் பார்த்து, கொஞ்சி பார்த்து, கெஞ்சி பார்த்து ஒத்து வராம போட்டேன் தலையில பக்கத்துல கிடந்த பாறாங்கல்லை தூக்கி.


5மயங்கி தான் கீழ சாஞ்ஜான்னு நினைச்சேன். ஆனா அவன் அப்புறமா எழுந்திரிக்கவே இல்லை.  மேல போய் சேர்ந்துட்டான். அங்கேர்ந்து நாலு கால் பாய்ச்சல்ல ஓடிட்டேன். ரெண்டு மூனு நாள் யார் கண்ணுலேயும் படாம அங்ஞாதவாசம் இருந்தேன். அவளை பார்க்காம இருக்க முடியலை. கண்ணு ரெண்டும் எங்க பார்த்தாலும் அவளையே எனக்கு காட்டிச்சு. மறஞ்சு மறஞ்சு வந்து நீங்க இங்க பார்க்கிற இந்த இடத்தில நின்னு பார்த்தேன். அவளுக்கு அப்படியே அழுகை பொத்ததுக்கிட்டு வந்தது. என்னாலதானே உனக்கு இந்த நிலைமை அப்படின்னு ரொம்ப அழுதா. நா அவளைத் தேத்திட்டு,  கவலைப்படாதே நான் வந்துடுவேன் அப்படின்னு ஆறுதல் சொன்னேன்.

6அவ கிட்ட பேசிட்டு அடுத்த தெரு வறதுகுள்ள  போலீஸ் என்னை சுத்தி வளச்சிட்டாங்க. ஒன்னும் செய்ய முடியலை. கொலை குத்தம் சொல்லி என்னை ஜெயில்ல போட்டுட்டாங்க. ஜெயில் கம்பியில, கிறுக்கின செவுருல, கக்கூசுல இப்படி எங்க பார்த்தாலும் அவ நினைப்புதான். நாலு பாரா முன்னாடி அவ கார்ல லிப்ட் கொடுத்தப்ப வேண்டாம்ன்னு சொன்ன நான் ஏன் எப்படி ஆயிட்டேன்னா அது அவளோட அந்த கொள்ள அழகு. எல்லாரையும் அவ பின்னாடி சுத்த விடுற அழகு. நாட்கள் ஓடிக்கிட்டே இருந்திச்சு. மனசு சொல்லிகிட்டே இருந்திச்சு. எப்படியாவது இங்கேர்ந்து தப்பிச்சு போயிடனும் அப்படின்னு திட்டம் போட்டு ஒரு நாள் ஜெயில்ல பின்னாடி இருந்த ஒரு கதவு, நீங்க இங்க பாக்குறீங்களே அந்த கதவுதான், அது வழியா தப்பிச்சு ஓடி வந்தேன்.

7அங்கேர்ந்து நேரா அவ காலேஜுக்கு போனேன்.... அங்க அவ இல்லை... போற வர ப்ரொபசர் ஸ்டுடென்ட் எல்லார்ட்டையும் கேட்டேன். யாருக்கும் ஒன்னும் தெரியலை... என்னை மலங்க மலங்க பார்த்தானுங்க.. காதல் வந்த ஒருத்தனை இப்பதான் முத முதல்ல பார்க்கறானுங்க போலன்னு நினைச்சேன்..


8

அங்கேர்ந்து அவர் கார்ல வீட்டுக்கு போற வழிய ஓடினேன்... கரண்ட் கம்பி மேல உட்கார்ந்திருந்தா காக்கால்லாம் என் வேதனைய பார்த்து அழுது கத்தி கூட்டமா பறந்து போச்சு... எனக்கு ஒன்னுமே புரியலை.. அவங்க வீட்டுப் பக்கம் போனா அங்கே யாருமே இல்லை... கால் வலிக்க வலிக்க ஊர் முழுக்க மறஞ்சு மறஞ்சு ஓடினேன்... என்ன பன்றதுன்னே தெரியலை.. அதுக்குள்ள ஊர்ல போலீஸ் தேட ஆரம்பிச்சிட்டுது..








9இப்படி இருக்குற போதுதான் அவங்க கார் ரிப்பேர் பண்ற மெக்கானிக் செட்டுக்கு போய் பார்க்கலாம்ன்னு போனேன். ஒன்னு ரெண்டு ஜீப்பு நின்னுச்சு.. யாரையும் காணலை. கடைப் பையன்ட எங்கடா முதலாளி அப்படின்னு கேட்டேன்... அவன் ரெண்டு வண்டி தாண்டி கீழ காட்டினான்.



10குனிஞ்சு கீழ படுத்திருந்த மெக்கானிக்கை பார்த்தேன். அவன் என்னை பார்த்ததும் அலர்ட் ஆயிட்டான். எப்படியும் போலிசை கூப்பிடுவான்னு தெரியும். அதுக்குள்ள அவனை மடக்கி எங்க என் முதலாளி குடும்பம் அப்படின்னு கேட்டேன். அவன் எங்க முதலாளி குடும்பம் சீரழிஞ்ச கதையை சொல்லிட்டு, அவங்க ஊருக்கு வெளியே இருக்கிற ஒரு பலமாடி குடியிருப்புல  ஒரு ஒண்டி குடித்தனத்துல இருக்காங்க அப்படின்னு சொன்னான்... அங்கேர்ந்து ஓடினேன்...





11அந்த காலனியை நான் அடைஞ்சபோது எனக்கு உண்டான சந்தோஷத்தை சொல்ல எனக்கு வார்த்தையில்லை. அவளோட என்ன பேசணும், எப்படி இருப்பா இப்படி பல கனவுகளை எனக்குள்ள வளர்த்துகிட்டு நான் போனா.... அங்க நான் பார்த்தது வேற... சொட்டையா... அசிங்கமா ஒருத்தன் அவள்  தோளைத் தொட்டு பேசிக்கிட்டு இருந்தான். ஒரு சின்ன அரை நிஜார் போட்ட பையன் அவ இடுப்புல... பக்கத்து கடைக்காரன் அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி அப்படின்னு சொன்னான். அப்படியே இடிஞ்சி போயிட்டேன்.

12வழக்கமா எல்லா கதையிலும் அவ எப்படி இருந்தாலும் நல்லா இருக்கட்டும் அப்படின்னு சொல்ற மாதிரி நானும் மனசுக்குள்ள சொல்லிட்டு,  அந்த இடத்தை காலி பண்ணிட்டு, நம்ம ஊர்ல இடத்துக்கா பஞ்சம், சிலையெல்லாம் நிறையா இருக்குற பீச் பக்கமா ஒதுங்கினேன். அந்த சிலை கீழேயே மூஞ்சியில துண்டைப் போட்டு மணல்ல படுத்து தூங்கினேன். காலையில ஒரு காளை மாடு அந்த சிலை பக்கம் ஒதுங்கினப்ப எனக்கு விழிப்பு வந்திச்சு..

16நான் இப்ப ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இனிமே  நமக்கு வெளிஉலகம் சரிப்பட்டு வராது. அவ இல்லாத உலகம் நமக்கு சிறை தான் அப்படின்னு நினைச்சுக்கிட்டு வானத்த அண்ணாந்து ஒரு தடவை பார்த்துட்டு நேர ஜெயிலப் பார்க்க நடையை கட்டினேன்.

Monday, July 5, 2010

வேலை வெட்டி இல்லாத வேளை

"வீட்டுக்கு அமிச்சிட்டாங்க, சம்பளத்துல கை வச்சிட்டாங்க, அரை நாள் வேலை பார்த்தா போதும்னு சொல்லி வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாங்க.." இப்படி ஏகத்துக்கு பஞ்சப் பாட்டு பாடும் 55% வயதுக்கு வந்தவர்கள் (Adults) முப்பது மாதங்களுக்கு முன்பு வெற்றிநடை போட்டு ஆரம்பித்த பொருளாதார மந்த நிலையில் தங்களது நிலை பற்றி
Pew Research Center என்ற  ஆராய்ச்சி  நிறுவனம் செய்த வயத்தெரிச்சல் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில் மேலும், அமெரிக்கர்களின்  கார்டு தேய்த்து கடன் வாங்கும் மற்றும் செலவழிக்கும் பாணி முற்றிலும் மாறிவிட்டதென்றும், பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய முடிவுகள் பற்றிய அக்கறை தற்போது இல்லை என்றும், தங்களது பணி ஓய்வுக் கால திட்டங்கள் முற்றிலுமாக மறந்து விட்டார்கள் என்றும்,  பர்ஸ் மற்றும் வீட்டின் மதிப்பு போன்றவை நல்ல நிலைக்கு உயர இன்னும் பல வருடங்கள் பிடிக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

இந்த வேலை வெட்டி இல்லாத ஏழரை நாட்டு சனி வேளை தங்கள் தேசத்தை பிடித்த வேளையில் தங்களுக்கு என்னவெல்லாம் நிகழ்ந்ததென்று அவர்கள் வாயாலேயே கேட்டு இந்த பட்டியலை தயாரித்திருக்கிறார்கள். 

1. விலை நிறையா வச்சு விக்கிற உசத்தி கம்பெனி பொருளை வாங்குறதை விட்டுட்டு கம்மியா பிளாட்பாரத்தில போட்டு விக்கிற கம்பெனி சாமானை வாங்குறோம்.
2. காசை பாங்கிலும் கார்டிலும் சுத்தமா வழிச்சிக்கிட்டு புள்ள குட்டியோட பல ஊர் சுத்துறதை சுத்தமா நிறுத்திட்டு சைக்கிள்ல சொந்த ஊர்ல தெருக் கோடி வரை போய் வயல் வரப்பை பார்த்துட்டு அதையே சுற்றுலாவா நினைச்சு திருப்தி பட்டுக்குறோம்.
3.கொஞ்ச நஞ்சம் இருக்கிற கைக்காசை ரத்தன் லால் சேட்டு மாதிரி வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறோம்.
4. உற்சாக பானம், கடா மார்க் பீடி, சிகரெட் போன்ற லாஹிரி வஸ்த்துக்கள் உபயோகிப்பதை சுத்தமா  நிறுத்திவிட்டோம். நம்மூர் தாய்மார்கள் இங்கே இந்த நிலைமை வாராதா என்று ஏக்க பெருமூச்சு விடுவது அமெரிக்காவிற்கு ஆடிக் காற்று போல இருப்பதாக எல்.ஏவில் இருக்கும் என் அத்தைப் பையன் போன் போட்டு சொல்கிறான்.
5. உடம்புக்கு ஒரு சீக்கு வந்தாக் கூட மருந்து வாங்க காசு இல்லை.
6. ரெண்டு நாள் முந்தி பழகினவன்ல ஆரம்பிச்சு இருவது வருஷமா நண்பனா இருக்கறவன், ஒன்னு விட்ட ரெண்டு விட்ட மூனு விட்ட சித்தப்பாவோட பசங்க அப்படின்னு எந்த வித்தியாசமும் பார்க்காம தலையில் கவுத்த தொப்பியை கையில ஏந்தி திருவோடா மாத்தி பிச்சை எடுக்குறோம்.
7. வீட்டு வாடகை வாங்கறத்துக்கு ஓனர் வந்தா வெளிக்கதவை வெளிப்பக்கமா நவ்தால் பூட்டு போட்டு தாப்பா போட்டு கட்டிலுக்கு அடியில போய் ஒளிஞ்சுக்குறோம்.
8. கட்ட பிரம்மச்சாரியா இருக்கிறவங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்ன்னு இருக்கோம், கல்யாணம் பண்ணிகிட்டவங்க பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்காங்க என்கிற அதிர்ச்சியான உண்மையை ஒத்துக்கிட்டிருக்காங்க.
9. அப்பா அம்மாட்ட விரச்சுக்கிட்டு வீட்டை விட்டு தனியா ஓடிவந்த நாங்க திரும்பவும் எங்களை பெற்ற தெய்வங்களின் பாதங்களையே சரணாகதியாக தஞ்சம் அடைந்துள்ளோம்.
10. பாங்க்ல நோட்டீஸ் விட்டு லோன்-ல வாங்கின வீட்ட அவங்கள்ட்ட கொடுத்துட்டு வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டாங்க.

மேலே குறிப்பிட்டது அவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கூரிய பல வயற்றெரிச்சல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து.

தகவல் உதவி:  http://andrewsullivan.theatlantic.com
பட உதவி: http://funkyminds.blogspot.com/

Sunday, July 4, 2010

கார்த்திக்கின் காதலிகள் - Part III


KKP-3


பள பளக்கும் பச்சைப் பாவாடையை கொஞ்சமாக இழுத்து இடுப்பில் சொருகி ஒரு காலால் தத்தி தத்தி வேர்க்க விருவிருக்க, மேலே போட்டிருந்த மஞ்சள் சட்டை நனைந்து ஈரத்தோடு வெள்ளை உள்சட்டையோடு ஒன்றோடு ஒன்றாகி, பின்னலிட்ட சடை இரண்டும் முன்னும் பின்னும் ஆட, ஒரு லோடு மண் அப்பிய காலோடு ரோடுக்கு இருமருங்கிலும் தங்கு தடையின்றி வளைந்து நெளிந்து சிகப்பு கலர் குட்டை  ஹெர்குலஸ் கேப்டன் சைக்கிள் கற்றுக் கொள்ள ஓட்டும் போது தான் ரமாவை பார்த்தான் காரத்தின். இல்லை இடித்தான். இல்லை இல்லை தள்ளினான். இல்லை இல்லை இல்லை விழுந்தான். மேலே கண்ட எல்லா இல்லையும் ஒன்றுவிடாமல் "ஆமாம் ஆமாம்" என்று நடந்தேறியது ஒரு அரையாண்டு விடுமுறையில். ஒரு பொறுப்பான இந்தியக் குடிமகனாக சைக்கிள் போக்குவரத்தின் அனைத்து விதிகளையும் கரைத்து குடித்து அதற்கேற்ற உதாரண புருஷனாக இரு சக்கர வாகனம் ஒட்டி வந்த கார்த்திக் தன் நண்பன் மல்லிராஜ் இருக்கிறானா என்ற ஆர்வப் பார்வையில் வீதியில் சைக்கிள் பழகிய ரமாவை பார்க்க தவறிவிட்டான். சைக்கிள் பழகுவதால் ரோட்டை தவிர எதையும் பார்க்கக்கூடாது என்று கூண்டு ஏற்றாமல், கீதை புத்தகத்தின் மேல் கை வைக்காமல் சத்தியப்பிரமாணம் வாங்கிக்கொண்டு கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்தார் ராமாவின் அப்பா. அப்பப்பா ஆளைப் பார்த்தாலே ஆறடி தள்ளி போகும் அளவிற்கு கிராம வாசலில் காவலுக்கு நிற்கும் பதினாறடி வீரனார் மீசை. நடிகர் சத்தியராஜின் திரையில் தெரிந்த பாகங்களில் எல்லாம் தெரியும் அந்த ஆம்பளை சிங்கத்தின் அடையாளங்கள்.

அப்போது விழுந்த கார்த்திக் பிற்பாடு கொஞ்ச நாள் எழுந்திருக்கவேயில்லை. இரு சைக்கிள் மற்றும் இந்த இடி சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்கள் இருவரும் ரம்மி விளையாடும் போது கையில் விசிறி போல் அடுக்கி சேர்க்கும் AKQJ போல சரிந்து கிடந்தனர்.  Aவும் Jயும் சைக்கிள்கள். கிடா மீசையின் தடா பார்வையில் பொடிந்துபோனான்  கார்த்திக்.  "இல்லை சார்... வந்து சார்..." என்று இம்போசிஷன் போல, ஸ்க்ராட்ச் விழுந்த CD போல ஐந்து  ஆறு முறை அவர் எது கேட்டாலும் பதில் சொல்லிவிட்டு இது ஆகிற கதை இல்லை என்று அந்த திக்குக்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டு வளைந்த ஹான்டில்பாரை கூட நேராக்காமல் கோணிக் கொண்டே  ஒட்டி சென்றான். ரிடயர்ட் வாத்தியார் கணிதப் புலி சாளேஸ்வரம் கிரியின் மூன்று பெண்களும் முப்பெருந்தேவியர் போல் வீட்டு வாசலில் சேர் போட்டு உட்காராமல் கையை கட்டி நின்று கொண்டு முழு ஷோ கண்டு களித்தார்கள்.  மூவரும் தலா இரண்டு வருட இடைவெளியில் இப்பூவுலகில் அவதரித்தவர்கள். நடு நடுவே காட்சிக்கு கணம் கூட்டும் பின்னணி இசை போல் 'கொள்..', 'கள்...'  என்று வாய்ப்பொத்தி சிரிப்பு வேறு. கை கால்களில் சிராய்த்தது மறுநாள் ஹமாம் போடும்போது எரிந்தபோது தான்  தெரிந்தது. எல்லாம் முதல்நாள் மோதி விளையாடிய அனுபவத்தின் பலன்கள்.

ரமா நல்ல சூட்டிகையான பெண். இரண்டே நாட்களில் ஹாண்டில் பார் கைகளில் அடங்கியது. கை இரண்டையும் நேர்கோட்டில் பிடித்து தலையை ஒரு பதினைந்து பாகை கீழே சாய்த்து அதே பதினைந்து டிகிரி கண்ணை மேலே உயர்த்தி அடக்க ஒடுக்கமாக அனைத்து சாலைகளிலும் வலம் வர ஆரம்பித்தாள். மேலும் இரண்டு நாட்கள் செக்யூரிட்டியாக வந்த தகப்பன் வீரனார் சாமி வருவதை நிறுத்தியவுடன் அந்த வேலையை கார்த்திக் தனதாக்கிகொண்டான். எல்லா கவிதை, சினிமா வசனங்களில் வருவது போல நிழலென தொடர்ந்தான். ஒரு முறை வரசித்தி விநாயகர் கோயில் திரும்பும்போது பின்னால் காரியரில் கிளிப் போட்டு வைத்திருந்த நோட்டுகள் இரண்டு விழுந்த போது அதை எடுத்து அவளிடம் கொடுத்தபோது இந்த ஜென்மம் எடுத்ததற்கு புண்ணியம் அடைந்ததாக எண்ணிக்கொண்டான். கொடுக்கும் பொது அவள் விரலோடு இடித்த தன விரலை அசல் சட்டை கிழித்து ரோடில் திரிவது போல பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தான்.

அவளுக்கும் சிரிக்கத் தெரியும் என்பதை ஒருமுறை அவள் தோழி ஒருத்தி வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அவளோடு அரட்டையடிக்கும்போது தெரிந்த பளீரென்ற முத்துப் பற்களைக் கண்டு தெளிவுற்றான். அவள் பத்மா டீச்சரிடம் கணிதம் பயிலுகிறாள் என்று தெரிந்ததும் தன் மாஸ்டரிடம் இருந்து அங்கே கட்சித் தாவ முயற்ச்சித்தான். இங்கு கண்டிப்பாக பெண்களுக்கு மட்டுமே வகுப்புகள் என்றும் கார்த்திக் போன்ற கயவாளிகளுக்கு இல்லை என்று முகத்தில் அடிக்காத குறையாக சொல்லி திருப்பியனுப்பி விட்டார்கள். நிழல் போல் பின் தொடர்தலை எங்கோயோ பார்த்திருக்கவேண்டும் அந்த பத்மா டீச்சர். குதிரைக்கு கடிவாளம் போட்டது போன்று சென்று கொண்டிருந்த கோழி (chick) சற்று நாளைக்கப்புறம் திரும்பி பார்க்க, அருகில் நோக்க, புன்னகைக்க ஆரம்பித்தது. அந்த தருணங்களில் நூலறுந்த பானா காத்தாடி போல வானத்தில் பறந்தான் கார்த்திக்.

ஒரு நாள் நித்யபடி வழக்கமான எல்லா ரோடுகளிலும் வாலை ஆட்டாமல்  அந்த ஜந்துவை நினைவு படுத்தும் வகையில் திரிந்தான்  கார்த்திக். ஊஹும், எங்கேயும் காணோம். என்ன செய்வதென்று தெரியவில்லை. கஞ்சா கிடைக்காத போதையடிமை போல பர பரவென்று சைக்கிளில் இங்குமங்கும் சக்கரம் போன போக்கில் திரிந்தான். கடைசியில் டைலர் கடை வாசலில் கோபால் தான் சொன்னான், "என்னடா குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி சுத்தி வரே... ஊருக்கு வெளியே இருக்கிற V.G.N நகர்ல சொந்த வீடு கட்டிகிட்டு கிளி பறந்து போச்சு...". 

அவன் சொன்னவுடன் நூலறுந்த காத்தாடியாக விண்ணிலிருந்து கீழே தரைக்கு இறங்கி வந்த கார்த்திக் தன் சைக்கிள் பஞ்சர் என்றுனர்ந்தான்.

பட உதவி: http://farm5.static.flickr.com/4076/4748931961_fc5ef66a08_b.jpg
 
(கார்த்திக்கின் காதலிகள் இன்னும் தொடர்வார்களா? மாட்டார்களா? பொறுத்திருந்து கார்த்திக்கை கேட்டுப் பார்ப்போம்.)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails