Wednesday, November 3, 2010

மன்னார்குடி டேஸ் - தீபாவளி திருவிழா

உலக்கை வெடி. அந்தக் காலத்தில் வெடி  உலகின் முடிசூடா மன்னன். பால்ய வயது தீபாவளி கொண்டாட்டங்களில் இடம் பெரும் அதிமுக்கியமான பட்டாசு. அதற்கு என்ன அப்படி தனி மவுசு. அந்த ஒரு வெடி ஒருவர்  வீட்டு வாசலில் வெடித்தால் அப்படியே பேப்பரை வாரி இறைத்து குப்பையாய் தெரு முழுவதும் விரவி கிடக்கும். யார் வீட்டு வாசலில் குப்பை நிறைய இருக்கோ அவர்கள் தான் அந்தத் தெருவின் வெடி ராஜா பட்டம் பெற்ற பெரியவர். கோபி வீட்டில் அவ்வளவாக வெடி வாங்க மாட்டார்கள். இருந்தாலும் தம்பி நம்மை அன்போடு அழைத்து அவர்கள் வீட்டு வாசலில் வெடிக்கச் சொல்லி அன்புத் தொல்லை கொடுப்பான். ஆனால் பக்கத்தில் சீனி வீட்டில் காலையில் முறைவாசல் செய்யும்போது படும் அவதியை நினைத்து "ஏம்ப்பா... அந்த குளத்தோரம் வெடிக்கலாமில்ல.." என்று ஆதரவாக சொல்லி அன்பாக விரட்டுவார்கள். அகில உலகத்திற்கும் இந்த உலக்கை வெடி கலாசாரத்தை ஒரு தீபாவளிக்கு கோபி தான் அறிமுகப்படுத்தினான். நாலே நாலு உலக்கை வெடி வாங்கி வந்து வெடித்துவிட்டு அந்தக் குப்பைகளையே பத்திரமாக பார்த்துக் கொண்டு வாசலிலேயே உட்கார்ந்திருந்தான். பாட்டி "செக்கொலக்கை மாதிரி நிக்கறான் பாரு" என்று அடிக்கடி திட்டுவது அப்போது ஏனோ நினைவுக்கு வந்தது. பஸ் செல்லும் மெயின் ரோடு ஆகையால் வலது புறம் செல்லும் பேருந்துகள் ரோகினி வீட்டிற்கும், இடது புறம் செல்லும் லாரிகள் எங்கள் வீட்டிற்கும் குப்பையை மாறி மாறி இடம் பெயர்த்து புரட்டிப் போட்ட போதெல்லாம் நொந்த கோபி மனம் பெயர்ந்தான். கட்டை விளக்குமாறு எடுத்து பெருக்காத குறையாக சில சமயங்களில் வெறுங்காலாலேயே ரத்தம் வர பெருக்கி அவன் வீட்டு வாசலுக்கு குப்பையை கொண்டு போய் சேர்த்தான். அறைய காலால பெருக்கினாலே ரத்தம் வரும் இவன் தெருவையே பெருக்கினால்.

தீபாவளி ஆரம்பிப்பதற்கு பத்து நாள் முன்கூட்டியே முக்கு கடை கற்பகம் ஸ்டோரில் சில்லரையாக வாங்கி வெடிக்கும் அனுபமே ஒரு கலர் மத்தாப்பு தான். பத்து குருவி வெடிகளை கலர் பேப்பர் சுற்றி ஒத்தை வெடி கட்டு ஒன்று ரெண்டு ரூபாய் என்று ஞாபகம். அன்றிலிருந்தே எங்களை சுற்றி ஒரே வாசனையாக இருக்கும். ஏதோ செயின் ஸ்மோக்கர் போல வலது கையில் எந்நேரமும் ஊதுபத்தி புகையும். "இப்போலேர்ந்தே சீனு வெடி  வாங்க ஆரமிச்சுட்டன்" என்று பாட்டி வெடி புராணம் பாட ஆரம்பித்து விடுவாள். அதையேன் அந்தக் காலப் பாட்டிகள் சீனு வெடி என்றார்கள் என்ற கேள்விக்கான விடை சொல்வோருக்கு ஆயிரம் பொற்காசுகள். சிலசமயம் பொருளாதார நெருக்கடியால் ஆளுக்கு ஒரு ரூபாய் சம பங்கு போட்டு ஒரு கட்டு வெடி வாங்கி வெடித்த காலம் கூட உண்டு. ஐந்து வெடி என் வீட்டு வாசலில் ஐந்து வெடி அடுத்த பங்குதாரர் வீட்டு வாசலில். வீட்டு வாசலில் வெடி குப்பை ரொம்ப ரொம்ப முக்கியம். ஒரு வீட்டின் தீபாவளி கொண்டாட்டத்தின் மதிப்பு அந்தக் குப்பையில் உள்ளது. "ஏங்கப்பா. எவ்ளோ குப்ப!!!! " என்று விழி விரிய  மூச்சடைத்து யாராவது ஆச்சர்யப்பட்டால் அது தான் அவர்களின் தலை சிறந்த தீபாவளி. வங்கக்கரையோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான ஒரு தீபாவளியில் கோபி இலுப்பச்சட்டியில் நமுத்துப் போன எல்லாப் பட்டாசையும் போட்டு வறுத்ததில் வீட்டுக்குள்ளேயே வானவேடிக்கை விட்டுக் காண்பித்தான். அவன் பாட்டி புடவையில் ராக்கெட் ஏறி நடு உள்ளில் பாட்டிக்கு ஜலக்கிரீடை நடந்தது.


வயது ஏற ஏற வாலிபம் தலைப்பட இந்த கொண்டாட்டங்கள் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தது. புது டிரஸ் போட்டுக்கொண்டு எந்தெந்த வீடுகளில் தாவணி போட்ட தீபாவளிகள் இருக்கோ அந்தந்த வீடுகளுக்கு முன்னே நின்று தெருமுனை நோக்கி "டேய்.. ஸ்ரீராம்... கங்கா ஸ்நானம் ஆச்சா...." என்று தொண்டை கமற சத்தமிட்டு கொண்டாடிய தீபாவளிகளும் கணக்கில் இருக்கிறது. கடைக்கண் பார்வை பட்டால் லெக்ஷ்மி வெடி என்ன உலக்கை வெடியையை இடது கையால் பற்ற வைத்து வலது கையால் தூக்கி விட்டெறிந்து சாகசம் புரியக் கூட ரெடியாக இருந்த காலம் அது. வெங்காய வெடி என்று ஒன்று விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு ப்ளாக்கில் கிடைக்கும். முதலில் ஒரு சட்டியில் வைத்திருந்தார்கள் அப்புறம் தடைக்கு பின் ஜட்டியில் வைத்திருந்து விற்றார்கள். கையில் வெங்காய வெடியை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும் பருவப் பெண்கள் பக்கத்தில் சென்று ரோடில் அடித்து "டமார்" பண்ணுவார்கள். நெஞ்சதிர திடுக்கிடும் பெண்ணை பார்த்து ரசிப்பார்கள். இப்படி எல்லாம் அதிர்ச்சியில் ஒரு பெண்ணை வசியம் பண்ண முடியாது என்று தெரியாத அறியாத அஞ்ஞான பருவம் அது. ஒரு தடவை இதே சாகச நிகழ்ச்சியை கோபிலி அவன் வீட்டு வாசலில் திறமையாக செய்து காண்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் வெடி பித்து தலைக்கேறி லெக்ஷ்மி வெடியை கையில் பிடித்து வானத்தில் தூக்கி வீச முயன்று கையில் படாராயி ஆஸ்பத்திருக்கு தூக்கிக் கொண்டு ஓடினோம். வைத்தியம் பார்ப்பதற்கு முன் வலியில் துடிப்பவனை பார்த்து "அதுக்குதான் சொல்றது... கையிலெல்லாம் வச்சு வெடிக்கப்படாதுன்னு..." என்று சப்ளாக்கட்டை இல்லாமல் கதாகாலேட்ஷபம் செய்தார் அந்த டாக்டர். ரெண்டு பட்டாசை எடுத்து அவர் கோட்டு பையில் போட்டுருக்க வேண்டும். தப்பித்தார். 

மற்றொரு தீபாவளிக்கு தெருவில் நண்பர்கள் எல்லோரும் குரூப்பாக கொசுவலை மாதிரி சட்டைத் துணி எடுத்து தைத்துக் கொண்டோம். தூரத்தில் இருந்து பார்த்தால் எந்த கொசுவலைக்குள் எந்த கொசு என்று தெரியாது. கம்மாளத் தெரு நகோடா டெக்ஸ்டைல் "நன்பேண்டா" புவனேந்திரனிடம் "எப்போ கடை காலியா இருக்கும் மாப்ளே.." என்று விசாரித்து சென்றோம். சேட்டு முதலாளிக்கு தெரிந்தால் "தீபாவளி டயத்ல கடை காலியா இருக்குன்னு சொல்றியா.." என்று கொன்றிருப்பான் புவனாவை. கொலைப் பழியில் இருந்து நாங்களும் தப்பித்தோம். சத்யராஜ் "அண்ணே.. அண்ணே .. அட.. என்ன சொன்னே.." என்ற பூ விழி வாசலிலே படத்தில் டைட்டிலில் பாடும் பாட்டில் போடும் வெள்ளை சட்டை மாதிரியே தைத்து தரச் சொல்லி தையல்காரர்களை படையெடுத்து படுத்தினோம். அந்த சட்டைக்கு தோள் அளவு தவிர வேறுதுவும் வேண்டாம். அப்படியே ரெண்டு கை மூட்டி காஜா எடுத்து தர வேண்டியதுதான். ஸ்டைலோ, சூப்பர் ஃபைன், மாரிஸ் என்று முப்பெரும் தையல் கடைகள்.  சாந்தி தியேட்டர் எதிரில் மாரிஸ் டைலர்ஸ். அண்ணன் தம்பி மூன்று பேர். ஒருத்தர் அளவு, ஒருத்தர் கட்டிங் இன்னொருத்தர் டெலிவரி. காஜா எடுக்க, வெட்டியதை ஒட்ட உள்ளே ரெண்டு பேர். இவ்வளவுதான் கடையின் வெற்றி  ஃபார்முலா. ரெடிமேட் ஆடைகள் அதிகமாக ஊர் உலகத்தில் புழக்கத்தில் இல்லாத காலம். தையல் கடைகளில் கூட்டம் அம்மும். போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம் தீபாவளிக்கு முதல் நாள் எனக்கு டிரஸ் கிடைத்தது. நிர்வாணமாய் நின்ற யாருக்கோ வஸ்த்திர தானம் செய்திருக்க வேண்டும். தலையில் எண்ணெய் தேய்த்துக்க் கொண்டு ஜட்டியோடு போய் நிற்காத குறையாக பழியாக கடை வாசலில் நின்று மனதில் திட்டி வாய் சிரித்து மகிழ்ச்சியோடு வாங்கிவந்தான் வடக்குதெரு சரவணன். அப்போது நான் கங்கா ஸ்நானம் பண்ணி "தம்பி.. முதெல்ல ஒரு பொத வை..." என்ற பாட்டியின் கட்டளைக்கு புஸ்வானம் வைத்துக் கொண்டிருந்தேன்.

பிறந்ததும் வளர்ந்ததும் மன்னையிலேயே வெவ்வேறு இடம் ஆகையால் வளர்ந்த இடமான மேலப்பாலத்தில் இருந்து பிறந்த இடமான கீழ்ப்பாலம் வரை சைக்கிளில் ஒரு வலம் வருவேன். ஒத்தை தெரு பிள்ளையார் கோயில் குட்டை தாண்டி முதல் தெரு பிரவேசித்ததுமே ஒரு தேவலோகத்தில் நுழைந்த ஒரு உணர்வு ஏற்படும். வெடிப்புகை வெண்புகை மண்டலம். அவ்வளவு பேர் ஏகத்திற்கு கைக்காசை கரியாக்கி இருப்பார்கள். அந்த புகை மத்தியில் ஸ்நானம் செய்து தலையை விரித்து போட்டு நடந்து வரும் அத்தெரு அக்ரஹார கன்னிகள் தேவலோக கந்தர்வக் கன்னிகைகள் போல கண்ணுக்கு தென்படுவார்கள். குறிப்பாக கீழ முதல் தெருவில் ரோடுக்கு நடுவில் கிணறு ஒன்று இருக்கும். அந்தக் கிணற்றுக்கு நேர் எதிர் வீட்டில் ஒரு ஐம்பது பேருக்கு தலைவாழை இலைபோட்டு கல்யாணச் சாப்பாடு போடும் அளவிற்கு திண்ணை இருக்கும். அந்தத் திண்ணை முழுவதும் வெடி பரப்பி மன்னையில் ஒரு சிவகாசி என்று கொண்டாடுவார்கள். எங்களூரில் தல தீபாவளிக்கு தான் நிறைய வெடி வாங்குவார்கள். அவர்களுக்கு எல்லா தீபாவளியும் 'தல' தீபாவளி. அவர்கள் சரம், சங்குசக்கரம் என்று  வைக்க ஆரம்பித்தார்கள் என்றால் சாயந்திரம் வரை கால்கடுக்க நின்று வேடிக்கை பார்க்கவேண்டும். கொஞ்சம் ரிஸ்க் எடுத்து மனோதிடத்துடன் சைக்கிளை சரம் மேலேயே ஓட்டிச் சென்று அக்கரை அடைய வேண்டும்.

தீபாவளி இரவுகளில் மத்தாப்பூவை ராக்கேட்டாக்கி குளத்துக்குள் வீசுதல் போன்ற விஷம காரியங்கள் ஆரம்பமாகிவிடும். புஜபல பராக்கிரமம் படைத்தவர்கள் பெரிய ராக்கெட் விடுவார்கள். எங்கள் வீட்டு பக்கத்தில் எஸ்.என்.ஆர் என்ற ஒரு ஆர்டிஸ்ட் இருந்தார். நல்ல வித்தைக்காரர் மற்றும் சோமபான ப்ரியக்காரர். லாஹிரி உள்ளே ஏறினால் நல்ல நல்ல ஜாங்கிரியான படங்கள் வரைவார். அவருடைய சீமந்த புத்திரன் இளங்கோ நல்ல கட்டுடல் கொண்ட கருங்காளை. இரும்பில் ஒரு பெட்டியும் குச்சியும் இருக்கும். அந்த பெட்டியில் மருந்து நிரப்பி குச்சியை அந்த பெட்டி மேல் சொருகி ஓங்கி தரையில் குத்தினால்/அடித்தால் பொக்ரானில் அணுசோதனை செய்தது போன்று இருக்கும். நாலு கரையும் "டொம்.டொம்.டொம்." என்று அதிர்ந்து எதிரொலிக்கும். காது கேட்காதவர்களுக்கு கேட்கும், கேட்பவர்களுக்கு கேக்காது. தீராத வியாதியில் படுத்த படுக்கையாய் கிடப்பவர்கள் பரலோகம் போய் சேர்வார்கள். அண்ணனை சுற்றி வந்து வெடி வேடிக்கை பார்ப்போம். அவர் மேலுங்கும் மருந்து வாடை வீசும். ஒரு ராகுகால தீபாவளி இரவில், நானும் கோபியும் ஒரு சோதனை முயற்சியாக ராக்கெட்டை தரையில் படுக்க வைத்து கொளுத்தினோம். ஸ்ரீஹரிகோட்டாவில் விட்டது போன்று சீறிட்டு கிளம்பி தெருமுனையில் சைக்கிளில் பீருட்டு சென்றுகொண்டிருந்த தோட்டியின் சைக்கிள் சீட்டுக்கு அடியில் சென்று இறங்கி படார் என்று வெடித்தது. அதிர்ச்சி தந்த பயத்தில் அலறி வேட்டி அவிழ அவன் கீழே விழுந்ததும், நேரே எங்கள் வீட்டிற்கு வந்து வண்டி வண்டியை சண்டையிட்டதும், எங்கள் வீட்டார் மீதமுள்ள வெடிகளை பிடுங்கி பரண் மேல் தூக்கி கடாசியதும், நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு எல்லோரும் வெடிப்பதை நானும் கோபியும் வேடிக்கை பார்த்ததும் என்றென்றும் வாழ்வாங்கு வாழும் சரித்திரம்.

முதல் பட விளக்கம்: குழந்தைகள் வெடித்து மகிழ்வதில் அந்த ஒரு சில நிழலுருவங்களை பார்த்தால் எங்க க்ரூப் மாதிரியே இருந்துச்சு. அவங்களை இந்த சைட்லேர்ந்து தத்தெடுத்தேன். thebetterindia.com.

பின் குறிப்பு: இந்தக் கொண்டாட்டங்கள் ஏன் இவ்வளவு விமரசியாக கொண்டாடப்பட்டது என்றால் அப்போது சூரியகலைஞவிஜயஜெயராஜ டிவிக்கள் எல்லாம் கிடையாது. பாதி நேரம் "டொய்ன்..டொய்ன்.." என்று சிதார் வாசித்துக் கொண்டிருக்கும் தூர்தர்ஷன் தான்.

அனைவருக்கும் இந்த தீராத விளையாட்டுப் பிள்ளையின் 
தீபாவளி நல்வாழ்த்துக்கள். ;-)

-

Tuesday, November 2, 2010

தவறிய அழைப்புகள்

doubtஉமையொருபாகன் கார் அன்று கிளம்புவதில் அதிக சிரமம் எடுத்துக்கொண்டது. இத்தனைக்கும் நாள் பூரா ஒதிய மர நிழலில் இளைப்பாறிக்கொண்டு தான் இருந்தது. அவரைப்போல அந்த வண்டியும் கொஞ்சம் வயதானதுதான். தள்ளாமை வந்துவிட்டது அதனால் ஓடுவதற்கு தள்ளுமுல்லு கேட்குமோ என்று நினைத்தார்.  தன் கேசத்திற்கு கார்னியர் கலர் நேச்சுரல் பூசுவது போல அதற்க்கும் வயதை குறைக்க (அ) மறைக்க அவ்வப்போது பட்டி பார்த்து பவுடர் பூசி சிங்காரித்திருக்கிறார். சாவியை இட்டவுடன் இரண்டு மூன்று முறை கமறியது. நான்காம் முறையாக கிளப்பும்போது படிக்காதவன் "லக்ஷ்மீமீமீ....  ஸ்டார்ட்...." கார் டிரைவர் ரஜினி நினைவுக்கு வந்து வண்டி பின்னால் திரும்பி எந்தப் பொருளும் இல்லாத பின் இருக்கைகளை பார்த்து "ஒன்றும் இல்லை" என்று புன்முறுவல் பூத்தார். ஹோண்டா சிட்டியில் இருந்து குனிந்து நிமிர்ந்து தொண்ணுறு கிலோவை அசைத்து வந்து தொந்தி பிதுங்க போனேட் திறந்து பாட்டரியை பார்த்தார். அமேரான் அமெரிக்கையாய் உட்கார்ந்திருந்தது. போல்ட் நட் ஒன்றும் புரியவில்லை. அறைந்து சாத்தினார். திரும்பவும் உள் சென்று இக்னிஷன் கீ கொடுக்க ஒரு தடவை உதறி ஸ்டார்ட் ஆனது. இரண்டு மூன்று முறை ஆக்சிலேட்டருக்கு வலிக்கும் வரை "டர்.ர்...ர். டர்.ர்...ர். " என்று உதைத்து ரேஸ் கார் போல சீறினார். பிறகு பொறுமையாக கியர் மாற்றி அலுவலக வாசலில் செக்யூரிட்டி அடித்த சல்யூட்டுக்கு பாதி கை தூக்கி அரையளவு பதில் மரியாதை செலுத்தி விட்டு இருபது, நாற்பது என்று படிப்படியாக கியர் தட்டி வேகம் கூட்டி வீட்டுக்கு விரட்டினார்.

முதல் சிக்னலில் சிகப்பிற்கு நிற்கும் போது மனதில் காலை காட்சி கருப்பு வெள்ளையில் ஓடியது. ஷு மாட்டி அலுவலகம் கிளம்பி ஷோ கேஸில் மூக்குக் கண்ணாடி எடுக்கும்போது அந்த நோக்கியாவில் மொத்தம் ஐந்தாறு மிஸ்ஸுடு கால்கள். JK. அடுத்தவர் மொபைலை அலசுவது பக்கத்து வீட்டு பாத்ரூமை எட்டிப் பார்ப்பது போன்ற அநாகரீக செயல் என்று நோக்காமல் வந்துவிட்டார். ஆனால் மனது மறக்காமல் அழியாத மார்க்கரால் குறித்துவைத்துக் கொண்டது. ஆபீசில் வேலை பார்க்க விடாமல் அந்த நோக்கியா காலர் டுயூனை விடாமல் மூளை ராகம் பாடிக் கொண்டிருக்கிறது. யாராக இருக்கும்? ஜெயக்கண்ணனா? ஜெயக்குமாரா? எந்த ஜெய விஜய கருமாந்திரமோ. மீளமுடியாத சரமாரியான கேள்வி கணைகளின் குறுக்கே கை நீட்டியது ஒரு தர்மக் கணை. அழுக்கு குழந்தையை இடுப்பில் ஏந்தி கார் ஜன்னல் கதவு தட்டி வயிற்றை தடவிக் கொண்டு கையேந்தி "ஐயா.." என்றது ஒரு தலையில் முக்காடு போட்ட அயல் மாநில பெண் பிச்சை. தலையில் ரத்தக்கரை மை தோய்த்த ஒரு பிளாஸ்திரி கட்டுப் போட்டு போதையூட்டப்பட்ட கைகால் முளைத்த வளர்ந்த குழந்தை. கண்கள் சொருகி ஒரு மந்த நிலையில் லாஹிரி உலகத்தில் இருந்து ஏக்கப் பார்வை பார்த்தது. சிரிப்பு, அழுகை, பாசம், நேசம், பசி, பள்ளி, படிப்பு, விளையாட்டு என்று எல்லாவற்றையும் மறந்து துறந்து பிறந்த பிச்சைக் குழந்தை. பர்ஸ் திறந்து காசு எடுப்பதற்கும் பச்சை விழுவதற்கும் சரியாக இருந்தது. ஈ மொய்த்த குழந்தைக்கு ஈந்தருள முடியவில்லை.

அடுத்த சிக்னல் வருவதற்குள் நடைபாதையில், ஸ்கூட்டியில், பஸ்ஸில், காரில், ஆட்டோவில், பில்லியனில் என்று ஆயிரமாயிரம் பேர் அவளைப் போலவே சிரித்தார்கள், நடந்தார்கள், பேசினார்கள், தலை கோதி வேடிக்கை பார்த்தார்கள், தும்மினார்கள், வாய்க்கு நேர் கைசொடுக்கி கொட்டாவினார்கள், தூங்கினார்கள். எங்கெங்கும் அவள் முகம். இன்று வரை என்ன குறை வைத்தோம்? சந்தான செல்வத்தை தவிர எந்த செல்வம் இல்லை வீட்டில்? சோபாவில் இருந்து எழுந்திருக்காமலே நாள் பூராக தலையில் கை முட்டுகொடுத்து பொம்பளை ரங்கநாதராக சயனித்திருக்கலாம். ஒரு சீரியல் விடாமல் பார்க்கலாம். தொட்டதெர்க்கெல்லாம் வேலைக்காரர்கள் மற்றும் காரிகள். கண் அசைவிற்கு காபியும் தலை அசைவிற்கு டிபனும் முப்போதும் கிடைக்கும். பச்சை துரோகி. அப்படி என்ன குறை. பனிரெண்டு வயது வித்தியாசம் ஒருத்தியை பத்தினியாக வாழ விடாதா என்ன. நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்து மனதை சப்பாத்தி மாவாக பிசைந்தது. கொஞ்ச நாட்களாக இவளின் போக்குவரத்து எதுவும் சரியில்லை. இந்த கர்பமாகாத கற்புக்கரசியை இன்றைக்கு என்ன ஏது என்று கேட்டு விசாரித்து உண்டு இல்லை என  தீர்த்துவிட வேண்டியதுதான்.

போர்டிகோவில் வண்டியை டயர் தீய்ந்து அலற "க்ரீச்ச்..."சிட்டு நிறுத்திவிட்டு ப்ரீஃப்கேஸை ரப்பர் பந்து போல  சோபாவில் விசிறி எறிந்துவிட்டு அந்த மொபைலை தேடி உள்ளே விரைந்தார் உமையொருபாகன். கார் சத்தம் கேட்டு கையில் காஃபியோடு வந்த மனைவி அன்பான பார்வையை கண்ணால் வீசி வாயால் கேட்டார் "ஏங்க இந்த ஜெயா காப்பகத்த்லேர்ந்து தினமும் அஞ்சாறு தடவை ஃபோன் பண்றாங்க. ரெண்டு பசங்களோட படிப்பு செலவை முழுசா ஏத்துக்கறோம் அப்படின்னு சொன்னோம். நீங்க மீட்டிங் ஆபிஸ்ன்னு ரொம்ப பிசியா சுத்திகிட்டு இருக்கீங்க. அவங்களுக்கு என்ன பதில் சொல்லட்டும்?"
"எந்த காப்பகம்?"
"ஜெயா குழந்தைகள் காப்பகம்"
"........"
"செக் எழுதி கொடுங்க. அடுத்த முறை கால் வந்தா தவறாம அட்டென்ட் பண்ணனும். தப்பா நினைச்சுப்பாங்க." என்று சொல்லிவிட்டு உமையொருபாகனின் வாமபாகம் உள்ளே சென்றது.

நாலைந்து முறை JK என்ற தவறிய அழைப்புகளின் இரண்டெழுத்து, மின்மினிப் பூச்சி போல கண்ணுக்குள் மினுக்க சந்தேகப்பட்ட பாழும் மனது சைலென்ஸ் ஆக வெகு நேரம் பிடித்தது. டீப்பாயில் வைத்த காஃபி சூடு ஆறிக் கொண்டிருந்தது.


பட விளக்கம்: சந்தேகத்தின் உச்சத்தில் மன உளைச்சலில் இருக்கும் இந்த நபரை வலைபோட்டு தேடி கண்டுபிடித்த இடம் http://www.bsimple.com/

-

Monday, November 1, 2010

மன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம் - II


இறுதி ஆட்டம் முதல் பார்ட் படிக்க இங்கே சொடுக்கவும். முதல் முறையாக நேராக இந்தப் பக்கத்திற்கு வருவோர் "வேதனைடா சாமி" என்று புலம்புவது காதில் கேட்கிறது. ப்ளீஸ் அதைப் படித்துப் பாருங்களேன். அப்புறமாக கீழே போய் எதிரணி ஆடிய கள்ளபார்ட் பற்றிய பதிவான ரெண்டாவது பார்ட் படிக்கவும். ஏற்கனவே படித்தவர்கள் ப்ளீஸ் கம் இன்.

village cricket

அவர்கள் திட்டம் புரிந்து போயிற்று..

எங்கள் துவக்க பந்துவீச்சு மிரட்டலை சாமர்த்தியமாக நெகோஷியேட் செய்வது வந்திருப்பவரின் பணி.. சிவா சொன்னதுபோல அவரை இனி சுவர் என்றே இனம் காணலாம்.. ஆறு ஓவர்களையும் அதிகபட்சம் அவரே சந்திக்கும்படி செய்வது.. அதன்பின்னர், சற்றே வலு குறைந்த எங்களின் மற்ற வீச்சாளர்களைப் பதம் பார்த்து வெற்றியடைவது.. இதுதான் அவர்களின் திட்டம். ஒரு சாதாரண மேட்சுக்கே இவ்வளவு சிந்திக்கும்போது, நாட்டின் பெருமையை முன்வைத்து ஆடப்படும் போட்டிகளில், 4 ஓவரில் 46 ரன் கொடுக்கும் அளவுக்கு ஒரு வீச்சாளரை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று நான் நினைப்பதுண்டு..

சரி..

வெங்கிட்டின் மற்ற பந்துகளை மிக நேர்த்தியாக ஆடியது சுவர்.. கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து முனையைத் தக்கவைத்தும் கொண்டது. நாங்கள் ஒரு சோதனை முயற்சியாக, இன்னொரு துவக்க வீச்சாளரை தாக்குதலில் ஈடுபடுத்தாமல், திருஞானம் என்ற வீச்சாளரை போடச்சொன்னோம். இனி வெங்கிட்டின் 3 ஓவர், ரமேஷின் 4 ஓவர் ஆக மொத்தம் ஏழு ஓவர்கள் ரிசர்வில் வைக்கப்பட்டன. சிங்கிள் ஓட்டம் எடுக்க முடியாதபடி பீல்டிங்கை நெருக்கினோம். "நீ முடிந்த அளவுக்கு டிஃபென்ஸ் வை.. எங்களுக்கென்ன .. உன் அணியின் மற்ற மட்டையாளர்கள் வரும்போது எங்கள் முதல்தர வீச்சாளர்கள் வீசுவார்கள்.." இது நாங்கள் அவர்களுக்கு உணர்த்திய செய்தி.. திருஞானத்தின் 5 பந்துகள் மெய்டனாகப் போயின. 6 வது பந்தில் வியூகத்தைத் தளர்த்தினோம். திருஞானம்கூட வேடிக்கையாக எங்கள் கேப்டனிடம் சொன்னான்.. " டேய் சரோ.. என் வாழ்க்கையின் முதல் மெய்டன் வீச நல்ல சான்ஸ் வந்திருக்கு.. ஏண்டா கெடுக்கறே படுபாவி..?"

ஆறாவது பந்தில், சுவர் அழகாக 'லெக் க்ளான்ஸ்' செய்து ஒரு ஓட்டம் எடுக்க முற்பட்டது.. எதிர்முனை மட்டையாளர் மறுதலிக்கவே திருஞானம் வாயெல்லாம் பல்..! அடுத்த ஓவரில் மீண்டும் எங்களுக்கு சிக்கல்.. ஓரளவு நன்றாக அடிக்கக்கூடிய எதிரணி மட்டையாளருக்கு வீசவேண்டும்.. யாரை ஈடுபடுத்துவது..? கூடிப் பேசினோம்.. "நிச்சயம் 1 ரன் எடுக்க மாட்டாங்கடா.. ரெண்டு நாலு போகாம பாத்துக்கிட்டோம்ன்னா சரி.." தணிகாசலம் முருகன் என்றொரு சுழல் வீச்சாளர் எங்களிடம் இருந்தான். மிகவும் வயதில் சிறியவன். பெரிய மேட்ச்களில் அவனைப் பயன்படுத்துவது இல்லை..திறமை இருந்தாலும் அவனிடம் சற்றே தன்னம்பிக்கை குறைவு.. தன்னால் அணி தோற்கக்கூடாது என்று பயப்படுவான்.. இந்தத் தொடர் முழுதும் அவனைப் பயன்படுத்தவே இல்லை.. "தணிகாவை ட்ரை பண்ணிப் பாப்பம்டா..!" யாரோ சொல்ல, அவன் கையில் பந்தைத் திணித்தோம்.. முதலில் தயங்கிய அவன், " நீயே ஃபீல்டிங் செட் பண்ணிக்கடா.." என்று கேப்டன் சொல்ல ஆர்வத்துடன் "சரிண்ணே..!" என்று சம்மதித்தான்..

அவன் செட் செய்த ஃபீல்டிங்கைப் பார்த்து நாங்களே குழம்பிப் போய்விட்டோம்.. மிட் ஆன், மிட் ஆஃப் என்ற இரு பொசிஷன்களை அம்பயரின் இருபுறமும் சற்றுத்தள்ளி நிற்கவைத்தான். அந்த பீல்டர்களைத் தாண்டி அடித்துவிட்டால் போதும்.. பந்து பவுண்டரிதான்.. முதல் பந்தை மட்டையாளர் தடுத்தார்.. தணிகா உடனே ஒரு காரியம் செய்தான்.. அவர் டிஃபென்ஸ் வைத்ததைப் பார்த்து கைதட்டினான்.. அது அவரைப் பாராட்டியா, இல்லை நக்கல் செய்தா என்று புரியவில்லை.. தணிகா, அடுத்த பந்தை நன்கு ஃப்ளைட் செய்ய, மட்டையாளர் காலைத் தூக்கிப்போட்டு அலறியவாறே வெளியேவந்து ஸ்ட்ரெய்ட் ஹூக் செய்தார்.. நாங்கள் அதிர்ச்சியடைந்து மேலே பார்க்க, விக்கெட் கீப்பரிடமிருந்து ஒரு சப்தம்.. "ஹவ் ஈஸ் இட்..!"

பார்த்தால் பந்து கீப்பர் கையில்.. மூன்று ஸ்டம்பும் தரையில் கிடக்க மட்டையாளர் கிரீசுக்குத் திரும்பக்கூடத் தோன்றாமல் பேந்த பேந்த விழித்துக்கொண்டு அசடு வழிய நிற்கிறார்.. " எப்படி இந்த பந்து மட்டையில் படாமல் தப்பித்தது..?" என்ற குழப்பத்தில்.. ! நாங்கள் எல்லோரும் ஓடிச்சென்று தணிகாவைத் தூக்கிக் கொண்டாடினோம்.. அப்போது எங்களுக்கு ஒன்று புரிந்தது.. இதுவரை சின்னப்பையந்தானே என்று அவனை பந்து போடச் சொல்லிவிட்டு பீல்டிங் செட்டப்பை நாங்கள் பார்த்துக்கொண்டோம்.. அவன் தன் விருப்பத்துக்கு பீல்டிங் அமைக்கமுடியாமலும், எங்கள் வியூகத்துக்கு வீசமுடியாமலும் ரன்களை இதற்கு முன்னால் வாரித்தந்திருக்கிறான் என்று.. அந்த ஓவரில் மேலும் ஒருவரை போல்ட் செய்தான் தணிகா..!


அதன் பின்னர், தணிகா போடுவது எல்லாம் முறைப்படியான பந்து வீச்சல்ல என்று க்ளெய்ம் செய்யப்பட்டு அம்பயர் அவனை வீசக்கூடாது என்று உத்தரவிட்டதும், வரலாறு காணாத அளவில் விக்கெட் விழுந்தபிறகு நோ பால் கொடுக்கப்பட்டதும், கீப்பர் கேட்ச் பிடித்து அவுட் கேட்டால் வைடு கொடுத்ததும், மட்டையாளர்கள் அனைத்து ஸ்டம்புகளையும் கவர் செய்து நின்று காலில் வாங்கினாலும் எங்கள் முறையீடுகள் செவிசாய்க்கப்படாது போனதும் எங்கள் அணியைத் தோல்வியுறச் செய்துவிட்டது..

பரிசளிக்க வந்த லோக்கல் வி ஐ பி, எங்களுக்கு இரண்டாம் பரிசை வழங்கும்போது மைக்கில் இப்படிச் சொன்னார்..

"தோல்வியும் வெற்றியும் விளையாட்டில் சாதாரணம்.. இன்று தோல்வியுற்ற மன்னார்குடி வீரர்கள் உற்சாகமிழக்கக்கூடாது.. வெற்றிபெற்ற அணியைப் போல திறமையை வளர்த்துக்கொண்டு, தாங்களும் அவ்வாறு உழைத்து வெற்றிபெற உறுதியேற்க வேண்டும்..!"

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம் அப்படின்னு அந்த தலைவர் அண்ணன் சொன்னது தான் அந்தப் போட்டிக்கே மணிமகுடம் வைத்தார்ப் போன்ற நிகழ்வு. மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார். எல்லோர் உள்ளங்களையும் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிவிட்டார். அண்ணன் எழுதியது போல கிரிக்கெட் கதைகள் ஏராளம் இருக்கிறது. மென்மேலும் கிரிக்கெட் எழுதி எல்லோரையும் மட்டையால் அடித்து இம்சிக்காமல் அடுத்த மன்னார்குடி எபிசோட் ஒரு இளமை துள்ளலாக வெளிவரும் என்று மகிழ்ச்சியோடு(!) தெரிவித்துக் கொள்கிறேன். அதுவரை மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நன்றி.

படமளித்த தர்மப்ரபு: http://www.sturgeonpublications.co.uk

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails