Monday, November 7, 2011

கமல்ஹாசன்: பிறந்தநாள் வாழ்த்துகள்

”சீச்சீ... உனக்கு கமலப் புடிக்குமா? அவன் கிஸ்ஸெல்லாம் அடிப்பான். நீ கெட்டப் பையன். எங்கிட்ட பேசாதே” என்று ஏழாவது எட்டாவது படிக்கும் போது கமல்ஹாசனைப் பிடிக்கும் என்று சொன்ன காரணத்தால் இப்படி சக வயது நண்பர்களால் ஓரங் கட்டப்பட்டேன். பேண்ட் போட்ட அண்ணாக்கள் ”பய விவரமானவனா இருக்கான்” என்று கண்ணடித்து சிரித்து கன்னம் தட்டினார்கள். தட்டிய கன்னத்தை தடவிக்கொண்டு புரியாமல் விழித்திருக்கிறேன்.

விக்ரமும் காக்கிச்சட்டையும் விவரம் புரிந்த பிறகு பார்த்தவுடன் எதற்கு அப்படி வம்பு அளந்தார்கள் என்று ஒரு பிட் அளவு புரிந்தது. எட்டு பிட் சேர்ந்தது ஒரு பைட் என்பதன் ஒரு பிட். சொச்சமிருக்கும் ஏழு பிட் புரிய இன்னும் ஏழு வருடங்கள் பிடித்தது. கண்ணும் கருத்துமாய் கைக்கு அடக்கமான குஷ்பூவைக் காதலிக்கும் சிங்காரவேலனாக நடித்த பொழுதுதான் எட்டாவது பிட் எனக்கு புரிந்து ஒரு பைட் கம்ப்ளீட் செய்தேன்.

சிவாஜிகணேசனை சிலாகிக்கும் அளவிற்கு கமல்ஹாசனை பொதுஜனங்கள் போற்றிப் புகழ் பாடுவதில்லை. எனக்குக் கூட மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்னவில் பத்மினியைப் தூணுக்குப் பின்னால் இருந்து லுக் விடும் சிவாஜியை ரொம்ப பிடிக்கும். அதேயளவு காக்கிச்சட்டையில் மொட்டை மாடியில் அம்பிகாவிடம் கண்மணியே பேசு என்று குழையும் கமலையும் பிடிக்கும். அவரைப் பற்றிய ஒரே சார்ஜ்ஷீட்: கிஸ் அடிப்பார். கட்டிப் பிடிப்பார். இப்படியாக தமிழ் மரபுக்கு எதிராக திரைகளில் தோன்றுகிறார் என்று என்றைக்கு கொடிபிடித்தார்களோ, இப்போது அழத் தெரியாத புதுமுகங்கள் கூட மூக்குரச முத்தம் கொடுக்கிறார்கள்.

இயற்கையாகவே நகைச்சுவை ததும்ப நடிப்பார். சென்னை பாஷை அவருக்கு கை வந்த கலை. குணா நல்லாயிருக்குன்னு சொன்னா உடனே “நிஜ வாழ்க்கையை வாழ்ந்திருக்கார்னு சொல்லு” என்று கைகொட்டி சிரிப்பார்கள். நாயகனில் “ஆ....ஆ.....” என்று அழுதது அழியாப் புகழ் பெற்று பேட்டைக்கு பேட்டை மேடைக்கு மேடை மிமிக்கிரி செய்தார்கள்.

எனக்குப் பிடித்த பத்து கமல் படங்கள். ஸார்ட்டிங் ஆர்டர் எதுவும் இப்பட்டியலுக்கு கிடையாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொன்று சிறந்தது .

  1. தேவர் மகன்
  2. மகாநதி
  3. மைக்கேல் மதன காம ராஜன்
  4. நாயகன்
  5. குணா
  6. அவ்வை ஷண்முகி
  7. காக்கிச் சட்டை
  8. சிகப்பு ரோஜாக்கள்
  9. இந்தியன்
  10. உன்னால் முடியும் தம்பி


பத்துக்குள் அடக்க முடியாதவர் கமல். ரசிகர்களை நற்பணி மன்றங்கள் அமைக்கச் சொல்லி ரத்ததானம் கொடுக்க வைத்தார். ஏழைகளுக்கு நோட்டுப் புஸ்தகம் பரிசளிக்கச் சொன்னார். அநேக நட்சத்திரங்களைப் போல சுயநலத்திலும் பொதுநலமாய் நற்காரியங்கள் பல செய்வதற்கு ஊன்றுகோலாக இருக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

பத்துப்பாட்டும் போட்டுடுவோம்.

டிக்.டிக்.டிக்கில் மாதவியை க்ளிக்கிப் பாடும்...

-

மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது....

தெய்வீக ராகம்... ராஜாவின் ஆரம்ப ப்ளூட் பிட்... தெவிட்டாத தெள்ளமுது...

ராதா ராதா நீ எங்கே.... மீண்டும் கோகிலாவில்...

நீல வான ஓடையில்..... தலைவர் எஸ்.பி.பியின் ஆரம்ப ஆலாபனை அமர்க்களம்... 


அம்பிகாவின் பட்டுக் கண்ணம் கமல் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளுமாம்... காக்கிச்சட்டையில்...


ஊர்வசியுடன்.... சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கும்... அந்த ஒரு நிமிடம்  பாடல்....




அமலாவுடன் பூங்காற்று உன் பேர் சொல்ல என்று வெற்றி விழாவில்.....

கௌதமியுடன் காதலை வாழ வைக்கும் கமல்.. அபூர்வ சகோதரர்கள் படத்தில்...




கிண்ணத்தில் தேன் வடித்து....


-

Friday, November 4, 2011

மக்கு நான் கொக்கல்ல


சலனமற்ற காடு தனிமையில் ஆழ்ந்திருந்தது. பட்சிகளின் பண்ணிசையும் காற்றின் ”ஹோ” என்ற ஓசையையும் தவிர்த்து நிசப்தமாக இருந்தது. ஜடாமுடியுடன் ஒரு தவஸ்ரேஷ்டர் ஏரிக்கரையில் நின்று நித்யானுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார். “க்ரீச்..க்ரீச்” என்ற பறவையின் சப்தத்தைத் தொடர்ந்து ’சொத்’தென்று அவர் சூரியனை நோக்கி ஏந்திய கையில் ஏதோ விழுந்தது. அது பறவையின் எச்சம். கோபாவேசமாக அண்ணாந்து அக்னிப் பார்வையை விண்ணில் செலுத்தினார். அவரது பார்வையில் அங்கே பறந்து கொண்டிருந்த எச்சமிட்ட கொக்கு பஸ்பமாகி செத்துக் கீழே விழுந்தது.

பொசுக்கியவர் பெயர் கௌசிகன். வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். வயதான தாய் தந்தையரின் சொல்லைக் கேளாமல், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காமல் "தவமே சிறந்தது” என்று கங்கணம் கட்டிக்கொண்டு காடுகளில் கௌசிகன் பன்னெடுங்காலமாக கடும் தவம் புரிந்தார். கௌசிகனுக்கு கொக்கு பொசுங்கியதில் ஆச்சர்யம். ஆஹா. நமக்கு தவப்பலன் பூரணமாகக் கிடைத்துவிட்டது என்று அகமகிழ்ந்தார். புதிய சக்திபெற்ற சந்தோஷம் மற்றும் சுடுபார்வை ஒரு அப்பாவி ஜீவனைக் கொன்றுவிட்டதே என்ற வருத்தம் என்று கலவையான எண்ணத்தில் காட்டை விட்டு பக்கத்துக் கிராமத்திற்கு பிக்ஷைக்கு கிளம்பினார்.

நாளுக்கொரு வீடு பிக்ஷை எடுத்து உண்பது என்று முடிவு செய்தவராய் “பவதி பிக்‌ஷாம் தேஹி” என்று இருகையையும் ஏந்தி நின்றார். மூன்று முறை கேட்டு ஒரு வீட்டிலிருந்து பிக்‌ஷை அரிசி வரவில்லையென்றால் அன்றைக்கு பட்டினி தான். உள்ளுக்குள் கோபம் ஆறாக ஊற்றெடுக்கத் தொடங்கியது. மீண்டும் ஒருமுறை “பவதி பிக்ஷாம் தேஹி” என்று உரத்தக் குரலில் பிக்ஷை கேட்டார். இவரைப் பார்த்துக்கொண்டே அந்த வீட்டின் இல்லத்தரசி கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். இப்பவும் பதில் வரவில்லை. கௌசிகனுக்கு முகம் ஜிவ்வென்று சிவந்தது. கோபத்தின் உச்சிக்கு சென்று இன்னும் சப்தமாக “பவதி பிக்ஷாம் தேஹி” என்று குரலை உயர்த்தினார்.

அச்சந்தர்ப்பத்தில் அப்பெண்மணியின் கணவனார் வேலையிலிருந்து வீடு திரும்பினார். கொல்லைப்புறத்தில் இருந்தவள் போட்டது போட்டபடி ஓடிடோடி வந்தாள். வாசலில் கையேந்தி நின்றவரைப் பார்த்து “கொஞ்சம் பொருங்கள்” என்று கையால் சமிக்ஞை செய்துவிட்டு கணவனுக்கு சிஸ்ருஷ்டை செய்யலானாள். இவருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு அவளுக்காக காந்திருந்தார்.

கோபம் எல்லைமீறிப் போய் சபிக்கலாம் என்று நினைக்கும் வேளையில் அந்த வீட்டின் குலஸ்திரீ கையில் அரிசியுடன் பிட்சையிட வந்தாள். அவளை சுட்டெரித்துவிடும் பார்வையை அவள் மேல் வீசினார் கௌசிகன். அப்பெண்மணி கற்புக்கரசி. மாதரசி. சிரித்த வண்ணம் சாந்தமாக “உன் கோபப்பார்வையில் சுட்டுப் பொசுக்கிவிடுவதற்கு என்னை அந்தக் கொக்கென்று நினைத்தாயோ?” என்று கேலியாகக் கேட்டாள்.

ஆளரவமற்ற பகுதியில் தான் கொக்கை எரித்தது இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று கௌசிகனுக்கு மிகுந்த ஆச்சரியம். 

“அம்மா! நீங்கள் உத்தமமான பெண். நான் காட்டில் கொக்கை எரித்தது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று பணிந்து கேட்டார் கௌசிகன்.

 ”முனிவரே! நான் என் இல்லத்து தேவைகளனைத்தையும் குறையில்லாமல் நிறைவேற்றுகிறேன். எனது வயதான மாமியாரையும், மாமனாரையும் சொந்த தாய் தகப்பன் போல போற்றிக் காத்து வருகிறேன். மேலும், எனது கணவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் அனைத்தையும் குறையில்லாமல் செய்கிறேன். என்னுடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு அவர்கள் மனம் கோணாமல் தாராளமாக பொருள் தருகிறேன். என் கணவருக்கு சேவை செய்தபின் நேரமிருப்பின் மற்றவர்களுக்கு உபகாரமாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய தர்மம். உங்களுக்கு மேலும் விவரம் வேண்டுமென்றால் மிதிலையில் தர்மவியாதரன் என்றவரிடம் போய் தர்மத்தின் விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினாள்.

அம்மாதருள் மாணிக்கத்தை வணங்கி விடைபெற்று மிதிலை மாநகரத்திற்கு சென்றார் கௌசிகன். இவ்வளவு பெரிய நகரத்தில் தர்மவியாதரனை எங்கு தேடுவது என்ற யோசனையில் அங்கு கடைவீதியில் விசாரித்தார். ஒரு மாமிசம் விற்கும் கடையைக் காட்டி அங்கிருப்பவர் தான் தர்மவியாதரன் என்றார்கள்.

கசாப்புக்கடை வைத்திருப்பவரிடன் என்ன தர்மத்தை நாம் எதிர்பார்க்க முடியும் என்ற எண்ணத்தோடு அந்தக் கடையை நெருங்கினார் கௌசிகன்.

மிகவும் தயக்கத்தோடு “தர்ம வியாதரன்....” என்று சங்கோஜமாக கேட்ட கௌசிகனுக்கு “வாருங்கள்.. வாருங்கள்... நீங்கள் கொக்கை எரித்ததை ஞானக்கண்ணால் கண்ட பதிவிரதையான பெண்மணி சொல்லி என்னிடம் தர்ம விளக்கம் பெற வந்திருக்கிறீர்கள். வரவேண்டும். வரவேண்டும். எனது வீட்டிற்கு சென்று பேசலாம்” என்று அன்போடு அழைத்துச் சென்றார்.

ஏற்கனவே கொக்கை எரித்ததை எங்கிருந்தோ கண்டுகொண்ட அந்த பதிவிரதை பற்றிய ஆச்சரியத்துடன் வந்தவர் இங்கே தர்மவியாதரரின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போனார்.

வீட்டில் தனக்கு அநேக உபசாரங்களைச் செய்த தர்மவியாதரரிடம் “எங்கோ நடைபெற்ற சம்பவங்களை இங்கிருந்தே அறிந்த நீர் பல தர்மங்களை தெரிந்தவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. இருந்தாலும் இந்த மாமிசம் விற்கும் தொழிலை ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது என்னுடைய குலத்தொழில். என்னுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இத்தொழிலை செய்துவருகிறோம். இது கொஞ்சம் மோசமான தொழில் தான். ஆனால் முன் பிறவில் நான் செய்த வினையை இப்போது அனுபவிக்கிறேன். இப்புவியில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஒன்றிர்கொன்று உணவாக அமைகிறது. இயற்கையை ஒட்டியும் நேர்மையாகவும் நான் செய்யும் இத்தொழில் மோசமானது அல்ல.”

இதன் பின்னர், பல தர்ம விளக்கங்களை கௌசிகனுக்கு எடுத்துக் கூறலானார் தர்மவியாதரன்.

“பொய் பேசுவதை மனிதர்கள் விட்டுவிட வேண்டும். நன்மைக்கு அளவுகடந்த இன்பப் படுவதும், தீமைக்கு துன்பக்கடலில் வீழ்வதும் முற்றிலுமாக தவிக்கவேண்டிய குணங்கள். தர்மம் மிகவும் நுட்பமானது. இக்கட்டான வேளைகளில் தர்மம் காக்க பொய் சொல்லலாம். ஆபத்தில் சொன்ன பொய்யை மற்றவர்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பின்னர் பிரிதொசொல்வது பாபத்தை விளைவிக்கும்.

இவ்வுலகத்தில் கெட்டவன் சுகிப்பதும், நல்லவன் நலங்கெட்டுப் போவதும் தத்தம் முன்வினைப்பயனே! அவரவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப அடுத்த பிறவியில் வாழ்கிறார்கள்.

அதற்கு கௌசிகர், “இன்னார் பிறந்தார், இறந்தார் என்றால் அது அந்த ஜீவனைப் பற்றித்தானே, அப்படியிருக்கையில் ஜீவன் அழிவற்றது என்று எப்படிக் கூறலாம்?” என்று கேட்டார்.

“ஒருவர் இறக்கும்போது அழிவது சரீரம்தானே தவிர ஜீவன் அல்ல. ஜீவன் ஒரு உடலை விடும் பொழுது இறப்பு என்றும் இன்னொரு உடலை அடையும் பொழுது பிறப்பு என்றும் கூறுகிறார்கள். சரீரம்தான் அழிகிறதே தவிர ஜீவன் அழிவற்றது. ஜீவன் அமரத்தன்மை வாய்ந்தது.” என்றார் தர்மவியாதரர்.

மேலும் அவர் கூறினார்: “மனிதன் மூவகைக் குணங்களோடு படைக்கப்பட்டிருக்கிறான். தமோ, ரஜஸ், சத்வ என்று அவை வகைப்படும். தமோ குணம் படைத்தவன் சோம்பேறியாகவும், முட்டாளாகவும் இருப்பான். ரஜஸ் படைத்தவன் பொருள் ஈட்டுவதிலும், சக்தி உள்ளவனாகவும் இருப்பான். ஆனால் அவனிடம் தான் என்ற அகந்தையும் இருமாப்பும் இருக்கும். சத்வ குணம் படைத்தவன் சாந்தமாகவும், பற்றற்றும் இருப்பான். பொருள் ஈட்டுவதில் அவன் மனம் செல்லாது”.

இப்படி பல தர்மங்களை கௌசிகருக்கு எடுத்துரைத்து தாய் தந்தையருக்கு பணிவிடை செய்து புண்ணியம் பெற்றுக்கொள்ளுமாறு தர்மவியாதரர் உபதேசித்தார்.

பின்குறிப்பு: மகாபாரதத்தில் மார்க்கண்டேய மகரிஷி தர்மபுத்திரருக்கு வனபர்வத்தில் சொல்லும் இக்கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய வழக்கமான மொழியை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அடக்கமாக எழுதினேன். போரடித்திருக்கலாம். இருந்தாலும் காலை வாக்கிங்கில் கசாப்புக்கடை பார்த்ததும் ஞாபகம் வந்ததால் எழுதினேன்.

பட உதவி: mbp.photoshelter.com

-

Tuesday, November 1, 2011

மன்னார்குடி டேஸ் - ஸ்நேக் பார்

ஒரு ரூபாய் பட்டர் பிஸ்கெட், ஐம்பது காசு கடலை உருண்டை, சரம் சரமாக பல டினாமினேஷன்களில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஏ.ஆர்.ஆர் மற்றும் நிஜாம் பாக்குப் பொட்டலங்கள், ஹால்ஸ் டப்பா, பின் பாகத்தில் பஞ்சு வைத்த மற்றும் அல்லாத பல கம்பெனி சிகரெட்டுகள், சணல் கயிறில் நெருப்பு, உள்ளே ரெண்டு ப்ளாஸ்டிக் டேபிள் மற்றும் நாலைந்து ஸ்டூல்கள் என்று முன்புறம் பாய்லர் வைத்த டீக் கடைகளுக்கு மாடர்ன் நாமகரணம் ஸ்நேக் பார்! மன்னையில் முக்காலே மூணு வீசம் இளைஞர்கள் திருட்டு தம் அடிக்கத் தேடும் இடம் அது. “காலிப் பய. அவன் சிகிரெட்டு பிடிப்பான்” என்று உற்றாரும் ஊராரும் தூற்றக் கூடாது என்று மறைவிடம் தேடுவோர் நாடுமிடம் ஸ்நேக் பார்.

பந்தலடியில் உடுப்பி கிருஷ்ணாபவன் எதிரில் ஒரு சேட்டன் ஸ்நேக் பார் வைத்திருந்தார். பல பேருக்கு அதுதான் ஆஸ்தான ’தம்’மிடம். சேட்டன் கட்டையாய் பூப்போட்ட கைலி கட்டியிருப்பார். சேரநாட்டு அநேக சேட்டன்மார்கள் போல முன்பக்கம் சொட்டை வாங்கி, சட்டையில்லாமல் இருப்பார். அவரே டீ மாஸ்டர், அவரே சப்ளையர். எனது நண்பர்களில் பலர் அவருடைய டீக் கஸ்டமர்கள். “எந்தா!” என்று விளிக்கும் சட்டையில்லாத கைலிச் சேட்டனின் கட்டஞ்சாயாவில் பல இளைஞர்கள் கவிழ்ந்திருந்தார்கள். ஏனைய வென்ட்டிலேஷன் இல்லாத கீக்கிடமான ஸ்நேக் பார்களைவிட கொஞ்சம் விஸ்தாரமானது அந்த மலையாள ஸ்நேக் பார்.


அந்நாளில் ஜனசந்தடி மிகுந்த அங்காடித் தெருக்களில் மலிந்திருந்தன ஸ்நேக் பார்கள். “மாப்ள” என்று தோளோடு தோள் சேர்த்து ஓருயிர் ஈருடலாக உட்புகுவர். ஒரு அரைமணி நேரம் புகை சூழ்ந்த தேவலோக வாசம். கடைசியில் ஒரு ஹால்ஸ் அல்லது பாக்குப் போட்டுக் கொண்டு வெளிவரும் வேளையில் அவர்கள் முகங்களில் ஜொலிக்கும் திருப்தி கோடி ரூபாய் கொடுத்தாலும் அவர்களுக்கு இவ்வையகத்தில் வேறெங்கிலும் கிடைக்காது.

ஏட்டனின் பாருக்கு தொழில் போட்டியாக அதே ஏரியாவில் இனிய உதயமானது இன்னொரு ஸ்நேக் பார். எஸ்.பி.பியும் ராஜாவும் கைக் கோர்த்துக்கொண்டு அவர்களுக்காக உழைத்தார்கள். வெளியே தைரியமாக சிகரெட்டும் கையுமாக திரியும் தீரர்களைக் கூட கட்டி இழுத்தது தேன் சொட்டும் பாடல்கள். சில சமயம் காது கிழியும் பாடல்களுக்கிடையில் ஒரு சிகரெட்டை வாங்கி விரலிடுக்கில் சொருக்கிக்கொண்டு ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருப்போரும் உண்டு. ஏதோ தயிர் சாதத்துக்கு எலும்பிச்சங்காய் ஊறுகாய் போல டீக்கு தொட்டுகொள்ள சிகரெட்டா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் அதிர்ச்சியுற்று “கண்ணு வழியா புகை விடட்டா” என்றான் கிங்ஸ் சிகரெட் போல நெடுநெடுவென வளர்ந்த நண்பன் ஒருவன்.

புதியதாய் அரும்புமீசை முளைத்து குறும்புப் பார்வையுடன் ஆணாகி ஆளாகி வரும் விடலைகளுக்கு சிகரெட் போன்ற லாஹிரி வஸ்துக்கள் கற்றுக்கொள்ளும் கலாசாலைகளாக பணியாற்றிக்கொண்டிருந்தன பல ஸ்நேக்குகள். “அக்கும்..ஹுக்கும்” என்று இருதயம் வெளியே வந்து விழும்வரை இருமி உள்ளுக்கு இழுப்பார்கள். திருட்டு தம் கோஷ்ட்டிகளின் புகலிடமாகவும் கூடாரமாகவும் செயல்பட்டுவந்த ஸ்நேக் பார்களில், தான் நண்பர்களிடமும் பெற்றோரிடமும் பிச்சையெடுத்து காலில் விழுந்து காசு பொருக்கிக்கொண்டு வந்தாலும் உருப்படியாக வாய்பொத்தி சமர்த்தாக இருக்கும் நண்பனிடம் “மாப்ள! தம் வேணுமா” என்று விருந்தோம்பி தனக்கொரு இழுப்பு அவனுக்கொரு இழுப்பு என்று ’தம்’ தர்மம் மற்றும் தம்தர்மம் காத்து நட்புக்கு இலக்கணமாக நின்ற நண்பர்களை நினைக்கும் பொழுது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிறது.

இதற்கு மேல் இந்த தம் பர்வத்தை விலாவாரியாக எழுதி, நீங்கள் என்போன்று இப்போது காபி மட்டும் குடிக்கும் டீ டோட்டலரை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்ற பயத்துடன் முடிக்கிறேன். வணக்கம்.

பின் குறிப்பு: சிகரெட் குடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது, அதைப் பற்றி படித்தல் அதைவிட தீங்கானது என்றெண்ணி இதைப் படிக்காமல் ஸ்க்ரால் பாரை உருட்டி கடைசி வரை நீங்கள் வந்துவிட்டால், மேலே போய் ஒருக்கா படித்துவிடுங்களேன்.


பட உதவி: http://flashnewstoday.com/
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails