Monday, May 13, 2013

உலகம்மை உமையம்மை

அன்னையர் தினத்தில் உலகனைத்துக்கும் அம்மையான உமையம்மையைத் தரிசிக்க திருவான்மியூர் சென்றிருந்தேன். காரை நிறுத்துவதற்குள் “சார் 20 ரூபா கொடுங்க..” என்று எங்கிருந்தோ மாயமாகப் பறந்து வந்தவன் பச்சையில் பார்க்கிங் சீட்டை முகத்துக்கு நீட்டினான். உள்ளே நுழைந்தவுடன் பிள்ளையாருக்குக் குட்டிக்கொண்டு மருந்தீஸ்வரரைக் காண நுழைந்தோம். தாத்தாவும் பாட்டியுமாக பக்தர் கூட்டம் பிரகாரத்தில் லோகக்ஷேமங்களை பேசிக்கொண்டிருந்தது.

இரும்பு கேட்டு காவலுக்குள் தியாகராஜா ஏகாந்தமாக இருந்தார். பார்த்துக்கொண்டே சொற்ப பக்தர்கள் கைக் கூப்பி நிற்கும் மருந்தீஸ்வரர் சன்னிதி அடைந்தோம். திருவாசியைச் சுற்றிலும் அகல் ஏற்றி அரைவட்டமாய் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. புஷ்பங்களாலும் வில்வத்தினாலும் மாலைகள் அணிந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தார். 'க்'கில்லாமல் எழுதியிருந்த கோஷ்ட துர்காவைத் தரிசித்தோம். எண்ணையால் தங்களது இஷ்டங்களை எழுதி அம்மனுக்குத் தூது விட்டிருந்தார்கள்.

சண்டிகேஸ்வரர் எந்த சிவன் கோவிலிலும் வீற்றிருக்கும்படி விளக்கில்லாமல் இருட்டில் சிவயோகத்தில் இருந்தார். ஆனால் அவருக்கு விசேஷமாக வெள்ளியில் சட்டை மாட்டிவிட்டிருந்தார்கள். அவரைத் தொந்தரவு செய்யாமல் மனதில் வேண்டிக்கொண்டு வலம் வந்து தெற்கத்திக் கடவுளை “குருவே ஸர்வ லோகாணாம் பிஷஜே பவரோகிணாம்...” ஜெபித்து தெக்ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்து வெளிப்பிரகாரத்திற்கு வந்தோம்.

பசுமடத்தில் ஆரோக்கியமான பசுக்களுக்கு அகத்திக்கீரைக் கட்டு கொடுத்துக்கொண்டிருந்த மூதாட்டியைப் பார்த்ததும் ”கடைத்தெருலேர்ந்து வரும் போது ஆத்திக்கீரைக் கட்டு ஒண்ணு வாங்கிண்டு வாடா.. வாசல்ல வர்ற லெக்ஷ்மிக்கு கொடுக்கணும்”ன்னு கேட்ட பாட்டியின் குரல் காதுகளில் ஒலித்தது.

வால்மீகி மற்றும் அகத்தியருக்கு ஈஸ்வரன் காட்சிகொடுத்த வன்னிமரத்தை வலம் வந்தோம். அகத்தியருக்கு தரிசனம் கொடுத்து மூலிகை மற்றும் வைத்தியங்களை மருந்தீஸ்வரர் கற்றுக்கொடுத்த இடமாம். வன்னி மரத்துக்கு திருநீற்றுப்பட்டை இட்டு பக்தியில் திளைக்க விட்டிருந்தார்கள்.

திரிபுரசுந்தரி சன்னிதிக்கு வெளியே சரபேஸ்வரர் தூணைச் சுற்றி ஏகக் கூட்டம். பக்தர் ஒருவர் கல்கண்டு பிரசாதம் பிடிபிடியாக அள்ளி அனைவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தார். உள்ளே மடிசார்க் கட்டோடு திரிபுரசுந்தரி அனைவருக்கும் அருள்பாலித்துக் கொண்டிருந்தாள். குங்குமம் கொடுத்து ”நகருங்க... நகருங்க” என்று வாயால் நகர்த்தினார் குருக்கள். அம்மன் சன்னிதி திருச்சுற்று வருகையில் கடப்பா கல்லில் எழுதியிருந்த அபிராமி அந்தாதியைச் சிரத்தையோடு சட்டைப் பாவாடையணிந்த பெண் படித்துக்கொண்டிருந்தது.

அம்மன் சன்னிதி வெளியே இன்னமும் கல்கண்டு பிரசாத விநியோகம் நடந்துகொண்டிருந்தது. கோபுரவாசல் தாண்டி வெளியே வரும் போது வழியில் இருந்த டாக்டர் க்ளினிக் வாசலில் கோபுரத்தைப் பார்த்துக் கண்ணத்தில் போட்டுக்கொண்டே நுழைந்த வெள்ளைச் சட்டைப் பெரியவருக்கு மருந்தீஸ்வரர் அருள்புரிவாக!!

(இதைத் தட்டச்சு செய்யும்போது சுதாவின் “எப்போ வருவாரோ.. எந்தன் கலி தீர..”யை ஜோன்பூரியிலும், ஆபேரியில் “பித்தன் என்றாலும் பேயன் என்றாலும் சித்தமெல்லாம் அவன் பால் செல்லுதம்மா”வும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அண்டங்கள் நடுங்கிட அணிந்தவர் அரவமாலை... நீலகண்டனை... மங்கை சிவகாமி மணாளனை... காமனைக் கண்ணால் எரித்த மகேசனை... கமகங்களில் உருக்கிக்கொண்டிருக்கிறார்)

Friday, May 10, 2013

பர்வதக்கா

"எங்கப்பா சின்ன வயசிலேயே தவறிட்டார். அம்மாவும் என்னைப் பெத்துப்போட்டுட்டு காலமாயிட்டா. இங்க பாருங்கோ.. இத்துணூண்டுலேர்ந்து... என் கையைப் பாருங்கோ.. இத்துணூண்டுலேர்ந்து... அக்காதான் என்னை எடுத்து வளர்த்தா.. ரொம்பவும் தங்கமானவ..... எப்போதும் சிரிச்ச முகம்... தயாள குணம்.. ஏதோ யூரினரி இன்ஃபெக்ஷன்னு பேசிக்கிறா... சீஃப் டாக்டர் வந்து பார்த்தாதான் என்னென்னு தீர்க்கமாத் தெரியுங்கிறா....”

ஆஸ்பத்திரி காரிடாரின் செண்டட் ஃபினாயில் வாசனையைத் தாண்டி வார்டுக்குள் நுழைந்து காஃபி ஃபிளாஸ்க் வயர்க்கூடையை பாட்டியின் படுக்கையருகே வைத்துவிட்டு நிமிர்ந்து பக்கத்தில் வீசிய ஒரு ஸ்நேகப் புன்னகைக்கு போன பாரா அளவுக்குப் பேசியிருந்தார். ஜன்னலோரமாகப் படுக்கையில் கிடந்த ஆஜானுபாகுவான அம்மாவிற்கு அட்டெண்டராக கோடு போட்ட தொளதொளா காமராஜர் சட்டையும் மயில்கண் வேஷ்டியுமாக உட்கார்ந்திருந்த அந்தப் பெரியவர் ஆதூரமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். லேசாக அம்மைவட்ட முகம். குடைமிளகாய் மூக்கின் மேலிருந்த நோஸ் பேட் தழும்பு அவர் பிறவிக் கண்ணாடிக்காரர் என்று காட்டியது. சாக்தத்தில் அதீத பற்று மிக்கவர் போலும். நெற்றியில் தீற்றலாய்க் குங்குமம் மணத்தது. கை மணிக்கட்டில் சிவப்புக் கலர் முடிகயிறு கட்டியிருந்தது. வார்த்தைக்கு வார்த்தை எப்போதும் வாயில் ஒரு அசட்டுப் புன்னகை.

உடம்பெங்கும் துளைத்து காவடிக்கு அலகு குத்தினாற்போல ட்யூப் மாட்டிப் படுத்திருந்த அந்த அம்மாவின் உடம்பு கண்ணுக்குத் தெரிந்த இடமெல்லாம் கண்டுகண்டாக வீங்கியிருந்தது. காலில் பாளம்பாளமாக வெடித்திருந்த பித்த வெடிப்புகள் அவர் ஒரு உழைத்த கட்டை என்று கட்டியம் கூறியது. பாத்திரம் தேய்த்துக் காய்த்துப்போயிருந்த கையை கட்டிலோடு சேர்த்துக் கட்டியிருந்தார்கள். வாயோரத்தில் லேசாக எச்சில் வழிந்தது. பக்கத்திலிருந்த அந்த அட்டெண்டர் டிஷ்யூ பேப்பர் வைத்து சாஃப்ட்டாகத் துடைத்துவிட்டார்.

என்னுடைய நோய் விசாரிக்கும் பார்வையைப் புரிந்து கொண்டது போல
”யூரினரி ட்ராக்ல இன்ஃபெக்ஷன்ங்கிறதுனால யூரின் சரியா வரமாட்டேங்கிறது.. நீர் பிரியாமத் தேங்கிப் போயி உடம்பெல்லாம் கெழங்கா வீங்கிப் போயிடுத்து. ஏற்கனவே பெருத்த சரீரம். ரெண்டிரெண்டு பவுனுக்கு ரெண்டு ஜோடி வளை போட்டிருந்தா.. கார்த்தாலதான் ஆசாரியை கூட்டிண்டு வந்து கட் பண்ணி எடுத்தோம். மோதிரவிரல்ல பவழத்தைக் கட் பண்ணும் போது லேசா கீறிடுத்து.. பாருங்கோ...” துவண்ட கையைத் தூக்கிக் காண்பித்தார். உப்பிய மோதிர விரலில் கட்டிங் ப்ளேயரால் பதிந்த சின்ன ரத்தக் கோடு ரேகையாய்த் தெரிந்தது. பாவம்.

“என்ன ஏஜ் இருக்கும் சார்?”

“போன ஃபிப்ரவரியோட எழுவத்து மூணு”

படுக்கையில் கால்மாட்டில் மாட்டியிருந்த அட்டையில் ”PATIENT NAME" க்கு அருகில் “:”னோடு சேர்த்து பர்வதமும் கீழே “AGE: 73” ம் தெரிந்தது. பேஷன்ட் ஹிஸ்டரி ஷீட்டின் கடைசியில் சில கிறுக்கலான மருந்துப்பெயர்களுடன் வைத்தியம் பார்த்த டாக்டரின் கையெழுத்தும் சேர்ந்திருந்தது.

“நீங்க?”

“என்ன கேட்டீங்க?” என்று காதருகில் கையை ஒத்தாசைக்குக் கொடுத்துக் கேட்டார்.

நான் நுழைந்த போது குடும்ப ஸகிதம் சூறாவளியாய் உள்ளே வந்த விஸிட்டர் கும்பலைப் பார்த்து ”நய்நய்ன்னு பேசி பேஷண்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று அடக்கிய, கருணையோடு கண்டிப்பு இரத்தமும் ஓடும் சிலுவையணிந்த ஸ்டாஃப் நர்ஸிடம் வசவு வாங்கக்கூடாது என்று மெதுவாகக் கேட்டதனாலும், டிக்கிடிக்கியென கிலுகிலுப்பையாய் ஓடும் கூரை ஃபேன் சப்தத்திலும் அவருக்கு காதில் விழவில்லை போலும்.

“இல்ல.. நீங்க.. அவங்களுக்கு...” என்று ஆரம்பித்து கடைசி ’யாரு’வும் ’?’க்குறியும் போடாமல் தனித்தனியாக கேட்டேன்.

“நா அவளோட கடேசித் தம்பி. ஐயப்பன். சேலத்துல இருக்கேன்.”

”எங்கியாவது ஒர்க் பண்றீங்களா?”

”சன்மார்ல ஒர்க் பண்றேன். வர வருஷம் ரிடையர்மெண்ட்.”

“அக்கான்னா ரொம்ப பாசம் போலருக்கு... இப்படித் தவிக்கிறீங்களே...”

”அக்காவா சார் இவ.. இல்ல..அம்மா.. அம்மா இவ எனக்கு. வேளாவேளைக்கு சாதம் போட்டு... சனிக்கிழமையானா எண்ண தேச்சுவிட்டு... ஸ்கூல் கொண்டு போய் விட்டு.. ரிப்போர்ட் கார்ட்ல கையெழுத்துக்கூட போட்ருக்கா.. பெத்தவ மாதிரி என்னைப் பார்த்துண்டா... நா கடைக்குட்டிங்கிறதால எம்மேல அவ்ளோ ப்ரியம். பாவம் திடீர்னு இப்டி வந்துடுத்து. இப்டி படுத்த படுக்கையாயிட்டாளே... ஈஸ்வரா..... தெய்வத்துக்கே இது அடுக்குமா?”

”அழாதீங்க சார்... ம்.. கண்ணைத் துடைச்சுக்கோங்க.. வயசாவுதில்லை.. என்ன சார் குழந்தைமாதிரி தேம்புறீங்க? கூடிய சீக்கிரம் எழுந்தும் உட்கார்ந்துடுவாங்க பாருங்க.. முகத்தை துடைங்க... ட்யூட்டி சிஸ்டர் வந்தா என்னையும் எதுனா சொல்லுவாங்க...”

நோய்வாய்ப்பட்டு தன்னிலை மறந்து சயனித்திருக்கும் படுக்கையாளர்களை பயமுறுத்துவது போல “சர்ர்ர்ர்”ரென்று ராக்கெட் வேகத்தில் மூக்கைச் சிந்திக் கர்ச்சீஃப்பில் துடைத்துக்கொண்டார். பக்கத்துப் படுக்கையில் சலேன் ஏறிக்கொண்டிருந்தவருக்கு பயத்தால் ஒருமுறை உடல் உதறித் தூக்கிப்போட்டது. தாலி பாக்கியத்திற்காக பாக்கெட் சைஸ் சஷ்டி கவசம் (அட்டை கசங்கியது. கோயிலுக்கு விளக்கேற்றும் எண்ணெய்க் கறை படிந்தது) புத்தகம் படித்துக்கொண்டிருந்த அவரது மனைவி உதடு முருகனை முணுமுணுக்க ஐயப்பனை விரோதமாகத் திரும்பிப்பார்த்தார்.

என்னை ரிலீவ் செய்வதற்கு அட்டெண்டர் வர இன்னும் அரை மணிநேரமாவது ஆகும். அதுவரை ஆறுதலாக இருக்கட்டுமேயென்று ”என்னாச்சு.. ஏன் இப்படியானாங்க?” என்று கூடுதல் விபரங்கள் கேட்டேன். பொழுதுபோக்குப் பேச்சு என்பது நமது ரத்தத்தில் ஊறிய சமாச்சாரம்.

“ரெண்டு மாசம் முன்னாடி வரை நன்னாத்தான் நடமாடிண்டிருந்தா.. திடீர்னு பொதேர்..பொதேர்னு கீழே விழ ஆரம்பிச்சுட்டா.. ஒரு நா சமச்சிண்டிருக்கும் போது ஓடிண்டிருக்கிற க்ரைண்டர் மேலே சாஞ்சுட்டா.. ஒரு நா வாசல்ல கோலம்போடும் போது... இப்படி நெலையில்லாம இருந்தவ ஒரு நாள் பாத்ரூம் வாசல்ல பொதகடீர்னு துணி ஒனத்தற கழி மாதிரி கீழே விழுந்து.... படியில முட்டிண்டு... மண்டை உடைஞ்சு.... தரையெல்லாம் ரத்தம் கொட்றது... ராயப்பேட்டை ராகவன்கிட்ட தூக்கிண்டு ஓடினோம்... ஃபேமிலி டாக்டர். என்னடாது.. அருவியாக் கொட்டறதுன்னு ஸ்டிட்ச் போட்டு.. ட்ரெஸ்ஸிங் பண்ணிக் கட்டுப் போட்டார்... ஏதோ விவகாரமாப் படறதேன்னு சொல்லி ப்ரெயினை ஸி.டி ஸ்கேனெல்லாம் எடுக்கச் சொன்னார்... இருபதினாயிரம் செலவு பண்ணி பாரத் ஸ்கேன்ஸ்ல எல்லாம் எடுத்துப் பார்த்தோம்...”

பாட்டில் தண்ணீரை ஒரு மிடறு தொண்டைக்குச் சரித்துக்கொண்டார். அந்த இடைவெளியில் நான்..

“என்ன சொன்னாங்க?”

”டிமென்ஷியா மாதிரி இருக்கு. மூளைக்கு ரத்தம் சரியாப் போய்ச் சேரமாட்டேங்கிறது. அதனால மூளையிலிருந்து உடம்போட பார்ட்ஸுக்கு வர்ற ஆர்டரெல்லாம் சரியா வந்து சேரமாட்டேங்கிறது.ன்னார் சீஃப் டாக்டர். மூளைக்கு ரத்தம் சரியாப் பாயறவாளெல்லாம் சரியா இருக்காளோ? கேர்ஃப்ரீலேர்ந்து கீரை நறுக்கின வேர் வரைக்கும் பாலிதீன் கவர்ல கட்டி குப்பத்தொட்டில போடறேன்னு காம்பெண்ட் தாண்டி எங்காத்துள்ள போட்டுப்போறான்கள்.. இவனுக்கெல்லாம் மூளைக்கு இரத்தம் பாயறதோ?.. நன்னாத்தானே நடமாடரான்கள்... மகராஜி... இவளுக்குப் போயி இப்டி ஆயிடுத்தேன்னு துக்கம் தொண்டையை அடைக்கிறது... உறவுக்காராள்ட்ட . ஸ்நேகிதாள்கிட்டன்னு.. ஒருத்தரையும் வேத்துமை பாராட்டினது கிடையாது.. வரவாளுக்கெல்லாம் காஃபி.. டிஃபன்.. சாப்பாடு... தெருல யாருக்காவது எதாவதுன்னு சரீர ஒத்தாசை... ” குரல் கம்மியது. இதுவரை கண்கள் குளமாயின என்று கதைகளில் படித்திருந்த நான் ஐயப்பன் சார் கண்கள் கடலுக்குள் இருப்பதைப் பார்த்தேன்.

“ம்.....யாராவது ஃபேமஸ் ந்யூராலஜிஸ்ட்ட காட்டியிருக்கலாமே..” என்று அவரை அடுத்த முறை மூக்குச் சிந்த விடாமல் அடுத்த கேள்வி கேட்டேன்.

”சென்னையில ஆர்டினரியா ப்ராக்டீஸ் பண்றவாகிட்டயே அனுமார் வால் மாதிரி க்யூகட்டி நிக்கறா. இதுல பெரிய டாக்டர்கிட்டேயெல்லாம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா? எப்பக் கேட்டாலும் அடுத்த மாசம் அப்பாயிண்ட்மெண்ட் இருக்குன்னு சொல்றா. ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒடம்பு சரியிலலாம போகும்னு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிண்டு அவா க்ளினிக் வாசல்ல தவம் பண்ணிண்டு உட்கார்ந்திருக்க முடியுமா? இவா சொல்றதைப் பார்த்தா கிரிமேஷன் கிரௌண்டுக்கு லெட்டர் எழுதி ரிசர்வ் பண்ணணும்னு சொல்றா மாதிரியிருக்கேன்னு லோக்கலா ஒரு ஸ்பெஷலிஸ்ட்டு கிட்ட காமிச்சோம். பொட்ல அடிச்சா மாதிரி எடுத்தவுடனேயே ‘பெட்லயே யூரினேட் பண்றாங்களா?’ன்னு கேட்டார்.”

அந்த அம்மாளுக்கு லேசாகக் கால் அசைந்தது. “ரொம்ப சில்லுன்னு இருக்கு. எனக்கே குளிர்ராப்ல இருக்கு...” என்று சொல்லிக்கொண்டே இரண்டு இன்ச் தூசியேறிப் பழுப்பாப் போயி தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த ஆஸ்பத்திரி ஃபேனை ”டக்” ”டக்” கென்று திருகி ஒன்றுக்கு மாற்றினார்.

இன்ஜெக்ஷன் தடிமனில் இருந்த வெள்ளை கோட் நர்ஸ் பொண்ணு ஒன்று சரேலென உள்ளே வந்தது.

”பர்வதம்மா அட்டெண்டரா நீங்க?” கீச்சுக் கீச்சென்று கேள்வி கேட்டது. ஏதோ ஒரு வயற்காட்டு நர்ஸிங் காலேஜில் சர்ட்டிஃபிகேட் வாங்கிய கையின் ஈரம் காயாமல் பர்வதம்மாவைப் பார்க்க வந்தது போலிருந்தது.

“ம்...ஆமா” என்று மூக்கு சிந்திய ஆய் கர்ச்சீப்பைச் சட்டைப் பையில் திணித்துக் கொண்டார் ஐயப்பன் சார்.

“ட்யூட்டி டாக்டர் ப்ளட் டெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்காரு..” என்று சொல்லிக்கொண்டே பர்வதம்மா கத்தமாட்டாங்க முண்டமாட்டாங்க என்கிற தைரியத்தில் சிரஞ்சியை புஜத்துக்கு கீழே சொருகி நரம்பு கிடைக்காமல் குத்திக் குத்தி புள்ளி வைத்து கையில் ஊசிக் கோலம் போட்டுக்கொண்டிருந்தது. என்னமோ ஊசியைத் தனக்குக் குத்துவது போல பாவித்துக்கொண்டு அசௌகரியமாக ஜன்னலுக்கு வெளியே பார்த்தார் ஐயப்பன். இன்னமும் இரத்தம் எடுத்தபாடில்லை என்று தெரிந்தவுடன் எண்கள் தேய்ந்த ஆதிகாலத்து மொபைலை எடுத்து ஏதோ ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.

பத்து இருபது வினாடிகள் ஃபேனின் டிக்....டிக்.. மட்டும் கேட்க பேச்சில்லாமல் நகர்ந்தது.

”ம்.. இங்க அழுத்திப் பிடிச்சுக்கோங்க..” என்று ஊசி குத்திய இடத்தில் பஞ்சை அழுத்தி ஐயப்பன் சாரிடம் பர்வதம்மாவின் கையை கொடுத்துவிட்டு சென்னைக் கொசு போலப் பறந்தது அந்த நர்ஸ்.

பஞ்சோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டார்.

“எங்க விட்டேன்..” அவர் விடறாமாதிரி தெரியவில்லை.

“ம்... ஞாபகமில்லை சார்..” ஐபேடில் விளையாட ஆரம்பித்த டெம்பிள் ரன்னை ரத்து செய்துவிட்டு நிமிர்ந்து அவரைப் பார்த்தேன்.

“யூரினேட்...யூரினேட்... நாங்க அப்படியெல்லாமில்லையே...ன்னு டாக்டர்ட்ட சொன்னோம்... அப்புறம் மகேஷ் சொன்னான் ”இல்ல மாமா.. சில நாள் புடவை பின்னாடி நனைஞ்சிருக்கும்.. என்னம்மான்னு கேட்டா... ராத்திரி தாகமிழுத்துதுடா... சொம்புலேர்ந்து தண்ணி குடிக்கும்போது வழிஞ்சுடுத்துடான்னு சொல்லியிருக்கா..ன்னான்.. மகேஷ் சிட்டிபேங்க்ல இருக்கான். அவளோட மூத்தவன். ரொம்ப ப்ரில்லியண்ட். வெரி ப்ரைட்.”

”இந்த ஹாஸ்பிட்ல்ல சேர்த்து எவ்ளோ நாளாகுது சார்?”

”இன்னியோட மூணாவது நாள். தானாடாட்டாலும் தன் சதையாடும்னு சொல்லுவாளோனோ அது மாதிரி ரெண்டு நாள் முன்னாடி பூஜை பண்ணின்டிருக்கும் போது மனசுக்கு ஏதோ சங்கடமாவேயிருந்துது. சித்த நாழியில மெட்ராஸ்லேர்ந்து ஃபோன். அக்காவ ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்கான்னவுடனேயே பதறிப்போய்ட்டேன். பகவானே இது என்னடா சோதனைன்னு மேனேஜர்ட்ட சொல்லிட்டு ஒரு எட்டு பார்த்துட்டு போய்டலாம்னு ஓடி வந்துட்டேன். எனக்கும் லீவேயில்லையாக்கும்...”

வார்டு மூலையில் விஜயா அசைந்தாடி வருவது தெரிந்தது. எனக்கு ரிலீவர் வந்தாகிவிட்டது. ஐயப்பன் சாரை இப்போது ஆஃப் செய்துவிடும் எண்ணத்தில் ”அப்ப பார்க்கலாம் சார்.. அக்கா குணமாயிடுவாங்க.. கவலைப்படாதீங்க.. ஆண்டவன் இருக்காரு.. அவரு பார்த்துப்பாரு...” என்று அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினேன்.

“இங்க கேண்ட்டீன்ல சூடா ஃபில்டர் காப்பி கிடைக்குமாம்மா?” என்று பிபி மானிடரை எடுத்துக்கொண்டு டாக்டர் பின்னால் சென்ற இரத்தமெடுத்த நர்ஸைப் பார்த்து இரண்டாவது மாடி கேண்டீனுக்கே கேட்கும்படி சத்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

வெளியில் வந்து ஸ்கூட்டியைக் கிளப்பினேன். ”வரும்போது மறந்துடாம ஃப்ளாஸ்க்கை எடுத்துக்கிட்டு வாடா” என்ற அம்மாவின் கட்டளை மூளைக்குள் ஃப்ளாஷ் அடிக்க மறுபடியும் ஆஸ்பத்திரிக்குள் ஓடினேன்.

“இரு ஃப்ளாஸ்க்கைக் கழுவித் தரேன்...” விஜயா குழந்தை போல ஃப்ளாஸ்க்கைத் தூக்கிக்கொண்டு வாஷ்பேசினுக்கு அடிபிரதக்ஷிணம் செய்தாள். ( ”யம்மாடி... எப்படித்தான் உனக்கு காபி டம்ப்ளர் கழுவறதுக்குக்கூட கால் மணி ஆவுதோ.. நீயெல்லாம் புருஷன் வீட்லபோய் எப்படி குடும்பம் நடத்தப்போறியோ...” என்கிற சகஸ்ரார்ச்சனைகள்) அம்மாவின் பெருமூச்சோடு கலந்த அங்கலாய்ப்பு நினைவுக்கு வந்தது. எப்படியும் விஜயா வருவதற்கு ஒரு ஐந்து பத்து நிமிடமாவது ஆகும். வெயிட் பண்ணினால் உபயோகப்படும் என்று கைவசம் வைத்திருந்த Three men in a Boat ஐ எடுத்துப் புரட்டினேன். மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு தானொரு ஒரு பொக்கிஷம் என்றும் பல நோய்களைப் பார்க்க சிரமப்பட்டு ஆஸ்பத்திரிக்குப் போகாமலே தன்னை ஒரு முறை சுற்றிவந்து டாக்டர் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஜெரோம் கே ஜெரோம் ஆரம்பப் பக்கங்களிலேயே அசத்தியிருந்தார்.

புத்தகத்தினுள் மூழ்கி “I tried to examine myself. I felt my pulse. I could not at first feel any pulse at all. Then, all of a sudden, it seemed to start off. I...." என்று கண்களை விலக்காமல் படித்துக்கொண்டிருந்த போது ”என்ன புஸ்தகம் படிக்கறேளா?” என்று என் மூக்கிற்கு காஃபி வாசனை எட்டும் தூரம் நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு நெருங்கி உட்கார்ந்தார். அவருக்கு பெப்டிக் அல்ஸர் இருக்கவேண்டும். காஃபியும் அல்ஸரும் சேர்ந்து ஒரு துர்கந்தம் வீசியது.

புன்னகைத்துவிட்டுத் தொடரலாம் என்று தலையைக் குனியும் போது யார்ட்லி பவுடர் வாசனையோடு ஒரு மாது ஐயப்பன் சார் பக்கத்தில் வந்திருந்தார். தலையை நிமிர்த்தினேன். கண்கள் நீர் கோர்த்துக்கொண்டு நின்றது. படுக்கையில் கிடக்கும் அந்தம்மாவின் பெண்ணாக இருக்கக்கூடும் என்று ஊகித்தேன்.

“சார்.. இது மஞ்சுளா..”

“வணக்கம்”

மறுவணக்கத்திற்கு பதிலாகச் சோம்பலாய்த் தலையை ஆட்டியது அப்பெண்.

“எங்கக்காவோட மாட்டுப்பொண். ரொம்ப சமர்த்து. மாயவரம். பட்டமங்கலத் தெரு.”

இன்னும் அரைமணிக்கு கிளம்பமுடியுமா என்று தெரியவில்லை. சங்கடமாக நெளிந்து காட்டினேன். அவர் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.

”இவளை மாட்டுப்பொண்ணாயில்லை.. மகளாத்தான் சீராட்டினா எங்கக்கா.. என்னம்மா மஞ்சு சரிதானே..” அப்பெண்ணிடமிருந்து ஐயப்பன் சார் கன்ஃபர்மேஷன் எதிர்பார்த்தார்.

இப்போது அந்தப் பெண் ரொம்பவும் சங்கடமாக நெளிந்தது. கண்களில் தேங்கிக்கிடந்த கண்ணீர்க்குளம் எந்நேரமும் உடைப்பெடுக்கும் அபாயம் தெரிந்தது. ”அழாதம்மா.. அம்மாவுக்கு ஒண்ணுமில்லே... நாளைக்கே எழுந்து வந்து நமக்கெல்லாம் கத்திரிக்கா ரசவாங்கி வச்சுத்தருவா பாரேன்...” என்று ஐயப்பன் சார் ஆரம்பிக்கவும் மஞ்சுவுக்குத் தாரை தாரையாய் கண்ணீர் வழிவதும் ஒருசேர நடந்தது.

“வாடாப்பா... மகேஷ்.. உம் பொண்டாட்டியப் பாரு.. எப்டி அழறான்னு.. இப்படியொரு மருமகளான்னு ஊர் கண்ணே பட்டுடுத்துப் போலருக்கு....”

வெள்ளை நீல ஸ்ட்ரைப்புடு வான் ஹூசைனும் கருப்பு நிற ப்ளாக்பெர்ரி பேண்ட்டுமாய் ஆஃபீஸுக்கு செல்லும் தோரணையில் இருந்தார் அந்த மகேஷ். ஆறடி. ஆட்காட்டி விரலில் மரத்தடி நிழலில் நிறுத்திவிட்டு வந்தக் கார் சாவி. செவத்த நிறம். கர்ணனின் கவசகுண்டலம் போல கண்களைவிட்டு அகலாமல் ரேபேன் மூக்கின் மேல் உட்கார்ந்திருந்தது. காதுகளில் நீலப்பல் நீலநீலமாய் தன் இருப்பைக் காட்டி மினுமினுத்தது. எப்போதும் பிஸினஸ் பேசும் வாய். அதைத் திறந்து “மஞ்சு.. வாட் இஸ் திஸ். நிறுத்து..” என்று அதட்டாதது போல அதட்டினான். புடவை முந்தானையை எடுத்து அந்தப் பெண் முகத்தை ஒத்தி எடுத்துக்கொண்டது.

அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என் மடியில் ஃப்ளாஸ்க் பொத்தென்று இறங்கியது.

”என்ன வேடிக்கையா?” என்ற விஜயாவும் அனைத்துச் சம்பவங்களையும் பார்த்திருந்தாள்.
மகேஷ் என்ற அந்தப் பையன் ஒரு இரண்டு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நடந்து வார்டை அளந்தான். ப்ளூடூத்துடன் பேசினான். “நோ..நோ..நோ... இட்ஸ் ஓகே. டெஃபனட்லி..” போன்றவைகள் அடிக்கடி வாயிலிருந்து வெளியே வந்து விழுந்தன.

“கம். லெட்ஸ். கோ.. “ என்று அழுத பெண்ணை தோளோடு அணைத்து அழைத்துக்கொண்டு வெளியே நடந்தான். படுக்கையில் “.ம்மா...” என்று அந்தம்மாள் ஈனஸ்வரத்தில் முணகியது. ஐயப்பன் ஓடிப்போய் பார்த்தார். ”சாப்பிட முடியாது. நாக்கெல்லாம் தடிச்சுப்போச்சு..” என்று சொல்லிவிட்டு மாத்திரைகளில் சிலவற்றைப் பொடித்துக் கஞ்சியில் கலந்து பெரிய சிரிஞ்சி வழியாக மூக்கில் ஏற்றினார். ”இதையெல்லாம் மகேஷுக்கு பார்க்கவே முடியாது.. அதான் கிளம்பிட்டான்... பாவம்... “ என்று வந்து போன துரைக்கு சப்பைக்கட்டு கட்டினார்.

“அண்ணே... நீ கெளம்பு....” என்று என்னை எழுப்பினாள் விஜயா. புத்தகத்தின் பக்கத்தின் காதை மடக்கி மூடி வைத்தேன். கிளம்பும்போது நெடுநெடுவென்று வளர்ந்த ஒருவர் வார்டுக்குள் நுழைந்தார். அவரின் அத்தர் மணம் அனைவரையும் தூக்கியது.

“வாங்கோ.. அத்திம்பேர்... வாங்கோ..” என்று வரவேற்றார் ஐயப்பன். வந்தவர் ஏரியாக் கவுன்சிலர் போல வெள்ளை வேஷ்டி ஷர்ட்டில் பளபளப்பாக இருந்தார். புருவங்களைத் தூக்கி பலவந்தமாக கவலை ரேகைகளை நெற்றிக்குக் கொண்டு வந்து எட்டிப் பார்த்தார். படுத்திருந்த அம்மாவிற்கு சதையாடியது. கிளம்பிய என்னை கையைப் பிடித்து நிறுத்தினார் ஐயப்பன் சார்.

“கும்பகோணம் காலேஜில ப்ரொஃபஸரா இருந்தார். இங்கிலீஷ் ப்ரொஃபஸர். பாண்டித்யம் ஜாஸ்தி”

திரும்பி ஒரு கும்பிடு போட்டேன். பதில் வணக்கம் சொன்னார்.

“உங்க வீட்ல யார் அட்மிட் ஆயிருக்காங்க?” இரண்டு மணி நேரமாக ஐயப்பன் சார் கேட்காத கேள்வியை இரண்டு நிமிஷத்திற்கு முன் நுழைந்தவர் கேட்டார்.

“அச்சச்சோ. இவ்ளோ நாழி நா கேட்கவேயில்லை.. தொணத்தொணன்னு பேசிண்டுருந்தேன். யாருக்கு என்னன்னு கேட்கத் தோணலை.. நான் சொல்லலை.. அத்திம்பேர் ப்ரில்லியண்ட்னு...” என்று பல்லைக்காட்டிக்கொண்டு புகழாரம் சூட்டினார்.

“எங்க பாட்டிக்கு.. ஃபுட் பாய்ஸன் ஆயிடிச்சு. டிஸண்ட்ரியாப் போய் டிஹைட்ரேட் ஆயிடிச்சு. அதான் சலேன் ஏத்திக்கிட்டிருக்கோம். நத்திங் சீரியஸ் சார்” என்றேன்.

”ஒண்ணுமில்லை. கவலைப்படாதீங்கோ. பைரவி இல்லைன்னா ஆனந்த பைரவி ராகத்துல பாட்டிக்குக் காதில் விழறா மாதிரி பாட்டுப் பாடச்சொல்லுங்கோ. எல்லாம் சரியாப்போய்டும். இல்லைன்னா நாலு கன்யாக் கொழந்தேளுக்கு....”

அத்திம்பேர் பேசிக்கொண்டிருக்கும் போது ப்ரேக் போட வைத்தவர் ஒரு பெண்மணி. காதிலும் மூக்கிலும் வைரம் மின்னியது. கலையாத கேசமும் கொசுவம் மடிப்புக் கலையாத சேலையும் பார்த்தால் அவர்கள் பலலட்சம் பொருமானமுள்ள சொகுசுக் காரில் தான் பயணித்திருக்கவேண்டும் என்று உறுதியாய்த் தெரிந்தது.

“வாடிம்மா சாவித்ரி.. பர்வதத்தைப் பார்த்தியா... எப்படி ஆயிட்டா பாரு...” இதுவரைத் தெளிவாக இருந்தவர் குரல் கம்மப் பேசினார். சாவித்ரி தனது லட்சம் கட்டி வராகன் புடவை பெட்டில் படாதவண்ணம் மேனியோடு அணைத்துக்கொண்டு ஜாக்கிரதையாக எட்டிப் பார்த்தார். தடித்த நாக்கு பற்களுக்கிடையில் மாட்டிக்கொண்டு எச்சிலோடு வாயையும் திறந்து மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார். முகத்தை சுருக்கிக்கொண்டு பார்வையை உதிர்த்துவிட்டு அத்திம்பேரைப் பார்த்து “அண்ணா! சொல்றேன்னு தப்பாயெடுத்துக்காதே... நாளைக்கு பௌர்ணமி. கணத்த நாள். பர்வதம் தாக்குவாளான்னு தெரியலையே!”

எனக்குப் பக்கென்று இருந்தது. ஆஸ்பத்திரியில் அனைவர் எதிரிலும் அசால்ட்டாக பேசிவிட்டு, “எனக்கு அவசரமா வேலையிருக்கு. நான் கிளம்பறேன்.” என்று திரும்பினார். “என்னையும் கொஞ்சம் ட்ராப் பண்ணிடேன்” என்று அந்தம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டே அத்திம்பேரும் கிளம்பினார். “இந்த ஐயப்பனை எங்கே காணோம்.” முணுமுணுத்துக்கொண்டே என்னைப் பார்த்தார். தெரியலை என்பதாக தலையை ஆட்டினேன். “நான் சொன்னதைப் பண்ணுங்கோ. உங்க பாட்டிக்கு உடனே தேவலையாயிடும். பார்க்கலாம்” என்று பறந்தார். ”உங்க வீட்டுக்காரிக்கு இந்த பைரவி ராகக் கச்சேரியை ஏற்பாடு பண்ணுங்களேன்” என்று பச்சாதாபத்தோடு மனசுக்குள் அலறினேன்.

சுற்றிலும் பார்த்தேன். ஐயப்பன் சாரைக் காணோம். ஃப்ளாஸ்க்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். பைக் ஸ்டாண்டிலிருந்து வண்டியை எடுக்கும்போது கையில் ஒரு காகிதத்தை வைத்துக்கொண்டு செல்லில் பேசிக்கொண்டிருந்தார். வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு “பார்க்கலாம் சார்” என்றேன். ஸ்கூலில் டீச்சரிடம் பசங்க ஒன்றுக்கு கேட்பது போல விரலை உயர்த்திச் சைகை செய்தார்.

நின்றேன்.

செல்லை அமர்த்திவிட்டு வந்தார். “ரிலேட்டிவ் ஒரு பையன் ஐஜி ஆஃபீஸ்ல இருக்கான். இன்னிக்கி ராத்திரிக்கு ட்ரெயினுக்கு புக் பண்ணியிருந்தேன். ஈக்யூ கோட்டாவில ரிலீஸ் பண்ண முடியுமாடான்னு கேட்டுண்டிருந்தேன். எனக்கு லீவே கிடையாது வேற... இன்னும் ஒரு வருஷம் சர்வீஸ் பாக்கியிருக்கு. சண்டை சச்சரவில்லாம வெளிய வரணுமோண்ணோ...” என்று கேட்டார்.

“சரி சார். பார்க்கலாம். நான் கிளம்பறேன்” என்று கைகுலுக்கிவிட்டு வந்தேன்.

**

மறுநாள் பாட்டியை டிஸ்சார்ஜ் செய்யும்போது பக்கத்துப் படுக்கை காலியாய் கிடந்தது. வேறு வார்டிற்கோ அல்லது ஐசியூவிற்கோ மாற்றியிருப்பார்கள் என்று நினைத்து “இந்தம்மா எங்கேங்க...” படுக்கையைக் காட்டி அந்த தேசலான நர்ஸைக் கேட்டேன்.

“இன்னிக்கி விடிகாலேல அஞ்சு மணிக்கு செத்துட்டாங்க சார். ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆகி கொலாப்ஸ் ஆயிட்டாங்க..” என்றது.

ஃபேன் காற்றில் சடசடத்த டே ஷீட் காலண்டரில் வட்டம் போட்டு ”பௌர்ணமி” என்று அச்சடித்திருந்தது.

”இத்துணூண்டுலேர்ந்து.. இங்க பாருங்கோ.. இத்துணூண்டுலேர்ந்து....” என்று ஒரு குரல் காதுகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. ஐயப்பன் சார் எங்கே?

Tuesday, April 30, 2013

குருவி ராமேஸ்வரம்


மன்னை தேரடியில் ராஜகோபாலனுடைய விண்ணை முட்டும் கஜப்ரஷ்ட விமானத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு அக்கணமே அதில் சம்பாதித்த கோடி புண்ணியத்தையும் சட்டைப் பாக்கெட்டில் சாய்த்துக்கொண்டு திருவாரூர் பக்கம் என் டிஸயரைச் செலுத்தினேன். திருவாரூர் தாண்டியிருக்கும் இரண்டு மூன்று சிவத் தலங்களை தரிசிப்பதாக சிவன் போக்கில் சித்தத்தை வைத்தேன். வழியில் கூத்தாநல்லூரில் நான் ஆடிய கிரிக்கெட் டோர்ணமெண்டுகளையும் மட்டையடி நண்பர்களைப் பற்றியும் அது ஏன் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகிறது என்றெல்லாம் என் மகள்களுக்கு பிரஸ்தாபித்து ரம்பம் போட்டபடியே ஆரூரை அடைந்தேன். வாய்மூடா பேச்சுக்கிடையில் நிறைய “அந்தக் காலத்துல...” சொல்லிவிட்டோமோ என்று சற்றே விசனப்பட்டேன். நிறைய இடங்கள் தரிசாகவும் சில இடங்களில் கல் ஊன்றி ‘நகர்’களாகவும் உருமாறியிருந்தது.

திருவாரூரை நெருங்கும் சமயத்தில் ஆரூரின் அருமை பெருமைகளைப் புரிய வைக்க சில ஆன்மீக ஜல்லியடித்தேன். அந்த ஜல்லியின் சாராம்சம் பின்வருமாறு. ” ’அண்ணாமலையாரே’ன்னு திருவண்ணாமலையை நினைச்சுண்டாலே முக்தி; திருவாரூர்ல பொறக்கணும். அப்பதான் முக்தி; உருண்டு பெரண்டானும் காசிக்குப் போய் பிராணனை விட்டா அது முக்தி. அதாவது காசியில செத்துப்போனா முக்தி”. இதில நினைச்சுக்கறதும் உசுரைக் கையில பிடிச்சுண்டு போய் காசியில ஹரிச்சந்திரா காட்ல எரியறதுக்காக உட்கார்ந்துகரத்துக்கும் சான்ஸஸ் இருக்கு. ஆனா, இன்னாரின்னார் வயித்துல இந்த இடத்துல பொறக்கணும்னுங்கிறது நம்ம கையில கிடையாது. அதுக்கு பகவான் மனசு வைக்கணும். அந்த வகையில திருவாரூர் தனிச்சிறப்பு வாய்ந்தது.”

கமலாலயக் குளக்கரையில் துருப்பிடித்த சைக்கிளுக்கு பாசி பிடித்த அழுக்குத் தண்ணீர் குட்டித் தொட்டியில் பஞ்சர் பார்த்துக்கொண்டிருந்த பெரியவரிடம் “குருவி ராமேஸ்வரம் எந்தப் பக்கம் போணுங்க?” என்று காருக்குள்ளிருந்து குரலை மட்டும் வெளியே துரத்தி விட்டேன். பத்தாவது பொது பரீட்சையில் பத்து மார்க்கு கேள்விக்கு பதில் தெரியாத பையன் போல முழி பிதுங்கி வெளியே வந்து விழுந்துவிடும் தோரணையில் மலங்கமலங்க முழித்தார். பெரியவருக்கு காதில் விழவில்லையோ என்றஞ்சி “கு...ரு....வி.... ரா....மே....” என்று அட்சரம் அட்சரமாக ஆலாபனை செய்ய ஆரம்பித்தவனை “காதுலல்லாம் நல்லா விளுது தம்பி” என்று ராமேஸ்வரத்தின் ”ஸ்”ட்ஜமத்திற்கு விடாமல் என்னை “மே..”விலேயே முறித்தார். பக்கத்து கால் ஆடும் ஸ்டூலில் கசங்கிய ’தந்தி’யுடன் அமர்ந்திருந்த இன்னொரு பெரியவர் “குருவி ராமேஸ்வரமா... அது...” என்று லுங்கியை மடக்கிக்கொண்டு வீராவேசமாக எழுந்து வந்து ”எதிர்த்தார்ப்ல இருக்கிறது தியாகராஜர் கோயிலு... அப்படியே இடது பக்கம் போனா.....” என்று ஆரம்பித்து தீவிரமாக யோசித்தார். கடைசியில் எனது பால் வடியும் முகத்தைப் பார்த்து “இப்பாலகனை வஞ்சிக்க வேண்டாம்” என்று க்ஷன நேரத்தில் மானசீகமாகத் தீர்மானித்து “தெரியலீங்க தம்பி..” என்று அடக்கமாக முடித்துக்கொண்டு கையிலிருந்த தந்தியை மீண்டும் மீட்ட எத்தனித்தார்.

அவர் ஸ்டூலுக்கு விரைவதற்கு முன் “கேகரை எங்கிருக்குத் தெரியுமா?” என்று மின்னல் போல அடுத்த கேள்விப் பந்தை வீசினேன். ’கப்’பென்று சரியாகப் பிடித்துக்கொண்டார். “கேகரையா?.... அப்படிச் சொல்லுங்க.... இடது கைப்பக்கம் திரும்பிப் போயி தேர் முட்டிக்கு முன்னாடி இடது கை பக்கமாவே வர்ற ரோட்ல அஞ்சாறு கிலோமீட்டர் போனீங்கன்னா கேகரை வரும்..” என்று குருவி ராமேஸ்வரத்திற்கு இராமாயண ஜடாயு போல தென் திசையைக் காட்டினார். கேகரையை அடைந்து குருவி ராமேஸ்வரத்திற்கு வழி தேடினோம். நீங்கள் தொலைவதற்கு வேலையேயில்லை. ஒரு நாலு கால் வாகனம் ஆடம்பரமாக இல்லாமல் அடக்கஒடுக்கமாகச் செல்வதற்கு தோதாக கொஞ்சமாக ஒரு சிங்கிள் பெட் பாதை. கொஞ்சம் செம்மண், கொஞ்சம் கப்பி, கொஞ்சம் பள்ளம், கொஞ்சம் கொஞ்சம் தார் ரோடு. இது போன்று இருபது முப்பது குடும்பங்கள் வசிக்கும் கிராமத்திற்குள் கோயில் தேடிப் போனால் கண்டுபிடிப்பது ரொம்ப சுலபம். அதிகம் வீடில்லாத காரணத்தினால் அல்ல. எங்கு ஒரு குளமோ குட்டையோ பார்வைக்கு படுகிறதோ நிச்சயம் அதற்கு சமீபத்தில்தான் கோயில் இருக்கிறது என்றர்த்தம்.

குருவி ராமேஸ்வரத்தை அடைந்து கோயில் வாசலில் வண்டியை நிறுத்தினால் மரக்கதவில் பூட்டு தொங்கியது. எதிர்புறம் அல்லிக்குளம் பூக்காமல் இலையோடு பாசிப் பச்சையில் வெய்யில் பட்டு தகதகத்தது. வாசலிலேயே இருபுறமும் சிவனாரின் மகனார்கள் இருவரும் கோஷ்ட சந்நிதி கொண்டிருந்தார்கள். இடப்புறம் கணேசா வலப்புறம் முருகா. பக்தியில் தெருஜனம் யாரோ குளத்தில் முழுகிவிட்டு ஈரத்துணியோடு ஒற்றைச் செம்பருத்தியைத் தலையில் சூடியிருந்தார்கள். விநாயகரின் தும்பிக்கையில் ஈரம் தெரிந்தது. கோயில் மதிலை ஒட்டினாற்போல இருந்த ஓட்டு வீட்டு சாணம் மொழுகிய வாசலில் ஒரு ஆத்தா புளியம்பழத்தை ஆட்டியாட்டி பார்த்துச் சட்டை உறித்துக்கொண்டிருந்தது. புளியம்பழத்துக்குள் இருக்கும் புளி எப்படி ஓட்டுடன் ஒட்டாமல் இருக்கிறதோ அது போல இந்த லோகாயாத வாழ்க்கையில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்கோயோ படித்தது ஞாபகத்துக்கு வந்தது. நித்தம் நித்தம் அடிபடும் லௌகீக வாழ்வில் தோன்றாதவைகளெல்லாம் இதுபோல பக்தி டூரின் போது ஞாபகத்திற்கு வந்து பல வேதாந்தங்களை ப்ராம்ப்ட் பண்ணும். தொள்ளைக் காது ஆத்தாவின் துணைக்கு கால்சட்டை போடாத ஒரு பையன் அரணாக்கயிற்றோடு அருகில் மண் தரையில் உட்கார்ந்து புளியம்பழத்தை கையால் கசக்கிக்கொண்டிருந்தான். அரையாடையில்லாத பையனால் ஆடை களைந்த புளியம்பழத்தின் புளிப்புக் கண்களின் வழியாக வாய்க்கு ஏறி தாவாங்கட்டையை இறுகி கண்ணிரண்டையும் சிமிட்ட வைத்தது. படிக்கிறபோதே உங்களுக்கு இப்படி புளிக்கிறதே பார்த்தவனுக்கு எப்படியிருக்கும்?

“குருக்கள் வீடு எங்கருக்குங்க?” என்று கேட்டமாத்திரத்தில் எழுந்து வந்து “அந்தோ... கோயிலுக்கு அந்தாண்டை ஒரு ஓட்டு வீடு இருக்கில்ல.. அதான்...” என்று சொல்லிவிட்டு அம்மணப் பையனை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு பின்னாலையே துரிதகதியில் வந்தார். குறுக்கும் நெடுக்குமாக மூங்கில் ப்ளாச்சு சட்டமடித்த வாசல். பைக்கில் பறந்து விட்டு திரும்பிய இளவட்டப் பையனின் கேசம் போல ஆங்காங்கே சின்னாபின்னமாகக் கலைந்த மேற்கூரை ஓடுகள். ஏதோவொரு மழைக்கால மாமழையில் கலைந்திருக்கக்கூடும். அவ்வீடு மராமத்துக்கு மாமாங்கமாய் காத்திருப்பது தெரிந்தது. வாசல் திண்ணையை மூடியிருந்த மூங்கில் சட்டத்தின் காலுக்கடியில் காவி வெள்ளை பட்டையடித்து குருக்கள் வீட்டைத் தனியாக இனம் கண்டிருந்தார்கள். ”மாமா...” இரண்டு கட்டு தாண்டி கொல்லையில் தெரிந்த துளசிமாடத்துக்கு கேட்கும்படி கூவினேன். முதல்கட்டிலிருந்து ஸ்படிக மாலையை கோர்த்துக்கொண்டே விரிந்த சடையுடன் வளர்ந்த தாடியுடனும் தும்பைப் பூவை பழிக்கும் வெள்ளையில் அரையில் வேஷ்டியுடன் ஒரு வயோதிகர் எட்டிப்பார்த்தார். நானல் போல வளைந்த முதுகில் தொன்னூறின் ஆரம்பத்திலிருக்கும் இருக்கும் ஒன்பதுவை தாங்கியது போல தெரிந்தார்.

“கோயிலுக்கு வந்துருக்கேன். வரேளா?”

“போங்கோ.. வரேன்...” பேசிய போது இரு வார்த்தைகளுக்கிடையில் மூச்சு வாங்கியது. அவர் நடந்து வருவதின் அபாயம் கருதி கோயில் வாசலில் இருந்த குளக்கரை ரேஷன் கடையிலிருந்து பார்வையை அந்தப் பக்கம் வீசிக்கொண்டிருந்தேன். மேய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டி ம்மேயெழுப்பிச் செல்லமாக என் காலை முட்டியது. காற்றில் அலையும் பக்கோடா பேப்பர் போல ஆடியாடி நடந்து வந்தார். கதவை திறந்து உள்ளே நுழைந்தால் தூரத்தில் விளக்கொளியில் முக்கோணநாதர் தெரிந்தார். முக்கண் நாதரை முக்கோணநாதராக்கிய பெருமையுடையவர்களை போற்றிப் பாராட்ட வேண்டும். நந்திக்கருகில் இருந்த சின்ன மேடையில் தீபாராதனைத் தட்டை எடுக்க குனிந்ததில் எழுந்திருக்க முதுகைப் பிடித்துக்கொண்டார்.

“87 ஆறது” என்றார் தாடிமீசைக்கிடையே புதைந்து கிடந்த காய்ந்த உதடுகளால் சிரித்துக்கொண்டே. சுவற்றைப் பிடித்துக்கொண்டே கர்ப்பகிரஹம் அடைந்து தீபாராதனை காட்டினார். சுயம்பு லிங்கமாம்.

“நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வரயா.... ஸ்ரீமன் மஹாதேவாய நம:” என்று ருத்ரம் சொல்லி சிவனாரை வணங்கினோம். ஆடிக்கொண்டே நடந்து வந்து அஞ்சனாட்சி அம்மையின் சந்நிதியிலும் தீபாராதனை காட்டினார். “சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த.... நமோஸ்துதே”வை கோரஸாகப் பிள்ளைகள் சொல்ல அம்மனை தரிசத்ததில் பரம திருப்தி. நின்ற திருக்கோலத்தில் அம்மனுக்கு பாலும் பழமும் கட்டம் போட்ட மடிசார் கட்டிவிட்டிருந்தார்.

ஒரு தூணில் சாய்ந்து கொண்டார். மூச்சிரைத்ததை ஆசுவாசப்படுத்திக்கொண்டு “ஜடாயு பூஜை பண்ணினதாலே இந்த ஊருக்கு பட்சி ராமேஸ்வரம்னு பேரு. அப்புறம் பட்சி குருவியாயிடுத்து” என்று ஈனஸ்வரத்தில் முணகலாகப் பேசினார். ஸ்தல புராணம் கேட்பதற்கு மேலே பட்டுவிடாதபடி அவரை வளையமாக நெருங்கினோம். பிரகாரம் வழியாக குளித்துவிட்டு புடவையை சுற்றிக்கொண்டு உள்ளே வந்த பாட்டியொருவர் “அண்ணா விபூதி குடு” என்று அவரை நெருங்கினார். வலது உள்ளங்கையில் வாங்கி கை மாற்றாமல் ”சிவ..சிவா”வை உச்சரித்து பட்டையாக நெற்றியில் பூசிக்கொண்டார். நான் பார்த்த கோணத்தில் ஒல்லி கேபிசுந்தராம்பாள் போலத் தெரிந்தார். முகம் தேஜஸாக இருந்தது. “என்னோட தங்கை... சின்ன வயசிலேயே ஆத்துக்காரர் போய்ச்சேர்ந்துட்டார். எங்கூடத்தான் இருக்கா.. நேவேத்தியம் பண்ணித் தரா... விளக்கு மணி குடம் தாம்பாளமெல்லாம் தேச்சுத்தரா... ஏதோ கூடமாட ஒத்தாசையா இருக்கா...”. எண்பது இருக்கும். எண்பது எண்பத்தேழில் அவர்களின் சகோதரபாசத்தைப் பார்க்கையில் மனசு விட்டுப்போச்சு.

”ம்... என்னவோ கத பேசப் போயிட்டோமே... சந்நிதியில நிண்ணுண்டு.... ஜடாயு பட்சி ரூபத்தில் வாழ்ந்த பெரிய தபஸ்வி. தன்னோட காலம் எப்போ முடியும்னு பகவான் கிட்ட கேட்டார். இராவணன் சீதையை சிறை பிடிச்சுண்டு போவான். நீ அப்ப அவனைத் தடுப்பே. அவன் உன் சிறக அறுப்பான். கீழே விழுந்து செத்துப்போவேன்னார். அச்சச்சோ. அப்படின்னா நான் காசி, ராமேஸ்வரம் சேது தீர்த்தங்கள்ல புண்ணிய நீராட முடியாதேன்னு வருத்தப்பட்டாரம். நீ ஒண்ணும் கவலைப் படாதேன்னு பகவானே வெட்டிக் கொடுத்த தீர்த்தம்தான் கோயிலுக்கு வெளியே இருக்கு. நீங்க காரை நிறுத்தியிருக்கேளே.. அதுதான் அந்தக் குளம். இந்த தீர்த்தத்துக்கு பேர் முக்கூடல் தீர்த்தம். திருப்பள்ளியின் முக்கூடல்னு இந்த க்ஷேத்தரத்துக்கு பேரும் உண்டு.” மூச்சு வாங்க கண்கள் தரையை நோக்கித் திரும்பியது. புருவமயிரும் இமை மயிரும் நரைத்திருந்தது. பொருமையாக காத்திருந்தோம். தங்கை பேச ஆரம்பித்தார்.

“97 வரை ஒரு ரூபா பணமும் ஒரு மரக்கா நெல்லும் கொடுத்துண்டிருந்தா. ஏதோ முடிஞ்ச வரைக்கும் ஹோமம் அப்புறம் எதாவது விசேஷத்துக்கு கூட்டிண்டு போவா. காசு வந்துண்டிருந்தது”

தலையை நிமிர்ந்து தங்கையைத் தடுத்தார். “மாமாவுக்கு பசங்க இருக்காங்களா?” என்ற கேள்விக்கு அவரே தொடர்ந்தார்.

“ஒரு பையன் இருக்கான். அவன் திருவாரூர்ல வேலை பார்க்கிறான். எப்பவாவது வந்து எட்டிப் பார்ப்பன். அவனும் என்ன பண்ணுவான் இங்க. தம்படி வரும்படி கிடையாது...” அந்த தங்கைப் பாட்டி அண்ணா தாத்தாவை பாவமாகப் பார்த்தது. ஒரு அரை நிமிடம் கோயிலே நிசப்தமாக இருந்தது. வெய்யில் காய்ந்த பிரகாரம் தாண்டி எங்கிருந்தோ கரைந்த ஒற்றைக் காகத்தின் ஒலி அனைவரின் மௌனத்தையும் கலைத்தது.

“1902ல ஒரு செட்டியார் இந்தக் கோயிலை நான் பார்த்துக்கறேன்னு எடுத்துண்டார். பட்டு வேஷ்டியும் விரலெல்லாம் மோதரமும் ஆள் ஷோக்கா இருப்பார். எடுத்துண்ட ரெண்டாம் நாள் மூலஸ்தானத்துக் கீழே நோண்ட ஆரம்பிச்சார். நேக்கு பயமாப் போய்டுத்து. இதெல்லாம் ஸ்வாமி பார்த்துண்டுருப்பார். வேண்டாம் செட்டியார்வாள்னேன். அவர் கண்டுக்கலை. அரையடி தோண்டியிருப்பான்கள் பள்ளத்துலேர்ந்து இரத்தமா பீறிட்டு அடிச்சுது. பயத்துல அலறியடிச்சு ஓடினான்கள். செட்டியார் விடலை. “டேய்.. எதாவது எலி பெருச்சாளியிருந்திருக்கும் அதான் ரத்தம் தோண்டுங்கடான்னு ஆர்டர் பண்ணினார். சித்த நாழில ஒவ்வொருத்தனும் இடுப்பப் புடிச்சுடுத்து. காலை சுளுக்கிண்டுடுத்துன்னு போய் உட்கார்ந்துட்டன். செட்டியார் இன்னும் விரட்டினார். ஊஹூம். வேலையாகலை. மறுநாள் கார்த்தால நாலு பயலும் வாயிலேர்ந்து ரத்தம் கக்கி செத்துப்போய்ட்டான்.”

மூச்சு விட்டுக்கொண்டார். விபூதி பூசிக்கொண்ட தங்கை கண் மூடி அம்பாள் சந்நிதி முன்பாக வாய் முணுமுணுக்க ஜெபம் செய்துகொண்டு அமர்ந்திருந்தார். அவருக்கு இந்தக் கதை நன்றாகத் தெரிந்திருக்கும். குருக்கள் மாமா தொடர்ந்தார்....

“அப்புறம் ஒரு ஆறு மாசத்துல செட்டியார் பிஸினெஸெல்லாம் நொடிச்சுப் போச்சு. ஓதம் வந்து அவரும் போய்ச்சேர்ந்துட்டார். கோயிலை கோயிலாப் பார்க்கணும். பகவான் இருக்கானான்னு சில பேருக்கு இளக்காரம். இவர் சுயம்போன்னோ. பவர் அதிகம். அதான் ஒடனே காட்டிட்டார்.”

என்னாலான கைங்கர்யத்தைச் செய்தேன். தட்டில் இட்டதைத் தவிர நந்தி தாண்டி நின்றிருந்த குருக்கள் மாமா கையிலும் காகிதத்தைத் திணித்தேன். எங்கோயோ பார்த்துக்கொண்டே நின்றார். “வரேன் மாமா.. நான் அடுத்தது வலிவலம் போகணும்” என்று விடைபெற்றேன். கோயிலுக்குள் ஸ்வாமி முன்னால் அவர் காலில் விழக்கூடாது. முக்கண் நாதருக்கு நமஸ்காரம் செய்யும் போது அவரையும் மானசீகமாக நினைத்துக்கொண்டேன். மனசுக்கு திருப்தியாக இருந்தது. நாங்கள் காருக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். கோபுர வாசலைக் கடக்கும் வரையில் அந்த வயோதிக அண்ணாவும் தங்கையும் எங்களை பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள். அடுத்தது எப்போது சேவார்த்திகள் வருவார்கள் என்ற கேள்வி அவர்கள் கண்களில் தேங்கி நின்றதை என்னால் உணர முடிந்தது.

வலிவலம் அடையும் வரை மனக்கண்ணில் முக்கோண நாதரையும் மீறி அக்குருக்கள் ஒரு சித்தர் போலத் தோன்றிக்கொண்டிருந்தார். தங்கையுடன். இப்போதும் தான்.

(விண்ணை முட்டியிருக்கும் கோபுரம் எங்கள் மன்னார்குடி கோபாலனுடையது)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails