Sunday, August 2, 2015

தெலுங்கு ஆர்.வி.எஸ்

சுந்தரத் தெலுங்கு போலவே நம் காதுக்குள் அமிழ்தைப் பொழியும் தமிழை உச்சரிப்பார் சுரேஷ். ”இத்துக்கோ.. வந்துட்டோ... நீங்க பெரீய அத்திகாரி....” என்று சில தமிழ் எழுத்துக்கள் அவரது வாயில் கடாமுடாவென்று அரைபட்டு உடைபடுவது விஜயவாடா விஜயலெக்ஷ்மி நுனி நாக்கில் ஸ்டைல் தமிழ் பேசுவது போல ரசிக்கும்படியாக இருக்கும். [விஜயவாடா விஜயலெக்ஷ்மி யாரென்று தெரியாமல் தலையைச் சொறிபவர்கள் தனியாக கமெண்ட் பக்கம் வரவும்]
தலைமுடி கறுப்பாக இருந்ததிலிருந்து காதோரம் நரை ஏறியிருப்பது வரை காலம் கடந்து சிநேகிதம். கூகிளுக்குப் போட்டியாக தானொருவனாக நின்று ஜெகத்தோருக்குப் பதில் சொல்லியே தீர்வேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு புஸ்தகங்கள் படிப்பவர். இன்று எதையெதையோ பேசிக்கொண்டே இருந்த போது எதிர்பாராத க்ளைமாக்ஸாக தெலுங்கு இலக்கியம் பற்றி பேச்சு திரும்பியது.
“சுரேஷ்.. தெலுங்குல யாரெல்லாம் பெரிய இலக்கியவாதிகள்?”
“நெற்றயா பேரு இருக்காங்க.. யாரென்னு சொல்ல... .... .... ஆர்விஎஸ்?””
“ஆர்விஎஸ்ஸுக்கு தமிழே தகராறு... நாக்கு தள்ளுது.. ஏன் என்னை போயி தெலுங்கு இலக்கியவாதிகள் லிஸ்ட்ல ஏத்தி பேசுறீங்க சுரேஷ்.. மீகு தெலுகு தெல்லேது....”
“லேது... அது நாகு.... சரி... அதை விட்டுடுவோம்.. ஆர்விஎஸ்ஸுன்னு தெலுகுல பெரிய ரைட்டர் இருந்தாரு...”
”ஆர்விஎஸ்?”
”ஆமா... ராசகொண்டா விஸ்வநாத சாஸ்திரி... ர.வி.சாஸ்திரின்னு நிறையா பேரு சொல்லுவாங்க... நானு ஆர்.வி.எஸ்ன்னுதான் சொல்லுவேன்....”
“ஆஹா.. நம்ம பேரு... பெரிய ஆளா?”
“பின்ன... எப்பவுமே ரொம்ப கஷ்டப்படறவங்களை, டவுண்ட்ராடன்ஸை வச்சுக் கதை எழுதுவாரு.... அவரு லாயர்... வந்த கேசையெல்லாம் வச்சே கவர்மெண்ட்டை எதிர்த்து நெறையா Boldஆ எழுதுவாரு.. ”
“ம்.... என்னென்ன நாவல் எழுதியிருக்காரு... சுரேஷ் காரு....”
“அல்பஜீவின்னு ஒரு நாவல்.. அப்புறம்.. இன்னும் இருக்கு.... நாவலை விடுங்க.. ஒரு இன்சிடெண்ட் சொல்றேன்.. கேட்டுக்கோங்க.. அவரு எவ்ளோ பெரிய ஆளுன்னு புரியும்..”
“ம்..”
“என்.டி.ஆர் பெரிய ஆளு.. உங்களுக்கெல்லாம் தெரியும். விஷ்ணுவோட அவதாரம்னு நினைச்சுக்கிட்டே வாழ்ந்தவரு.. அவரோட ஃப்ரெண்டு ஸியென்னார்ன்னு.. அவரும் ஒரு ரைட்டரு... உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்காது.... ”
“ஸியென்னார்னா?”
“ஸி. நாராயண ரெட்டி... அவரு ஆர்விஎஸ்ஸுக்கும் ஃப்ரெண்டு.... ஆர்விஎஸ்ஸுக்கு ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆகி வீட்ல படுக்கையில கிடக்காரு... அப்போ ஸியென்னார் என்.டி.ஆர்கிட்டே ஆர்விஎஸ்ஸுக்கு எதுனா ஹெல்ப் பண்ணலாம்னு சொன்னாராம்... என்.டி.ஆரும் சரி என்ன தேவைன்னு பார்த்துக்கிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பினாரு... ஸியென்னார் நேரே ஆர்விஎஸ்கிட்டே வந்து உங்க கிட்னிக்கு என்.டி.ஆர் ஹெல்ப் பண்றேன்னு சொல்றாரு... என்ன சொல்றீங்க?ன்னு கேட்டாரு”
”ஓ... ஆர்.வி.எஸ் வேண்டாம்னு சொல்லியிருப்பாரே..”
“ஆமாம். எப்படி சொன்னாரு தெரியுமா?”
“எப்டி?”
“நானு உங்களுக்கு தெரிஞ்சவங்கன்னு என்.டி.ஆர் ஹெல்ப் பண்றாரு.. ஆனா ஊர்ல என்னை விட மோசமா எவ்ளோ பேரோ இருக்காங்க.. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லுங்க.. நானு இந்த ஹெல்ப்பை எடுத்துக்கிறதை விட செத்துப் போய்டுவேன்.. வேண்டாம்...ன்னு சொல்லிட்டாரு... கொஞ்ச நாள்ல செத்தும் போய்ட்டாரு.. பெரிய மனுஷன்...”
”நெசம்மாவே பெரிய மனுஷந்தான்.. சின்னச் சின்ன ஹெல்ப்புக்கெல்லாம் அரசாங்கத்தையும் விருது தர்றவன் காலையெல்லாம் பிடித்துத் தொங்குகிற ஆளெல்லாம் இருக்கிற காலத்துல இப்படியும் ஒரு ஆளான்னு ஆச்சரியமா இருக்கு சுரேஷ்.. ”
“வேற யாராவது தெலுகு இலக்கியவாதிகள்?”
“இவருக்கு ஃப்ரெண்ட் காளிப்பட்டணம் ராமாராவ்னு ஒருத்தர்.. காரா காரான்னு வாசகர்கள் கூப்பிடுவாங்க... ரொம்ப குறைச்சலாதான் எழுதியிருக்காரு.. ஆனா அந்த குறைச்சலான கதைகள்ல தீசிஸ் பண்ணின ஆட்கள் ரொம்ப பேரு...”
“ஓ.. அப்படியென்ன கதை எழுதினாரு....”
“ஒரேயொரு வரி சொல்றேன்.. அப்புறமா சொல்லுங்க இவரு கதையெல்லாம் எப்படி எழுதியிருப்பாருன்னு....”
“ம்.. சொல்லுங்க...”
“காலில்லாத யானை படியில்லாத மாடிக்கு தூக்கிக்கிட்டுப் போறா மாதிரி...ன்னு ஒரு வரி வரும்.. நெனைச்சுப் பாருங்க.. ஒரு கேரெக்ட்ரால முடியாத காரியத்துக்கு அவர் கொடுத்த ஸிமிலி.... எப்படியிருக்கு?”
“அப்டிப்போட்டுத் தாக்கு... அபாரம் சுரேஷ்.. கதை பேரு என்ன?”
“யக்ஞம்”
அப்புறம் சுரேஷ் நிறையா தெலுங்கு இலக்கியங்கள் பற்றிப் பேசினார். எனக்கு காலில்லாத ஒரு யானையும் அதற்கு முன்னே படிகளில்லாத மாடியும் தோன்றித் தோன்றி மறைந்தது. காலில்லாத யானை.... படியில்லாத மாடி..... காலில்லாத யானை.... படியில்லாத மாடி.... காலில்லா.....படியில்லா........

ஓடுடா...ஓடு... ஆஃபீஸுக்கு..

முதுகைத் தட்டி ”ஒம் பேர் என்னடா?” என்று கேட்டால் ரெண்டு செகண்ட் யோசிப்போமே... அப்படியொரு காலை நேர பரபரப்புக்கு மத்தியில் ஐந்து நிமிடங்கள் என் ஸ்வர்க்க பூமிக்குச் சென்று வந்தேன்.
ஸ்ரீசங்கராவில் ஸ்ரீவித்யா ராஜகோபாலனை தரிசனம் செய்து வைத்தார்கள். ஏக வஸ்திரம், மார் பூரா பவிழம் ரத்தினம் வைர வைடூர்ய மாலைகள், காதுல கோபிகையர்களிடமிருந்து சண்டைப் போட்டுப் பிடுங்கிப் போட்டுண்ட தாடகங்கள், இடுப்புல தங்க சாவிக் கொத்து, ரெண்டு பக்கமும் ருக்மிணி சத்யபாமா சமேதராக உதடுகளில் புன்னகை தவழ ஜெகஜோதியாய் திரையில் தெரிந்தார்.
”கோபாலனைப் பார்க்க ஓடுவோம்...” என்று என் சித்தி பின்னாலிலிருந்து குரல் கொடுக்க சாரதா பாட்டி “வேட்டுப் போட்டுட்டாண்டா... புறப்பாடு ஆயிடும்...”ன்னு விசுக்விசுக்கென்று ஓடியதும், பாட்டி கையைப் பிடித்துக்கொண்டு நான் ஓடியதும்.... சஞ்சயனுக்கு குருக்ஷேத்திரம் தெரிந்தது போல கண் முன்னே வந்து என்னைப் பிடித்துத் தரதரவென்று எண்பது தொன்னூறுகளின் மன்னைக்கு இழுத்துச் சென்றது.
அம்மாவின் ”ஆஃபீஸுக்கு லேட்டாகலை?” மீண்டும் என்னைக் கொத்தாகக் கொண்டு வந்து சென்னையில் இறக்கியது.
ஹரித்ராநதி...
கோபாலன்...
சாரதா பாட்டி...
தேரடி...
கல் துவஜஸ்தம்பம்..
கோபுரவாசல் சிறிய திருவடி...
தமிழ் சார் ஜெம்பகேச தீக்ஷிதர்..
கிரிக்கெட் விளையாண்டு இப்போ கோபாலன் கைங்கர்யம் செய்யும் பிரசன்னா, ஸ்ரீராம்...
துளசி மாடம்...
தாயார் சன்னிதி...
மாதுவோடு (மாதவனின் சுருக்கம்) ஃபிஸிக்ஸ் படிச்ச ராமர் பாதம்..
காய் எடுத்து அடித்து விளையாடிய புன்னை மரம்
சொர்க்க வாசல்...
யானை செங்கமலம்.... 
திருமஞ்சன வீதி...
ஆஞ்சநேயர்...

“தம்பி... லோட்டாகலை?” இன்னொரு தடவை அம்மாவின் குரல்..
“ஓடுடா...ஓடு... ஆஃஃபீஸுக்கு...”

சிவ தனுசு

எட்டுச் சக்கரங்களையுடைய ஒரு வண்டி மைதானத்திற்குள் கம்பீரமாக நுழைகிறது. முன்னால் கொசகொசவெனப் பெருங்கூட்டம் முண்டியடிக்கிறது. ஜனத்திரளுக்குப் பின்னால் வரும் அது மாட்டு வண்டியா? குதிரை வண்டியா? இல்லையில்லை.. ஐயாயிரம் பேர் தேர் போல இழுத்துக்கொண்டு வருகிறார்கள். நேரே ஓரமாகப் பதினைந்து பிராயம் கூட நிரம்பாதவர்கள் இருவர் நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள். பக்கத்தில் ஒரு ஜடாமுடி ரிஷி. அப்புறம் தங்கக் க்ரீடம் ஜொலிக்க ஒரு வெண் தாடி வேந்தர்.
“ரொம்ப பேர்னால இத தூக்கவே முடியலை... இது ரொம்ப சின்ன பையனா இருக்குதே.... இதால முடியுமா?” முண்டாசுக் கட்டியிருந்தவர்கள் குழுமி நின்று பேசிக்கொள்கிறார்கள். பக்கத்தில் குந்தியிருந்த பெண்கள் ”க்ளுக்...” என்று சிரிக்கிறார்கள். வண்டியில் வருவது திரிபுரங்களை எரித்தபோது சிவபெருமான் கைகளில் விளையாடிய திவ்ய தனுசு.
வண்டி அந்த பதினைந்து வயசுப் பசங்கள் அருகில் வந்து நிற்கிறது.
“குழந்தைகள் வில்லைப் பார்க்கட்டும்...” என்று அந்த ஜடாமுடி முனிவர் உத்தரவிடுகிறார். ஐம்பது பேர் வண்டியின் மீது குதித்து ஏறி இரு பக்கத்திலும் நின்று கொண்டு பெட்டியின் மூடியை லாவகமாகத் திறந்து காட்டுகிறார்கள்.
“நான் தொட்டுப் பார்க்கட்டுமா?” தோளிரண்டும் கருந்தேக்காய் இருந்தவனிடமிருந்து ஆர்வமாய் கேள்வி வந்தது. கண்களில் ஆர்வம் மின்னியது.
ஜனகர் விஸ்வாமித்ரரைப் பார்க்கிறார். இருவரும் பார்வையால் பேசிக்கொள்கிறார்கள். மீண்டும் அந்த சியாமள இளைஞன்
“நான் இந்த வில்லை எடுத்து நாணேற்றிப் பார்க்கட்டுமா?” என்று கேட்கிறான். விஸ்வாமித்ரரும் ஜனகரும், கேட்ட அந்த ராமனைப் பார்த்து “உம்” என்று தலையசைக்கிறார்கள்.
அநாயாசமாகச் சுள்ளி பொறுக்குவது போல ஒற்றைக் கையால் வில்லைத் தூக்குகிறான். வளைத்து நாணேற்றும் போது வில் படாரென்று முறிந்து இரண்டு துண்டாகத் தரையில் விழுகிறது. அப்போது எழுந்த பெரும் சப்தத்தில் பூமி அதிர்ச்சி உண்டாச்சு. சுற்றி நின்றிருந்த பலஹீனமானவர்கள் மூர்ச்சையடைந்து பொத்தென்று சாய்ந்தார்கள். மிருகங்கள் பக்ஷிகள் எல்லாம் நடுநடுங்கின. ஜனகர் நல்ல மாப்பிள்ளைக் கிடைத்துவிட்டான் என்று மனம் மகிழ்ந்தார்.
**
ஸ்ரீமத் இராமாயணம் பற்றி சில்வர் டங் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் பல தலைப்புகளில் ஆங்கிலத்தில் பேசியதை கி. சாவித்திரியம்மாள் தமிழில் ”ராமாயணப் பேருரைகள்” என்று எழுதிய புஸ்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். இராமாயணத்தை சல்லடை போட்டு அலசி ஆராய்ந்த ஸ்ரீநிவாச சாஸ்திரியின் துளிக்கூட பந்தா இல்லாத அவையடக்கமான பேச்சும், கி. சாவித்திரியம்மாளின் அழகான எளிமையான தமிழாக்கம் இரண்டும் என்னை தூங்கவிடாமல் அடுத்த பக்கம் அடுத்த பக்கம் என்று புரட்டி கீழே வைக்கவிடாமல் படிக்கவைக்கிறது. இது மயிலாப்பூர் சம்ஸ்க்ருத அகாடமி வெளியீடு.
வால்மீகி உயிரோட்டமாக எழுதியதை உருக்கமாக எழுத்தில் வடித்திருக்கிறார்கள். பக்கம்பக்கமாகப் படித்துக்கொண்டே வரும் போது கொஞ்சம் நிறுத்தி மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டே சிவதனுசு வண்டியில் வரும் காட்சியையும் அதை ராமன் ஒடித்ததையும் படம் ஓட்டி எழுதிப் பார்த்தேன். மன்னார்குடி ஹரித்ராநதி வடகரை கோதண்டராமர் நினைவுக்கு வருகிறார். ஆஹா. அற்புதம். சிரித்துக்கொண்டே சீதா இளையபெருமாள் ஆஞ்சநேயருடன் கப்சிப்பென்று நின்ற திருக்கோலத்திலிருக்கும் அவனை.....
”பலுகே பங்கார மாயனா? கோதண்ட பாணி - பேசினால் பொன்னும் சிந்திடுமா? கோதண்ட பாணி!” என்று பத்ராசலம் ராமதாசர் ஆனந்த பைரவியில் பாடியதோடு ஸ்ரீராமசந்தரனுக்கு ஜெய மங்களம்!
பின் குறிப்பு: "எடுத்தது கண்டனர் ... இற்றது கேட்டார்" என்ற கம்பநாட்டாழ்வாரை இங்கு அழைத்திருக்கலாம். தூங்கியிருப்பான். அடுத்த ராமாயணப் பதிவில் கூப்பிட்டுக்கொள்ளலாம்! குட் நைட்!!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails