Wednesday, October 26, 2011

யாரிடமும் சொல்லாத கதை (சவால் சிறுகதை-2011)

என் பெயர் கல்யாணராமன். ஆனால் இன்னமும் கல்யாணமாகாத ராமன். பராசக்தியில் பாதியாய் கைச்சட்டை மடித்த சிவாஜி போல் கூண்டேறிச் சொல்வதென்றால் ”மங்களகரமான பெயர்”. பிறந்த ஊர் அரியலூர் பக்கத்தில் ஒரு குக்கிராமம். குக் என்று... என்ன மேலே சொல்லட்டுமா.. இல்லை இங்கேயே நிறுத்தட்டுமா.. நம் கதையே பெருங்கதை இவன் கதையை யார் படிப்பார் என்று தலையில் அடித்துக்கொள்பவரா நீங்கள்? ப்ளீஸ் இப்போதே எஸ்கேப் ஆகிவிடுங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு தலை சுற்றும். ”மாபாவி... சண்டாளா” என்று வாய்விட்டு கம்ப்யூட்டர் திரையைப் பார்த்து காரித்துப்பி கொச்சையாக திட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

படிக்க தெம்பிருப்பவர்கள் கொஞ்சம் காதைக் கொடுங்கள். ரகஸியமாக ஒன்று சொல்லவேண்டும். இப்போது நானிருக்கும் உயர்பதவியில் என்னை ஒரு உதாரண புருஷனாக கொண்டாடுகிறார்கள். அதெல்லாம் சுத்த ஹம்பக். எல்லோரையும் போல நானும் பால்ய வயது பருவதாகத்துக்கு பல “காலைக் காட்சி” சினிமாக்கள் பார்த்தேன். காற்றில் மாராப்பு விலகும் அனைத்து மாதரையும் பார்த்து ஜொள்ளொழுக இளித்திருக்கிறேன். இதற்கும் ஒரு படி மேலே ஒரு சம்பவம் நடந்தது.

கல்லூரியில் வழக்கம்போல ந்யூமரிக்கல் மெத்தாட்ஸ் அரிப்பிலிருந்து விடுபடுவதற்காக அந்த அத்துவானத்தில் காம்பௌண்ட் தாண்டி பொட்டிக்கடை விரித்திருந்த ராசுக்கடையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தேன். போச்சுடா. இது வேறயா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பாரதியார் கஞ்சா புகைப்பாராம். எனக்கு தெரியும். நீ பாரதியா என்று கேட்காதீர்கள். சரி.. அனாவசியமாகப் பேச்செதெற்கு. மேலே சொல்கிறேன். 

ஒரு நிமிஷம். இது ஒரு ரௌடியின் வாழ்க்கைக் குறிப்பு என்று நீங்கள் இப்போது நினைத்தால் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். பேசாமல் இத்தோடு இதைப் படிப்பதை நிறுத்திவிடுங்கள். போன பாராவில் வரும் விடலைக் காட்சிகளை வைத்து ஒரு காமரசம் ததும்பும் வாழ்க்கையாகவும் இதை எடைபோட்டு விடாதீர்கள். அதுவும் தவறு. என்ன குழப்புகிறேனா? இன்னும் கொஞ்ச நேரம் தான். உங்களுக்கு புரிந்து விடும். ம்... எங்கே விட்டேன். ஆங்... சிகரெட் பிடித்துக்கொண்டு நிற்கும்போது... உடம்பெங்கும் அழகு ஆறாகப் பெருகி ஓடும் ஒருத்தி அருவியென நடந்து வந்து கொண்டிருந்தாள். நெற்றியில் ஒரு சந்தன தீற்றல். அதன் கீழே ரவையளவு குங்குமம். காதுகளில் கண்ணகியின் சிலம்பு போல இரு பெரு வளையங்கள். கண்களின் ஓரங்களுக்கு மையினால் கரைகட்டியிருந்ததால் அதன் அளவு தெரிந்தது. அடுத்தவரை மயக்கும் அகலக் கண்கள். மீதிக்கு நீங்கள் தடுமாறாமல் அடுத்த பாராவுக்கு வாருங்கள்.

அவளை பதுமை போல பாங்காக நிற்க வைத்து துணியால் மேனியைச் சுற்றி அந்த சுடிதார் தைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நகமும் சதையுமாக இருந்தது சுடிதாரும் தேகமும். இப்போது அவளைப் பற்றி திருஅங்கமாலை படிக்கப்போவதில்லை. உடம்பு இறுக்கும் பின்னால் ஜிப் வைத்த சுடிதார் அணிந்த வாளிப்பான பெண் எப்படியிருப்பாள் என்று உங்களுக்கே தெரியும். ஆளை மயக்கும் வாசனையுடன் மோகினாய் பக்கத்தில் வந்தாள். அவளைப் பார்த்த ஆச்சர்யத்தில் தானாக வாய் திறந்து சிகரெட் புகை வழிந்தது. அந்தப் புகையின் ஊடே அவளைப் பார்த்தால் தேவலோக ”ரம்பை+ஊர்வசி+திலோத்தமை=அவளொருத்தி” போலிருந்தாள். அவள் பவள வாய் திறந்து ”எக்ஸ்க்யூஸ் மீ” என்று நாக்கை அழுத்தி உதடு சுழற்றிப் பேசும்போது என் கண்கள் என்கிற வ்யூபைண்டர் வழியாக அவளுடைய சிறுசிறு சுருக்கங்கள் நிறைந்த ஆரஞ்சு சுளை உதடுகள் மட்டும் ஜூமாகித் தெரிந்தது.

பக்கி என்று நினைத்துக்கொள்வாளோ என்றஞ்சி சுதாரித்துக்கொண்டு “என்னையா?” என்று கேட்டுவிட்டு சட்டையின் முதல் பட்டன் போட்டிருக்கிறேனா என்று கையால் நீவிவிட்டுக்கொண்டேன். “ஹாங்..” என்றவள் ஒய்யாரமாக வலது பக்கம் கைக்காட்டி “ஃப்ளூக்கர்ஸ் டிஸ்டிலெரீஸ் அத்தானே” என்றாள். அத்தானே இல்லை. அதுதானேவை ஸ்டைலாக சொன்னாள். பேசியது தமிழா ஆங்கிலமா என்று சரியாகத் தெரியவில்லை. தமிங்கிலீஷ் என்கிறார்களே அதுபோலவும், தொகுப்பளினிகளின் கையாட்டிப் பேசும் ப்ரிய பாஷை போலவும் இருந்தது. அவள் கைகாட்டிய பிறகு தான் அங்கே ஒரு கட்டிடம் இருப்பதையே நான் பார்த்தேன். கடைப் பக்கம் திரும்பி ராசுவிடம் “அது டிஸ்டிலெரியா?” என்று கேட்டதற்கு அவன் என்னைப் பார்த்தால் தானே பதில் சொல்வான். வாய் மட்டும் மந்திரம் போல “ஆமா...மா..மா...மா...” என்று முணுமுணுத்துக்கொண்டிருக்க அந்தப் பேரழகியை அசிங்கமான இடங்களில் கண்களால் அளந்துகொண்டிருந்தான்.

இதுவரைப் படித்ததில் “இது தான் நான்” என்று நீங்கள் நினைத்தால் ”ஐ அம் ஸாரி”. மேலே போவோம். “அப்படித்தான் நினைக்கிறேன்” என்று சங்கோஜமாக பதில் சொன்னேன். அழகு ராணிகளை தூரத்தில் ரசித்தாலும் பக்கத்தில் வந்தால் கொஞ்சம் உதறத்தான் செய்கிறது. அவளுக்கு பொதுப்பரீட்சையில் திரிகோணமிதி சொல்லிக்கொடுத்தது போல நன்றிகலந்த சிரிப்போடு “நீங்களும் என் கூட கொஞ்சம் வரமுடியுமா?” என்று சங்கீதமாகப் பேசினாள். அடித்தது யோகம் என்று நீங்கள் நினைக்கக் கூடும். அங்குதான் வம்பே வந்தது. 

நான் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து மொத்தம் நானூறு அடியில் அவள் காட்டிய அலுவலகம் இருந்தது. சேர்ந்து நடக்கும் போது இரண்டு அடிக்கு ஒருதரம் அந்தத் துப்பட்டா என்னைத் தொடுகிறது. ஒரு துப்பட்டாவின் வருடல் கூட கிளுகிளுப்பூட்டும் என்று அன்று தான் நான் உணர்ந்தேன். ”யேய் இழுத்து பின்னால் முடிந்து கொள்” என்று சொல்லலாமா வேண்டாமா என்று மனதிற்குள் வழக்காடிக் கொண்டிருக்கும்போதே அந்த கம்பெனி வந்துவிட்டது. ஊருக்குத் தெரியாமல் ஒவ்வாத காரியம் செய்பவர்கள் இடம் போல ஆளரவமற்று ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். வாசலில் நின்றிருந்த கூர்க்கா பேய்ப் படங்களில் வரும் தாடிவைத்த அச்சுறுத்தும் போஸில் முறைத்த படி நின்றிருந்தான். 

“இன்னிக்கி என்னை இண்டெர்வியூவுக்கு வரச்சொல்லியிருந்தாங்க” அவள்தான் பேசினாள். வீணைத் தந்தியை மீட்டியது போலிருந்தது. “உங்க பேரு?” மிரட்டலாய்க் கேட்டான் அந்தக் கபோதி. பின்ன. அவனைத் திட்டாமல் கொஞ்ச சொல்கிறீர்களா?. “சாருமதி” அவள் சொல்லி முடிக்கையில் என் காது வழியாக கரும்பு ரசம் ஏறி நெஞ்சுக்குள் இறங்கி இனித்தது. மன்மதன் மலரம்பு பூட்டிவிட்டான். மனதிற்குள் இரண்டு முறை “சாரு..சாரு..” என்று இரைந்து சொல்லிக்கொண்டேன். இம்முறை நாக்கு தித்தித்தது. “இவரு யாரு?” மீண்டும் மிரட்டினான். செமஸ்டர் ரிசல்ட்டுக்குக் கூட அச்சப்படாதவன் வெடவெடத்தேன். ”அண்ணா” என்ற கெட்டவார்த்தையைப் பயன்படுத்தாமல் “ஃப்ரெண்ட்” என்று சொல்லி எனக்கொரு வாய்ப்பளித்தாள். பி.ஈ கோட் அடித்தாலும் பரவாயில்லை என்று பரம திருப்தியடைந்தேன்.

உள்ளே நுழைந்தவுடன் ஒரு காலியான வரவேற்பரை. நடந்தால் காலடியின் எதிரொலி கேட்டது. கண்கள் மிரள உள்ளே பார்த்தாள். யாரோ நிலம் அதிர நடந்து வருவது தெரிந்தது. குண்டாக வளர்ந்த அமுல் பேபி போன்ற தோற்றம். “ஹாய்! ஐ அம் குணாளன்” என்று கைகுலுக்க நீட்டினான். சற்றே நெளிந்து பின்னர் தானும் நீட்டினாள் சாரு. ஒரு குலுக்கலில் விடுவித்துவிட்டு “நீங்க உள்ள வாங்க” என்று கையைப் பிடித்திழுத்து உள்ளே கூப்பிட்டான். “போறாளே... ஐயோ” என்று என் பாழும் நெஞ்சு கிடந்து அடித்துக்கொண்டது. ரெண்டடி சென்றவன் திரும்பப் பார்த்து “சார்! நீங்க என் ரூம்ல வெயிட் பண்ணுங்க. மாகசீன்ஸ் எதாவது இருக்கும்” என்று முப்பத்திரண்டையும் காட்டி அவளை இடித்துதள்ளிவிடுவது போல உள்ளே தள்ளிக்கொண்டு போனான்.

ப்ரஸ்மேனின் சாஃப்ட்வேர் என்ஜினியரிங் தலகாணி புக் மேஜையின் ஓரத்தில் அழுக்காக இருந்தது. இது மென்பொருள் தயாரிக்கும் கம்பெனி போல இல்லையே என்று அந்த ஜொள்ளனின் அறையை நோட்டமிட்டால் பேரிங் மற்றும் ப்ரேக் லைனிங் தயாரிக்கும் ப்ராஸஸ் வரைபடங்கள் ஃப்ரேம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தன. வெளியே டிஸ்டிலரீஸ் என்ற போர்டு. இது ஏதோ அகாதுகா கம்பெனியாக இருக்குமோ என்றும் உள்ளே போன அரைமணிப் பழக்க கரும்புச் “சாரு” என்னவாளாளோ என்றும் கையளவு மனது துடியாய்த் துடித்தது. 

இங்கேயே இருப்பதா அல்லது உள்ளே சென்று என்ன நடக்கிறது என்று ஒரு நோட்டமிடலாமா என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அவனது மேசையில் இருந்த மொபைல் “ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?” என்று பாடித் துள்ளியது. என் ஆப்பிள் பெண் எங்கே? என்னதிது? என்று கையில் எடுத்துப் பார்த்தால்.... யாரோ விஷ்ணு இன்ஃபார்மர் என்று வந்தது. டேபிளில் சில துண்டு சீட்டுகள் கிடந்தன.


அறிமுகமற்றவர்களின் கைப்பேசியை தொடுவது நாகரீகமல்ல. சுயம் என்னைச் சுட்டவுடன் பட்டென்று கீழே வைத்துவிட்டேன்.  ஏதோ இன்பார்மரிடமிருந்து ஃபோன், குறியீடு, தவறானது, சரியானது, எதுவும் சரியாக இருப்பது போல இல்லை. அரை மணியாயிற்று ஒரு மணியாயிற்று. அவனுடன் சென்றவள் திரும்பவில்லை. டென்ஷனானால் எனக்கு சிறுநீர் கழிக்கவேண்டும். சுவடு தெரியாமல் உள்ளே செல்லலாம் என்று எழுந்து அரையிருட்டாய் இருக்கும் இடத்திற்கு அடிமேல் அடி வைத்து திருடன் போல நடந்தேன். ஒரு கல்லூரி மாணவன் கல்ப்ரிட் போல நடப்பதற்கு எனக்கே அசிங்கமாக இருந்தது.

அதிரடி செயல்களால் எனக்கு ஆபத்து என்றுணர்ந்தேன். விசாலமான காரிடாரில் இருமருங்கும் திறந்துகிடந்த அநேக அறைகளில் மூலை முடுக்கெல்லாம் எட்டுக்கால் பூச்சி வலைப்பின்னி அறுக்க ஆளில்லாமல் சந்தோஷமாகக் குடியிருந்தது. கால் வைக்கும் இடமெல்லாம் கால்தடம் பதியுமளவிற்கு தூசி. பேய்பங்களா போல மர்மமாக இருந்தது. என்னதான் ஆம்பிளை சிங்கமாக இருந்தாலும் நெஞ்சு ”படக்...படக்...” என்று அடித்துக்கொண்டது. திடீரென்று முதுகுக்குப் பின்னால் ”ச்சிலீர்..” என்று கண்ணாடி உடையும் சத்தம். பன்னெடுங்காலமாக ஓமன் போன்ற த்ரில்லர் படங்களில் வழக்கமாக வருவது போல கடுவன் பூனை கோலிக்குண்டு கண்களை மியாவி இடமிருந்து வலம் துள்ளி ஓடியது. மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு முன்னேறினேன்.

எங்கிருந்தோ ஒரு ஆணும் பெண்ணும் குசுகுசுவென்று பேசுவது கேட்டது. காதைத் தீட்டிக்கொண்டு கேட்டேன். ஒன்று சாருவின் குரல் போல இருந்தது. இன்னொன்று அட. அந்தத் தடியன் குணாளன்தான். என்ன பேசுகிறார்கள். ஒட்டுக் கேட்டேன். “அவன் சுத்தக் கேனையன். ஜஸ்ட் வான்னு சொன்னவுடனேயே வந்துட்டான். உன்னோட செக்யூரிட்டிதான் ரொம்ப விரட்டிட்டான்பா”. அட பாதகி. பதிலுக்கு அவன் “உம். சரி. இன்னும் எவ்வளவு ஐட்டங்கள் நாளைக்கு கிடைக்கும். ஜல்தி சீக்கிரம் சொல்லு. நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சு. அவன் எழுந்து வந்துரப்போறான். ஆபிஸில் இருந்த ஒரேஆளும் இன்னிக்கி மத்தியானம் லீவு” என்று அவசரப்படுத்தினான்.

நேர்முகத்திற்கு அவள் வரவில்லை என்று என் களிமண் மூளைக்குக் கூட புரிந்துவிட்டது. “இவன் தேறுவானா?” என்றான் அந்தத் தடியன். “ம். பார்க்கலாம்” என்றாள் அந்த தடிச்சி. அழகி இப்போது எனக்கு தடிச்சியானாள். இன்னும் கொஞ்சம் குரல் வந்த திசையில் எட்டிப்பார்க்கலாம் என்ற போது சப்தமே இல்லை. கொஞ்சம் எக்கி வலது பக்கமிருந்த இன்னொரு காரிடாரை பார்த்தேன். கண்பார்வை போய் முட்டிய இடத்தில் ஒரு சிகப்பு விளக்கு உயிரை விடுவது போல எரிந்துகொண்டிருந்தது. திடீரென்று பின்னாலிலிருந்து யாரோ தோளைத் தட்டினார்கள்.

ஆ!. அடிவயிற்றில் அட்ரிலின் சுரக்க வியர்த்திருந்த என்னுடைய முகத்தைப் பார்த்து அந்த இருவரும் கொல்லென்று சிரித்தார்கள். யாரந்த இருவரா? சாருவும் குணாளனும்தான். இன்னும் கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் ஒரு கணிசமான தொகை இந்தத் தொழிலில் கிடைக்கும் போலிருந்தது. நானும் முதலில் வெகுண்டுதான் போனேன். மூன்றாவதாக ஒருவனைத் தேடிக்கொண்டு ஓடிப்போன அம்மா, உதவாக்கரை அப்பன், சீரழிந்த தங்கை என்று தறிகெட்டுப் போயிருந்த என்னுடைய வாழ்க்கைப் போராட்டத்துக்கு இது ஒரு ஜீவனோபயாமாக அமைந்தது.

போன பாராவுடன் என்னுடைய கருப்பு-வெள்ளை ரீல்கள் முடிந்துவிட்டது. இப்போது கலர்ஃபுல்லான வாழ்வு. என்னைப்போல கல்லூரிப் பருவத்தில் தடம் மாறியவர்கள் இடம் மாறி உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. இருந்தாலும் கடினமான வாழ்க்கைச் சக்கரத்தை உருட்ட எனக்கு தனியாளாய் தெம்பில்லை. திராணியற்று நான் திரிந்த போது வந்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். அது மட்டுமா, இதன் மூலம் கிடைத்த சத்புத்திரர்களின் தொடர்பில் ஒரு நல்ல கம்பெனியில் கிளார்க் போல ஒரு அடிமட்ட வேலையில் சேர்ந்து இப்போது ஒரு உயர் பதவி வகிக்கிறேன். இருந்தாலும் விட்டகுறை தொட்டகுறைக்கு என்னை ஏணியாய் ஏற்றிவிட்ட எனதுயிர் நண்பர்களுக்காக இந்தத் தொழிலும் ஒழிந்த நேரங்களில் உதவியாகச் செய்கிறேன்.

ம்.. சரி.. என்னுடைய “அந்த”த் தொழில் என்னவென்று கேட்கிறீர்களா? இங்கிருந்து ஆட்களை, அதுவும் என் போன்ற அழகிய ஆண்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பது. என்ன கேட்கிறீர்கள். அவர்களுக்கு என்ன வேலையா? கார்பெண்டர், கொத்தனார் வேலைக்கு அழகிய ஆண்கள் எதற்கு. எதிர் பாலினரைச் சந்தோஷப்படுத்துவது. சரீர சுகமளிப்பது. இதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. காண்ட்ராக்ட் படி இன்னும் ஐந்து மாதம் பாக்கியிருக்கையில் அருப்புக்கோட்டை வாலிபன் ஒருவன் ஒபாமா தேசத்தில் ஓரினமணம் புரிந்துகொண்டான். சரி. விடுங்கள். என் கஷ்டம் என்னோடு. அப்புறம். இந்தக் கதையை இதுவரை நான் யாரிடமும் சொல்லவில்லை. அதனால் நீங்களும் இரகசியம் காப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இப்போதுதான் ஒரு கோஷ்டியை ஏற்றிவிட்டு மீனம்பாக்கத்திலிருந்து வெளியே வருகிறேன்.

கடைசியாக ஒன்று. நீங்கள் கேட்கவில்லையென்றாலும் சொல்லவேண்டியது எனது முறையல்லவா. விஷ்ணு தான் இன்னமும் எங்களுக்கு இன்ஃபார்மர். முன்பு குணாளன் சாருக்கு மட்டும் இருந்தவன் அவரது அகால மரணத்திற்கு பின்பு என்னிடம் ரிப்போர்ட் செய்கிறான். போலீஸாருக்கு அவன் புல்லுருவி. எங்களுடைய சவுதி அரேபியா ஏற்றுமதிக்கான S A H2 6F என்கிற குறியீட்டை S W H2 6F என்று எஸ்.பி. கோகுலிடம் கொடுத்து குணாளனுக்கு விசுவாசமானான். அந்த டீலில்தான் இப்போது விஷ்ணு குடியிருக்கும் இரண்டு கோடி பொறுமானமுள்ள ராஜா அண்ணாமலைபுரம் 3BHK ஃபிளாட் கிடைத்தது.

ச்சே. ஏதோதோ பேசிக்கொண்டிருந்ததில் நேரமாகிவிட்டது. விஷ்ணு கன்னிமாராவில் காத்திருப்பான். இதோ என்னுடைய மொபைல் கீக்கீக்கென்கிறது. திறந்தால் விஷ்ணு இன்ஃபார்மர். ஹா..ஹா.. இவனுக்கு நூறாயுசு.

பின்குறிப்பு: சவால் சிறுகதைப் போட்டிக்காக நானெழுதும் இரண்டாவது சிறுகதை. போன கதையை நேர்மறையில் எழுதினேன். இந்தக் கதை எதிர்மறை. பிடிக்கிறதா?

-

Tuesday, October 25, 2011

வெடியார்ப்பணம்

உள்ளாட்சி தேர்தலினால் இந்த வருஷம் பட்டாசுக்கடைகள் கொஞ்சம் லேட். தீவுத்திடல் போன்ற பெரிய மைதானங்களில் தான் பட்டாசு விற்பனை செய்யவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. சந்துபொந்திலெல்லாம் சாக்கு டெண்ட் அடித்து கூவிக்கூவி விற்கிறார்கள். “யப்பா! நாம எப்ப வாங்கப்போறோம்” என்று ஊசிப் பட்டாசாய் வெடித்த என் பிள்ளைகளை இன்று நாளை என்று இழுத்தட்டித்து போன சனிக்கிழமை இழுத்துக்கொண்டு போனேன். வளர்ந்தாலும் நானும் சிறு பிள்ளைதான், எனக்கும் பட்டாசு கொளுத்தப் பிடிக்கும்.

எண்பதுகளில் ஒரு தீபாவளிக்கு ”தம்பி நூறு ரூபாய்க்கெல்லாம் வெடி கிடையாது” என்று மிலிட்டரி ஆபீசர் மாதிரி வீட்டில் கறாராக சொல்லிவிட்டார்கள். ”ஒத்தைவெடிக்கட்டு தெனம் ஒரு ரூபாய்க்கு வாங்கி ஒரு மாசமாக கொளுத்தி ஏற்கனவே காசைக் கரியாக்கியாச்சு. இன்னமுமா..” என்று என் வாயை லட்டால் அடைத்துவிட்டார்கள். 98 ரூபாய்க்கு ஒரு இரண்டடி நீள சாக்குத் துணிப்பை வழியவழிய வெடி வாங்கி இனாமாக ஒரு சாணி பத்தியும் கொளுத்துவதற்கு தந்தார்கள். இப்போது சாணி பத்தி பத்து ரூபாய். “இவ்ளோ ரூபாய்க்கு வாங்கறோம். இது கூட ஃப்ரீயாக் கிடையாதா?”ன்னு கேட்டால், “எனக்கு யாரும் ஃப்ரீயாத் தரலையே சார்”னு கல்லாவில் உட்கார்ந்து கொண்டு ஐஐடி-ஜெஈஈ கேள்வி ரேஞ்சுக்கு கேட்டுவிட்டோம் என்கிற மமதையில் உள்நாக்கு தெரியும் வரை ”ப்ஹா...ப்ஹா” சிரிக்கிறார் அந்த வெடிச்சிரிப்பு வெடிகடைக்காரர்.

98 ரூபாய் சரக்கில் வீட்டுக்குப் போவதற்குள் கையைவிட்டுத் துழாவித் துழாவி கணக்கெடுத்தால் எலெக்ட்ரிக் ஸ்டோனும் மத்தாப்பூ தீக்குச்சியும் இல்லை. பை நிறையா கொட்டியிருக்கிற வெடியில சந்தோஷம் கிடைக்காம வாங்காத அந்த ரெண்டு ஐட்டம் அந்த தீபாவளியை ஒட்டுமொத்தமாக புஸ்ஸாக்கிக் கொண்டிருந்தது. நரகாசுரன் செத்தே இருந்திருக்க வேண்டாம் என்று அவனுக்காக அனுதாபப்பட வைத்துவிட்டது.

ஜென்ம ஜென்மங்களாக தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகவே மொத்த வெடிக் கொள்முதல் செய்து பாட்டி வடாம் காய வைப்பது போல மொட்டை மாடியில் படியேறும் இடத்து சன்ஷேடில் உட்கார்ந்துகொண்டு வெடி அடியில் இங்கிலீஷ் பேப்பர் போட்டு சுள்ளென்று அடிக்கும் வெய்யிலில் காய வைப்போம். “ரெண்டு நாள் வெய்யில்ல இருந்தா சவுண்டு டபுள் மடங்கு வரும்” என்று யாரோ வெடி பல்கலைக்கழக பட்டாசாராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றுக் கண்டுபிடித்து சொன்னதைப் போன்று வாரம் முழுக்க மொ.மாடியில் பரப்பி எந்தெந்த வெடியை முதல் நாள் இரவு கொளுத்தனும் எது முதலில் எது கடைசி எது கார்த்திகைக்கு என்று அட்டவணை தயாரிக்கப்படும்.

அந்த வருஷ தீபாவளிக்கு பெருமழை வானத்தைப் பிய்த்துக்கொண்டு பண்டிகை கொண்டாடவிடாமல் கொட்டோ கொட்டென்று கொட்டியது. வங்காளவிரிகுடாவில் புயல் மையம் கொண்டிருப்பதாகவும், மூன்றாம் எண் எச்சரிக்கைக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதாகவும் பதபதைக்கும் தகவல். ஆகாய கங்கையாக மழை பொழிந்துகொண்டிருந்ததில் தான் அனைவருக்கும் தீபாவளி கங்காஸ்நானம்.

எப்போதுமே திருச்சி விவிதபாரதி இன்று மழை பெய்யும் என்றால் வெய்யில் அடிக்கும், மிதமான சீதோஷனம் என்றால் கிருஷ்ண பரமாத்மா கோவர்த்தனகிரியை குடையாய் பிடிக்கும் அளவிற்கு பொத்துக்கிட்டு ஊத்தும். ஆனால் அம்முறை பெய்யெனப் பெய்யும் மழையாக ஏகத்துக்கும் அவர்கள் வானிலை அறிக்கைச் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடித்துப் பெய்தது. ”ஐப்பசியில் அடை மழை” என்று ஊஞ்சலாடிய பாட்டியின் பழமொழி வேறு எங்களை வதைத்தது. அது ப்ளாஸ்டிக் காரி பேக்குகள் புழக்கத்தில் இல்லாத மாசற்ற காலம். பாட்டம் பாட்டமாக பெய்யும் ஒரு மழைக்கும் அடுத்த மழைக்கும் இருக்கும் இண்டெர்வெல்லில் வெடி வாங்கி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாகிவிட்டது.

கட்டு பிரித்து ஒரு லக்ஷ்மி வெடி வைத்துவிட்டு பத்தடிக்கு நாய் துரத்தும் அவசரத்தில் ஓடிப்போய் காதைப் பொத்திக்கொண்டு காத்திருந்ததில் கொஞ்சம் கொஞ்சமாக மருந்து சுருட்டிய பேப்பர் வரைக்கும் வந்து லக்ஷ்மியை பேப்பராக சிதறடிக்க மனமில்லாமல் திரியிலிட்ட நெருப்பு பொசுக்கென்று அணைந்து போனது. வெடியனைத்தும் மந்திரிகள் மேல் போட்ட ஊழல் கேஸ்கள் போல புஸ் ஆனதில் பக்கத்து வீட்டு துடிப்பான நண்பன் ஒரு உபாயம் செய்தான். எல்லா வெடியையும் பாக்கெட்டோடு ஒரு பெரிய சட்டியில் போட்டு வறுத்தால் சூடாகி வெடிநிலைக்குத் தயாராகிவிடும் என்ற மதிநுட்பத்தோடு அறிவார்ந்த ஒரு செயலில் இறங்கினான்.

லெக்ஷ்மி வெடி, சிவாஜி வெடி, குருவி, அன்னம், சரம், ஆட்டம் பாம் என்று அனைத்து ரக வெடிகளையும் எடுத்து ஒரு ஈடு வறுத்துவிட்டு மறு ஈட்டுக்கு மீதியைப் போடலாம் என்று அடுப்பில் இரும்புச் சட்டியில் வைத்துவிட்டு வாசலுக்கு வந்தான். அனலிலிட்ட சிவாஜியும், லக்ஷ்மியும் சூடு தாங்காமல் கொதித்தெழுந்து அவர்கள் வீட்டு சமையலறையை துவம்சம் செய்துவிட்டார்கள். எங்கள் எல்லோருக்கும் முன்னதாக முதலில் தீபாவளி கொண்டாடியவனுக்கு கோரஸாக சேர்ந்து வாழ்த்து சொன்னோம்.

மத்தாப்பு கொளுத்தும் மங்கையரின் எண்ணத்திலும் அன்றைக்கு அந்த பெருமழையோடு இடியும் சேர்ந்து விழுந்தது. வீட்டில் “வர்ற மார்கழி தாண்டாது” என்றிருக்கும் பெருசுகளை கூடத்தில் மத்தாப்பு கொளுத்தி புகையோடு மேலே வெண்புகை தவழும் தேசத்திற்கு அனுப்பிவிடப் போகிறார்கள் என்று முன்ஜாக்கிரதையாக வெடி கொளுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டார்கள். வீதிகளில் பிஜிலி கொளுத்தும் குஜிலிகளைக் காணாது ஆண் சமுதாத்திற்கு அன்று பேரிழப்பு ஏற்பட்டது.

வெடிகொளுத்தும் பேரார்வத்தில் சைக்கிள் கேரியரை ராக்கெட் லான்ச்சராக பயன்படுத்தி விண்ணில் செலுத்தியதில் அது மண்ணில் பாய்ந்து புது பட்டு வேஷ்டியை டப்பாக் கட்டு கட்டி வந்த கடைக்கோடி வீட்டு மாமாவின் தொடையில் பாய்ந்து துளைத்துவிட்டது. அவர் எழுப்பிய மரண ஓலத்தில் தெரு நிசப்தமானது. அவருடைய பாரியாளின் சாபத்தில் கேட்போர் காதுகள் ரணகளமானது. ”புதுத்துணி நெருப்புப் பட்டு தீஞ்சு போனா ஆகாதும்பா” என்று அவருக்கு ஆதரவாக பீதி கிளப்பிய இன்னொரு பாட்டியால் புதுவஸ்திராசையும் அந்தத் தீபாவளியில் அடியோடு ஒழிந்து போனது.

மழை இடைவிடாமல் இந்தத் தீபாவளிக்கும் வெற்றிகரமாகப் பெய்துவருவதால் இந்தப் பதிவையே வெடியார்ப்பணமாக என் நண்பர்களுக்கு சமர்ப்பித்து என்னுடைய இதயங் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறேன்.


அடிச்சொருகல்: எனக்காக சரம் வெடித்த பாவனாவுக்கு ஒரு நன்றி. பாவனா படம் எனக்களித்த நண்பர் பாரதிராஜாவுக்கு ஒரு நன்றி. போன வருஷ தீபாவளி சமயத்தில் மன்னையில் கொண்டாடிய தீபாவளி பற்றிய பதிவுக்கு இங்கே சொடுக்கவும்.

-

Monday, October 24, 2011

சிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)

விஸ்வநாத் வஸந்த பவன் மசால் தோசையும் டிகிரி காஃபியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவதற்குள் நான் இங்கே மண்டையைப் போட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன். இந்தச் சதிகார கும்பலிடம் சிக்கி நான் சின்னாபின்னமாவதற்கு பேசாமல் மேலே போய் சேர்ந்துவிடலாம் என்று தான் இந்த முடிவு. எங்கள் குலசாமி அடியக்கமங்கலம் ஐயனாரை வேண்டிக்கொண்டு போய் சேர்கிறேன். இந்த விவஸ்தை கெட்ட அநீதி பெருக்கெடுத்து ஓடும் மாய உலகத்திற்கு ஒரு பெரிய கும்பிடு. டாட்டா. பை. பை. வாழ்க வையகம்.
-விஷ்ணு
வாடகைக் குடிலுக்கு வெளியே நெடிதுயர்ந்த அரசமரத்தின் கீழிருந்து ஆறாவது முறையாக வேர்க்கடலை மடித்த கசங்கிய வாராந்திரியின் 24-ம் பக்க எண்ணைச் சுற்றியிருக்கும் வெற்றிடத்தில் கோழிக் கிறுக்கலான வரிகளை மேய்ந்தார் விஸ்வநாத். அவரது டாலடிக்கும் சொட்டைத் தலையில் நீராவியடித்த எவர்சில்வர் தட்டு போல முத்துமுத்தாய் வேர்த்தது. கர்சீப்பால் அழுந்தத் துடைத்துக்கொண்டார். கிங்ஸை இழுத்தார். ஸ்னிஃபர் டாக், பனியன் போலீஸ் தனது சம்பிரதாயங்களை செய்துகொண்டிருந்தனர். அறையைத் தலையோடு கால் புரட்டிப்போட்டார்கள். தூரத்தில் ஒரு காகம் ஈனஸ்வரத்தில் கரைந்தது.

“என்னாச்சு சார்?”

“விஷ்ணுவ இன்னிக்கி நேத்திக்கா தெரியும். வருஷாந்திர பழக்கம். காலையிலேர்ந்து கேஷுவலாப் பேசிக்கிட்டு இருந்தோம். எனக்கு அகோரப் பசி. டிஃபனுக்கு வரீங்களான்னேன். பசிக்கலை வேண்டாம்னாரு. வஸந்தபவன்ல சாப்டுட்டு வந்து பார்த்தப்போ கட்டிலுக்கு கீழ தலைகுப்புற கிடந்தாரு. புரட்டினா வாயில நுரை தள்ளியிருந்தது. டென்ஷனாகி மூக்கில கை வச்சுப் பார்த்தேன். ஹி வாஸ் டெட்!” சொட்டை வியர்வை துடைத்து ’கப்’பான கர்ச்சீப்பால் வாயைப் பொத்திக்கொண்டார் விசு.

“எஸ்.பி கோகுல் வந்தாரா?”  வினவினார் விஸ்வநாத்.

“இன்னிலேர்ந்து ஒரு வாரம் லீவுன்னு ஸ்டேஷன்ல சொன்னாங்கய்யா” 501 மட்டையாய்த் தரையில் தவழ்ந்தார்.

“நா கிளம்பறேன்” ஐராவத அம்பாசிடருக்குள் தன்னை சிரமப்பட்டு திணித்துக்கொண்டதும் லோக்கல் கடாமீசை எஸ்.ஐ இஸ்திரி போட்ட சல்யூட் அடிக்க ஸ்லோமோஷனில் கையாட்டிவிட்டு விரைந்தார் விஸ்வநாத் டி.ஐ.ஜி.


2 நாட்களுக்கு முன்.............

எருமைச் சோம்பலான மத்தியானப் பொழுது. கடலோரத்தில் போலீஸ் தலைமையகம் தேனீச் சுறுசுறுப்பாக இருந்தது. அரசு புராதனச் சின்னங்கள் காப்பகம், விளக்கொளி காணாது வௌவால் தொங்கி இருளோன்று கிடக்கும் குக்கிராமக் கோவில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் ஊரறியாத ரகசிய பொக்கிஷ அறைகளில் என்று ஓரிடம் விடாமல் சிலைக் கடத்தல் கும்பல் ஒன்று தன் கைவரிசையைக் காட்டி போலீஸ் கண்ணில் இரத்தம் சொட்ட விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருந்தது.

சட்டசபையில் “அரசின் மெத்தனம்” என்ற எதிர்கட்சிகளின் வெளிநடப்பில் முதல்வர் ஐ.ஜியை வரச்சொல்லி காதில் ரத்தம் வழிய வை(த்)தார். காதைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து கடுப்புடன் ஜீப்பேறியவர் “டிப்பார்ட்மெண்ட்ல கள்ளத்தனமான ஸ்ட்ராங் கனெக்‌ஷன் இல்லாம இது இவ்வளவு சக்ஸஸ்ஃபுல்லா நடக்காது. ஒவ்வொரு தடவையும் யாருன்னு கிட்டத்தில போனதுக்கப்புறம் கோட்டை விட்டுர்றோம். ஷேம் ஆன் அஸ்” என்று மீட்டிங் போட்டு திட்டினார். கை எச்சில் ஆகுமென்று பார்க்காமல் நாக்கைப் பிடிங்கிக் கொள்ளும்படி மேல்தட்டு போலீஸாரின் மானத்தை வாங்கினார்.

டீ வடையோடு அவசரகால மீட்டிங் முடித்துச் செவிக்குணவோடு வயிற்றுக்கும் ஈய கேன்டீனுக்கு ஓடினார்கள். விஷ்ணுவும் அங்கே சிறப்பு விருந்தினர். சென்ற மாதம் அவன் குற்றவாளிகளை மோப்பம் பிடித்து நெருங்கியதில் மகாபலிபுரம் அருகே ரோடோர ரெண்டுங்கெட்டான் ஃப்ரெஞ்ச் விடுதியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதற்குள் தப்பிவிட்ட அவர்கள் அறையில் ரவையூண்டு கசக்கிச் சுருட்டிய டாய்லெட் நாப்கின் ஒன்று விஷ்ணுவிற்கு கிடைத்தது.

காரிடாரில் ஷூ சரசரக்க நடக்கும் போது விஷ்ணு நீட்டிய நாப்கின்னில் SWH26F என்று  குருதிச் சிகப்பில் கிறுக்கியிருந்தது. இரத்தமா என்ற சந்தேகத்தில் எஸ்.பி கோகுல் டாமி போல காகிதத்தை உச்சி முகர்ந்து பார்த்தார்.

“சார்! அது செர்ரி ஃப்ளேவர்டு லிப்ஸ்டிக்.”

“ஓஹோ.. இதுதான் மகாப்ஸ்ல கிடைச்சுதா விஷ்ணு?”

“ஆமாம் சார்! டிபார்ட்மெண்ட் மக்கள்லெல்லாம் நாள் பூரா ஜல்லடையா சலிச்சுட்டுப் போன பிறகு ஹோட்டல் மானேஜர்கிட்ட கீ வாங்கி அந்த அறையை ஒரு தடவை இண்டு இடுக்கெல்லாம் துருவிப் பார்த்தேன். டாய்லெட் பேஸினோட ப்ளாஸ்டிக் சீட்டர்ல பபிள் கம் மாதிரி ஏதோ ஒட்டியிருந்தது. இடதுகையால எடுத்துப் பிரிச்சுப் பார்த்தேன்.”

“கிரேட் விஷ்ணு. இது சவுத் வெஸ்ட்ல இருக்கிற பிளாட்ல சிக்ஸ்த் ப்ளோர், ஹவுஸ் நம்பர் டூன்னு எதாவது தேறுமான்னு பாருங்க”

“சார்! எந்த ஊர்ல..வீதியில... எங்கேயிருந்து சவுத் வெஸ்ட்டு... ப்ளாட் ஃபிக்ஸ் ஆக மாட்டேங்குதே”

”என்னாச்சுப்பா. ரெண்டு பேரும் சாப்பிடப்போகலை. எனக்கு வயித்தைக் கிள்ளுது” இருவரையும் தன் கைகளுக்குள் பின்னாலிருந்து அணைத்துக் கேட்டார் விசு.

கோகுல் முன்னால் நடக்க பின்னால் தொடர்ந்த விஷ்ணுவின் சட்டைப் பாக்கெட்டில் துருத்திய கசங்கிய காகிதம் விஸ்வநாதன் கண்களை உறுத்தியது. மாநில அளவில் சிலைப் பாதுகாப்புச் சிறப்புக் காவல் படைக்குத் தலைமையதிகாரியாக நியமித்திருந்தார்கள்.

“விஷ்ணு.. அதென்ன பாக்கெட்ல?”

“ஒன்னும் இல்ல சார்! போன கேஸ் துப்புத் துலக்கும்போது மகாபலிபுரத்தில ஒரு சீட்டுக் கிடைச்சுது. அதான் கோகுல் சார்கிட்ட...”

“சொல்லிட்டீங்களா?” என்று பதபதைத்தார்.

“இல்ல. சொல்லலாம்னு.........”

“உஹூம். யார்கிட்டயும் மூச்சுக் காட்டாதீங்க. இது ரொம்ப சென்ஸிடிவ்வா போயிகிட்டு இருக்கு. நிறைய காரியங்கள் டிப்பார்ட்மெண்ட் ஆட்களுக்குக் கூடத் தெரியாம ரகசியமா செய்ய வேண்டியிருக்கு. எங்கிட்ட குடுங்க.. இதப் பத்தி அவர்கிட்ட எதுவும் ஏற்கனேவே பேசிட்டீங்களா?”

“ஆமா. இந்த மாதிரி ஒரு காகிதம் கிடைச்சுருக்குன்னு சொன்னேன். சாப்பிட்டுட்டு பேசலாம்னாரு” விஜிடெபிள் புலாவ் மூக்கைத் துளைக்கும் ஹாலுக்குள் இருவரும் பிரவேசித்தார்கள். கையலம்பும் இடத்தில் கோகுல் கையை சுத்தமாக சோப்பாயில் போட்டுக் கழுவிக்கொண்டிருந்தார்.

“விஷ்ணு. ஒன்னு பண்ணுங்க. இந்தச் சீட்டை என் கையில கொடுத்துடுங்க. கோகுல்கிட்ட தவறான செய்தியை சொல்லி திசை மாத்திடுங்க.. இந்தப் பேப்பரைப் பத்தி கேட்டார்னா எங்கிட்ட இருக்குன்னு சொல்லிடுங்க.. ஓ.கே”

மதியச் சாப்பாடு தொப்பையர்களின் பெல்ட்டை இறுக்க சமூகக் கடமையாற்ற காவல் நிலையங்களுக்கு விரைந்தார்கள். கோகுல் விஷ்ணுவை அழைத்து “உங்களுக்குக் கிடைத்த அந்தக் குறியீடுகளை எனக்கு மெயில் அனுப்பிடுங்க” என்று உத்தரவிட்டபடி அவசரமாக கவர்னரின் தில்லி பயண பந்தோபஸ்து ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.

**

நான்கு மணிக்கு அண்ணாசாலையில் அவ்வளவாக கழுத்தை நெறிக்கும் பம்பர்-டு-பம்பர் டிராஃபிக் இல்லை. ”நடிகை விவாகரத்து”  என்று வம்பர்களை சுண்டி இழுத்த கொட்டை எழுத்துக்களில் அச்சடித்து மாலை பத்திரிக்கைப் போஸ்டர் ஆடிக்கொண்டிருந்த கடையில் ஒரு வில்ஸ் வாங்கி பற்ற வைத்தான் விஷ்ணு. ஆணும் பெண்ணும் அணுக்கமாக உட்கார்ந்திருக்கும் விளம்பரத் தட்டியில் ஓசிக்கு தன் கடைப்பெயரையும் வில்ஸ் கம்பெனியார் செலவில் அச்சடித்து மாட்டியிருந்தார்கள். டபிள்யூ மட்டும் மெகா சைஸில் காலை நீட்டிக்கொண்டு தெரிந்தது. விஷ்ணுவிற்குள் பல்பு எரிந்தது.

அமெரிக்கக் கும்பல் ஒன்றுதான் MEtal Lord For ME என்பதை ஸ்லோகனாகக் கொண்டு பேரியக்கமாக நிழலுலகத்தில் இயங்கி வந்தார்கள். மீமீ இயக்கத்தினர் ஒவ்வொரு கலைநயமிக்க இடங்களிலும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி கன்னக்கோல் போட்டார்கள். திருடுவதற்கு பக்கத்தில் முகாமிட்டு ஓரிரு நாட்கள் கலாரசிகர்களாக சென்று வேவு பார்த்து யாருக்கும் சந்தேகம் வராதபடி லவட்டிவிடுவார்கள். வில்ஸ் என்கிற வெள்ளைக்காரச் சிலைத் திருடனைப் பற்றிய சர்வதேச குற்ற அறிவிப்பு ரகசியமாக சென்னைக் காவல்துறைக்கும் மெயிலாக கிடைத்திருந்தது. இது வில்ஸாக ஏன் இருக்கக்கூடாது என்று விஷ்ணுவிற்கு ஒரு பட்சி சொன்னது.

“சார் இந்தாங்க பாக்கி...” என்று விஷ்ணுவிற்கு எரிந்த பல்பை அணைத்தான் கடைக்காரன். ஊதிக்கொண்டே பொடிநடையாக வந்ததில் அலையலையாய் புகை SWH26F என்ற எழுத்துக்களில் விண்ணில் வட்டமடித்தது. சோஃபி என்ற பெயரை மகாபலிபுர ஹோட்டல் லெட்ஜரில் பார்த்தது ஞாபகம் வந்ததும் கணக்கு சரியாகிறது என்ற மகிழ்ச்சியில் சிகரெட் புகையோடு சேர்ந்து ஆகாயம் மேலே ஏறினான் விஷ்ணு.

“கோகுல் சார். இந்த கேஸ்ல நாம பாதிக் கிணறு தாண்டிட்டோம்னு நினைக்கிறேன்” மகிழ்ச்சி பொங்க கோகுலை அழைத்துப் பேசும்போது “பா........ம்” என்று ஹார்ன் அடித்த மாநரக பஸ் எதிர்முனையில் கோகுலை மீண்டும் “ஹா.....ஒன்னும் சரியாக் கேட்கலை” கேட்க வைத்தது.

கிடைத்த இரண்டு க்ளூவையும் விவரித்த விஷ்ணுவை ”டின்னருக்கு எட்டு மணிக்கு மவுண்ட்ரோட் ஹோட்டல் செந்தூருக்கு வந்துடுங்க.. மத்தத அங்க பேசிக்கலாம்” என்று அலைபேசியின் தொடர்பைத் துண்டித்தான்.

கோகுல் டி.ஐ.ஜி விஸ்வநாத்தின் வீட்டில் அழைப்புமணிப் பொத்தானை அமுக்கி அது சங்கீதம் வாசிக்கும் போது மாலை 7 மணி.

கதவு திறந்தபோது பெர்முடாஸும் டீஷர்ட்டுமாய் வயதை இரண்டால் வகுத்து விஸ்வநாதன் இளமையாய் நின்றிருந்தார்.

“ப்ளீஸ் கம். என்ன இந்த நேரத்தில?”

“சார்! அந்தச் சிலை திருட்டு கேஸ் க்ராக் பண்ணிடலாம்னு நினைக்கிறேன். அதப் பத்தி உங்ககிட்ட பேசிட்டு....”

“டூ மினிட்ஸ் உள்ள வந்து உட்காருங்க கோகுல். தலைக்கு கொஞ்சம் தண்ணிய ஊத்தி ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வந்துடறேன். வீட்ல அம்மாவும் பொண்ணும் விண்டோ ஷாப்பிங் போயிருக்காங்க. நா வந்துதான் உங்களுக்கு எதாவது திரவம் குடிக்கக் கொடுக்கனும்.” என்று டர்க்கி டவலை சுற்றிக் கொண்டு ஓடினார்.

“பொறுமையா வாங்க சார். நா வெயிட் பண்றேன்” ’ன்’சொல்லும் போது பாத்ரூமில் நுழைந்திருந்தார்.

கேஜி குழந்தை மேஜைப் போல பென்சிலும், ஸ்கேலுமாக அலங்கோலமாக இரைந்து கிடந்தது. வாரமலரின் ”குறுக்கெழுத்துப் போட்டி” கண்டுபிடிப்பதைப் போல SWH26Fவை  குறுக்காகவும் நெடுக்காகவும் கிறுக்கி முயற்சித்திருந்தார். அப்போதுதான் ”Sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான..” என்று விஷ்ணு பெயரில் இருந்த அந்தச் சிட்டு அவன் கண்களுக்கு தட்டுப்பட்டது. எட்டு மணிக்கு விஷ்ணுவை சந்திக்கும்போது கேட்க வேண்டும் என்பதற்காக அவன் அனுப்பிய குறியீட்டு மெயிலின் முக்கிய பாகத்தை எடுத்து மேஜையில் இருந்த சீட்டுடன் பொருத்திப் பார்த்துச் சிரித்தான். விஸ்வநாதனின் மொபைல் வைப்ரேஷன் மோடில் தையதக்காவென்று குதித்தது. கையிலெடுத்துப் பார்த்த கோகுலுக்கு வியப்பு. அதில் Vishnu Informer என்று ஒளிர்ந்தது. இந்த நேரத்தில் இவனெதற்கு இவரைக் கூப்பிடுகிறான் என்று யோசித்தவாறே மீண்டும் மேஜையில் மொபைலைக் கிடத்தினார் கோகுல்.



”உம். சொல்லுங்க கோகுல்...” என்று ஈரத் தலையைத் துவட்டியவரிடம் கடைசியாக விஷ்ணு கண்டுபிடித்தது வரை சொல்லிவிட்டு எட்டு மணிக்கு விஷ்ணுவை சந்திக்கும் அவசரத்தில் புல்லட் ஏறிப் பறந்தான் கோகுல்.

செந்தூர் ஹோட்டலில் குறை வெளிச்சத்தில் கடைசி டேபிளில் காத்திருந்தான் விஷ்ணு. 

“ஸோ, கண்டுபிடிச்சிட்டே” என்று விஷ்ணுவின் முதுகில் தட்டினார் கோகுல்.

“ஆமா சார்! மகாப்ஸ்ல கொள்ளையடிச்சப்போ ஊருக்கு அவுட்டோர்ல இருக்கிற ஈ ஓட்ற ஹோட்டல்லதான் தங்கியிருந்தாங்க. அது மாதிரி இப்ப கடத்தப்போற வென்யூல கூட லோக்கல்ல யாரும் எட்டிப்பார்க்காத லாட்ஜ்லதான் இவனுங்க தங்கப் போறானுங்க”

“எப்டி கண்டுபிடிக்கிறது விஷ்ணு?” தலையைச் சொறிந்தான் கோகுல்.

”இதுவரைக்கும் நடந்த திருட்டுக்கள்ல முருகன் சிலையைத்தான் குறி வச்சு தூக்கியிருக்காங்க. அதனால இப்பவும் ஆறுமுகர் தான் அபேஸ் ஆகப் போறாருன்னு நினைக்கிறேன்”

“சிங்காரச் சென்னையில எந்த ஆறுமுகர்ப்பா கொள்ளையடிச்சிக்கிட்டு போற மாதிரி இருக்காரு”

“ஊஹும். சென்னையில இல்லை. வெளியூர்ல..”

“இண்ட்ரெஸ்டிங்... எந்த ஊரு... கெஸ் பண்ண முடியுதா...”

“தாராளமா.. இந்தக் கட்டத்தைப் பாருங்க” என்று கைத் துடைக்கும் நாப்கின்னில் காத்திருந்த நேரம் வரை கட்டமிட்டதைக் காண்பித்தான்.

CodeLocationExecution
SSouthSophia
WWestWills
H2Hill SecondHotel to
6FSix Face(ஆறுமுகம்)Six Furlong

கோகுலின் முகம் ஆச்சர்யத்தில் மிளிர்ந்தது. ”சிக்மென்ட் ஃப்ராய்ட் புக் போல கொஞ்சமா புரிஞ்சும் நெறையா புரியாத மாதிரியும் இருக்கு. கேன் யூ எக்ஸ்ப்ளைன்?”

”சென்னையிலிருந்து தென்மேற்கில் ஆறுபடைவீட்டில் இரண்டாவதான பழனி முருகன் ஆலயம் தான் டார்கெட். அதற்கான மாஸ்டர் ப்ளான் மகாபலிபுரத்தில் திருடும் போதே தீட்டியிருக்கிறார்கள். இதை யார்யார் எப்படி எக்ஸிக்யூட் செய்யப் போகிறார்கள் என்பதை இரண்டாவது காலத்தில் வரிசைப்படுத்தியிருக்கிறேன். ஒரே கோட்வேர்டில் ரெண்டு செய்திகள்

மகாபலிபுரத்தில் கைவரிசை காட்டிய அதே சோஃபியா மற்றும் வில்ஸ் இருவரும் தோராயமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு இதை முடிக்கப்போகிறார்கள்.”

மூச்சுவிட்டவுடன் சர்வர் விரல் விட்ட தீர்த்தத்தை ஒரே மடக்காக சாய்த்துக்கொண்டு க்ளாஸை கீழே விஷ்ணு வைத்ததும் கை சுளுக்கும் வரை குலுக்கினார் கோகுல்.

“சிம்ப்ளி சூப்பர்ப் விஷ்ணு. இப்ப உன்னை அப்படியே இருக்கக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு.”

மறுநாள் விடியற்காலை ஆகாயமார்க்கமாக சொக்கநாதரைப் பார்த்துக்கொண்டே மதுரையில் இறங்கினார்கள். பழனிக்கு ஒரு வாடகைக் காரில் பறந்தார்கள். கோயிலுக்கு ஒரு கி.மீ சுற்றுவட்டாரத்திலிருக்கும் ஒவ்வொரு லாட்ஜாக வெளிநாட்டினர் யாராவது தங்கியிருக்கிறார்களா என்று மஃப்டியில் ஏறியிறங்கினார்கள்.

தனது பேத்திக்கு மொட்டையடிக்கக் குடும்பத்தினரோடு பழனிக்கு வந்திருந்த விஸ்வநாத் ஜவ்வாது விபூதி ஸ்டாலருகே விஷ்ணுவைப் பார்த்துவிட்டு கைதட்டிக் கூப்பிட்டார்.

“என்னப்பா இங்க...”

யாரிடமும் சொல்லவேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னதை மீறி நாம் ஈடுபடுகிறோம் என்று தெரிந்தால் கோபிப்பாரோ என்ற பயத்தில் ”இல்ல சார்.. வந்து....” என்று தடுமாறினான்.

“என்னாச்சு... எதுக்கு தயங்குற... நீ எங்க இந்தப் பக்கம்..”

“எங்க மாமா பையனுக்கு மொட்டையடிக்க வந்தோம்...”

“மாமா பையனுக்கா...”

“ச்சே.. இல்ல பேரனுக்கு சார்”

“சரி..சரி... ரொம்ப அவசரத்தில இருக்கீங்க போலருக்கு... உங்களை நாளைக்கு மீட் பண்றேன்” என்று விஷ்ணுவின் விடுதியை ஐஃபோனில் குறித்துக்கொண்டார்.

அவரிடமிருந்து பிய்த்துக்கொண்டு கடைத்தெரு தாண்டி வந்தபோது சந்தில் மறைந்திருந்த கோகுல் “அவரிடம் எதுவும் சொன்னியா?” என்று கேட்டான்.

“இல்லை சார்! அவர்கிட்ட வேணும்னா சொல்லிடட்டா.. நாளைக்கு எங்கிட்ட பேசறேன்னு சொல்லியிருக்காரு...”

“கண்டுபிடிச்சிட்டு சொல்லுவோம்... அதுவரைக்கும் சும்மாயிரு...” என்று அவர்கள் தங்கியிருந்த குடிலுக்குள் தஞ்சமடைந்தார்கள்.

விஸ்வநாத்துக்கு தெரியாமல் வந்துவிட்டதால் பார்த்தால் கோபித்துக் கொள்வார் என்று காரணம் சொல்லிவிட்டு விடியற்காலை பஸ்ஸில் ஊருக்கு கிளம்புவதாக புறப்பட்டான் கோகுல். எட்டு மணிக்கு விஸ்வநாத் விஷ்ணு தங்கியிருந்த தேவஸ்தான குடிலுக்கு வந்தார். பேச்சுவாக்கில் அவரிடம் கோகுலுடன் பழனி வந்த காரணத்தைச் சொல்லிவிட்டு வருந்தினான். "பரவாயில்லை... விடுங்க” என்று விஸ்வநாத் சாப்பிடக் கூப்பிட்டும் விஷ்ணு மறுத்துவிட்டான்.

ரூமில் சோகமாகத் தனியாளாய் உட்கார்ந்திருந்த போது திடீரென்று கோகுல் நுழைந்தான். 

“விஷ்ணு! நீ ரொம்ப புத்திசாலி. நீ கண்டுபிடிச்ச அவ்வளவு விஷயங்களும் நூத்துக்கு நூறு உண்மை. ஆனா அவங்களை பிடிக்கமுடியாது” என்றான் நம்பியாராய்.

“ஏன்?”

“ஏன்னா அவங்க என்னோட பார்ட்னர்ஸ். இன்னும் கொஞ்ச நாள்ல சுவிஸ்ல குடியேறப்போறேன். இதுதான் எங்களோட லாஸ்ட் டீல். இதை விஸ்வநாத்கிட்ட போட்டுக்குடுத்தா உன்னைப் பிடிச்சு உள்ள வைக்க நீதான் இந்தக் கும்பலுக்கு மூலாதாரமா இருக்கேன்னும், இந்தியாவோட மெயின் ஏஜென்ட் நீதான்னும் நிரூபிக்க அந்த மகாபலிபுர ஹோட்டல் மேனேஜரை கணக்குப் பண்ணிட்டேன். அதனால....”

ஷாக்கானான் விஷ்ணு. ”நீங்க என்ன சொன்னாலும் நா ஒத்துக்க மாட்டேன். விஸ்வநாத் சார் வந்ததும் ரெண்டுல ஒன்னு முடிவு பண்ணிடலாம்” என்று டெசிபலைக் கூட்டினான்.

அவனைக் கொலைவெறியுடன் நெருங்கிய கோகுல் சட்டைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியிருந்த விஷப் பொடியை விஷ்ணு வாயில் திணித்தான். இரண்டு வினாடிகள் விஷ்ணுவின் வாயை மூக்கோடு சேர்த்துப் பொத்திவிட்டு கையை எடுத்தான். உயிரற்ற சடலமாக சரிந்த விஷ்ணுவைத் தரையில் கிடத்திவிட்டு அருகில் கிடந்த கசங்கிய காகிதத்தில் இந்தக் கதையின் முதல் பாராவைக் கிறுக்கிவிட்டு மறைந்தான்.

**

”ஆமா. கோகுல்தான்... கொள்ளைக்கார வெள்ளைக்காரங்களைப் பிடிச்சிட்டோம். லேசா தட்டின உடனேயே கக்கிட்டாங்க.” செல்ஃபோனில் டி.ஐ.ஜி விஸ்வநாத் குடும்ப ஸகிதம் பேசிக்கொண்டே பழனியின் ”நன்றி மீண்டும் வருக!!”வைத் தாண்டும் போது “முருகனுக்கு அரோகரா!! கந்தனுக்கு அரோகரா!!” என்று காவடியேந்திய பக்தர் கூட்டம் ஆறுமுகனைத் தரிசிக்க சென்றுகொண்டிருந்தது.

பின்குறிப்பு: இது சவால் சிறுகதைப் போட்டி - 2011 க்காக எழுதப்பட்டது. மேலே இருக்கும் படம் இக்கதையில் ஒரு இடத்தில் சரியாகப் பொருந்தி வரவேண்டும் என்பது சவால். இப்போட்டியில் 90 சதவிகிதம் மார்க்குகள் நடுவர்களாலும் 10 சதவிகிதம் யுடான்ஸ் வாக்குகளாலும் தேர்ந்தெடுக்கப்போகிறார்களாம். முழு விதிமுறைகளைப் படிக்க இங்கே செல்க.

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails