Thursday, November 8, 2012

முட்டாள் ராஜாவும் மங்குனி மந்திரியும்


கைவசம் ஒரு ராஜா கதை இருக்கு. அதை இப்படிதான் சம்பிரதாயமா ஆரம்பிக்கணும். ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். அவன் ஒரு முட்டாள் ராஜா. அவன் தான் அப்படின்னா அவனுக்கு வாய்ச்ச மந்திரியும் அவனை விட கடைந்தெடுத்த முட்டாள். இரண்டுபேரும் சேர்ந்து கிரீடத்துக்குள்ள பொரிகடலை போட்டு பொழுதன்னிக்கும் தின்னுகிட்டிருப்பாங்களாம். முட்டாள்தனமான தர்பாரால் நாட்டையே குட்டிச்சுவராக்கிட்டாங்களாம். மக்களுக்கும் வேற வழி தெரியாம இந்த முட்டாள் ராஜாவையும் மந்திரியையும் சகிச்சுக்கிட்டு காலத்தை தள்ளிக்கிட்டிருந்தாங்களாம்.

ஒரு நாள் ஒரு பொம்பளை கண்ணீரும் கம்பலையுமா “ராஜா! நீங்கதான் இதுக்கு ஒரு நியாயம் சொல்லணும்”னு வந்து தர்பார்ல கையைப் பிசிஞ்சிகிட்டு நின்னாளாம்.

சுத்திலும் திருதிருன்னு முழிச்சுப் பார்த்துட்டு “என்ன வேணும்?”ன்னு கேட்டான்.

“எங்க வீட்ல ஒரு திருடன் கன்னக்கோல் போட்டான். அப்படி போடும்போது மொத்த சுவரும் இடிஞ்சு விழுந்திடுச்சு. வீட்ல இருந்த கொஞ்ச நஞ்ச பொருளையும் அவன் கொள்ளையடிச்சுக்கிட்டு ஓடிப்போயிட்டான். நீங்கதான் என்னை காப்பாத்தணும். இதுக்கு ஒரு வழி சொல்லணும்”ன்னு அழுதுகிட்டே கேட்டாள்.

இதுவரைக்கும் யாருமே இப்படி திடுதிப்புன்னு அவன் கிட்ட நீதி நியாயம்னு கேட்டு ஒருநாளும் வந்ததில்லை. என்ன சொல்றதுன்னு புரியாம

“சுவர் இடிஞ்சு விழுந்திடுச்சுல்ல. உன் வீட்டைக் கட்டின கொத்தனாரை அழைச்சுக்கிட்டு வரச்சொல்றேன். அவனுக்கு தண்டனை கொடுத்தா எல்லாம் சரியாப்போய்டும்”ன்னு சொல்லிட்டு “யாரங்கே!”ன்னு வாயிற்காப்போனை கூப்பிட்டு “இந்தம்மாவின் வீட்டைக் கட்டின கொத்தனாரை கொத்தாகப் பிடித்து இழுத்துவாருங்கள்”ன்னு சொல்லி கட்டளை போட்டான்.

ஒரு பத்து நிமிஷத்தில அரையில வேஷ்டியோட தலைக்கு இருந்த முண்டாசை எடுத்து கக்கத்தில் சொருகிக்கொண்டு “கும்பிடறேன் ராஜா”ன்னு வந்து நின்றான் அந்தக் கொத்தனார்.

“இந்தம்மாவோட வீட்டை நீ சரியாக் கட்டலை. வீடு இடிஞ்சு விழுந்துடுச்சு. வீட்ல கொள்ளை போயிடுச்சு. எல்லாத்துக்கும் நீதான் காரணம். நாளைக்கு காலையில உனக்கு தூக்குத் தண்டனை”அப்படின்னு சொல்லி தீர்ப்பு வழங்கிட்டான்.

பிராந்து கொடுத்த பொம்பளைக்கே என்னவோ போல ஆயிடுச்சு. திருட்டுப் போனப் பொருளை கண்டு பிடிச்சுக் கொடுக்காம எப்பவோ வீடு கட்டின ஆளை தூக்குல போடறானே இந்த கேன ராஜா அப்படின்னு அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.

கொத்தனார் இதிலேர்ந்து தப்பிக்க ஒரு யோசனை பண்ணினான்.

“ராஜா! இந்த தப்பு நான் பண்ணியிருந்தாலும். நான் மட்டுமே காரணமில்லை. நான் கலவையைப் பூசும் போது களிமண் பிசைஞ்சு கொடுத்தான் பாருங்க. அவன் மேலையும் தப்பு இருக்கு. அவன் தான் தண்ணிய கூட ஊத்திட்டான். அதனாலதான் சுவரு ஸ்ட்ராங்கா இல்லை”ன்னு நைசாக நழுவினான்.

“அந்த சித்தாளைக் கூப்பிடுங்க. நாளைக்கு அவனுக்கு தூக்கு தண்டனை ”ன்னு உத்தரவு போட்டான்.

சித்தாள் தர்பார் வரத்துக்கு முன்னாலையே ஊர்பூராவும் இந்த விநோத வழக்கைப் பற்றி பேசிக்கிட்டிருந்தாங்க. வந்தவன் தயாராய் ஒரு பதிலோட வந்தான்.

“ராஜா! இது என் தப்பில்லை. நாலு குடம் தண்ணி ஊத்துன்னு சொன்னாரு. நான் ஊத்தினேன். மத்தபடி பானையை பெருசா செஞ்சாம் பாருங்க அந்தக் குயவன். அவன் தப்புதான் இது. அவனைக் கேளுங்க”ன்னு கையைக் காட்டி விட்டுட்டான்.

“அந்த குயவனைக் கொண்டு வாங்க. நாளைக்கு அவனுக்கு தூக்கு”ன்னு பிரகடனம் பண்ணினான்.

ஊருக்கே தெரிஞ்ச விஷயம், அந்தக் குயவனுக்கும் தெரிஞ்சிருந்தது. அவன் உள்ள வரும் போதே சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணிக்கிட்டே வந்தான்.

“ராஜா! நீங்க நல்லா இருப்பீங்க. பானையை பெருசாப் பண்ணினது என் தப்பில்லை ராஜா. நான் இந்தப் பானையைப் பண்ணிக்கிடிருக்கும்போது குறுக்கும் நெடுக்குமா அந்த தாசிப்பெண் போய்ட்டு வந்துகிட்டிருந்தா. அதுல கண்ணை மேய விட்டுட்டு பானையை பெருசாக்கிட்டேன். அவ தான் இதுக்கெல்லாம் காரணம். என்னை விட்டுடுங்க.”ன்னு கெஞ்சினான்.

”அந்த தாசியை அழைச்சுக்கிட்டு வாங்க. நாளைக்கு அவளுக்கு தூக்கு”ன்னு உத்தரவிட்டான் அந்த முட்டாள் ராஜா.

நிறைய கஸ்டமர்களை கொண்ட அவளுக்கு உடனே விஷயம் தெரிஞ்சுபோச்சு. தர்பாருக்குள்ள நுழைஞ்சவுடனேயே நளினமா அபிநயம் பிடித்து வணக்கம் சொன்னாள். எப்படி இப்படி ஒரு ஃபிகரை நாம பார்க்காம விட்டோம்னு ராஜாவுக்கு வாய் திறந்து ஜொள்ளு ஊத்த ஆரம்பிச்சுது.

“ராஜா! நான் குறுக்கும்நெடுக்குமா போய்கிட்டிருந்தது உண்மைதான். ஆனா அதுக்காக் நீங்க என்னை தூக்கில போடக்கூடாது. அந்த துணி தோய்க்கும் சலவைக்காரனைதான் தூக்கில போடணும்.”னா.

முட்டாள் ராஜா “ஏன்?”னு கேட்டான்.

“அவன்கிட்ட நல்லதா துணி ரெண்டு துவைக்க போட்டிருந்தேன். எனக்கு அன்னிக்கு நாட்டியக் கச்சேரி இருந்தது. அவன் இன்னிக்கி தரேன். நாளைக்கு தரேன்னு என்னை அலைக்கழிச்சான். அதுக்காத்தான் நான் குறுக்கும் நெடுக்குமா போயிக்கிட்டிருந்தேன். அதனால நீங்க அவனைதான் தூக்கில போடணும்”ன்னு விண்ணப்பிச்சுக் கேட்டுக்கிட்டா.

“அந்த சலவைக்காரனை அழைச்சுக்கிட்டு வாங்கப்பா. நாளைக்கு அவனுக்கு தூக்கு”ன்னு ரொம்ப நொந்து போய் டயர்டாகிச் சொன்னான் ராஜா.

சலவைக்காரனுக்கு ந்யூஸ் போய் ஒரு மணி நேரமாச்சு. அவன் தயாரா ஒரு பதிலோட உள்ள வந்தான்.

“ராஜா! அந்தம்மா சொல்றது சரிதான். ஆனா என் மேல ஒண்ணும் தப்பில்ல. நான் துணி துவைக்கிற கல்லுல ஒரு சாமியார் தியானம் பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருந்தாரு. அவரை எப்படி எழுப்பறதுன்னு தெரியலை. அதனால அந்த சாமியாரைத்தான் நீங்க விசாரிக்கணும்”ன்னு சொல்லிவிட்டு கழண்டுகிட்டான்.

“இந்த தடவை எவனாயிருந்தாலும் எங்கிட்டேயிருந்து தப்பமாட்டான். அந்த சாமியாருக்கு நாளைக்கு தூக்கு.”ன்னு சொல்லிட்டு “அந்த சாமியார் வர்றவரைக்கும் எல்லோரும் போய் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வாங்க”ன்னு டீ ப்ரேக் விட்டுட்டு அரியாசனத்துலேர்ந்து எழுந்து போய்ட்டான்.

ஒரு பத்து நிமிஷம் கழிச்சு சாமியார் உள்ள வந்தார். அவர் அன்னிக்கு மௌன விரதம்.

“நாளைக்கு காலையில சரியா பத்து பத்துக்கு உங்களுக்கு தூக்கு”ன்னு சொல்லிட்டு “சபை கலையலாம்”ன்னு கிளம்பினபோது அவையோர்கள் பகுதியின் கடைசியிலேர்ந்து “ஒரு நிமிஷம்”ன்னு ஒரு குரல் வந்தது.

ராஜாவும் மந்திரியும் குரல் வந்த திக்கில ஆச்சரியமாப் பார்த்தாங்க. நம்ம தீர்ப்புக்கு மறுத்து இந்த நாட்ல எவன் சொல்லுவான்னு “யாரது?”ன்னு ராஜாவும் பதிலுக்கு குரல் விட்டான்.

ஒரு மத்திம வயசு இளைஞன். நேரா எழுந்து சபையோட மத்திக்கு வந்தான். ராஜாவுக்கு வணக்கம் சொன்னான்.

“அரசே! சாமியாருக்கு நாளைக்கு எத்தனை மணிக்கு தூக்கு?”ன்னு கேட்டான்.

“பத்து பத்துக்கு”

“அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி. அந்த நேரத்தில என்னை தூக்கில போடுங்க”ன்னு கேட்டான். சபையே அதிர்ந்தது. அப்படியே நிசப்தமா ராஜாவையும் அந்த வாலிபனையும் மாறி மாறி பார்த்தாங்க.

ராஜா “ஏன்?”னு கேட்டான்.

”இல்ல. நாளைக்கு பத்து பத்துக்கு யார் தூக்கிலடப்பட்டு செத்துப்போறாங்களோ அவங்க தேவலோகத்துக்கே ராஜாவாகலாமாம். ஜோசியக்காரன் சொன்னான்.”அப்படீன்னான்.

உடனே ராஜா, “யாரையும் தூக்கில போடவேண்டாம். என்னை போடுங்க”ன்னு சொல்லிட்டு தேவலோகத்துக்கே ராஜாவாகும் கனவுக்கு இன்ஸ்டெண்டா போய்ட்டான்.

அந்த இளைஞன் “ம்க்கும்.. மன்னா!”ன்னு கொஞ்சம் கனைத்துக் கூப்பிட்டு அந்த ராஜாவின் கனவைக் கலைத்து இன்னொரு விண்ணபமிட்டான்.

“என்னா?”ன்னு கேட்டான்.

“அரசே! அட்லீஸ்ட் நாளைக்கு பத்து பதினஞ்சுக்கு என்னை தூக்கில போடுங்க”ன்னான்.

ராஜாவுக்கு ஒரே வியப்பு. என்னடா எப்படியும் நாளைக்கு தூக்கில தொங்கணும்னு ஒருத்தன் நிக்கறானேன்னு “ஏன்?”ன்னு திரும்பவும் கேட்டான்.

“இல்ல! பத்து பதினைஞ்சுக்கு தூக்கில தொங்கி உசிரை விட்டா தேவலோகத்துக்கே மந்திரியாகலாம்னு இன்னொரு ஜோசியான் சொன்னான். ராஜாவாகத்தான் ஆகமுடியாது, மந்திரியாகவாவது ஆகலாமேன்னு ஒரு ஆசை”என்று தலையைச் சொரிந்தான்.

”நாளைக்கு பத்து பதினைஞ்சுக்கு இந்த மந்திரியை தூக்கில போடுங்க. நானும் அவரும் சேர்த்து தேவலோகத்தை ஆளப்போறோம். இதுதான் இறுதி தீர்ப்பு”ன்னு சொல்லிட்டு சபையைக் கலைச்சிட்டு உள்ள போயிட்டான்.

மறுநாள் தலைநகரமே சேர்ந்து அந்த ராஜாவையும் மந்திரியையும் அடுத்தடுத்து தூக்கில போட்டுட்டு அந்த இளைஞனைப் பாராட்டி அரியாசனத்துல அமர வைச்சாங்களாம்.

Sunday, October 28, 2012

ழ்கீ லைத

மேகங்களுடன் ஒட்டி உரசி உறவாடும் மலையுச்சி. காற்றுப் புகா வண்ணம் அடர்ந்த காடாய் மண்டியிருந்த பல ஜாதி மரங்கள். ஒன்றுக்கொன்று போட்டியாய் வானத்தில் ஏற முயன்றுகொண்டிருந்தன. ஏதேதோ இனம் தெரியாத பறவைகளின் க்ரீச்சொலிகள். விண்ணைக் குடைந்தப் பேய்க்காற்று ஒன்று சமாதானமாயிருந்த மரங்களிடையே பெருஞ் சமர் மூட்டியது. ஒரு சமயம் ”ஹோ”வென்ற ஆரவாரமும் மறு சமயம் அமைதியுமாக தேசிய அணி விளையாடும் ஃபுட்பால் ஸ்டேடியம் போல சப்தமாயிருந்தது அக்காடு. மரங்களுக்குப் புடவை கட்டியது மாதிரி அதைச் சுற்றியிருந்த சிறிதும் பெரிதுமாக வளர்ந்த பச்சைக் கொடிகள். ஆங்காங்கே கத்தரிப்பூக் கலரிலும் சிவப்பு வண்ணத்திலும் அச்செடிகளில் பூத்திருந்தது புடவையின் எம்ப்ராய்டரி டிசையன் போலிருந்தது.

சிகரத்திலிருந்த அம்மரக்கூட்டங்களைக் கடந்து வந்து எவ்வளவு நேரமாய் அந்தக் கரும் பாறையின் மேல் விஸ்ராந்தியாய் சாய்ந்திருக்கிறேன் என்று தெரியாது. வானுலகத்திற்கும் எனக்கும் ஒரு முழம் அளவுதான் இருப்பதாகப்பட்டது. துவக்கத்தில் ஒன்றிரண்டாய் ஆரம்பித்த மழைத் துளிகள் பூமிக்காதலியின் எதிர்ப்பேதுமில்லை என்று தெரிந்துகொண்டபின் சரமாரியாய் அவள் அங்கமெங்கும் ராட்சஷத்தனமாய் முத்தமிட ஆரம்பித்தது. பொழியும் மழை என் மேனி முழுவதையும் தொப்பலாக நனைத்தது. திறந்தவெளியில் என்னுடைய இந்தக் குளியல் காட்சியைத் தூரத்தில் மின்னலொன்று புறப்பட்டு ஆசையாய் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டது. காதைக் கிழித்த இடியோசையில் சிந்தனை கலைந்து அதிர்ந்தெழுந்த நான் இப்போது ஒரு யானையின் மத்தகஜத்தில் கையூன்றி அமர்ந்திருப்பது போல உணர்கிறேன். புறந்தூய்மை நீரான் அமையும். வெர்ட்டிகோ வராதவர்களுக்குக்கூட கிர்ரென்று தலைசுற்றும் உயரத்திலிருக்கிறேன். கீழே பூச்சிபூச்சியாய் ஏதேதோ தெரிகிறது. காற்றோடு கைகோர்த்துச் செல்லும் மழை இம்மலைக்கு அருகிலிருக்கும் பெருவெளியில் அந்தரத்தில் அலையடிக்கிறது. எனக்குச் சட்டென்று விசிலடிக்கத் தோன்றியது. விஷ்ஷென்ற சப்தம் அமைதியைக் குலைத்து என்னைக் கண்டித்து அமைதியாய் இருக்கச் சொல்கிறது.

ச்சே! மலைக்கு மேலே ஏறி வந்த வேலையை மறந்துவிட்டேன். இதோ பின்புறம் தட்டிக்கொண்டு எழுந்துவிட்டேன். எனக்கான பயணத்தைத் துவங்க உள்ளேன். யாருக்கும் என்னைப் பற்றிய கவலை வேண்டாம். ஏ மரமே! ஏ மலையே! ஏ மழையே! ஏ காற்றே! உங்களுக்கெப்படி உங்கள் வேலை பெரிதோ சுவாரஸ்யமோ அதுபோல எனக்கும் என் தொழில் பெரிது. சுவாரஸ்யம். கையிரண்டையும் சிலுவை யேசுவாக்கித் தலைகுப்புறக் குதித்தேன். இல்லை பறந்தேன். பாதியில் இடையில் சுற்றியிருந்த ஆடை உருவிக்கொண்டு கழன்று என்னை முழு நிர்வாணமாக்கியது. அப்படியே தரை நோக்கிச் சரிந்து கொண்டிருந்த நான் தலை முட்டிப் படாரென்று சுக்கல் சுக்கலாகி மூளை வெளியே சிதறும் போது வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்துவிட்டேன். படபடவென்று அடித்துக்கொண்டது. மணி 8:05. ”ப்ளக்” ”ப்ளக்”. இரண்டு மடக்கு தண்ணீர் குடித்தேன். மாலை தி.நகர் ”வாக்குச் சித்தர்” திகம்பரநாதன் வீட்டிற்குப் போக வேண்டும். பறப்பது போல கனவு காண்பவர்களின் வாழ்வு உச்சிக்கு போய்விடுமாம். உச்சியிலிருந்து கீழே விழுபவர்கள் என்ன ஆவார்கள் என்று கேட்க வேண்டும். எனக்கென்ன வேற வேலையா வெட்டியா?

#திடீர் சாம்பார், திடீர் ரசம் போல திடீர்க் கற்பனை! :-)
 
பின் குறிப்பு: தலைப்பிற்கான இன்ஸ்பிரேஷன் தலைவர் மூன்றாம் சுழி அப்பாதுரை அவர்கள்.
 
படத்துக்கு நன்றி: uechi.typepad.com

Wednesday, October 24, 2012

இணைய எழுத்துகள்


ப்ளாக் போன்ற இலவச பொது எழுதுமிடம் கிடைத்தது கிறுக்குபவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. வெளியே மழையாய்ப் பொழியத் தவமிருக்கும் எண்ணங்களுக்குக் கிடைத்த அரிய வரமாக நினைத்துக் கையொடிய இராப்பகலாக தட்டச்சி சிறுகதை, கவிதை, ஹைக்கூ, தொடர், நாவல் என்று ஜமாய்ப்பவர்களும் உண்டு. இரவல் புத்தகம் வாங்கி இன்புற்ற உலகிற்கு இப்போது சில ப்ளாக்குகளில் சில நிமிட சந்தோஷம் தாராளமாகக் கிடைக்கிறது. இலவசமாக. ப்ளாக்கில் ரத்தினச் சுருக்கமாகவும் எழுதலாம். அடுத்தவர் சுருக்கு போட்டுக்கொள்ளுமளவுக்கும் எழுதித் தள்ளலாம். நமக்குக் கிடைத்த வாசகரின் பேறு அது.

ப்ளாக்கில் முகமறியா நண்பர்களைப் பெற்று ”அருமை!”, “நல்ல நடை” ”இதைப் புத்தகமாகப் போடலாம்” என்று சிலாக்கியமான கருத்துக்களும் ““க், த், ப் விட்டு எழுதுகிறீர்கள்”, ”ந,ன,ண வித்தியாசம் தெரியாதா?” ”பறக்கற ‘ற’ பறக்காத ர வித்தியாசம் தெரியாதா?” என்றெல்லாம் மொழிப் போர்களைச் சந்தித்து எழுத்தார்வமிக்கவர்கள் அயர்ச்சியடைந்திருக்கையில் ஃபேஸ்புக் என்கிற சாதனம் திருமுகத்தையும் காண்பித்து ஜல்லியடிக்க உதவிக்கு வந்தது. முகத்தில் பாதி நிழலடிக்க அவுட் ஆஃப் ஃபோகஸ் ஃபோட்டோவை அப்லோட் செய்து “ஃபைன் டீ!” “லவ்லி” “மை லவ் பா” என்று நட்பு வட்டங்களால் அதீதமாய் புகழப்பட்டு இன்புறுகிறார்கள்.

சமுதாய விழிப்புணர்வு, புரட்சி, தாய் தடுத்தாலும் விடேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு வண்டி வண்டியாய் ஸ்டேட்டஸ் போடுபவர்களும் உண்டு. அகத்திலிருக்கும் மன மாசுகளைக் கொட்டிப் பிறரைப் பழிக்கும் பலர் பெரும்பாலும் முகமூடியுடன் உலவுகிறார்கள். எழுத்தில் கலவரத்தை உண்டு பண்ணும் இது போன்றவர்களது முகங்களை காண முடியாமல் ஏங்கும் ஏழை நெஞ்சங்கள் பல உண்டு. பட்டும் படாமலும் ஒட்டியும் ஒட்டாமலும் இலை மறை காயாக (முக்கியமான Cliche) எழுதுபவர்கள் பல தூற்றுதல்களிலிருந்து தப்பித்து பரம சௌக்கியமாக இங்கே காலம் தள்ள முடிகிறது.

குருவி வளர்ந்து குயிலான கதையாக முளைத்தது ட்வீட்டர். குயிலின் கச்சேரி அந்த ஒன்றிரண்டு கூக்கூக்கள் தான் என்பதற்கு வடிவம் கொடுத்துக் கச்சிதமாக கதைக்கச் சொல்கிறார்கள். உரைநடையில் குறுநடையாக 140 எழுத்துக்களில் சிக்கனமாக எழுதத் தெரிந்தால் நீங்கள் ஒரு சிறந்த கீச்சுக் குயில். இந்த ட்வீட்டர் சமாச்சாரம் என் போன்ற வாய் மூடா வளவளாவிற்கு (இந்தப் பதிவே இதற்கு நற்சான்று) உகந்ததாக இல்லை. ஆர்வமாகப் பதிந்துகொண்டேனே தவிர கீச்சுக்கள் பதிய முடிவதில்லை. நாலடியார், திருக்குறள் போன்ற பண்டைய ட்வீட்டுகளுக்கு மத்தியில் நம்முடையது சோபிக்குமா என்ற அக உறுத்தலில் அந்தப் பக்கம் எட்டிப்ப்பார்க்க பயமாக இருக்கிறது.

யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுத்துச் சுதந்திரத்திற்கு இலக்கணமாகத் திகழ்வதுதான் இம்மூன்றும். டிஜிட்டல் புரட்சியில் இந்த எழுத்துப் புரட்சி பல ரேழி எழுத்தாளர்களை கிளர்ந்தெழுந்து பொது வெளியில் வந்து போராடவைத்திருக்கிறது. இது போன்ற வார்த்தைப் போராட்டத்தில் ஒரு சௌகரியம் உள்ளது. “வெளியே வாப்பா” என்று யாரும் வந்து கையைப் பிடித்து வீதிக்கு இழுத்துவிடமாட்டார்கள். சேஃப் ஃபைட்.

”ப்ளாகா? ஃபேஸ்புக்கா? ட்வீட்டரா?” என்று ”கல்வியா செல்வமா வீரமா” பாணியில் தடுமாறுபவர்களில் நானும் ஒருவன். ஃபேஸ்புக்கால் அதிகம் ஈர்க்கப்பட்டாலும். எதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஒருவருக்கும் நஷ்டமில்லை.

#இணைய எழுத்துகள் பற்றி பொதுவாக எழுந்த சில ”திடீர்”ச் சிந்தனைகள். இதில் சில இடங்களில் நானும் இருக்கலாம். யாரையும் குறிப்பிடுவன அல்ல!!
 
##ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails