Thursday, June 1, 2017

துருவங்கள் பதினாறு

அனானி கொலை செய்யும் கதைகளை கையடக்க நாவலாகப் படிப்பதில் ஒரு த்ரில் இருக்கும். அவன் சதக் என்று இருதயமருகே குத்தியதில் பீறிட்ட இரத்தத்தின் இரண்டு சொட்டு கண்ணில் தெரித்தது....அப்படியே பின்னால் தள்ள... சுவற்றில் இரத்தக்கோடு வரைய.. ஆறடி உயர லயன். சபாநாயகம் மூட்டை போல பரிதாபமாய்க் கீழே சரிந்தார்.. என்று எழுதி வாசகனை உலுக்கிப் பக்கம் பக்கமாக ட்விஸ்ட் கொடுத்து நகர்த்திக்கொண்டே சென்று கடைசி இரண்டு பக்கத்தில் கொலையாளியை வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி அசுபமோ அமங்கலமோ போட்டுவிடலாம்.
ஆனால் க்ரைம் த்ரில்லர் வகையறாக்களை திரைப்படமாக எடுப்பதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. கொலையாளி உசரம் குண்டு என்றெல்லாம் நிழலாக சில்லவுட்டில் காண்பித்தால் கூட இன்னார் என்று இனம் காண ஒரு கூட்டத்திற்கு தெரியும். ஷோ பல்லிளித்துவிடும். ஆனால் துருவங்கள் பதினாறு கொஞ்சம் வித்யாசமாகப் படம் பிடிக்கப்பட்டிருந்தது. பார்வையாளர் வ்யூகம் என்று ஊகத்தில் ஆரம்பித்து போலீஸ் ரகுமான் வ்யூகம் என்று கொஞ்சமும் செயல் துடிப்புள்ள கான்ஸ்டபிளாக வருபவரது வ்யூகம் என்று பகுதி பகுதியாப் பிரித்து சம்பவங்களைக் கோர்த்து தந்திருக்கிறார் இயக்குனர். சபாஷ். சரியான உத்தி.
இருபத்து இரண்டு வயசாம். நல்ல முயற்சி. இருந்தாலும் முதல் இருபது நிமிடங்கள் போலீஸ் விசாரணை என்ற பெயரில் டாக்குமென்டரி போல படத்தை நகர்த்தியிருந்தார் என்பது என் சொந்தக் கருத்து. நான் இங்கே கதை சொல்லப்போவதில்லை. சமூக மற்றும் மசாலாப் படங்களுக்குக் கதை சொல்லி விமர்சனம் செய்யலாம். ஆனால் இதுபோன்ற த்ரில்லர்களுக்கு அது எடுபடாது.
ஒவ்வொரு காட்சிக்கும் மோஷன் கேமிரா வைத்து சினிமா பார்ப்பவர்களையும் கூடவே கட்டி இழுத்து வந்து களத்தில் நிற்க வைத்தது அபார முயற்சி. படம் முழுக்க பின்னணியில் பல குரல்கள், சப்தங்கள். பாட்டெல்லாம் கிடையாது. அதற்கெல்லாம் நேரமில்லை வேலையில்லை அவசியமில்லை. சினிமாவில் எந்தக் கொலைக்கும் கணம் சேர்ப்பதற்கு வருண பகவான் தான் உடனடி உதவிக்கு வருகிறார். இங்கும் அடர்மழையில்தான் அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.
மழையில் கிடக்கும் சடலத்தின் மீது எறும்போ ஈயோ ஊர்வது போன்ற க்ளோஸப் ஷாட்டை வெட்டியிருக்கலாம்... விசாரணையின் போது வசனபுஷ்டியாக இருந்திருக்கலாம்... த்ரில்லர் படங்களுக்கு இசை இன்னமும் ஒத்தாசையாக இருந்திருக்கலாம்... போன்றவையெல்லாம் எனக்குள் எழுந்த சில "லாம்"கள்.
ரகுமான், டெல்லி கணேஷ் என்று இரண்டு பேரை மட்டும்தான் திரையில் அடையாளம் தெரிகிறது. சொச்ச பேர்கள் காமிராவுக்குப் புதியவர்கள். ஐட்டம் சாங், டிஷ்யூம் டிஷ்யூம், காதல், கட்டிப்பிடி என்று கவனம் சிதறாமல் திரைக்கதையிலும் கதையோட்டத்திலும் கர்மசிரத்தையாக உழைத்திருக்கும் கார்த்திக் நரேனுக்கு பாராட்டுகள். இயக்குனரின் வயசு வித்யாசம் பார்க்காமல் அற்புதமாக நடித்துக் கொடுத்த ரகுமானுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்....
த்ரில்லர்களில் இது புது தினுசு படம்!! :-)

நாற்பதாவது புத்தகக் காட்சி

நாற்பதாவது புத்தகக் காட்சி. ஸ்கைவாக் முனையிலிருந்து வந்தால் செயின்ட் ஜார்ஜ் பள்ளியை அப்பிரதக்ஷிணமாக வரச்சொல்லி சேப்பாயியை உள்ளே விட்டார்கள். நாக்கில் எச்சல் தொட்டு டிக்கெட் போடும் பார்க்கிங்காரரின் நா வறண்டு போகும்படி வாகனங்கள் சடச்சடவெனக் குவிய ஆரம்பித்தது.
 

தோரணவாயிலில் "ஆர்வியெஸ்...." என்று மலர்ந்த புன்னகையோடு அரவணைத்தார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி க்ரூஸ் (Joe D Cruz). எழுத்தாள, இலக்கிய பந்தா இல்லாத எளிமை. அவரது பிள்ளைகள் கையில் புத்தகப் பைகள் நிரம்பியிருந்தன. அவரை ரொம்பவும் ரம்பம் போடாமல் "பார்க்கலாம் சார்.." சொல்லி நகர்ந்தேன். உள்ளேயிருந்த மொபைல் ஏடியெம்மில் கார்டு போட ஒரு வாசகக் கூட்டம் புத்தக ஜுரத்துடன் வரிசையில் நின்றுகொண்டிருந்தது.

கடைகளிருக்குமிடத்திற்குள் நுழைந்ததும் ஜவர்லால் ( K G Jawarlal)தம்பதி சமேதராகத் (Subbulakshmi Doraiswamy) தென்பட்டார். இதற்கு முன்பும் இதே போல் புத்தகக்காட்சியில் சந்தித்தித்துக் கை குலுக்கியிருக்கிறோம்.

விருட்சத்தில் கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் "கேஷ்லெஸ்... லெஸ்கேஷ்? கார்ட்லெஸ்? " என்று லெஸ்ஸில் விளையாடி சிரிப்புனூடே கார்டு தேய்த்தார். "பட் நாட் காட்லெஸ்.." என்று முடித்துக்கொள்ளுமுன் சங்கீதாவின் கண்ணசைவில் நிர்தாட்சண்யமாய் நிறுத்திக்கொண்டேன். காட் ஃபியரிங் மாதிரி வொய்ஃப் ஃபியரிங்!! என்று நீங்கள் கேள்வி கேட்பது அபாயத்தில் முடியும். அமியின் புத்தகங்களும் நவீன விருட்சத்தின் நூறாவது மலரும் பிரதானமாகக் கண்ணில்பட்டது.

காலச்சுவடில் சில புத்தகங்களை மூலையில் ஒதுக்கி அறுபது சதவிகிதம் கழிவு போட்டிருந்தார்கள். "அறுபதென்ன முழுவதும் போட்டாக் கூட வாங்கமுடியாது போல்ருக்கே.." என்று மாயாவியாய்த் திடீரென்று பின்னால் தோன்றிய ஜவர்லால், அவருக்கே உரித்தான ஸ்டைலில் வாங்கினார். கிளாஸிக்ஸ் என்று எழுதியிருந்த புத்தக ரேக்கிற்கு நேரே ஒருத்தர் வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார். எதுவும் சமுதாயத்திற்கு தீங்குவிளைக்கும் புத்தகம் இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தேன். அப்படியொன்றுமில்லை. அது புத்தக தாகம் என்று பின்னர் புரிந்தது.
கிழக்கில் எனக்கும் ஹபியுக்குமிடையே(Haran Prasanna) இருந்த ஒரு கணக்கு வழக்கைத் தீர்த்துக்கொண்டேன். இந்த மாச வலம் சீக்கிரம் வரும் என்றார். "வாழ்ந்து போதீரே... சாயந்திரம் வருது...".
ஏழாம் தேதியே சென்றதால் மேலே இடிபடாமல் சட்டை கசங்காமல் செல்ல முடிந்தது. ஹைவேக்களில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் கும்பகோணம் ஃபில்டர் காஃபிக் கடை ஒன்று ஸ்டாலோடு ஸ்டாலாக சிக்கரி போல கலந்திருந்தது. வாசம் இழுத்தாலும் வாமபாகத்தின் எச்சரிக்கை தடவிய அறிவுரையில் தவிர்த்துவிட்டேன்.
இருமருங்கும் புத்தகக் கடலை ரசித்துக்கொன்டே நீந்திக்கொண்டிருக்கும் போது "தமிழ் மொழிக் கூடம்" ஸ்ரீநிவாஸையும் (Srinivas Parthasarathy) அவரது மனைவி காயத்ரியையும் (Gayathri Srinivas) சந்தித்தேன். அவருடன் சேர்ந்து பத்து ஸ்டால்கள் மேய்ந்தேன். லிஃப்கோவில் வயதானவர்கள் ஸ்ரீவைஷ்ணவ புத்தகங்களில் ஊறிப் போயிருந்த தருணத்தில் உள்ளே நுழைந்து சிலவற்றை தேற்றினேன்.
வானதியில் பக்திமணம் கமழ தெய்வத்தின் குரலை அடுக்கியிருந்தார்கள். ஐந்நூறு ரூவாய்க்கு மேல் வாங்கினால்தான் கார்டு ஒத்துக்கொள்வார்களாம். தெ.குரல் ஏழு தொகுதியையும் வாங்குவோர்க்கு சலுகை விலை அறிவித்திருக்கிறார்கள்.
விஜயபாரதத்தில் ஆமருவி (Amaruvi Devanathan) ஸ்வாமியைத் தேடினோம். அங்கில்லாமல் சரியாய் எங்கள் தினமணிக்கருகே ஆப்டார். எழுதுவது போல சீரியஸ் ஆசாமி இல்லை. நிறையவே சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறார். வேஷ்டியும் திருமண்ணுமாக மடியோடிருந்தார். திஜாவின் செம்பருத்தியில் வரும் ஆமருவியைப் பற்றிய இலக்கியச் சிந்தனையும் எழுந்தது என்றால் என்னை முறைப்பீர்கள். நீயிருக்கும் இடத்தில் இலக்கிய வாசனையாவது வருமா? என்ற கேள்வி கேட்டு நாக்கை மடித்துத் திட்டாதீர்கள்.
இதுவரை நீங்கள் படித்தது முதல் விஜயம். இரண்டாம் விஜயம் இரண்டு நாட்கள் முன்னர் சென்றிருந்தேன். மிகவும் சொற்ப நேரமே காட்சிக்குள் திரியமுடிந்தது. அக்காவிற்கு பகவத் கீதையும் தெய்வத்தின் குரலும் வாங்குவதற்கு எனது பாஸுடன் தலையக்காட்டிவிட்டு வந்தேன். ராமகிருஷ்ணா மடத்தின் கடையில் பகவத்கீதையும் வானதியில் தெய்வத்தின் குரலும் வாங்கினேன்.
சாகித்ய அகாதெமியில் பழம் புத்தகங்களின் தலையில் வெள்ளைப் பேப்பரில் சகாய விலை எழுதி ஒட்டியிருந்தார்கள். தொட்டால் உதிர்ந்துவிடும் நிலையில் திராணியில்லாமலிருந்த புத்தகங்களைப் பார்த்ததும் "போன தடவை தமிழ்க் கட்டுரைகள் இரா. மோகன் தொகுத்தது வாங்கிட்டுப் போனேன். அது கெட்டி அட்டை. இந்த முறை பேப்பர்பேக் போட்டிருக்கீங்க... என் புத்தகத்துல ஒரு செக்ஷன் சரியா ஒட்டலை. அப்படியே உழுவுது..." என்ற என் முறையீட்டிற்கு "கொண்டு வாங்க சார்.. மாத்திப்போம்.." என்று கனிவாய் பதில் சொன்னார்கள். போன தடவை எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம் வாங்கினேன். இப்போது பைரப்பாவின் வைரமான பருவம் கிடைத்தது.
ஹாலாஸ்யன் (Yeseyeweyea Raman) என்று ஃபேஸ்புக்கிற்கு தமிழில் அறிவியல் ஊட்டும் எழுத்தாளரைப் பார்த்தேன். பேச அவகாசமில்லாமல் இருந்தது. கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். நல்ல எதிர்காலமிருக்கிறது யெஸ்.ஐ.வி.யே ராமன்!! வாழ்த்துகள்...
"என்சைக்ளோபீடியா வாங்கிக்கிட்டுக் கெளம்பிடுவோம்..."
"நீங்களே ஒரு வாக்கிங் என்சைக்ளோபீடியா... நாம இன்னோன்னு வாங்கணுமா?" என்று கேட்ட அந்த சுடிதார் மங்கையின் கேள்வியில் அவரை என்சைக்ளோபீடியா என்று புகழும் தொணியிருந்ததா என்று தெரியவில்லை.. ஆனால் அவரை இதற்குமேல் புத்தகம் வாங்க விடக்கூடாது எங்கிற தீர்மானம் துல்லியமாகத் தெரிந்தது.
முதலிரண்டு விசிட்களில் நான் வாங்கிய புத்தகங்கள் பட்டியல்.
1. அந்தரங்கமானதொரு தொகுப்பு - அசோகமித்திரன் (Thyagarajan Jagadisan) - விருட்சம்
2. கேரக்டர் - சாவி - சந்தியா பதிப்பகம்
3. ஸ்ரீ முகுந்த மாலா - ஸ்ரீ குலசேகராழ்வார் - லிஃப்கோ
4. Great Little Books - Inspiring Speeches, Common Errors in English, The Racy Grammer, A short book of idioms & Phrases, Select Synonyms and Antonyms - லிஃப்கோ
5. தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி) - பெரியவா ரா. கணபதி - வானதி
6. திருப்புகழ் விரிவுரை (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்) - திருமுருக. கிருபானந்த வாரியார் - வானதி
7. ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு - அம்பை(Lakshmi Chitoor Subramaniam) - காலச்சுவடு
8. உயிர் மீட்சி (இலக்கியக் கட்டுரைகள்) - உவேசா (பதிப்பாசிரியர் சரவணன்) - காலச்சுவடு
9. வலவன் (ட்ரைவர் கதைகள்) - சுதாகர் கஸ்தூரி (Sudhakar Kasturi) - கிழக்கு
10. ஓலைப்பட்டாசு (சிறுகதைகள்) - சுஜாதா - கிழக்கு
11. பருவம் - எஸ்.எல். பைரப்பா - சாகித்ய அகாதெமி

இன்னும் வாங்க வேண்டிய எழுத்தாள நண்பர்களின் புத்தகங்கள் இரண்டு:
1. வாழ்ந்து போதீரே... இரா. முருகன். (EraMurukan Ramasami)
2. டர்மரின் 384 - சுதாகர் கஸ்தூரி
தெரியாத எழுத்தாளர்களின் அறியப்படாத புத்தகங்கள்: 
Infinity :-)

சொல்ல மறந்தது: அமெரிக்கன் ஸ்வீட் கார்ன், பஜ்ஜி கடைகள் உள்ளது. அறிவுப் பசிக்கும் வயிற்றுப் பசிக்கும் சேர்த்து ஈயப்படும்.

கிலோ என்ன விலை?

“மாப்ள... ஒரு கிலோ இருவது ரூவாயாம்... உனக்கு எவ்ளோ கிலோ வேணும்?”

“எது இருவது ரூவா? தக்காளி? கத்ரிக்கா? கொத்ரங்கா? ”
“புஸ்தகம்... கிலோ கிலோவா விக்கறாங்கப்பா...”
“தொட்டா கை அரிக்குமே... அது மாதிரி பழுப்புக் கலர் புஸ்தகமா?”
”ச்சே...ச்சே.. புதுசாதான் இருக்கு...”
“ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ்... இருபது நாளில் ஜோதிடம்... சமைத்துப் பார்... இது மாதிரியா?”
“இல்லையே... எல்லா புஸ்தகமும் இருக்கே... ஆக்ஸ்ஃபோர்ட் டிக்‌ஷனரியெல்லாம் கூட இருக்கு...”
“ரென் அண்ட் மார்ட்டின் கிராமர்.... வேர்ட் பவர்... இடியம்ஸ் அண்ட் ஃப்ரேஸஸ்.. ஷேக்ஸ்பியர்.. கிப்லிங்..டிக்கின்ஸ்... தாஸ்தாவேய்ஸ்கி .ன்னு எப்படியாவது ஒரு மூணு நாலு கிலோ வாங்கிட்டு வா மாமா..”
“ஓ! நிச்சயமா.. நாளைக்கு அந்த புக் ஃபேருக்குப் போயிட்டு உன்னைக் கால் பண்றேன்..
என்னென்ன புத்தகம் வாய்க்குமோ என்று நகம் கடிக்கும் படபடப்புடன் காத்திருக்கிறேன்.
மங்களூருவிலிருந்து சத்யா அலைபேசியதின் உரை வடிவை மேலே படித்தீர்கள். புத்தக வாசனை பலமாக அடிக்கிறது!!
பத்து சதக் கழிவு கொடுத்து பபாஸி நடத்தும் சென்னை புக் ஃபேர்க்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போக வேண்டும். இம்முறையாவது வண்டி நிறுத்த விஸ்தாரமான இடமும் அவசரத்திற்கு ஓரம் ஒதுங்க சுகாதாரமான மறைவிடமும் காலை இடறாத பாய் விரித்த நடைபாதையும் கிடைக்குமென்ற நம்பிக்கையுடன்....
ஐ அம் வெயிட்டிங்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails