Thursday, June 1, 2017

துருவங்கள் பதினாறு

அனானி கொலை செய்யும் கதைகளை கையடக்க நாவலாகப் படிப்பதில் ஒரு த்ரில் இருக்கும். அவன் சதக் என்று இருதயமருகே குத்தியதில் பீறிட்ட இரத்தத்தின் இரண்டு சொட்டு கண்ணில் தெரித்தது....அப்படியே பின்னால் தள்ள... சுவற்றில் இரத்தக்கோடு வரைய.. ஆறடி உயர லயன். சபாநாயகம் மூட்டை போல பரிதாபமாய்க் கீழே சரிந்தார்.. என்று எழுதி வாசகனை உலுக்கிப் பக்கம் பக்கமாக ட்விஸ்ட் கொடுத்து நகர்த்திக்கொண்டே சென்று கடைசி இரண்டு பக்கத்தில் கொலையாளியை வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி அசுபமோ அமங்கலமோ போட்டுவிடலாம்.
ஆனால் க்ரைம் த்ரில்லர் வகையறாக்களை திரைப்படமாக எடுப்பதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. கொலையாளி உசரம் குண்டு என்றெல்லாம் நிழலாக சில்லவுட்டில் காண்பித்தால் கூட இன்னார் என்று இனம் காண ஒரு கூட்டத்திற்கு தெரியும். ஷோ பல்லிளித்துவிடும். ஆனால் துருவங்கள் பதினாறு கொஞ்சம் வித்யாசமாகப் படம் பிடிக்கப்பட்டிருந்தது. பார்வையாளர் வ்யூகம் என்று ஊகத்தில் ஆரம்பித்து போலீஸ் ரகுமான் வ்யூகம் என்று கொஞ்சமும் செயல் துடிப்புள்ள கான்ஸ்டபிளாக வருபவரது வ்யூகம் என்று பகுதி பகுதியாப் பிரித்து சம்பவங்களைக் கோர்த்து தந்திருக்கிறார் இயக்குனர். சபாஷ். சரியான உத்தி.
இருபத்து இரண்டு வயசாம். நல்ல முயற்சி. இருந்தாலும் முதல் இருபது நிமிடங்கள் போலீஸ் விசாரணை என்ற பெயரில் டாக்குமென்டரி போல படத்தை நகர்த்தியிருந்தார் என்பது என் சொந்தக் கருத்து. நான் இங்கே கதை சொல்லப்போவதில்லை. சமூக மற்றும் மசாலாப் படங்களுக்குக் கதை சொல்லி விமர்சனம் செய்யலாம். ஆனால் இதுபோன்ற த்ரில்லர்களுக்கு அது எடுபடாது.
ஒவ்வொரு காட்சிக்கும் மோஷன் கேமிரா வைத்து சினிமா பார்ப்பவர்களையும் கூடவே கட்டி இழுத்து வந்து களத்தில் நிற்க வைத்தது அபார முயற்சி. படம் முழுக்க பின்னணியில் பல குரல்கள், சப்தங்கள். பாட்டெல்லாம் கிடையாது. அதற்கெல்லாம் நேரமில்லை வேலையில்லை அவசியமில்லை. சினிமாவில் எந்தக் கொலைக்கும் கணம் சேர்ப்பதற்கு வருண பகவான் தான் உடனடி உதவிக்கு வருகிறார். இங்கும் அடர்மழையில்தான் அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.
மழையில் கிடக்கும் சடலத்தின் மீது எறும்போ ஈயோ ஊர்வது போன்ற க்ளோஸப் ஷாட்டை வெட்டியிருக்கலாம்... விசாரணையின் போது வசனபுஷ்டியாக இருந்திருக்கலாம்... த்ரில்லர் படங்களுக்கு இசை இன்னமும் ஒத்தாசையாக இருந்திருக்கலாம்... போன்றவையெல்லாம் எனக்குள் எழுந்த சில "லாம்"கள்.
ரகுமான், டெல்லி கணேஷ் என்று இரண்டு பேரை மட்டும்தான் திரையில் அடையாளம் தெரிகிறது. சொச்ச பேர்கள் காமிராவுக்குப் புதியவர்கள். ஐட்டம் சாங், டிஷ்யூம் டிஷ்யூம், காதல், கட்டிப்பிடி என்று கவனம் சிதறாமல் திரைக்கதையிலும் கதையோட்டத்திலும் கர்மசிரத்தையாக உழைத்திருக்கும் கார்த்திக் நரேனுக்கு பாராட்டுகள். இயக்குனரின் வயசு வித்யாசம் பார்க்காமல் அற்புதமாக நடித்துக் கொடுத்த ரகுமானுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்....
த்ரில்லர்களில் இது புது தினுசு படம்!! :-)

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails