Tuesday, June 6, 2017

போகன்

அர்விந்த் சாமி ராஜ பரம்பரையில் வந்தவர் என்பதற்காக கழுத்தளவு ஸ்விம்மிங் பூல் நீரில் இறங்கி நின்று தோழிகளுடன் ஜலக்கிரீடை செய்யும் கிளுகிளுப்பானக் காட்சிகள் காட்டும் போது பக்கத்திலிருந்து “படம் என்ன ரேட்டிங்” என்று கிசுகிசுத்துத் தோளை இடித்தார் சங்கீதா. “யூ”ன்னு போட்ருந்தது என்றேன். ”ஓ இப்போ யூவுக்கு இதுதான் ஸ்டேட்டஸா?” என்றார். மேலும் இந்த சம்பாஷணையை வளர்க்காமல் ”ஆமாம்” என்று அசிரத்தையாகச் சொல்லிவிட்டு காட்சி மாறும் முன் திரையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
நாயகனுக்கு அறிமுகக் காட்சி வைக்க வேண்டும் என்கிற தவிப்பில் ஜெ.ரவிக்குக் கைலி கட்டி ஆலுமா டோலுமா மாதிரி ஆடவைத்த பாவத்திற்கு இயக்குனருக்கு எப்பிறவியிலும் விமோசனம் கிடைக்காது. ஹன்ஸிகாவை சரக்கு அடித்துவிட்டு டூவீலரில் ஓட்டிவந்து போலீஸிடம் மாட்டிக்கொள்வது போல சீன் அமைத்து ஜெ.ரவியைச் சந்திக்கவிடுகிறார். ஏன் சார்... ஹன்ஸிகா மாதிரி லட்டுவை இப்படியொரு இண்ட்ரோவிலா காமிப்பீர்!
காசு கொடுத்து கருமத்தில் வந்து மாட்டிக்கொண்டோமா என்று ஒட்டுமொத்த அரங்கமும் வருத்தமுறும் நேரத்தில் அர்விந்த்சாமியால் படம் சூடுபிடிக்கிறது. பரகாயப் பிரவேசம் என்ற கூடு விட்டு கூடு பாயும் வித்தையைக் கற்றுக்கொண்ட அர்விந்த்சாமியின் லீலாவினோதங்களே படம். பொதுவாக பரகாயப் பிரவேசம் என்பது உயிரற்ற உடலில் தனது உயிரைச் செலுத்தி பின்னர் தன் கூடுக்குள் திரும்புவதேயாகும்.
சினிமாட்டிக்காக இதைக் காட்டும் இயக்குனர் சின் முத்திரை வைத்துக்கொண்டு எதிராளியின் கண்களை உற்றுப் பார்த்தால் அவர்களின் உடம்புக்குள் அர்விந்தசாமி சென்றுவிடுகிறார். பரகாயப் பிரவேசம் என்ன ஒட்டுவார் ஒட்டியா அல்லது மெட்ராஸ் ஐ ஆ! பார்த்தாலே தொற்றிக்கொள்வதற்கு!!!
ஹீரோ ஹீரோயின் அறிமுகக் காட்சிகள் போல சிலவற்றை ஜவ்வாக இழுக்காமல் வெட்டி ஓட்டியிருந்தால் நாற்பத்தைந்து நிமிடங்கள் சேமித்திருக்கலாம். படம் எடுத்தவருக்கும் படம் பார்த்தவருக்கும் அந்த நிமிடங்கள் லாபம். அர்விந்த்சாமி “நான் நிரந்தரமானவன்” என்று இரு கைகளையும் அகல விரித்து வானம் பார்த்து சொல்லும் காட்சிகள் அற்புதமானவை. ஜெ. ரவியை விட எல்லோரையும் கவர்ந்தவர் அ.சாமியே!
இசை இமானாம். பின்னணி முழுக்க கிடாரைத் தந்தி அறுகக் கதற வைத்து டெம்போ ஏற்றியிருக்கிறார். பாடல் ஒன்றும் மனதில் பதியவில்லை. பாடலுக்கு ஆடும் போது பின்னணில் கலர்ப் பொடி தூவுவது போல எடுக்கும் ஆதிகால டெக்னிக்கை மலர் தூவுவதுபோல வைத்திருப்பதில் இயக்குனரின் வயசு தெரிகிறது. நாசரை அமெரிக்கையான ப்ரோபஸராகக் காட்டிவிட்டு பத்து நிமிடத்துக்குள் பேராசைக்காரனாகக் காட்டி பொட்டில் சுட்டு மூட்டைக்கட்டி விடுகிறார்கள். சொற்ப நேரமே வந்தாலும் நேர்த்தியாக செய்திருந்தார்.
பொன்வண்ணனுக்கு போலீஸில் பெரிய போஸ்ட் வேடமெல்லாம் ஒத்துவரவில்லை. கோயம்பேடு மார்க்கெட் ஏஜெண்ட், காய்கறி வியாபாரியிடம் பேரம் பேசுவது போல பேசுகிறார். மிடுக்கு இல்லை. ஜெயம் ரவிக்கு போலீஸ் கெத்தெல்லாம் சுத்தமாக இல்லை. குரலில் மென்மையும் நடக்கையில் நளினமும் இருக்கிறது. அர்விந்த்சாமி புகுந்த உடம்பானதும் அவரது அசைவுகளில் தெரியும் ஸ்டைல் அலாதியாக இருக்கிறது.
கூட்டத்தோடு கலந்து சத்யத்திலிருந்து வெளியே வரும்போது சத்தமாக “ஏண்டா? போகர் பரகாயப் பிரவேசமெல்லாம் கொள்ளையடிக்கவா யூஸ் பண்ணுன்னு சொல்லிருக்கார்?” என்று நக்கலாகக் கேட்ட என் சித்தப்பாவை மொத்தக் கூட்டமும் ஒருமுறை திரும்பிப்பார்த்துவிட்டு சிரித்தது. மனுஷர் முடிக்காமல் மீண்டும் “இப்போல்லாம் ஒன் டூ த்ரீ எடுக்கறது ஸ்டைலாப்போச்சு.. சிங்கம் மூணு மாதிரி போகன் மூணு வரைக்கும் வருவானுங்க...” என்றவரை ஓடிச்சென்று கை பற்றி தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்திக் காருக்குள் ஏற்றி வீடுவந்து சேர்ந்தேன்.
தயவுதாட்சண்யம் பார்க்காமல் அட்லீஸ்ட் நாற்பத்தைந்து நிமிடங்கள் கத்தரித்து பாட்டில்லாமல் வெளியிட்டால் வெள்ளிவிழா காணும் படம். இப்போது மணம் வீசாத “போகன்வில்லா”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails