Thursday, June 1, 2017

தமிழன்டா

மெரீனா சென்றிருந்தேன். கருப்புச் சட்டையில் “தமிழன் டா”வுடன் கொம்பு மாடு படம் போட்ட டீசர்ட்டுடன் பலர் சுதந்திரமாக ஜல்லிக்கட்டு வேட்கையில் உலவினர். அண்ணா சாலையிலிருந்து சிவானந்தா சாலையில் செல்வதற்கு வாகனங்கள் போலீஸாரால் தடுக்கப்பட்டன. யாரோ ஒரு புண்ணியவான் “டீ குடிங்க பிரதர்..” என்று பாதசாரிகளை வழிமறித்து டீ சேவை செய்துவந்தார். (முதல்வர் மற்றும் பிரதமர் கவனத்திற்கு) ஆசைப்பட்டவர்கள் ஆளுக்கொரு கப் வாங்கி ஏக் கல்ப்பில் குடித்தனர்.
சிவானந்தா சாலை நடுவில் செல்லும் பறக்கும் ரயில் பாதையோரமாக நின்ற சிலர் ரயிலில் போராட்டத்துக்கு செல்லும் சக போராளிகளை “ஹோய்...” குரலெழுப்பி உற்சாகமூட்டினர். பொறந்த குழந்தைக்குக் கூட கையில் ஒரு ப்ளகார்ட் கொடுத்து “ஜல்லிக்கட்டு தமிழன் உரிமை” என்று இனவுணர்வு மூட்டியிருந்தார்கள். பேர் பாதி ப்ளகார்டுகளில் ”தமிழண் டா... தண்மாணம்” என்று தமிழ் ஏகத்துக்கும் தடுமாறியிருந்தாலும் யாரும் “காளை”யை “காலை” என்று எழுதாதது தமிழின் வான் சிறப்பு.
இரண்டடிக்கு இரண்டு பேர் கையில் தப்பட்டையுடன் “டண்டனக்கா.. டனக்கனக்கா....” கொட்டி ஜல்லிக்கட்டால் இணைந்ததில் மகிழ்ந்தனர். குடும்பமாக திருப்பதிக்கு மொட்டைக்கு போவது போல் சென்றவர்களில் கடைசிப் பையனின் கண்களில் மிரட்சி இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை திருவிழாக் கூட்டம் போல பிள்ளை குட்டிகளுடன் குடும்பஸ்தர்கள் நடமாட்டம் ஜாஸ்தி இருந்தது.
கடற்கரை சாலையில் போராட்டக் கூட்டம் முழு தெம்பில் இயங்கிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக ஏராளமானோர் நடமாடி ஃப்ளாஷ் வீச்சில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்கள். தள்ளாத வயதிலும் மாடு பிடித்தலும் மஞ்சு விரட்டும் வேண்டும் என்ற ரீதியில் பீச்சோரமாய் அமர்ந்திருந்த அந்த வயதானவருக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.
பொதுவாக எல்லோர் வாயில் விழுந்து எழுந்தவர்கள் மோடியும் பன்னீரும். கன்னாபின்னாவென்று கொச்சையாய் திட்டி திருப்திபட்டுக்கொண்டனர். ”ஊர சுத்தும் மோடி.. சென்னைக்கு நீ வாடி” என்று ஏ3 பேப்பரில் ப்ளூ ஸ்கெட்சில் எழுதி நின்றவர் ஏதேனும் செய்திக்கு அலையும் சேனல் வருமா என்று ஏக்கமுடன் காத்திருந்தார். ”கொம்பு வச்ச சிங்கம்டா..” என்று டொமஸ்டிக் அனிமலை வைல்ட் அனிமல் ஆக்கியிருந்தவர் சிவந்த கண்களோடு போராட தயாராயிருந்தார்.
ஸ்பீக்கர் கட்டி திரிந்த வாகனங்களில் ”பொதுவாக எம்மனசு தங்கம்”மும் “காள காள...முரட்டுக் காள...”வும் கேட்டது. தவறாமல் அந்த வாகனங்களுக்கு முன்னர் இருவர் நாக்கை மடித்து குத்தாட்டம் ஆடினார்கள். “ஹோ...” என்றும்.... “யே...”என்றும்... “தமிழன் டா”வும் ஆண் பெண் பேதமில்லாமல் துளிக்கூட சங்கோஜமில்லாமல் கோஷமிட்டனர்.
சேப்பாக்கம் MRTS நிலையம் அருகே இருவர் பாடு திண்டாட்டமாயிருந்தது. ஒருவர் ஸ்ரீசூர்ணத்துடன் “அம்பத்தூர் எப்படி போகணும்” என்று கேட்ட பெரியவர். இன்னொருவர் “செங்கல்பட்டு போகணுமே சார்” என்று கொள்ளை பயத்துடன் கேட்ட, பெண்டாட்டி பிள்ளைக்குட்டிகளுடன் நின்ற குடும்பி.
சேப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து மெரீனா பீச் அடையும் ரகசிய வழியை இன்று அறிந்துகொண்டது இந்த ஜல்லிக்கட்டு போராட்ட ஆதரவுக்கு நான் சென்றுவந்ததன் பலன். சற்றே பருமனாக உள்ளவர்கள் நுழையமுடியாதபடி காம்பௌண்ட்டை இடித்து உருவாக்கிய வழியால் ஆதாயமடைபவர்கள் அநேகம் பேர் உள்ளார்கள் என்று இன்று அங்கே சகஜமாக நடமாடியதில் தெரிந்தது. “வாழ்க ஜல்லிக்கட்டு..” எனறு நன்றி பாராட்டி அந்த பாதையில் பட்டாணி கடலை விற்றுக்கொண்டிருந்தவர்களுக்கு அமோக விற்பனை.
மற்றபடி.. உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மாற்ற மீண்டும் நீதி மன்றத்தை அணுகி நியாயம் பெறலாம் போன்ற அறிவுரைகள் எடுபடாத நேரம் இது. கர்நாடகாவுக்குக் கூட நீர் திறக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அவர்கள் திறந்துவிடாத போது நாம் மட்டும் என்ன _யித்துக்கு நீதிமன்ற உத்தரவை மதிக்கணும் என்று முஷ்டி மடக்கிக் கேட்பவர்கள் யாரேணும் என்னை கெட்ட வார்த்தையால் அர்ச்சிக்க ஆரம்பிக்கும் முன்...............
வாருங்கள் தமிழர்களே! ஜல்லிக்கட்டால் இணைவோம்!!
சட்டென்று தோன்றியது:
கன்னுக்குட்டியை தேரேற்றிக் கொன்று விட்டான் என்று வாயில்லாத மாடு மணியடித்துச் சொன்னதால் தன் சொந்த மகனையே தேர்க்காலில் இட்டு ஏற்றிக் கொன்ற மனுநீதிச் சோழன் ஆண்ட பிரதேசக்காரகள் காளையை இம்சைப்படுத்துவோமா? என்ற கேள்வியுடன் விடைபெறுகிறேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails