Tuesday, June 6, 2017

கேரக்டர்

'புள்ளி' சுப்புடு
’அவுட்’ அண்ணாஜி
’சர்வர்’ சந்தானம்
’அட்டெண்டர்’ ஆறுமுகம்
’அல்டாப்’ ஆறுமுகம்
’மூணு சீட்டு’ முத்தண்ணா
’அப்பர் பர்த்’ குப்பண்ணா
’தொழிலாளி’ துளசிங்கம்
’அக்கப்போர்’ சொக்கப்பன்
’அராய்ச்சி’ ஆர்.வி. ராமன்
’துக்ளக்’ துரைசாமி
’வீட்டுக்கார’ வெங்கடாசலம்
’ஏமாளி’ ஏகாம்பரம்
’ஆப்பக் கடை’ அம்மாக்கண்ணு
’ஜம்பம்’ சாரதாம்பாள்
’பப்ளிசிடி’ பங்காருசாமி
’சிக்கனம்’ சின்னசாமி
’பல்டி’ பலராமன்
’டவாலி’ ரங்கசாமி
ஜானகி அம்மாள் ஹஸ்பெண்ட்
’அரசியல்’ அண்ணாசாமி
’நர்ஸ்’ நாகமணி
’வைத்தியர்’ வேதாசலம்
’அமெச்சூர்’ ஆராவமுதன்
’எதிர்வாதம்’ ஏகாம்பரம்
’அநுமார்’ சாமியார்
’நான்தான்’ நாகசாமி
’கமிஷன்’ குப்பண்ணா
இப்படி பட்டப்பெயர் கொண்ட இருபத்தெட்டு ஆசாமிகளை ஒரு அரை மணி செலவு செய்தால் பார்த்துவிடலாம். சாவியின் புத்தகம் “கேரக்டர்”. சந்தியா பதிப்பகம் வெளியீடு. இந்த புத்தகக் காட்சியில் வாங்கினேன். மேற்படி ஆசாமிகளை எவரும் ஒருமுறையாவது தனது அனுபவத்தில் சந்தித்திருப்பார்கள்.

இவர்களைப் பற்றிய சாவியின் வர்ணனை அபாரமானது. ஏதோ நாமே அவர்கள் எதிராக நின்று பேசுவது/கேட்பது போன்ற உரையாடல். ”ஆப்பக் கடை” அம்மாக்கண்ணுவும் ”தொழிலாளி” தொள்சிங்கமும் “நாஷ்டா” துண்ணுட்டு பேசும் அதிகாரப்பூர்வ சென்னை பாஷையும்..... “ஜம்பம்” சாரதாம்பாள் சப்ஜட்ஜ் மனைவி ஜானகி அம்மாளின் “நேக்கு.. நோக்கு...” அக்ரஹார பேச்சும்... ”அட...அட..அட..” போடவைக்கின்றன.
மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இவர் வார்த்தைகளால் வரைந்த ஸ்கெட்சில் அந்தந்தப் பாத்திரங்கள் உயிர்பெற்று கண் முன் தோன்றுகின்றன. திரு. நடனம் அவர்களின் ஓவியம் ஒவ்வொரு கேரக்டருக்கும் அசல் உருவம் கொடுக்கிறது. இந்த இருபத்தெட்டு கேரக்டர்களை எழுதுமளவிற்கு சங்கதி சாவியிடம் இருந்ததுதான் அவரது பலம். ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விதம். அவர்களது இயங்குதளம் வேறு. அந்தந்த தொழில் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இதை எழுதுவது கடினம்.
ஜானகி அம்மாள் ஹஸ்பெண்ட் என்று அழைக்கப்படும் சப்ஜட்ஜ் சாம்பசிவத்தின் பொண்டாட்டி தாச பாவனைகளில்.... ஒரு திருமணத்திற்கு போய்விட்டு பொண்டாட்டி எப்போது கிளம்புவாள் என்று அவள் திசையையேப் பார்த்துக்கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறார். யோவ்....... க்ளாஸிக்.
மூணு சீட்டு முத்தண்ணா... தலையணைக்கு அடியில் இருக்கும் சீட்டுக்கடை கண்ணில் ஒத்திக்கொண்டுதான் தினமும் படுக்கையை விட்டு எழுந்திருப்பார் என்ற ரகளையான ஆரம்பம்.
சிக்கனம் சின்னசாமி... எதையும் சிக்கனமாகச் செய்யும் சின்னசாமி தன்னிடமிருந்த ஜெர்மன் டைம்பீஸ் ஒன்றை தானே ரிப்பேர் செய்து ஓடவிட்ட பிரதாபத்தை எழுதிவிட்டு... கடைசி வரியில் பெரிய முள் அப்பிரதட்சணமாக சுற்றிக்கொண்டிருந்தது என்று முடித்த சாவி.. ஆஹா..
வாஷிங்டனில் திருமணம் வாசகர்கள் கொண்டாடிய படைப்பு என்றால் இதுவும் அதற்குச் சற்றும் சளைத்ததல்ல.
படித்து முடித்து புத்தகத்தை மூடியபின்பு ஒவ்வொருவரும் இப்போது என்ன ஆனார்கள் என்று சிந்தனை எழுவது சாவி சார் எழுத்தின் வெற்றி! (y)

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails