Thursday, June 1, 2017

கிண்டில் புத்தகங்கள்

அந்தப் பையன் பேர் ஜெயக்குமார்னு நினைக்கிறேன். கார் வண்ணன். கச்சலான தேகம். பளீர் பற்கள். படிய வாரிய தலை. பாட்டம் மடித்த பேண்ட். சைக்கிள் ஹாண்டில் பாரில் ஊஞ்சலாடும் ஒயர்க்கூடை. மங்கையர்மலர், ஆவி, குமுதம் என்று பல இதழ்கள் நிரம்பிய பை. ப்ரான்ஸ், சில்வர் மற்றும் கோல்டு போல வாடிக்கையாளிர்ன் சந்தாவுக்கு ஏற்ப புது சஞ்சிகைகள் வீட்டு வாசலில் மணியடித்து வழக்கப்படும். ”ஜெய்... இந்தா கொழக்கட்டை... ஒரு டம்ளர் பாயஸம் குடியேன்...” என்று விசேஷ நாட்களில் கொடுத்து தாஜா பண்ணியிருந்தால் புதுசோ.. இன்னும் ரெண்டு நாள் கூட வைத்திருப்பதோ... சலுகையாகக் கிடைக்கும்
மன்னார்குடி ஹரித்ராநதியில் குளத்து நீரைச் சூழ்ந்த நான்கு கரைகளுக்குள் நடந்த பிஸினஸ் மாடலை இப்போது அமேஸான் கடல் கடந்து உலகமெங்கும் அதிரடியாய்ச் செய்கிறது. Kindle Unlimited என்பது அதன் பெயர். கிண்டில் இல்லாவிட்டாலும் கிண்டில் ஆப்பை தரவிறக்கி மொபைலோ லாப்டாப்போ டெஸ்க்ட்டாப்போ.. எதிலும் புத்தகங்கள் படிக்கலாம். ஒன்றல்ல இரண்டல்ல... மில்லியன் புத்தகங்கள். அநேகம் ஆங்கிலம். ஆயிரம் தமிழ்த் தலைப்புகளும் இருக்கிறது. மாத சந்தா இருநூறு. வருடச் சந்தா சொற்பம்தான். அதோடு மட்டுமல்லாமல் பழங்கால ஆங்கில இலக்கிய மின் புத்தகங்கள் கொத்தாக இலவசம்.
அலமாரியில் இடம் இருந்தவரையிலும் தாளில் அச்சிட்ட புத்தகங்களை வாசனைப் பிடித்து வாங்கி வாங்கி அடுக்கினேன். இப்போது அனைத்தையும் நிரப்பியாகிவிட்டது. அச்சிட்ட புத்தகமே ஆனந்தமான ஒன்று என்கிற பழைய சித்தாந்தத்தில் இருந்தேன். Kindle Unlimitedல் மாதச் சந்தா சேர்ந்தவுடன் தரவிறக்கிய புத்தகங்களை எப்போதெல்லாம் எதற்கெல்லாம் காத்திருக்கிறேனோ அப்போதெல்லாம் காக்க வைத்தவர் கூப்பிடும் வரை புரட்டிப் புரட்டிப் படிக்க ஆரம்பித்தேன். வடபழனி தாண்டி வரும் லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னலில் ஒரு முறை பத்து நிமிடங்களுக்கு மேலாக சிகப்பு எரிய சாவியின் “பழைய கணக்கு”வில் இரண்டு அத்தியாயம் படித்துமுடித்தேன். பரம திருப்தி!
கையடக்க ஐஃபோனில், கிண்டிலில், மேசைக் கணினியில், லாப்டாப்பில் என்று நீக்கமற நிறைந்திருக்கும் சர்வ கேட்ஜெட்டுகளிலும் ஆயிரம் புத்தகம் என்றால் மகிழ்ச்சிக்கு எல்லையேது? ஆயிரம் மணி நேரம் ஆளில்லா இடத்தில் காத்திருக்கச் சொன்னாலும் கஷ்டமென்பதை அறிவோமா?
தமிழ்ப் புத்தகங்களை கிண்டில் ஃபயரிலும் லேட்டஸ்ட் கிண்டில் ஆப்பில் திறக்கமுடியவில்லை. ஐஃபோன் திறந்து தாராளமாகப் படிக்கக் கொடுக்கிறது. இதுபோல சிற்சில இம்சைகள் இருந்தாலும் கிண்டில் ஆப் நிறுவிய பல மின்னணு சாதனங்களில் படிக்க முடியும் என்பதால் தைரியமாக சந்தா செலுத்தலாம். பல புத்தகங்கள் வாங்கி இச்சை வரும்போது எடுத்துப் படிப்பதை விட்டு இப்போது ”பணம் கட்டியாச்சே.. எக்ஸ்பயரி ஆயிடுமே..” என்கிற காரணம் தார்க்குச்சி போடுகிறது. ஆகையால் இந்த 2017ம் வருடத்தில் வாரம் ஒரு புத்தகம் படித்து முடிக்கவேண்டும் என்கிற சங்கல்பம் எடுத்திருப்பதால்... கீழ்கண்ட புத்தகங்கள் ஜனவரியில் முடித்திருக்கிறேன்.
1. பழைய கணக்கு - சாவி (கிண்டில் ஃபயரில் மற்றும் Windows 7 Kindle Appல் படிக்க முடியாது)
2. 50 Life and Business lessons from STEVE JOBS - George Ilian
3. Tirupathi - Amar Chitra Katha - Comics
4. வாழ்விலே ஒரு முறை (அனுபவக் கதைகள்) - ஜெமோ - கிழக்கு (கிண்டில் ஃபயரில் மற்றும் Windows 7 Kindle Appல் படிக்க முடியாது)
இதோடு மட்டுமல்லாமல் பைரப்பாவின் அச்சு வடிவ பருவம் நூறு பக்கங்களுக்கு மேல் ஓடியிருக்கிறது.
புத்தகப் பிரியர்கள் சதாசர்வ காலமும் அவர்களுக்கான பிரத்யேக கிரகத்தில் வாழ்கிறார்கள். கடலை மடித்துக் கொடுத்த கூம்புக் காகிதத்திலிருந்து தவறி கையில் விழுந்தால் எலும்பை முறிக்கும் தலகாணி அளவு புத்தகங்கள் வரை தலையைத் தொங்கப் போட்டுப் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.
முக்கியமான பின் குறிப்பு: இது Kindle Unlimited க்கு விளம்பரமல்ல... :-)

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails