Thursday, June 1, 2017

எலி செட்டி

”தொழில் முனைவோர்க்கு உங்கள் அறிவுரை என்ன?”
”நானென்ன பொருளாதார நிபுணரா? எனக்கென்ன தெரியும்?”
“தெர்ல? ச்சே.. சும்மா சொல்லுப்பா.. ”
“நெசம்மாவே என்னிய கேட்கிறியா?”
“ஆமா..பா..”
“இதுக்கு ஒரு கதை இருக்கு... சொல்றேன்.. புர்தா பாரு..”
“ம்.. சொல்லு..”
**கதை ஆரம்பம்**
வியாபாரியின் மகன். சிறுவயதிலேயே தந்தையை இழந்தான். வறுமை. தாய் கஷ்டப்பட்டு படிக்கவைத்தாள். நன்கு கற்றுத் தேர்ந்தான். குலத்தொழிலை விடக்கூடாது என்று தாய் அவனை ஏதேனும் தொழில் தொடங்கத் தூண்டினாள். அந்த ஊர் வணிகன் ஒருவன் தொழில் தொடங்க மூலதனம் தருவதாக அறிந்தான். அவனிடம் உதவி கேட்க சென்றபோது “தொழில் செய்ய மூளையில்லாதவன் ஏனடா மூலதனம் பெற்றுக்கொண்டாய்...” என்று கடனைத் திருப்பிச் செலுத்த இயலாதவை ஏசிக்கொண்டிருந்தான். மேலும் “தொழில் செய்யத் தெரியாதவன் மூலதனம் வாங்கக்கூடாது. தொழில் தெரிந்தவன் அந்த தூரத்தில் செத்துக்கிடக்கும் எலியைக் கூட மூலதனமாகக் கொண்டு வியாபரம் செய்துவிடுவான்” என்று சாலையில் கிடக்கும் எலியைக் காட்டினான்.

இந்த வியாபாரியின் மகனிடம் “என்ன வேண்டும்?” என்று கேட்டான். “உங்களிடம் மூலதனம் கேட்க வந்தேன். ஆனால் அவரிடம் அந்த செத்த எலியைக்கூட மூலதனமாக வைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்று நீங்கள் கூறியது எனக்குப் பிடித்துவிட்டது. அந்த எலியை நான் எடுத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டான். “தாராளமாக..” என்று சிரித்துக்கொண்டேன் சொன்னான் உள்ளூர் தனவந்த வியாபாரி.
அந்த எலியை யார் தலையில் கட்டுவது என்று கடைவீதியில் அலைந்து கொண்டிருக்கும் போது கையில் பூனையுடன் ஒருவன் வந்தான். “ரொம்ப நாளாக எலி கிடைக்காமல் என் பூனை சோர்ந்துவிட்டது..” என்றான். ஒருபடி கடலைக்கு விலை பேசி அந்த எலியை விற்றுவிட்டான். அந்தக் கடலையை வீட்டிற்குக் கொண்டு போய் வறுத்து... ஒரு சின்ன அண்டாவில் குடிநீர் எடுத்துக்கொண்டு நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டான்விறகுவெட்டிக் களைப்போடு வருபவர்களுக்கு வறுத்தகடலையு.ம் நீரும் கொடுத்தான். அவர்கள் உள்ளம் குளிர்ந்து ஆளுக்கு இரண்டு கட்டைகள் கொடுத்தார்கள்.
அந்தக் கட்டைகளை விற்று கடலை நிறைய வாங்கினான். மீண்டும் மீண்டும் அனுதினமும் கொண்டு போய் விற்றான். பிரதியாகக் கிடைத்த கட்டைகளில் பாதியை விற்றுக் கடலை வாங்கினான் மீதியை சேமித்துவைத்தான். ஒரு சமயம் அந்த ஊரில் கட்டைக்குப் பஞ்சம் ஏற்பட்டது. சேமித்து வைத்திருந்த கட்டைகளை விற்று அதிக பணம் சம்பாதித்தான். கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு பலசரக்குக் கடை வைத்தான். வியாபாரம் பெருகி செல்வம் கொழிக்க ஆரம்பித்தவுடன் தங்கத்தில் எலி செய்து முதலில் உதவிக்குச் சென்ற வியாபாரியிடம் பரிசளித்தான்.
ஆஹா.. என்று வாழ்வில் உயர்ந்தவனின் கதையைக் கேட்டு மெச்சிய அந்த தனவந்த வியாபாரி தனது மகளை இவனுக்குத் திருமணம் செய்துவைத்தான். செத்த எலியை வைத்து வியாபாரம் செய்து வாழ்க்கையில் முன்னேறியதால் அவரை“எலிசெட்டி” என்று ஊரார் அழைக்க ஆரம்பித்தார்கள்.
**கதை முடிவு**

“எலிசெட்டிக் கதை சோக்கா இருக்குதுபா..”
“வியாபாரின்னா அந்த மாதிரி புத்திசாலியா இருக்கோணும்..”
“அது சரி.. இந்த கதையை யாரு சொன்னா?”
“ ஏன் இப்ப நாந்தான் சொன்னேன்..”
“உனக்கு இவ்ளோ சரக்க் கிடையாது.. ஒரிஜினல் கதையை யார்டேர்ந்து சுட்ட?”
“நீ பிரில்லியண்ட். இது மஹாகவி ஸோமதேவ பட்டர் சொன்ன கதை.”
“யார் அவரு?”
“காஞ்சி காமகோடி பீடம் 46 வது பீடாதிபதி”
“யப்பாடீ!! நமஸ்காரம்... நன்றி.... வணக்கம்”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails