Sunday, December 5, 2010

துணிவே துணை

ஒரே கும்மிருட்டு. குமரகுரு சைக்கிளில் ஒத்தை ஆளாய் ஊருக்கு போய்கொண்டிருந்தார். கேரியரில் உர சாக்கு மூட்டை  நிறைய மளிகை சாமான்கள். எண்ணெய் காணாத வீல் மற்றும் பெடலின் பேரிங்குகள் "கிரீச்...கிரீச்.." என்று கத்திக்கொண்டே துணைக்கு அவருடன் பேசிக்கொண்டே வந்தது. மழை விடாமல் நசநசவென்று பெய்துகொண்டிருந்தது. சில நேரம் ஊசியாய் சில நேரம் கொண்டை ஊசியாய் சில நேரம் கடப்பாரையாய் தனது உருவத்தை மாற்றி மாற்றி பூமியை தைத்தது. எதற்கும் மனிதர் மசியவில்லை, ஒதுங்கவில்லை. நன்றாக உழைத்து வைரம் பாய்ந்த கட்டை. ஒரு பிரளயம் வருவது போல "ஹோ.." என்ற இரைச்சலுடன் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மழை இல்லை என்று வானம் பார்த்து சபித்தவர்களை இன்று பழி தீர்க்கிறது. வானம் பொழிகிறது ஆனால் பூமி விளைவதற்கு இடம் கொடுக்காமல்.  மழை ஆரம்பித்தால் அவர்கள் ஊரில் மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். அவ்வப்போது அந்த கிராமத்தின் பாதையில் செல்லும் டூ வீலர்களின் வெளிச்சம் தவிர மற்ற நேரங்களில் வானம் மின்னல் விளக்கடித்தது. அந்தந்த வெளிச்சங்களுக்கு தகுந்தவாறு அந்த சாலை சில கணங்கள் கண்ணில் தோன்றி மாயமாய் மறையும். அவரை விட அவர் சைக்கிளுக்கு வீட்டுக்கு வழி தெரியும்.

night

தூரத்தில் தேவர் பங்கில் வரப்பில் யாரோ வருவது போலிருந்தது. மழைக்கு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு மேல் சட்டை இல்லாமல் அரையில் மட்டும் வேட்டியை தூக்கி கட்டி அசப்பில் பண்ணையாள் முனியன் மாதிரி இருந்தான். வரப்பிர்க்கு எதிரே சாலை ஓரத்தில் ஒற்றைக்காலை ஊன்றி சைக்கிளை நிறுத்தி சீட்டை விட்டு இறங்காமல் குரல் கொடுத்தார் குமரகுரு.
"முனியா..."
"......"
"யேய்... முனியா... என்ன ரொம்ப நாளா காணோம்..."
"......."
"சம்சாரத்தோட ஊருக்கு போயிருந்ததா சொன்னாங்க..."
சடாரென்று வெட்டிய மின்னல் ஒளியில் அவனை கண்களை சுருக்கி கூர்ந்து கவனித்தார். அந்த இருட்டிலும் அவன் கண்கள் பூனையின் கண்கள் போல பளபளத்தது. மழை தனக்கான பூமி சம்பந்தத்தை இன்னமும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது. 
"யேய்..என்ன.. இவ்ளோ கேக்கறேன்.. வாயை தொறக்க மாட்டேங்கற.." என்று இரைந்தார்.
"ஹீ..ஹீ.. ஹ்.ஹீ..." என்று தொண்டைகட்டிய பொம்பளை போல் சிரித்தான்.
உடம்பில் இரத்தம் வேகவேகமாகப் பாய குமரகுரு சற்றே பயந்தார். டவுனில் கணேசன் மளிகையில் மூட்டையை எடுத்து காரியரில் கட்டும் போது மணி ஒன்பது. அப்புறம் ஒன்பதரை மணி ரெண்டாம் ஆட்டம் செண்பகா தியேட்டரில் "மாணிக்கத் தேர்" பார்த்துவிட்டு காற்றிருக்கிறதா என்று டயரை அழுத்தி சைக்கிளை ஸ்டாண்டில் பார்த்த போது பக்கத்தில் வண்டி எடுத்தவரை "மணி எவ்வளவுங்க?" என்று விசாரித்தார். அப்போது சரியாக ஒரு மணி. சிலுக்கம்பட்டி கடைசி வண்டி ஐந்தாறு பேரோடு பாதி தூக்கத்தில் சென்றது.
"யேய்.. என்ன இளிக்கிற.." என்று குரல் கம்ம கேட்டார்.
பதிலேதும் பேசாமல் இன்னும் ரெண்டு தப்படி நடந்து முன்னே வந்தான். அவன் அப்படியே காற்றில் அலைவது போல இருந்தது அவருக்கு. இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தார். வாயை பிளந்து மீண்டும் சிரிக்கையில் அவன் வாய் ஒரு பல் கூட இல்லாமல் பொக்கையாக இருந்தது. "டேய்... முனி... ஒன்ன அடக்கறேண்டா... டாய்... ஆத்தா... வாடி..." என்று உச்சஸ்தாயியில் உடுக்கடித்து கத்தி பூசாரி போன அமாவாசையில் கால்வாய் ஓர காளி கோயிலில் ருத்ர தாண்டவம் ஆடியது கண்ணில் தோன்றியது. இப்போது மழை கொஞ்சம் குறைந்து காற்று வலுக்க துவங்கியிருந்தது. "ஊ..ஊ.." என்ற வளியின் ஒலி காதை கிழித்தது.
சைக்கிளை கிளப்ப காலை எடுத்து பெடல் மேல் வைக்க முடியவில்லை. ஏதோ ஒரு சக்தி காலை கீழே இழுப்பதுபோல் தூக்கவிடாமல் தடுக்கிறது. இடுப்புக்கு கீழே மரத்துப் போனது போன்ற உணர்வு. இன்னும் ரெண்டு அடி எடுத்து முனியன் முன்னே வருவது போல இருந்தது அவருக்கு. ஏற்கனவே மிகவும் வெளிறிப்போயிருந்தார். மழையில் தொப்பலாக நனைந்தவருக்கு பயத்தில் வேர்ப்பது எப்படி தெரியும். கை தானாக நெற்றியில் இருந்த தண்ணிரை வழித்து தரையில் தெளித்தது. இம்முறை வரப்பு பக்கம் உற்றுப் பார்த்தபோது அவனுக்கு முட்டிக்கு கீழ் காலையே காணோம். அந்த சந்தர்ப்பத்தில் மழைக்கு வயல் ஓரத்து புளிய மரத்தில் ஒதுங்கிய ஆந்தை ஒன்று விகாரமாக சப்தம் எழுப்பியது அவருக்கு அடிவயிற்றில் கிலியை ஏற்ப்படுத்தியது. திருடர்கள் கூட வெளியே வரத் தயங்கும் காலமாகியதால் நிர்ஜனமான சாலையாக அது இருந்தது. இரும்பு இருந்தால் காத்து கருப்பு அண்டாது என்று பேச்சியம்மா பாட்டி சிறுவயதில் அவருக்கு தெம்பூட்டியிருந்தாள். ஹாண்டில் பாரை இறுகப் பற்றிக்கொண்டார். வாய் தானாக "காக்க.காக்க.. கனவேல்...காக்க.." என்று முனுமுனுக்க துவங்கியிருந்தது.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முழு தெம்பையும் கொடுத்து காலை தூக்கி பெடலில் வைத்து அழுத்தத் துவங்கினார். வண்டி ஒரு இன்ச் கூட நகரவேயில்லை. பயத்தில் திரும்பி பார்க்காமல் இன்னும் அழுத்தினார். தோளில் ஒரு கை விழுந்ததும் பயத்தில் "அம்மா...." என்று அலறிவிட்டார். 
"என்ன குமரகுரு... இங்க நின்னு என்ன பண்ணிக்கிட்டு இருக்க..." என்ற குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தார். கையில் குடையுடன் நெற்றி நிறைய குங்குமத்துடன் காரியரை பிடித்துக்கொண்டு வீரப்ப பூசாரி நின்றுகொண்டிருந்தார். 
"அங்க..அங்க.." என்று கைகாட்டி வாயிலிருந்து வார்த்தைகள் தடுமாற குமரகுரு காட்டிய திசையில் பார்த்தார் பூசாரி.
"என்ன அங்க... ஒன்னும் இல்லையே..."
இப்போது திரும்பி பார்த்த குமாரகுருவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் காட்டிய திக்கில் யாருமே இல்லை. ஒரே அமானுஷ்யமாக இருந்தது. கொஞ்ச நேரம் வரையில் முனியன் போல இருந்ததும் தன்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பொக்கை வாய் காட்டி சிரித்ததும், முட்டி வரை காலில்லாமல் காற்றில் மிதந்து வந்ததும் பொய்யா? அதிர்ந்துவிட்டார். கண்ணை இரண்டு முறை கசக்கி விட்டு திரும்பவும் பார்த்தார். வரப்பில் யாருமே இல்லை. அடிக்கும் காற்றுக்கு பச்சை பயிர்கள் தலையாட்டிக் கொண்டிருந்தன. இன்னமும் திகில் அடங்கவில்லை.
"அட வாப்பா.. அங்கன ஒண்ணுமில்லை..." என்று முதுகை தட்டி குமரகுருவை அழைத்து சைக்கிளை எடுக்கச் சொல்லி மூட்டையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு காரியரில் உட்கார்ந்தார் பூசாரி. கொஞ்ச நேரம் சென்றதும் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் குமரகுரு.
"வயல்ல.. அப்ப நான் முனியனை பார்த்தேன்.."
"யாரு... நம்ம தேவர் பங்கு பண்ணையாளு முனியனையா?"
"ஆமாங்க.. "
"என்னப்பா சொல்ற... அவனையா?" என்று கொஞ்சம் சத்தமாக ஆச்சர்யம் ததும்பும் குரலில் கேட்டார் பூசாரி.
சைக்கிள் ஊருக்குள் நுழைந்திருந்தது. ஊர்க்காவல் தெய்வம் முனீஸ்வரன் கோயில் தாண்டி மேட்டுத் தெரு முனையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்கள். மழை சுத்தமாக விட்டிருந்தது.
"ஏன் கேக்கறீங்க..." ஒரு எதிர்பார்ப்போடு கேட்டார் குமரகுரு.
"இல்லை.. பொஞ்சாதியோட ஊருக்கு போன முனியன்.. அவனுங்க பங்காளியோட ஏதோ பணம் காசு தகராரு.. இவன் ஒன்னும் சரியா ஊட்டுக்கு பணம் கொடுக்கறதில்லை.. அப்பப்ப சாராயம் குடிச்சீட்டு சரிஞ்சிடறான்."
"ஆமாங்க... ஆனா கொஞ்சம் நல்லவந்தாங்க..வெகுளி..வீணா வம்பு வழக்குக்கு போக மாட்டான்" என்று பரிந்தார் குமரகுரு.
வீட்டு வாசலில் இறங்கிக்கொண்டார் பூசாரி. மூட்டையை காரியரில் வைத்து கிளிப் போட்டார். சானலை எடுத்து கட்டி ஒரு முடி போட்டார்.
"நல்லவந்தான்.. ஆனா பாரு.. அந்த தகரார்ல.. போன வாரம் நாயித்துக்கிளம ராத்திரி  பங்காளிங்க வயலுக்கு வாங்கி வச்சிருந்த பாலிடாயில் மருந்தை எடுத்து குடிச்சுட்டான். ஆஸ்பத்திரிக்கு தூக்கி கிட்டு ஓடும்போதே உசுரு போய்டிச்சு..." வெகு சாதரணமாக சொல்லிவிட்டு வேட்டியை தூக்கி மடித்துக்கட்டிக்கொண்டு வீட்டிற்குள் போய்விட்டார் பூசாரி.
கடைசி வார்த்தை காதில் விழுந்ததும் குமரகுருவிற்கு லேசாக தலை சுற்றியது. உடம்பு படபடத்தது. வயலில் கண்ட காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்தது. பொக்கை வாய், கோலிகுண்டு கண்கள், முட்டிக்கு மேல் இல்லாத கால்கள் என்று எல்லாம் வந்து மொத்தமாக அரட்டியது.

காலையில் "என்னப்பா ஷாம்பூ பாக்கெட் வாங்கலாம்னு வந்தா குமரகுரு இன்னிக்கி கடையை தொறக்கலையா" பூசாரி தோளில் ஒரு துண்டோடு பக்கத்து சைக்கிள் கடையில் கேட்டுக்கொண்டிருந்தார். "உங்களுக்கு விவரமே தெரியாதா.. நேத்து ராத்திரி டவுனுக்கு போய்ட்டு வரும்போது குமரகுருவை பேயடிச்சிருச்சு... ஒரே காய்ச்சல்.. பேதியாவுது.. இன்னும் ஒரு வாரமாவது ஆவும் கடையை தொறக்கரத்துக்கு..."

கடையின் வாசலை அடைத்திருந்த மரப்பலகைகளில் "துணிவே துணை" என்று சிகப்பில் தடிமனாக எழுதியிருந்தது.

பட உதவி: http://www.flickr.com/photos/kshgarg

-

42 comments:

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள்....

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

பத்மநாபன் said...

நீங்களும் அமானுஷ்யத்துல பூந்துட்டிங்க போல...முனி கினி அடிச்சுருச்சா...

தஞ்சை கிராமத்தமிழ் தாராளமாக வருகிறது...

தினேஷ்குமார் said...

நல்லாருக்கு போடுல இருக்குற வாசகம் மனசுல இல்லாதது தான் காரணம் ...

நான் ஆறு வருஷம் இருக்கும் ஸ்ரீபெரும்பத்தூர் டெல்பி டி வி எஸ் ல கொஞ்சகாலம் ட்ரைனியா வேலை பார்த்தேன் எனக்கு மேக்ஸிமம் 2 & 3 ஷிப்ட்டுதான் வேலை என்னோட ரூம் கம்பெனில இருந்து 3 கி.மீட்டர் தூரம் இரண்டாவது ஷிப்ட்டு முடிவது இரவு 12 மூன்றாவது ஷிப்ட் தொடங்குவதும் அதே நேரம் நான் அந்த நேரத்துல தனியாதான் என் ரூம்லையிருந்து கம்பெனிக்கு போவேன் கம்பெனியிளிருந்தும் வருவேன் இது நண்பர்களுக்கு தெரியாது அவர்கள் ரெஸ்ட் ரூமிலே களைப்பில் தூங்கிவிட்டு காலையில்தான் வருவார்கள் சில வாரங்கள் கழித்து அவர்களுக்கு தெரியவந்து என்னோடு வந்தார்கள் ஒரே ஒரு நாள் தான் வந்தார்கள் ஒன்னு சொல்ல மறந்துட்டேன் கம்பெனியில் லைட் எரியும் அதை விட்டால் நான் குடியிருக்கும் ஊரில்தான் லைட் இடைப்பட்ட தூரம் கும்மிருட்டு மட்டும் மீண்டும் தனிமையில் தொடர்ந்த பயணம் இன்றும் முடிவில்லாமல் தொடர்கிறது ...........

மோகன்ஜி said...

துணிவே துணை!ராத்திரி பன்னிரண்டு மணிக்கு இந்தக் கதையைப் போய் படிப்பேனா! அம்மாடி! ஜெயந்தி! எனக்கு பாத்ரூம் போகணும்.. கொஞ்சம் துணைக்கு வறியா ! காக்க! காக்க! கனகவேல் காக்க!

Aathira mullai said...

நானே வருவேன்.. இங்கும் அங்கும்.. இது முனியன் பாடுற பாட்டு.. ஒரே அமானுஷ்யம்..

வலைத்தளத்திலே எழுதிட்டு இருக்க்றப்ப ஒவ்வொரு எழுத்தும் கால் இல்லாம எழுந்து ஆடினா எப்படி இருக்கும்? அய்யோ இங்கே யாரோ கதவை ஒடக்கிற மாதிரி சத்தம் கேக்குது என்னோட வலைத்தளக் கதவை... ஒவ்வொரு எழுத்தும் ஆயிரக்கணக்குல கை கால்கள் முளைச்ச மாதிரி பெரிய பெரிய் உருவமா மாறிட்டே வ்ருது...வயிறெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சு.. நான் வரேன்...

விறு விறுன்னு போய் முடிஞ்சது கதை. துணிவுதான் துணைன்னு சொல்லி முடிக்கிறீங்க.. அருமை

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பர்.

Anonymous said...

அண்ணே செம திகிலா இருக்கு.
//தலைப்பு//
முரண் நகை ஹி ஹி..

NaSo said...

ரொம்ப விறுவிறுப்பாய் ஒரு அமானுஷ்ய கதையை சொல்லி எங்களைப் பயமுறுத்திட்டீங்க.

இளங்கோ said...

இனிமேல் நைட்ல எங்கயும் வெளியே போக மாட்டேன் :)

வெங்கட் நாகராஜ் said...

அமானுஷ்யமான ஒரு கதை படித்த திகில்... நடுங்குகிறது கை.... பகிர்வுக்கு நன்றி.

RVS said...

@ம.தி.சுதா
வணக்கம் சகோ. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ;-)

RVS said...

@பத்மநாபன்
அப்பாஜி அளவிற்கு விபரீதக் கதைகள் எழுத வராது. சும்மா ஒரு ட்ரை. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல.. ;-) ;-)

RVS said...

@dineshkumar
எனக்கே சில அனுபவங்கள் இருக்கு தினேஷ்.. சொன்னா எல்லோரும் சிரிப்பாங்க... உட்ருங்க.. ;-)

RVS said...

@மோகன்ஜி
மோகன் அண்ணா உங்களுக்கு அசாத்திய துணிச்சல்.. இதையும் படிச்சிட்டு இப்படி ஒரு பின்னூட்டமா நன்றி.. ;-)

RVS said...

@ஆதிரா
நன்றி ஆதிரா...நான் இப்போதெல்லாம் விதவிதமாக நிறைய எழுதி பழகுகிறேன்.. நன்றி ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
சூப்பருக்கு நன்றி ;-)

RVS said...

@Balaji saravana
தலைப்பு முரண் நகை...
கதை முரண் சுவை.. சரியா..? ;-)

RVS said...

@நாகராஜசோழன் MA
பாராட்டுக்கு நன்றி எம்.எல்.ஏ!! டைரிக் குறிப்பு படித்தேன். சுவாரஸ்யம்.

RVS said...

@இளங்கோ
தைரியமா போப்பா.. உன்னை எதுவும் அண்டாது.. (நீங்கள் தைரியமானவர் என்று சொன்னேன்.. ) -)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நல்லா டெம்போ ஏத்தி விடறீங்க.. பாராட்டுக்கு நன்றி.. ;'-)

ADHI VENKAT said...

திரில்லிங்கா இருந்தது. வாழ்த்துக்கள்.

சிவராம்குமார் said...

என்ன இது! பேய்க கதையா..... ஐய்யோஓஒ !!!! துணிவே துணை!!!!

RVS said...

@கோவை2தில்லி
நன்றி கோ2தி ;-) ;-)

RVS said...

@சிவா என்கிற சிவராம்குமார்
ரொம்ப பயமா இருந்தா கூழ்மோர் காய்ச்சி குடிங்க.. ;-) ;-) ;-)

பொன் மாலை பொழுது said...

எப்பா சாமீ..............................ரொம்ப பயமாதா இருந்தது.
நம்ம அம்பி திகில் கதை உடுறதிலியும் கில்லாடிதான். :)))

பொன் மாலை பொழுது said...

எப்பா சாமீ..............................ரொம்ப பயமாதா இருந்தது.
நம்ம அம்பி திகில் கதை உடுறதிலியும் கில்லாடிதான். :)))

balutanjore said...

dear rvs

pangu endral vayal endru romba perukku theriyadu endru ninaikiren.

kadhai suvarasyamagave irundhathu.

balu vellore

ஹேமா said...

"துணிவே துணை"....எனக்கும் காய்ச்சல் வரப்போகுது ஆர்.வி.எஸ் !

சைவகொத்துப்பரோட்டா said...

கதை சொல்லிய விதம் விறுவிறுப்பு!

தக்குடு said...

//சில நேரம் கொண்டை ஊசியாய் சில நேரம் கடப்பாரையாய் தனது உருவத்தை மாற்றி மாற்றி பூமியை தைத்தது// நல்ல உவமானம் அண்ணா, சைக்கிள் பத்தின பத்தியும் ரசிச்சேன். வாழ்த்துக்கள்!!

RVS said...

@கக்கு - மாணிக்கம்
பயப்படாதீங்க... திருநீறு பூசி தலைமாட்ல ஒரு பொட்டலம் வச்சுகிட்டு படுங்க.. நோ ப்ரோப்ளம்.

பாராட்டுக்கு நன்றி ;-)

RVS said...

@balutanjore

Thank you Sir!!! ;-)

RVS said...

@ஹேமா
பயந்ததுக்கு நன்றி ;-)

RVS said...

@சைவகொத்துப்பரோட்டா
நன்றி சை.கொ. ப. எல்லாத்தையும் ட்ரை பண்ணுவோம். ;-)

RVS said...

@தக்குடுபாண்டி
நன்றி தக்குடு.. நீ எப்போ ஊருக்கு வரேன்னு அக்கா கேக்கறா.. ;-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

யப்பாடி.. படிக்கிற நமக்கே கத்தி கலங்குதே...

ஸ்ரீராம். said...

மனசுதான் பாதி காரணம் இல்லை?

RVS said...

@வெறும்பய
அவ்ளோ நல்லா இருந்ததா... நன்றி வெ.ப ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
அதைத்தான் சொல்ல ட்ரை பண்ணியிருந்தேன்... ஹைலைட் பண்ணியதற்கு நன்றி ;-)

அப்பாதுரை said...

போனவாரம் ஒரே பனிமழை. சுத்தம் செஞ்சு முதுகுவலில மூணு நாள் படுத்துட்ட்டேன்.. இந்தப் பதிவைப் படிக்கத் தவறிவிட்டேனே? பதிவுப்புயலா இருக்கீங்க.

சுவையான திருப்பம் கடைசியில் - just enough horror.

இவ்வளவு உழைச்சு எழுதுறீங்க - proof reading செஞ்சா நல்லா இருக்குமோ? (ஆதிரா தான் சொல்லச் சொன்னாங்க :)

அப்பாதுரை said...

'துணிவே துணை'னு ஒரு படம் வந்தது... முதல் பத்து இருபது நிமிடம் பார்த்து நடுங்கியது நினைவுக்கு வருகிறது. பல்லாவரம் லட்சுமி தியேடர் என்று நினைக்கிறேன்.. படம் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று அலறி real time sound effect கொடுக்க, பார்த்து பாதிப்படம் ரசித்த அனுபவம்.

RVS said...

@அப்பாதுரை
அப்பாஜி! இப்பத்தான் முழு மூச்சில் தமிழ் எழுதி பழகுகிறேன்... அதோடு மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு பதிவு.. ஆபிஸ் விட்டு வீட்டுக்கு போனப்புறம்.. கிடைக்கும் ஒரு மணி ஒன்னரை மணி நேரத்தில் பதிகிறேன்... கொஞ்சம் நிதானமாக இருந்தால் தடவி தடவி ஃப்ரூப் பார்க்கலாம். தவறு இல்லாமல் பதிய முயற்சிக்கிறேன்.. நன்றி.. ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails