Wednesday, December 15, 2010

மன்னார்குடி டேஸ் - மார்கழியில் மன்னை


என்றைக்கு விடியற்காலை "ஜிங்.ஜிங்.சக். ஜிங்..ஜிங்.சக்" என்ற கோரஸான ஜால்ரா சத்தம் தலையோடு கால் போர்த்திய கம்பளிக்குள் நுழைந்து உங்களை எழுப்பி விட்டால் அன்றிலிருந்து மார்கழி பிறந்து தனுர் மாத பஜனை தொடங்கி விட்டது என்று அர்த்தம். திருமஞ்சன வீதி செந்தூர ஆஞ்சநேயர் திருக்கோவில் தான் இந்த பஜனை கோஷ்டியின் ஆரம்பம். காலை சரியாக ஐந்து மணிக்கே ஸ்நானம் செய்து சட்டை போடாமல் தும்பைப்பூ போல வேஷ்டி மட்டும் உடுத்தி ஒரு பக்க தோளில் ஒரு முழம் கதம்பமோ மல்லியோ சார்த்திக்கொண்டு குறைந்தது பத்து பதினைந்து பேர் மார்கழிப் பனி மழையில் நனைந்து வீதிகளில் பக்தி சொட்டும் பஜனை மழை பொழிவார்கள். இந்த சத்சங்கத்திற்கு கோபால்சாமி சார்தான் தலைமை நடத்துனர். வழுக்கைத் தலை வாமன ரூபம். நல்ல கட்டுமஸ்தான ஆகிருதியான உடல். வெண்கல ஜால்ரா அவர் கையில் ஜதி பாடும். அந்த வெண்கல ஜால்ராவுக்கு இணையான கணீர் குரல். முதல் வரிசையில் நடுநாயகமாக பளீரென்ற ஜால்ராவை கைகளில் கோர்த்துக் கொண்டு கோபால்சாமி சார் அவருக்கு வலது பக்கத்தில் போஸ்ட்மேன் ரங்குடு கஞ்சீரா இடது புறத்தில் கோ. சார் தோளில் இடித்தபடி பஜனையை தூக்கிப் பாட ஏதுவாக ஹார்மோனியம் பொட்டி போட்டபடி மோகன் மற்றும் சிறு சிறு வாண்டுகள் இரு ஓரத்திலும் பெரியவர்களின் விரட்டல் நடைக்கு சமமாக குடுகுடுவென்று ஓடி பஜனை பாடி வருவார்கள். போஸ்ட்மேன் ரங்குடுக்கு கொஞ்சம் மேலுதடு பெரிதாக இருக்கும். கீழுதடோடு சேர்ந்து படியாமல் அடம் பிடிக்கும். வாயால் பஜனை பாடுவதில் வரும் குறையை தலை கழண்டு போகும் வரை ஆட்டி கஞ்சீராவை நையப் புடைத்து ஆற்றிக்கொள்வார். எங்காவது பக்கத்தில் இடித்து தன் மண்டை சிதறு தேங்காய் ஆகிவிடுமோ என்ற பயத்தில் அவரை விட்டு ஓரடி தள்ளி தான் யாருமே வருவர். எல்லோர் கையிலும் தவறாமல் ஒரு வெண்கல ஜால்ரா ஜிங்.ஜிங்.ஜிங்.ஜிங்கென்று பஜனை பாடிக் கொண்டிருக்கும்.

திருமஞ்சன வீதியில் துவங்கிய பஜனை தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு கரை வழியாக ஒரு ப்ரதக்ஷிணம் வந்து திரும்பவும் செந்தூர ஆஞ்சநேயர் கோயிலுக்குள் சென்றடையும். தென்கரை, மேல்கரை மற்றும் வடகரையிலும் குளத்தின் கரைகளில் இருக்கும் ஆஞ்சநேயர், ராமர், பிள்ளையார் என்று சைவ வைஷ்ணவ மண்டபக் கோயில்கள் இருக்கும். அந்தக் கோயில்களின் திருவாசலில் இரண்டு நிமிடம் நின்று "ஜானகி காந்தஸ்மரனம்..நமப் பார்வதி பதயே.. ஹர ஹர மஹாதேவா.." என்று விதவிதமான நாம கோஷங்கள் எழுப்பி புதிதாக ஒரு பஜன் துவங்கி வழிபட்டு மீண்டும் சுறுசுறுப்பாக அகண்ட நடையில் ஜால்ரா ஜிங்ஜிங்க தொடருவார்கள். ஒரு நாள் வடகரை ராமர் கோவில் வாசலில் "நடுப்பர ஒரு மாமா கஞ்சா அடிச்சுண்டே வராரே.. அவர் தானே ரங்குடு.." என்று எஸ்.வி. சேகர் ஜோக்கை கஞ்சீரா ரங்குடு மாமாவைப் பார்த்து ஸ்ரீராம் கேலி செய்து அவிழ்த்துவிட அவனைத் துரத்தி அடிக்க வந்துவிட்டாள் என் பக்திமயமான பாட்டி. ரங்குடு மாமாவின் தலையாட்டலை ரசித்துக்கொண்டு காலங்கார்த்தால சைக்கிளில் பசும்பால் கொண்டு வரும் வெங்கடேசக் கோனார் ஐநூறு மில்லிக்கு பதிலாக ஒரு லிட்டர் அளந்து ஊற்றிய வரலாறும் உண்டு.

margazhi vayal


ஈசான்ய மூலையில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலில் கூம்பி ஸ்பீக்கர் கட்டி நக்கீரனார் அதிகாலை நாலரையிலிருந்தே சிவபெருமானிடம் "நீரே முக்கண் முதல்வானாயும் ஆகுக.. " என்று திருவிளையாடல் வசனம் பேச ஆரம்பித்துவிடுவார். வருஷா வருஷம் கணேஷ் சவுண்டு சர்வீஸ் ஆள் தான் அந்த ரெகார்ட் ப்ளேயரில் பாட்டு போடுவார். அழுக்கு கட்டம் போட்ட கைலியும் பழுப்பு நிற வெள்ளை சட்டையும் அணிந்து குளிக்காமல் துர்கந்தத்தோடு ப்ளேயர் போடுவார். மாலை ஐந்திலிருந்து ஆறரை ஏழு வரை மீண்டும் சரஸ்வதி சபதம் மற்றும் "தாயே...கருமாரி ..எங்கள் தாய் கருமாரி..." போன்ற எல்.ஆர். ஈஸ்வரி குரலில் உடுக்கையடித்து சாமியாட வைக்கும் அம்மன் பாடல்களும் ஒலிக்கும். ஆர்.பி.எம் சரியாக செட் பண்ணாவிடில் சங்கத் தமிழ் வளர்த்த நக்கீரனாருக்கு இழுத்துக்கும். அவருக்கு மட்டும் என்ன பக்தர்களுடன் பாண்டி விளையாடும் ஈசனுக்கும் அதே கதிதான். கையில் எண்ணெய் கிண்ணம் எடுத்துக்கொண்டு சிவன் கோவிலுக்கு விளக்கு போட வரும் கன்னிப் பெண்களுக்கு கணேஷ் தான் துணை. டிராயர் பருவத்தில் நானும் அதிகாலை சிவன் கோயிலுக்கு என் அம்மாவுடன் சென்றிருக்கிறேன். பாண்ட் போட ஆரம்பித்ததிலிருந்து நான் எழுந்திரிக்க சோம்பேறித்தனம் பட்டதால் அதிகாலை கோயில் செல்வது தடைபட்டது. (என்னை வரக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை என்பதை தயை கூர்ந்து கவனிக்க.)

ராமர் கோயிலில் ஒரு ஆறரை மணி வாக்கில் சிறுவர்களாக நாங்கள் கூடித் திருப்பாவை சொல்வோம். நன்றாக குளித்துப் பட்டை, திருமண் என்று குழைத்துப் பூசி அரையில் வேஷ்டியும் மேலே சட்டையும் இடுப்பில் ஒரு சிகப்புக் கலர் காசித்துண்டுமாய் ஆஜர் ஆவோம். "மார்கழித் திங்கள்..." என்று ஆரம்பித்து "வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைக்" என்று முப்பது பாட்டும் தப்பாமல் பார்க்காமல் மனப்பாடமாகச் சொல்பவன் கோபாலாழ்வார் ஒருவனே. மீதமிருக்கும் வெண் பொங்கல் வாங்கும் கும்பலாகிய நாங்கள் பசங்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு ஆண்டாள் நாச்சியார் அட்டைப் படம் போட்ட திருப்பாவை புஸ்தகத்தை கிழியும் வரை இழுத்து ஒருவர் மேல் ஒருவர் ஏறி ராகமாக பாடுபோம். எவ்வளவு எக்கியும் பாசுரம் கண்ணுக்கு தெரியாத பிரகஸ்பதிகள் "எம்பாவாய்..." மட்டும் சொல்லி தங்களது வருகையை உறுதிப் படுத்துவார்கள். பக்கத்தில் இருக்கும் குட்டியோண்டு மடப்பள்ளியில் சுடச்சுட வெண் பொங்கல் தயாராகும். மைதிலி அப்பாதான் பொங்கல் வைப்பார். மடித்து கட்டிய வேஷ்டியை மீறி உள்ளுக்குள் கட்டிய லங்கோடு கயிறு போல ஆடி வெளியே துருத்திக் கொண்டிருக்கும். காலை ஆறு மணிக்கெல்லாம் வெற்றிலை போடும் அடிக்ட் அவர். நிச்சயம் தூங்கும் போதும் வாயை குதப்பக் கூடும். செம்பவள வாயுடன் தான் எப்போதும் திரிவார். அவர் கைப் பக்குவத்தில் வறுத்த முந்திரியும் நெய்யும் சேர்ந்து பொங்கலை தேவாமிர்தமாக ஆக்கியிருக்கும். சோப்போ சீயக்காயோ போட்டு தேய்க்காமல் பொங்கல் வாங்கிய நெய்க் கையில் கொழகொழப்பு நிச்சயம் போகாது. ராமர் கோயிலுக்கு நேரே நதி போன்ற அந்தப் பெரிய குளம். குளத்திலிருந்து அலைஅலையாய் மேல் நோக்கி எழும் மார்கழி மாத வெண்புகை குளிருக்கு குளம் சிகரெட் பிடிப்பது போல இருக்கும். வயிற்றில் மணி அடித்தவுடன்  முப்பதாவது பாட்டை கொஞ்சம் ஜரூராக பாடி முடிப்போம். பொங்கல் பண்ணிய அழகோடு அவரேதான் தன் கையால் விநியோகம் பண்ணுவார். அலாதியான பிரசாத விநியோக முறை ஒன்று அவருக்கு தெரியும். எவருக்குமே கைவராத கலை அது. ஒரு பிடி பொங்கல் கையில் எடுத்து போடும்போது ஒரு மூன்று விரல்களால் முக்கால் வாசி கையிலேயே மடக்கி பிடித்துவிட்டு கால்வாசி நம் கையில் வந்து சேரும் டெக்னிக் மைதிலி அப்பாவிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீராம் சொன்னது அவர் காதில் விழுந்த நாள் முதல் பொங்கல் எங்கள் கைக்கு வரும் சதவிகிதம் ஐம்பதிற்கு ஏறியது. ஒன்றும் பெரிய முன்னேற்றமில்லை. தெருவில் யார் மண்டகப்படிதாராரோ அவர் வீட்டு வாசல் படியேறி பொங்கல் வாங்கித் தின்பதற்கு எங்களுக்கும் ஒன்றும் வெட்கமில்லை. பெருமாள் பிரசாதம்.


raja gopalan
கோதண்ட ராமர் சன்னதி முன்பு..
மார்கழியில் வரும் இன்னொரு வைபவம் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் கோயிலின் சொர்க்கவாசல் திறப்பு. நாள் நட்சத்திரம் பார்த்து நாலரை ஐந்து என்று அதிகாலையில் ஒரு நேரம் குறிப்பார்கள். மூன்று மணிக்கு பிரம்ம முகூர்த்த வேளையில் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து ஹரித்ராநதியில் குளிரக்குளிர குளித்துவிட்டு வேகவேகமாக பெரியகோயிலுக்கு ஓடுவோம். ஸ்வாமி புறப்பாடு ஆகி சொர்க்கவாசல் மண்டபத்திற்கு எழுந்தருளப் போகும்போது வேதபாராயணம் படிக்கும் வித்துக்களோடு நாங்களும் அவர்கள் பின்னாலேயே செல்வோம். "கோபாலா..கோபாலா" என்ற கோஷம் விண்ணைப் பிளக்க கூட்டம் அலைமோதும். ஸ்வாமியுடன் கூடவே உள்ளே செல்ல முண்டியடித்துக்கொண்டு எல்லோரும் எத்தனிப்பார்கள். சொர்க்க வாசல் கதவு திறந்தவுடன் சொர்க்கம் உள்ளேயிருந்து செங்கமலம் பிளிறி ராஜகோபாலனை வரவேற்கும். அன்று முழுவதும் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவித்யா ராஜாகோபாலன் அங்கு ஸேவை சாதிப்பார். ஸேவை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஆண்டாள் என்று பல வேஷம் போட்டு மக்களின் கருணைத் தொகைக்கு நிறைய பேர் கால் கடுக்கக் காத்திருப்பார்கள். கோபாலனின் கருணையும் அருளையும் பெற்ற நாங்கள் அவர்களுக்கு கொஞ்சம் ஈந்து வீடுத் திரும்புவோம்.

பின் குறிப்பு: தலைக்கு ஸ்கார்ஃப் கட்டிக் கொண்டு முழு வாசலுக்கும் பசுஞ் சாணம் கரைத்து தண்ணீர் தெளித்து கலர்க் கோலம் போட்டு பூசணிப்பூ பரங்கிப்பூ வைப்பது, கலர்க் கோலம் போட தெரு முழுவதிற்கும் ஒத்தாசை செய்வது போன்ற  இன்னும் நிறைய நிகழ்வுகள் மன்னையில் மார்கழியாக இங்கு மலர இருந்தது. மீதமிருக்கும் விஷயங்களை திண்ணைக் கச்சேரியில் அல்லது வேறு ஒரு பதிவில் தனியாக எழுதுகிறேன். நன்றி.

படக் குறிப்புகள்: community.webshots.com என்ற சைட்டிலிருந்து indiaram என்ற யூசர் எடுத்த ராஜகோபாலன் படம் அது.அந்தப் படம் சொர்க்கவாசல் திறப்பு அன்று எடுத்தது அல்ல. அந்த மார்கழிப் பனியில் நனைந்த வயல் எடுத்த இடம் இது http://www.google.com/profiles/nandakhumar

-

46 comments:

எல் கே said...

இப்பலாம் முதல் நாள் இரவே கோலம் போட்டு விடுகின்றனர்.

இளங்கோ said...

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே.. :)

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான பதிவு. இப்போது எங்காவது பஜனை கோஷ்டி வருகிறதா என்ன?

வெங்கட் நாகராஜ் said...

மார்கழியின் பனிவிழும் காலைப்பொழுதில், பொங்கலுக்காக நடுங்கியபடி சுற்றிய நினைவினை அப்படியே கண்முன்னால் நிறுத்தி இருக்கீங்க! மிக்க நன்றி. இப்பவே நெய் சொட்டச் சொட்ட முந்திரி நடுவில் இருக்க பொங்கல் சாப்பிடணும் போல இருக்கு.

சிவகுமாரன் said...

சின்ன வயசுல பாட்டியோட ஊரில் காலாங்காத்தால ராமர் கோயிலுக்கு சுண்டலுக்காக " ரகுபதி ராகவ ராஜாராம் பசீத பாவன சீதாராம்" பாடிக்கிட்டு தெருத்தெருவா போயிருக்கோம். ' காட்டுத் துளசியை வெட்டுவாராம்- ராமர் கருணை கருணையாய் நறுக்குவாராம் " என்று ஒரு வரி வரும். வேறொன்றும் நினைவில்லை. உங்களுக்கு தெரியுமா அந்தப் பாட்டு. திருப்பாவையோ , ஆழ்வார் திருமொழியோ அல்ல.

Vidhya Chandrasekaran said...

நேர்லயே பார்த்த மாதிரி ஒரு ஃபீல். பகிர்விற்கு நன்றி.

Aathira mullai said...

//எவ்வளவு எக்கியும் பாசுரம் கண்ணுக்கு தெரியாத பிரகஸ்பதிகள் "எம்பாவாய்..." மட்டும் சொல்லி தங்களது வருகையை உறுதிப் படுத்துவார்கள்.//

மார்கழி மாதம் சூடு பிடித்துள்ளது. எல்லா இடங்களிலும் என்று நினைக்கிறேன்..பெண்கள் ஒருபுறம் கோலம் போட ஆரம்பித்து விட்டார்கள். ஆண்கள் எல்லாரும் பஜனை,பொங்கல் என்று பாட ஆரம்பித்து விட்டார்கள்..

மார்கழி மாதத்து மன்னை இராஜகோபாலனின் வண்ணக் கோலமும் தங்கள் தங்கள் கைவண்ணத்தில் மிளிரும் தங்களின் எண்ணக்கோலமும் தின்னத் தெவிட்டாத தைப் பொங்கல்.

Madhavan Srinivasagopalan said...

அட.. அட.... சூப்பர் நினைவுகள்..
'சொர்க்க வாசல' யாருதான் வேனாம்பாங்க..?

பெருமாள் போட்டோ... சொல்ல வார்த்தையே இல்லை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ராஜகோபாலன் தரிசனம் அருமை. மன்னார்குடி டேஸ் வந்து நாளாகுதேன்னு நெனச்சேன், டைமிங்கா மார்கழிப் பதிவு போட்டு கலக்கிட்டீங்க. சூப்பர்.

பொன் மாலை பொழுது said...

சின்னவயது, அரையாண்டு தேர்வுகள், மார்கழிமாதம், கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை ஒலிக்கும் பனி படர்ந்த காலை வேலைகள், தலையில் துண்டு ஒன்றைகுளிருக்கு கட்டிக்கொண்டு ,திண்ணை மாடத்தில் நல்ல விளக்கு ஏற்றிவைத்து, மின் விளக்கின் ஒளியில் கோலம் இடும் அம்மா. கொல்லைபுறம் புதிதாய் ஈன்ற கன்று குட்டியுடன் நம்மை வாஞ்சையுடன் பார்க்கும் பசு. காலையில் காப்பி, வெடவெடக்கும் குளிரில் கிணற்று நீரில் குளியல், நெய் மணக்கும் பருப்பு மிளகு பொங்கல்.............................
This is mere a recollection of my days R V S. very nice photographs .Thanks for sharing .

RVS said...

@LK
கரெக்டுதான். காலைப் பனி ஒத்துக்க மாட்டேங்குது... ;-)

RVS said...

@அரசன்
நன்றிங்க அரசன். முதல் வருகைக்கு ஒரு நல்வரவு. ;-)

RVS said...

@இளங்கோ
என்னப்பா ஃபுல்லா படிக்கலையா? ஆணி அதிகமோ? டெம்ப்ளேட் கமென்ட் போடறீங்க.. ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
எங்களூரில் இன்னமும் நடக்கிறது. ஆனால் அவ்வளவு சுவாரஸ்யம் மற்றும் சுகம் இல்லை என்று கேள்வி. ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
எங்க வீட்டில் கூட பொங்கல் ஜோராக இருக்கிறது. சென்னை வந்தால் நிச்சயம் தருகிறேன். வாருங்கள். ;-)

RVS said...

@சிவகுமாரன்
எனக்கு தெரியவில்லை. கொஞ்சம் நேரம் எடுத்து தெரிந்து வந்து பதிகிறேன். கருத்துக்கு நன்றி.
ரகுபதி ராகவ ராஜாராம் பாடி காந்தி மகன் நினைவோட கோவிலுக்கு போன உங்களை வாழ்த்துகிறேன். ;-)

RVS said...

@வித்யா
நன்றிங்க.. நான் நேர்ல அனுபவிச்சதை அப்படியே பதிந்தேன். இப்படி ஒரு உணர்வை இப் பதிவு ஏற்படுத்தியிருப்பின் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.. மிக்க நன்றி. ;-)

RVS said...

@ஆதிரா
நன்றிங்க.. ராஜகோபாலனை கண்ணார கண்டு ரசிப்பதற்கு இந்த ஆயுள் போதாது. கொள்ளை அழகு. கருத்துக்கு நன்றி. ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
நன்றி மாதவா.. நம் கோபாலன் அழகு சொல்லவா வேண்டும்.. .;-)

மோகன்ஜி said...

மார்கழி அனுபவத்தை நுணுக்கமாய் நினைவு கூர்ந்து பழைய நினைவுகளை கிளறிவிட்டு விட்டீர்கள்.இனிமை! இனிமை!!

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
நன்றிங்க.. இது மார்கழி சிறப்பு பதிவுதான். கருத்துக்கு நன்றிங்க.. ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
அட்டகாசமான நினைவலைகள். நீங்களும் ஒரு பதிவாகவே போடலாமே மாணிக்கம். மிக நன்றாக உள்ளது. பசு, காபி என்று கலக்கியிருக்கிரீர்கள் பின்னூட்டத்திலேயே. ;-)

Unknown said...

கொசுவத்தி. சீசனோ? :-) வெளி மாநிலத்தில் வளர்ந்து, தமிழகத்தை டிசம்பரில் காணாத என் கணவர், ஒரு நாள் காலை 5 மணி டிசம்பர் "குளிரில்" எங்க ஊர் கோலப் போர் பார்த்து அசந்து விட்டார்.

எங்கூடப் படிச்ச மைதிலி அஞ்சாப்புலயோ என்னவோ, மன்னார்குடிக்கு திரும்பிப் போயிட்டா. என்னை விட வயசாயிருக்குமோ என்னவோ அவளுக்கு? :-)

அதே மைதிலியான்னு தெரியலை, என் அப்பா வெளியில் வாங்கிச் சாப்பிடக்கூடாதுன்னு கண்டிப்பு, மைதிலி தான் வீட்ல இருந்து காசு எடுத்துட்டு வருவா. அப்பவே!

கொசுவத்திக்கு நன்றி!

தக்குடு said...

ரொம்ப அழகா இருக்கு பதிவு! தனுர்மாச பஜனைல முதல் நாள் போய் பாடிட்டு வந்த மாதிரி இருக்கு. போட்டோ எல்லாம் தெள்ளுமணி! (எச்சூஸ்மி, அந்த பூசணி/பரங்கி பூ ல ஒரு மேட்டர் இருக்கு, என்னனு சொல்லுங்கோ பாப்போம்!)

பத்மநாபன் said...

மார்கழி என்றவுடன் ஆண்டாள் திருப்பாவை தான் நினைவுக்கு வரும்..ஆண்டாள் தமிழ் அடுத்த ஆச்சர்யம் ..

ரெம்பாவாய் வருகை பதிவேட்டுக்கு என்பது சரிதான்...திருப்பாவைக்குள் சடாரேன நுழைய முடியாது...

மார்கழியில் ஆரம்பித்து சங்கத்தமிழ் வரை நிற்காமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும்...

எல் கே said...

//காலைப் பனி ஒத்துக்க மாட்டேங்குது.//

இல்லை தூக்கத்தை விட மனசு இல்லையா ?

RVS said...

@கெக்கே பிக்குணி
சென்னையில் எப்பவுமே தேவைப்படும் கொசுவத்தியோட இதையும் சேர்த்து வச்சுக்கிட்டேன். நாம தான் எப்பவுமே நிகழ்காலத்தில இருப்பதில்லையே.. ;-) ஆமாம் நீங்க மன்னார்குடியா? உங்களுக்கு மைதிலி வயசாறதா? ;-) நன்றிக்கோர் நன்றி ;-)

Anonymous said...

சிறு வயது மார்கழி நாட்களை வெண்பொங்கல் நெய் கிளருறது மாதிரி கிளறி விட்டுட்டீங்க அண்ணே ;)

Anonymous said...

அருமை. பழைய நினைவுகள் மீண்டன.

ஆனாலும் இந்த மாதத்தில் காலையில் எழுந்து 'ஆஷஸ்' மேட்ச் பார்ப்பது மனதுக்கு இதமா இருக்கு. அதுவும், ஆஸ்திரேலியா அடி வாங்குவது ரொம்ப இஷ்டம் நமக்கு.

ரகு.

இளங்கோ said...

//என்னப்பா ஃபுல்லா படிக்கலையா? ஆணி அதிகமோ? டெம்ப்ளேட் கமென்ட் போடறீங்க.. ;-)//

ஃபுல்லாத்தாங்க படிச்சேன். ஆனா, கொஞ்சம் ஆணிகள் அதிகம் !

அதனால பொங்கல், சுண்டல், அபிஷேகம் னு ஞாபகத்துக்கு வந்துச்ங்க. அதனால அந்த சின்ன கமெண்ட்.
அடுத்த தபா, பாருங்க :)

raji said...

மார்கழிப்பதிவும் மன்னார்குடி ராஜகோபாலனும் அருமை.
கூடவே கொஞ்சம் பஜனை போட்டோவும் கோலம் போட்டோவும் கூட
போட்டிருக்கலாமே

கோமதி அரசு said...

அருமையான பதிவு.

சிறு வயதில் சிவகாசியிலிருந்த போதுதான் இப்படி பஜனையில் கலந்துக் கொள்ள முடிந்தது.மற்ற ஊர்களில் அதிகாலை அம்மாவுடன் சிவன் கோவில்,பெருமாள் கோவில் தரிசனம் மட்டும்.(அப்பாவுக்கு ஊர் ஊராய் மாற்றல் இருக்கும்)

இன்று வெண்பொங்கல்,சர்க்கரை பொங்கல் பிரசாதம் வீட்டில்.

கோவில் பிரசாதத்திற்கு ஈடாகுமா.

காலையில் கோலம் போட்டு,பூசணிபூ வைத்து,விளக்குவைத்து,திருப்பாவை,திருவெம்பாவை,பாடி,இறைவனை துதிப்பது!மாதங்களில் மார்கழி சிறந்ததுதான்.

மன்னையில் மார்கழி மீதியைப் படிக்க ஆவல்.

ADHI VENKAT said...

மார்கழி ஒன்றாம் தேதியன்று இந்த பதிவை படித்ததில் சந்தோஷம். அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கலர்கோலம் போட்டிப் போட்டுக் கொண்டு போடுவது தனிசுகம். இப்பொழுது ஃப்ளாட்களில் இருக்கும் இடத்தில் சிறிதாகவாவது (தில்லிக் குளிரில்) போடுவதில் எனக்கு திருப்தியே. சிறு வயது ஞாபகங்களுக்கு அழைத்து சென்று விட்டீர்கள். பகிர்வுக்கு நன்றி.

RVS said...

@மோகன்ஜி
பாராட்டுக்கு நன்றி அண்ணா. காலைப் பணியில் நாங்கள் இருந்த ஹரித்ராநதியே தேவலோகம் போல் காட்சியளிக்கும். ஸ்ட்ராங்கா ஒரு பில்டர் காபியுடன் வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து கொண்டு பஜனை "ஜிங்.ஜிங்.." காதில் விழும் போது... ஆஹா.. ஆனந்தம்.. பரமானந்தம்.. ;-)

RVS said...

@தக்குடுபாண்டி
பனிக்காலத்தில் பூசணிப்பூவிலருந்து வரும் வாசனை கிருமி நாசினி என்று கேள்வி. தக்குடுவின் விளக்கத்திற்கு வைட்டிங்.. எங்க ஊர் பஜனையில் வந்து பாடினத்துக்கு ஒரு நன்னி ஹை... ;-)

RVS said...

@பத்மநாபன்
//மார்கழியில் ஆரம்பித்து சங்கத்தமிழ் வரை நிற்காமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும்...//
இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை.. உங்களுக்கு குசும்பு ஜாஸ்த்தி.. நானே இப்பத்தான் தட்டுத்தடுமாறி எழுதிகிட்டு இருக்கேன்.. சங்கத்தமிழா.. எனக்கு சொந்தத்தமிழ் ஒண்ணுதான் தெரியும்... ஏதோ நெடுநல்வாடை படிச்சேன்.. என்மேல வச்ச மதிப்புக்கு கோடி நன்றி.. ;-)

RVS said...

@LK
விடிஞ்ச பின்னால கூட ஒரு கோழித் தூக்கம் போடறத்துக்கு யாருக்குதான் மனசு வராது எல்.கே. ;-)

RVS said...

@Balaji saravana
பிரதர்... பொங்கல் நினைவுகள்... நல்லா இருக்குன்னு வாழ்த்தியமைக்கு நன்றி. என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கம் உங்க காத்து அடிக்கலை.. ;-)

RVS said...

@ரகு.
பாராட்டுக்கு நன்றி ரகு சார்!
ஆஷஸை விடுங்க.. நம்ம ஆளுங்க பயங்கரமா தென் ஆப்பிரிக்கா கூட அடிபடுவாங்க போலருக்கு.. ;-)

RVS said...

@இளங்கோ
ரைட்டு .. ஓ.கே. புரிஞ்சுது.. நன்றி.. நன்றி.. ;-)

RVS said...

@raji
வாங்க.. முதல் தடவையா இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கறீங்க.. என்ன நல்ல சகுனம் பார்த்தீங்களா... ராஜகோபாலன் தரிசனம்..திருப்பாவை.. பஜனைன்னு நம்ம பக்கம் ஒரே பக்தி மயம்.. எல்லா ரசமும் நம்ம சைட்ல கிடைக்கும்.. ரசத்தை பத்தி கூட ஒரு பதிவு இருக்கு.. படிச்சு பாருங்க.. பஜனை போட்டோ தேடினதில் சரிவர எதுவும் கிடைக்கவில்லை.. கோலம் நிறைய இருந்தது.. எனக்கு பிடித்த கோலம் இல்லை.. கருத்துக்கு நன்றி. ;-)

RVS said...

@கோமதி அரசு
நன்றிங்க...
மன்னையில் கோயில்களுக்கு போன விதவிதமான அனுபவங்கள் நிறைய இருக்கு. ஒன்னு ஒண்ணா அவுத்து விடறேன்... இன்னொரு பதிவில் முடிந்தால் விட்டவைகளை தொடருகிறேன். பாராட்டுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.. ;-)

RVS said...

@கோவை2தில்லி
உங்களையும் கொசுவத்தி சுத்த உட்டேனா... அப்டி போடுங்க... இந்தக் காலப் பிள்ளைகளுக்கு இது போன்ற அனுபவங்கள் நிச்சயம் கிடைக்கா... ஒன்றும் செய்வதற்கில்லை.. என் பெண்ணை எழுப்பினால் ... "அப்பா... நீ கோயிலுக்கு போயேன்.. என்னை ஏன் டிஸ்டர்ப் பண்றே.. " என்கிறாள்... ஹும்... ;-)

அப்பாதுரை said...

பஜனையும் பொங்கலும் பல காரைக்கால் குரோம்பேட்டை பம்மல் நினைவுகளைக் கிளறியது. பம்மல் சத்சங்கத்தில் வினியோக உரிமை எங்களுக்குத் தான் என்பதால், எங்கள் செட்டுக்கென்று தனியாக ஒரு பானையில் பொங்கல் எடுத்து வைத்துவிட்டு பிறகு தான் மற்றவருக்குக் கொடுப்போம்.

திருப்பாவை திருவெம்பாவை இரண்டுமே பிடிக்கும் - MLV குரலில்.
இந்த இறையிலக்கியங்களில் புதைந்திருக்கும் காமம் கொஞ்சம் படித்தாலும் அசர வைக்கிறது. இதையெல்லாம் எப்படி பொருள் புரிந்தும் பெண்கள் பாடுகிறார்கள் என்று அன்றைக்கு வியந்தேன்; ஆண்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்று இன்றைக்கு வியக்கிறேன். சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மனதை ஒருங்குபடுத்தும் பக்குவத்தை எப்படிப் பெறுகிறார்கள் என்று தொடர்ந்து வியக்கிறேன். அல்லது பெரும்பாலும் பொருள் புரியாமலே பாடுகிறார்களா?

அப்பாதுரை said...

கோலம் போடுவதில் இருந்த போட்டியும் நினைவுக்கு வருகிறது - பின்னூட்டங்களைப் படித்தவுடன். கால் வைக்க முடியாது - டேய் மிதிக்கதடா என்று சகோதரிகளும் தாய்மார்களும் காவல் காத்து நிற்பார்கள். அனுமார் போல் தாண்டிக் குதித்து கேட் வரை போவதற்குள் லாங் ஜம்ப் ரெகார்டுகள் பல, உள்ளூர்ப் பிள்ளைகளால் முறிக்கப்படும்.

tamil cinema said...

arumayana blog. good that i found this blog. romba nandri :)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails