Sunday, May 15, 2011

பொதிகை மலைச் சாரலிலே...


egmoreஏழு பெருசு, ரெண்டு சின்னஞ் சிறுசு, ஒரு பதின்மம், ஒரு மத்திம வயசு ஜோடி, இன்னொன்று கிருதாக்களில் வெள்ளி முளைத்த உயர் மத்திம ஜோடி என்று மஹிந்திரா வேன் திணறத் திணற அடைத்து எக்மோருக்கு வந்து சேர்ந்தபோதே இடுப்பு பாதி கழன்றுவிட்டது. நாங்கள் வாடகைக்கு அமர்த்திக்கொண்ட லொடலொட வேன், ஓனர் தன்னை ஷெட்டில் விடாததால் வசமாக மாட்டிக்கொண்ட எங்களிடம் வஞ்சம் தீர்த்துக் கொண்டது. மியூசிக் இல்லாமல், பெரியோர் சிறியோர் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இடுப்பொடிய ஒரு மணிநேரம் குலுக்கல் நடனம் ஆடினோம். அவ்வப்போது சரக்.. சரக்.. என்று வேனின் பிருஷ்ட பாகத்திலிருந்து கிளம்பிய அந்தச் சத்தம் அடிஷனல் Percussion.

லோக்கல் ட்ரிப் வேன் என்று முத்திரை குத்தி இந்தியன் தாத்தாவுக்கு தெரியாமல் ஆர்.டி.ஓ ஆபிசுக்கு பின் பக்க மூ.சந்தில் எஃப்.சிக்கு விட்டு ஃபிட்னஸ் சான்றிதழ் வாங்கி வைத்திருக்கிறார்கள். எந்த கவுண்டமணி "செல்லும் பேப்பர்" வைத்து எந்த பன்னிசெல்வத்திடம் கையெழுத்து வாங்கிக் கொடுத்தார் என்று தெரியவில்லை. இருட்டில் குருட்டுத்தனமாக தேடுவது போல இடது கையால் துழாவித் துழாவியும், செல்லமாக ரெண்டு தடவை தலையில் குட்டியும் கியர் போட்டபோது ஒரு கன்னுக்குட்டியை தாய்ப்பசுவிடம் ஓட்டிப்போகும் லாவகம் அந்த ஓட்டுனரிடம் தெரிந்தது. "ஸ்டேஷன் போய் சேருங்களா?" என்று விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு உடைந்த துருப்பிடித்த கதவு கையில் கீறாமல் சர்வ ஜாக்கிரதையாக ஏறும்போது சந்தேகமாக கேட்டேன். பதிலுக்கு மந்தகாசப் புன்னகை பூத்தார் டிரைவர் அண்ணன். தென்காசிக்கு நான்கு நாள் பயணம். (தென்)காசிக்கு சந்நியாசியாகப் பயணப்படமால் பரிசுத்த சம்சாரியாக மூட்டை முடிச்சு காவடியாகத் தூக்கி சென்றுவந்தேன்.

வேன் சத்தம் தவிர்த்து பத்து நிமிட வாய்ப்பேச்சு மௌனத்தைக் கலைத்து "இது லாங்கே போவுது தெரியுங்களா..." என்று எஞ்சின் பெட்டியைத் தட்டிச் சொன்னார். "திருவண்ணாமலைக்கா?" என்று ஒரு அனுமானமாகக் கேட்டேன். சைதாப்பேட்டை கலைஞர் வளைவு ஓரத்தில் நின்றிருந்த வெள்ளைச் சீருடை டிராஃபிக் ஐயாவை ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டே "ஆமாம்.." என்றார். "வண்டியில விளக்கு இல்லையா?" என்றேன். இது பகல்ல பசுமாடு கேசு போலருக்கு என்று நினைத்து "ஏன்" என்று கேள்வி கேட்டார். "இல்ல... பௌர்ணமிக்கு திருவண்ணாமலை போகும் போது பாதிப்பு ஒன்னும் இல்லை.." என்றேன்.  அவர் சிரிக்காமல் பெடல் போட் போல வண்டியை ரெண்டு தடவை மிதித்து "உர்..உர்.." என்று உறும வைத்தார். நான் அடங்கிப்போய் லாரி துடைக்கும் கிளி போல் பதவிசாக அமர்ந்து ஜன்னல் வழியாக ஆபிஸ் விட்டு வீடு திரும்பும் எனதருமை கொத்தடிமை கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

ஒரு வயதான சேனையை அழைத்துக்கொண்டு ஷேத்ராடம் போவது எவ்வளவு கஷ்டமான காரியம் என்று எனக்கு அந்த மண்ணுக்கும் விண்ணுக்குமாய் நின்ற எக்மோர் ஸ்டேஷன் மாடிப்படியை பார்த்ததும் தான் புரிந்தது. எட்டாவது பிளாட்பாரத்தில் பொதிகை. தோளில் ஒரு பையை தூக்கிக்கொண்டு நின்ற வயோதிகக் கூட்டத்தில் ரெண்டு பேர் இந்த இமாலயப் படியை பார்த்தவுடன் மலைத்துப் போய் பெருமூச்சு விட்டது நீராவி ரயில் தூங்கி எழுந்து ஃப்ரெஷ்ஷாக கூவியது போல இருந்தது. எஸ்கலேட்டரில் போகலாம் என்று வேறு இரண்டு பேரைக் கூப்பிட்டத்தில் படிக்கிடையில் கால் மாட்டிக்கொள்ளுமோ என்ற மரண பீதியில் "ஸாமியே.....ய் சரணம் ஐயப்பா" மனதிற்குள் சொல்லி படியேற ஆரம்பித்தார்கள். அவரே தூக்கியும் ஏற்றியும் விட்டார்.


பொதிகையின் கதவை திறந்தவுடன் டிராயர் போட்ட நமீதாவை தரிசிக்க முண்டியடிக்கும் பக்தர் கூட்டம் போல நாயடி பேயடி அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். இத்தனைக்கும் அது ஒரு ரிஸர்வர்ட் கம்பார்ட்மென்ட். ஏறிய மக்கள் வெள்ளத்தின் ஆவேசம் அடங்கிய பின்னர் பொறுமையாக அனைவரையும் கோச் ஏற்றினோம். உட்கார்ந்தவுடன் இந்தியத் திருநாட்டின் தெரு மூலைகளில், தேர் முட்டிகளில், ட்ரான்ஸ்ஃபார்மர் அடியில், தொலைதொடர்பு பெட்டிகள் பக்கத்தில், சுரங்க நடைபாதை ஓரத்தில், குடித்தனம் இல்லாத வீட்டு வாசலில் என்று எங்கெங்கும் நீக்கமற நிறைந்து வியாபித்து இருக்கும் 'அந்த' துர்கந்தம் வீசியது. ஒவ்வொருமுறையும் காற்று புகுந்து வெஸ்டர்ன் ஸ்டைல் உள்ளேயிருந்து நாற்றத்தை இழுத்துவந்தது. மெல்லத் திறந்திருந்த கதவை இழுத்து சார்த்தியவுடன் பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு குறைந்தது. ஜல்ப்பு பிடித்துக்கொண்ட மூக்குகள் வாழ்க! சளி நல்லது.

நெட்டில் புக் செய்ததால் கோச்சுக்கு நாலு பேராய் எங்களைப் பிச்சுப் போட்டிருந்தார்கள். அப்பரும் லோயரும் சுந்தரத்தையும் சம்பந்தத்தையும் நெருங்கி அண்டவிடாமல் அட்டகாசம் செய்திருந்தது. ஒவ்வொருவரிடமும் பேசி கெஞ்சி கூத்தாடி எங்கள் கூட்டணியை தக்கவைத்துக் கொண்டோம். தாம்பரம் தாண்டியதும் இட்லி, தயிர்சாதம் கொடுத்து எல்லோரையும் தூங்கவைத்ததும் ரயில் வேகம் பிடித்தது. நிறைய பேர் கைலி மாற்றிக்கொண்டும், காற்றுத் தலையணையை ஊதி அடைத்துக்கொண்டும் மற்றுமொரு சுகமான நித்திரைக்கு தயாரானார்கள். SUBH NITHRA! சட்டையை கழற்றி விட்டு இடுப்பில் கைலியும் மேலுக்கு முண்டா பனியனுடன் நின்ற அந்த பிரஷ் மீசை ஆம்பிளை தூங்குவதர்க்கே ரயில் ஏறியது போல இருந்தார். ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்ட சந்தோஷத்துடன் கீழே இருந்த யாருக்கோ "குட் நைட்" சொல்லி கையாட்டிக்கொண்டே அயல் நாட்டு தூதுவர் போல அப்பர் பர்த் ஏறினார்.

tenkasi windmill

நெடுநாட்களுக்கு பிறகு ஜன்னலோரத்தில் உட்கார்ந்து முட்புதர்களையும், ஒற்றையடிப் பாதைகள் முடியும் மரங்களையும், கிராமந்திர படியில்லாக் குட்டைகளையும், குறுகிய ரோடுகளில் இருட்டைக் கிழித்து டூ வீலரில் செல்லும் கிராமத்து ஜோடிகளையும் பார்த்தேன். நடு நடுவே சிற்றூர்களின் மச்சு வீடுகளும், 1984 என்று நெற்றியில் ஒட்டிய மாடி வீடுகளும், வைக்கோல் வேய்ந்த குடிசைகளும் வந்து வந்து போயின. சிறு சிறு ஸ்டேஷன்களில் அழுது வடியும் ஒற்றை விளக்கோடு பச்சைக் கொடியசைக்கும் காக்கி யூனிஃபார்ம் ஊழியரும், வாலையாட்டி நிற்கும் ஒரு நாயும், நிமிர்ந்து திடகாத்திரமாய் வளர்ந்த புன்னை மரமும், எப்போதோ வந்து நிற்கப்போகும் பாசஞ்சர் ரயிலுக்காக பழக்கூடையுடன் சிமென்ட் பெஞ்சில் காத்திருக்கும் கிழவியும் வேக வேகமாக பின்பக்கமாக பறந்தார்கள். இந்த காட்சிகள் ஓராயிரக்கணக்கான கதைகளின் வித்துக்களின் பிறப்பிடம். "தடக்..தடக்"கும் நடுநடுவே ரயில் எழுப்பும் "கூ..கூ.."வும் கற்பனையில் எழும் காட்சிகளை தடம் மாற்றிக் கொண்டுபோகும் காரணிகள்.

"எலேய்! அங்கிட்டு நிக்காத!" என்ற முரட்டுக் குரல் என் காதைக் குடைந்து எழுப்பிய போது ராஜபாளையத்தில் அந்த தாராளமாக வளர்ந்த பாட்டி சிரமத்துடன் இறங்கிக் கொண்டிருந்தார்கள். எலேய் கூப்பிட்டவர் ஏறிக் கொண்டிருந்தார். கண்ணுக்கெட்டும் தூரத்தில் முண்டு முண்டாக குறிஞ்சி நிலங்கள் தெரிந்தது. தண்டவாளங்கள் பக்கத்தில் காலைக் கடன் கழிப்பது நம் நாட்டின் தேசியப் பழக்கம் போலிருக்கிறது. ரயிலுக்கு மரியாதை கொடுத்து அசிங்கத்து மேலேயே எழுந்து சிங்கம் போல மீசை முறுக்கி நின்றார்கள். அவர்கள் வீட்டு விருந்தாளியை பார்ப்பது போல நம்மை பார்த்தார்கள். தென்காசி நெருங்குவதை ராட்சத வெள்ளை இறக்கைகளுடன் வயற்காடுகளுக்கு மத்தியில் நின்றிருந்த காற்றாலைகள் தெரிவித்தன.

agasthiyar


பொதிகை மலைக் காற்று முகத்தை வருட கைலி விளம்பரத்துடன் வரவேற்றது தென்காசி. நீலக் கலர் கட்டம் போட்ட கைலியும், சதுரம் வரைந்த சட்டையும் அணிந்த தென்னகத்து இளைஞன் அந்த விளம்பர தட்டியில் கைகூப்பி சிரித்தான். ஒரு பூணூல், ஒரு சதாபிஷேகம் என்ற இரு சாக்குகள் வைத்துக்கொண்டு நெல்லை மாவட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். இரண்டுமே மேலகரத்தில் நடைபெறுபவை. மலைராஜனின் நேரடிப் பார்வையில் இருப்பது மேலகர அக்ரஹாரம். அதனருகே பீட்டர் அல்போன்ஸ் திறந்து வைத்த சமுதாய நலக்கூடத்தில் தான் இரண்டு விசேஷங்களும்.

எங்களைப் போன்ற ஏழைபாழைகள் தங்குவதற்கு குபேரன் லாட்ஜில் ஏற்பாடாகியிருந்தது. கோமதி நெல்லை சிரிப்பில் எங்களை வரவேற்றார். "கோமதி?" என்ற என் கேள்வியை ஷன நேரத்தில் பிடித்து "கோமதி நாயகம்" என்று சொல்லி சிரித்தார். கேரள எல்லையாதலால் இரண்டு மாத தாடியுடன் கைலி அணிந்து மல்லுத்தமிழனாக குட்டையாக இருந்த கோமதி நான்கு அறைகளையும் விசாலமாக திறந்து விட்டார். மேலகரத்தில் பார்க் ஷெரடானை எதிர்பார்க்காமல் குபேரனில் முத்து, பவளம், வைரம் என்று பெயிரடப்பட்ட பெயரளவில் சொகுசு உள்ள அறைகளில் பெட்டிபடுக்கைகளை மூலையில் கோபுரமாக அடுக்கினோம். கலைஞரின் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி அறைக்கு ஒன்றாக அந்த மூலைகளை அலங்கரித்தது.

திரும்பினால் முட்டி இடிக்கும் குளியலறையில் களைப்பு தீர குளித்தோம். அடுத்த அரை மணி நேரத்தில் செண்பகாதேவி அருவி செல்ல ஆயத்தமானோம். "இப்ப சீசனே இல்ல... தண்ணியே இல்ல... தனியாளாப் போவாதீங்க.. களுத்துல கைல இருக்கறதை பிடிங்கிகிடுவானுங்க..." போன்ற வசனங்கள் திருநெல்வேலி தமிழில் சரளமாக அருவியாய் வந்து விழுந்தது. மனதை திடப்படுத்திக்கொண்டு அடைந்தால் செண்பகாதேவி இல்லையேல் மரணதேவி என்று கிளம்பினோம். கல்லால் ஆன ஒரு மருந்துக் குடுவையில் அகத்தியர் பச்சிலை அரைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சிலைவாயிலில் கொண்டு வந்து தள்ளினார் ஆட்டோக்கார். சென்னை, மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் என்று எங்கெங்கு காணினும் அதே ஆட்டோ. அதே ஓட்டம். அதே கட். அதே நெளிவு சுளிவு. அதே ஹாரன். அதே டர்ர்ர்ர்ர்.......

shenba1

வழிநெடுக பருத்தும் சிறுத்தும் நின்றிருந்த காட்டு மரங்கள் பாஸ்கரனின் சுட்டெரிக்கும் கிரணங்களை உள்ளே விடாதபடி கிளைபரப்பி இலை விரித்து போராடி எங்களை தடுத்தாட்கொண்டது. பச்சை மண்ணின் மனமும், மரத்தின் பச்சை வாசனையும் என் உள்ளுக்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த அந்தப் பச்சை கிராமத்தானை கிள்ளி எழுப்பிவிட்டது. ஆலம் விழுதுகளுடன் ஊஞ்சலாடி கிளிக் கூட்டம் மெல்லிசை பாடியது. காற்றில் படபடக்கும் இலைகள் அதற்கு கைதட்டி பாராட்டியது. கொஞ்சமாக ஓடிய சிற்றருவியின் தண்ணீர் பாறைகளை குளிர்வித்து குளிப்பாட்டிக்கொண்டிருந்தன. இயற்கை படைப்புகள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக பேதம் பாராட்டாமல் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

shenba2
கொஞ்ச தூரம் ஏறியதும் எப்போது நமக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி அயர்சியாகத் தெரியுமோ அந்த இடத்தில் ஒரு குற்றாலத்தான் மாங்காய்க் கடை போட்டிருந்தார். அண்ணாச்சி பழமும், மாங்காயும் "வாங்கித் தின்!" என்று திண்ணென்று இருந்தது. அறுத்து மிளகாய்ப்பொடி போட்டு இரண்டு கையாலும் கசக்கி கொடுத்தார்.  கையில் ஏறியக் காரப்பொடியை அழுக்குத் துணியில் துடைத்துக்கொண்டு கைலியை சரிசெய்து கொண்டார். கையை சரியாக துடைத்துக் கொண்டிருக்க வேண்டுமே என்று தெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.

அமிர்தமாக இருந்த அந்த மாங்காயைத் தின்று, உதட்டோரத்தில் மிளகாய்ப்பொடி காரம் "உஸ்..உஸ்..." என்று உஸக்க வைக்க செண்பாவை நோக்கி ஜரூராக நடைபோட்டோம். இரண்டு வானரங்கள் மரக்கிளைகளின் பின்னால் இருந்து எங்கள் கை மாங்காயை பறிக்கும் ஆவலில் எட்டிப் பார்த்தது. பாவம்! மசக்கையோ என்னமோ. கையை பிராண்டிவிடுமோ என்ற பீதியில் ஒரேடியாக வாய்க்குள் அடைத்துக்கொண்டோம். அவரைத் தாண்டியதும் ஆளரவம் இல்லாத பிரதேசம் போலத்தான் தோன்றியது. செண்பகாதேவி அருவிக்கு அருகில் செல்லச் செல்ல வானரம் ஆயிரம்!

"ஷ்...ஷ்..." என்று செல்லமாக அதட்டி எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தது செண்பகா. சூரிய ஒளியில் வெள்ளிக்கம்பிகளாய் மினுமினுத்தாள். இயற்கையின் ஷவரில் எண்ணி ஐந்து பேர் மட்டுமே குளித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு அரைமணி செண்பகாவோடு ஆட்டம் போட்டோம். அந்தக் கம்பி வேலியை கையில் பிடித்துக்கொண்டு தலை குனிந்து சரணாகதி அடைந்தபோது அந்த அருவித் தண்ணீர் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. ஏறிய களைப்பு இரண்டு நிமிடத்தில் தீர்ந்தது. முதுகில் விழுந்த அருவித் தண்ணீர் மசாஜ் கிளப் இளம்பெண் போல டம்டம்டம் என்று செல்லமாக குத்தியது. அதற்கு எங்கள் தேகத்தை அர்ப்பணம் செய்து பிரேதம் போல நின்றோம். ஒரு பரிபூரண புத்துணர்ச்சி கண்டது எங்கள் மேனி.

அன்று மாலை நாங்கள் சென்ற இடங்களை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

படக் குறிப்புகள்: எழும்பூர் படம் இவர் கொடுத்தார் http://www.flickr.com/photos/myriadity/ பெரிய குரூப்பாக சென்றதால் கிளிக்க முடியவில்லை. நமீதா படம் கிடைத்த இடம் http://a2zcinenews.blogspot.com/. போன பதிவில் B&W படம் போட்டதால் இந்த பதிவில் கலர்புல்லான நமீதா படம். இதைவிட டீசென்டான நமீதா படம் இணையத்தில் யாராவது எடுத்துப் போட்டால் அவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும். தென்காசி காற்றாலைகள் படம் இங்கே கிடைத்தது http://www.flickr.com/photos/52313113@N07/. ஏனைய படங்கள் என் கை வண்ணம்.

பின் குறிப்பு: அடுத்த பதிவில் முற்றுப்பெறும். பின்ன நாலு நாள் டூராச்சே!


-

46 comments:

ஸ்ரீராம். said...

வரிக்கு வரி சிக்சர் அடித்துள்ளீர்கள்! எந்த வரியை பாராட்டுவது என்று தெரியவில்லை. நமீதா படம் போட்டு ஏமாற்றி விட்டீர்கள். (டிராயர் போட்ட என்று கீழே எழுதி இருக்கிறீர்கள்!)

A.R.ராஜகோபாலன் said...

ஆரம்பமே அமர்க்களம்
அசத்து வெங்கட்

எல் கே said...

// அண்ணாச்சி பழமும், //

எந்த அண்ணாச்சி பழம் ???

வழக்கம் போல் அசத்தல் பதிவு

பத்மநாபன் said...

எழுத்தருவி என்று சொன்னது வீண்போகவில்லை.... 20 வருடம் முன் பார்த்த செண்பகாவை முன் நிறுத்தி நினைவுபடுத்தியதற்கு சிறப்பு நன்றி....

CS. Mohan Kumar said...

2 posts in one day . Asathunga.

சிவகுமாரன் said...

|\\\கதவை திறந்தவுடன் டிராயர் போட்ட நமீதாவை தரிசிக்க முண்டியடிக்கும் பக்தர் கூட்டம் போல /
\\\ஜல்ப்பு பிடித்துக்கொண்ட மூக்குகள் வாழ்க! சளி நல்லது./
\\\பாவம்! மசக்கையோ என்னமோ. //

---ரசித்து சிரித்தேன்.

பொன் மாலை பொழுது said...

தென்காசி டூர் போனால் கூட, அதை பற்றி எழுத்தும் போதும் கூட நமீதாவின் படத்தை சேர்க்கும் லாவகம். நிறைய சின்ன சின்ன செய்திகள். சுவாரஸ்யம், முகச்சுழிப்பு எல்லாம் இருக்கிறது.நானும் உடன் வந்தது போன்ற ஒரு நிறைவு.நல்லாயிருக்கு மைனரே !

பொன் மாலை பொழுது said...

///நமீதா படம் போட்டு ஏமாற்றி விட்டீர்கள். (டிராயர் போட்ட என்று கீழே எழுதி இருக்கிறீர்கள்!)//

-----------------------ஸ்ரீ ராம் சொன்னது.


சுத்தம், இனி அடுத்த பதிவில் ஸ்ரீராமின் ஆசையை மைனர் நிறைவேற்றிவிடுவார் என நம்பலாம்.

Chitra said...

பொதிகையின் கதவை திறந்தவுடன் டிராயர் போட்ட நமீதாவை தரிசிக்க முண்டியடிக்கும் பக்தர் கூட்டம் போல நாயடி பேயடி அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். இத்தனைக்கும் அது ஒரு ரிஸர்வர்ட் கம்பார்ட்மென்ட். ஏறிய மக்கள் வெள்ளத்தின் ஆவேசம் அடங்கிய பின்னர் பொறுமையாக அனைவரையும் கோச் ஏற்றினோம்.


.......... ரூம் போட்டு யோசிப்பீங்களோ? :-))))

தக்குடு said...

மைனர்வாள், நீங்க எத்தனை போட்டோ போட்டாலும் எல்லாருக்கும் நமிதா படம் தான் கண்ணுக்குள்ளையே நிக்கர்து!!...;)))

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சிலிக்கானில் இழந்த ஆர்விஎஸ்ஸை மீட்டது இந்தப் பதிவு.

ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு ஆச்சர்யம். ஒவ்வொரு ஆச்சர்யமும் ஒவ்வொரு ஆனந்தம்.பரவசம்.

சபாஷ் ஆர்விஎஸ்.

ADHI VENKAT said...

தென்காசி பயணம். குற்றால அருவி குளியல் அசத்தல். தொடருங்கள்.

குரு said...

Vanakkam RVS Sir, Nan Guru from Sharjah (Poorveegam Poompuhar).Nan ungal padhivin regular vasagan.Romba nanna irundhadhu.Keep it up.

குரு said...
This comment has been removed by the author.
குரு said...
This comment has been removed by the author.
அப்பாதுரை said...

நகைச்சுவை ரசிக்க முடிகிறது. ஜன்னலோர ரயில் பயணம் செய்ய ஏக்கம் வந்து விட்டது. குற்றாலம் லிஸ்டில் போட்டாச்சு.

அப்பாதுரை said...

முகத்திரையோடே பர்கா போட்ட நமீதா படம் இருக்குங்களா?

சாய்ராம் கோபாலன் said...

நண்பரே

அழகு. நல்ல நடை, ஸ்ரீராம் சொன்னது போல் எதை மேற்கோள் காட்டுவது என்று திணறாடித்துவிட்டீர்கள். நான் ஒரே சேர படிப்பது ரொம்ப கடினம் (அவ்வளவு தான் என்னுடைய அட்டென்ஷன் ஸ்பான் !!) இருந்தும் உங்கள் வரிகளை ஒன்று விடாமல் படித்தேன்.

உங்கள் வரிகள் என்னுடைய ஓய்வு வாழ்க்கை என்று திருநெல்வேலி பக்கம் போட்டு வைத்திருக்கும் பிளான் பற்றி அசைபோட வைத்துவிட்டது. நான் இலஞ்சியில் செட்டில் ஆகலாம் அல்லது மேற்காரா (கர்நாடக) என்று எண்ணியுள்ளேன். பார்ப்போம்

சில்பன்சாவாக நமீதா போட்டோ - அப்பாதுரையின் புதிய ஜொள் ப்ளாக் செய்தியால் வந்த வினையோ ?

நேற்று உங்களை நினைத்துக்கொண்டேன். இங்கே நியூ ஜெர்சி தமிழ் பள்ளி ஓராண்டு விழாவுக்கு இந்தியன் எக்ஸ்ப்ரேசக்கு எழுதும் பிரகாஷ் சுவாமி என்பவரை சந்தித்திதேன். அவர் என் மயிலை பி.எஸ் மேல்நில்லைப்பள்ளி சீனியர் (பத்து வருடங்களுக்கு மேல் !) வேறு ! விருமாண்டி படத்தில் கமலுடன் ஒரு வருடம் அசிஸ்டன்ட் கிரியேடிவ் டைரக்டர் வேறு.

Unknown said...

அட என்ன ஒரு வர்ணனை
ஒரு பாக்கியராஜ்
பாரதி ராஜா முதல் பிரமாண்டம் சங்கர் வரைக்கும் கலந்து கட்டி அடிக்கிறீங்க மைனர் வாள்.

வாழ்க வளமுடன்
ரசித்து வாசித்தேன்
அருமை...

Unknown said...

எதுக்கு நமீதா படம் ?????

இந்த போஸ்டுக்கு திஷ்டி புள்ளி போல

நீங்களுமா ??????

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ! உங்கள் பதிவுகளின் சிறந்த பத்தில் இது அவசியம் இடம்பிடிக்கும். ரசித்து எழுதியிருக்கிறீர்கள். இரண்டுமுறை படித்துவிட்டேன்.. இன்னமும் படிக்க உத்தேசம். அடுத்தமுறை என்னையும் கூட்டிக் கொண்டு போகவேணும் மச்சினரே!

வெங்கட் நாகராஜ் said...

பொதிகையின் சாரல்… நல்ல வர்ணனைகள். வரிக்கு வரி அசத்தி இருக்கீங்க மைனரே. அடுத்த அசத்தலுக்காய் காத்திருக்கிறேன்..

ரிஷபன் said...

அருமையான பதிவுக்கு நமீதா படம் போட்டு திசை திருப்பி விட்டீர்களோ?
வரிகளில் கதன குதூகலம்.. பயண குதூகலம்..

RVS said...

@ஸ்ரீராம்.
பாராட்டுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
பதிவுலக நாகரீகம் கருதி........ நமீதாவின் இந்த ஒப்பற்ற படத்தை வலையேற்றினேன்... ;-)))

RVS said...

@A.R.RAJAGOPALAN
நன்றி கோப்லி! ;-))

RVS said...

@எல் கே
அன்னாசியைத்தான் அழுத்திச் சொன்னேன் எல்.கே. ;-)))

RVS said...

@பத்மநாபன்
நன்றி பத்துஜி! அடுத்த பார்ட்டும் போட்டுட்டேன். ;-))

RVS said...

@மோகன் குமார்
நன்றி மோகன். கமென்ட் ஏதும் இல்லையா? ;-(

RVS said...

@சிவகுமாரன்
ரசித்து சிரித்ததை ரசித்தேன். ;-))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
பாராட்டுக்கு மிக்க நன்றி மாணிக்கம். ;-))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
ஊஹும்.... அதெல்லாம் எனக்கு தெரியாது... ;-))

RVS said...

@Chitra
ரூம்ல யோசித்தது... சென்னையில் வீட்டில் எழுதியது... நன்றி சித்ரா. ;-))

RVS said...

@தக்குடு
உங்க கண்ணுக்குள்ளையுமா? ;-))

RVS said...

@சுந்தர்ஜி
இழந்ததை மீட்டேனா... ரசித்ததற்கு நன்றி ஜி! ;-))

RVS said...

@கோவை2தில்லி s
நன்றி சகோ! வந்து ரொம்ப நாளாச்சு போலருக்கு.. தல சிஸ்டம் தரமாட்டேங்குதா? ;-))

RVS said...

@Guru
நன்றி குரு! அடிக்கடி இதுபோல கமெண்ட்டும் போடுங்க... தெம்பா இருக்கும். ;-))

RVS said...

@அப்பாதுரை
வாங்க தல.. ஒரு ரவுண்டு அடிக்கலாம். ;-))

RVS said...

@அப்பாதுரை
முகத்திரை இல்லாம வேணா இருக்கலாம்.. எனக்கு தெல்லேது பாஸ். ;-))

RVS said...

@சாய்
ரொம்ப நன்றி சாய்!
பிரகாஷ் சுவாமி முகப்புத்தகத்தில் இருக்கிறார். அற்புதமாக ஸ்டேடஸ் போடுகிறார். அடுத்த பதிவில் இலஞ்சி பற்றி எழுதியிருக்கிறேன். ;-))

RVS said...

@siva
நன்றி சிவா! ;-))

RVS said...

@siva
என்னது திருஷ்டியா? மாப்பிள்ளை பட விவேக் வந்து அடிக்க போகிறார் உங்களை... ;-)))))))))))

RVS said...

@மோகன்ஜி
அண்ணா! உங்களது பாராட்டில் ஆகாசத்தில் பறக்கிறேன் நான்! மிக்க நன்றி. ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே! உங்கள் தொடர் ஊக்கத்திற்கு.. ;-))

RVS said...

@ரிஷபன்
அப்படியா பீல் பண்றீங்க... நா சும்மா காமடியாப் போட்டேன் சார்! பாராட்டுக்கு நன்றி சார்! ;-))

அமைதி அப்பா said...

எப்பொழுதும் போல் நல்ல பதிவு.


//பொதிகையின் கதவை திறந்தவுடன் டிராயர் போட்ட நமீதாவை தரிசிக்க முண்டியடிக்கும் பக்தர் கூட்டம் போல நாயடி பேயடி அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். இத்தனைக்கும் அது ஒரு ரிஸர்வர்ட் கம்பார்ட்மென்ட். ஏறிய மக்கள் வெள்ளத்தின் ஆவேசம் அடங்கிய பின்னர் பொறுமையாக அனைவரையும் கோச் ஏற்றினோம்.//

இதைப் படித்துவிட்டு ஒரு பதிவு எழுதி உள்ளேன்.


திருந்தவே மாட்டார்களா?!

நன்றி.

Ponchandar said...

ஆஹா ! ! நம்மூருக்கு வந்து போயிருக்கீக.. மேலகரம் தாண்டிதான் எங்க வீடு. அப்படியே பாபநாசம், காரையார் -ன்னு போயிட்டு வந்திருக்கலாம்-ல. ஏர்போஃர்ஸ் - ல இருக்கும் போது விடுமுறையில் ஊருக்கு இரயிலில் வரும் உணர்வுகளை உணர்ந்ததேன். அப்போ பொதிகை கிடையாது. கொல்லம் மெயில்..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails