Friday, September 16, 2011

ஆண்கள் இடது! பெண்கள் வலது!!

திண்ணைக்கச்சேரி என்று ஒரு பகுதி இந்த வலைப்பூவில் நான் எழுதிவந்ததாக திடீரென்று ஞாபகம். புதுவருஷ ஆரம்பத்தில் இனிமேல் சிகரெட் பிடிக்கமாட்டேன் என்றும், புது டைரி வாசனை இருக்கும் வரை தினக்குறிப்பு எழுதுவதும் போல தி.க ஆரம்பித்ததும் ”எழுத்து ஜுர” வேகத்தில் எழுதியது. இனிமேல் அடிக்கடி எழுதவேண்டும் என்று சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டேன். துக்கடாக்கள் நிறைய சேர்ந்துவிடுகிறது.

************** வாக்கிங் விஷுவல்ஸ் **************

இப்போது தினமும் காலையில் தவறாமல் வாக்கிங் போகிறேன். நடக்க சோம்பேறித்தனப்பட்டால் கொலஸ்ட்ரால் குபுகுபுவென்று நிறைய சேர்ந்துவிடுகிறது. ஏற்கனவே வாய்கொழுப்பு வேறு அதிகம். அனுதினமும் அதே மக்களை திரும்பத் திரும்ப பார்க்கிறேன். ஏழு மணிக்குள் கர்ம சிரத்தையாகக் கடை திறக்கும் ஒரு மெடிக்கல் ஸ்டோர்காரர், காலேஜ் பஸ் வருவதற்குள் கையில் திறந்த புஸ்தகத்தோடு படிக்காமல் பக்கத்தில் அரட்டையடித்துக் கொண்டிருக்கும் யுவதி, அரை வாளி அழுக்குத் தண்ணீர் எடுத்து நேற்றையப் பூக்களில் தெளித்து இன்றைக்குப் புதியதாக்கிக் கொண்டிருக்கும் பிள்ளையார் கோவில் வாசல் பூக்காரி, அரை இன்ச் பவுடர் பூசி அலுவலக பஸ்ஸை நிற்க வைத்து டிபன் பாக்ஸும் கையுமாக வியர்க்க விறுவிறுக்க ஓடிவரும் குடும்பஸ்திரீ......

ஆபிஸ் பஸ் வரும் வரை சாலையோரக் கழக கொடிக்கம்பத்தில் சாய்ந்து கொண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியாவை எட்டாக மடித்து பிட் செய்தி வாசிக்கும் சந்தனப் பொட்டுக்காரர், முன்னங்கால் ஒன்று இல்லாவிட்டாலும் சந்தோஷமாக சக தோழர்களுடன் கட்டிப்புரண்டு விளையாடும் தெருநாய், பல்ஸரில் வீடுவீடாய் பேப்பர் விசிறும் ஹாக்கர், கூட்ரோடு டீக்கடை வாசலில் அன்றைய வேலைக்காக காத்திருக்கும் சித்தாள், பெரியாள் மற்றும் கொத்தனார்கள், கறைபடிந்த பையில் தூய ஆவின் பால் விநியோகிக்கும் பால்காரர், ஹாரனில் வைத்த கை எடுக்காமல் வண்டியோட்டும் பொறியியல் கல்லூரி இளந்தாரி பேருந்து ஓட்டுனர், டாஸ்மாக் உ.பானக் கடை மூடியிருந்தாலும் ஸைடில் இருக்கும் பார்க்குள்ளிருந்து பாம்பு ஊர்வது போலத் தள்ளாடியபடி வரும் காலைக் காப்பிக்கு பதில் கட்டிங் அடிக்கும் முதியவர்...............

தினம்தினம் வழக்கமான இதே காட்சிகள்.

சனிக்கிழமைகளில் தெருவில் என்னையும் அந்தத் தெரு நாயையும் தவிர்த்து வேறு ஈ காக்காயைக் காணோம். ஞாயிற்றுக்கிழமை நானும் வாக்கிங்கிற்கு லீவ்.

************ நார்வேயின் நாயகர்கள் *************

ஒரு அலுவலக திட்டப்பணிக்காக நார்வே நாட்டிலிருந்து இருவர் என்னுடன் பணியாற்றுவதற்கு வந்து இறங்கியிருக்கிறார்கள். மல்யுத்த புஜம் தெரியும் டீ ஷர்ட்டுடன் என்னைப் போன்று ஒரு Norwegian இளைஞனும், வைன் என்ற சப்பை மூக்கு குச்சிக் குச்சி முடி தாய்லாந்து பையனும் தினமும் சொய்ங்...சொய்ங்... என்று ஆங்கிலத்தை டீ போல ஆற்றுகிறார்கள். ஒரு வயலினை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் மாற்றி மாற்றி இழுப்பது போலிருக்கிறது அந்த தாய்லாந்து இளைஞனின் ஆங்கிலம். நார்வே இளைஞன் அந்நாட்டு பிரதமரின் சம்பளம் மற்றும் சொத்து விபரம் எல்லோருக்கும் தெரியும் என்றார். தேர்தல் நேரத்தில் நம்மூர் பெருச்சாளிகள் தேர்தல் ஆணையத்திடம் “ஒரு சைக்கிள், இருபதாயிரத்து பத்து ரூபாய் ரொக்கம், ரெண்டு கோடு போட்ட அண்ட்ராயர்” என்று ஏழைகளாக சொத்து விபரம் தாக்கல் செய்வது ஞாபகம் வந்தது.

*********** நைட் - எலீ விசீல் ***************


தமிழ்வாசகன் என்ற இணையக் குழும சத்சங்கத்தில் உறுப்பினரான பிறகு இப்புஸ்தகத்தின் வாசனை கிடைத்தது. முப்போதும் புஸ்தகமும் கையுமாக இருக்கும் மனிதர்களின் சகவாசம் கிட்டியது என் பேறு. என்னுடைய முகப்புத்தக நண்பர்களுக்கு இதை அறிமுகம் செய்திருந்தேன். மனிதன் நாகரீகமடைந்து வெகு நாட்களுக்கு அப்புறம் நிகழ்ந்த ‘ஹிட்லரின் கொலைக்களன்’களில் அவதியுற்றவர் இதன் ஆசிரியர் எலீ விசீல். நாஜிக்களின் அக்கொடுமையை அனுபவித்தபோது அவர் பதின்மங்களில் இருந்தார் இப்போதும் உயிரோடு இருக்கிறார். 

ட்ரான்ஸில்வேனியாவில் இருக்கும் சிகெட் என்ற ஊரில் தனது தாய், தந்தை மற்றும் இரண்டு அக்கா ஒரு தங்கையுடன் வசித்துவந்தவர் ஹிட்லரின் ஜு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சிக்கி அடிமைப்பட்டுச் சின்னாபின்னமான கதை. ஒரு மர்ம நாவலுக்கு இணையாக தனது வேதனைகளை படு வேகமாகப் பகிர்ந்திருக்கிறார் இந்த நோபல் பரிசு பெற்ற எலீ விசீல். ஹிட்லரின் வதை முகாம்கள் எப்படி அவருடைய ஊருக்குள் அடியெடுத்து வைத்தார்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று வரலாற்று ஆவணமாகச் சொல்கிறார்.

ஆசையாசையாய் குருவியாகச் சேர்த்த சொத்துக்களையெல்லாம் அப்பப்படியே போட்டுவிட்டு தலைக்கு மூடியில்லாத ரயில் வண்டிகளில் கால்நடைகள் போல ஒரு போகிக்கு நூறு பேர் என்று நெருக்கி ஏற்றிக்கொண்டு வதைமுகாம்களுக்கு அழைத்துச் சென்றார்களாம். மனிதர்களற்று வெறிச்சோடிப்போய் ஊரிலிருந்த வீடுகள் அனைத்தும் கொல்லையோடு வாசல் திறந்து கிடந்தது என்கிறார். அவர்கள் வந்தடைந்த முதல் முகாம் Birkenau. அங்கே “Men to the Left! Women to the Right!!" என்ற நாஜிப்படையின் ஆணையில் குடும்பம் பிரிகிறது. விசீலின் அம்மா, அக்கா தங்கைகள் ஒரு பக்கமும், அவரும் அவரது தந்தையும் இன்னொரு புறம் வருகிறார்கள். அதற்கப்புறம் அவர்களை தான் பார்க்கவேயில்லை என்கிறார் வேதனையுடன்.

Birkenau வில் இருந்து Auschwitz முகாமிற்கு மாற்றப்படுகிறார்கள். திடகாத்திரமானவர்களுக்கு மரியாதை. பலவீனமானவர்களுக்கு இறுதி மரியாதை. இதுதான் அவர்களது கொள்கையாக இருந்தது. குழி வெட்டுவது, உற்பத்தியான ப்ளாஸ்டிக் எலெக்ட்ரிகல் சுவிச்சுகளை எண்ணுவது என்று கடினமும் சுலபமுமாகப் பலவிதமான வேலைகள். ஒரு ரொட்டித் துண்டும் கொஞ்சம் வெண்ணையும். இதைத் சாப்பிட்டு உயிரோடும் வேலைக்கு அஞ்சாமல் இருப்பவர்களுக்கும் அவர்களது உயிர் உத்திரவாதம்.  இல்லையேல் ஒரு தோட்டாச் செலவில் ரொட்டியை மிச்சப்படுத்திவிடுவார்கள். கொன்ற குழந்தைகளை ஒரு ட்ரக்கில் கொண்டு வந்து எரியும் நெருப்பிலிட்டது இன்னமும் அவரது மனதில் அனலாய் இருக்கிறதாம்.

கையில் வயலினுடன் திரிந்த ஒரு வதை முகாம் நண்பன் தான் நிற்பதற்கு கூட இடம் இல்லையெனினும் வயலினுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்ற உன்னத நோக்கத்தில் தூக்கிப் பிடித்தப்படி இருக்கிறான். ஒரு நாள் இரவு ரோல் காலிற்கு பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில் பீத்தோவன் வாசிக்கிறான். அவனது அந்த வயலின் எல்லோர் செவியையும் இசையால் நிரப்புகிறது. அன்று அனைவரது நெஞ்சையும் நெகிழ வைக்கும் கச்சேரியாக அது அமைகிறது. அந்த வதை முகாமில் துன்பத்திலிருந்த அனைவருக்கும் சொல்லவொனா மனமகிழ்ச்சி. அசதியில் தூங்கிப் போகிறார் எலீ விசீல். காலையில் எழுந்து பார்க்கும் போது காலடியில் வயலினுடன் இறந்து போயிருக்கிறான் அந்த கலைஞன். இன்னமும் மெழுகுவர்த்தி ஒளியில் வயலின் இசை கேட்டால் அதே ஞாபகம் என்கிறார்.

அடுத்த வதை முகாமிற்கு குளிரக்குளிர அழைத்துப்போகிறார்கள். அப்போது ஒரு இரயில் வண்டியின் போகி இன்னும் கூடுதலாக இருபது பேர் பிடிக்கிறது. எலும்பும்தோலுமாக வண்டியிலேற்றப்படுகிறார்கள். இன்னும் இரண்டு நாட்களுக்கு மேல் பயணிக்கிறார்கள். அப்போது ஒரு ஆளில்லாத இடத்தில் வண்டியை நிறுத்தி “பக்கத்தில் செத்த பிணம் இருந்தால் தூக்கி வெளியே வீசியெறியுங்கள்” என்ற கட்டளை வருகிறது. ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் ஐந்தாறு பிணங்களை வெளியே எறிகிறார்கள். அப்போது கழிவிரக்கத்தை விட உட்கார இடம் கிடைத்தே என்று மகிழ்ந்தவர்கள் ஜாஸ்தி என்கிறார்.

ஒரு ஜெர்மன் நகரத்திற்குள் வண்டி நுழைந்தவுடன் ஜுவில் கொரில்லாவுக்கு வாழைப்பழம் தூக்கிப் போடுவதைப் போல ஒரு ஜெர்மானியன் ரயில் பெட்டிக்குள் விட்டெறிகிறான். பெட்டிக்குள் ஒரே அடிதடி. ஒரு கிழவன் மிகவும் ஜாக்கிரதையாக ஒரு வாழைப்பழத்தை எடுத்து சட்டைக்குள் பதுக்கிக் கொண்டு அதே பெட்டியிலிருக்கும் தனது மகனை அழைக்கிறான். எலீ விசீலும் அதே பெட்டியிலிருக்கிறார். இதற்காகத் தான் தனது மகனை அழைக்கிறார் என்று அறிந்து கொண்டு அந்த கிழவன் மற்றும் அவரது மகன் மீதும் பாய்கிறார்கள். அடுத்த சில நிமிடங்களில் ஒரு வாழைப்பழத்திற்காக அவ்விருவரும் பலி. ஆளில்லாத இடத்தில் பிணங்களை வீசியெறிந்துவிட்டு பயணம் தொடர்கிறது....

இரவு முழுவதும் பனியில் ஓடியே இன்னொறு வதை முகாமிற்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள். “டப்” என்று சத்தம் கேட்டால் ஓடிவர முடியாத ஒருவனை சுட்டுவிட்டார்கள் என்று அர்த்தம். இப்படியாக போகிறது நைட். ஒரு அறுபதாண்டிற்கு முன்னால் இப்படி ஒரு அசிங்கமான நிகழ்வு மனித இனத்திற்குள் நடந்திருக்கிறது என்பது ஒரு அவமானகரமான விஷயம்.


பின் குறிப்பு: இனிமேல் தி.கச்சேரியில் நான் அவ்வப்போது படிக்கும் புஸ்தகங்கள் பற்றியும் எழுதலாம் என்று நினைக்கிறேன். எழுதுவதற்கு மனதுக்கு ஆசையாயிருந்தாலும் வேலைப்பளு காரணமாக கைக்கு ஒழியவில்லை. முடிந்தவரை அடுத்த பதிவு சீக்கிரம் இட முயற்சிக்கிறேன்.

படக் குறிப்பு:  படம் கிடைத்த இடம் உலகப் பொதுஅறிவுக் களஞ்சியம் விக்கிப்பீடியா. மேற்கண்ட படத்தில் Buchenwald முகாமில் கீழிருந்து இரண்டாவது வரிசையில் இடது புறத்திலிருந்து ஏழாவது ஆளாக எலீ விசீல் எட்டிப்பார்க்கிறார்.


-

36 comments:

மதுரை சரவணன் said...

niraiya padiththa visayangkalai eluthungka... kaaththu irukkirom.. valththukkal

ஸ்ரீராம். said...

//மல்யுத்த புஜம் தெரியும் டீ ஷர்ட்டுடன் என்னைப் போன்று ஒரு Norwegian இளைஞனும்//

இப்படி உங்களைக் கற்பனை செய்து பார்க்கிறேன்...!

புத்தகப் பகிர்வு அருமை. மனம் கனம். இது மாதிரிக் கொடுமைகள் ஒரு போதிய இடைவெளியில் அவ்வப்போது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இச்சை மிருகம் அவ்வப்போது தன் கோர முகத்தை இப்படிக் காட்டிச் செல்லும் போலும்.

ஸ்ரீராம். said...

நம் ஊரில் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்யும்போது மனைவியை அதாவது பெண்களை வலப்பக்கம் நிறுத்தி பணிவோம். அந்த பாரம்பரியம் அங்கு கொலைக் களனிலும் பின்பற்றப் படுவது ஒரு ஒப்பீட்டுக் கொடுமை.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நடந்தவைகளை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
உங்கள் எழுத்து நடை அருமை.
வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

எலீ விசீல் பற்றிய குறிப்பு மனதை கனக்க வைத்து விட்டது. நல்ல பதிவு.நன்றி பகிர்வுக்கு.

இராஜராஜேஸ்வரி said...

மனம் கனக்கவைக்கும் பகிர்வுகள்!

Viswanath V Rao said...

தமிழ் வாசகன் குழுமத்துல நான் கேட்ட வாலி புத்தகங்கள் கிடைக்காதா ?
(௧) அம்மா (௨) பொய் கால் குதிரை

பத்மநாபன் said...

நடை நிகழ்வுகள் சுவாரசியம்... இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு நடந்தால் கொ. குறையுமா என்பது வேறு விஷயம்...

தாய்லாந்துக் காரன் ஆரோகணம் அவரோகணமா உங்ககிட்ட வசமா மாட்டிகிட்டானா...

இடது வலது மிக கொடுமையாக இருக்குதே..

சக்தி கல்வி மையம் said...

மனதை நெகிழ வைக்கும் பதிவு..

பனித்துளி சங்கர் said...

சில நிமிடங்கள் மாறாத ஒரு தாக்கத்தை இந்தப் பதிவு இதயத்தில் விதைத்தது .இந்த பதிவின் வாயிலாக தங்களின் வாசிப்பு நீளம் தெளிவாக விளங்குகிறது . பகிர்ந்தமைக்கு நன்றிகள்

N.H. Narasimma Prasad said...

பதிவை படிக்கும்போதே ஒருவிதமான பயம் தொற்றிக்கொள்வதை என்னால் உணரமுடிகிறது. பகிர்வுக்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said...

அந்த புத்தகம் முழுவதும் படித்தால்
மனத்தில் உண்டாகிற சோக உணர்வை
தங்கள் பதிவே உண்டாக்கிப் போவது ஆச்சரியம்
தரமான பதிவு.தொடர்ந்து தரவும் வேண்டுகிறோம்

ரிஷபன் said...

அப்போது கழிவிரக்கத்தை விட உட்கார இடம் கிடைத்தே என்று மகிழ்ந்தவர்கள் ஜாஸ்தி என்கிறார்.

மனிதனைத் தோலுரித்து பார்த்த அதிர்வு.

கே. பி. ஜனா... said...

//தினமும் சொய்ங்...சொய்ங்... என்று ஆங்கிலத்தை டீ போல ஆற்றுகிறார்கள். ஒரு வயலினை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் மாற்றி மாற்றி இழுப்பது போலிருக்கிறது அந்த தாய்லாந்து இளைஞனின் ஆங்கிலம்.//
நல்ல வர்ணனை!

அப்பாதுரை said...

சுவாரசியம். டீஷர்ட் கமென்ட் ஸ்ரீராம் முந்திக்கிட்டார்.

எங்களுக்கெலாம் வேலைப் பளு இல்லையா? (ஹிஹி.. இல்லை)

Senthil Kumar said...

தி.கச்சேரி நடுவே சில உண்மைகள் "ஏற்கனவே வாய்கொழுப்பு வேறு அதிகம்"

பதிவு அருமை

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அற்புதமான பதிவு. பதற வைக்கிறது. இன்னமும் கூட அரசியல் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டு தானே இருக்கின்றன.ஹிட்லரின் தற்போதையப் பெயர் ராஜபக்ஷே.

RVS said...

@மதுரை சரவணன்

செய்கிறேன் சரவணன். நன்றி. :-)

RVS said...

@ஸ்ரீராம்.

மல்யுத்த புஜம் அந்த நார்வேக்காரனுக்கு... இளைஞன் பட்டம் எனக்கு... :-))

RVS said...

@Rathnavel

மிக்க நன்றி ஐயா!! :-)

RVS said...

@RAMVI
வருத்தம் தரும் விஷயம் தான். கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
ஆமாங்க மேடம்.. கண்ணீர்க் கதைகள்.

RVS said...

@Viswanath V Rao

விசு.. புக்குக்கு அரேஞ் பண்றேன். :-)

RVS said...

@பத்மநாபன்

நல்லா வேர்க்குதுங்க ஜி! கொ. குறையாதுன்னு நீங்க என் கிட்ட பேசினத வச்சு சொல்றீங்களா? :-)))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே கருன். நல்லா இருக்கீங்களா? :-)

RVS said...

@! ❤ பனித்துளி சங்கர் ❤ !
வருத்தமான விஷயம் தான் சங்கர்! கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@N.H.பிரசாத்
கருத்துக்கு நன்றி பிரசாத்!

RVS said...

@Ramani

நன்றி சார்! சமீபத்தில் என்னை உலுக்கிய புத்தகம் அது.

RVS said...

@ரிஷபன்
சார்! நான் இங்கு பகிர்ந்ததெல்லாம் சிறு சாம்பிள். புஸ்தகம் முழுக்க நம்மை அதிர வைத்துவிடும். கருத்துக்கு நன்றி.

RVS said...

@கே. பி. ஜனா...
வர்ணனையை ரசித்ததற்கு நன்றி சார்! :-)

RVS said...

@அப்பாதுரை
சார்! வேலைப் பளு தூக்குவதால் தான் புஜபலம் மிக்கவனாக இருக்கிறேன். ஹா.ஹா...
கருத்துக்கு நன்றி! :-)))

RVS said...

@செந்தில் குமார்
டாய்............ :-)))

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
ஆமாம் மேடம். மக்களை மாக்களாக நடத்திய விதம் நம்மை பதற வைக்கிறது...

மேடம்... லிஃப்ட் மாமா என்று ஒன்று சமீபத்தில் எழுதினேன். படித்தீர்களா? :-))

பத்மநாபன் said...

//நல்லா வேர்க்குதுங்க// வேர்த்தால் சரி.. நடைபயிற்சி போன்ற நன்மை வேறு எந்த உடற்பயிற்சியிலும் கண்டதில்லை..
உடனடி பலன்.... பாலையில் புழுதி காத்து இருப்பதால் டிரெட்டில் நடை..கொஞ்சம் போரடிக்கும் ..இந்த மாதிரி வேடிக்கைக்கு வழி இல்லாததால்.. இருந்தாலும் வேர்த்து வியர்ப்பது சுகம்...

சாந்தி மாரியப்பன் said...

புத்தகப்பகிர்வு அருமை..

ADHI VENKAT said...

புத்தகப் பகிர்வு மனதை கனக்க வைத்து விட்டது. :(((

வாக்கிங் விஷயங்கள் வர்ணனை நன்றாக இருந்தது....

தி.கச்சேரி தொடரட்டும்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails