Monday, February 27, 2012

பரோபகாரி லக்ஷ்மி


புதிதாய்ப் பார்ப்பவர்களுக்கு லக்ஷ்மி அப்படி ஒன்றும் சத்புத்திரனில்லைதான். ஃபில்டர் காஃபிக்கு பழகிய அவரது நாக்கு சரக்குக்கும் சப்புக்கொட்ட மறுக்கவில்லை. உள்ளுக்கு தீர்த்தவாரி ஆகும் போது அரைப் பாக்கெட் வில்ஸ். பாக்கெட்டில் தட்டி வாயில் சொருகிக்கொள்வார். சிகரெட் புகை வளையம் வளையமாக ஊதும் போது பாக்கெட் கிழித்துப் பான்பராக். வாயில் பராக் மணக்க முக்கு பங்க் கடையில் புகை கசியும் வாயோடு பார்த்தவர்களுக்கு அவர் மலையாள திலகன் சிகப்பாக தமிழ்நாட்டுக்கு வந்திறங்கியதுப் போலத் தோன்றும். ஒவ்வொரு நாளும் போத்தல்களில் சிறைப்பட்ட ’பழைய சாமியார்’, ’மாவீரன்’ போன்ற எல்லாவற்றுக்கும் அடிநாதமாகிய புகழ்பெற்ற தீர்த்தவாரிகள்தான் ஏனைய அவருடைய கெட்டபழக்கங்களை அந்நாளுக்கு நிர்ணயம் செய்கிறது. போன செண்டென்ஸ் நீங்கள் படித்து முடிக்க எடுக்கும் கால அவகாசத்தில் ஒரு கட்டிங் உள்ளேயிறங்கியிருக்கும்.

நானாவிதமான பழக்கங்கள் இருந்தும் வீட்டுக்கும், நண்பர்களுக்கும் வேலை செய்த பேங்கிற்கும் லக்ஷ்மி சொக்கத் தங்கம். 22 கேரட். லாஹிரி வஸ்துக்கள் அவரது அன்றாடக் கடமைகளில் எப்பவுமே காலை நீட்டிக் குறுக்கிட்டதில்லை. பாங்க்கில் கஸ்டமர்களை பார்க்க ஆரம்பித்தாரென்றால் எல்லாவற்றையும் முடித்து ஏறக்கட்டிவிட்டுதான் தயிர்சாத லன்ச் பாக்ஸைத் தொடுவார். குடித்துவிட்டு ரோட்டில் நாலுபேருடன் சட்டை கிழிய கலாட்டா செய்தார், வேஷ்டி அவிழ்ந்து ஜட்டியோடு ப்ளாட்ஃபார்மில் தெருநாயோடு விழுந்து கிடந்தார் போன்ற அவப்பெயர்கள் எப்போதும் அவருக்கு கிடையாது. ஜெண்டில் குடியர். ”மோந்து பார்த்தாலே சரக்கோட லக்ஷனம் தெரியாதா?” என்று மதிவாணன் பெண் கல்யாணத்தில் லக்ஷ்மி புது சித்தாந்தம் படித்தபோதுதான் அவருடைய மகிமை பலருக்கு புரிந்தது.

ரயிலில் கஷ்டப்பட்டுத் தம் பிடித்து அப்பர் பர்த் ஏறும் உயரம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிசுறு பிசுறாய் முடி வளர்ந்த முன்தலை. அதைப் பற்றி கேட்டால் “35 வயசுலேர்ந்தே எனக்கு ஹேர் கட் செலவு மிச்சம். பார்பர் ஷாப்ல அசிங்க படம் இன்னும் ஒட்றானா மாரிமுத்து?” என்று எதிர்கேள்வி கேட்பார்.

குட்டி குட்டி முட்புதர்களாய் கருகரு புருவங்கள். ஹிரன்யகசிபுவின் ரத்தம் குடித்த நரசிம்மர் போல வெற்றிலைப்பாக்கு குதப்பி உதடோரங்களில் சின்ன சிகப்பு திட்டுக்கள். நாசியிலிருந்து வெளியே எட்டிப் பார்த்த ஸ்டே வயர் முடிகள் இரண்டு. பழங்காலத்து ஆண்டென்னா போல வளர்ந்த காதோரத்து புசுபுசு ரோமங்கள். முதலிரண்டு பட்டன் போடாத பாக்கெட்டிலும் மாரிலும் சிறு சிறு தீவுகளாய் வெற்றிலைக் கறை படிந்த அரைக்கைச் சட்டை. மாலை நேரங்களில் பரிஜாரகன் கட்டும் அழுக்கு வேஷ்டி போன்ற ஒன்று இடுப்பில். ருத்ராட்ச பார்டர் போட்டது. வலது கையில் ந்யூஸ்பேப்பரில் பொட்டலம் கட்டப்பட்ட கும்பகோணம் வெற்றிலை, கை சீவலும் சுண்ணாம்பும்.

பிரதிமாதம் டாண்ணு ஒன்னாம் தேதி காலை பத்து மணிக்கு நெற்றியில் ஸ்ரீசூர்ணத்துடன் மேலே சொன்ன காஸ்ட்யூமுடனும் எஸ்.பி.ஐ ஏ.டி.எம் வாசலில் லக்ஷ்மி சாரைப் பார்க்கலாம். ஆமாம். அவர் ஆறு வருஷத்துக்கு முன் ரிடையர் ஆகிவிட்டார். பென்ஷன் வித்ட்ராயல் பண்ண வருவார்.

”மஞ்சத்தூள் அம்பது கிராம், அச்சுவெல்லம் ஒரு கிலோ, பெருங்காயப் பவுடர் சின்னது அம்பது கிராமோ நூறு கிராமோ, மிளகு அந்த ப்ளாஸ்டிக் கவர்ல போட்டது வேண்டாம் நாற்ரது... வேற வாங்குங்கோ... கோதுமை ரவா அரைக்கிலோ... சன்னமா இருக்கறது... போன தடவ மாதிரி மோட்டா மோட்டாவா வாங்கீடாதீங்கோ... உப்புமாவுக்கு மிக்ஸில ஒருதடவை பொடிச்சுப் போட வேண்டிருக்கு.. கேட்டேளா....” என்று மாமியின் குரலுயர்ந்த அதிகாரத்துடனும் மங்களகரமான மஞ்சள்தூளுடனும் தயாராகும் மாசாந்திர சாமான் லிஸ்ட்டை ஒரு ஸ்லிப்பில் குறித்துச் சட்டைப் பையில் சொருகிக்கொண்டு ”பை கொடும்மா” என்று பதவிசாக வாங்கி தோளில் போட்டு பிரதி மாதம் ஐந்து தேதிக்குள் மளிகை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் இறக்கிவிடுவார்.

ஏசி டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸையெல்லாம் எட்டிக் கூட பார்க்கமாட்டார். செல்வன் அண்ணாச்சிக் கடையில் லிஸ்ட்டைக் கொடுத்து வாசலில் போட்டிருக்கும் குட்டை ஸ்டூலில் உட்காருவார். அரசியல் வம்பு பேசமாட்டார். ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன என்பது அவரது கட்சி. கைப் பொட்டலத்தைப் பிரித்து வெற்றிலை எடுத்து செல்லமாக நீவி காம்பு கிள்ளி சீவல் சுண்ணாம்பு சேர்த்து போட்டுக்கொண்டு கம்மென்று வீதியைப் பார்க்க உட்கார்ந்துவிடுவார். புகையிலையை ஒரு சின்ன உருண்டையாய் உருட்டி வாய்க்குள் அதக்கிக்கொள்வார். “சார்! ரெடி” என்று செல்வனின் குரல் ஓங்கி ஒலித்ததும் பையை வாங்கி தோளில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வருவார்.

”லக்ஷ்மி.... இருபதினாயிரம் குறையறது.. டேலி ஆகலை... என்ன பண்றதுன்னு தெரியலையே” என்று டெல்லெர் நாராயணன் கவலையாய் கையைப் பிசைந்தபோது ”டோண்ட் வொர்ரி நானா, கண்டுபிடிச்சுடலாம். எல்லோரும் நமக்கு தெரிஞ்சவாதானே” என்று தைரியப்படுத்தி ஆபத்பாந்தவனாக காத்து ரட்சித்தார்.

அன்றைக்கு ட்ரான்ஸாக்‌ஷன்ஸ் லிஸ்ட் எடுத்து ஒவ்வொருத்தராக காண்டாக் செய்து கடைசியில் பேர்ல் எக்ஸ்போர்ட்ஸ் அற்புதராஜிடம் போயிருந்ததைக் கண்டுபிடித்து வாங்கிக்கொடுத்தார். “சாரி சார்! நானும் கவனிக்கலை. இப்பத்தான் பார்த்தேன். ரெண்டு நூறு ரூபா கட்டு அதிகமா இருக்கு” என்று ஆபிஸ் பையனிடம் அற்புதராஜ் பணம் கொடுத்து அனுப்பும் போது இரவு 9 மணி ஆயிருந்தது.

“லக்ஷ்மி.. ஒரு வாரம் முன்னாடி தான் எம் பொண்ணுக்கு சிசேரியன் ஆயிருக்கு. மாப்பிள்ளை ஒன்னுத்துக்கும் ப்ரயோஜனம் இல்லை. ஹாஸ்பிடலுக்கு பணம் தரனும். பகவானே! இப்டி சோதிக்கிறியே... எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா? இப்ப என்ன பண்ணுவேன்னு பாத்ரூம்ல அழுதேன். பகவான் உன் ரூபத்தில உதவி பண்ணினார்” என்று நாராயணன் அப்படியே லக்ஷ்மி சாரின் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு குரல் அழுதார். ஒரு சின்ன சலனம் கூட காட்டாமல் கூரையை நோக்கி கையை காண்பித்துவிட்டு பாங்கை விட்டிறங்கி நடையை கட்ட ஆரம்பித்துவிட்டார்.

”ஒன்னும் இல்லை. நகருங்க.. அப்டியே கொஞ்சம் அவரைக் காத்தோட்டமா விடுங்க. அவர் ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும். சார் உங்களுக்கு ஒன்னுமில்லை. பயப்படாதீங்க. நான் டாக்டரைக் கூப்பிட்ருக்கேன்” என்று கிணற்றடியில் வழுக்கி விழுந்த ஈ.பி. ஜெயராமன் அப்பாவை கொண்டு வந்து ஹாலில் கிடத்தி உதவி செய்தபோது பக்கத்தில் நின்ற ஈ.பி.ஜெ அம்மா கையெடுத்து கும்பிட்டார்கள். பெண்ணுக்கு தலைப் பிரசவம் என்று ஜெயராமனும் அவரது மனைவியும் யூ.யெஸ் பறந்து போயிருந்தார்கள்.

காலையும் மாலையும் வீட்டிற்குள் தலையை நீட்டி ஒரு எட்டுப் பார்த்துக்கொண்டது லக்ஷ்மி சார்தான். தெருவில் யாருக்கு என்னவென்றாலும் அவரை முதல் வரிசையில் பார்க்கலாம். அடித்துப் பெய்த மழையில் டாக்டரை காரேற்றிவிட்டு வந்த லக்ஷ்மியை அவரது மனைவி “ஜுரம் வந்தா என்ன பண்றது. பெத்துப்போட்ட ஒரு பயலும் பக்கத்துல இல்ல.” என்று படபடவென்று பொரிந்தபோது ”ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசை பண்ணத்தானே மனுஷ்ய ஜென்மம் எடுத்துருக்கோம்” என்று நிதானமாக சொல்லிவிட்டு தலையை துவட்டிக்கொண்டு  சாப்பிட உட்கார்ந்துவிட்டார். நீங்க நினைக்கிறது கரெக்ட். சாப்படறதுக்கு முன்னாடி ஒரு கட்டிங் போட்டுவிட்டுதான் வந்தார்.

அடுத்த மாதம் ஊருக்கு வந்திறங்கிய பின்னர் ஈ.பி. ஜெயராமன் அரை மணி லக்ஷ்மி சார் கையைப் பிடித்துக்கொண்டு அப்படியே உருகிவிட்டார். “சார்! ரொம்ப தேங்க்ஸ். ரொம்ப தேங்க்ஸ். நாங்க அப்டியே துடிச்சுப் போய்ட்டோம். என்ன பண்றதுன்னு தெரியலை. கையும் ஓடலை. காலும் ஓடலை. அங்க அவளுக்கு துணையா இருக்கறதா இல்ல இங்க இண்டியாவுக்கு ஓடி வர்றதான்னு. அவருக்கே வர்ற மார்ச் வந்தா தொன்னூறு முடியறது. நீங்க இல்லைன்னா.... எங்க வாழ்நாள்ல இத நாங்க மறக்கவே மாட்டோம்.”

இவ்வளவுக்கும் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்துவிட்டு அசையாமல் கேட்டுக்கொண்டிருப்பார். ”சரி... பார்ப்போம்..” என்று முடித்துக் கொண்டு கைகுலுக்கிவிட்டு நகர்ந்துவிடுவார். ஏழு மணி சுமாருக்கு ஒயின் ஷாப் சென்று பார் பாலிடிக்ஸில் ஈடுபடாமல் வாயில் கடகடவென்று சரித்துக்கொண்டு நிதானமாக வீடு வந்து சேருவார். தெருமுனையில் ஒரு தம் அடிப்பார். வாசலில் உட்கார்ந்து ஒரு பத்து நிமிஷம் பான்பராக் அரைத்து துப்பிவிட்டு நேரே கொல்லைப்புறம் சென்று கைகால் அலம்புவார். சப்ளாங்கால் போட்டுக்கொண்டு தரையில் உட்கார்ந்து மோர் சாதத்துக்கு மாங்காத் தொக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வெறும் தரையில் அக்கடான்னு கட்டையை நீட்டிவிடுவார். ஃபேன் க்ரீச்சிடும் சத்தமெல்லாம் காதுக்கு ஏறவே ஏறாது.

பெரிய பையன் ஆஸ்திரேலியாவில் நெட்வொர்க்கிங் எஞ்சினியர். சின்னவன் இங்கேயிருந்து அமெரிக்க நேரத்திற்கு வண்டியனுப்பி ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்து வேலை பார்க்கும் ஒரு கால் செண்ட்ரில் மேனேஜராக வேலை பார்க்கிறான். “கோமா! யார் கையையும் எதிர்பார்த்து நாம இல்லை. அவாவா அவாவா வேலையைப் பார்த்துண்டு இருந்தா போதும். யாருக்கும் கஷ்டம் கொடுக்காம கடைசி வரைக்கும் இப்படியே இருந்து கரை சேர்ந்துட்டோம்னா அது போரும்டி” என்று அடிக்கடி சொல்வார்.

என்ன கேட்டீங்க?

இப்ப என்ன அவருக்கா?

”ப்ரீத்திங் ப்ராப்ளமா இருக்குன்னு சிரமப்பட்டார். லொக்கு லொக்குன்னு இருமினார். உடம்பு ஒரேடியா ஜில்லிட்டுப்போய் குளிப்பாட்டி விட்டா மாதிரி வேர்வை ஓடறது. எனக்கு வெலவெலன்னு ஆயிடுத்து...” மாமி யாரிடமோ அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். “கொழந்தைக்கு மொட்டை அடிச்சுக் காது குத்தறோம். எல்லோரும் ஃபங்ஷனுக்கு வந்து இறங்கிட்டாங்க. இந்த டயத்ல போய் நாம ஹாஸ்பிட்டல்ல நிக்க முடியுமா? சொல்லுங்க?” இது ஈ.பி. ஜெயராமன். ரெண்டு நாளா லக்ஷ்மி பேச்சு மூச்சில்லாம ஜி.ஹெச்ல படுத்துருக்கார். ”மம்மி! டு ஐ நீட் டு கம்?”  என்று ஆஸ்திரேலியா எஞ்சினியர் கேட்கிறான். ”இந்த வாரம் ஃபுல்லா நைட் ஷிஃப்ட்டு. சனி ஞாயிறு வந்து பார்க்கறேம்மா” இது உள்ளூரில் இருக்கும் சின்னவன். பரோபகாரியான லக்ஷ்மி சார் வாயிலும் மூக்கிலும் ட்யூப் சொருகி தலைமாட்டில் உள்ள மானிட்டரில் பச்சைக் கோடுகள் ஏற்ற இறக்கங்களுடன் ஓட சத்தமேயில்லாமல் எவரையும் ஹிம்சிக்காமல் சாந்தமாக படுத்திருக்கிறார்.

யாராவது போய் ஹெல்ப் பண்ணுவீங்களா?

பட உதவி: http://wvs.topleftpixel.com/

-

21 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நல்ல கேரிகேச்சர் ஆர்விஎஸ்.

லக்ஷ்மி மாதிரி தன் சுமையை வெளிக்காட்டிக் கொள்ளாத கேரக்டர்கள் கஷ்டப்படாம போய்ச்ச்சேந்துடுவாங்க.

கவலைப் படாதீங்க லக்ஷ்மி சார்! நானிருக்கேன்.

Anand said...

//“கொழந்தைக்கு மொட்டை அடிச்சுக் காது குத்தறோம். எல்லோரும் ஃபங்ஷனுக்கு வந்து இறங்கிட்டாங்க. இந்த டயத்ல போய் நாம ஹாஸ்பிட்டல்ல நிக்க முடியுமா? சொல்லுங்க?” இது ஈ.பி. ஜெயராமன். ரெண்டு நாளா லக்ஷ்மி பேச்சு மூச்சில்லாம ஜி.ஹெச்ல படுத்துருக்கார். ”மம்மி! டு ஐ நீட் டு கம்?” என்று ஆஸ்திரேலியா எஞ்சினியர் கேட்கிறான். ”இந்த வாரம் ஃபுல்லா நைட் ஷிஃப்ட்டு. சனி ஞாயிறு வந்து பார்க்கறேம்மா” இது உள்ளூரில் இருக்கும் சின்னவன். பரோபகாரியான லக்ஷ்மி சார் வாயிலும் மூக்கிலும் ட்யூப் சொருகி தலைமாட்டில் உள்ள மானிட்டரில் பச்சைக் கோடுகள் ஏற்ற இறக்கங்களுடன் ஓட சத்தமேயில்லாமல் எவரையும் ஹிம்சிக்காமல் சாந்தமாக படுத்திருக்கிறார்.//
Dear RVS....
ரொம்பவும் வலித்த வரிகள்....எங்கோ பார்த்த ஞாபகம் லக்ஷமி ஸாரை..

Anand said...

கவலைப் படாதீங்க லக்ஷ்மி சார்! நானிருக்கேன்.

Yaathoramani.blogspot.com said...

சுந்தர் ஜீ சொன்னதுதான் சரி
அவரும் யாரையும் கஷ்டப்படுத்தமாட்டார்
ஆண்டவனும் அந்த புண்ணிய ஆத்மாவை கஷ்டப்படுத்தமாட்டான்
அருமையான மனிதரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் எழுத்தில் லக்ஷ்மி கண்முன்னே நிற்கிறார் மைனரே....

நிச்சயம் அவருக்காக சிலர் இருப்பார்கள்... நம்மைப் போல்....

bandhu said...

man.. you are awesome!

அப்பாதுரை said...

இது போல் எனக்கு எழுத வரவில்லையே! கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கடைசி வரி. அப்படியே உட்கார வைத்து விட்டது,. பிரமாதம் rvs. படமும் நல்ல டச்.

தக்குடு said...

'ஆரம்பத்துல அப்பிடி இருக்கு! நடுல ஆவலை தூண்டர்து! முடிவுல ஒரு முடிச்சு இருக்கு!'னு சொல்லிக்கர அளவுக்கு கதைகள்ல(யும்) எனக்கு ஞானம் இல்லாட்டியும் புது பரிணாமத்துல பயணம் பண்ணிண்டு இருக்கேள்னு மட்டும் புரியர்து! :)

RAMA RAVI (RAMVI) said...

பிரமாதமாக இருக்கு கதை... முடிவு படித்ததும் ரொம்ப கஷ்டமாக ஆயிடுத்து.லக்‌ஷ்மி சாரை நேரில் கொண்டுவந்து நிறுத்திட்டேள் உங்க வர்ணனையில..

ADHI VENKAT said...

லஷ்மி சாரைப் பற்றிய உங்க விவரிப்பில் கண் முன்னே நிற்கிறார்.....

பரோபகாரியான அவருக்கு நிச்சயம் மனுஷாளும், தெய்வமும் துணை நிற்பா.....

raji said...

if itz a true one am ready sir!

RVS said...

@சுந்தர்ஜி
நன்றி ஜி! தோள் கொடுக்கறேன்னு சொன்னீங்க பாருங்க.. அங்க இருக்கீங்க.. :-)

RVS said...

@Anand
எனக்குமே எங்கேயோ அவரைப் பார்த்த ஞாபகம். கருத்துக்கு நன்றி! :-)

RVS said...

@Ramani
நன்றி சார்! :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தலைவரே! :-)

RVS said...

@bandhu
தேங்க்ஸ்! :-)

RVS said...

@அப்பாதுரை
நன்றி சார்! உங்களையெல்லாம் பார்த்துதான் எழுதக் கத்துக்கிறேன். :-)

RVS said...

@தக்குடு
நீ விஷியாதிப்பா! நன்றி. :-)

RVS said...

@RAMVI
பாராட்டுக்கு நன்றி மேடம். ஆழப் பதிந்த கேரக்டர். :-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றி சகோ! :-)

RVS said...

@raji
இது புனைவுதான் மேடம். நன்றி. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails