Saturday, April 28, 2012

புல்லட் பாண்டி

இதிலிருக்கும் அனைத்தும் முகநூலில் பகிர்ந்துகொண்டது. இங்கே திண்ணைக் கச்சேரியாக மலர்கிறது. இதுவரை ப்ளாக் லோகத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தோடு தலைக் காட்டாமல் இருந்த என்னுடைய அதிரடி போஸ் ஒன்று கீழே இருக்கிறது. பார்த்து இ(து)ன்புறவும்!!
********* மின்சாரம் ஜாக்கிரதை *********
அவசரம் அவசரமாக ரெண்டு பேரும் ஓடி வந்தனர். புஸ்புஸ்ஸென்று மூச்சிரைத்தது. சுற்றும் முற்றும் யாராவது வருகிறார்களா என்று ஜாக்கிரதையாகப் பார்த்தார்கள். அவர்களைப் பார்த்தால் புருஷன் பொண்டாட்டி போல இருந்தது. இப்போதே அந்த வேலையை செய்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வந்தது போல இருந்தார்கள். ரொம்பவும் அவசரப்பட்டார்கள்.

“நடு ரோடாயிருக்கே”

“....”

“பரவாயில்லை”

“......”

“சீக்கிரம் திற”

“வேணாங்க.. யாராவது பார்த்துடப்போறாங்க”

“ச்சே! உங்கூட ஒரே ரோதனையாப் போச்சு. தொறங்கறேன்..”

“வேண்டாங்க.. பயமாயிருக்கு”

“நாளைக்கு ரெய்டாம். சமூக ஏற்றத்தாழ்வுகள் கூடாதுன்னு யாருக்குமே கரெண்ட் இல்லைனு ஒழிச்சுட்டாங்களாம்... இவ வந்துட்டு...” என்று
அவன் அவள் கையைப் பிடித்து ஆத்திரத்தோடு இழுத்தான். கையிலிருந்த பெட்டியைத் திறந்து 2080 மார்ச் மாதம் அரசாங்கம் வெளியிட்டிருந்த ஆணையை மீறி வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த அந்த மின்சார பேட்டரியை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு நிம்மதியாக இருளில் வீடு போய்ச் சேர்ந்தனர்.

“உங்க வீட்ல ஏதோ வெளிச்சமா இருந்திச்சு!” என்று விஜாரித்த பக்கத்துவீட்டும்மாவைப் பார்த்து தம்பதி சமேதராய் “ஒன்னுமில்லையே!” என்று சொல்லிவிட்டு முப்பத்திரண்டையும் காட்டிச் சிரித்தார்கள். பனைஓலை விசிறியை கட்டில் ஜன்னலருகில் கட்டி கயிறு போட்டு இழுத்தார்கள். கதவைத் திறந்து கொண்டு காற்று அடித்தது.

2081-ல் நாட்டில் மொத்தமாக மின்சாரம் என்பதே ஒழிந்து அனைவரும் உடலுழைப்பில் சர்வ காரியங்களையும் செய்து க்ஷேமமாக வாழ்ந்தார்கள். :-)

********புல்லட் பாண்டி ஆர்.வி.எஸ்!!************* 


வடக்குத்தெருவில் கோப்லி வீட்டில் இதை விடப் பெரிதாக ஆஜானுபாகுவான ஒரு “டப்...டப்..டப்..” இருந்தது. சேப்புக் கலர். பின்னால் ரோட்டைப் பெருக்கும், மேடைத் திரை போல ஒரு ஃப்ளாப். மார்பளவு 40க்கு மேல் உள்ளவர்கள் கையை சாதாரணமாக விரிக்கும் தூரத்தில் ஹாண்டில் பார். ரமேஷ் வடகரையில் வண்டியை ஸ்டார்ட் செய்தால் நாலு கரைகளும் கதறும். நல்ல ஆகிருதியான சரீரம் படைத்தவர்கள் இதை லாவகமாக அடக்கி ஆண்டால் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

என்னைப் போல் பூஞ்சையான தேகம் கொண்ட தயிர்சாதம் சாப்பிடுபவர்கள் பக்கத்தில் நின்று சிரித்துக்கொண்டே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்ளலாம். அஸ்வமேதக் குதிரையை அடக்கியாள்வது போன்ற திறனும் பலமும் இதை ஓட்டுவதற்கு அக்காலத்தில் தேவைப்படும். ஆம்ப்ஸ் பார்த்துதான் உதைக்கவேண்டும். சரியான உதையில்லையென்றால் ரிட்டர்ன் அடித்து அது நம்மை திரும்ப உதைத்துக் கால் முட்டியைப் பேத்துவிடும். ரெண்டு நாள் நடமாட முடியாது.

என்னுடைய இளமை பிராயத்தில் இஸ்திரிப் போட்ட உடுப்புடன் மீசை முறுக்கிய கண்டிப்பு ரத்தம் பாயும் போலீஸ்காரர்கள்தான் புல்லட் வைத்திருப்பார்கள். கலவரமான இடங்களுக்கு போலீஸ் அதிரடி விஜயம் செய்யும் போது போலீஸ் வரும் பின்னே புல்லட் சத்தம் வரும் முன்னே! காதில் ஒலிக்கும் டப்..டப்..டப்.. போக்கிரிகளை எஸ்கேப்..எஸ்கேப்.. என்று துரத்திவிடும்.

அன்றைக்கு நான் எடுத்துக்கொள்ளாத அந்த ஃபோட்டோவை இன்றைக்கு அதன் மேல் ஏறி எடுத்துக்கொண்டேன். ஓ.கே! :-)

*******அடங் கொய்யாலே ***********
”மூணு பத்து ரூவா”

“மூணுதானா?”

மேல்சட்டை போடாமல் வலமிருந்து இடம் போட்டுக்கொண்ட பச்சைச் துண்டை பிடித்துக்கொண்டே பொக்கை வாயால் சிரித்தார். முன் பற்கள் காவியடித்திருந்தது. சொற்ப கொய்யாக்கள் தள்ளுவண்டியில் இங்குமங்கும் சிதறியிருந்தன. புன்னை மரத்தடி நிழலில் முதுகை மரத்திற்கு முட்டுக்கொடுத்து கொட்டாவியுடன் ஆவியற்று உட்கார்ந்திருந்தார். இரண்டாம் முறை பேரம் பேச மனது வரவில்லை. பொதுவாக இதுபோல சாலையோரக் கடைகளில் என்னுடைய நெகோஷியேஷன் ஸ்கில்ஸை உபயோகிப்பதில்லை.

“சரி குடுங்க” என்று பத்து ரூபாய் சலவைத் தாளை நீட்டினேன்.

வாங்கி கல்லாவாக மாற்றப்பட்ட பச்சைக் கலர் ப்ளாஸ்டிக் டப்பாவில் கிடந்த சில்லரைகளோடு போட்டுக்கொண்டார்.

“உஹும்... மொளகாப் பொடி வேண்டாம். கட் பண்ணி மட்டும் கொடுங்க” என்றேன்.

கட் பண்ணிக்கொண்டே “என்னோட சின்ன வயசில 400 ரூபாய்க்கு ரெண்டு காளை மாடு வாங்கிடலாம். இப்போ ஒரு கோளிக்குஞ்சு கூட வாங்க முடியாது”. மூன்றையும் அறுத்துக் கூறுபோட்டார்.

“தெரியுமா?” நிமிர்ந்து புருவம் நெறித்துக் கேட்டார்.

”நீங்க சின்னப்புள்ளையா இருந்தப்ப மாடு ரேட் என்னான்னு எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. இப்ப கோழிக்குஞ்சு ரேட்டு என்னான்னும் எனக்குத் தெரியாதுங்க பெரியவரே!”ன்னேன். சிரித்தேன்.

“நல்லாத்தான் பேசுறே!” சர்ட்டிஃபிகேட் கொடுத்து காந்தி சிரிப்புச் சிரித்தார். செங்காயாக இருந்த ருசியான கொய்யாவைக் கடிக்கும் போதுதான் நேற்று எனக்கும் என் நண்பருக்கும் இரண்டு இன்ச் உசர வாமன பேப்பர் கப்பில் 6 ரூபாய்க்கு டீயும் 7 ரூபாய்க்கு காஃபியும் அரை இன்ச் நுரையடித்துக் கொடுத்த டீ மாஸ்டர் ஞாபகம் வந்தது. கொய்யா கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது. பரவாயில்லை பத்து ரூபாய்!!

********** சீரியல் அரக்கன் **********
வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் டி.வி சீரியல்களுக்கு பித்தம் உச்சத்தில் ஏறி விடும். தாத்தா பாட்டியிலிருந்து மாட்டுப்பொண்கள் மதனிக்கள் என்று அனைவருக்கும் திங்கட்கிழமை வரை வாயில் மெல்ல அவல் கொடுக்கவேண்டும் என்பதற்காக குதறி எடுத்துவிடுகிறார்கள்.

நாலு லோல் பட்ட குடும்பங்களை வைத்து சமுதாய சீரியலாக நகர்த்திக்கொண்ட்ருந்த தங்கமான தங்கம் குடும்பத்தினர் திடீரென்று விட்லாச்சார்யா படத்தில் வருவது போல அத்தனை பெரிய ஸ்வர்ணமால்யாவை மறையவைத்துவிட்டனர். மாமியாருக்கு பச்சிலை பொருக்கப் போன மருமகப்பிள்ளையை கற்பாந்த காலத்திலிருந்து வரும் கதை போல “நாதா! நீங்கள் என்னை மணம் முடிக்கவேண்டும்” என்று கைகளை பின்னலிட்டு கழுத்தை ஒடித்து கஷ்டப்பட்டு வெட்கப்பட்டு கேட்கிறார் ஸ்வர்ணமால்யா!

அவர் நாககன்னிகையாம்... கிராஃபிக்ஸ்ஸில் படமெடுக்கும் பாம்புகளை திரை முழுவதும் நிரப்பி மிரட்டுகிறார்கள். சாதா கண்ணுக்கே கேப் வெடிக்கும் துப்பாக்கி என்று தெரியும் ஒரு வஸ்துவை டுப் டுப் என்று அவர் சுட வழக்கம் போல பாம்பு மறைந்து ஒரு மூலையில் திடீரென்று ஸ்வர்ணமால்யா தோன்றி ஹாஹ்ஹாஹா.. என்று வில்லிச் சிரிப்பு சிரிக்கிறார்.

இந்த எபிசோட்லேர்ந்து தங்கத்து டைரக்டர் இராம.நாராயணன் சாரா?

கெட்டுது போ! இனி வெள்ளிக்கிழமை சீக்கிரம் வீட்டிற்கு போகக்கூடாது என்று நினைக்கிறேன். ஈஸ்வரோ ரக்ஷிது!! :-)

****** சேங்காலி டச் *********
எவ்வளவோ ராஜால்லாம் மண்ணோடு மண்ணாப் போய்ட்டாண்டா, எத்தனை பல்லக்கு உளுத்து மண்ணாப் போய்டுத்து... பல்லக்குல உட்கார்ந்த எத்தனை சரீரம் எரிஞ்சு சாம்பலா போய்டுத்து... இந்த சரீரம் வெறும் மண் கூடுடா பகுகுனா... ’நான்’னு நினைச்சுக்காதடா.... ஏமாந்துடாத... இது மாயைடா... இத நம்பி ஏமாந்துடாதேன்னு... ப்ரம்மம் தாண்டா சத்யம்.....ன்னு அம்மா அப்பாட்டக்கூட வாயைத் திறக்காத ஜடபரதர் பகுகுன மஹாராஜாவுக்கு பிரம்ம ஞானத்தை போதிக்கிறார்....

#சேங்காலிபுரம் அனந்தராமதீக்ஷிதர் ஜடபரதர் உபாக்யானத்தில்...
##”சுர்”ரென்று உரைக்கும் உண்மை. கேட்டதலிருந்து இதே வரிகள் சுற்றிச் சுற்றி வருகிறது.

********** ஆட்டோத்துவம் **********
ஒரு இடத்தில் அகஸ்மாத்தாக முந்திவிட்டேன் என்று என்னை ரேஸடித்து சேஸ் செய்து பலமாக ஒலியெழுப்பி மீடியேட்டரோடு சேர்த்து என்னை அணைத்து அந்த வெற்றிக் களிப்பில் முன்னால் சென்ற ஆட்டோவின் முதுகில் எழுதியிருந்த ஆட்டோத்துவ வாசகம்:

“விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போனவன் விட்டுக்கொடுப்பதில்லை”

#சரிங்கண்ணே!

********** அழுகையும் சிரிப்பும் ***********

அம்மாவிடம்
அடிவாங்கும் பிளாட்பார
சிறுமியின் அழுகையில்
சிரிக்கிறது
அது விற்கும் டோரா புத்தக அட்டை!

#தி.நகரில் பார்த்தது!

******** செல்மொழி *********
”ச்சுச் ஆப் ஆயிருக்குடி”ன்னு சொல்லிக்கிட்டுப் போன பெண்ணொருத்தி தினக்கூலியாகத்தான் இருக்கவேண்டும். ஒயர்கூடை வலது கையிலும் அசப்பில் ப்ளாக்பெர்ரி போன்று ஒரு செட் இடது கையிலும் அடக்கியிருந்தாள்.

“டவரு கிடைக்காம இருக்குங்க்கா” என்று சொன்ன மஞ்ச ஜாக்கெட் பெண்மணியும் கையில் சிகப்புக் கலரில் நோக்கியா போன்ற ஒரு வஸ்துவை கவர் போட்டு வைத்திருந்தாள்.

“வாசலிலே பூசனிப்பூ வச்சுப்புட்டா..வச்சுப்புட்டா”ன
்னு வீதிக்கே கேட்கும்படி வைத்துக்கொண்டு போன கைலி ஆசாமி அந்த பாட்டையும் மீறி “உன் செல்லேர்ந்து போடு. டவரு கிடைக்குதான்னு பார்க்கலாம். உன்னோடதில பாலன்ஸ் இருக்குல்ல” என்றார்.

“ட்ரை பண்றேன்” என்றாள் அந்த மஞ்ச ஜாக்கெட்.

“இப்ப காலு வெயிட்டிங்ல போவுது” ம.ஜா சிரித்தது.

டவரு, பாலன்ஸ், ச்சுச் ஆஃப், செல், ட்ரை, கால் வெயிட்டிங் என்று சகலரும் பேசும் இந்தியாவின் தேசிய மொழி “செல் மொழி”!
-

23 comments:

CS. Mohan Kumar said...

// அன்றைக்கு நான் எடுத்துக்கொள்ளாத அந்த ஃபோட்டோவை இன்றைக்கு அதன் மேல் ஏறி எடுத்துக்கொண்டேன். ஓ.கே! :-)

போட்டோ தான் எடுத்தீரா? ஓட்டலையா?

புவனேஸ்வரி ராமநாதன் said...

வழக்கம்போல் களைகட்டிவிட்டது நம்ம
புல்லட்பாண்டி RVS ன் மன்னார்குடி திண்ணை. அருமையோ அருமை. அதுவும் அந்த செல்மொழி அசத்தல்.
ரொம்ப நாள் கழிச்சு திரும்ப சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் RVS .

ADHI VENKAT said...

திண்ணை கச்சேரியில் எல்லாமே சுவாரசியமாக இருந்தது. ”செல்”மொழி உள்பட......

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்.
எந்த ஹீரோயினைக் காப்பாற்ற புள்ளத் பாண்டி புறப்பட்டு விட்டாரோ...!

வெங்கட் நாகராஜ் said...

செல்மொழி ரசித்தேன்.

முகப்புத்தகத்திலேயே சிலவற்றைப் படித்தேன். படிக்காத சில இங்கே படித்தேன்... :)

திண்ணைக் கச்சேரி களை கட்டுகிறது...

Rathnavel Natarajan said...

என்னை ரேஸடித்து சேஸ் செய்து பலமாக ஒலியெழுப்பி மீடியேட்டரோடு சேர்த்து என்னை அணைத்து அந்த வெற்றிக் களிப்பில் முன்னால் சென்ற ஆட்டோவின் முதுகில் எழுதியிருந்த ஆட்டோத்துவ வாசகம்:

“விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போனவன் விட்டுக்கொடுப்பதில்லை”

அருமை சார்.

Avargal Unmaigal said...

பதிவு மிக அருமையாக இருந்தது

Unknown said...

me the first comment..

Unknown said...

அண்ணா சூப்பரா இருக்கு
புல்லெட் புல்லெட் தான் கொஞ்சம் தடிமன ஆட்கள் மட்டும் செலுத்த முடியும்
வண்டி விழுந்துவிட்டால் இருவர் வேண்டும் தூக்கிவிட

இன்டிகாடோர் எல்லாம் போட்டு ஓட்டுறீங்க
நல்லா இருக்கு அண்ணா

RAMA RAVI (RAMVI) said...

//2081-ல் நாட்டில் மொத்தமாக மின்சாரம் என்பதே ஒழிந்து அனைவரும் உடலுழைப்பில் சர்வ காரியங்களையும் செய்து க்ஷேமமாக வாழ்ந்தார்கள். :-//

அட இது நன்னாயிருக்கே..

சாந்தி மாரியப்பன் said...

ஸ்டாண்ட் போட்ட புல்லட்டுல எடுத்த போட்டோவா,..

செல்மொழிநல்லாருக்கு,.. அங்கேயும் இங்கேயும் ரசிச்சேன்

:-)

சிவகுமாரன் said...

போச்சு RVSஇன் இமேஜே போச்சு

RVS said...

@மோகன் குமார்
ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்தேன். ரொம்ப நல்லா இருந்தது மோகன். :-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்

வந்துட்டீங்களா வாங்க...வாங்க... :-)

செல்மொழி கேட்கும் போது எனக்கே மிகவும் பிடித்தது. :-)

RVS said...

@கோவை2தில்லி
இரசித்ததற்கு நன்றி சகோ! :-)

RVS said...

@ஸ்ரீராம்.

நாட்டைக் காப்பாற்ற... :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்

நன்றி தலைநகரமே! :-)

RVS said...

@Rathnavel Natarajan
நன்றி சார். :-)

RVS said...

@Avargal Unmaigal
நன்றிங்க.. :-)

RVS said...

@Siva sankar

தம்பி ரொம்ப நாளாச்சே பார்த்து..
புல்லட்...புல்லட்..புல்லட்.. :-)

RVS said...

@RAMVI
ஒரு ஐந்து நிமிடத்தில் எழுதியது.. கரண்ட் ப்ராப்ளத்தை நினைத்து.. :-)

RVS said...

@அமைதிச்சாரல்
ஸ்டாண்ட் போட்ட புல்லட்டா... நல்லா ஓட்டுறீங்க மேடம்.. :-)

RVS said...

@சிவகுமாரன்

இதான் ரியல் இமேஜ் சிவா! :-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails