Friday, March 5, 2010

உத்யோகம் புருஷ லட்சணம்

 எனக்கு அவ்வளவாக வேலை தேடி பழக்கம் இல்லாவிட்டாலும், இப்போதெல்லாம் யார் ஒன்றை பின்பற்றவில்லையோ அதை ஊருக்கு போதிப்பது  தற்போதைய இயல்பாகிவிட்டபடியால் இந்த பட்டியல்
 1. நேர்முகத்தேர்வு பத்து மணிக்கென்றால், ஒன்பது நாற்பதுக்கு வீட்டிலிருந்து கிளம்பாதீர்கள். ஒரு அரை மணி முன்னால் சென்றால் யாரும் உங்கள் காலை ஒடித்துவிடமாட்டார்கள்.
 2. பஸ்சில் ஏறுவோர்: ஒரு பஸ்சில் இரண்டு லோடு கூட்டத்தோடு வரும் பஸ்சில் ஏறாமல் கொஞ்சம் கூட்டம் குறைச்சலாக உள்ளதில் செல்லவும்.
 3. ஆட்டோ சவாரி: ரேஸ் ஆட்டோவை தவிர்க்கவும். கூலி பேசி ஏறிச் செல்லவும். மீட்டருக்கு மேல் கீழ் எல்லாம் போட்டு தரவேண்டுமா என்று கறாராக கேட்டு ஏறவும்.
 4. டூ வீலர்: ரொம்ப புழுதி, மழைக் காலமாக இருந்தால் சாலையில் உள்ள சிறு சிறு குட்டைகள், பேருந்து ஜன்னல்கள்  ('புளிச் புளிச்' என்று 'பராக்' அல்லது 'வெற்றிலைச் சாறு' அபிஷேகம் கிடைக்க பெறுவீர்கள்) போன்றவற்றைப் ஜாக்கிரதையாக பார்த்தும் அந்த பக்கம் இந்த பக்கம் செல்லும் கன்னிகளை(அனைத்து பெண்டிரும் அடக்கம்) பார்க்காமலும் செல்லவும்.
 5. போர் வீலர்: நிறுத்துமிடம் உள்ளேயா வெளியேயா என்று கவனித்து கம்பெனி உள்ளே செல்லவும். அங்கே உள்ளே இடம் இல்லையெனில் வெளியே மெதுவாக இடது பக்கம் இடம் தென்படுகிறதா என்று எல்லோரிடமும் திட்டு வாங்கிக் கொண்டு கொஞ்சம் தூரம்  சென்றேனும்  நிறுத்துங்கள்.
 6. இரண்டு மற்றும் நான்கு சக்கர ஓட்டிகள் நன்றாக பூட்டியுள்ளதா என்று கவனமாக பார்த்தபின் நேர்முகத்துக்கு செல்லுங்கள். அங்கே கேள்வி கேட்கும்போது வண்டி சரியா பூட்டினேனான்னு தெரியலயே என்று நினைத்துக் கொண்டு மலங்க மலங்க முழித்தால் அந்த இண்டர்வியூ பூட்டகேசு என்று அர்த்தம். இழவு வீட்டிற்க்கு சென்றது போல் சொல்லிக்காமல் கொல்லிக்காமல் ஓடி வந்து விடவும்.
 7. சுயபுராண விளக்கங்கள் (Resume) இரண்டு மூன்று பக்கங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும். கருமித்தனம் பார்க்காமல் அங்கே 'வரவேற்'பில் கொடுக்கவும்.
 8. "கந்தலானாலும் கசக்கிக் கட்"டை கட்டாயம் கடைபிடிக்கவும். அவசியம் ஷு அணியவும். கிராமராஜன் சட்டை பேண்டை தவிர்க்கவும்.
 9. கழுத்துக்கு டை, மேலுக்கு கோட் போன்றவற்றை நிறுவன தேவையின்றி அணியவேண்டாம். நேர்முகம் செய்பவர் மேற்கண்டவற்றை அணியவில்லை என்றால் "ஆடையில்லா ஊரில் கோவணாண்டி லூசு" கேசாகிவிடும்.
 10. எழுத்துத் தேர்வு முடிந்து நேர்முகத்திற்கு காத்திருக்க நேரிட்டால் எதிரே உட்கார்ந்திருக்கும் அந்தரங்க காரியதரிசியை உற்று பார்ப்பதை அறவே தவிர்க்கவும். அவர் மேல் கரிசனம் உள்ள மேலதிகாரி இதனாலேயே  உங்களை நிராகரிக்கலாம்.
 11. ஒருவருக்கு மேல் நேர்முகம் செய்வதற்கு உள்ளே இருந்தால் அனைவருக்கும் வணக்கம் சொல்லுங்கள். மூன்று பேருக்கு மேல் இருந்தால் மைய்யமாக ஒரே ஒரு "குட் மார்னிங்' அல்லது 'குட் ஆப்டர்நூன்' சொல்லுங்கள்.
 12. நேர்முகத்தில் தெரியாது தெரியும் என்று தைரியமாக சொல்லுங்கள். வழ வழ கொழ கொழ என்று இழுத்து சொல்லி அந்த இடத்தை நாற அடிக்காதீர்கள். உங்களுக்கு தெரியவில்லை என்றால் "என்ன விடை?" என்று நேர்முகத் தேர்வாளரை தயவு செய்து கேட்காதீர்கள். அவர்கள் 'திருவிளையாடல்' நாகேஷ் போன்றவர்கள். விடை கேட்டதற்க்காவே உங்களை பொசுக்கி விடுவார்கள்.
 13. "பூதவேலைகள்.காம் (monsterjobs.com)" மற்றும் "வேலையாள்.காம் (naukri.com)" போன்ற வலை வேலைவாய்ப்பு தளங்களில் பதிவு செய்திருப்போர் தங்கள் கம்பெனிக்கு கண்ணில் கருப்பு துணி கட்டுங்கள். உங்கள் மேலாளர் தேடும் போது மீண்டும் நீங்களே அவரிடம் சிக்கி விடாமல் உங்கள் கம்பெனிக்கு "பில்டர்" போட்டுவிடுங்கள்.
இவ்வளவும் செய்தால் வேலை நிச்சயமா என்றால்  அதற்க்கு நான் கியாரண்டி கிடையாது. சிபாரிசு எதுவும் இல்லாமல் இடுகாட்டிலேயே இடம் கிடைக்குமா என்ற இந்த காலத்தில் வேலை கிடைக்குமா என்று காழியூர் நாராயணனை கேட்டுத்தான் சொல்ல வேண்டும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails