Wednesday, March 17, 2010

கரன்ஸி ( மாயா Vs மாலை )


மேலேயிருக்கும் பெண் அணிந்த மாலை (மாலை மட்டும், தயவு செய்து மற்றவைகளை உற்று நோக்காதீர்கள். மாயாவதி படத்தை இங்கே பிரசுரிக்க விருப்பம் இல்லாததால் இந்த இளமையான படம். பெண் ரசிகைகள்/வாசகிகள்  அனுசரித்துக்கொள்ளவும்)  போல் இருந்தால் ஒன்றும்  பிரச்சினையில்லை.

கன்ஷிராமின் பிறந்த நாளைக்கு உத்திரபிரதேச முதல்வர் மாயாவதிக்கு அவரது அபிமானிகளால் மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது மக்களவையில் கடும் அமளிக்குள்ளாகியது. பொதுச்சேவையில்(?) இருப்பவர்களுக்கு மாலை அணிவிப்பது ஒன்றும் நம் நாட்டில் புதிதல்ல. ஆனால் இந்த மாலை பூவினாலோ, புஷ்பத்தினாலோ அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்கிறது. ஒரு ரைமிங்காக இருக்கட்டுமே. புத்தம் புது ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சரமாகத் தொடுத்து ஐந்து ஆட்கள் சர்வ ஜாக்கிரதையாக மேலே தூக்கி பிடித்து அந்தம்மாவை உள்ளே நுழைந்து வெளியே நோக்கி கையை ஆட்ட சொல்கிறார்கள். இந்த டிரென்ட் தொடர்ந்தால் "பூ கட்டுவது" போன்று பணம் கட்ட கூட கட்சிகளுக்கு ஆள் தேவைப்படலாம். இதன் மூலம் நாட்டில் ஒரு புது வேலை வாய்ப்பு உருவாக்கபடுவதை நினைத்தால் இவர்களைக் கண்டு நம் கண்கள் பனித்து நெஞ்சு நனையும் நிலை உருவாகிறது. தோள் மேல் போட்டால் தான் மாலை என்ற நிலை மாறி தோளுக்கு மேலே தூக்கி பிடிக்கும்படி ஆனது தான் இந்த மாதிரி செயல்களின் பெரிய நகைச்சுவை. இவ்வளோ பெரிய மாலையை தோளில் ஒரே போடாக போட்டால் அவர்களுக்கு ஏதேனும் அங்கஹீனம் ஏற்பட்டு அசம்பாவிதம் நடந்து விட்டால் அப்புறம் அந்த மாண்புமிகுக்களை கீழே கிடத்தி மாலை போடும்படி சந்தர்ப்பம் அமைந்துவிடும் என்றஞ்சி இவ்வாறு ஏற்பாடு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆட்டை அய்யனாரிடம் அழைத்துச் செல்லும்போது கூட மாலையிட்டு மஞ்சளிட்டுதான் கொண்டு செல்கிறார்கள். அங்கே ஆடு காவு வாங்கப்படுகிறது இங்கே நம்மை தலைவர்கள் ஆடாக பலியிட்டு விடக்கூடாது என்பதற்காக அடிப்பொடிகள்/அல்லக்கைகள் இதுபோன்ற அசிங்கங்களை அரங்கேற்றுகிறார்கள். இவ்வளவுதான் வித்தியாசம். இந்தியாவின் எந்த மாநிலம் ஆனாலும் இந்த பிறந்தநாள் கொண்டாடுவது ஒரு பண்ட் ரைஸிங் (Fund Raising) உற்சவமாகிவிட்டது. ஆடு, கோழி போன்றவைகளை கொடுப்பது, வீர வேல், வாள் போன்ற ஆயுதங்களை பரிசளிப்பது,அலகு குத்தி காவடி எடுப்பது (தலைவர் பகுத்தறிவுவாதியாக இருந்தால் கூட) என்று ஆரம்பித்த இந்த பிறந்தநாள் திருவிழாக்கள் இன்று ஒரு மொய் விருந்து கணக்காக மாறியது தான் இந்த நாட்டின் அவலம். பச்சை,சிவப்பு, கருப்பு என்று பணத்தை பல நிறங்களில் வைத்திருப்பவர்கள் அதை வெள்ளை ஆக்குகிறார்கள். இந்த பணநாயக நாட்டில் இது ஒன்றும் செய்யக்கூடாத செயல் அல்ல என்று அரசியல் 'அறிஞர்கள்' சமாதானம் பேசுவார்கள்.

ஆனால் நம்மாட்களுக்கும்  மாலை போடுவது என்பது ஒரு ஜாலியான பொழுதுபோக்கு விளையாட்டு. பயந்து பயபக்தியோடு தரையோடு தரையாக தவழ்ந்து சென்று மரியாதையுடன் இச்செயலில் ஈடுபடுவோரே நாளை அதே தலைவனுக்கு பிஞ்ச செருப்பு மாலை போட்டு தனது எதிர்ப்பை தெரிவிப்பார்கள். கவுண்டமணியின் "அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா..." என்ற சூரியன் பட வசனம்தான் நமக்கு காதில் கேட்கிறது. மதுகோடா போன்ற ஆட்களுக்கு மாயாவதி போன்றோரின் தனக்கு மட்டும் அல்லாமல் தன் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடி சம்பாதிக்கும் சாமர்த்தியம் இல்லாததால் மாட்டிக்கொள்கிறார்கள்.

முற்காலத்தில் வாரிசு இல்லாத தேசத்தில் யானையிடம் மாலை கொடுத்து யார் கழுத்தில் விழுகிறதோ அவர்களை  அரசாள சொல்வார்கள். இப்போது அந்த கவலை இல்லை, ஏனென்றால் எல்லோருக்கும் (அரசியல்) வாரிசு இருக்கிறார்கள்.  ஆனால் கழுத்தில்  மாலை விழுவது மட்டும் இன்னும் நிற்கவில்லை. யானைடமிருந்து அல்ல. உலக சரித்திரத்தில் இந்த அரசியல்வியாதிகள் செய்வது போல யாரேனும் செய்தார்களா என்று தெரியவில்லை. என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் "எனக்கு யாராவது இந்த மாதிரி மாலை போட்டார்கள் என்றால் உங்க எல்லோருக்கும் பெரிய கும்பிடு போட்டுவிட்டு எங்காவது கண் காணாத இடத்துக்கு போய் நிம்மதியா இருப்பேன்" என்று அங்கலாய்த்தார்.

என்னுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் பதினாறாம் தேதி வருகிறது. நமது இந்தியாவின் சுதந்திரதினத்திற்கு அடுத்த நாள். மிகவும் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள கூடிய தினம் அது.அல்லது உங்கள் பி.டி.ஏ, அலைபேசி, ஷேட்டுயுலர், கணினி போன்றவற்றில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அன்று யாராவது எனக்கு 'ஸ்வர்ண மாலை' போடுவார்களா என்று வழிமேல் விழிவைத்து காத்திருப்பேன். அட்வான்ஸ் நன்றிகள்.

1 comments:

Madhavan Srinivasagopalan said...

"..அல்லாமல் தன் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடி சம்பாதிக்கும் சாமர்த்தியம்..."

இதுக்குக் கூட ரூம் போட்டு யோசிப்பாங்களோ ?

ரொம்ப அலகாச் சொல்லிபுட்டீங்க அப்பு..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails