Wednesday, November 23, 2011

சுட்டு விளையாடு - ரிலே சிறுகதை

முன் குறிப்பு: ஒரு மாமாங்கத்துக்கு அப்புறமா ஒரு பதிவுக்கு முன்குறிப்பு எழுத வேண்டிய கட்டாயம் இப்போது. மெட்ராஸ்பவன் ப்ளாக் உரிமையாளர் சிவா ஒரு ரிலே கதை எழுதவேண்டும் என்ற அவரது அவாவை ஒருநாள் என்னிடம் தெரிவித்தார். ’சரி’ என்று நான் ஒப்புக்கொண்டேன். க்ளைமாக்ஸ் எழுத பதிவுல ஷங்கரைக் கூப்பிட்டிருக்கிறார் என்று இந்த வரியின் “க்ளை...” அடிக்கும்போதுதான் தெரியவந்தது. சரி ஒரு இழுப்பு இழுத்துப் பார்க்கிறேன். தலைப்பும் முதல் பாகமும் எடுத்துக்கொடுத்த சிவாவின் பதிவு இங்கே.

** சிவாவின் தொடக்கம் **
"இன்னாடி எங்கொடத்துக்கு முன்னால ஒங்கொடத்த வச்சிருக்க. அடிங்கு. அடிக்கடி எனக்கு தொந்துரவு குட்துனே கீற. நாரிப்புடும் நாரி. ஒம் புருஷன் $%$%^^&#. நீ இட்லிய மட்டுமா $%ஃ&$# " என சென்ற வாரம் B ப்ளாக் ராஜி செய்த குழாயடி ஷ்பெஸலாபிஷேகத்தில் அவமானப்பட்டவள்தான் அதே ப்ளாக்கின் கீழ் வீட்டில் வசிக்கும் மகா. மெயின் ரோட்டோரம் தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம். சென்னை ஹவுசிங் போர்டில் வசிக்கும் இந்த இருவருக்கும் அவ்வப்போது லேசான உரசல்கள் வருவதுண்டு. அதுவும் ராஜியின் கணவன் சேகர் அரசியலில் வைட்டான ஆள் என்பதால் மகாவை கொஞ்சம் அதிகமாகவே வசைபாடுவாள் ராஜி. மகாவும் சளைத்தவளில்லை. ஆனால் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை எப்போதும் பிரயோகிக்காதவள். கணவன் இல்லை. மகன் படிப்பது எட்டாம் வகுப்பு.  

நேற்று: 

ராஜியின் எதிர்வீட்டில் இருக்கும் சந்திரா பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லாததால் இட்லி பார்சலை தந்துவிட்டு சென்றாள் மகா. அடுத்த அரைமணி நேரத்தில் "ஐயய்யோ..பீரோல வச்சிருந்த 7,000 ரூவாயக்காணுமே. வூட்டு கதவ தாப்பா போடாம குளிஸ்ட்டு வர்துக்குள்ள யாரோ எத்துட்டாங்களே" என ஹவுசிங் போர்ட் அலற ராஜியின் ஒப்பாரி ஓங்கி ஒலித்தது. "யக்கா. மேட்ரு தெர்மா.  ராஜிக்கா வூட்ல யாரோ பண்த்த சுட்டுட்டாங்களாம்" என்று மகாவிற்கு ப்ளாஷ் நியூஸ் தந்துவிட்டு ஓடினான் பொட்டிக்கடை பாலா. அனைத்தையும் பீடியை வலித்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் ஓணான். வயது 19. ராஜியின் கூச்சலை கேட்டு வெளியே வந்தாள் ரேகா. வயது 21. இருவருக்கும் படிப்பு வாசம் இல்லை. அவ்வப்போது கண்கள் மட்டும் லேசாக மோதிக்கொள்ளும்.

** ஆர்.வி.எஸ் பார்ட்**

ஓணான் நீங்கள் எதிர்பார்த்தபடி ஒல்லியான தேகக் கட்டோடு இருந்தாலும் அஞ்சப்பரில் ஒரு ஃபுல் சிக்கன் ஆர்டர் செய்து தனியாளாய் உள்ளே தள்ளிவிடுவான். ஆமாம். அதற்கு முன்னால் ஒரு ஷீவாஸ் ரீகல் ஹாஃப் வேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வரப்போகும் “பவர்” பாண்டி பற்றி இப்போதே சொல்லிவிட வேண்டும். அவன் வந்தால் வேறு கதை எதுவும் சொல்லமுடியாது.

28வது வட்டச் செயலாளராக ஆளுங் கட்சியில் இருப்பதால் முழுநேரமும் கட்சிக் கரை வேட்டியோடு சுற்றும் பாண்டிக்கு இவன் தான் ஆல் இன் ஆல் அல்லக்கை. அவ்வப்போது போதையில் கண் சிவந்தால் கைம்பெண் மகாவை கழுகுப் பார்வையில் கொத்திக் கலைத்துப் போடுவான் பாண்டி.

“டே நாட்டார் கட்ல ஒர் சீர்ட்டு வாங்கு”

“யான்டா அந்த வூட்டாண்ட கல்லு, மணலு, பழுப்பெல்லாம் வந்து இறங்குதே யெஸ்ட்ரா துட்டு ஆவும்ங்கிற மேட்ர அந்த பேமானியாண்ட சொன்னியா?”

“..த்தா... கொசப்பயலே! சரக்கு அல்லாத்தையும் அப்டியே சரிச்சிப்புட்டியே நாங்க இன்னாத்த நாக்க வலிக்கறா?”

”டோம்ரு! சத்தியத்துக்கு ஓடிப் போயி ரஜினி பட்துக்கு நாலு டிக்கிட்டி வாங்கிட்டி வா”

“ஜல்தியா போயி ஒரு ஆட்டோ இட்டாடா.... புள்ள இஸ்கூலு போனும்”

படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து இரவு வாயில் எச்சில் ஒழுக டாஸ்மாக் வாசலில் விழுந்து மட்டையாய் கட்டையை நீட்டும் வரை ஓணான் கம்பெனியில்லாமல் நகராது அவன் தினப்படி வாழ்க்கை.

ஓணான் பீடியை தூக்கிக் கடாசிவிட்டு லூங்கியை தூக்கிக் கட்டிக்கொண்டான். காம்பௌண்ட் ஓரம் தண்ணி தூக்கப் போன ரேகாவைக் கபளீகரம் செய்யும் பார்வையோடு நெருங்கினான். அவன் கண்களில் ஃபுல் கேஸ் இருக்கும் கோலி சோடாவை உடைத்தது போல காதல் குபுகுபுவென்று கொப்பளித்தது. ”யம்மா நா இஸ்கூலுக்கு போயாரேன்” மகாவின் மகன் ரஜினி போல தலையைக் கோதியபடி இவர்களைக் கடக்க ஓணான் அவனை மறித்து “இன்னாடா, இன்னிக்கி ஈரோ கணக்கா படா ஷோக்காக் கீறே! ஈரோயின் குஜிலி எதாவது மடிஞ்சிடப்போவுது” என்று ரேகாவைப் பார்த்து இளித்துக்கொண்டே கேட்டான். “ஐயே!..சொம்மாயிரு.” என்று வெட்கப்பட்டவனிடம் “த்தோடா.. ரொம்பத் தான் சிலுத்துக்கிறியே” வம்பிழுத்தான் ஓணான். 

“யார்ரா அங்கின இஸ்கூலு போறவங்கிட்ட வம்பு பண்னிகினு” என்ற மகாவின் குரல் உயர்த்தலுக்கு அவனுக்கு வழிவிட்டு ரேகாவை பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் ஓணான். “டே அக்கிஸ்டு இன்னாடா கையில வாச்சி கீச்செல்லாம் தூள் பரத்துது. நாஷ்டா துண்ட்டியா?” என்று பின்னால் வந்து தோளைத் தட்டினான் ’பவர்’ பாண்டி. பாண்டி டைனோசர் போல இருப்பான். இரவு நேர மிலிட்டரி ஓட்டல்களில் தாறுமாறாகத் தின்றுக் கொழுத்திருந்தான். பவர் ராஜியின் அரசியல் புருஷன்.

”அண்ணாத்தே! உன்னிய எங்கெல்லாம் தேட்றது. நைட்டுலேர்ந்து அண்ணி கிடந்து அல்லாட்றாங்க. எவனாது உன்னியப் போட்டான்னு நென்சேன். ஹக்காங்” ஓணான் பரபரப்பாக கேட்டான். ரேகா கையில் இருந்த ”மஞ்சா கலர் பக்கிட்டு”டன் டேங்கடிக்கு ஒதுங்கினாள்.

அடிங்.. கய்தே இன்னத்துக்குடா இம்மாம் பெருசா குரல் உட்றே. நைட்டு வண்ணாரப்பேட்டையில ஒரு பஞ்சாயித்துன்னு இட்டுகினு போய்ட்டானுங்கடா. அங்க ஒரே பேஜாராப் பூடிச்சு”

டீக்கடைப் பக்கம் ஒதுங்கி சிகரெட் பற்ற வைத்த பாண்டியிடம் உரிமையாக ஒன்று வாங்கி கொளுத்தி இழுத்தான் ஓணான். பெர்முடாஸ் போட்ட மெட்ரோ வாட்டர்காரன் ரேகாவின் புடவை விலகிய இடுப்பை ரசித்துக்கொண்டே அவள் குடத்தில் தண்ணீரைப் பீய்ச்சினான். ”பீரோல வச்சிருந்த ஏளாயிரம் காணும்னு அண்ணி சவுண்டு குடுக்குது” என்றதற்கு சலனமில்லாமல் அவனைப் பார்த்தான் பவர்.  பின்பு நிதானமாக சிகரெட்டை ரசித்துக் குடித்தான். புகை வளையம் விட்டான். ஐந்தாறு முறை அவனைச் சுற்றி ”தூ..தூ”வென்று காரித் துப்பிக்கொண்டான்.

”படா மேட்ரு சொல்லியும் அசால்ட்டாக் கீறபா நீ..” என்று பேச்சை ஆரம்பித்தான் ஓணான்.

“எங்கூட்டுல்யே கை வக்கிறதுக்கு காலனில எவ்னுக்குடா அவ்ளோ தெகிரியம். லோக்குலு டேஸ்னுல நம்பாளுதான் இன்ஸ்பெட்டரு. அவராண்ட சொல்லி டவுட்டுல அக்கிஸ்டு நாலு பேரை முட்டிக்கு முட்டி தட்டினா சரியாயிடும்” கொஞ்சம் கொஞ்சமாக காரமாகப் பேச ஆரம்பித்தான் பவர். கோபம் தலைக்கேறினால் ”க்..க்..” என்று கனைக்க ஆரம்பித்துவிடுவான். தண்ணீர் நிரம்பிய குடத்தை இடுப்பில் ஈரத்துடன் ஏந்தி செல்லும் ரேகா ஒரு ஓரப்பார்வையில் ஓணானுக்குக் கொக்கி போட்டாள். இவன் மடிந்து விட்டான்.

”டே டோமரு! இங்க பாருடா. வளிஞ்சது போதும். அந்த ஃபிகருக்குதான் எங்கூட்டுப் பணத்த சுட்டியா” என்று எதிர்பாராத விதமாக திடீரென்று ஓணானின் சட்டையைப் பிடித்தான் பவர். 

“தோ பாருபா. மேலேர்ந்து கைய எடு. எம்மேல எந்த மிஷ்ட்டேக்கும் இல்ல”

“அப்டியே மெறிச்சேன்னா. நீ பெரீய ரீஜென்டாடா”

“புடாக்கு மாறி பேசாதபா. ஓவ் வூட்ல நா கை வைப்பனா”

“அடிங்.. எதுனா பேசுன மெர்சலாப் பூடும்.  நா பாக்கலுன்னு நென்ச்சியா. ம்மால..  அந்த இட்லிக்காரி பையங்கூட உன்கு இன்னாதுடா பேச்சு!”

“அலோ. இட்லிக்காரி பையங் கூட பேசுனா உன்கு என்னாத்துக்கு ஏறிக்குது..” வலது கையை நடுவிரல்கள் அனைத்தையும் மடித்து கட்டையையும் சுண்டியையும் விரித்து சங்கூதும் போஸில் வைத்துக்கொண்டு கேட்டான் ஓணான்.

”யெஸ்ட்ரா ஒரு வார்த்த பேசுன. மூஞ்சியப் பேத்துடுவேன். வாய் வெத்தலபாக்கு போட்டுக்கும். தெர்தா. ”

“சொம்மா உதாரு உடாத. போன வாரம் பீச்சாண்ட உன்னியும் இட்லிகாரியையும் ’சுண்டி சோரு’ சேகரு ஒன்னா பார்த்தானே. எங்களுக்குத் தெரியாதா பின்ன!”

இருவருக்கும் கொஞ்ச கொஞ்சமாய் வார்த்தை தடித்தது. “த்தா...ஓவரா பேசுற” என்று விரலை மடக்கி ஓணான் முகத்தில் பலமாக ’சொத்’தென்று ஒரு குத்துவிட்டான் பவர். கடைவாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டு ”உம் மூஞ்சில எம் பீச்சாங்கைய வக்கோ. இப்போ நீ பீஸுடா!!” என்று பதிலுக்கு ஓணான் அவன் முகத்தில் இடது கையை வைத்து கீழே தள்ளினான். விழுந்து புரண்டு எழுந்தான் பவர். அப்போது அடித்த காற்றில் அவர்களைச் சுற்றி புழுதி பறக்க ஒரு ஃபைட் சீனுக்கு அந்த காலனி தயாரானது. சண்டை முற்றி இருவரும் ஆடை அவிழ கட்டிப் புரள்வார்கள் என்று ஜனம் கூட்டமாய் வேடிக்கைப் பார்த்தது. ரேகா முன்னால் அவமானப்பட விரும்பாத ஓணான் கைலியை இறுக்கிக் கொண்டு கோதாவில் இறங்கினான்.

பவர் வெள்ளை வேஷ்டியை மடித்துக் கட்டும்போது இடுப்பில் சொருவியிருந்த லைசென்ஸ் இல்லாத ரிவால்வார் கீழே விழ அதைப் பார்த்து பயந்து ஒதுங்கினான் ஓணான். அப்போது.....

****இங்கிருந்து பதிவுல ஷங்கர் கேபிள் சங்கர் க்ளைமாக்ஸைத் தொடருவார்****


பட உதவி: www.thehindu.com

-

13 comments:

ADHI VENKAT said...

சென்னைத் தமிழில் வித்தியாசமா இருக்கு.

க்ளைமாக்ஸ் என்னன்னு பார்க்கணும்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சுவாரசியம். தூர்தர்ஷனில் ஒரு தீவளியின் போது, நான், அனுராதாரமணன், சிவசங்கரி, தேவிபாலா, படுதலம் சுகுமாரன், கௌதம நீலாம்பரன் அனைவரும் சேர்ந்து இப்படி ஒரு தொடர் கதை சொன்னோம். நிறைய பாராட்டு கிடைக்கப் பெற்றோம். கதையை ஆரம்பித்தது சிவசங்கரி. முடித்தது அனுராதா ரமணன்.

வெங்கட் நாகராஜ் said...

சோக்கா கீது பா கத.... !

எப்டி முடிதுன்னு கேபிள் அண்ணாத்த பக்கத்துல பாக்கறேன்... :)

Sivakumar said...

ஏரியால பூந்து விளையாடி இருக்கீங்க. நாளைய இயக்குனர் என்ன க்ளைமாக்ஸ் வச்சிருக்காரோ. பாக்கலாம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எந்த் மிஷ்டேக்கும் தெர்லபா. மெய்யாலுமே படா சோராக் கீது.ஸபாஸ். எஸ்ட்ராவா வேறொன்னியும் சொல்லத் தாவல.

அப்பாதுரை said...

சுட்டு விளையாடு - தலைப்பு அருமை.

அப்பாதுரை said...

அந்தக் கதை புத்தகமாக வந்ததா, சொல்லுங்களேன் வித்யா சுப்ரமணியம்? தேடிப்பார்த்து படிக்கிறேன். நன்றி.

RVS said...

@கோவை2தில்லி
நன்றி சகோ! :-)

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
மேடம். அந்தக் கதையை பகிர முடியுமா? :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஹங்காங்... தல நானும் அதுக்குதான் வெயிட்டிங்கு.. :-))

RVS said...

@! சிவகுமார் !
நன்றி சிவா! :-)

RVS said...

@சுந்தர்ஜி
தாங்கீஸ் பாஸு! :-)

RVS said...

@அப்பாதுரை
ஓ.கே! தலைப்பு வச்சது அந்த சிவா தம்பிதான்.

:-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails