Friday, December 7, 2012

மன்னார்குடி டேஸ் - வெள்ளரிப் பிஞ்சு 50 பைசா

சுதர்ஸன் காஃபியில் தான் ஏ க்ளாஸ் காஃபிப்பொடி கிடைக்கும். நேஷனல் ஸ்கூலுக்கு எதிரில் மணமணக்க ஸ்தாபிதமானது அக்கடை. காஃபிக்கொட்டை வறுபடும் வாசனை ஹரித்திராநதியில் எங்களைச் சுண்டி இழுத்து கடைத்தெருவிற்கு கிளம்புவோம். சுதர்ஸனுக்குச் செல்லும் முன் மன்னார்குடி பஜாரின் பர்ட்ஸ் ஐ வ்யூ கிடைக்க ஒரு ஏற்பாடு செய்வோம்.


கருடாழ்வார் மாதிரி உங்களுக்கும் இறக்கை முளைத்து தரையிலிருந்து சடசடத்து வானுயர்ந்த ராஜகோபாலஸ்வாமி கோபுரத்துத் தங்கக் கலசங்களுக்கு இடையில் உட்கார்ந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரியும் ஒரு தலைகீழ் “L" தான் மன்னையின் பிரதான ராஜவீதி கடைத்தெரு. தேரடியில் ஆரம்பித்து பந்தலடியில் சைக்கிளில் சறுக்கிக்கொள்ளாமல் வலதுகைப் பக்கம் திரும்பி ஸ்ரீனிவாசா மெடிக்கல்ஸ் வரை இருப்பவைகளில் ஜவுளி, நாட்டு மருந்து, அனாஸின் விற்கும் அலோபதி, பலப்பம் இன்னபிற எழுது பொருட்கள், மளிகை ஜாமான், குஷ்பூவையும் கலாவையும் கோப்பைக்குள் அடக்கிய இரண்டு ஒயின்ஸ் கடை, பூக்கடை, அரிசிக்கடை, ஹார்ட்டுவேர்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கும்பகோணம் பாத்திரக்கடை, முறுக்குப் புழியற நாழி, ஜுவல்லர்ஸ் நகை நட்டு எல்லாம் கிடைக்கும். சைக்கிளில் துணிப்பையை மாட்டிக்கொண்டு மாசாந்திர சாமான்கள் வாங்கப்போவார்கள். இப்போது போல கையை வீசிக்கொண்டு ப்ளாஸ்டிக் கவர் எதிர்ப்பார்ப்பில் எந்த ஜனமும் கடைத்தெருவுக்குப் போகா!

கடிகாரம் எட்டு அடித்துவிட்டால் ஊர் சப்ஜாடாக அடங்கிவிடும். ”பரவாயில்லை எரியலாம்” என்று இஷ்டப்பட்ட விளக்குகள் தாங்கள் நிற்கும் துருப்பிடித்த இரும்புக் கம்பங்களின் கால்களுக்கு மட்டும் சன்னமான வெளிச்சத்தை சிற்றிழையாக இறைத்துக்கொண்டிருக்கும். சிலதுகள் மின் மின்மினிப் பூச்சியாய் உயிரை விடத் துடித்துக்கொண்டிருக்கும். அரசு டெண்டரின் லட்சணத்தால் அற்பாயுசில் தன்னை மாய்த்துக்கொண்டவைகளும் இதில் அடங்கும்.

போஷகரில்லா ஒன்றிரண்டு நாய்கள் தெருவோரத்தில் “த்தோ..த்தோ..த்தோ“ என்கிற அழைப்புக் குரலுக்காக தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வீடு தேடி உலாத்திக்கொண்டிருக்கும். எங்கள் வீட்டு வாசலிலேயே “சேப்பன்” ரொம்ப நாள் குடியிருந்தான். அவனுக்குத் தினமும் இரவு தயிர்சாதம் உண்டு. தெப்பக்குளக்கரையின் மதகு ஓரத்தில் யாராவது அரையிலிருப்பதை அகஸ்மாத்தாகத் தூக்கிக்கொண்டு சில விநாடிகள் உட்கார்ந்து எழுந்திருப்பார்கள். சரியாக அமாவாசைக் காலங்களில் பலஹீனமாக இருந்த தெருவிளக்குகள் அனைத்தும் பொசுக்கென்று அணைந்து தெருவை ஒட்டுமொத்தமாக இருட்டடிப்பு செய்துவிடும். ”நம்ம தெரு எப்பவுமே ஏகாதேசித் தெருடா” என்று ஆதங்கக் குரலெழுப்புவாள் என் பாட்டி.

“யே! கடத்தெரு போனா சித்த இத வாங்கிண்டுவா” என்று அக்கம்பக்கம் ”சித்த இத..” “சித்த இத” என்று இழுத்து இழுத்துச் சொன்ன லிஸ்ட் ஸகிதமாக ஏழு மணி வாக்கில் நானும் சித்தியும் காஃபிப்பொடியும் இன்ன பிற சாமான்களும் வாங்கக் கடைத்தெருவிற்குப் புறப்படுவோம். சங்கிலியின் இரு வளையங்கள் இணைந்திருப்பதைப் போல பவானி சித்தியின் கையோடு கையை நுழைத்துக்கொண்டு சாமான்கள் வாங்கப் போவேன். அரை நிஜார் வயசு. கடைத்தெரு போனா வாய்க்கு என்ன கிடைக்கும் என்று அலைபாயும் மனசு. ஃபயர் சர்வீஸ் தாண்டும்போதே தாலுக்காஃபீஸ் ரோடு முனையில் தள்ளுவண்டி கடலைக்காரர் இருக்கிறாரா என்று காற்றில் ஆடும் காடா விளக்கைக் கண்கள் தேடும். “டொட்டொய்ங்..டொய்ங்..” என்று இரும்புச் சட்டியில் மணியடித்து தன்னுடைய இருப்பை சத்தமாகக் கொரிப்பவர்களுக்கு அறிவிப்பார். மன்னையின் காவிரி மணலோடு சேர்த்து வறுத்த கடலைக்கு ருஜி அதிகம். கலந்திருக்கும் சில கசப்பான சொத்தைகளுக்குக் கூட.

”கடல..” என்று சித்தியின் புடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்து சங்கோஜமாக முணுமுணுத்தால்

“வரும்போது வாங்கித்தரேன்... பேசாம வா..”

என்ற ஸ்ட்ரிக்ட் டயலாக்கிற்கு மறுவார்த்தை பேசாமல் கடமுடா சப்தத்துடன், சொற்ப பயணிகளின் இடுப்பை ஒடித்துக்கொண்டே கிராஸ் செய்த சோழனை வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றது ஞாபகம் வருகிறது. ஒவ்வொரு முறை கியர் மாற்றும் போதும் டிஸ்கொதே லைட்டுகள் போல் பஸ்ஸுள்ளே அணைந்தாடும் விளக்குகளுடன் ஊர்ந்து செல்லும் பேரூந்துகள். சரியான நேரத்திற்கு வராமல் கழுத்தறுக்கும் சோழனை “சோழப் பிரும்மஹத்தி”ன்னு திட்டுவார்கள். எப்போது அந்த பஸ் சாலையில் உருளும் போதும் பிரும்மஹத்திக்கு உதாரணமாகத் தெரியும்.

கோட்டூர் அரங்கசாமி முதலியார் லைப்ரரியின் வாசற்தோரண வளைவின் நெற்றியில் ஒரு சோடியம் வாப்பர் எரிந்து ஊருக்கு அறிவொளியை வீசிக்கொண்டிருக்கும். பாட்டியின் தம்பி (மாமா தாத்தா) மன்னை வரும்போதெல்லாம் கிச்சுகிச்சு மூட்டியது போல நெளிந்து கொண்டே கேரியரில் உட்கார்ந்து வரும் அவரைச் சைக்கிளில் கஷ்டப்பட்டு பாலன்ஸ் செய்து நான் ட்ராப்பும் இடம்.

லைப்ரரி வாசலில் விரிந்திருந்த மணற்பாங்கான தேரடித்திடலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல அரசியல் பொதுக்கூட்டங்கள்(உ.தா.1: ”இங்கு குழுமியிருக்கும் எனதருமை மக்களிடம் நான் இங்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அரசியல் நாணயம் இவர்களுக்கு கொஞ்சமாவது இருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள்”, உ.தா.2: “ஊழலிலேயே குளித்த அவர்கள் தங்கள் ஆட்சியில் என்ன கிழித்தார்கள் என்றுதான் கேட்கவேண்டியுள்ளது”) நடைந்தேறும்.  நேரெதிரே ராயர் தோட்டம். பங்குனிப் பெருவிழாவில் ஒருநாள் ராஜகோபாலன் எழுந்தருளும் இடம். அன்று மட்டும் காட்டுச் செடிகளை சுத்தம் செய்து விளக்கெல்லாம் போட்டிருப்பார்கள். இல்லையேல் பெரும்பாலான நாட்களில் கும்மிருட்டாக லவ்வுபவர்கள் ஒதுங்கிப் பேச தோதான இடமாக இருக்கும்.

ரொம்பவும் வேகமில்லை. ரொம்பவும் மெதுவாகவும் இல்லை. தலை கோதும் இதமான காற்று. சீரான அடிகளில் நிதானமான நடை. இரைச்சலில்லா வீதி. பெரும்பாலும் எதுவும் பேசுவதில்லை. ஓரமாய் வாலைத் தூக்கி வாட்டர் ஃபால்ஸ் விடும் மாடு, குழந்தையை பாரில் அட்டாச் செய்த பேபி சீட்டில் உட்கார வைத்து சைக்கிளில் டபுல்ஸ் போகும் பவுடர் பூசிய தம்பதி, பள்ளியில் பார்த்த அன்யூனிஃபார்மில் தெரியும் ”யாரோ” பையன் என்று வேடிக்கைதான் பிரதானம். பேசுவதற்கு எதுவும் இல்லை. என்றைக்காவது “நல்லா படிக்கணும்” என்று சித்தி சொல்வாள். சாக்லேட்டுக்கும் கடலைக்கும் ஆசைப்பட்டு ”சரி” என்கிற திசையில் தலையசைப்புத் தன்னால் வரும்.

தேரடியில் கூட்டுறவு பால் பண்ணை ஆசாமிகள் சூடான பருத்திப் பால் மற்றும் மசாலா பால் வெங்கல டேங்கோடு அடுப்பில் ஏற்றி ஆவி பறக்க விற்றுக்கொண்டிருப்பர். எதிர்ப்புறம் சுவாமி தேரை மூடியிருக்கும் தகர கொட்டையில் ரெண்டு பேர் அற்பசங்கைக்கு ஒதுங்கியிருப்பர். ”குட்டிக்கோ” என்றவுடன் பாலருந்துபவர்களின் வயிற்றுக்கு இடையில் தெரியும் அரைகுறை வெளிச்ச விநாயகரைக் குட்டிக்கொண்டு மேலராஜ வீதி திரும்புவோம்.

மோகன் லாட்ஜ் அருகில் வழக்கம் போல ஒன்றிரண்டு பேர் கதை பேசிக்கொண்டு உட்கார்ந்திருக்க கடந்து போய் பெரிய போஸ்டாஃபீஸ் தாண்டினால் வருவது சோழன் மளிகை. அப்போது லெக்ஷ்மி ராம்ஸ் கொஞ்சம் ஃபேமஸான ஜவுளிக்கடை. நவநாகரீக துணிகளுக்கு என்று விளம்பரமும் வாசலில் வாயில் சேலை கட்டி இடுப்பு காட்டி நிற்கும் வெளுத்த பொம்பளை பொம்மையும் என் கண்களுக்குப் புதுசு. எதிர்ப்புறமிருக்கும் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடையில் காராசேவு பிரசித்தி. பொட்டலமும் கையுமாக வாசலில் நின்றுகொண்டே வயற்று வார்த்துக்கொண்டிருப்பார்கள். ஸ்டேட் பாங்கைத் தொட்டடுத்திருக்கும் கிருஷ்ணா பேக்கரியில் கருப்புச் சட்டைகள் சில காரசாரமான விவாதத்தோடு தென்படும். முன்புறம் டைனமோ விளக்கு வைத்த சைக்கிளோடு.

பார்த்துக்கொண்டே நடந்தால் வருவது ஜீவா பிஸ்கட்ஸ். பிஸ்கட் துரைக்கு என் மேல் ரொம்பவும் பிரியம் ஜாஸ்தி. காலையில் தெப்பக்குளம் குளிக்க வருகையில் வாசலில் உட்கார்ந்திருக்கும் என்னை “தம்பீ...” என்று ஆசையாகக் கூப்பிட்டுக்கொண்டே சைக்கிள் கிணிகிணிக்க செல்வார். பேக்கரியின் ட்யூப்லைட் மாட்டிய கண்ணாடி அலமாரியின் பின்னாலிருந்து பல வர்ண கேக் இந்தப் போக்கிரியை ”டேக் டேக்” என்று அழைக்கும்.

“கேக்கு...”

“இந்தா..” என்று கொடுக்கும் ரெண்டு ரூபாய்க்கு ப்ளம் கேக் ஒரு சின்னத் துண்டம் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு அப்படியே சென்றால் பந்தலடி வரும். பந்தலடிக்கு முன்னால் வரும் சுப்பிரமணிய முதலியார் நாட்டு மருந்துக்கடையில் கஷாயம் வைக்கக் கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி, கசகசா என்ற மருந்து சாமான்கள் கிடைக்கும். எப்போது கடைக்கு போனாலும் நெற்றி முழுக்க பட்டையில் சித்தர் போல இருப்பார் ஆகிருதியான முதலியார். இன்னும் கொஞ்சம் பொடிநடையாக பந்தலடியை எட்டித் திரும்பினால் அழகப்பா தாளகம். இந்த முறை சென்றபோது “அப்பா நல்லா இருக்காங்களா?” என்று விசாரித்தேன். யாரென்று கூட பார்க்காமல் கல்லாவில் காசைப் போட்டுக்கொண்டே “ம்ம்ம்” என்றான் பையன்.

அழகப்பா வாசலில் சர்பத் கடைபோட்டிருந்தார் பாய். அந்த பாய்க்கு நெருங்கிய தோஸ்த் நான். பிஸ்லெரித் தண்ணீரென்ற விசேஷமான திரவத்தின் ஆளுமை இல்லாத நேரம் அது. வெட்டிவேர் கலந்த பானைத் தண்ணீர்தான் எல்லோருக்கும் உண்ணீர். அதில் ரோஸ்மில்க்கும் கலப்பார் பாய். தையல் போட்ட கைலியோடு குடைக்கும் தையல் போடுவார். சர்பத் வியாபரமில்லாத போது குடை ரிப்பேர்தான் அவரது ஊடு தொழில். இரவு நேரங்களில் வெள்ளைப் படுதாவால் கடையைப் போர்த்தி தூங்கப்பண்ணியிருப்பார்.

நேஷனல் எதிரிலிருக்கும் சுதர்ஸன் காஃபியில் பவானந்தம் மற்றும் ஒன்னரைக்கண் துரைக்கண்ணு இருவருக்கும் பள்ளியின் உணவு இடைவேளையின் போது காஃபிப் பொடி பொட்டலமும் வெண்ணையை பட்டர் பேப்பரில் வைத்து மடித்துக்கொடுத்தும் பொதுச் சேவகம் புரிந்திருக்கிறேன். ஊருக்கே வெண்ணை மடிக்கும் திறமையை அங்குதான் வளர்த்துக்கொண்டேன் என்றும் மாற்றிச் சொல்லலாம். அது ஊத்துக்குளியா இல்லையா என்றெல்லாம் இந்தப் பித்துக்குளிக்கு தெரியாது. ”நூறு வெண்ணை” என்றால் அரைக்கரண்டி எடுத்து அளந்து நாற்புறமும் மடித்து க்ளிப் அடித்துக் கொடுக்கவேண்டும். “டீச்சர்! உங்க பையன் எவ்ளோ வேகமா காஃபிப் பொடி பொட்டலம் மடிக்கறான் தெரியுமா” என்று ஆச்சரியப்பட்டு மனோரஞ்சிதமான சர்ட்டிஃபிகேட் வேறு கிடைக்கும்.

“வெள்ளேரிப்பிஞ்சு நல்லாயிருத்துச்சா தம்பி?”

எந்த முகாந்திரமும் இல்லாமல் அன்றைக்கு இந்தக் கேள்வியை பவானந்தம் கேட்கும்போது அதன் தீவிரம் எனக்குத் தெரியவில்லை.

“ம்.. நல்லாயிருந்துச்சுண்ணே”. சிரித்தேன். ”பி கொட்டை குடுங்க” வளர்ந்த ஆள் ஒருவர் என்னைத் தாண்டி பவாவிற்கு கையை நீட்டினார்.

பர்ஸில் ரூபாய் காகிதங்களை எண்ணி எடுத்துக்கொண்டிருந்த சித்தி “எந்த வெள்ளேரிப்பிஞ்சு” என்று நெற்றி சுருக்கிக் கேட்டாள்.

“இல்ல. நேத்திக்கு ஸ்கூல் வாசல்ல வித்திகிட்டிருந்தான். தம்பிக்கு பிடிச்சுது. ஆனா கையில காசில்லை. ஒரு அம்பது பைசா நாந்தான் கொடுத்தேன்” எனக்குக் கொடுத்த லட்சம் கட்டி வராகன் ஐம்பது காசு கணக்கை கணகாரியமாக சித்தியிடம் காட்டிவிட்டார் பவானந்தம்.

“அரைக்கிலோ  ஏ காஃபி”

“சிக்கிரி கலந்தா?”

“ஆமாம். வழக்கமா வாங்கறா மாதிரிதான். நூறு சிக்கிரி”

பேச்சுவார்த்தை காஃபிப் பொடி வாங்குவதிலிருந்தாலும் கண்களால் என்னை அதீதமாகக் கண்டித்துக்கொண்டிருந்தாள் சித்தி. பொசுக்கி பஸ்பமாக்கி விடுவாளோ என்று பயந்தேன். எனக்குள்ளே நேற்று சாப்பிட்ட வெள்ளேரிப்பிஞ்சு படார் படாரென்று வெடித்துக்கொண்டிருந்தது.

“டீச்சர்! காஃபிப்பொடி இந்தாங்க.”

“இந்தாங்க அம்பது காசு”

“ச்சே.ச்சே. வேண்டாங்க..”

“இல்ல பவானந்தம். அஞ்சு பைசான்னாலும் கணக்கு கணக்குதான். இந்தாங்க..”

கடையிலிருந்து காலைக் கீழே வைத்ததும் ஆரம்பித்தது மண்டகப்படி.

“அம்பது காசு கடன் வாங்கியாவது திங்கணுமா?”

“இல்ல. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சாப்டா..”

“அதனால.. கடனுக்கு வாங்கி வயத்துக்குக் கொட்டிக்கக் கேக்குதோ?”

“இனிமே பண்ணமாட்டேன்.”

“வேணும்னா ஒரு ரூபா வாங்கிக்கோ. இது மாதிரி அம்பது காசு ஒரு ரூபான்னு வெளியில கடன் வாங்கி சாப்பிடாதே. கேட்கறதுக்கே அசிங்கமா இருக்கு.”

அர்ச்சனையை வாங்கிக்கொண்டே நேஷனல் திரும்பினால் பிள்ளையாருக்கு அர்ச்சனை நடந்துகொண்டிருந்தது. கேட்ட வரமருளும் ஆனந்த விநாயகர் திருக்கோயில். பரீட்சைக்கு அருள் புரியும் பிள்ளையார் பரீட்சார்த்தமாக யார் எந்த நற்காரியங்களுக்கு முயற்சித்தாலும் கைக் கொடுப்பவர். வரப்பிரசாதி.


”நல்ல புத்தி வரணும்னு வேண்டிக்கோ”

“ம்..”

“தலைக்கு குட்டிண்டு பன்னென்டு தோப்புக்கர்ணம் போடு. இனிமே யார்ட்டயும் கடன் வாங்க மாட்டேன்னு சொல்லிண்டே”

”யார்கிட்டேயும் கடன் வாங்கமாட்டேன்” என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். (பர்ஸில் அணிவகுத்து நிற்கும் கடன் அட்டைகள் இதை எழுதும்போது பல்லைக்காட்டி இளிக்கின்றன!)

குட்டிக்கொண்டேன்.

தோப்புக்கரணம் போட்டேன்.

சாம்பசிவக் குருக்களிடமிருந்து வீவுதியை வாங்கி பூசிக்கொண்டு பிரதக்ஷினம் செய்து நமஸ்காரித்தேன். திரும்பவும் அதே ரூட்டில் காலாற நடந்தால் தேரடியில் கடலைக்காரர் ”டொட்டொ..டொய்ங்..டொய்ங்..” என்று ரெண்டு தட்டு சேர்த்துத் தட்டுவார்.

ஒரு ரூபாய் கடலை பொட்டலம். தாராளமாக கூம்பு செய்து உள்ளே இறக்கிய கடலையை இருவிரலால் தோலுரித்து ஒவ்வொன்றாகக் கொரித்துத் தீர்வதற்கும் வீடு வந்து சேர்வதற்கும் நேரம் மிகச்சரியாக இருக்கும். எட்டரை மணி சீதாலெக்ஷ்மி கும்பகோணத்திலிருந்து மன்னைக்குள் “பாம்”மென்ற ஹார்னோடு நுழைந்திருக்கும். கைகால் அலம்பி ரசஞ்ஜாம். மோருஞ்ஜாம். நடுவளாங்குளத்தைப் பார்த்துக்கொண்டு பத்து நிமிஷம் காற்றோட்டமாக வாசற்படி அமர்தல். பாயை விரித்துப் படுக்கை. அரை நிமிஷத்தில் தூக்கம். இவ்வளவும் டிராயர் காலங்கள். முழுக்கால்சராய் போட்ட வயசில் கடைத்தெரு அனுபவங்கள் வேறே!

#பொண்டாட்டியும் நானும் காலாற நடந்து கடைவீதி சென்று வரும் வழியில் பழசைக் கிளறிய ஞாபகங்கள்.

##மன்னையின் ஹரித்ராநதியிலிருந்து ஒத்தைத் தெரு பிள்ளையார் கோயில் வரை ஒரு சுற்றாகவும் இப்பதிவை கொள்ளலாம்.

32 comments:

bandhu said...

என்னமா எழுதறீங்க! ப்ரவாஹம்!

சாந்தி மாரியப்பன் said...

மன்னையின் தெருக்களில் நகர்வலம் போன உணர்வு.. ஜூப்பர்.

Ponchandar said...

ட்ரவுசர் காலத்து நினைவுகளை சுவைபட எழுதி இருக்கிறீர்கள் ! ! மன்னார்குடிக்கே போய் வந்த் உணர்வு கூகுள் எர்த்-ல் மன்னார்குடி ராஜவீதியை கண்டு மகிழ்ந்தேன்

RVS said...

@bandhu
மிக்க நன்றி. :-)

RVS said...


@அமைதிச்சாரல்
மிக்க நன்றிங்க. நீங்க ஜூப்பருன்னு போட்டுட்டீங்கன்னா அது சூப்பர் பதிவுன்னு அர்த்தம்.

RVS said...


@Ponchandar
கருத்துக்கு நன்றி. எர்த் வழியாக மன்னையை எட்டிப் பார்த்ததுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. :-)

அப்பாதுரை said...

நாழி, கடன் அட்டை - புது பிரயோகங்கள் கற்றேன் உங்கள் தயவில்.

வளர்ந்த ஊரின் நினைவுகள் ஒரு இனிய தாலாட்டு. அனுபவித்து எழுதுவது தெரிகிறது.

இராஜராஜேஸ்வரி said...

யார்கிட்டேயும் கடன் வாங்கமாட்டேன்” என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். (பர்ஸில் அணிவகுத்து நிற்கும் கடன் அட்டைகள் இதை எழுதும்போது பல்லைக்காட்டி இளிக்கின்றன!)

மலரும் மன்னார்குடி நினைவுகள் !

மாதேவி said...

மன்னையின் தெருக்கள் அழகாக விரிகின்றன.
அர்ச்சனை :))அதற்கு குறைவு வைக்கலாமா.

Butter_cutter said...

பான்ட் கொஞசம் பெரிசா போட்டிருக்கலாம் !

jcsrg mannai said...

hello rvs

vanakkam

mannargudilaye piraenthu mannargudiyilaya valartha enakku un mannargudi days recall seitha pothu iruntha idathil iruthileya kaiyai pidithu alathu sendrathu pola unarthen. today ur click photo is on my desktop background
nandri, nandri, nanba....

வெங்கட் நாகராஜ் said...

அப்படியே மன்னை வீதியில் நடக்கும் உணர்வு.... அசத்தறீங்க மைனரே.... :)

மனோ சாமிநாதன் said...

அரங்கசாமி முதலியார் நூல் நிலையம் இன்னும் இருக்கிறதா? தாலுகா ஆபீஸ், ராஜ வீதி, ஹரித்ரா நதி குள‌க்கரை, ஹரித்ராநதி மேலக்கரையில் இருந்த எங்கள் வீட்டு மாடியிலிருந்தவாறே தெப்பம் விடிய விடிய பார்த்தது.. .. .. படிக்கப் படிக்க 15 வயதின் மறக்க முடியாத மகிழ்வான நினைவலைக‌ளைக் கிளப்பி விட்டு விட்டீர்கள்! சிறப்பான பதிவு!

Madhavan Srinivasagopalan said...

//"... காடா விளக்கைக் கண்கள் தேடும்.....“

"...டொட்டொய்ங்..டொய்ங்..” என்று இரும்புச் சட்டியில் மணியடித்து .... " //

On first impression, I felt these two contradict.. but realised,the fundamental phycis in it.

# light travels faster than sound

Madhavan Srinivasagopalan said...

plz. continue writing.... nice flow..

// இனிமே யார்ட்டயும் கடன் வாங்க மாட்டேன்னு சொல்லிண்டே”

”யார்கிட்டேயும் கடன் வாங்கமாட்டேன்” என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். (பர்ஸில் அணிவகுத்து நிற்கும் கடன் அட்டைகள் இதை எழுதும்போது பல்லைக்காட்டி இளிக்கின்றன! //

This is how our parents / ancestors lived happily inspite of lesser income...

r.v.saravanan said...

மன்னார்குடியை நகர்வலம் வந்த உணர்வு தான் ஏற்பட்டது தங்கள் பதிவை படித்த போது. நான் பக்கத்தில் (வலங்கைமான்)இருந்தாலும் கோவிலுக்கு மட்டுமே வந்துள்ளேன்

ADHI VENKAT said...

மன்னையை சுற்றியது போல் உணர்வு....ரொம்ப நல்லா இருக்கு.

நான் இப்போது இருக்கும் வீட்டில் முன்பு மன்னார்குடி மாமி இருந்தாங்கன்னு சொல்வாங்க...

Ranjani Narayanan said...

பல வருடங்கள் முன்னால் பார்த்த மன்னார்குடி உங்கள் எழுத்தின் வழியே திரும்பவும் மனதில்.
வெள்ளரிப்பிஞ்சு அனுபவம் அருமை.
மறுபடி மன்னைக்கு வர வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.
பாராட்டுக்கள்!
http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com
http://thiruvarangaththilirunthu.blogspot.in/

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மைனர், ஆற்றொழுக்கான நடை.

பால் குடிப்பவர்கள் என்றே பலரும் எழுதும் இன்றைய நாளில் பாலருந்துபவர்கள் என்ற அழகிய தமிழுக்கு இடையில், ரசம் மற்றும் மோரிலிருந்தெல்லாம் ஜாம் செய்வார்கள் என்ற செய்தியும் வருவதுதான் சிறிது நிரடுகிறது. :))

அப்புறம் அது அற்பசங்யை, அற்பசங்கை இல்லை !

ரொம்பவும் வருந்துகிறேன். நாங்கள் குற்றம் கண்டுபிடித்தே பெயரைக் கெடுத்துக் கொள்பவர்கள் ! :))

RVS said...

@அப்பாதுரை
நன்றி சார். ஊர் நினைப்பு விடமாட்டேன் என்கிறது. இன்னும் குறைந்தது பத்து அத்தியாயங்கள் எழுதுவதற்கு சரக்கு ஊறுகிறது.

RVS said...


@இராஜராஜேஸ்வரி

நன்றி மேடம். :-)

RVS said...

@மாதேவி
நன்றிங்க. :-)

RVS said...


@Butter_cutter
ட்ரை பண்றேன். இது கரெக்ட்டாதான் இருக்குன்னு நினைக்கிறேங்க.. :-)

RVS said...


@jcsrg mannai

ரசித்துப் படித்தமைக்கு நன்றிங்க. :-)

RVS said...


@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல! :-)

RVS said...


@மனோ சாமிநாதன்

நூலகம் இன்னமும் உள்ளது. இந்த தடவை உள்ளே போய் எப்படியிருக்குன்னு பார்த்துட்டு வந்து எழுதறேன் மேடம். நன்றி. :-)

RVS said...


@Madhavan Srinivasagopalan

நன்றி மாதவா! எப்படி வளர்த்தாலும் சூழ்நிலைக் கைதிகளா ஆயிடறோம். ஒன்னும் செய்ய முடியலை. :-)

RVS said...


@r.v.saravanan

வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில் விசேஷம் வெகு பிரசித்தம். அந்த ஆற்றுப்பாலத்துக்கு இந்தப் பக்கம் மேடை போட்டு திருவிழா நடக்கும். மன்னையிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் காரை விட்டு கீழே இறங்கி காசு போட்டு துன்னூறு பூசிக்கொள்ளாமல் வருவதில்லை. மாரியம்மன் நல்ல வரப்பிரசாதி.


RVS said...

@கோவை2தில்லி
கருத்துக்கு நன்றிங்க சகோ!

RVS said...

@Ranjani Narayanan

அவசியம் மன்னைக்கு விஜயம் செய்யுங்கள். கருத்துக்கு நன்றி மேடம். :-)

RVS said...

@| * | அறிவன்#11802717200764379909 | * | said...

அற்பசங்கை என்று ஓரிடத்தில் படித்ததாக ஞாபகம். திருத்தினத்துக்கு நன்றி.

மோருஞ்சாம், ரசஞ்சாம் இரண்டுமே அதே ஃப்ளோவில் வருதற்காக எழுதியது.

//ரொம்பவும் வருந்துகிறேன். நாங்கள் குற்றம் கண்டுபிடித்தே பெயரைக் கெடுத்துக் கொள்பவர்கள் ! :))//
நீங்கள் வருந்தத் தேவையேயில்லை அறிவன். நானொன்றும் பெரிய எழுத்தாளனில்லை. அனுதினமும் தமிழ் கற்றுக்கொள்கிறேன். கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து விமர்சியுங்கள். :-)

p.selvaraj said...

கேட்டு வாங்கி படித்த லிங்க். அப்படியே தெப்பக்குளத்தின் சுற்று வட்டாரத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். இறப்புக்கு பின் ஆவி அலையும் என்று சொல்வார்களே, அது உண்மையாக இருந்தால் என்னது ரயிலேறி மன்னைக்கு சென்று இந்த ஹரித்ரானதி, தேரடி காளவைக்கரை முருகன் கோயில், பெரிய கோயில், ராஜவீதி, பந்தலடி என்று அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails