Friday, November 15, 2013

ஆயிரத்தெட்டு விளக்குகள்!

ஒன்றிரண்டு ஆடவர்கள் சட்டை, டீஷர்ட்டுகளைக் கழற்றிக் கக்கத்திலிடுக்கிக் கொண்டும் இடுப்பில் அங்கவஸ்திரமாகச் சுற்றித் துணிக் கையிரண்டையும் இடுப்பைச் சுற்றி முடிந்து கொண்டும் உள்ளே நுழைவது தூரத்திலிருந்தே கண்ணில்பட்டது. இன்னும் கொஞ்சம் நெருங்கியவுடன் துவஜஸ்தம்பத்துக்குப் பின்னால் மாட்டியிருந்த போர்டில் ”OM NAMO NARAYANA” என்று சிகப்பிலும் ”ஓம் நமோ நாராயணா” என்று பச்சையிலும் புள்ளிப் புள்ளியாய் டிஜிட்டல் எழுத்துகள் இடமிருந்து வலமாக ஒரே சீராக அங்கப் பிரதக்ஷிணம் செய்துகொண்டிருந்தன. நெற்றியில் விபூதித் தீற்றலோடும் கொக்கி முதுகோடும் மேனியெங்கும் பக்தியோடும் நின்ற பாட்டியொருத்தி படியருகிலிருந்தே கைகூப்பிக்கொண்டிருந்தாள்.

சேப்பாயியை ரோட்டை விட்டு இறக்கி நிறுத்திவிட்டு நங்கைநல்லூர் குருவாயூரப்பன் கோயில் வாசற்படியில் நின்று என் சட்டையைக் கழற்றும் போது குத்துவிளக்குகளின் தீப ஒளியில் கர்ப்பக்கிரஹத்திலிருந்து குட்டிக் க்ருஷ்ணன் க்யூட்டாகக் காட்சியளித்தார். மேலே கழட்டாமல் சென்ற ஒரு பொடியனை “யே! ச்ச்சட்டையை கழட்டோ” என்று யானை பிளிருவது போலக் குரல்விட்டார் கவுண்டரில் உட்கார்ந்திருந்த ஒரு ஆகிருதியான மாமா. அவன் நடுநடுங்கிப்போய் ட்ராயரையும் சேர்த்துக் கழட்டிவிடும் அவசரத்தில் சட்டையை உருவி இடுப்பில் கட்டிக்கொண்டான்.

புஷ்டியான ஃபோகஸ் விளக்குகளைப் பாய்ச்சி கண் கூசச் செய்யாமல் விட்ட அந்த தேவஸ்தானத்துக்கு ஒரு முறை நிச்சயம் தெண்டனிட வேண்டும். கேரளக் கோயில் சாஸ்திரப்படி நிலைவாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும் இரண்டு பக்கமும் பெரிய திண்ணைகள். எதிரே ஒல்லி ஒல்லி விளக்குகளில் அமைதியாக சேவை சாதித்துக்கொண்டிருந்தார் உத்தர குருவாயூரப்பன். மூர்த்தி சிறிசு. கீர்த்தி பெருசு போன்ற கிளேஷக்களுக்கு அவசியமேயில்லாமல் உள்ளே காலை வைத்ததும் ஒரு அதிர்வை உணர முடிந்தது. இரா. முருகனின் விஸ்வரூபம் படித்துக்கொண்டிருப்பதால் அம்பலப்புழை கிருஷ்ணனும் ஞாபகத்துக்கு வந்தான். வெள்ளிக்கவசம் சார்த்தியிருந்தார்கள். வலதுகைப் பக்கம் ஐந்து கிளைகளுடன் சரவிளக்கு தொங்கியது. ஒவ்வொரு கிளைக்கும் ஐந்து முகத்திரி போட்டு எரியவிட்டிருந்ததில் குருவாயூரப்பன் அங்கமெல்லாம் வெள்ளி மின்னியது. புஷ்பாங்கி. கிரீடத்துக்கு மேலே ஒரு தாமரை.

காலுக்கடியில் ஏக தண்டில் பூத்த மூன்று தாமரைகள் போல மும்முகத்துடன் ஒரு வெங்கல விளக்கு. ஒவ்வொரு தாமரைக்கும் மூன்று முகம். மூன்றிலும் மும்மூன்று திரிகள். ஒரு பத்து நிமிஷமாவது கண்ணிமைக்காமல் பார்த்திருப்பேன். ஸ்ரீமத் பாகவத சப்தாகத்தில் “ஆதிமூலமேன்னு கதறிய கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்க நீயே நேர்ல போனியாமே.. அது சத்தியமா?ன்னு கேட்டார் பட்டத்திரி. ஆமாம்னான் குருவாயூரப்பன்” என்று நாராயணீயத்தை சேர்த்துச் சொல்லும் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் பேசுவது இப்போது எனக்கு மட்டும் சத்தமாகக் காதில் கேட்டது. ஒரு முறை கண்ணைத் திறந்து பார்த்தேன். குத்துவிளக்கின் ஒளியில் அழகு கொஞ்சும் குருவாயூரப்பன் எனக்கும் ”ஆமாம்” சொல்வது போலிருந்தது. போன பாராவின் முதல் வரியை இப்போது ”ஆமாம்” என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்.

”ஓய்! ராஜம் ஐயர்....செத்தே நில்லும்..” என்ற சப்தம் என்னைக் கலைத்து சந்நிதியை விட்டு வெளியே இழுத்தது. வேஷ்டிக்கு மேலே இடுப்பில் பெல்ட்டாகக் கட்டிய காசித்துண்டோடு துளசி மாலைக் கழுத்தோடு டைனோசர் நடை நெடு நெடு ராஜமைய்யரை பிரகாரத்தில் விரட்டிக்கொண்டு ஓடிய பெரியவருக்கு சுமார் எழுபது இருக்கலாம். ஆனால் அவர் காலுக்கு இருபது என்பது ரா.ஐயரைத் துரத்திய வேகத்தில் தெரிந்தது. பிரகாரத் தூணில் சாய்ந்துகொண்டு ஒரு முட்டை சந்தனத்தை உள்ளங்கையில் தெளித்து “தீபாராதனை ஆகப்போறது...” என்று வாய்வழி குறுந்தகவல் கொடுத்தார் குருக்கள் மாமா. இடுப்பில் சிவ சிவ எழுதிய பச்சைத் துண்டு சிவாவிஷ்ணுவின் ஃப்ரெண்ட்ஷிப் அடையாளம்.

கதவை மூடிய பிறகு லோக்கல் வாலண்டியர் மாமா ஒருத்தர் “ஜெண்ட்ஸ் ரைட். லேடீஸ் லெஃப்ட்” என்று உத்தி பிரித்து விட்டு ஸ்வாமி சேவிக்கச் சொன்னார். வலதுபக்க திண்ணையில் மணி கட்டியிருந்தது. அதனடியில் ராஜமைய்யரை விரட்டிய மாமா உட்கார்ந்திருந்தார். சந்நிதிக் கதவை திறக்கும் போது மக்கள் காட்டிய ஆர்வத்தில் தெரிந்து கொண்ட அவர் உட்கார்ந்த படியே தலைக்கு மேலே இருந்த மணியை ஆட்டிய போது அவரது பக்தி ஊருக்கே தெரிந்தது. சளைக்காமல் நூறு முறை அடித்திருப்பார். அடித்து அடித்து அந்த வெங்கல மணிக்கு நாக்கு வலித்திருக்கும்!

அடுக்கு தீபாராதனை, கும்பார்த்தி என்று தரிசித்துவிட்டு பிரதக்ஷிணம் முடித்துக்கொண்டு பாதியாய் வெட்டிய வாழைப்பழத்தை பிரசாதமாய் வாங்கிக் கொண்டு நகர்ந்த போது ”அந்தக் குச்சிய வாங்கிண்டு விளக்கேத்திட்டுப் போயேன்....” என்றார் உரிமையோடு பிரசாதப் பெரியவர். பிரகாரத்தைச் சுற்றிலும் மாபெரும் எக்ஸெல் ஷீட் போல சட்டமடித்த rowவிலும் columnத்திலும் விளக்குகளை உட்கார வைத்து ரெடியாய் எண்ணெயிட்டு திரியோடு “என்னை வந்து ஏற்று” என்று கொளுத்திக்கொள்ளத் தயாராக இருந்தது. “எவ்ளோ விளக்கு?” என்று பக்தியார்வத்தில் கேட்டேன். “1008 இருக்கு... எல்லோரும் ஏத்துவா.. பயப்படாதே...” என்றார் என்னைத் தெம்பூட்டும்விதமாக. மூங்கில் ப்ளாச்சின் நுணியில் காட்டன் துணித் சுற்றி எண்ணெயில் முக்கிக் கையில் கொடுத்தார்கள். ஆளுக்கொரு குச்சியுடன் குறுக்கும் நெடுக்குமாக விளக்கேற்றத் துவங்கினோம். எங்கெங்கு நோக்கினும் நரைத்த தலையுடனும் நரைக்காத பக்தியுடனும் வயதானவர்களின் கூட்டம் குழந்தையின் ஆர்வத்தோடு விளக்கேற்றியது. ஐந்து நிமிட நேரத்திற்குள் ஊர் கூடி விளக்கேற்றிவிட்டோம்.

மன்னையில் கார்த்திகைக்கு தெப்பக்குளத்தைச் சுற்றி அகல் விளக்கேற்றியது நியாபகத்துக்கு வந்தது. ஆயிரத்தெட்டு விளக்கொளியில் குருவாயூரப்பன் கோயில் வைகுண்டமாக ஜொலித்தது. லேசாக வருடிய காற்றில் அத்தனை விளக்கில் ஆடிய தீபமும் குருவாயூரப்பனுக்கு நடன காணிக்கை செலுத்தியது போலிருந்தது. சாஸ்தா, பகவதி என்று அனைத்து சந்நிதிகளும் விளக்கேற்றப்பட்டிருந்தன. ஒரு சுற்று விளக்கேற்றி விட்டு வரும் சமயம் காராமணி சுண்டல் பிரசாதத்தோடு நின்றிருந்தார் அந்தப் பி.பெரியவர். “இந்தப் பிரசாதமும் எடுத்துக்கலாமா?” என்று தயக்கத்துடன் அல்பமாகக் கையை நீட்டினேன். “தாராளமா..” என்று கண்களில் சந்தோஷம் பொங்க அள்ளிக் கொடுத்தார்.

கொடிமரத்தருகில் நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்துடன் வெளியே வந்தேன். மெல்லிய குளிரடித்தது. தேங்காய்ப் பூ தூவிய வெள்ளைக் காராமணியை மென்று கொண்டிருக்கும் போது எதிர்த்தார்போல ஒரு மடிசார் பாட்டி தனது ஆம்படையான் தாத்தாவை [பஞ்சகச்சம்] “இதை மூக்கப் பிடிக்க நன்னா சாப்டாச்சுன்னா... ஆத்துக்கு வந்தா பலகாரம் கிடையாதுன்னேன்..” என்று ஏற்ற இறக்கங்களுடன் கொத்திக் கொண்டிருந்தாள். எனக்கும் பக்கத்தில் நின்ற புதுமணத் தம்பதிக்கும் குபீரென்று சிரிப்பு வந்தது. உள்ளேயிருந்து குருவாயூரப்பனும் இதழ் விரியச் புன்னகைத்துக் கொண்டிருந்தான். காரைக் கிளப்பி இரண்டு தெரு நகர்ந்த பின்னும் கண்ணை விட்டு அகலாத அந்த ஆயிரத்தெட்டு விளக்குகள்.

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஆயிரத்தெட்டு விளக்குகள்..... எங்களையும் உங்களுடன் அழைத்துப் போன உணர்வு.....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails