Monday, December 1, 2014

மொட்டை மாடி இலக்கியங்கள்

திருவான்மியூரில் இன்று தமிழ் ஹெரிடேஜ் மீட்டிங். ஞானத்தின் நுழைவுவாயில் போல ஒரு சின்ன ரோட்டில்நுழைந்து இடது திரும்பி முட்டு சந்தில் ஏழெட்டு வீடு தாண்டி மாடியில் மீட்டிங். காஃபி டீ பிஸ்கட் கட்டையில் வரவேற்க அந்த மொட்டைமாடி கொட்டாய்க்குள் நுழைந்தேன். காட்டமான இலக்கிய வாசனை அடித்தது.


Badri Seshadri இறையனார் அகப்பொருள் மற்றும் மதுரைக் காஞ்சி பற்றிய சிறுகுறிப்புகள் தந்து மேலும் படிக்கத் தூண்டினார். இரண்டு பாடலையும் எடுத்துக்கொண்டு வரிக்கு வரி கவிநயம் பாராட்டப் போவதில்லை என்று ஆரம்பித்தார். குமரிக்கண்ட லெமூரியா பற்றியும் முதல் இடை கடைச் சங்கங்கள் பற்றியும் துளித்துளி சொல்லிவிட்டு எடுத்துக்கொண்ட விஷயத்துக்கு வந்தார்.

Rangarathnam Gopu வைத் தெரியும். இரண்டு மூன்று இலக்கியக் கூட்டத்தில் பழக்கமானவர். பக்கத்தில் உட்கார்ந்தால் அவரது தொடை தட்டிப் பேசுமளவிற்கு நண்பரான வரலாற்றாய்வாளர். கிழக்கு பத்ரி நாற்திசையிலும் பிரபலம். தெரியும். Balasubramanian Natarajan சார் எம்ஜியார் குல்லாவில் வந்திருந்தார். முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவரைக் கும்பிட்டேன். ஏனையோர்கள் எனக்குப் பரிச்சியமில்லாதவர்கள். இலக்கிய ஆர்வலர்கள். கூட்டம் முழுவதும் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து நிறைய கேள்விகளும் பதில்களும் முழங்கியது இரசிக்கும்படி இருந்தது.

சங்க காலத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் எழுதிவிட பொருளதிகாரம் எழுத ஆளில்லை என்றவுடன் இந்த அகப்பொருளை இறையனாரே செப்பேட்டில் எழுதி நக்கீரனார் அதற்கு உரை எழுதினாராம். பலர் இதற்கு உரையெழுத ஊமைப் பையன் ஒருவன் நக்கீரனாரின் உரைக்கு பதத்துக்குப் பதம் கண்ணீர் சொரிந்தானாம். அதுவே சிறந்த உரையென்று எடுத்துக்கொண்டார்களாம். அந்த ஊமைப் பையன் முருகன் அவதாரம் என்று பிற்பாடு கூகிள் தேடலில் கிடைத்தது.

உரையெழுதியவர் கணக்காயனார் மகன் நக்கீரனார். கணக்காயனார் என்பவர் ஆடிட்டர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சின்னக் கவுண்டரில் கேப்டன் “நீங்களெல்லாம் நினைக்கிறது போல அவரு ஸ்கூல் வாத்தியாரில்லை. குஸ்தி வாத்தியார்...” என்று பஞ்சாயத்து சொல்வது போல பின்வரிசையில் இருந்து ஒருவர் கணக்காயர் என்பது ஆசிரியர் என்றார். இறையனார்:இறைவனார், தலைவர்:தலையர் போன்ற பதங்களுக்கிடையில் ஒட்டிக்கொண்டு வரும் வித்யாசத்தை விளக்கினார். எங்கள் தலைவர், சொட்டைத் தலையர் போன்று இறையனார் என்பது பெயராகவும் இறைவனார் என்றால் கடவுளாகவும் இருக்கலாம் என்று சொன்னார். திரும்பிப் பார்த்தேன். கண்ணாடியில் சிரித்தார்.

பனிரெண்டு வருஷங்கள் பாண்டிய நாடு வறண்டுபோனது. அங்கிருந்த சங்கப் புலவர்களையெல்லாம் வேறு நாட்டிலிருந்துவிட்டு மீண்டும் செழிப்பானதும் வரச்சொன்னானாம் பாண்டி நாடன். திரும்பவும் அவர்கள் வந்ததும் எழுத்தும், சொல்லும் இலக்கணம் கண்டது. பொருளதிகாரத்தை இறைவனார் எழுதினார் என்பது கதை.

மதுரைக் காஞ்சி பற்றி பத்ரி ஆரம்பித்ததும் பக்கத்திலுள்ளவர் ”காஞ்சி...” என்று இழுத்ததும் “காஞ்சீபுரமல்ல.. இது காஞ்சித் திணையில் எழுதிய பாடல்...” என்று பத்ரி சிரித்தார். தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மாங்குடி மருதனார் இயற்றிய 782 வரி பா. மா. மருதனார் இராத் தூங்கா மதுரையை வர்ணிக்கிறார். மருதம், முல்லை, நெய்தல், பாலை, குறிஞ்சி என்று ஐவகை நிலங்களை வர்ணிக்கிறார். பாலை நிலம் என்பதை பாலைவனம் என்று தப்பர்த்தம் செய்து கொள்பவர்கள் கொஞ்சம் நிற்க. முல்லை மற்றும் குறிஞ்சியின் திரிபே பாலையாகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவுமில்லாமல் ரெண்டுங்கெட்டான் நிலப்பரப்பு பாலையெனப்படுகிறது.

மாங்குடி மருதனாரைச் சொல்லும் போது ஊரில் மாங்குடியாரை நினைத்துக்கொண்டேன். மாங்குடி மருதனார் நெடுஞ்செழியனின் அவைப் புலவர். எவ்வளவு மெய்கீர்த்திகள் பாடினாலும் கடைசியில் வீடுபேறு பற்றி எடுத்துச் சொல்லி “வாராது காண் கடை வழிக்கே” கணக்காக நெடுஞ்செழியனுக்கு உபதேசிக்கிறார்.

இறையனார் அகப்பொருள் மற்றும் மதுரைக் காஞ்சியின் அறிமுகம் இங்கே நடந்து கொண்டிருக்கும் போது பக்கத்து மொட்டை மாடியில் தெய்வத்தின் குழந்தை ஒருவருக்கு அவரது தாயார் நடைபயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். அது கொஞ்சம் வளர்ந்த குழந்தை. பதினாலு பதினஞ்சு வயசிருக்கலாம். நீல வண்ண பனியனும் வெள்ளை கால் நிஜாரும். தலையைத் தூக்கி வாயை ”ஊ..ஊ”என்று என்னவோ பண்ணிற்று. அதன் கையைக் கோர்த்து விரல்களை நீவி விட்டுக்கொண்டு நடந்த அந்த அம்மாவின் கண்களில் வாத்சல்யமும் அன்பும் கருணையும் பொங்கிற்று. காதை இங்கே கொடுத்துவிட்டு கண்களை அங்கே அலைபாய விட்டேன். மனசும் துடித்தது. இறைவா! சக்தி கொடு.

இந்த மொட்டை மாடியில் சங்க இலக்கியங்களும் அந்த மொட்டை மாடியில் வாழ்விலக்கியமும் இன்று ஒருசேர எனக்குப் பரிமாறப்பட்டன. இரண்டுமே அமரத்துவம் வாய்ந்தவை. நெஞ்சிலிருந்து நீங்காதவை.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails