Wednesday, December 24, 2014

ரோட்டுக் கச்சேரி

இரவு எட்டு மணிக்கு மேல் ஒன்பதுக்குள் போரூர்-கிண்டி சாலையில் சுபமுகூர்த்த நேரம். சென்னைக் குடிநீர் லாரிகள் ஜோடி போட்டுக்கொண்டு அந்தச் சாலையில் காதல் ஊர்வலம் வருகிறார்கள். ஐந்தடிக்கு பத்தடியில் ஒரு “துப்பாக்கி”, “கத்தி” லாரியோ... அல்லது “பில்லா”, “வீரம்” லாரியோ தவறாமல் புகை கக்கி உருள்கிறது. புகைமண்டலத்தில் மினி தேவலோகம். இத்தனை லாரிகள் ரெஸ்ட் எடுக்க சென்னையில் எங்கு நிறுத்துகிறார்கள் என்று புர்ஜ் கலிஃபா பார்த்த பட்டிக்காட்டான் போல வியந்துபோனேன். 

அவர்கள் அவர்களுக்கே பட்டா போட்டு சொந்தமாக்கிக்கொண்ட சாலையில் ராஜமரியாதையோடு தலைநிமிர்ந்து போகும் போது நாமும் மீடியேட்டர் ஓரம் கொஞ்சம் ஒண்டிக்கொண்டு டாமிடம் பயந்த ஜெர்ரி போலப் பவ்யமாக வாகனம் ஓட்டும் நிர்பந்தம். இருசக்ராதிகள் யாராவது தெகிரியமாக லாரியின் கழுத்தருகே சென்றால் “மடேர்..மடேர்..” என்று பாய்ந்து கிளி அவரது பக்கக் கதவைத் தட்டுகிறார். அப்ராணிகள் பயந்து போய் பின்சக்கரத்தில் பாய்ந்துவிடப் போகிறார்கள் என்று டரியலானேன்.

மன்னை ராஜகோபாலன் பங்குனி உற்சவத்தில் வெண்ணைத் தாழி உலகப் பிரசித்தம். அந்த திருவிழாவின் போது மேலராஜ வீதியிலிருந்து பந்தலடி வரை கூரைப் பந்தல் போட்டு ரோடில் தண்ணீர் ஊற்றி பக்தர்கள் கால் பொசுங்கிவிடாமல் பாதுகாப்பார்கள். அது நற்காரியத்துக்கு செலவழிக்கப்படும் நன்நீர். இங்கே இந்தக் குடிநீர் லாரிகள் மொத்த ரோட்டையும் ஏதோ கீழே இலை போட்டு சாப்பாடு போடுவதற்காகப் போல அலம்பி விட்டுச் செல்கிறது. வாத்தியார் பாணியில் இவர்களை பசித்த புலி தின்னட்டும் என்று சபித்துவிட்டு ”அடப்பாவிகளா..” என்று நிமிர்ந்தால் டாங்கரின் முதுகில் “குடிநீரை வீணாக்காதீர்கள்” என்ற திருவாசகம். இன்னொன்றில் “விண்ணின் கொடையே மழை.. வீணாக்கலாமா இதை” என்கிற சுரீரென்று மனதைத் தைக்கும் பாந்தமான அறிவுரை. போச்சுடா..

இடதும் வலதுமா இரண்டு லாரிச் சிங்கங்கள் ஆசையாய் அணைத்துக்கொண்டு வர புள்ளிமானாய்ப் பயந்த சேப்பாயியை ”பயப்படாதே செல்லம்...” என்று தட்டிக்கொடுத்து விரைந்து வீடு வந்து சேர்ந்தேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails