Monday, March 29, 2010

Fair & Lovely பூசிய ரயில்



"கயிலையே மயிலை மயிலையே கயிலை"க்கு  கபாலியை கண்டு கொள்ள பிரயாணம் மேற்கொள்ள சென்ற ஞாயிற்றுக்கிழமை எண்ணியபோது ஞாபகத்திற்கு வந்தது வேளச்சேரியில் இருந்து புறப்படும் மாடி ரயில். எப்போதும்  குடும்பத்தின் பார்த்தசாரதியாய் இருந்து  அலுத்ததால் ஒரு நாள் டிரைவர் வேலைக்கு விடுப்பு கொடுக்கலாம் என்ற என் முடிவு ஏக மனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் நாட்டிற்கு எரிபொருள் சிக்கனம் செய்யலாம்  என்றும் ஒரு பொதுநல எண்ணம் எழுந்ததாலும்,   என்னுடைய வாகோன் ஆர் ( Wagon R, Wagon full of Romance) ரை நான்கு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என்று நிறுத்தக்கட்டணம் கட்டி விசாலமான வேளச்சேரி கட்டண நிறுத்தத்தில் நிறுத்தி அடையாள சீட்டு பெற்று  குழந்தை குட்டிகளுடன் ஸ்டேஷன் படி ஏறினேன்.

அரை டிக்கெட்டுக்கு ஒரு ருபாய் சலுகை பெற்று போய் வர ஐந்து பேருக்கு ஐம்பத்தி எட்டு ரூபாய்க்கு பயணசீட்டு பெற்றுக் கொண்டு வெளியே  வருகையில் அடுத்து நின்ற ஜீன்ஸிடம், "எல்லாருமே நூறு ரூபா நோட்டு எடுத்துவந்தா எவ்வளவு பேருக்கு நான் மீதி கொடுக்கறது... இங்க என்ன மூட்டையிலா சில்லரை கட்டி வச்சிருக்கேன்..." என்று இந்தியாவின் தேசிய பிரச்சனையான சில்லரை பிரச்சனயை பயணச் சீட்டு வாங்குபவரிடம் விவரித்துக்கொண்டிருந்தார் பயணச் சீட்டு வழங்குபவர்.  நல்லவேளை அவர் வாயில் நான் அகப்படவில்லை.

உடம்பு முழுவதும் fair and lovely பூசி பிங்க் வண்ணத்தில் நின்றது ஒரு மின்சார ரயில்.  அந்த கால TNSC வங்கி விளம்பர மஞ்சள் பெட்டிகள் நினைவுக்கு வர  மகளிர் பெட்டியை விட்டு அடுத்த பெட்டியில் ஏறிக்கொண்டோம். கொஞ்சம் சின்ன பெட்டி. என்னுடைய கடைக்குட்டி பெட்டியின் வாயிலில் நின்று பயணம் செய்ய மிகவும் விருப்பப்பட்டது. நான் ஓரத்தில் நிற்க என் பக்கத்தில் கம்பியை பிடித்து நின்று பல்லை காண்பித்து சிரித்தபடியே வெளியே பார்த்துக் கொண்டு ஜாலியாக வந்தது. கொஞ்சம் நகர்ந்தவுடன் இரு வாலிபர்கள்  ஓடி வந்து ஒரு குதி குதித்து ஏறிக் கொண்டனர். நான் யாரும் வாலிபிகள் இருக்கிறார்களா  என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். எவரும் என் கண்களுக்கு சிக்கவில்லை.  Greenways Road என்ற நிறுத்தத்தை 'பசுமைவழி சாலை' என்று தமிழ்படுத்தி இருந்தது கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. பெயர் சொல்லை இப்படி தமிழ் படுத்தலாமா என்று  தெரியவில்லை. ஒவ்வொரு நிறுத்ததிலும் சுமார் ஐந்து பத்து பேர் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர்.  ஞாயிற்றுக்கிழமையினாலா அல்லது இந்த போக்குவரத்து இன்னும் சரியாக பயன்படுத்தபடவில்லையா என்று தெரியவில்லை. எல்லா நிறுத்தங்களிலும்  மேற்க்கூரையிலிருந்து  ஆறு அடிக்கு இரும்புக் குழாய் இறக்கி மின்விசிறி சுழல விட்டிருந்தார்கள். ஆனால் உட்காருவதர்க்குதான் யாரும் ஆள் இல்லை.

கபாலி கோயிலின் கோபுர தரிசனம் பெற்றுக்கொண்டே திருமயிலை நிறுத்தத்தை மிக மிக சௌகரியமாக வந்தடைந்தோம். நடந்தும் இறங்கலாம், மின்தூக்கி வழியாகவும் இறங்குவதற்கு வசதி இருந்தது. காலாற நடந்து கடை 'கன்னி'களை பார்த்துக் கொண்டே, தேரடி அருகில் இருந்த பஜ்ஜி கடையில் ஆளுக்கு ரெண்டு சாப்பிட்டு விட்டு ஐந்து ருபாய் மோதிரம் இரண்டு வாங்கி என் இரு பெண்களுக்கும் கொடுத்துவிட்டு சாமி பார்க்க உள்ளே சென்றோம். திருவிழா நடந்து கொண்டிருந்ததால் நல்ல கூட்டம் இருந்தது. பிள்ளையாரையும், முருகனையும் வழிபாட்டு, கற்பகம் கபாலி ஜோடியின் அருளையும் பெற்றுக் கொண்டு திரும்புகையில் பண்டு ஆபீஸ் மார்கெட்டில் வெள்ளீஸ்வரர் கோயில் அருகே, "வாங்கினா வாங்கு இல்லன்னா அப்பால போ.. சொம்மா படிய காமி மடிய காமின்னு கிட்டு" என்று விரட்டிய பெண்மணியிடம் வாய் பேசாமல் ஒரு படி மாவடு நாற்பது ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு நடையை கட்டினோம்.

மீண்டும் திருமயிலை ஸ்டேஷனில் வந்து வேளச்சேரி திரும்புகையில் ரயில் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகியது. நடைமேடையை விளையாட்டு மேடையாக்கி கொண்டிருந்தாள் என் சின்னப்பெண். ஓடி விளையாடும் போது சுவர்களில் அவள் எங்காவது பட்டு விடப் போகிறாளே என்று என் மனம் பதைபதைத்தது. ஏனென்றால்  பச்சை கலர் பெயின்ட் அடித்த சுவர்களின் ஓரங்களில் எல்லாம் நன்றாக வெற்றிலைப் பாக்கு குட்கா போன்ற லாகிரி வஸ்துக்களை  நன்றாக குதைத்து துப்பி சிகப்பு வண்ணம் அடித்திருந்தார்கள் இந்நாட்டின் மன்னர்கள்.

அலுங்காமல் குலுங்காமல் வந்த ரயிலில் ஏறி மீண்டும் வேளச்சேரிக்கு பயணப்பட்டோம். தன்னுடைய கொண்டைஊசியை கீழே போட்டுவிட்ட என் பெரிய பெண் எடுக்க முனைகையில் அவள் உட்கார்ந்திருந்த சீட்டுக்கடியில் இருந்த குப்பையை பார்த்து " இந்த ரயிலுக்கெல்லாம் ஆயுத பூஜை கொண்டாட மாட்டாங்களா?" என்று என் அகமுடையாளை பார்த்து கேட்ட  என் கேள்வியை ஆரத்தழுவி உட்கார்ந்திருந்த ஒரு 24:22 ஜோடி ரசித்து சிரித்தது.

இந்த கோடை காலத்திற்கு எனக்கு இயற்கை தரும் பரிசாக முகத்தில் முட்டிற்று அந்த இளவேனில் காற்று. அக்காற்றை கிழித்து சொற்ப பயணிகளே இருந்த அந்த ரயில் "தடக் தடக்" என்று சென்றபோது மேலே வானிலிருந்து சிரித்த அந்த முழு வெள்ளை நிலவு மனதை கொள்ளை கொண்டு போயிற்று. ஆகா! ஏகாந்த நிலவும், முழு உடம்பையும் ஜில்லென குளிப்பாட்டி தலை கோதிய மென்மையான காற்றும், கூட்டமே இல்லாத ரயிலின் வாயிற்படியில் குழந்தைகள், பெண்டாட்டியுடன்  குதூகலமான பயணமும், அவ்வப்போது "கூ...கூ..." என்று ஆனந்த ராகம் பாடிய மின்சார குயிலாகிய ரயிலும் இரவு வெகு நேரம் வரை நினைவிலிருந்து நீங்க மறுத்தது.

"அப்பா... அடுத்த வாரமும் போலாமா?" என்று கேட்டார்கள் என் செல்ல சிங்கார சின்ன சீமாட்டிகள் இருவரும்.

4 comments:

Madhavan Srinivasagopalan said...

RVS(M) கலக்கிட்ட போ.. என்னமா எழுதி இருக்க.. சும்மா சொல்லப்டாது.. நல்லாவே வந்திருக்கு..
உன் செல்லக் குட்டிகள் இருவருக்கும் ஆசிகள்.. இருந்தாலும் நீ வெறும் பிளாஸ்டிக் மோதிரம் வாங்கி கொடுத்து ரொம்ப சிக்கனமா சமாளிச்சிட்ட போ.

RVS said...

Thanks madhavan for your comments.

RVSM

Anonymous said...

Very good use of words.

RVS said...

நன்றி மென்பொருள்.கோ.சிசி..... நம்ம பொளப்பு வேறே.. இருந்தாலும் கண்டது கடயது ரொம்ப வருஷமா படிச்சிகிட்டு இருந்ததாலே எல்லோர்மேலையும் ஒரு கொல வெறி ஏற்ப்பட்டு இந்த முயற்சி.. வாழ்த்துக்களுக்கு நன்றி...

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails