Wednesday, March 30, 2011

கொலை முஹூர்த்தம்

sunny afternoon
மதிய நேர நகரம் சோம்பேறியாய் நகர்ந்த வண்ணம் இருந்தது. ஆனால் சூரியன் சுறுசுறுப்பாய் எல்லோரையும் தனது கிரணங்களால் நாற்பது டிகிரிக்கு சுட்டு வறுத்துக் கொண்டிருந்தான். வேர்க்க விறுவிறுக்க அடித்து பிடித்துக் கொண்டு பஸ்ஸுக்கு ஓடி முட்டி மோதி ஏறுபவர்கள் இல்லை. பஸ்ஸில் ஈருடல்கள் ஓருடலாக வியர்வையோடும் வாசனையோடும் இரண்டற கலந்து நிற்கும் 'ஆஃபீஸ் கோயர்ஸ்' கூட்டம் இல்லை. இளவட்டங்கள் பஸ்ஸின் மொட்டை மாடி மேல் உட்கார்ந்து "டமக்கு.. டமக்கு" என்று தட்டிக்கொண்டு கொண்டாடும் பயங்கர 'பஸ்டே'க்கள் இல்லை. "ஸ்கூல் பஸ் வந்தாச்சு"வில் "ச்சூ..." என்று ஆரோஹனத்தில் மேல் ஸ்தாயி பிடித்து அவசரகதியில் பாடுபவர்கள் இல்லை. ரெண்டு விரக்கடை இடைவெளியில் ஆதூரத்துடன் நம்மை செல்லமாக அணைத்து ஓட்டும் அன்பான ஆட்டோ நண்பர்கள் இல்லை. அடுத்த பாராவில் இருக்கும் இன்னும் சில இல்லைகளும் இந்த சீனில் உண்டு.

"நாங்களும் குப்பை பொறுக்குகிறோம் பார்!" என்று மார் தட்டி நடு ரோட்டில் அடாவடியாக நின்று கொண்டு நகரை சுத்தம் செய்யும் மாநகராட்சி லாரிகள் இல்லை. கண்ணீர் சிந்த வைக்கும் கருப்பு நிறத்தின் பல படிமான நிறப் பிரிகைகளில் வாகனப் புகை மண்டலம் இல்லை. தவிச்ச வாய்க்கு இப்போதே தண்ணீர் தருகிறோம் என்ற ரோடைக் கழுவி இருசக்கராதிகளை தலையோடு கால் குளிப்பாட்டி ஓடும் மெட்ரோ வாட்டர் லாரிகள் இல்லை. ஒன்பதரை பத்துக்குள் அலுவலக கட்டிட பார்க்கிங்கிற்குள் போய் அமைதியாக உட்கார்ந்து கொள்ளும் கடமையுணர்வுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர அடிமை வாகனங்களின் சந்தடி இல்லை. மோட்டார் அன்பர்களின் பல தரப்பட்ட ஹாரன் ஒலி எழுப்பி செய்யும் தெருவோர ஆர்க்கெஸ்ட்ராவின் இன்னிசை இல்லை. சுமாராக இருக்கும் கல்லூரிப் பெண்களின் நடமாட்டம் கூட ரோடுகளில் இல்லை. அதைப் பார்ப்பதற்கு அழுக்கு ஜீன்ஸ் போட்ட வெட்டிப் பையன்களும் சுற்றுவட்டாரத்தில் இல்லை. அப்படிப் பட்ட இந்த நேரத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது.

புடவை தலைப்பால் பின்புறம் கழுத்து வியர்வையை துடைத்துக் கொண்டு சோஃபாவில் சாய்ந்து சன், ஜெயா என்று ஏதாவது ஒரு கேளிக்கை பெட்டியில் இரண்டு பொண்டாட்டி கட்டிக் கொண்ட ஒரு உன்னத உதாரண புருஷன் சீரியலோ, அல்லது இரண்டு புருஷன் வைத்துக் கொண்டு மூன்றாவது தேடும் கற்புக்கரசிகள் சீரியலோ பார்க்கலாம் என்று உட்கார்ந்திருக்கும் வேளையில் தான் அது நடந்தது. வாசலில் ஒரே அலறல். "டாய்.... ஆய்@!#@ #த்தா..." என்று யாரோ யாருடைய பிறப்பையோ சகட்டுமேனிக்கு கேள்வித் தாக்குதல் நடத்திக்கொண்டு தலைதெறிக்க ஓடினார்கள். திரும்பவும் எதிரியின் ஆக்ரோஷ அடிக்கு ஆட்பட்டு பெவிலியனுக்கு தோற்று தஞ்சம் அடைந்தார்கள். "சிலிங்.. கிலீர்..." என்று கண்ணாடி நொறுங்கும் சத்தம் வேறு கேட்டது. சடசடவென்று கடைகளின் ஷட்டர்கள் ஆவேசத்துடன் இறங்கின. நடுவில் ஆம்புலன்ஸ் சைரன் ஒலி வேறு வயற்றில் புளியைக் கரைத்தது. சரோஜா நிமிர்ந்து நேரம் பார்த்தாள்.  பன்னிரண்டு அடிக்க இன்னும் பத்து நிமிஷம் இருந்தது.

ஸ்கூலுக்கு போய் ரமணனை அழைத்து வரவேண்டும். அமளி நிற்குமா என்று தெரியவில்லை. முதலில் ஜன்னலில் இருந்து எட்டிப் பார்த்தாள். அரக்கபரக்க இங்குமங்கும் அந்தத் தெரு தடித் தாண்டவராயன்கள் மலையாள தம்பிரான்கள் கட்டுவது போல கைலியை மேலே சுருட்டி தூக்கி சொருகிக்கொண்டு கட்டையை கையில் விசிறித் திரிந்தார்கள். அவளுக்கு அரைகுறையாய் கண்ணுக்கு தெரிந்தார்கள். ஒரு எமனேறும் வாகனம் அசால்ட்டாக இவர்களை எல்லாம் பார்த்துக்கொண்டு வாயில் பொங்கும் நுரையாக எச்சில் ஒழுக பாதி ரோட்டை அடைத்து சமாதானமாக பார்த்துக்கொண்டிருந்தது. யாருக்கோ கொலை முஹூர்த்தம் குறித்து விட்டார்கள் போலிருக்கிறது. தெருவில் கூச்சல் இன்னும் அடங்கிய பாடில்லை. போலீஸ் எங்கே தூங்கப் போயிற்று? சட்டம் ஒழுங்கு ரொம்பத்தான் கெட்டுப் போய் விட்டது என்று அப்போது தான் நினைத்துக் கொண்டாள் சரோஜா.

திடீரென்று "ஐயய்யோ... போயிட்டானே...." பெருங்குரலெடுத்து ஓலமிட்டாள் ஆயா ஒருத்தி. கலவரத்தின் கைகலப்பு தெளிவாகக் கேட்டது. போரில் யாரோ ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். ப்ரீ-கே.ஜி விடும் நேரமாகி விட்டது. சரோஜா ரமணனை அழைத்து வருவது பற்றி மிகவும் கவலைப்பட்டாள். பக்கத்து வீட்டிற்குள் வேலைக்காரி உள்ளே நுழைந்தாள். வாசலில் அவளை நிறுத்தி அவள் வாயைப் பிடுங்கினாள் சரோஜா.
"என்னாச்சு கல்யாணி?"
"ஏதோ தகராரும்மா...அடிச்சுக்கரானுங்க..." நிற்காமல் உள்ளே செல்ல எத்தனித்தாள்.
"என்னவாம்?"
"தெர்லம்மா.."
"அட.. அங்கேயிருந்து வர.. உனக்கு தெரியாதா.." பிட்டைப் போட்டாள்.
"வுடும்மா..."
"என்னாச்சு...சொல்லு.." விஷயம் தெரியவில்லை என்றால் மண்டை வெடித்து சுக்குநூறாக சிதறிவிடும் போல இருந்தது சரோஜாவிற்கு.
"அந்தக் கடைசியில ஒரு நாட்டார் கடை இருக்குல்ல.. "
"ஆமாம்.."
"அதத் தாண்டி மாடியில போலிஸ்காரரு  ஒருத்தர் குடியிருக்காறு..."
"ம்.. செக்க செவேல்ன்னு உசரமா புல்லட்ல போவாரே..."
"ஆமா..அவரோட பொண்ணு தாம்பரம் தாண்டி ஒரு பல்லு காலேஜில படிக்குது.. அதுக்கும் ரோட்டுக்கு அந்தப் பக்கிட்டு இருக்கும் ஒரு ஆட்டோக்கார பயலுக்கும் லவ்வு.. ரெண்டு மூணு தடவை கூப்பிட்டு கண்டிச்சுப் பார்த்தாரு.. ஒன்னும் நடக்கலை.."
"ஏன் அவர் போலிஸ் தானே... ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விசாரிக்க வேண்டியது தானே ?""அவன் அதோ அந்த போஸ்டர்ல ஈன்னு பல்லைக் காட்டி இளிச்சு கிட்டு ஒருத்தர் இருக்காரே... அவர் கச்சியில அடிப்படை உறுப்பினரா இருக்கான்.. "
"அதனால...."
"போலிஸ்காரரால ஒன்னும் செய்ய முடியலை.. அதனால ரெண்டு அடியாளை செட் பண்ணி பெண்டு எடுக்க சொல்லிட்டாருன்னு பேசிக்கறாங்க...."
"இப்ப என்னாச்சு.."
"என்னாச்சு.. போலிசுக்கு ரெண்டு ரவுடியை தெரியும்ன்னா... ரவுடிக்கு நாலு பேரைத் தெரியாதா?... இவனும் அவனும் ரெண்டு பக்கமா நின்னுக்கிட்டு அடிச்சுக்கரானுங்க... இவன் ரத்த விளாரா நிக்கறான்... மண்டையில இருந்து பொத்துகிட்டு ஊத்துது.. அத்த வுடும்மா. போயி வேலையை பாப்போமா.... " சுரத்து இல்லாமல் சொல்லிக்கொண்டு வேலை செய்யப் போனாள்.

***

முக்குக்கு முக்கு டாஸ்மாக்கிலிருந்து ஃபுல்லாக வெளியேறியவர்கள் பிளாட்பாரங்களில் வாந்தி எடுக்கும் இரவு பதினோரு மணி. எப்பப் பார்த்தாலும் ஆபிஸ்ல வேலை.வேலை.வேலை. என்னக் கருமாந்திர ஆபீசோ.. ஊர் உலகத்துல இல்லாத பொல்லாத ஆபீசு.. என்று மனதுக்குள் சபித்துக்கொண்டு வாசலுக்கு வர பயந்து ஜன்னலில் நின்றிருந்தாள் சரோஜா. "டர்ர்... டர்ர்.. டர்ர்..." என்று அர்த்த ராத்திரி ஆட்டோ ஊர்வலம் திடீரென்று தெருவில் முளைத்தது. சரோஜா பிடித்திருந்த இரும்பு ஜன்னல் கம்பி கூட பயந்தது. சுகுமாரை இன்னும் காணலை. மனசு கிடந்து அடித்துக் கொண்டது. தெரு போர்க்களமாய் காட்சி தந்தது. போலிஸ்காரருடைய ரவுடி சேனைக்கும் தொழில்முறை ரவுடி சேனைக்கும் யுத்தம் தொடங்க ஆயத்தமாயிருந்தது.  காலையில் அடிபட்டவர்கள் இப்போது ஒன்று கூடி அடிக்க வந்திருக்கிறார்கள். திரும்பவும் கண்ணாடி நொறுங்கும் சத்தமும், கட்டை வீச்சும், விர்விர்ரென்று செயின் சுழற்றும் சத்தமும் பீதியை கிளப்பும். ரமணா நன்றாக தூங்கி விட்டான். எழுந்தால் அழுவான். மொபைல் பேசினாள். "பத்து நிமிஷத்ல இருப்பேன்" என்று வாக்குறுதி அளித்தான்.

பன்னெண்டாவது நிமிஷத்தில் வீட்டில் நுழைந்து கைலி மாற்றிக்கொண்டான். பனியனுடன் தட்டும் தண்ணீருமாக சாப்பிட உட்கார்ந்ததும்
"என்னாச்சு.. டல்லா இருக்கே.. லேட்டா வந்துட்டேன்னு கோபமா.. இனிமே லேட்டா வந்தா மல்லிப்பூ அல்வாவோட தான் வருவேன்..." என்று கொஞ்சினான்.
"ச்சே..ச்சே.. காலையில இங்கே ஒரே ரகளை.. கோடியில இருக்கிற போலீஸ்காரன் பொண்ணும் ஆட்டோகாரனும் லவ் பண்றாங்களாம். அடிதடி.. தெருவே ரெண்டு பட்டு போச்சு. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி திரும்பவும் ஒரு பத்து பதினஞ்சு ஆட்டோ இங்க ரவுண்டு அடிச்சுது.. அதான் பயந்து போயிட்டேன்.." என்று கலவரமாய்ச் சொன்னாள் சரோஜா.
"யாரோ..யாரையோ லவ் பண்ணினா நமக்கென்ன.. நம்பளை வந்து யார் என்ன செய்யப்போற.. இதுகெல்லாமா கவலைப் படுவாங்க..." என்று சமாதானம் செய்தான்.

கையலம்பி கொஞ்ச நேரம் டி.வி மேய்ந்தான். ஒரு ஊழல் இன்னொருவரை பார்த்து ஊழல் கொக்கரித்தது. ஒரு வாரிசு இன்னொரு வாரிசை இகழ்ந்து பேசியது. எல்லோரும் தலைவர்களாக உள்ள கட்சி தொண்டர்கள் வேலை செய்ய வேண்டும் என்று முழங்கியது. பார்க்க ஒன்றும் சுரத்தாக இல்லை. ஒரு ஏப்பம் விட்டு ஜீரணத்தை கன்ஃபர்ம் செய்த பிறகு படுக்கையில் விழுந்தான்.

"டிக்". வீட்டின் லைட் அணைக்கப்பட்டது. விழித்திருந்த அந்த வீடும் இப்போது தூங்கிற்று. வெளியே சோடியம் வேபோர் விளக்கு பிரகாசமாய் நிர்ஜனமான சாலைக்கு விளக்கடித்துக் கொண்டிருந்தது.

***

மறுநாள் கடைகள் திறந்திருந்த அதே சோம்பல் மதியத்தில்... (எருமை மிஸ்ஸிங்)
"என்ன கல்யாணி...அப்புறம் என்னாச்சு.." கையை பிடித்து இழுக்காத குறையாக கூப்பிட்டாள் சரோஜா.
சலித்துக்கொண்டே "என்னம்மா..." என்றாள்.
"அதான்.. அந்த தகராறு...."
"அந்தக் கூத்த ஏம்மா கேக்கற... நேத்தே அந்தப் பொண்ணும் அந்த ஆட்டோகாரனும் ஓடிப்போய்ட்டாங்க... அதான் ராப்பூரா ஆட்டோல தேடிக்கிட்டு திரிஞ்சானுன்களே..."
"அப்புறம்..."
"அப்புறம் என்ன.. பேரன் பேத்தி பொறந்து நேரா வந்து கால்ல விளுவாங்க.. இவங்களும் சரி சரி போனாப்போவுதுங்கப் போறாங்க.. நாம நம்ம பொழப்ப பாப்போம்.." கட் செய்து விட்டு போய்விட்டாள்.

***

இரவு அதே பதினொரு மணி... சாப்பிடும் கணவனிடம்...
"ஏங்க இந்த விஷயம் தெரியுமா?"
"என்ன?"
"நேத்திக்கு தகராறு நடந்திச்சே.. அந்தப் பொண்ணும் பையனும் ஒடிப் போய்ட்டாங்களாம்?"
"ஆமாம். இந்நேரம் வத்தலகுண்டு பக்கத்தல மலையோர கிராமத்தில ரெண்டுபேரும் சந்தோஷமா இருப்பாங்க..."
இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனாள் சரோஜா. சலனமே இல்லாமல் மோரை உறிஞ்சி குடிக்கும் அவனைப் பார்த்து அதிசயித்தாள்.
"என்ன சொல்றீங்க?" என்று கேட்ட அவள் விழிகள் ஆச்சர்யக் குறி போல விரிந்தது. அப்புறம் பயந்தது.
"அந்த போலீஸ்காரன் கூட இப்ப குடும்பம் நடத்தறது அவனோட ரெண்டாவது பொண்டாட்டியோட ஃபிரண்டு.  இந்தப் பொண்ணை அவங்க ரொம்ப சித்ரவதை பண்றாங்க. அவன் ஒரு இன்செஸ்ட். ஒருநாள் அந்த ஆட்டோகாரன் கூட இந்தப் பொண்ணை ரயிலடிகிட்ட ஒரு தடவை பார்த்தேன். தெருவில ரொம்ப நல்ல பொண்ணுங்கற அக்கறையில "ஏம்மா. இப்படி பண்றே..."ன்னு கூப்பிட்டு கேட்டப்ப, அவங்க ரெண்டு பேரும் எங்கிட்ட என்ன ஏதுன்னு விவரமாச் சொன்னாங்க. அதான் சேர்த்துவச்சுட்டேன்."
"என்னங்க.. இப்படி பண்ணிட்டீங்க....நாளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா..." என்று படபடத்தாள் சரோஜா. நிதானமாக கை அலம்பிக்கொண்டு வந்தான்.

"சரோஜா, நாளைக்கு என்ன நடக்கும்ன்னு தெரியாததில தான் இந்த உலகத்தின் சுவாரஸ்யம் அடங்கி இருக்கு. நாளைக்கி வர்றதை நாளைக்கி பார்ப்போம். மனசை போட்டு குழப்பிக்காம... வந்து படு..." என்று தைரியம் சொன்னான். சாப்பிட்டவுடன் உடனே படுக்காமல் கொஞ்சம் நேரம் பாட்டு கேட்டான். ரேடியோவில் "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. இல்ல ஓடிப்போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா.." என்று விக்ரமும் த்ரிஷாவும் பாடிக்கொண்டிருந்தார்கள். ஏற்கனவே நித்ராதேவியின் பிடியில் இருந்தவளை திரும்பிப் பார்த்து சிரித்தான்.

"டக்.டக்.டக்.டக்..". இந்த அகாலத்தில் வாசல் கதவை யாரோ தட்டுவது கேட்டது.பட உதவி: http://globalfare.blogspot.com/

-

24 comments:

bandhu said...

//மேலே இருக்கும் வரியோடு முடித்தால் தொடர்கதை//
இல்லை. மேலே இருக்கும் வரியோடு முடித்தால் ஒ ஹென்றி வகை (பிரமாதமான) சிறுகதை!
Remember the Lady or the Tiger?

எல் கே said...

எதோ ஒண்ணு மிஸ்ஸிங் கதைல

RVS said...

@bandhu
நீங்கள் குறிப்பிட்ட சிறுகதை படித்ததில்லை.. நெட்டில் தேடினேன்... எடுத்திருக்கிறேன்.. ஆனால் Frank R. Stockton என்று இருக்கிறது.. சரியா..
கருத்துக்கு மிக்க நன்றி சார்! தெம்பாக உணர்கிறேன். ;-))

RVS said...

@எல் கே
என்னது எல்.கே? என்ன மாதிரி உணர்கிறீர்கள்? ;-)))

Madhavan Srinivasagopalan said...

பின்குறிப்பையும் படிச்சேன்..
தொடரவா.. முடிக்கவா னு கேக்குறீங்களா..?
உங்க இஷ்டம் (அதுவே எங்கள் கஷ்டம்.. ம்ம்ம்ம்)

RVS said...

@Madhavan Srinivasagopalan
மாதவா பயம் வேண்டாம்.... பின் குறிப்பை தூக்கி விட்டேன். மேலே பந்து சாரின் பின்னூட்டத்தை பார்க்கவும். அதனால் பின்குறிப்பை எடுத்துவிட்டேன். கருத்துக்கு நன்றி மாதவா.. ;-)))

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருக்கு...

அப்பாதுரை said...

வாவ்! சாதாரணமா பேசுறதா நினைச்ச வத்தலகுண்டு நிசமாவே குண்டா? nice story.

ஆச்சரியமா இருக்கு போங்க! சீரியல்னா ஒரே அழுகைன்றாங்க, நீங்க சொல்றதைப் பாத்தா
>>>இரண்டு பொண்டாட்டி கட்டிக் கொண்ட ஒரு உன்னத உதாரண புருஷன் சீரியலோ, அல்லது இரண்டு புருஷன் வைத்துக் கொண்டு மூன்றாவது தேடும் கற்புக்கரசிகள் சீரியலோ

ஸ்ரீராம். said...

சூப்பர் ஃபினிஷ்... கொஞ்சம் அசந்து லேட் பண்ணினா ரெண்டு மூணு பதிவு போட்டுடறீங்களே ...

ரிஷபன் said...

அய்யோ.. கதவைத் தட்டினது அந்த போலிஸ் இல்லீல்ல.. எனக்கு மட்டும் சொல்லிடுங்க..

பத்மநாபன் said...

கொலைமூஹுர்த்தம் தலைப்பிலேயே அசத்திட்டீங்க.... கதையில் இடைஇடையில் நல்லா டிடைல்ஸ் போடறிங்க..

தலைப்ப காணவில்லைன்னு தேடறப்ப கதைவை தட்டிவிட்டீர்கள்...

ஒரு முடிவோடதான் இருக்கிங்க...அசத்துங்க வாழ்த்துக்கள்..

சிவகுமாரன் said...

திகில் கதை கூட சூப்பரா எழுதறீங்க. நீங்க பாட்டுக்கு கதையை முடிச்சிட்டீங்க. மண்டை குழம்புதே ... கதவைத் தட்டியது காற்று தானே .

Pranavam Ravikumar said...

பதிவு சூப்பர். வாழ்த்துக்கள்!

Anonymous said...

அண்ணே என்ன தவிக்க விடாம தொடரும் அப்படின்னு போட்டுடுங்க.. ப்ளீஸ்.. ;)

இராஜராஜேஸ்வரி said...

கதை முடிவல்ல.ஆரம்பம்....

RVS said...

@MANO நாஞ்சில் மனோ
நன்றிங்க மனோ.

RVS said...

@அப்பாதுரை
சார் அழுகை சீரியல் தான்.. ஆனா நடிக்கற முக்கால் வாசி அப்பா அம்மா கேரக்ட்டருக்கு இதுபோல தொடர்பு இருக்கும். எல்லாம் கலாச்சார சீர்கேடு. இதுபற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று எண்ணம். பார்க்கலாம். ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
இப்ப கொஞ்சம் ஸ்லோ பண்ணிட்டேன். ;-)))

RVS said...

@ரிஷபன்
சார்! வாசகர்களின் ஊகத்திற்கு விட்டுட்டேன். ;-))

RVS said...

@பத்மநாபன்
பாராட்டுதல்களுக்கு நன்றி பத்துஜி! ;-))

RVS said...

@சிவகுமாரன்
சிவா!! எல்லாம் உங்களின் முடிவுக்கு விட்டாச்சு. உங்கள் விருப்பம் போல் முடித்துக்கொள்ளுங்கள். ;-))

RVS said...

@Pranavam Ravikumar a.k.a. Kochuravi
நன்றி. முதல் வருகைக்கும் கருத்துக்கும். அடிக்கடி வந்து போங்க.. ;-))

RVS said...

@Balaji saravana
அடிக்கடி தொடர் எழுதினா அலுத்துரும் தம்பி. கொஞ்ச நாள் பொறு தலைவா.. ;-)))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
சாரிங்க.. முடிஞ்சிருச்சு... கருத்துக்கு நன்றி.. ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails