Wednesday, March 23, 2011

ஒரு துணை நடிகையின் கதை - II


********************** இரண்டாவது ரீல் *************************
cinema reelரோடோர மர நிழலில் ஒதுக்கி நிறுத்திய போலீஸ்காரர்களை பார்த்து கலவரப்பட்ட ராமிடம்..
"எங்கப்பா போரே..." என்று ஒரு ஆறு மாத கர்ப்பஸ்திரியான ஒரு காக்கி கேட்டது.
"மயிலாப்பூர் சார்" என்று ஐயாவுக்கு அடக்கமாக பதிலளித்தான் ராம்.
இரண்டு டூ வீலர்கள் அருகில் ஓட்டி வந்து போலிஸ் ஏதாவது சில்லறை தேத்துகிறதா என்று நோட்டம் விட்டு திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே போனார்கள். ஹாரன் அடிப்பது ஒன்றே குறிக்கோளாய் ஒரு மாநரக பஸ் நிறைமாத புள்ளைத்தாச்சியாய் டிராபிக்கில் நீந்தியது.

ஹாரனுக்கு இருகைகளாலும் காதை பொத்திக்கொண்டு "இவர மைலாப்பூர் டாங்க்காண்ட வுட்டுடு" என்று ஒரு எட்டு மாதத்தை பில்லியனில் உரிமையோடு ஏற்றிவிட்டது. காலைத் தூக்கி போட்டு ஏறும்போது வண்டியை சரியாமலும், பின்னுக்கு குடை சாயாமலும் இருக்க காலால் ரோடில் சேறு மிதித்து பாலன்ஸ் செய்ய பிரம்ம பிரயத்தனப்பட்டான் ராம்.
"ஓ.கே சார்" என்று ராம் தலையாட்டி கிளம்ப பில்லியன் ரோடோரத்துக்கு ஒரு சல்யூட் வைத்தது.
பின் சீட்டில் போலிஸ் இருக்கும் தைரியத்தில் இத்திருநாட்டின் முக்கிய மந்திரிகள் போல அலட்சியமாக சிகப்பு சிக்னல் கடந்தான். பின்னால் இருந்து காங்கிரஸ் சின்னம் போல ஓரத்தில் இருந்த போக்குவரத்திடம் சை'கை' காண்பித்து ராமை சுலபமாக அழைத்துசென்றது எட்டு மாதம்.
"எங்க சார் வொர்க் பண்றீங்க" தோழமையாக விசாரித்தது எட்டு.
"ஃபிலிம் இண்டஸ்ட்ரில..."
"அது எங்க இருக்கு" என்று கேட்ட எட்டுவை ரியர் வியூ மிர்ரரில் ஒரு லுக் விட்டு..
"சினிமால சார்.."
"ஓஹோ.. வெரி குட். என்னவா இருக்கீங்க"
"ப்ரொடக்ஷன் அசிஸ்டன்ட்"
"இந்தப் பக்கம் என்ன ஏதாவது ஷூட்டிங்கா..."
"இல்ல.இல்ல.. தெரிஞ்சவங்க ஒருத்தரை பார்க்க வந்தேன்.." என்று கொஞ்சம் தடுமாறினான்.
போலிஸ் பின்னால் இருந்தும் சைலன்சருக்கு பதில் தகரடப்பா கட்டிய இளந்தாரி ஆட்டோ ஒன்று இவனை கட்டடித்ததில் வெகுண்டான். துரத்தி சென்று பதிலுக்கு கட் அடிக்கலாம் என்றால் வண்டி சறுக்கிவிடும் அபாயம் ஏற்பட்டதால் நிதானத்திற்கு வந்து அமைதியானான்.

டாங்கில் அவரை இறக்கிவிட்டவுடன் பாரம் இறங்கி பெருமூச்சு விட்டு வண்டி ராமுக்கு நன்றி சொன்னது. நேரே சென்று அடுத்த வலதில் இருந்த பிக்னிக் பிளாசா பார் நிறுத்துமிடத்தில் வண்டியை நுழைத்து "ஓரமா போடுப்பா..." என்று சொன்ன செக்யூரிட்டியை கண்டுக்காமல் ஓரக்கண்ணால் பார்த்து இரண்டு வண்டிக்கிடையில் முன் வீலை மட்டும் சொருகிவிட்டு மேலே பார் இருக்கும் இடத்திற்கு ரெண்டு ரெண்டு படியாக ஏறி விரைந்தான்.

வெள்ளையில் ராஜா தேசிங்கு போல தலைப்பாகை அணிந்து சிரம் தாழ்த்தி கதவை திறந்து உள்ளே விட்ட பணியாள் வரும் போது இவன் டிப்ஸ் குடுப்பானா என்ற சந்தேகத்தில் பார்த்தான். உள்ளே நுழைந்த மாத்திரத்தில் சுருள் சுருளாக சுற்றிக்கொண்டிருந்த சிகரட் புகையை Passive Smoker-ஆக சுவாசித்தான். இரண்டு ஆரம்ப நிலை குடிகார சின்னப் பயல்கள், தினமும் ஒரு கொள்கையாக ஒரே ஒரு லார்ஜ் அடிக்கும் கண்ணியவான்கள், "பீரைத் தவிர நா வேற ஒன்னையும் தொடமாட்டேன்" என்று சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் சத்தியவான்கள், சைட் டிஷ்ஷை மட்டும் பிளேட் பிளேட்டாக வேட்டு விடும் டீ டோட்லர்கள் என்று பலரும் சிரத்தையாக குடித்துக்கொண்டும் கம்பெனி கொடுத்துக்கொண்டும் போதையோடு உட்கார்ந்திருந்த பாரை கண்களால் துழாவினான். கண்ணாடி பாட்டில்களின் கைகெட்டும் தூரத்தில் எம்பி உட்காரும் குரோர்பதி சேரில் அமர்ந்து பொறுக்க சரக்கடித்துக் கொண்டிருந்தார் ராகவன். நான்காம் நம்பர் டேபிளுக்கு முட்டை பொறியல் சைட் டிஷ் எடுத்து வந்த அட்டண்டரை மயிரிழையில் இடிக்காமல் ரெண்டே எட்டில் அவரை அடைந்தான்.

"அண்ணே..."
"யாழு.." என்று திரும்பிய அண்ணனின் கண்கள் ரத்த சிவப்பாயிருந்தது.
"யாருப்பா அது... இவருக்கு ஒரு லெமன் கொடுப்பா..." என்று பக்கத்தில் கூப்பிட்டு ஆர்டர் செய்துவிட்டு, காதருகில் சென்று..
"அண்ணே... அடையார் அண்ணி... செத்துட்டாங்க..கொ...." என்று சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு "லை" அவன் காதில் கூட விழாத மாதிரி கிசுகிசுத்தான்.
ஏதோ புரிந்த மாதிரி பார்த்தார். தெய்வாதீனமாக உடனே லெமன் வந்தது. சரக்குக்காக அவர் நீட்டிய கோப்பையில் லெமனை ஊற்றி கொடுத்தான். இன்னும் இரண்டு கிளாஸ் தருவித்து கொடுத்தான் ராம்.
"பில்லு கொடுப்பா.."
பெரிய சேரில் இருந்து இறக்கும் போது தடுமாறினார். கீழே விழும் முன் தோளோடு சேர்த்து கைத்தாங்கலாக அணைத்துகொண்டான். சட்டைப் பையில் இருந்த ஒரு காந்தி நோட்டை உருவி கொடுத்துவிட்டு, மீதம் இருந்ததை "நீயே வச்சுக்கோ..." என்று தயாள குணத்தோடு தானம் வழங்கி படியிறங்கினான் ராம்.
"எழ்ங்க போழ்ற..." மழலையில் குழறிய ராகவனிடம் "அண்ணி... செத்துட்டாங்க.." என்று வண்டி எடுக்கும்போது கொஞ்சம் சத்தமாக பேசியது பக்கத்தில் வாயை கையில் ஊதி வாசனை தெரிகிறதா என்று சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்த புதுசாக கல்யாணம் ஆன இளைஞன் அதிர்ச்சியாய் பார்த்தான்.

பீச்சாங்கரை பக்கமாக வண்டியை செலுத்தினான் ராம். தொப்பை பெருத்த போலிசை ஏற்றி வந்ததை விட சிரமமான காரியம் ஸ்டடி இல்லாமல் தீர்த்தவாரி ஆகி பின்னால் இருக்கும் ராகவனை அழைத்துபோவது. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு ஆங்காங்கே விளக்குகள் ஒளிரும் பத்தரை மணி மரீனா நகை நட்டு பூட்டிக்கொண்ட நவயுக நங்கை போல இருந்தது. இன்று இரவு பிரிந்து இருக்கவேண்டுமே என்ற கட்டயாத்தில் இருக்கும் காதலர்கள் இன்னமும் நகமும் சதையுமாக உட்கார்ந்து கொண்டும் சயனித்துக் கொண்டும் காதல் புரிந்து கொண்டிருந்தார்கள். சுண்டல் விற்ற காசை பெஞ்சில் உட்கார்ந்து எண்ணிக்கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். பட்டம் விற்கும் பரட்டை தலை அம்மணியின் ஜட்டி போடாத இரண்டு வயது கருகரு ஆம்பளை பிள்ளை  இன்னதென்று தெரியாமல் எதற்கோ "வீல்..வீல்.." என்று அழுதுகொண்டிருந்தான். அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் நூலை சுற்றிக்கொண்டிருந்தாள். "நாளைக்கு பாகற்காய் பிட்ளை பண்ணிடுறேன்.." என்று மறுநாளைய மெனுவை ஹியரிங் எய்ட் வைத்த அகமுடையான் காதில் ஓதிக்கொண்டு சென்றாள் மாமி ஒருத்தி. அந்த மாமியின் முட்டிக்கையில் ஒரு  பலமான இடி இடித்துக்கொண்டு காற்றில் கீழே விழும் துணிபோல மணலில் சாய்ந்தார் ராகவன்.
தள்ளாடிக்கொண்டு தள்ளாத வயதில் இருந்த மாமியை இடித்த ராகவனையும் ராமையும் "இடியாடிக் பீப்பிள்" என்று வைதார் ஹியரிங் எய்ட் மாமா.

வரும்வழியில் ஒரு குளிர்பானக் கடையில் வாங்கிய ஒரு லிட்டர் பிஸிலெரி தண்ணீரை ஊற்றி கையில் வாங்கி முகத்தில் அறைந்தான் ராம். ஒரு உதறலோடு மணலில் திரும்பி படுத்துக்கொண்டார் ராகவன். முகத்தை திருப்பி தட்டி தட்டி உலுக்கினான். இன்னமும் பாத்ரூமில் ஷவர் தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்குமா என்று ஒரு கணம் யோசித்தான். அவள் கொக்கி போல கிடந்ததை நினைக்கும் போது நெஞ்சு நடுங்கியது. மீண்டும் மீண்டும் "அண்ணே.. அண்ணே.." என்று தண்ணீர் தெளித்து உலுக்கி உருட்டிக்கொண்டிருந்தான். கொஞ்ச நாழியில் அலுத்துப்போய் எழுப்புவதை விட்டுவிட்டு ரோடுப் பக்கம் பார்த்தான். கமிஷனர் ஆபிஸ் நிறைய விளக்குகளுடன் ஜெகஜோதியாய் தெரிந்தது. உள்ளே இருப்போருக்கு ஒளிமயமான எதிர்காலம். நான்கு போலீசார் நிதானமாக ராம் இருக்கும் திசைக்கு நடந்து வருவதை பார்த்து திகைத்தான்.
"அண்ணே..அண்ணே..." என்று பரட்டு பரட்டு என்று அவரை சொரிந்தான். சில நொடிகளில் பூதாகார நிழல்கள் மறைக்க காக்கிகள் பக்கத்தில் நின்றார்கள்.

"நீதானே ராம்!"
"ஆமா சார்"
"உனக்கு சோனாவைத் தெரியுமா?" என்று கனைத்துக்கொண்டே கேட்ட இன்ஸ்பெக்டர் கேள்விக்கு பதிலளிக்காமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் ராம். இன்னமும் தலை கவிழ்ந்து எதையோ பினாத்திக் கொண்டு மணலில் கிடந்தார் ராகவன்.
 "ம்..சொல்லு..." என்று கே-3 ஸ்டேஷன் அதட்டல் தோரணையை இங்கேயே ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர்.
ராம் வெலவெலத்தான்.
தொடரும் 

பட உதவி: http://sites.google.com/site/wisdubai/student-of-the-month/societyculturethroughworldcinema

-

20 comments:

raji said...

உங்க வாத்யாரோட ட்ரெய்னிங் நிறைய இடத்துல பளிச்சிடுகிறது

//பில்லியன் ரோடோரத்துக்கு ஒரு சல்யூட் வைத்தது.//

//சிரமமான காரியம் ஸ்டடி இல்லாமல் தீர்த்தவாரி ஆகி பின்னால் இருக்கும் ராகவனை அழைத்துபோவது.//

இந்த வரிகள் சூப்பர்

//பின்னால் இருந்து காங்கிரஸ் சின்னம் போல ஓரத்தில் இருந்த போக்குவரத்திடம் சை'கை' காண்பித்து ராமை சுலபமாக அழைத்துசென்றது எட்டு மாதம்.//

இங்கு நடை ரொம்ப நல்லாவே நடை பயின்றிருக்கு

அந்த ஆறு மாத எட்டு மாத போலீஸ் வர்ணனை ரசிக்கும்படியா இருக்கு

Anonymous said...

//யாழு.., எழ்ங்க போழ்ற//
Ultimate. சிரிப்பு சரவெடி..


You have the knack of making us to read your posts by using the words like..

டீ டோட்டலர், டாங்க்காண்ட...

Hats off.

எல் கே said...

இந்த எபிசோட்ல முடிப்பேன்னு யாரோ சொன்னாங்க

வெங்கட் நாகராஜ் said...

கதை விறுவிறுப்பாய் செல்கிறது! இரண்டு பகுதி என்று சொன்னது போல நியாபகம்! ஆனால் தொடரும்!! வார்த்தைப் பிரயோகங்கள் அருமை மன்னை மைனரே.

Chitra said...

சுவாரசியமாக போகுதுங்க.... பாராட்டுக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

தள்ளாடிக்கொண்டு தள்ளாத வயதில் இருந்த மாமியை இடித்த ராகவனையும் ராமையும் "இடியாடிக் பீப்பிள்" என்று வைதார் ஹியரிங் எய்ட் மாமா.//
வார்த்தைப் பிரயோகங்கள் அருமை.

பொன் மாலை பொழுது said...

///சத்தியமாக தலைவரின் நைலான் கயிறு படித்ததில்லை. இந்த முறை புத்தகக் காட்ச்சியில் கிழக்கில் போட்டிருந்தார்கள். கையில் எடுத்து பார்த்துவிட்டு ஏனோ வைத்துவிட்டேன். படித்துவிட்டு சொல்லுங்களேன் தல. ;-)))///


எங்கதாம் போயி முட்டிக்கிறது??
நைலான் கயறு தான் அவரு எழுதி வெளியான முதல் கதை. குமுதம்காரன் தான் போட்டான். நான் படித்தாகிவிட்டது பல முறை. சீடர்கள் தான் படிக்கவேண்டும்.

//அவள் கொக்கி போல கிடந்ததை //

அவள் ஆங்கில எழுத்து 'எஸ்' போல கிடந்தாள்- இது குருநாதரின் நைலான் கயறு கதையில் வருவது.

சக்தி கல்வி மையம் said...

கதை சுவாரஸ்யமாக செல்கிறது... நான் கூட முடித்துவிடுவீர்கள் என்றே நினைத்தேன்..

ADHI VENKAT said...

த்ரில்லிங்கா இருக்கு! வார்த்தை பிரயோகம் நல்லா இருக்கு.

ரிஷபன் said...

எப்படி ஸார் முடிக்கப் போறீங்க.. பயங்கர சஸ்பென்ஸ்

RVS said...

@raji
வாழ்த்துக்கு நன்றி ராஜி!
பல குறிப்பிட்ட சுஜாதாவின் படைப்புகளை ஆழப் படித்திருக்கிறேன். அதன் தாக்கம் நிச்சயம் இருக்கும். தொடர் வாசிப்பிற்கும் ஊக்கத்திற்கும் கோடானு கோடி நன்றி. ;-))

RVS said...

@! சிவகுமார் !
உங்கள் அன்புக்கு நன்றி சிவா. அடுத்த பார்ட் ரிலீஸ்டு. ;-))

RVS said...

@எல் கே
தல.. ஏன் படிக்க திராபையா இருக்கா? ;-))))
கூடிய சீக்கிரம் முடிக்க முயற்சி செய்யறேன்.. ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
விசனப் படாதீங்கோ.. சீக்கிரம் முடிச்சுடறேன்.. பாராட்டுக்கு நன்றி. ;-))

RVS said...

@Chitra
நன்றிங்க.. என்ன ரெண்டு மூணு பதிவா ஆளைக் காணோம். ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
தொடர் வாசிப்பிற்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க... ;-))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
எங்குமே நான் ஒரு ஒழுங்கீனமான சீடன் மாணிக்கம். ;-)))
வாத்தியார் என்னை மன்னிக்கட்டும். உங்கள் பாராட்டுக்கள் எனக்கு பலம் தரட்டும். நன்றி . ;-))

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
கவலையே படாதீங்க.. முடிக்க மாட்டேன். . நீங்க தப்பிக்க முடியாது.. ;-))

RVS said...

@கோவை2தில்லி
நன்றிங்க.. உங்களோட கிராஜுவேஷன் பதிவு பார்த்தேன். கமென்ட் போட நேரம் இல்லை. சீக்கிரம் வந்து பண்ணிடறேன்.. ;-))

RVS said...

@ரிஷபன்
சார்! நான் வசம்மா மாட்டிக்கிட்டேன். முடிக்க திண்டாடப் போறேன்னு நினைக்கறேன்.. ;-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails