Thursday, November 27, 2014

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா!

”ஒன் பியெம் ரிப்போர்ட்டிங் ஒன்லி..” என்று கையில் பாட்டரி ஸ்பீக்கர் செட்டோடு கதறிக்கொண்டிருந்தவரிடம் “டூ பியெம்மெல்லாம் வரலாமா?”ன்னு ப்ரிண்ட் அவுட்டை விசிறிக்கொண்டே கேட்டால் என்ன செய்வார்? கடுப்பாயிட்டார் அந்த செக்யூரிட்டி. எரித்துவிடுவது போல ஒரு பார்வையை வீசி “டூ பியெம்முக்கு வாங்க சார்.. நவ்ருங்க..நவ்ருங்க...” என்று விலக்கினார். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு TBC 129 காட்டேஜ் வாசலில் சப்பரக்காவென்று உட்கார்ந்துகொண்டோம்.நேற்று திருமலா திருப்பதி. Sabareesh Hariharanக்கு மொட்டை. ஸ்ரீநிவாசப்பெருமாள் திவ்ய தரிசனம். திருச்சானூரில் பத்மாவதி தாயாரின் ஏகாந்த தரிசனம்.

திருமலையில் வெய்யில் அடித்தாலும் ஒரு ஜிலுஜிலு. இலவச கக்கூஸ் கூட ஃபினாயிலில் குளித்துச் சுத்தமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் துடைப்பமும் கையுமாக சீருடையயணிந்த பணியாளர்கள் வீதியோரங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்கள். புஷ்கரணியில் இறங்கி நின்று காலைப் பார்த்தால் நகம் பளிச்சென்று தெரிகிறது. தெளிந்த நீர். ”தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையன் ஆவேனே” என்று குலசேகராழ்வார் பாடியது நினைவுக்கு வந்து மீனேதும் தென்படுகிறதா என்று கண்ணால் அலசினேன். கண்ணுக்குத் தட்டுப்படலை.

போன மாசம் அடித்த மொட்டைத் தலையில் தேங்காயெண்ணெய் வழிய ஒரு பெரியவர் முன்னால் வந்து சிரித்தார். அவர் கையிலும் பிரிண்ட் அவுட் இருந்தது. “கரெக்ட்டாதான் உள்ற விடுவாங்க சார்.. “ என்று வேஷ்டியை மடித்துக்கொண்டு படிக்கட்டில் உட்கார்ந்தார். ”நீங்க ஃபர்ஸ்ட் டைம் வர்றீங்களா?”. “மூணு மணிக்கு இன்னொருதரம் புக் பண்ணியிருக்கேன்..” என்று இன்னொரு சட்டைப் பாக்கெட்டிலிருந்து ரெண்டு ப்ரிண்ட்டை எடுத்து நீட்டினார்.

பெண்கள் சுடிதார் அணிந்திருந்தால் துப்பட்டா அவசியம். பேண்ட் அணிந்து கோயிலுக்குள் செல்லக்கூடாது. போன்ற ஆடை விதிமுறைகள் அமுலுக்கு வந்திருக்கின்றன. க்யூவின் வாலில் ரூ. 200க்கு வேஷ்டி விற்கிறார்கள். “ரேஷன் வேஷ்டி” என்றார் என் பக்கதிலிருந்த அந்தப் பெரியவர். நான் பார்த்த அரை மணியில் ஐம்பது பேராவது வாங்கியிருப்பார்கள். தொழில் முனைவோர் கவனிக்க.

வாத்யார் சுஜாதா “திமலா”வில் எழுதியதில் எண்பது சதவிகிதம் முடிந்துவிட்டது. நெட்டில் புக் செய்து வெங்கடாஜலபதியின் அருள் கிடைக்க ஏற்பாடு.

இணைய முன்பதிவு ஸ்பெஷல் எண்ட்ரி. தலைக்கு முன்னூறு ரூபாய். ஒரு லாக்கினுக்கு ஆறு டிக்கெட். யாத்ரீகர்களின் பாஸ்போர்ட் படத்தோடு (20KB க்குள் இருக்கவேண்டும்) புக் செய்து கொள்ளவேண்டும்.மதியம் பன்னிரெண்டு மணியிலிருந்து ஐந்து மணி வரை நான்கு ஸ்லாட்டுகள். ஆன்லைன் பேமெண்ட். பார்கோடோடு நம் படத்தையும் சேர்த்துத் திரையில் தரும் கன்ஃபர்மேஷன் ரசீதை இரண்டு ப்ரிண்ட் எடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்று செக் செய்யும் இடத்தில் வைத்துக்கொள்வார்கள். இன்னொரு verified சீலிருக்கும் ஒரு ரசீது நமக்கு. அதற்குதான் லட்டு. இல்லையென்றால் அல்வாதான். தரிசன முன்பதிவுக்கு முன்னர் ttdesevaonline.comமில் நம்மை ரெஜிஸ்தர் செய்து கொள்ளவேண்டும்.

”ரெண்டு மணிக்குதான் துப்பாக்கி நேரத்துக்கு க்யூல விடுவோம்னு சொல்றாங்களே... தர்ஷன் டைம் மூணு மணிக்குன்னு போட்ருக்கு. ஸ்ரீநிவாசப்பெருமாள் சக்கர நேரத்துக்கு மூணு மணிக்கு தரிசனம் கொடுத்துடுவாரா?”ன்னு குசும்பாகக் கேட்டேன். பக்கத்திலிருந்த சின்னவள் பரபரவென்று என் கையைச் சொறிந்தாள்.

“என்ன?”

“அதென்ன துப்பாக்கி நேரம்?”

“gun time".

“மொக்கைப்பா...”ன்னு திட்டிவிட்டு காளிகாதேவி போல முறைத்தாள்.

பெரியவள் கேட்டாள் “அப்ப சக்கர நேரம்?”

“பெருமாள் சக்ராயுதபாணி. அவர்ட்ட துப்பாக்கி லேதும்மா..” என்று சிரித்தேன். அணியாகத் திரண்டு அடிக்க ஓடி வந்தார்கள்.

ரெண்டு மணிக்கு க்யூ திறந்தார்கள். பாண்ட் போட்டு மேலே வேஷ்டியை சுற்றிக்கொண்டவர்களை க்யூவிலிருந்து வெளியே இழுத்து பாண்ட்டை உருவிவிடச் சொன்னார்கள். காட்டேஜின் ஒரு அறை இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மொபைல் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை போர்டும் மூன்று இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. கையில் கட்டியிருந்த ஃபாஸ்ட்ராக் வாட்சை இரண்டு மூன்று முறை சோதனைக்காகத் திருப்பிப் பார்த்தவருக்கு நான் ஜேம்ஸ்பாண்ட் ரகம் என்ற சந்தேகம் தலைதூக்கியிருந்தது. வாட்சினுள் இரகசிய கேமிரா இருக்குமோ என்று என் முகத்தில் எதுவும் கள்ளத்தனம் தெரிகிறதா என்று ஊடுருவிப் பார்த்தார். தப்புதண்டா செய்யும் போது சங்கீதா என்னை பார்ப்பது போலவே இருந்தது. ”இதி...” என்று ஆரம்பித்து அவர் ஜாங்கிரி லாங்குவேஜ் பேசியதில் ”கேமரா எதுவும் இருக்கா?”ன்னு கேட்பது அவரது உடல்மொழியில் எனக்குப் புரிந்தது. கழட்டிக் கையில் கொடுத்துவிட்டேன். மூன்று முறை திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே வழிவிட்டார் அந்த து.சாம்பு.

கோபுரவாசலை அடைவதற்குள் மூன்று நான்கு பாலங்கள் வரும். பல மொழிகளில் ஒட்டி உறவாடுபவர்களின் ஊர்க்கதையெல்லாம் கேட்கலாம். திடீரென்று ஒருவர் “ஏடுகொண்டல வாடா... கோவிந்தா.. கோவிந்தா...” என்று குரலெழுப்புவார். முன்னால் பத்து பேர் பின்னால் பத்து பார் பாதி கதையில் “கோவிந்தா..கோவிந்தா...” என்று உரக்கக் கோஷமிடுவார்கள். அடுத்த நொடியில் ஒன்றுமே நடக்காதது போல மீண்டும் விட்ட இடத்தில் கதையைத் தொடர்வார்கள். ஆனால் நேற்று நடந்தது பேராச்சரியம். நேரே கோபுரவாசல் வரை குடுகுடுவென்று ஓட்டமாக ஓடி வந்துவிட்டோம். மொத்தமாக பதினைந்தே நிமிடத்தில் தரிசனம் முடித்துக்கொண்டு உள் பிரகாரத்தில் ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண சுதைச் சிற்பங்களைப் பார்த்துவிட்டு லட்டு வாங்க வெளியே வந்துவிட்டோம். பத்து நொடி தரிசனமானாலும் மனசுக்கு அப்படியொரு நிறைவு.

க்யூவில் நிற்பதற்கு முன்னால் “மூணு மணிக்கெல்லாம் சக்கர நேரத்தில் தரிசனம் தருவாரா?”ன்னு லொள்ளு பேசியது அப்போதுதான் உரைத்தது. பதினைந்தே நிமிடத்தில் வேங்கடவன் தரிசனம். “அவர்ட்ட வச்சுக்கக்கூடாதுப்பா...” என்று சிலிர்த்துக்கொண்டேன்.

1 comments:

Madhavan Srinivasagopalan said...

அடிக்கடி ஊர் ஊராச் சுற்றவும்.. அப்போது தான் எங்கள் இலக்கியப் பசிக்கு தீனி கிடைக்கும்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails