இந்த ப்ளாக் தொடங்கிய சுபயோக சுபதினத்திலிருந்தே தொலைபேசியிலும், அலைபேசியிலும், அரட்டை பெட்டியிலும், ஈமெயில்கள் வாயிலாகவும், கடிதப்போக்குவரத்து மூலமாகவும், காலை வேளை நடைபயிற்சியின் போதும், காரை நிறுத்தியும், உத்தியோகத்திலும், கடைத்தெருவிலும், முதுகுக்கு பின்னும், முகத்திற்கு முன்னும், விளையாட்டுப்பள்ளி செல்லும் கௌதம் முதல், முப்பது வருடத்திற்கு முன் ரயில்வேயில் ரிடையர்ட் ஆன அனைத்து பல் போன தாத்தா பஞ்சாபகேசன் வரை லட்சோபலட்சம் பேர் கேட்டாயிற்று.
நீ என்ன "தீராத விளையாட்டு பிள்ளை" யா?
மூன்று பெண்களை காதலிக்கும் போது, இரண்டாவது பெண்ணிடம் முதல் பெண் பெயரையும், மூன்றாவது பெண்ணிடம் இரண்டாவதின் நாமகரணத்தை சொல்லி விளையாடும் விஷாலின் சமீபத்திய படத்தால் ஈர்க்கப்பட்ட தலைப்பு அல்ல இது.
வாலிப வயது பிள்ளை ரஜினி சமர்த்தாக இருக்கும்போது, கேசம் நரைத்தாலும் ஆசை நரைக்காத அரச கோலத்து 'நெற்றிக்கண்' அப்பா ரஜினியை அரண்மனை அந்தப்புர பெண்டிர் கோலத்தில் "நாதா நாதா... நாதா நாதா..." என்றழைத்து அவர் புகழ் பாடும் "தீராத விளையாட்டு பிள்ளை ... இவன் சிங்கார மன்மதன் தான் சந்தேகம் இல்லை..." என்ற திரைப்பட பாடலுக்கும் இந்த தலைப்பிற்கும் இம்மியளவும் சம்பந்தமில்லை.
ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டு அலைவரிசைகளில், அரைக் கால்சட்டை போட்டுக் கொண்டு அழகு தேவதைகள் இரு அணியாக பிரிந்து, சமுத்திரராஜனை கரைக்கு அழைத்து வம்பு செய்யும் "பீச் வாலிபால்" விளையாடுவதைப் பார்க்கும் "விளையாட்டு பிள்ளை" இல்லை.
ஸ்கூட்டியில் போகும் பியூட்டியை பார்க்கும் காதல் விளையாட்டு பிள்ளை இல்லை.
மேலிருந்து கீழ் வரை துணியை சுற்றிக்கொண்டு, மறைக்க வேண்டிய பாகங்களை சற்றே மறைக்காமலும், காலில் முக்காலி போல் பாதரட்சைகள் அணிந்து, காதில் மதுரை பக்க கிழவிகளின் தொங்கட்டான் அணிந்து, இடது முன் சக்கரம் பஞ்சர் ஆன அம்பாசிடர் கார் போல நடந்து வரும் பேஷன் டி.வி. பெண்களை(?) நோக்கும் விளையாட்டு பிள்ளை இல்லை.
எம்.டி.சி. பேருந்தில் உள்ளே எவ்வளவு இடம் காலி இருந்தாலும் ஒரு கை கம்பியையும் ஒரு கால் கடைசிப் படியிலும் இருக்க, மறு கையும் காலும் வெளியே காற்றில் பறக்க "வளையோசை கல கல கலவென" நினைப்பில் கடைசி சீட்டு மாதுவிடம் புத்தகம், மனது இரண்டையும் கொடுத்துவிட்டு ஹீரோ வேலைகள் நிகழ்த்தும் விளையாட்டு பிள்ளை இல்லை.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், பக்கத்து தெரு ரேஷன்கடை, எம்.டி.சி. பஸ், மின்சார ரயில், மாதாந்திர சாமான்கள் வாங்கும் "நீல்கிரிஸ்", தி.நகர் ரெங்கநாதன் தெரு, 'பிரம்மாண்டமாய்' சரவணா ஸ்டோர்ஸ், சங்கீத நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், மற்றும் பிற ஜனசந்தடி மிகுந்த பிரதேசங்களில் கூட, பெண்கள் பின்னால்/அருகில் போகாத, போகத் தெரியாதலால், 'அந்த' விளையாட்டு பிள்ளை இல்லை.
நான் "தீர்ந்த விளையாட்டு", "தீராத விளையாட்டு" வேறுபாடு அறிகிலேன். 'காதல்' சந்தியா படத்தை காண்பித்தால், வெள்ளித்திரையில் ஓய்வு பெற்ற "சங்கமம்" விந்தியா என்று சொல்வேன். அமைப்பு ரீதியாக மட்டுமே ஆண் பெண் வித்தியாசம் அறிய கற்றுக்கொண்டு உள்ளது என் வெள்ளை உள்ளம் படைத்த 'குழந்தை' மனது.
"அறுக்காதே...... காரணத்தைச் சொல்....." என்று கழுத்தில் கத்தி வைப்பவர்கள் சற்று பொருத்தருள்வீர்கலாக! பின் வரும் பத்திகள் பெயர்க்காரணம் சொல்பவை.
சிருங்கார ரசம் ததும்பும், இந்த நூற்றாண்டின் ஈடு இணையில்லா கவிஞன், முண்டாசு கட்டிய இன்பத்தமிழ், கண்ணனை தீராத விளையாட்டு பிள்ளையாக கொண்டாடிய கீழ் கண்ட பாடல் தந்த தலைப்புதான் இது. முழுப் பாடலையும் கீழே கொடுத்துள்ளேன். உங்கள் கவனஈர்ப்புக்கு எனக்கு பிடித்த இடங்களை கலரிட்டு காண்பித்துள்ளேன்.
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)
1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)
2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத)
4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)
5. புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)
6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத)
7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)
8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)
9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)
அலகிலா விளையாட்டு விளையாடும் அந்த மாயக்கண்ணன், யசோதைக்கு வாயில் அகில உலகம் காண்பித்த, ஆண்டாள், மீராவின் காதல் நாயகன், ராச லீலை புரிந்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான், மேல் கொண்ட பக்தியினால், அவனை இப்ப்ளாக்-ன் நாயகனாக பாவித்து கொடுத்த தலைப்பு இது.
அப்பாடி! எல்லாத்தையும் 'அவன்' மேல போட்டாச்சு. (ரகசியமாய் சொன்ன இந்த கடைசி வரி உங்க காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.)
6 comments:
அப்பா இப்பவே கண்ண கட்டுதே........................
தீராத விளையாட்டு பிள்ளைக்கு:
உங்களது விளக்கம் அருமை. நம்பிட்டேன்!!!!!!!!
is this your confessional statement???
தீ.ராதாவின் விளையாட்டுப் பிள்ளைக்கு இப்படி ஒரு மூளையா?
தீ.ரா.வி. விளக்கம்... :-)
அடேயப்பா - பெயர்க்காரணம் இவ்வளவு பெரிசா ஏன் வச்சேன் - இதினாலெல்லாம் வைக்கல - அப்படின்னு மனசில் உள்ள ஆசைகள் அத்தனையும் கொட்டியாச்சு - பலே பலே ! வாய்தான் பெரிசுன்னு அத அடக்க எழுதுப்பான்னு தூண்டிய நண்பர்கள் வாழ்க ! அட்டகாசமாப் போகுதே ! நல்வாழ்த்துகள் ஆர்வி எஸ் - நட்புடன் சீனா
Post a Comment