Tuesday, February 16, 2010

குப்புசாமி C/O சந்திரன்

எங்கு பார்த்தாலும் ஒரே புகை மயம். நாம் இருப்பது பூலோகமா அல்லது தேவலோகமா என்று தெரியவில்லை. கண்ணுக்கு குளிர் கண்ணாடி போன்று மூக்கிற்கும் ஓரு வடிகட்டி வரும் காலங்களில் தேவைப்படும். மூக்கில் அடைத்திருப்பது பஞ்சா அல்லது வடிகட்டியா என்று தெரிந்த பின்புதான் கீழே கிடப்பது சவமா அல்லது சதீஷா என்று அறிய வேண்டிய காலம் ஒன்று வரலாம். பன்றிக் காய்ச்சலுக்கு மட்டும் உபயோகப்பட்டது நிரந்தரமாக தேவைப்படும். அந்த அளவிற்கு காற்று மண்டலம் மாசடைந்து விட்டது. "Water is the Elixir of Life" என்பார்கள். வானோர்களின் கொடையாகவும் சர்வ ரோகங்களையும் கூட  சொஸ்தப்படுத்தும்  அமிர்தத்திற்கு ஒத்து இருந்த தண்ணீர் இப்போது இந்த தரணியில் எங்குமே வாயில் வைக்க முடியாதபடி உள்ளது. சற்று ஆழமாக தோண்டி சாலை போடுவதற்கு முயன்றால் அங்கு கழிவுநீர் காட்டாறாக பெருக்கெடுத்து ஓடுவதை நாம் சென்னையில் எங்கும் காணலாம். இதனால் 'சுத்தகரிக்கப்பட்ட'  நன்னீர், சிங்கம்பட்டி  மற்றும் சிங்கப்பூர்  நிறுவனங்களால் ரயில்நிலையம், பேருந்து நிறுத்தங்கள், பொட்டி கடை, வணிக வளாகம், நிற்கும் பேருந்து, ஓடும் பேருந்து என்று மனிதன் நடமாடும் இடம் எங்கு  பார்த்தாலும் பாலிதீன் பாக்கெட்டிலும் போத்தல்களிலும் நயமான விலையில் விற்கப்படுகிறது.  ஆட்டோக்களும், மாநகர பேருந்துகளும், இன்ன பிற ஹோர்ணில் வைத்த கை எடுக்காமல் ஓசை எழுப்புபவர்களாலும், மிக விரைவில், ஒலி மாசுபடுவதால் எரிச்சல், படபடப்பு, இருதய கோளாறுகள் போன்ற நோய்களால் அவதியுறும் நிலையும்  உளவியல்ரீதியாகவும்  மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படி இந்த பூலோகம் உபயோகப்படாமல் போனால் நாம் இனி சந்தடி மிகுந்த சைதாபேட்டையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நேரே சந்திரனில் குடியேறலாம்.

சமீபத்தில் சந்திரனுக்கு ஏவப்பட்ட சந்திராயன் - I என்ற விண்கலம் பல அறிய தகவல்களை சேமித்து நமக்கு அனுப்புகிறது. குழாயடியும் சண்டையும் உள்ளதா என்று தெரியாது ஆனால் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது தெரிகிறது.உயிர் வாழ குறைந்தபட்சம் வயிற்றிக்கு தயிர் சாதம், மானத்தை மறைக்க துணி, வெயில் மழைக்கு ஒதுங்க ஒரு இடம் இம்மூன்றும் அவசியமாகிறது. இதில் தண்ணீர் இருப்பதாக தென்பட்டதால் வயிற்றிற்கு வகை செய்தாயிற்று. இப்போது அங்கே இரண்டு கிலோ மீட்டர் நீளமும், 380 மீட்டர் அகலமும் கொண்ட குகை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதலால் தலைக்கு மேலே ஒரு கூரையும் கிடைத்தாயிற்று. இனிமேல் நிலா காட்டி குழந்தைகளுக்கு சோருட்டிய காலம் போய், நிலவில் சோருட்டகூடிய காலம் தலைப்பட்டிருக்கிறது. இத்தகைய தகவல்களை நிழற்படமாக அனுப்புவது டி.எம்.சி எனப்படும் டெர்ரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera). இது இருபது கி.மீ எல்லை வரை படங்கள் எடுக்கவல்லது.

அப்துல் கலாமுக்கு சந்திரனில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது என பரவலாக ஒரு வதந்தி ஊரில் உள்ளது. பூமியில் எல்லா இடங்களையும் சுற்றித்திரிந்தவர்கள் இனி சந்திரனுக்கு ஒரு உல்லாச சுற்றுலா செல்லலாம். தங்களது திருமண வைபவத்தை சந்திரன் மஹாலில் நடத்தலாம். ஒத்து வராத மாமியாரை சந்திரனிலும், மருமகளை பூமியிலும் குடியமர்த்தலாம். அரசியல்வாதிகள் பினாமிகளை வைத்து ஒரு வணிக வளாகம் கட்டலாம். நாயர் சாயா கடை போடலாம். இளம் ஜோடிகள் நிலவில் 'தேனிலவு' கொண்டாடலாம்.   மிக குறைந்த கட்டணமாக  மூன்று ரூபாயை 'மை ட்ரிப் டாட் காம்'  அறிவித்து 'மூன்பஸ் 320A' வில் ஒரு கும்பலை அனுப்பலாம்.  அந்த சந்திரன் ஒத்து வரவில்லை என்றால், சந்திரனுக்கு சந்திரனில் குடியேறலாம். சந்திரனில் பூர்வ குடியாக ஆசையா? உங்களுக்கும் ஒரு ஏக்கர் வேண்டுமா? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
சோமன்,
நிலா ரியல் எஸ்டேட்ஸ்,
1, ஆர்ம்ஸ்டிராங் தெரு,
அப்போல்லோ விண்வெளி பள்ளம் அருகில்,
சந்திரன்.
000 001.
நிலா பேசி: ED.1A.88.79 (பதினாரிலக்க எண்)
செயற்கைக்கோள் பேசி: 5-001-000-00001 (ஐந்து என்பது, இந்த புவிக்கு சந்திரன் ஐந்தாவது பெரிய இயற்கையான செயற்கைக்கோள். (Natural Satellite).
Photo Courtesy: http://www.chandrayaan-i.com

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails