Friday, February 26, 2010

இழுக்க இழுக்க இன்பம்.....

2010-11 வரவு செலவு திட்டறிக்கை சமர்ப்பித்த பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் விளக்க உரையின் 144 வது பாராவிலிருந்து......

144. Since I quit smoking many years ago, I would urge others to also follow suit, as smoking is injurious to health. To this end, I am making some structural changes in the excise duty on cigarettes, cigars and cigarillos coupled with some increase in rates. I also propose to enhance excise duty on all non-smoking tobacco such as scented tobacco, snuff, chewing tobacco etc. In addition, I propose to introduce a compounded levy scheme for chewing tobacco and branded unmanufactured tobacco based on the capacity of pouch packing machines.பிரணாப் முகர்ஜி சிகரெட்டை விட்டதால் இந்த வருடம் விலை ஏற்றிவிட்டார். எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை. பிரணாப் ஏன் இன்னும் சிகரெட் பிடித்துக்கொண்டு இருக்க கூடாது என்று சிகரெட் பிரியர்கள் ஏக்கத்துடன் எல்லோரையும் வினவுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் போதும் விலையேற்றத்தை காணுபவை இந்த மாதிரி லாகிரி வஸ்துக்கள்தான். இந்த ஆண்டும் இதே கதை தான். எவ்வளவு விலை ஏற்றினாலும் 'பீடி'க்கிறவர்கள் பிடிக்காமல் இருக்கபோவதில்லை. "Cigarette Smoking is Injurious to Health" என்ற வாசகம் ஒரு நாம்கேவாஸ் தான். சமீப காலமாக பெட்டியின் மேல் இரண்டு எலும்புகளுக்கு நடுவில் மண்டையோடு போட்டபின்னர் விற்பனையில் ஒரு 'ட்ராப்' இருப்பதாக பிடிக்கும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிகரெட்டின் குணாதிசயங்களை மேற்கண்ட படவிளக்கம் மூலம் நாம் அறியலாம். இந்த புகையிலை வஸ்துக்களை பற்றி ஒரு சில....

அது ஒரு பெட்டி கடைதான். கலர் கலராக பாக்கு, ஷாம்பூ, ஊறுகாய், பான்பராக், கவுனி போன்ற பல ஐட்டங்களை திருவிழாவிற்கு தோரணம் கட்டுவது போல் கடையின் முகப்பில் குறுக்கும் நெடுக்குமாக கட்டி இருக்கும். கடையின் உள் ஆள் இருப்பதே தெரியாது. நாலா பக்கமும் கண்ணை அலையவிட்டு விட்டு , கடையையும், கடைக்காரரையும் கூட பார்க்காமல் கையை மட்டும் கடை உள்ளே நீட்டி நம்மை யாராவது பார்ப்பார்களோ என்றஞ்சி வெளியே பார்த்துக்கொண்டே "ஒரு கோல்ட் ப்ளேக் கிங்ஸ்" என்றால் அண்ணன் சரக்குக்கு புதுசு என்று அர்த்தம்.

பட்சணம் பலகாரம் சாப்பிடும்போது வெளியே இரண்டு பேருக்கு தெரியாமல் மறைத்து வைத்து சாப்பிடும் அளவிற்கு நாகரீகம் தெரிந்த நம் மக்கள், குடி, சிகரெட் போன்ற தேச நலனில் அக்கறையுள்ள காரியங்களில் ஈடுபடும்போது தனக்கு பக்கத்தில் இருப்பவர் ஐந்து நிமிடத்திற்கு முன்பு அறிமுகம் ஆனவராக இருந்தாலும் "நீங்க பத்த வைப்பீங்களா?" என்று அக்கறையுடன் கேட்டு பாசத்துடன் பத்த வைத்துவிடுவார்கள். அவ்வளவு ஒரு பாசமான சிகரெட் உபசரிப்பு. 'தேசநலன்... அக்கறை... " என்ற வார்த்தைகளை படிக்கும் போது புருவத்தை உயர்த்தியவர்களுக்கு இதோ விளக்கம். புகையிலை மடிப்பது குடிசைத் தொழிலாம். ஆகையால் பல ஏழை குடும்பங்கள் பயன் பெறுகிறதாம்.

பில்டர் சிகரெட் குடித்தால் உடம்பு அவ்வளவாக கெடாது என்பதால் காசு அதிகம் குடுத்து அதைக் குடிடா என்று 'அறிவுறுத்தும்' நண்பர்களும் உண்டு. "மாப்ள தம் அடிக்காம இருக்க முடியலே. அதனால பாதி வந்ததும் தூக்கி போட்ருவேன். முளுசா குடிச்சா தானே உடம்பு சீக்கிரம் கெட்டுபோகும்" என்று தேகம் கெட்டு போவதை தள்ளி போடுபவர்களும் உண்டு. அப்படி அரை சிகரெட் பிடிப்பவர்கள் அரை பாக்கெட்டிலிருந்து முழு பாக்கெட் வாங்க ஆரம்பித்து தனது சட்டை பாக்கெட்டை பதம் பார்த்துக்கொள்வார்கள்.

அஜித், ரம்பாவுடன் நடித்த (நேசம்?) படம் ஒன்றில் ஒரு பில்டர் சிகரெட்டை அவர் கையில் கொடுத்து நன்கு புகையை உள்ளே இழுத்து அவர் மேல் அதை விடச்சொல்லி கட்டளையிடுவார் ரம்பா. "இந்த வாசன என்கு ரொம்ப பிட்கும்" என்று இரு கண்களை மூடி, மோவாயை மேலே தூக்கி சிரித்தபடி சொல்வார். அந்த படம் வெளிவந்த புதிதில் நமக்கும் ஒரு ரம்பா கிடைப்பாளா என்று சிகரெட்டும் கையுமாக பல பேர் அலைந்ததாக தகவல். மேலே தூக்கி போட்டு துப்பாகியால் சுட்டு, குச்சியை கையில் வைத்துக்கொண்டு தீப்பெட்டி கொண்டு உரசி பற்ற வைத்தும், உதடுகளினால் கவ்விப்பிடித்து நாக்கு மூலமாக வாய்க்குள் கொண்டுபோய் ஒரு சர்க்கஸ் காட்டி வெளியே எடுத்து, பைப் வைத்து பிடித்து, பீடி அனைவதர்க்குள் ஒரு மொட்டையை அடித்து துவம்சம் செய்தும் பல 'சிகரெட் சாகசங்கள்' செய்த பெருமை சூப்பர் ஸ்டாருக்கு சேரும். அண்மை கால படங்களில் அறவே சிகரெட்டை ஒதுக்கிய பெருமையும் அவரையே சாரும். இப்படி இளைஞர்கள் மத்தியில் 'சிகரெட் புரட்சி' ஏற்படுத்திய படங்களும் உண்டு.

பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை கொண்டு வந்தால், எது பொது இடம் எது தனி இடம் என்பதில் பிரச்சனை. கடை வாசலில் பிடித்தால் அது அந்த கடை இடம் அதனால் தனியார் இடம் என்கிறார்கள். இதனால் போலீஸ் கல்லா நிரம்பிற்றே தவிர பிரயோஜனமாக ஏதும் நிகழ்ந்ததா தெரியவில்லை. பிடிக்கிறவராய் பார்த்து பிடிக்காமல் விட்டால் ஒழிய சிகரெட்டை ஒழிக்க முடியாது.

அப்பா அம்மா பொண்டாட்டி சொல்லி கேட்காதவர்களா பிரணாப் சொல்லி கேட்கப்போகிறார்கள்.

2 comments:

ஸ்ரீராம். said...

சிகரெட்டின் தீமை பற்றி 'எங்கள் ப்ளாக்'கும் காதலும் கத்தரிக்காயும் என்ற தலைப்பில் கூவி உள்ளது படித்துபபர்ர்க்கவும்...!

http://engalblog.blogspot.com/2010/02/blog-post_14.html

சிகரெட் விலை ஏறினால் என்ன, பலூன் விலை குறைந்துள்ளதே...இப்போ சந்தோஷம்தானே..

Madhavan Srinivasagopalan said...

சாலமன் பாப்பையாவோட பட்டிமன்றம் ரொம்ப பாப்பீங்களா... என்னத்தான் சொல்ல வரீங்க சரியா புரியலையே..?..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails