Thursday, July 21, 2011

காதல் கணினி - II

முதல் மாட்யூல் படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்து படித்து இன்புறவும். இது ஒரு குறுந்தொடர். அருந்தொடராக எழுதலாம் என்று விருப்பம். போகப்போக கொஞ்சம் சயிண்டிஃபிக் சமாச்சாரங்கள் புகுத்தலாம் என்று ஒரு எண்ணம். பயந்து டரியலாகி விடாதீர்கள். பார்க்கலாம்.

******* இரண்டாவது மாட்யூல் *******

இருவரும் தியேட்டரை விட்டு நடை தளர்ந்து முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு வெளியே வந்தார்கள். வாசலில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பீடிப் புகை மண்டலத்தில் நின்ற வயசான ஆட்டோ “எங்க போணும்?” என்று சைகையால் சவாரிக்கு கூப்பிட்டது. அஜய் வேண்டாம் என்று தலையாட்டி வெட்டி விட்டான்.

“மொபைல்ல கூப்பிடேன்”

“இல்ல அஜய்! அவ மொபைல வெறுக்கற வர்க்கம். ’மக்களோட ஒட்டு மொத்த சந்தோஷத்தைப் பறிச்சு குழி தோண்டிப் புதைச்சிருச்சு இந்த மொபைல். ஜனங்களுக்கு ஒரு ப்ரைவசி கிடையாது. சாப்பிடும் போது, பாத்ரூம்ல, கிச்சன்ல, அர்த்த ராத்திரி சந்தோஷமா பொண்டாட்டி பக்கத்துல படுக்கையில கிடக்கும் போது கூட “தாஸா... லார்டு லபக்கு தாஸா”ன்னு ஃபோன்ல கூப்ட்டு கேக்கர்த்துக்கு நாட்ல ரெண்டு காட்டுமிராண்டி இருக்காங்க. திஸ் இஸ் அட்ராஷியஸ். ரிடிகுலஸ். நா மட்டும் இந்த நாட்டுக்கு ராஜாவா இருந்தா ஒட்டு மொத்த மொபைல் கம்யூனிகேஷனையே சட்டம் போட்டு சுத்தமா ஒழிச்சுடுவேன்.’ அப்படின்னு மூச்சு இரைக்க இரைக்க கன்னாபின்னானு ஒருநாள் எங்கிட்ட திட்டினா. நிச்சயம் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருக்கும். விட்ரு”

மௌனமாக உம்மென்று இருசக்கர வாகன சாஹரத்திலிருந்து வண்டியைப் பிடுங்கி வெளியே எடுத்தான் அஜய். மணா பின்னால் ஏறிக்கொள்ள; உதைத்த வேகத்தில் வண்டி த்ராட்டல் கொடுத்த வலியில் ஏகத்துக்கும் உறும; சுமாரான வேகத்தில் வாயைத் திறக்காமல் ரோடைப் பார்த்து வண்டியோட்டினான். ஆபீசில் கூடுதல் வேலை பார்த்தவர்கள் தத்தம் மேலாளர்களை மனமார 'வாழ்த்தி'க்கொண்டே ஜீவனற்று நாக்குத் தள்ளி வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் பிக்கல் பிடுங்கல் உள்ளவர்கள் நத்தை வேக இருபதில் வண்டியோட்டி கிரக சஞ்சாரங்களிலிருந்து தன்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்ற சிந்தனையில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

ராயப்பேட்டா சிக்னல் அருகில் பக்கத்துப் பெட்டிக்கடைப் பக்கம் திரும்பி ஓசியில் ஃபில்டர் சிகரட் வாங்கி பற்ற வைத்து அன்றைய கலெக்ஷ்னை கைவிட்டு எண்ணிக் கொண்டிருந்தார் யூனிஃபார்மிலும் கறை படிந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர். காலையில் சுறுசுறுப்பாய் இருந்த சென்னை இன்றைக்கு இப்போதே தூங்கி வழிந்தது. எக்ஸ்ப்ரஸ் அவென்யூவில் இம்மானுடப் பிறவியில் சொகுசாக வாழ கொடுத்து வைத்த சிலர் வாயெல்லாம் பல்லாக ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். ராயப்பேட்டா டவர் தாண்டி திருவல்லிக்கேணி பக்கம் கை காட்டித் திரும்பும்போது வேகத்தை குறைத்து

“ஒரு தம் அடிக்கலாமா மணா?” என்றான் அஜய்.

“இல்ல. வேணாம். நேர ரூமுக்கு போ” சுரத்தேயில்லாமல் சொன்னான் மணா.

ஒரு தக்குணூண்டு மாருதி எண்ணூரு உள்ளே நுழைந்தால் தாராளமாக முன்பக்க பின்பக்க கதவு திறந்து தமன்னா போன்ற ஈர்க்குச்சி அழகிகள் கூட வெளியே இறங்கி கால் வைக்க முடியாத ஒரு அக்மார்க் சென்னை நகர குறுக்குச் சந்தில் கொண்டு வந்து மணாவை தரையிரக்கினான். அவன் இறங்குவதற்குள் வாழ்வில் ஒரு நொடியைக் கூட வீணாக்க விரும்பாத கர்மவீரர்கள் இரண்டு பேர் தொடர் ஹார்ன் அடித்தார்கள்.

“நா வரேண்டா...” என்று எதுவும் வம்பளக்காமல் வண்டியை ரவுண்ட் அடித்துத் திரும்பி அஜய் விடை பெற்றான்.

பதிலுக்கு மணா ”பை” சொல்லும்போது அவன் தெருமுனையில் இருந்தான்.

பசித்தது. நேரே ரூமுக்கு போகாமல் மூத்திர சந்து திரும்பி மணக்கமணக்க சரோஜினி தெரு மெஸ்ஸுக்கு போனான். இரவு ஆச்சி மெஸ்ஸில் இரண்டு உள்ளங்கையகல சப்பாத்தியை மசாலா மணத்த குருமா சேர்த்து சாப்பிட்டான். சப்பாத்தி மிருதுவாக மூன்று விரலில் கிழிபடும் பூப்போல இருந்தது. சூடான பால் குடித்தான். கிங்ஸ் ஒன்றை பற்றவைத்து இழுத்துக் கொண்டு ரூமுக்கு நிதானமாக நடந்து போய்க் கொண்டிருக்கும் போது சட்டைப் பையில் ப்ளாக்பெர்ரி சினுங்கியது.

”உம்”

எதிர்முனை பேசியது.

“உம்”

எதிர்முனை பேசியது.

“என்ன பண்ணினீங்க”

எதிர்முனை பேசியது.

“ஷிட்”

சூடானான். மொபைல் இணைப்பைத் துண்டித்தான்.

ஒரேயடியாக பல சிந்தனைகள் மண்டையைப் பிளக்க ரூமில் வந்து ஒரு தம்ளர் தண்ணீர் மடக்மடக்கென்று குடித்தான். ரூமில் யாரோ அவிழ்த்துப் போட்ட அழுக்குப் பேண்ட்டை சுவரோரமாய் ஒதுக்கிவிட்டு காலை நீட்டிப் படுத்தான். எண்ணி  எண்பதாவது வினாடியில் தூங்கிப் போனான்.

***********

mansion


வழக்கம் போல ஏழு மணிக்கு எழுந்தான் மணா. முழுவதும் தீர்ந்த கோல்கேட்டை பிதுக்கி பற்களை சுத்தம் செய்தான். ஐந்து நிமிடம் இயற்கை உபாதைகளை கழித்தான். முகத்தை துடைத்துக் கொண்டு ஆங்கிலப் பேப்பர் புரட்ட ஆரம்பித்தான். அவனைச் சனிக்கிழமை சூரியன் சோம்பலாக எழுப்பிவிட்டிருந்தான். ஏழெட்டு ரவுடி மேகக் கூட்டங்கள் சூரியனின் முகத்தை மறைத்து திருப்திப்பட்டுக்கொண்டது. அடியில் டீ சொட்டிய டம்ப்ளரை ஜன்னல் சுவற்றுக் கட்டையில் தேய்த்து பேப்பரில் இருந்து கண் எடுக்காமல் கழனியை உறிஞ்சினான். செல் அடித்தது.

அஜய் அழைத்தான்.

”என்னடா”

“......”

“ஒன்னும் தகவல் இல்லை”

“......”

“சரிடா! மன்டே ஆபிஸ்ல பார்க்கலாம்”

மொபைலை கட் செய்தான்.

*********

திங்கள்கிழமை ஒரு மெகா ப்ராஜெக்ட் மீட்டிங் ஒன்று வைத்தார்கள். ஒரு ஹவருக்கு பவர்பாய்ன்ட் ப்ரசெண்டேஷனும் ஒன்பது அவருக்கு சுற்றி இருக்கும் சுவருக்குக் கூட புரியும்படியாக அதைப் பற்றி விரிவாக அளவளாவினார்கள். இயற்கை உபாதையான ஒன்றுக்கு இருக்கக் கூட வெளியே விடாமல் நாற்காலியோடு கட்டிப் போட்டு டோட்டல் அடிமையாக்கியிருந்தார்கள். செவ்வாய் அதுபற்றிய டீடைல்டு ரிப்போர்ட் தயாரித்தான். ஆயிரம் லொட்டை சொல்லி தாறுமாறாக மாற்றினார்கள். டீ குடிக்க, சாப்பிட மட்டும் அனுமதித்து சக்கையாகக் கசக்கி பிழிந்தார்கள். மணா மாலைச் சூரியனைப் பார்த்து இரண்டு நாள் ஆகியிருந்தது. புதனும் வியாழனும் கிளைன்ட்டுடன் கான்-கால் என்று சொல்லிப் படுத்தினார்கள். இப்போது காலைச் சூரியனைப் பார்த்தும் இரண்டு நாள் ஆகியிருந்தது. "இன்னும் பத்து நிமிஷத்ல திருப்பி கூப்பிடுவாங்க. கிளையன்ட் இஸ் வெரி இம்பார்டன்ட்" என்று இடைவிடாமல் இரண்டு நாட்களுக்கு ஆபிஸ் கான்ஃபெரென்ஸ் ஹாலில் சொன்னது கக்கூஸ் போய் குளிக்கும் போது கூட பாத்ரூமில் அசரீரியாகக் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தக் கூத்தில் ஒரு வாரம் தீர்ந்து போய் அடுத்த வெள்ளிக் கிழமை ஜீன்ஸ் போடச் சொல்லி எட்டிப் பார்த்துவிட்டது. இதுவரை மிருதுளா ஆபீஸ் வராதது அப்போதுதான் அந்த "வேலைக் காதலனுக்கு" உரைத்தது.

"மீனா. மிருதுளா வந்துருக்காளா?"

"ஏய் மணா!! அவள ஆளையே காணும்ப்பா? என்னாச்சு?"

"தெரியலை.."

"பி.எம். சதா கேட்டுகிட்டே இருந்தான். ஹெச்.ஆர்ட்ட சொல்லி பர்மனென்ட் அட்ரஸ்ல விசாரிக்க சொல்லிருக்காங்க... எனிதிங் சீரியஸ்? "

"தெரியலை. சரி! ஓ.கே"

இண்டர்காமை கட் செய்தான். இந்த வார இறுதி மாயாஜால் போகலாமா என்று எண்ணியிருந்தான். கொடுத்த சாப்பாட்டுக் கூப்பன்கள் நிறைய மீதம் இருந்தது. சப்வேயின் பதினைந்து இன்ச் பத்து சாப்பிடலாம். மிருதுளா நினைப்பில் எல்லாம் பாழாய்ப் போனது.

சட்டையின் மேல் பாக்கெட்டில் இருந்து ப்ளாக்பெர்ரி துடிதுடித்து அழைத்தது.

"மணா! உன் சுந்தரம் சித்தப்பா பொண்ணு ப்ரீத்தி இருக்காளோன்னோ அவ இருக்கிற பிட்ஸ்பர்க் ஆபீஸ் பின்னாடி பெருமாள் கோவில் இருக்காமே..." என்று ஆரம்பித்து அம்மா பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டாள். சிஸ்டம் ஷட்டவுன் செய்து, கழுத்தால் பெர்ரியை கவ்விக் கொண்டு டூ வீலரை எடுத்து, அடையார் தாண்டி வந்த நாயர் கடையில் நிறுத்தி ஒரு சூடாக ஒரு டீ அடித்து,"என்னடா ச்...ச்..சுன்றது..." என்ற எதிர்முனை அம்மாவுக்கு "டீ குடிக்கறேம்மா..." என்று அலுத்துச் சொல்லி, "ஃபோனில் தானே அம்மா இருக்கிறாள்" என்கிற மிதமிஞ்சிய தைரியத்தில் டீக்கு தொட்டுக்க ஒரு கிங்ஸ் வாங்கி அம்மா கேள்விகளுக்கு "ம்...ம்.." என்று பதிலுரைத்து பற்ற வைத்து, முழுவதும் குடித்து அதைத் கீழே போட்டு காலில் மிதித்து அணைத்து வண்டியை உயிர்ப்பித்து அதன் காதைத் திருகி திருவல்லிக்கேணி ரூமுக்கு வரும் வரையில் தொணதொணவென்று ஊர்க்கதை உலகக்கதைகள் முழுவதும் மூச்சுவிடாமல் பேசினாள் அம்மா. அப்பாவுக்கு இதனாலையே காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது என்று மணாவின் அத்தைகள் கேலி பேசி சிரித்துக் கொண்டது அவனுக்கு இப்போது ஞாபகம் வந்தது. இடது செவி சிவந்து போய் சூட்டில் தகித்தது. இனி எதைக் கேட்டாலும் அவனுக்கு சூடான செய்திதான்!

***********

தடதடவென்று கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திடுக்கிட்டு விழித்தான் மணா. வெளியே சனிக்கிழமை பொழுது விடிந்திருந்தது. ஜன்னல் கண்ணாடியில் ஒன்றிரண்டு நிழலுருவங்கள் நடமாடின. வெளியே கனத்த குரலோடு "கா.கா..கா.." என்று ஒரு காக்கா தனியாக கச்சேரி செய்து வரும் சங்கீத சீசனுக்குப் பழகிக் கொண்டிருந்தது.

கண்ணைக் கசக்கி சுற்றிப் பார்த்தான். அரைகுறையாக ஜட்டி தெரிய ரூம் மேட் பேச்சிலர்கள் சிலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். தலையைக் கீழே தரையில் போட்டு இரு தொடைகளுக்கு இடையே அழுக்குத் தலகாணி கொடுத்தவன் "ஊ...வ்..." என்று ஊளையிட்டு திரும்பிப் படுத்தான்.

“டக்.டக்.டக்.” தொடர்ந்து தட்டினார்கள்.

"யாரு..."

"டக்...டக்..டக்..டக்.."


“வரேன்...”

கதவு க்ரீச்சிட்டு தரையில் தேயத் திறந்தான்.

ஆஜானுபாகுவாக ப்ரஷ் மீசையுடன் ஒரு காக்கிச்சட்டை அதிகாரமாக நின்றுகொண்டிருந்தது. அவர் முகத்திலும் பார்த்த பார்வையிலும் கறார்ப் பேர்வழி என்று எழுதி ஒட்டியிருந்தது. அடுத்த அரை செகண்டில் அறையை ஸ்கான் செய்தார். பக்கத்தில் 'பே' என்று பலநாள் பட்டினி கோலத்தில் லத்தியோடு ஒரு எடுபுடி நோஞ்சான் 502வோ 302வோ தெம்பாக சாய்ந்தவாக்கில் நின்றிருந்தது.

“இங்க யாரு அழகிய மணாளன்......”

“ நாந்தான்..”

“கொஞ்சம் எங்கூட ஸ்டேஷனுக்கு வர முடியுமா?”

“எதுக்கு சார்!”

”மிருதுளான்னு ஒரு பொண்ணோட.."

"......" வாய் பேசாமல் மணாவின் கண்கள் என்னவென்று கேட்டது.

" கொலை தொடர்பாக...”

“சார்! என்ன சொல்றீங்க? மிருதுளாவை கொன்னுட்டாங்களா?”

“ரொம்ப அதிர்ச்சி அடையாதீங்க. இந்தப் புருவம் உயர்த்தி நடிகர் திலகம் நடிப்பெல்லாம் அப்புறம் நாம தனியா வச்சுக்கலாம். இன்னும் நிறைய சீன் பாக்கி இருக்கு. இப்ப நாம போலாமா”

“எனக்கும் அந்தக் கொலைக்கும் தொடர்பு இருக்குன்னு எப்டி சொல்றீங்க..”

"உங்க கூட தானே கடைசியா கூத்து அடிச்சுது அந்தப் பொண்ணு"

"சார். கூத்துன்னேல்லாம் அசிங்கமா சொல்லாதீங்க..."

"சரி.சரி.. எல்லாம் ஸ்டேஷனுக்குப் போய் பேசிக்கலாம்... வாங்க.."

"சார்! நா பல்லு கூட இன்னும் தேய்க்கலை."

“எல்லாம் நா உங்களுக்கு ஏற்பாடு பண்றேன். வாங்க”

“எனக்கு எப்டி தொடர்பு இருக்குன்னு சொல்றீங்க. இன்ஸ்பெக்டர்” மீண்டும் ஒருமுறை குரலுயர்த்திக் கேட்டான் மணா. அதற்குள் ரூமுக்குள் படுத்து உருண்டு கொண்டிருந்த எல்லா தடியன்களும் எழுந்து கைலியை ஒழுங்காகக் கட்டிக் கொண்டார்கள். தலைகளைந்து மஃப்டியில் கைலியோடு இருந்த செக்யூரிட்டி, மேன்ஷன் மேனேஜர், அக்கம் பக்கம் ரூமில் எல்லோரும் முதல் மாடிக்கு வேடிக்கைப் பார்க்க வந்துவிட்டார்கள்.  ஒரு லைவ் அரெஸ்ட் காட்சியைப் பார்க்க கூட்டம் முண்டியடித்தது.

இன்ஸ்பெக்டர் மோகன் ரொம்ப நியாயமான ஆள் என்று போலீஸ் வட்டாரத்தில் பேசிக்கொள்வார்கள். கொண்ட கொள்கையில் பிடிப்பான ஆள். தீர்க்கமாக முடிவு செய்பவர். தீவிர போலீஸ் பரம்பரையில் காவலர் பணிக்காகவே இம்மண்ணுலகில் அவதரித்தவர். இரண்டு முறை கண்களை உருட்டி குற்றவாளியைப் பார்த்தால் குற்றம் புரிந்தவர்கள் தரையை ஈரம் பண்ணி விடுவார்கள். அப்படி ஒரு அரற்றி உருட்டும் மிரட்டல் பார்வை அவருக்கு. நல்ல திரட்சியான தோள்கள் கொண்ட திடகாத்திரமான ஆள். டூப் இல்லாமல் நிஜமாகவே போலீஸ் ஜீப்பை கையால் ஒருக்களிக்கும் திறன் படைத்தவர். ஒரு சுதந்திர தின அணிவகுப்பில் அரசின் தங்கப்பதக்கம் பெற்ற போது சராசரி உயரத்தில் இருந்த தமிழக ஆளுநர் எக்கி எட்டித்தான் பதக்கத்தை மோகன் நெஞ்சில் குத்தினார்.

”எல்லாம் நாம நிதானமா பேசிக்கலாம். என்னோட வாங்க ப்ரதர்” தோளில் கைபோட்டு அழைத்தார். இரண்டடி எடுத்து வைப்பதற்குள் கைலி காலைத் தடுக்கியது.

“இல்ல நீங்க எப்டி...”

“நான் ரொம்ப சாதுவான போலீஸ்னு எல்லோரும் பேசிக்கிறாங்க. எனக்கு அடம் பண்ணினா புடிக்காது. கைகால் முறிஞ்சு எங்களை தூக்கிக்கிட்டு போக வச்சுடாதீங்க. வன்முறைல எனக்கு நம்பிக்கை இல்லை.”

எதிர்த்து பலனில்லை என்று மணாவுக்கு புரிந்துவிட்டது. சண்டித்தனம் செய்தால் ரெண்டு போட்டு பிடரியில் நெட்டித் தள்ளி அழைத்துப்போவார்கள் என்று தோன்றியது. "ஒரு நிமிஷம்" என்றான். பேன்ட் சட்டை அணிந்து கொண்டு மொபைலை எடுத்து பையில்  போட்டுக்கொண்டு அவர்களோடு கிளம்பினான்.

ஜீப்பில் ஏறும்போது அந்தத் தெருவே வேடிக்கைப் பார்த்து. ஆச்சி மெஸ் பையன் நின்று மணாவை அருகில் சென்று உற்றுப் பார்த்து ஊர்ஜிதப் படுத்திக்கொண்டான்.

முன் சீட்டில் போலீசுக்கே உரித்தான ஸ்டைலில் ஜன்னலில் தொங்கிய காதில் கைவிட்டு பிடித்து மிடுக்காக உட்கார்ந்திருந்தார் மோகன். வண்டி சிக்கனலுக்கு சிக்னல் நின்று ஆங்காங்கே சீறிப் பாய்ந்தது. ஆர்.கே மடச் சாலையில் அவருடைய செல்போன் கந்த சஷ்டி கவசம் சொல்லி அழைத்தது.

"ம். சொல்லுங்க"

"....."

"அப்டியா"

"......"

"நெஜமாவா..."

"...."

"சரி. ஓ.கே."

பின்னால் மணா கூட உட்கார்ந்திருந்த கான்ஸ்டபிள் "என்ன சார்?" என்று தைரியமாக கேட்டார்.

நிதானமாக திரும்பி மோகன் சொன்னார்.

"செத்தது மிருதுளா இல்லையாம்...."

மணாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது!
தொடரும்....

பின் குறிப்பு: சிரசுக்கு மேல ஏகப்பட்ட அலுவல்கள் இருந்ததால் இரண்டாவது மாட்யூல் சிறிது தாமதமாகி விட்டது. அடுத்ததடுத்த பகுதிகள் விரைவில் வெளியிட முயற்சிக்கிறேன். 

பட உதவி: http://www.outlookindia.com/

21 comments:

ஸ்ரீராம். said...

மிருதுளா இல்லாட்டி அப்புறம் யாராம்...எதுக்கும் மாதவனை விசாரிக்கச் சொல்லுங்க...அவர்தான் அண்ணன் இல்லை தங்கை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்!

RAMA RAVI (RAMVI) said...

கதை ரொம்ப நன்றாக இருக்கிறது சார்.சஸ்பன்ஸ்ல நிறுத்திட்டீஙகளே!அடுத்த பகுதியை ஆவலோட எதிர்பார்திருக்கிறேன்.

RVS said...

@ஸ்ரீராம்.
அது தான் டுவிஸ்டு... மாதவனை உட்டா பார்ட்டி குழப்பிடுமே! :-)

RVS said...

@RAMVI
பாராட்டுக்கு நன்றிங்க மேடம்... :-)

இராஜராஜேஸ்வரி said...

"செத்தது மிருதுளா இல்லையாம்...."

மணாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது!//

கதைக்கே உயிர் வந்த மாதிரி நிம்மதி!

சாந்தி மாரியப்பன் said...

கதை சூடுபிடிக்க ஆரம்பிச்சுடுச்சு.. செம த்ரில்லிங்.

எல் கே said...

த்ரில்லர் எழுதரவா எல்லாம் மோசம். கெஸ் பண்ணா கதையின் போக்கை மாத்திடுவாங்க. சோ தொடருங்கள்

சிவகுமாரன் said...

\\"செத்தது மிருதுளா இல்லையாம்...."///

அப்பாடி.மீனாட்சியம்மன் கோயில் முக்குறுணிப் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறதா வேண்டியிருக்கேன்.

Madhavan Srinivasagopalan said...

//அர்த்த ராத்திரி சந்தோஷமா பொண்டாட்டி பக்கத்துல படுக்கையில கிடக்கும் போது கூட “தாஸா... லார்டு லபக்கு தாஸா”ன்னு ஃபோன்ல கூப்ட்டு கேக்கர்த்துக்கு நாட்ல ரெண்டு காட்டுமிராண்டி இருக்காங்க. //

மிருதுளா அவ்ளோ அப்பாவியா.. பாவமே.. !
அந்தப் புள்ளை, சினிமாவில வர்றதெல்லாம நிஜமா நடக்குதுன்னே நெனைக்குதே !

ரிஷபன் said...

இந்தப் புருவம் உயர்த்தி நடிகர் திலகம் நடிப்பெல்லாம் அப்புறம் நாம தனியா வச்சுக்கலாம். இன்னும் நிறைய சீன் பாக்கி இருக்கு. இப்ப நாம போலாமா”

த்ரில்லர்ல கூட நடுவுல வேடிக்கை.. என்னமா விளையாடுறாங்கப்பா..

Madhavan Srinivasagopalan said...

//ஸ்ரீராம். said...

மிருதுளா இல்லாட்டி அப்புறம் யாராம்...எதுக்கும் மாதவனை விசாரிக்கச் சொல்லுங்க...அவர்தான் அண்ணன் இல்லை தங்கை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்!
//

//RVS said...

@ஸ்ரீராம்.
அது தான் டுவிஸ்டு... மாதவனை உட்டா பார்ட்டி குழப்பிடுமே! :-)//

ஸ்ரீராம் வாழ்க.. ஸ்ரீராம் வாழ்க..
என் மேல நம்பிக்கை வெச்சிருக்காரு.. நல்ல மனுஷன்.

ஆர்.வீ.எஸ்... --- ம்ம் மாதவா.. கண்ட்ரோல் கண்ட்ரோல்.. வேணாம் கேட்ட வாத்தை.. என்னைய நம்பலயே இந்த ஆர்.வீ.எஸ்..

அப்பாதுரை said...

:) சிவகுமாரன்

RVS said...

@இராஜராஜேஸ்வரி
மேடம். வந்த உயிர் திரும்ப போய்டிச்சுன்னா!! கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@அமைதிச்சாரல்
நன்றிங்க சாரல். :-)

RVS said...

@எல் கே
ஹி..ஹி.. எல்.கே.. :-)

RVS said...

@சிவகுமாரன்
சிவா... உடைச்சிடாதீங்க... கைய ஓங்கி இருந்தீங்கன்னா... அப்படியே நில்லுங்க... :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
சினிமாவிலே வந்தவர் சந்தோஷமா படுத்திருக்க மாட்டார் மாதவா.. நீங்கள் புண்ணியாத்மா.. மொபைல் உங்கள் தலைமாட்டில் தேவையில்லை போலிருக்கிறது... நாடு ரொம்ப கெட்டு விட்டது... :-)

RVS said...

@ரிஷபன்
சீரியஸா எழுத முடியலை... சீரியஸுக்கு அடுத்து ஒரு இடைவெளி விட்டும் இந்தக் கமெண்ட்டை படிக்கலாம். தப்பில்லை..

வை.கோ சாரின் பதிவில் தங்கள் முன்னுரைகளைப் படித்தேன். அற்புதம்.

கருத்துக்கு நன்றி சார்! :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
மாதவா.. ப்ரச்சனை ஒன்னும் இல்லை. சத்தமா திட்டு.. அப்பத்தான் எனக்கு காதில விழும்.. ஹா..ஹா..ஹா... :-)

RVS said...

@அப்பாதுரை
எனக்கு கிடையாதா அந்த ”:-)”. சிவாவுக்கு மட்டும் தானா அப்பாஜி!! :-)

பத்மநாபன் said...

’’எதிர் முனை பேசியது’’ நல்ல ட்ரெண்ட்...

பரவலாக வர்ணனைகள் கெளப்பல்..

சிலிக்கனை விட கணினி காதல் நன்றாகவே கை கூடும்....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails